மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 3

This entry is part 11 of 33 in the series 27 மே 2012

 


ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா
தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா


பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன.

பெர்னாட் ஷா (Preface to Mrs. Warren’s Profession Drama)


ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர்.  அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி.  தந்தையார் தோல்வியுற்ற வணிகத்துறையாளர்.  வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர்.  இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார்.  அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார்.  நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வியுறும் நாடகங்களை எழுதினார்.  பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களை விமர்சனம் செய்து 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து எழுதி வந்தார்.  அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.

அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898), மிஸிஸ் வார்ரனின் தொழில் (Mrs. Warren’s Profession) (1893) போன்றவை.  ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.

 

மேடம் மோனிகா வார்ரன் நாடகத்தைப் பற்றி :

[தமிழில் எழுதப் பேசும் வசதிக்காக பெர்னாட் ஷாவின் நாடகப் பெயர்கள் சிலவற்றை நான் எளிதாய் மாற்றி இருக்கிறேன்.]

பெர்னாட் ஷா நாடகத்தின் அடிப்படைக் கருத்து இதுதான் :  ஏழ்மையாலும், சமூகப் புறக்கணிப்பாலும், தனிப்படுவ தாலும், இல்லாமையாலும், வேலையின்மையாலும் சில மாதர் பரத்தையர் தொழில் சிக்கிக் கொள்கிறார் என்பதாக பெர்னாட் ஷா தன் நாடக முன்னுரையில் கூறுகிறார்.  மிஸிஸ் மோனிகா வார்ரன் ஒரு நடுத்தர வயது மாது.  உயர்தரப் பரத்தையர் மாளிகையை மேற்குடிச் செல்வந்தருக்கும், சமூகச் செல்வாக்கு மாந்தருக்கும் நடத்தி வரும் உரிமையாளி. நளினமும், நாகரீகமும் கவர்ச்சி மேனியும் கொண்டவள். மோனா லிஸா போன்று பார்க்க ஓர் அழகிதான். அவளுக்கு விவியன் என்றொரு வாலிபப் புதல்வி. மகள் கேம்பிரிட்ஜ் யுனிவெர்சிட்டி பட்டதாரி. அவளது கல்லூரிப் படிப்புக்குத் தொடர்ந்து பணத்தை அனுப்பிய அவளது அன்னை எப்படிப் பணம் சம்பாதிக்கிறாள் என்று தெரியாமல் இருக்கிறாள்.  அந்த இரகசியம் தெரிந்ததும் விவியன் வெகுண்டு, வெடித்து அன்னையைத் திட்டி அறவே வெறுக்கிறாள்.  தாய் சிறு வயதில் வறுமைப் பிடியில் பட்ட துயர்களைக் கூறிப் பரத்தையர் தொழிலில் தான் தள்ளப் பட்ட காரணத்தை விளக்குகிறாள்.  மகளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தர்க்கத்தின் முடிவில் உடன்பட ஒருவரும் இயலாது இருவரும் தாம் விரும்பும் தனித்தனிப் பாதையில் போகிறார்.  மோனிகா தன் பரத்தையர் தொழிலைத் தொடர்கிறாள்.  தாயைப் போல பிள்ளை என்பார் சிலர். ஆனால் விவியன் ஒரு விதி விலக்கு மங்கை.  அவள் அன்னையைப் போலின்றி ஒரு கௌரவத் தொழிலில் உழைத்துச் சம்பாதிக்க ஈடுபடுகிறாள்.

மிஸிஸ் வார்ரனின் தொழில் நாடகத்துக்குத் தடை உத்தரவு  

1893 இல் எழுதிய பெர்னாட் ஷாவின் நாடகம் 1925 ஆண்டுவரை அடுத்தடுத்துத் தடை செய்யப்பட்டு இங்கிலாந்தில் அரங்கேறாது முடங்கியே மூலையில் கிடந்தது. பிரிட்டனின் அக்கால அரங்க மேடை அதிபரரான லார்டு சேம்பர்லின் “மிஸிஸ் வார்ரனின் தொழில்” நாடகத்தை எந்த நகரிலும் அரங்கேற்றக் கூடாது என்று தடை உத்தரவு போட்டார்.  காரணம் அந்த நாடகம் பரத்தையர் தொழிலைப் பற்றிக் காட்டி ஆடவரையும், மாதரையும் இழிவு செய்கிறது.  பரத்தையர் தொழில் நாட்டில் ஊன்றி வளர்வதற்கு மூல காரணமே சமூகம் தான் என்பது நாடகக் காட்சியாக வெளியாவது அப்போது வரவேற்கப் படவில்லை.  1902 ஆண்டில் லண்டனில் உள்ள “நியூ லிரிக் கிளப்” தன் உறுப்பினர் மட்டும் பார்க்க அந்த நாடகம் முதலில் அரங்கேறியது.  1905 இல் நியூ யார்க்கில் “மிஸிஸ் வார்ரன் தொழில்” நாடகம் முதன்முதல் அரங்கேறிப் பாதியில் போலீசார் குறுக்கிட்டு நடிகர் குழுவினர் கைது செய்யப் பட்டனர். பொதுநபர் ரசிக்க 1925 ஆண்டில்தான் அதை லண்டன் நாடக அரங்குகள் மேடையில் காட்ட முன்வந்தன.

 

பரத்தைமைத் தொழில் (Prostitution) பற்றி பெர்னாட் ஷாவின் கருத்துகள்

பெர்னாட் ஷா 1893 இல் “மிஸிஸ் வார்ரனின் தொழில்” என்னும் நாடகத்தை எழுதினார்.  அது பரத்தைமைத் தொழலில் ஈடுபட்டு ஊதியம் சம்பாதிக்கும் மிஸிஸ் வார்ரனைப் பற்றியது. அந்த வெறுப்புத் தொழிலில் கிடைத்த பணத்தை மகளுக்குத் தெரியாமல் சேர்த்து மகளைப் பட்டப் படிப்பில் ஏற்றி வளர்த்த நிகழ்ச்சியே நாடகத்தின் ஆணிவேராய் அமைந்துள்ளது.  இறுதியில் அதை அறிந்து கொண்ட மகள் ஆவேசம் கொண்டு அன்னையைப் பிரிவதே நாடக உச்ச முடிவாக எழுதப்பட்டுள்ளது.

மிஸிஸ் வார்ரன் உட்பட பரத்தைமைத் தொழிலில் பங்கு கொண்ட மற்றவரும், அவளது ஆசை நாயகரும் கண்ணியமாக காட்சி அளித்துப் போவதாய் பெர்னாட் ஷா காட்டி இருக்கிறார்.  இந்த கசப்பு நாடகத்தை தடை செய்யத் தகுதியுள்ள ஆபாச நடைப் போக்குகள், முரண்பாடுகள் எதுவும் வசனங்களில் இல்லை.  பரத்தைமை பற்றிய ஆபாசக் காட்சிகள், அமங்கலச் சொற்கள், அதிர்ச்சி வரிகள் எவையும் நாடகத்தில் எங்கும் காணப் படவில்லை. நாடக வசனங்களை இரட்டைப் பொருளில் பெர்னாட் ஷா எழுதி இருப்பது திறமையான நவீன நடைப் போக்காக திகைக்க வைக்கிறது.

பரத்தையர் தொழில் மாளிகை வைத்து நடத்தும் மிஸிஸ் வார்ரன் முரண்பாடு நாடகத்தை பெர்னாட் ஷா எழுதியதின் நோக்கம் என்ன ?  பரத்தைமைத் தொழிலின் மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட நெறிகள் அல்ல !  ஆடவரின் ஆதிக்க வன்முறை வெறிகள் அல்ல !  வறுமை, ஏழ்மை, பசி, பட்டினி, தனிமை, வேலையின்மை, சமூகப் புறக்கணிப்பு, முறிந்த குடும்பம், வன்முறைக் கற்பழிப்பு, கட்டாயத் தொழில் அழுத்தம் போன்ற சமூக இடை யூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன என்று பெர்னாட் ஷா தன் நாடக முகவுரையில் கூறுகிறார்.

**********************

 

நாடக  உறுப்பினர்

1. மேடம் மோனிகா வார்ரன் [Mrs. Kitty Warren] (45 வயது)

2. மிஸ் விவியன் வார்ரன் – [Ms. Vivie Warren] மோனிகாவின் ஒற்றை மகள் (வயது : 22)

3. பாதிரியார் சாமுவெல் கார்டுநர் [The Rev. Samuel Gardner] (வயது : 52)

4. பிராங்க் கார்டுநர் [Frank Gardner], விவியனின் காதலன் & சாமுவெல் பாதிரியாரின் மகன் (வயது : 20)

5. வில்லியம் பவல் [Praed] (நடுத்தர வயது) : மேடம் மோனாவின் கூட்டாளி

6. ஜார்ஜ் வாலஸ் (Sar George Crofts) (நடுத்தர வயது) : மேடம் மோனாவின் தோழன்.

************************

மேடம் மோனிகாவின் வேடம்

(Mrs. Warren’s Profession)

நான்கு அங்கங்கள்

(முதலாம் அங்கம்)

அங்கம் -1 பாகம் -3

இடம்:  ஹாஸ்லிமியர், ஸுர்ரி, இங்கிலாந்து

நடந்த ஆண்டு : 1893

காலம் :  வேனிற் காலப் பிற்பகல்

அரங்க அமைப்பு:  தோட்டத்தில் அமைந்திருக்கும் வேனிற் குடில் மாளிகை. பின்புலத்தில் மரம் செடிகள் நிறைந்த ஒரு குன்று.  மரம் ஒன்றில் ஒரு சைக்கிள் சாத்தப்பட்டிருக்கிறது.  மர நிழலில் கட்டியுள்ள ஒரு தூரியில் இள நங்கை ஒருத்தி கையில் புத்தகத்தைப் படித்த வண்ணம் ஒருபுறம் சாய்ந்து முகமத்தைக் காட்டிப் படுத்திருக்கிறாள்.  குடிசையின் பின்புறத்திலிருந்து ஒரு நடுத்தர வாலிபர் (Praed] இளமாதை நோக்கி வருகிறார்.  வழி தவறிய வாலிபர் வாசல் அருகில் நின்று இள நங்கையிடம் பேசுகிறார்.  வாலிப கோட் சூட் அணிந்து குறுந்தாடியோடு காணப் படுகிறார்.  இள நங்கையின் வயது 20 மேல் இருக்கலாம். கவர்ச்சி அழகி, உறுதியான உடற்கட்டு, எடுப்பன தோற்றம். நளினமோடு பேசும் நடுத்தர வகுப்பு மங்கை. விஞ்ஞானம் படித்த கல்லூரிப் பட்டதாரி.

 

(சென்ற வாரத் தொடர்ச்சி)


மிஸ். விவியன்:  எனக்குப் பணக்கவலை இல்லை.  என் அன்னை அனுதினத் தேவை அனைத்தையும் கவனித்துக் கொள்கிறாள்.  நான் பீத்தோவன், வாஞ்னர் சங்கீதக் கச்சேரிகளைத் தவறாது பார்த்து வருகிறேன்.  நானொரு நவீன மங்கை.  நான் எப்படி என் தாயுடன் பழகி வர வேண்டும் என்று நீ நினைக்கிறாய் ?

வில்லியம்:  (தயக்கமுடன்)  அதுவா ?  அதை நான் எப்படிச் சொல்ல முடியும் ?

மிஸ். விவியன்:  நீ நம்புவதை விட எதை எதிர்பார்க்கிறாய் என்று சொல்.

வில்லியம்:  மிஸ் விவியன் !  உன் போக்கைப் பார்த்து உன் தாய் சற்று ஏமாற்றம் அடைவாள் என்று எனக்குத் தெரியுது.  உன்னிடம் எந்தக் குறையும் இருப்பதாய்த் தெரியவில்லை.  ஆனால் உன் தாயின் மெய்வாழ்க்கை நடைத்தைக்கு நீ முற்றிலும் வேறுபட்டவள்.

மிஸ். விவியன்:  தாயின் மெய்வாழ்க்கையா ?

வில்லியம்:  ஆமாம்.

மிஸ். விவியன்:  மெய் வாழ்க்கை என்றால் ?  என்ன அது ?

வில்லியம்:  பொதுவாக நீ கேள்விப் பட்டிருப்பாய் !  தாயின் வளர்ப்பு முறை ஏனோ பல மாதருக்குப் பிடிப்பதில்லை மிஸ் வார்ரன் !  வேறு மாதிரி வளர்க்கப் பட்டிருக்க வேண்டும் என்று சிந்தனை செய்வார்.  உன் தாயின் இரகசிய வாழ்க்கை … உனக்குத் தெரியும் என்று நான் ஊகிக்கிறேன்.

 

மிஸ். விவியன்:  ஊகிப்பதாய்ச் சொல்லி என்னைக் குழப்புகிறீர் மிஸ்டர் பவல்.  என் அன்னையைப் பற்றி உண்மையாகத் தெரியாது; எதுவும் தெரியாது எனக்கு.  நான் சிறு வயதிலிருந்தே தனியாக இங்கிலாந்தில் படித்துக் கொண்டிருந்தேன்.  விடுதியில் தங்கிப் படித்தேன்.  என்னைக் கண்காணிக்க பணத்துக்கு பணிப்பெண் நியமிக்கப் பட்டிருந்தாள். என் தாய் பெர்லின், பாரிஸ், வியன்னா வென்று பயணம் செய்து கொண்டே இருப்பாள். நான் தனிமையில் இங்கிலாந்தில் அடைபட்டுக் கிடந்தேன். எப்பொழுதாவது என் தாய் இங்கிலாந்துக்கு வருவாள், காண்பாள், செல்வாள், நான் அதைப் பற்றி புகார் செய்ய வரவில்லை.  பூரிப்பாக வாழ்கிறேன்.  எப்போதும் என் கையில் பணம் இருக்கும்.  நினைத்த உடையை நான் வாங்கி விடுவேன். அணிவேன். ஆனந்தம் அடைவேன்.  வாழ்கை பளுவாய்க் கனக்கவில்லை எனக்கு.  ஆனால் தாயைப் பற்றி நான் அறிவேன் என்று மட்டும் நினைக்கதே !  என் தாயைப் பற்றி உனக்குத் தெரிந்த அளவுக்குக் குறைவாகவே எனக்குத் தெரியும் !
வில்லியம்:  (தடுமாற்றமுடன்) ஓகோ அப்படியா ?  நான் சொல்வதற்கு ஒன்றிமில்லை ! பண விஷயத்தில் உனக்கும் உன் தாயிக்கும் நல்ல புரிதல், சுமுக உடன்பாடு உள்ளது. மிஸ் விவியன்.  (உலாவி நடந்து மேலே பார்த்து) மகிழ்ச்சி ஊட்டும் என்ன கவர்ச்சி யான இல்லம் இது !

மிஸ். விவியன்:  உரையாடும் போது, கொடூரத்தனமாகத் தலைப்பை மாற்றுகிறீர், மிஸ்டர் பவல் !  ஏன் என் தாயைப் பற்றிப் பேசித் நாம் தர்க்கமிட வேண்டும் இப்போது ?

வில்லியம்:  அப்படி நீ வெட்டிச் சொல்லாதே.  உன் தாயிக்குப் பின்னால் என் தோழி மகளுடன் நான் பேசும் போது ஒருவிதத் தயக்கம்  ஏற்படலாம் அல்லவா ?  இன்று தாயும் மகளும் இங்கு சந்திக்கும் போது நிறையப் பேசும் வாய்ப்பு உனக்கு உள்ளது மிஸ். விவியன் !

மிஸ். விவியன்:  இருக்காது, என் தாய் அப்படி ஒட்டிப் பேச மாட்டாள் என்னிடம்.  இதுவரைப் பேசியதும் இல்லை.  இனிமேலும் பேசுவார் என்று எதிர்பார்க்க வில்லை நான் மிஸ்டர் பவல் !  லண்டனில் சட்டத் தொழிலுக்கு நான் முயலும் எனது திட்டத்தைக் கேட்டால் என் தாய் கோபித்துச் சண்டை இடுவாள் என்று எதிர்பார்க்கிறேன்.

வில்லியம்:  ஆம் உன் தாய் உன்னைக் கோபித்துக் கொள்ளலாம்.

மிஸ். விவியன்:  பார் ! நான்தான் இந்தத் தர்க்கத்தில் வெற்றி அடைவேன்.  நாளைக்குப் போகிறேன் நான் லண்டனுக்கு, எனக்குப் பிடித்த சட்ட வேலை தேடிப் பிழைக்க.  அந்த வேலை பெண்ணை மேன்மைப் படுத்தும்.  அதற்காகத் தாயிடம் நான் கேட்கப் போவது லண்டனுக்குப் போக எனக்கு ஒருதிசை டிக்கட் செலவு.  என்னிடம் ரகசியம்   எதுவுமில்லை மறைத்துக் கொள்ள. என் தாயிடம் ஏதோ ரகசியம் உள்ளது.  அதை வைத்து அவளை மடக்க நான் முற்படுவேன், தேவைப் பட்டால்.

வில்லியம்:  அப்படி ஒரு சந்தர்ப்பம் வராது.  உன் தாயின் கையைத் திருகாதே !  அது உன் முதுகெலும்பை முறிக்கலாம். ஒவ்வொருவரிடம் சில ரகசிய இரும்புப் பெட்டிகள் எப்போதும் உள்ளன.  அவற்றை ஊடுருவி உடைக்க முயலாதே !  உன் மீதே தெறிக்கும் அந்தச் சிதறல்கள்.

மிஸ். விவியன்:  அப்படியானால் நீவீரே அன்னையைப் பற்றிச் சொல்லி விடுங்களேன்.

 

வில்லியம்:  அது என்னால் இயலாது மிஸ். விவியன்.  நானும் சொல்ல முடியாது, நீயும் தாயின் ரகசியத்தை அறிந்து கொள்ள முயலாதே !  எனக்குத் தெரியும், நீ ஒரு வாழ்க்கை போராட்டக்காரி, அழுத்தக்காரி, துணிச்சல்காரி !  ஆனால் உன் தாய் ஒரு கோபக்காரி !  அவள் கோபத்துக்கு நீ பலியாகாதே !

மிஸ். விவியன்:  பயமுறுத்த வேண்டாம் என்னை, மிஸ்டர் பவல்.  நான் சட்டப் படிப்பு சம்பந்தமாய் லண்டனில் விபரம் அறியும் போது என் தாயைப் போன்ற இரு மாதரைச் சந்தித்தேன்.  அவரைப் பற்றி தெரிந்து கொண்டேன்.  நான் சொல்கிறேன், என் தாயைப் பற்றி நான் அறியாமையில் கிடப்பது உம்மால்தான் தெரியமா !  நாமிதைப் பற்றி இனிப் பேச வேண்டாம்.  (திடீரெனத் திரும்பி) ஈதோ என் தாயே வருகிறாள்.

(அப்போது தாய் மிஸிஸ் மோனிகா வார்ரன் வருகிறாள்.  அவளைத் தொடர்ந்து அவளது நண்பன் ஜார்ஜ் வாலஸ் பின்னால் நுழைகிறான்)

 

(தொடரும்)

***************

தகவல் :

Based on The Play : Mrs. Warren’s Profession By : George Bernard Shaw, – Plays Unpleasant) (1958)

(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(d) The Wicked Wit of Oscar Wilde (1997)

(e) http://en.wikipedia.org/wiki/Mrs._Warren’s_Profession

(f) http://www.enotes.com/mrs-warrens-profession

(g) The Great Quotations Compiled By : George Seldes (1967)

(h) BBC DVD Video Limited – Bernard Shaw’s Mrs. Warren’s Profession Released in August 2006 (109 minutes)

(i) A Guide to the Plays of Bernard Shaw By : C.B. Purdom (1964)

(j) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)

(k) http://www.online-literature.com/george_bernard_shaw/mrs-warrens-profession/

 

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 23, 2012)

Series Navigationதிராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்மே 17 விடுதலை வேட்கை தீ
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *