பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-5)

This entry is part 27 of 41 in the series 10 ஜூன் 2012


இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

 

வறுமையிற் செம்மை போற்றிய கவிஞர்கள்

வறுமை மிகுந்த தமது வாழ்க்கையிலும் செம்மாந்த வாழ்க்கையினை இரு கவிஞர்களும் வாழ்ந்தனர். வறுமையின்றி மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று விரும்பி அதனைத் தமது படைப்புகளில் பதிவு செய்தனர். தாம் சார்ந்த சமுதாயம் பசியின்றி, நோயின்றி வளமான வாழ்க்கையினை வாழ வேண்டும் என்று மகா கவியும் மக்கள் கவியும் விரும்பினர்.

நாட்டு மக்கள் பிணியும் வறுமையும் அகன்று குறைவின்றி மக்கள் வாழ வேண்டும் என்ற மகாகவி பாரதியின் உளக்கிடக்கையினை அவரது  அனைத்துப் படைப்புகளிலும் காணலாம்.

‘‘வயிற்றுக்குச் சோறிட வேண்டும் – இங்கு

வாழும் மனிதருக் கெல்லாம்

பயிற்றிப் பல கல்வி தந்து – இந்தப்

பாரை உயர்த்திட வேண்டும்’’

என்ற ஒப்பற்ற கொள்கையின் அடிப்படையில் தான் பாரதியின் இலட்சிய வாழ்வு நடைபோட்டுச் சென்றது.

தமது சொந்த வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிய கவலைகளே கொள்ளாமல் மனித ஜாதியின் உயர்வில்தான் தமது சிறப்பு அடங்கியிருப்பதாக நினைத்தவர் பாரதி. அவரது படைப்புகள் முழுவதிலும் இத்தகைய சிந்தனை எதிரொலிப்பதைக் காணலாம். பாரதியார்,

‘‘அடா மனிதர்களே! எத்தனை சாஸ்திரங்களுக்கும், ஆக்கினைகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும், நம் மனிதர் உட்பட்டிருக்கவில்லையா? ஒரு புதுகட்டுப்பாடு செய்து கொள்வோமே. அந்தக் கடட்டுப்பாடு யாதெனில், ‘ஒருவர்க்கொருவர் மனத்தாலும் தீங்கு நினைப்பதில்லை. ஒருவர்க்கொருவர் பயப்படல் இல்லை. மானிடரே, இந்த விரதம் எடுத்துக் கொள்ளுங்கள்..…..‘முதலாவது சிலருக்குச் சோறு மிதமிஞ்சியிருக்க, பலர் தின்னச் சோறில்லாமல் மடியும் கொடுமையைத் தீர்த்துவிட வேண்டும். இது இலக்கம் ஒன்று. பூமியின் மீதுள்ள நன்செய், புன்செய், தோப்பு, துரவு,ஈ சுரங்கம், நதி, அருவி, குப்பை, செத்தை, தரை –கடவுளுடைய சொததில் நாம் வேலி கட்டக் கூடிய பாகத்தையெல்லாம் –சிலர் தங்களுக்குச் சொந்தமென்று வேலி கட்டிக் கொண்டனர். பலருக்கு ஆகாசமே உடைமை. வாயு ஆகாரம். இதற்கு மருந்து என்னவென்றால் எல்லோரும் சமானம், அண்ணன் தம்பி போல என்ற புத்தி உண்டாகி ஏழைகள் வயிறு பசிக்காமல் செல்வர்கள் காப்பாற்ற வேண்டும்’’

(மேற்குறிப்பிட்ட நூல், ப., 167)

என்று எடுத்துரைக்கின்றார்.

பாரதி தமது எழுத்துக்களிலே வறுமையையும் அதனால் மூண்டிருக்கும் துன்பங்களையும் கண்டித்து எழுதியதோடு உளநிறைவு கொள்ளவில்லை. தமது வாழ்வு நெறியிலும் மற்றவர்களின் ஏழ்மையையும் இல்லாமையையும் கண்டு மனங் கலங்கினார். ஏழைகள், குறைந்த வருவாயுள்ளவர்கள், பிச்சைக்காரர்கள் ஆகியோருக்குத் தமக்குக் கிடைத்த எந்தப் பொருளையும் கவலையில்லாது அள்ளிக் கொடுத்த பெருமையை அவரது வரலாறு கூறும்.

பாரதியார் வருகிறாரென்றால் பாண்டிச்சேரியிலுள்ள ‘புஷ்’ வண்டிக்காரர்களுக் கெல்லாம் ஒரே மகிழ்ச்சிதானாம். அவரிடம் இருக்கும் பொருள் எதுவானாலும் வண்டிக்காரனுக்குக் கை மாறிவிடும். திருவல்லிக்கேணியில் வாழ்ந்தபோது ஒருமுறை தமது பட்டுத்துணிகள் அனைத்தையும் எடுத்துப் பக்கத்திலிருந்த ஏழைகளுக்கு வினியோகிக்கத் தொடங்கி விட்டாராம். அவர்களோ பயந்து போய் ஏதோ பழைய துணிகளிருந்தால் போதுமே என்று சொல்லியும் விடவில்லையாம் பாரதியார்(மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா மலர், ப., 166). என்று அறிஞர் வ.ரா.வும் பாரதியாரது துணைவியார் திருமதி செல்லம்மா பாரதியும் எழுதிய அவரது வரலாற்று நூல்களில் இது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

ஏழைகள் உணவு இல்லாமல் தவிக்கக் கூடாது என்பதும், சோற்றுக்காக மனிதர் ஒருவர்க்கொருவர் செய்து கொள்ளும் அநியாயம் ஒழிய வேண்டும் என்பதும் மக்களின் வயிற்றுக்குச் சோறிடுவதே மனித இனத்தின் நாகரிகத்திற்குச் சான்று என்பதுவும் மகாகவி பாரதியாரின் தலையாய கொள்கைகளாக இருந்துள்ளதை அவரது படைப்புகளின்றும் அறியலாம்.

பாரதி தமது வறுமையைப் பற்றிக் கவலைப்படவில்லை. எனிலும் அன்றைய சமுதாயம் காந்தியடிகள் பாரதியை முதன் முதலில் பார்த்து கூறியதுபோல, ‘‘ஜாக்கிரதையாகப் பாதுகாத்திருந்தால்’’ இன்னும் பல செல்வங்களைப் பாரதியார் அளித்திருப்பார்.

பாரதி ஆங்கிலேயர் ஆட்சியில் மக்கள் அவல வாழ்வு வாழ்ந்ததை எண்ணிக் கண்ணீர் வடித்ததைப் போன்று, மக்கள் கவிஞரும் சுதந்திர இந்தியாவில் மக்கள் உணவின்றி வாடி மடிந்ததைப் பார்த்து கவலை கொண்டு அதனை எதிர்த்துக் குரல் கொடுத்தார்.

சுதந்திரம் பெற்றவுடன் வாழ்வில் வளமை வந்துவிடும் என்று நம்பியிருந்த மக்கள் வறுமையின் பிடியில் சிக்கி மேலும் மேலும் நைந்தனர். இதனைக் கண்டு வருந்திய மக்கள் கவிஞர்,

‘‘ஏழைகள் பாட்டைக் கேளுங்க!

…………………………… …………………………. ……………………….

இது ஓலைக் குடிசை தானுங்க!

எங்கும் ஓட்டை நிறைந்த வீடுங்க!

தினம் ஓய்வில்லாமல் உழைத்து வந்தாலும்

உயர்வதும் நிடையாது –ஆனாலும்

அயர்வதும் நிடையாது’’ (பட்டுக்கோட்டையார் பாடல்கள், ப., 300)

‘‘வறுமைக்கு மக்கள் நலம் பலியாச்சு – எங்கும்

வஞ்சகர் நடமாட வழியாச்சு!

சோகச் சுழலிலே ஏழைச் சருகுகள்

சுற்றுதடா – கண்ணீர் கொட்டுதடா’’(மேலது, ப., 282)

‘‘வாழை நிலைக்குது சோலை தழைக்குது

ஏழைகளுக்கு அதில் என்ன கிடைக்குது?

கூழைக் குடிக்குது நாளைக் கழிக்குது

ஓலைக் குடிசையில் ஒட்டிக் கிடக்குது!’’ (மேலது, ப., 267)

என்று ஏழைகளின் வாழ்க்கையையும் அவர்களது நிலைமையையும் சித்திரிக்கின்றார்.

உணவுப் பற்றாக் குறை இல்லை என்று ஒருபக்கம் கூறுகின்றனர். ஆனால் பலபேர் பட்டினியால் வாடுகின்றனர். பிறர்க்குப் பயன்படும் உழைப்பை மேற்கொண்ட உழைப்பாளர்கள் உழைத்து உழைத்து உருக்குலைந்து வெறுப்படைந்துள்ளவா்களாக உள்ளார்கள். அவர்களுடைய உடல்களும் காய்ந்துள்ளன. பிறர் வயிற்றைக் குளிர வைத்த இவர்களுடைய வயிறுகளோ, சற்றும் குளிராமல் எப்போதும் காலியாகக் காய்ந்து வருவதை,

‘‘தேனாறு பாயுது வயலில்

செங்கதிரும் சாயுது ஆனாலும்

மக்கள் வயிறு காயுது அதிசயந்தான் இது

வகையாக இந்த நாட்டில் என்று

மாற்றம் உண்டாகுமோ?’’(ப.கோ.பாடல்கள், ப.,298)

என்று பாடுகின்றார்.

அனைவருக்கும் நல்ல உடை, நல்ல உணவு, நல்ல இருப்பிடம் கிடைக்க வேண்டும் என்று விரும்பியவர் மக்கள் கவிஞர். மற்றவர்கள் நல்ல உடை உடுத்தினால் மட்டுமே தாம் உடுத்துவது மகிழ்ச்சியைத் தரும் என்று கருதினார் பட்டுக்கோட்டையார்.

ஒருமுறை விவசாயிகள் மாநாடு கீரமங்கலத்தில் நடந்தபோது அம்மாநாட்டிற்கு வந்து டி.ஓ.ஆர்.சந்திரன் வீட்டில் தங்கி இருந்தால். நிகழ்ச்சிகு ஆரம்பிக்க கவிஞரை அழைத்துவர அந்த வீட்டிற்குச் சென்றேன். பட்டுவேட்டி சட்டையைக் காட்டி, ‘‘இதைப் போட்டுக்கிட்டு நிகழ்ச்சிக்கு வரட்டுமா?’’ன்னு கவிஞர் கேட்டார். ‘‘ஏன் அப்படிக் கேக்குறீங்க?’’ன்னு நான் கேட்டேன். அதற்குக் கவிஞர், ‘‘இல்ல…. விவசாயிக பட்டினியில் வாடும்போது நீ பட்டுவேட்டி கட்டிக்கிட்டுப் போகாத. தோழர் மாசிலாமணி கண்டிப்பார்’’ன்னு சென்னையில் தோழர் மாயாண்டி பாரதி கூறினார். அதனாலதான் கேட்டேன்’’ என்றார்.

‘‘பட்டுச் சட்டை போடுறது தப்பில்லை. பாமர மக்கள மறந்திடக் கூடாது. .. நீங்க மறந்திருந்தா இந்த மாநாட்டுக்கே வந்திருக்க மாட்டீங்களே! உங்களோட உள்ளம் எங்களுக்கும் ஏழை மக்களுக்கும் தெரியும்.அதனால சும்மா போட்டுக்குங்க. தப்பில்லை’’ன்னு நான் சொன்ன பின்னாலதான் கவிஞர் பட்டாடையைப் போட்டுக் கொண்டார் என்று பட்டுக்கோட்டை வட்டார பொதுவுடைமை கட்சியின் செயலாளராக இருந்த எம்.மாசிலாமணி குறிப்பிடுகின்றார். (காலமறிந்து கூவிய சேவல், ப., 133). இந்த நிகழ்ச்சி மக்கள் கவிஞரின் மனதையும் அப்பழுக்கற்ற அவரது வாழ்க்கையையும் எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

பொதுவுடைமையால் மட்டுமே மக்களின் வறுமை போகும் என்று நம்பி அந்த இயக்கத்திற்காகப் பாடுபட்டவர் மக்கள் கவிஞர். பாரதி அனைத்தும் அனைவருக்கும் பொதுவாக இருந்தால் வறுமை வராது என்று கருதினார். மக்கள் கவியோ அதற்காகவே பாடுபட்டார். பாரதியைப் போன்று தன்னால் இயன்றதை மக்களுக்கு மக்கள் கவிஞர் செய்தார். இதனைப் பின்வரும் நிகழ்ச்சி தெளிவுறுத்துகிறது.

‘‘பட்டுக்கோட்டையாரின் நெருங்கிய நண்பரொருவர் கட்சியின் முழுநேர ஊழியராக இருந்தாராம். அவரிடம் தோழர் உங்களுக்கு நான் ஒரு மிதிப்பொறி வண்டி (மோட்டார் சைக்கிள்) வாங்கித் தரேன் என்றாராம். அதற்கு அவரோ மிதிப்பொறி வண்டி எல்லாம் வேண்டாம்பா! ஒரு பத்து மிதி வண்டிகள் (சைக்கிள்) வாங்கித்தந்தா மிதிவண்டிக் கடை வைத்துப் பிழைத்துக் கொள்ள ஏதுவாகவும் அத்துடன் மிதிவண்டியிலே போய்க் கட்சி வேலையும் பார்த்துக்குவேன் என்றாராம். உடனே அவருக்குப் பத்து மிதிவண்டிகளைக் கடன் மூலமாக வாங்கிக் கொடுத்தாராம். அதிலே பெரும்பகுதிக் கடன் தவணையைப் பட்டுக்கோட்டையார் செலுத்தினார். பின்னர் அவர் மறைந்தவுடன் மூன்று அல்லது நான்கு தவணைகள் அந்தத் தோழர் செலுத்தினார்’’.(கார்த்திகேயன், பாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்டை, ப.,55.)

பாரதி வாழ்ந்தபோது அவர் செய்ததைப் போன்று மக்கள் கவிஞரும் பிறருக்காகச் செய்திருப்பது சிந்தித்தற்கு உரியது. தாம் சார்ந்த பொதுவுடைமை இயக்கத் தோழருக்குத் தம்மிடம் பணமில்லாதபோதும் கடன் பட்டு உதவிய கவிஞரின் பெருந்தன்மை வியந்து போற்றுதற்குரியது. பாரதி அனைவருக்கும் உதவினார். பட்டுக்கோட்டையார் தாம் சார்ந்த பொதுவுடைமை இயக்கத்தாருக்குத் தானே உதவினார் என்று கூறலாம். ஏனெனில் அந்தந்தச் சூழல்களே சிலவற்றைத் தீர்மானிக்கிறது. பொதுவுடைமை பற்றிப் பாரதி  பாடினாலும் அவரது நோக்கம் தேசவிடுதலையாகவே இருந்தது. அதனால் அதனையே முழுமையாகப் பாடுகின்றார். மகாகவியின் வழியில் பயணித்த மக்கள் கவிஞர், சுதந்திரம் பெற்ற இந்தியாவில் முழுமையாக மக்களின் வாழ்வு உயர வேண்டுமானால் பொதுவுடைமை இயக்கத்தினால் மட்டுமே முடியும் என உணர்ந்து வாழ்ந்ததால் தம்மைப் போன்று வறுமையில் வாடிய மற்றொரு தோழருக்கு உதவுகிறார். உழைக்கின்ற மக்கள் வாழ்வில் மலர்ச்சி ஏற்பட வேண்டும் என்று கருதி அதற்காகப் பாடுகின்றார். பாரதி எங்ஙனம் தனது வாழ்க்கையின் இறுதி வரையிலும் தாம் கொண்ட கொள்கையிலிருந்து மாறாது வாழ்ந்து மறைந்தாரோ அதுபோன்றே மக்கள் கவிஞரும் வாழ்ந்து மறைந்தார். இருபெரு கவிஞர்களும் வறுமையிலும் செம்மாந்த வாழ்க்கை நடத்தினர். அதனால்தான் இருகவிஞர்களும் என்றும் மக்களின் மனதில் நிலைத்து நிற்கின்றனர்.(தொடரும்….)

 

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 23)முள்வெளி அத்தியாயம் -12
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *