சுந்தர் சி யின் “ கலகலப்பு “

This entry is part 7 of 29 in the series 20 மே 2012

சிறகு இரவிச்சந்திரன்.

‘உள்ளத்தை அள்ளித்தா’வுக்குப் பிறகு இன்னொரு வெற்றியைத் தொட்டிருக்கிறார் சு.சி. வெற்றிக்குக் காரணம்? இவரிடம், ஏதோ உலகமகா சினிமா காட்டப்போகிறேன், என்கிற பாசாங்கு எல்லாம் இல்லை. பெரிய நட்சத்திரப் பட்டாளம் இல்லை. எல்லாம் இரண்டாம் வரிசை, மூன்றாம் வரிசை நடிகர்கள், நடிகைகள். வசனம் எழுதிய பத்ரிக்கு நகைச்சுவை நன்றாக வருகிறது. சுந்தருக்கு ஸ்லாப்ஸ்டிக் காமெடி பலம் உண்டு. முகத்தை, அஷ்டகோணல் ஆக்கிக் கொள்ளாமல், இயல்பாக நடிக்க, நடித்தவர்களுக்குத் தெரிகிறது. பிறகென்ன? சூப்பர்டூப்பர் ஹிட் தான். அதிலும் படம் லோ பட்ஜெட் ரகம். அள்ளித்தருமே உள்ளதை எல்லாம்!

முதலில் பாராட்டு விமலுக்குப் போய்ச் சேரவேண்டும். எந்த ஒரு ஹீரோ தோரணையும் இல்லாமல், எப்பவுமே தோல்வியைச் சந்திக்கும் கோழை ஆண் பாத்திரம், எந்த வளரும் நாயக நடிகரும், ஒப்புக் கொள்ள மறுப்பது. இவர் துணிந்து ஏற்று, வென்று விட்டார். நகைச்சுவை படங்களில் வசனம் மிகவும் முக்கியம். என்னதான் அதை காமெடியாக எழுதினாலும், ரசிகனுக்குச் சரியான முறையில் போய்ச் சேரவில்லை என்றால் நமத்துப் போன சரவெடிதான். ஆனால், இதில் அது, சரியாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. எல்லோரும், நிதானமாக, டைமிங்குடன், தெளிவாகச் சரியாகப் பேசுகிறார்கள். நாடகம் போல, இதற்குச் சிரிப்பார்கள் என்பது தெரிந்ததுபோல, சுந்தர் சில நொடிகள் ரியாக்ஷனில் விட்டு விடுகிறார். ரசிகர்களும் சிரித்து முடித்து, அடுத்ததுக்கு காது கொடுக்கிறார்கள். படத்தின் வெற்றி இதிலும் அடங்குகிறது.

சகோதரர்களான சீனு (விமல்), ரகு ( சிவா) வின் பூர்வீக ஹோட்டல் மசாலா கே·ப். இழுத்து மூட வேண்டிய நிலையில், சுகாதார அதிகாரி மாதவி ( அஞ்சலி) யால் ரெய்ட். அஞ்சலி கைப்பை களவுபோன நிலையில், துரத்தும் சீனுவுக்குக் கிடைப்பது தர்ம அடி, முதுகெலும்பு பங்ச்சர். படம் முழுக்க இடுப்பில் கையுடன், நொண்டியபடி வரும் விமல், கிளைமேசில்தான் நிமிருகிறார். சிவா காதலிக்கும் வி எஸ் ராகவனின் பேத்தி மாயா ( ஓவியா ), விமல் ஹோட்டலை, விலைக்கு விற்கத் திட்டம் போடும் காவல் அதிகாரி தர்மராஜ் ( ஜான் விஜய் ), மாதவியின் முறைமாமன் வெட்டுப்புலி (சந்தானம் ), வைரம் கடத்தும் மாணிக்கம் ( சுப்பு பஞ்சு ) என ஏகத்துக்குப் பாத்திரங்கள். ஒன்றையொன்று மறைத்துவிடாமல், உலவ விட்டிருக்கும் சுந்தருக்கு ஜே! கடைசியில் வைரங்கள் அரசுக்குப் போக, கடனை அடைக்க மாணிக்கத்தின் வைரப் பல்லை லவட்டும் சிவா என ஏகத்துக்குக் காமெடி களேபரம்.

சந்தானம் இடைவேளைக்குப் பிறகு வருகிறார். அளவான பாத்திரம். அதிலும், அவரை விட, அவரது அடியாட்களாக வரும் துணை நடிகர்கள் அப்ளாஸ் அள்ளூகிறார்கள். மாதவியின் கிராமத்தில் வெட்டுப்புலிக்கு மாமனாக வரும் மனோபாலா முத்திரை பதிக்கிறார். ஆனால் இளவரசு அனாவசிய செருகல். ஒட்டவேயில்லை.

சுந்தருக்கு இது 25வது படமாம். இயக்கத்தில் அரை சதம் அடிக்கட்டும். ஹீரோ வேலையெல்லாம் வேண்டாம்.

#

கொசுறு

பெங்களூர் மல்லேஸ்வரம் நட்ராஜ் திரை அரங்கில் செம கூட்டம். டிக்கெட் விலை 30, 50, 80. இன்னமும் கார்பன் மாட்டி ஓட்டுகிறார்கள். அடிக்கடி இருட்டாகிறது. இடைவேளையில் 15 ரூபாய்க்கு இரண்டு சமோசா, காகிதத்தில் மடித்துக் கொடுக்கிறார்கள். ஒருமுறை கையால் அழுத்திவிட்டுச் சாப்பிட்டால் செம டேஸ்ட். சாப்பிட்ட பின் கைகளையும், காகிதத்தையும் முழங்கையில் தேய்த்துக் கொண்டால் இலவச ஆயில் மசாஜ். டூ இன் ஒன்.

மெஜெஸ்டிக்கில் இருந்து நட்ராஜ் இரண்டு கிலோமீட்டருக்கும் குறைவு. ஆனால் மெட்ரோ பணிகளால் பேருந்து போக ஒண்ணேகால் மணி நேரம் ஆகிறது. நடந்தாலே 20 நிமிடத்தில் போய்விடலாம். சென்னை மெட்ரோவை நினைத்தால் இப்போதே வயிறு கலங்குகிறது.

#

Series Navigationதிரைப்படம்: ஹாங்காங்கின் இரவுகள்அன்னா ஹஸாரே மந்திரவாதி அல்லர்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *