29. – காலமேயிருந்து ஒருவாய் நீர் கூட அருந்தாமலிருந்தால் எப்படி. அரன்மணைக்குப்போகும் உத்தேசமில்லையா?
– இல்லை.
நந்தகோபால் பிள்ளை இல்லம். பிள்ளை கூடத்திலிருந்த ஊஞ்சலில் அமர்ந்திருந்தார். ஊஞ்சல் அசைவுக்கு இடம்விட்டு வாசலையொட்டி தூணில் சாய்ந்திருந்தாள் கோவிந்தம்மாள்- அவர் பாரியாள். அதிகாலை வெயில் வீட்டில் பாதி வாசலை விழுங்கியிருந்தது. அண்டாவிலிருந்த தண்ணீரில் நீலவானத்தின் துண்டொன்று கிடந்தது. வாசலில் ஈரம் உலராத தரையில் நாற்றுபாவியதுபோல மரகதப்பச்சையில் பாசி. கூரையிலிருந்து ஊசலாடிய நூலாம்படையில் சிலந்தியொன்று ஊசலாடியது. அரசாங்கத்தின் பிரதானியென்றாலும் அவர்கள் இடையர்குலமென்பதால் இடங்கை சாதிகாரர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த வீதியில் வசிக்கவேண்டியிருந்தது. நந்தகோபால் பிள்ளையின் முன்னோர்கள் கோட்டையையும் அரசாங்கத்தையும் கட்டி எழுப்பியவர்கள் என்றவகையில் நாயக்கருக்கு இவர்மீது மரியாதை இருக்கிறது. அவருக்கு சஞ்சலங்கள் என்கிறபோது இராத்திரி வேளையென்றுகூட பாராமல், திருமந்திர ஓலைநாயகத்தை நேரில் அனுப்பி இவரை வரச்செய்வார். இருவரும் உப்பரிகையிலமர்ந்து வெற்றிலையையை மென்றபடி நடுச்சாமம் கடந்து இரண்டு நாழிகைவரை உரையாடுவார்கள். விஜயநகர மகாராயர் வெங்கிடபதி ஷேமம், அவருக்கு நான்கு பட்டத்து மகிஷிகளிருந்தும் ஒருத்திக்குக்கூட பிள்ளைவரம் வாய்க்காதது; சிதம்பரம் தீட்சிதர்களின் நியாயமற்ற கோபம்; திருவதி பாளையத்துக்காரன் திரைப்பணத்துடன் நூறுகோட்டை நெல்லை கூடுதலாக அளக்கச்சொல்லலாமா? வட தேசத்திலிருந்து வியாபாரி கொண்டுவந்திருக்கும் ஜாதிவைரங்கள் பற்றிய அபிப்ராயம் சொல்லவியலுமா? இப்படி எதற்கெடுத்தாலும் தேவையென்றிருந்த நந்தகோபால்பிள்ளை கடந்த சிலமாதங்களாக கவனிப்பாரற்று இருக்கிறார். அரசாங்கத்தின் காரியஸ்தர்களும் முன்னைப்போல இவரை மதிப்பதில்லை. இராஜகுரு இராகவ ஐயங்காருக்கும் பிரதானி நந்தகோபால்பிள்ளைக்கும் ஏற்கனவே ஏழாம் பொருத்தம், கமலக்கண்ணி என்ற பெண் வந்ததிலிருந்து கொஞ்சம் வெளிப்படையாக முட்டிக்கொள்கிறார்கள்.
– நான் கேட்டதற்கு பதிலைக் காணோமே. ஏதேனும் சங்கடமா?
– கார்மேகம் வந்தானா?
– வரவில்லையென்று உங்களிடம் பலமுறை சொல்லிபோட்டேன், காதில் வாங்கினால்தானே?
– எனக்கு மனம் சரியில்லை நாட்டின் பிரதானி நான். மன்னருக்கு ஏற்பட்ட தலைகுனிவிற்கு ஒருவகையில் நானும் பொறுப்பு. மகாராயரை பகைத்துக்கொள்ளவேண்டாமென அவரிடம் பலமுறை எச்சரித்திருந்தேன். அவர் கேட்கவில்லையே என்பதால் வருத்தம்.
– ஏதோ தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று
– அவர் முன்னோர்கள் செய்த பலனென்று சொல். வைகுந்தவாசனிடம் மன்னர் வைத்திருந்த பக்தியும் நம்பிக்கையும் அவரைக் காப்பாற்றி இருக்கிறது. அதுவுமன்றி அவர் மருமகன் மாமன்னர் வேங்கிடபதியிடம் வைத்திருந்த விசுவாசமும் மாமனார் கிருஷ்ணப்ப நாயக்கரைக் காப்பாற்றியதென சொல்லவேணும். அடைந்துள்ள அவமானங்கள் கொஞ்சநஞ்சமா? மானஸ்தனாக இருப்பவன் ஒரு கணமும் உயிர்வாழமாட்டான்.
– ஏன் என்ன நடந்தது?
– நடந்தெதுவும் உனக்குத் தெரியாதா என்ன? உன்னிடத்தில் எதை மறைத்திருக்கிறேன். வேலூர் லிங்கம்ம நாயக்கரும் நம் ராஜாவைபோலவே விஜய நகர மாமன்னருக்கு எதிராக செய்த கலகம் நீர்த்துபோனதென்பதை சகலரும் அறிவார்கள். அதுநாள்முதல் விஜயநகர மன்னர் வேலூர் கோட்டையிலே இருந்தபடி ராச்சிய பரிபாலனம் செய்துவருகிறாரென்பதும் இங்குள்ள அனைவருக்கும் தெரியும். நம் மன்னரும் தம் தவற்றை உணர்ந்தவர்போல அவரிடம் சமாதானம் பேசவேணுமென்று சொல்லி அனுப்பியும் வைத்தார். அதன்பேரில் வெங்கடபதி சக்கரவர்த்தியைக் கண்டுபேசி நமது அரசாங்கம் கட்டவேண்டிய திரைப்பணத்திற்கு கால அவகாசம் கேட்க, அவரும் சம்மதித்தார். சக்கரவர்த்தியின் வார்த்தைப்பாட்டுக்கு மரியாதைகொடுத்து உரியகாலத்தில் அவர்களுக்குண்டான திரைப்பணத்தை செலுத்தியிருக்கவேணும். இங்கே வேதாளம் மீண்டும் முருங்கையில் ஏறிக்கொண்டது. அதுவன்றி வருஷத்துக்கு வருஷம் அவருடைய புத்தியில்லா நடத்தை அதிகரித்துவரும் சேதிகளும் வியகநகர மன்னரின் காதுக்கு போயிருக்கிறது. அவரும் பொறுத்ததுபோதுமென்று தீர்மானித்துபோட்டு வேலுக்கோட்டி எச்சம்மா நாயுடுவின் தலமையில் ஆயிரம் கம்பளத்து சேனைகளோடும் பத்தாயிரம் பரிவாரத்தோடும் ஒரு பெரும் படையை அனுப்பிவைத்தார். அப்போதுகூட அவர்களுக்குண்டான சகலத்தையும் செலுத்திவிட்டு சமாதானமாக போய்விடலாம், நமக்கு ஒருகுறையும் வராதென்றேன். இரண்டுநாளைக்கு முன்னால் தமுக்கடித்து வீட்டைவிட்டு வெளியில் ஒருவரும் தலைகாட்டக்கூடாதென்று குடிமக்களை எச்சரிக்கவேணுமென்று சொன்னவர் கோட்டைக்குள்ளேயே எங்கள் பேச்சைக்கேட்டுக்கொண்டு சில நாட்கள் முடங்கிக் கிடந்திருக்கலாம். தில்லி பாதுஷாவே வந்திருந்தாலுங்கூட அத்தனை சுலபமாக வெல்லக்கூடிய கோட்டை அல்ல நம்முடையது. இங்கிருந்த படைத்தளபதிகளில் பலருக்கும் எச்சம்ம நாயுடுவின் படையுடன் மோதும் எண்ணம் துளியுமில்லை. அதனால் எவ்வித பயனுமில்லை என்பதும் அவர்களுக்குத் தெரியும். வீணில் உயிரை மாய்த்துக்கொள்ள அவர்களென்ன மூடர்களா? இவருக்கு எச்சம்ம நாயக்கன் தூரத்து உறவாம். சாட்சிக்காரன் காலில் விழுவதைக்காட்டிலும் சண்டைக்காரன் காலில் விழலாம் என்பதுபோல ‘எனக்கு யார் தயவுவேண்டாம் நானே நேரில் சென்று சமாதானம் பேசுகிறேன்’, என்று போனார்.
பிரதானியின் பேச்சில் குறுக்கிடுவதுபோல வெளியில் ஆளரவம் கேட்டது. பிரதானியின் இல்லத்தில் சேகவம் பார்க்கும் தணிகாசலம், “உள்ளே போங்க, உங்களைத்தான் ஐயா காலமேருந்து எதிர்பார்த்துகொண்டிருக்கிறார்”, எனப்பதிலைக்கூற நடைவாசலைக் கடந்து காலடிகள் உட் தாவாரத்தை நெருங்கிவந்தன. வந்திருந்தவன் கார்மேகம். வேட்டியை இடுப்பில் தார்பாய்ச்சிக்கட்டியிருந்தான். தலைப்பாகையாகச் சுற்றியிருந்த உத்தரீயம் கைக்கு வந்திருந்தது.
பிரதானியின் பார்வை அனிச்சையாக அவன்மீது படிந்ததும், இரு கைகளையும் உயர்த்தி கும்பிடுபோட்டான். அவர் வாய் திறவாமல் அதை அங்கீகரிப்பவர்போல தலையாட்டினார்.
– வாடாப்பா! உமக்காக எத்தனை நாழிகை காத்திருப்பது. காயா பழமா?
– அதை நீங்கள்தான் சொல்லவேணும். விசாரித்து வரச்ச்சொன்னீர்கள்களென்று அலைந்து தண்ணிவெண்ணியின்றி சேதி கொண்டுவந்திருக்கிறேன்.
– சொல்லவேண்டியதை முடிக்காமல் பாதியில் நிறுத்திவிட்டீர்களே?
– எங்கே விட்டேன்?
– உங்க ராஜா எச்சம்ம நாயுடுவிடம் சமாதானம் பேச அவரே நேரில் போனதாகச் சொன்னீர்கள்.
– அடடா அந்தக்கதையா? கார்மேகம்
– ஆமாம் அதே கதைதான். போன இடத்தில் நம் நாயக்கரை உன்னைத்தான் எதிர்பார்த்திருந்தோம், எனக்கூறி சிறைப்பிடித்திருக்கிறார்கள்
– பொறவு?
– பிறகென்ன, அவர்காது, கழுத்து என அணிந்திருந்தவற்றையெல்லாம் கழட்டிகொடுத்து உயிர் பிச்சைக்கேட்டிருக்கிறார். அங்கே விஜயநகர மன்னருக்கும் செய்திகிடைத்திருக்கிறது. வேலூரிலிருந்து புறப்பட்டு கிருஷ்ணபுரம் நேற்று வந்திருந்தார். நமது மன்னர் அவரிடமும் மன்னிப்பு கோருகின்றவகையில் பெண்டுகள் பெரியாளனைவருடனும் அவர் காலிலே விழுந்து அழுதிருக்கிறார். அதுவன்றியும் 60000 வராகனை உடனே செலுத்துவதாகவும் இல்லையெனில் அவர்கையாலேயே தம்மை கொன்றுபோடலாமென கூறியதாகவும் பேச்சு. ராஜாங்கமும் வேண்டாம் கிரீடமும் வேண்டாமென தற்போது சிங்கபுரத்தில்தான் நம் மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கர் இருக்கிறார். அவரது புத்ரியும் தஞ்சை மன்னர் ஸ்ரீமான் ரகுநாதநாயக்கரின் பாரியாளுமாகிய தாயாரம்மாள் தம் கணவரையும் மதுரைநாயக்கரையும் அழைத்துக்கொண்டு கிருஷ்ணபுரம் வருகிறார்கள். அவர்களிருவரும் மீண்டும் நம் நாயக்கரை இராச்சியபரிபாலனம் செய்யச்சொல்லி வற்புறுத்த இருக்கிறார்களாம்.
– கார்மேகம் என்ன சேதி கொண்டுவந்திருக்கிறான்?
– அவன் கொண்டுவந்திருக்கும் சேதி எதுவாக இருந்தாலும் உனக்கு இப்போதைக்குத் தெரியவேணாம். நீ வாடா கார்மேகம்
கார்மேகத்தை அழைத்துக்கொண்டு உக்கிராண அறைபக்கம் பிரதானி ஒதுங்கினார்.
(தொடரும்)
.
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -13
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-2)
- தாகூரின் கீதப் பாமாலை – 14 இளமங்கைக்குப் புரியமா ?
- முள்வெளி அத்தியாயம் -9
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 20)
- திரைப்படம்: ஹாங்காங்கின் இரவுகள்
- சுந்தர் சி யின் “ கலகலப்பு “
- அன்னா ஹஸாரே மந்திரவாதி அல்லர்
- பொக்கிஷம் – ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, மா. அரங்கநாதன் – ஆவணப்படங்கள்.
- கே.எஸ்.தங்கசாமியின் “ ராட்டினம் “
- யமுனா ராஜேந்திரனுடன் சில மணித்தியாலங்கள்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம்
- எம் சூர்யோதயம்
- வளவ. துரையனின் நேர்காணல்
- நாவல்: அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும் – அத்தியாயம் ஒன்று: தோர்ன்கிளிவ் பார்க்கில்
- உழைப்பால் உயர்ந்த உத்தமி! – சுசேதா கிருபளானி – (1906 – 1974)
- கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மம்தா பானர்ஜியின் நடவடிக்கைகளை கண்டித்து கண்டனக் கருத்தரங்கம்
- பஞ்சதந்திரம் தொடர் 44 – வேதியனும் திருடர்களும்
- மலைப்பேச்சு -செஞ்சி சொல்லும் கதை-26
- என் முகம் தேடி….
- தங்கம் – 7 சீனாவின் மைடாஸ்
- சின்னமகளிடம் கிங் ஃபிஷர் பற்றி ஒரு உரையாடல்
- தருணங்கள்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூறு இரா.முருகன்
- வரலாறும் நமது அடையாளங்களும் – ஜோ டி குருஸ்
- ஃபேஸ்புக் உரையாடல்கள் மற்றும் அவற்றின் மீதான டிப்பணிகள்
- 2025 ஆண்டுக்குள் முரண்கோள் (Asteroid) ஒன்றில் மனிதத் தளவுளவி இறங்கி ஆராய நாசா விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கிறது.
- முகம்மது வரலாற்றில் இருந்தாரா? Did Muhammad Exist? புத்தக விமர்சனம்
- துருக்கி பயணம்-2 அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ்