நான் ‘அந்த நான்’ இல்லை

This entry is part 34 of 43 in the series 24 ஜூன் 2012

தெலுங்கில் :B. ரவிகுமார்

தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

இதோ பாருங்கள்! நீங்க இப்போது திடீரென்று எங்கள் வீட்டுக்குள் நுழைந்து, என்னை இந்த கோலத்தில் பார்த்தீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். கட்டிய ஆடையுடன் தலையில் குடத்தால் அப்படியே தண்ணீரை அபிஷேகம் செய்துக் கொண்டிருப்பதாக நினைப்பீர்கள். விஷயம் எதுவாக இருந்தால் என்ன? என்னைத் தவறாகப் புரிந்துக் கொண்டவர்களில் நீங்களும் ஒருத்தர் என்று கணக்கிட வேண்டியது தான்.

ஆனால் நான் ரொம்ப நேரமாய் வியர்வை ஆறாய் வழிய எதையோ தேடிக் கொண்டு இருப்பது கலைந்து கிடக்கும் சாமான்களைப் பார்த்தாலே புரிந்து போய் விடும். ஏற்கனவே நான்கு முறை தேடிவிட்ட பீரோவை விட்டுவிட்டு மூலையில் கிடந்த ஸ்டூலை கொண்டு வந்தேன். அதன் மீது ஏறி நின்று பீரோவின் மீது ஏறி, அங்கிருந்து பரண்மேல் ஏறி, பழைய நியூஸ் பேப்பர் கட்டை எடுத்துக் கீழே தள்ளி விட்டேன். மற்ற பொருட்களுக்கும் அதே கதியை உண்டாக்க முயன்ற போது பக்கத்தில் இருந்த குடம் அதை முன்கூட்டியே புரிந்து கொண்டு விட்டது போல் என் கை பட்டு தானே கீழே விழுந்து விட்டது. ஆனால் ஏற்கனவே கீழே விழுந்து விட்ட நியூஸ் பேப்பர் கட்டை விட தான் உசத்தி என்று நிரூபித்துக் கொள்வது போல் பயங்கரமான சத்தத்தை ஏற்படுத்தியது. பக்கத்து அறையில் அடுத்தவீட்டு மாமியுடன் பேசிக் கொண்டிருந்த என் மனைவி “என்ன ஆச்சு?” என்று கேள்வி கேட்டது என் காதில் விழாமல் இல்லை. அதைப் போருட்படுத்தும் நிலையில் நான் இருக்கவில்லை.

ஆக மொத்தம் எல்லா பொருட்களையும் கீழே போட்டு விட்டு இறங்கினேன். திரும்பவும் தேடுதல் தொடங்கியது. பழைய அட்டைப் பெட்டிகள், பேப்பர்களுக்கு நடுவில், பழைய புத்தகங்களுக்கு இடையில், நோட்டுப் புத்தகங்களுக்கு நடுவில்… எங்கேயாவது தென்படுமோ என்று…

அதுசரி, இந்த தேடுதல் எல்லாம் எதற்காக என்று உங்களிடம் சொல்லவே இல்லை இல்லையா. உடனே சொல்லிவிட்டால் ”பூ! இதற்காகத்தானா இவ்வளவு மெனக்கெடல்?” என்று நீங்கள் சிரிக்கவும் செய்யலாம்.சின்ன வயது முதல் பத்தாம் வகுப்பு படிக்கும் வரையில் நான் சாதாரணமாகத்தான் வளர்ந்தேன், என்னுடைய கண்ணோட்டத்தில்.

கல்லூரிக்கு வந்த போது பழைய பொழுது போக்குகள் சினிமா, ஊர்சுற்றுவதுக்குத் துணையாக புதிதாக புத்தக வாசிப்பும் சேர்ந்து கொண்டது. புத்த வாசிப்பு என்றதும் நீங்கள் பாடப் புத்தகங்கள் என்று தவறாக புரிந்துகொண்டு விடப் போறீங்க. புத்தகங்கள் என்றால் நாவல்கள், வார இதழ்கள் போன்றவை. படிப்பில் நான் எப்போதும் சுமார் தான்.

அந்த காலகட்டத்தில் என்னுடைய அபிமான எழுத்தாளராக இருந்தவர் பத்தாண்டு காலமாக இலக்கிய உலகத்தை கோலோச்சிக் கொண்டிருடிருந்தார். தொடக்கத்தில் நான் அவருடைய கதைகளை, நாவல்களை அவற்றில் இருக்கும்  திருப்பங்கள் ஊகிக்க முடியாதைவையாக இருந்ததால் விழுந்து விழுந்து படிக்கத் தொடங்கினேன். நாட்கள் செல்ல செல்ல அவருடைய கருத்துக்கள் என் மீது ஆழமான முத்திரையை பதித்துவிட்டன. முக்கியமாக அவற்றில் வரும் கதாநாயகர்களின் குணாதிசயங்கள் ரொம்ப அற்புதமாக இருந்தன. அபாரமான புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்திக் கொண்டும், அவ்வப்பொழுது முனிவர்களைப் போல் அமைதியாக இருந்துகொண்டும் கூட கதாநாயகிகளிடமிருந்து காதலை அனாயாசமாக பெற்றுகொண்டும் ..ஒஹ்! ஒன்றா இரண்டா? கதாநாயகன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவற்றைப் படித்தால் நீங்கள் கூட ஒப்புக்கொண்டு விடுவீர்கள்.

அத்துடன் நானும் அவருடைய கதாநாயகர்களைப் போல் இருக்க வேண்டும் என்று என்னால் முடிந்த வரையில் முயற்சி செய்யத் தொடங்கினேன்.

வேண்டுமென்றே சில மாற்றங்களை வலுக்கட்டாயமாக ஏற்படுத்திக் கொண்டேன். கம்பீரமாக இருப்பது, மூக்குக் கண்ணாடி வழியாக மக்களை சீரியஸாகப் பார்ப்பது, அடிக்கடி ஜுப்பாவைப் போட்டுக்கொண்டு தனியாய் வகுப்பில் ஒரு மூலையில் அமர்ந்துகொள்வது, மேஜை மீது பாரதியாரின் புத்தகங்களுக்குப் பக்கத்தில் இரண்டு ரோஜாப் பூக்களை வைப்பது, தலையைக் கொஞ்சம் அசைத்தாலும் மூளையில் இருக்கும் புத்திசாலித்தனமெல்லாம் கீழே வழிந்து விடுமோ என்பது போல் மிடுக்காக நடந்துகொள்வது போன்றவை. இவையெல்லாம் சுபாவத்தில் இல்லாதவை என்பதால் தொடக்கத்தில் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. போகப்போக ‘இவன் உண்மையிலேயே அப்படிப்பட்டவன் தானோ?!” என்று சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்கள் வியந்து போகும் அளவிற்கு மாறிவிட்டேன்.

ஆனால் எனக்குப் பிடித்தக் கதாநாயகர்கள் எல்லோரும் தங்களுடைய திறமைகளை அனாயாசமாக வெளிப்படுத்துபவர்கள். அந்த இடத்தில் தான் எனக்குக் கொஞ்சம் பிரச்னையாக இருந்தது. வெளித்தோற்றத்தை சுலபமாக பின்பற்றி விடலாம். ஆனால் புத்திசாலித்தனம், திறமை முதலியவற்றுக்கு எங்கே போய் முட்டிக் கொள்வது? அப்படியும் என் சுற்றிலும் இருப்பவர்களுக்கு  ஒரு விதமான பிரமையைத் தோற்றுவிக்க என்னால் முடிந்தது.

உதாரணமாய் சங்கர் வந்து “வாத்தியாரே!  இந்த காதல் கடிதத்தை யாருக்கும் தெரியாமல் உஷாவிடம் செர்பிக்கணும். எப்படி?” என்று கேட்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது நான் ஒரே ஒரு நிமிடம் மட்டும் யோசிப்பதாக பாவனை செய்துவிட்டு, வழியைச் சொல்லித் தருவேன். அதுவும் என்னுடைய அபிமான எழுத்தாளர் தன்னுடைய கதாநாயகனைக் கொண்டு செயல்படுத்திய அதே வழியில்.

அதிர்ஷ்டவசமாய் வெற்றி பெற்று விட்டால் “நான் முன்னாடியே சொல்லவில்லையா” என்பது போல் போஸ் கொடுப்பேன். அவன் என்னைக் கட்டிப் பிடிக்கவும் பயந்து போய் பக்தியுடன் பார்ப்பான். அது அப்படியே வாய் வழியாக எல்லா இடத்திற்கும் பரவி விடும். இரண்டு மூன்று பேருக்கு நான் காதல் கடிதம் கூட எழுதிக் கொடுத்திருக்கிறேன். அதாவது அந்த எழுத்தாளரின் ஸ்டையிலை காபி அடித்து.

என்னுடைய நல்ல காலம் என்னவென்றால் இந்த முட்டாள்கள் யாரும் அவருடைய நாவல்கள் மட்டுமே அல்ல, வேறு யாருடையதும் படித்துக் கிழித்தாகத் தெரியவில்லை. வெறும் துப்பறியும் நாவல்கள் படிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை ரொம்ப குறைவு. என்னுடையது இமிட்டேஷன் என்று தெரிந்து போய் விடுமே என்று நான் நாவல்கள் எதுவும் படிக்காதது போல் செயல்படுவேன்.

ஆனால் எனக்கு உண்மையிலேயே அவர் எழுதியது போல் ரசனையுடன் வாழ வேண்டும் என்று தோன்றியது. அதற்கு அவர் குறிப்பிட்ட வழிகளைப் பின் பற்றுவதற்கு மட்டும் சோம்பேறித்தனம்.

“மனிதன் அழகாக வாழ்வதற்கு சில அழகான பொழுது போக்குகள் இருப்பது அவசியம்” என்று அவர் ஏதோ ஒரு இடத்தில் எழுதி இருந்தார்.  உடனே அதைப் பற்றித் தீவிரமாக ஆராய்ச்சி செய்து,, கடைசியில்’ ஏன் நான் அவரைப் போலவே  கதைகளை எழுதக் கூடாது என்று யோசித்தேன்.

பாழாய்ப் போன உலகம்! நல்ல எழுத்தாளர் ஆவதற்கு முதலில் நல்ல வாசகனாக இருப்பது முக்கியம்’ என்ற நெறிமுறை என்னை அந்த வேலையை செய்ய விடவில்லை. நான் அவருடைய நாவல்கள், சினிமா  பத்திரிகைகளைத் தவிர வேறு எதுவும் படித்தது இல்லையே. அவருடைய படைப்புகள் வெறும் குப்பை என்றும், மயக்கத்தில் ஆழ்த்துபவை என்றும் வரும் விமரிசங்களை நான் எங்கேயாவது தப்பித் தவறி படித்தாலும் அவற்றைப் போருட்படுத்தியதில்லை.

டிக்ரீ படித்துக் கொண்டிருந்த போது நான் எழுதிய கடிதம் ஒன்று வாரப் பத்திரிகையில் பிரசுரமாயிற்று. அச்சில் வந்த என் பெயரை வகுப்பில் எல்லோருக்கும் முன்னிலையில் காட்சியில் வைத்து (ரொம்பவும் யதேச்சையாக நிகழ்வது போல்) அவர்களுடைய பொறாமைக்கு ஆளாகிவிட்டேன். விரைவிலேயே என்னுடைய கதைகள் கூட பிரசுரமாகப் போவதாக அறிவிப்பு செய்தேன். அதற்குப் பிறகு ஒரு மாதம் கழித்து என்னுடைய கதைகள் இரண்டு பிரசுரமாகி இருப்பதாக சொல்லிவிட்டேன். எந்தப் பத்திரிகையில், எப்போது என்ற விஷயத்தை மட்டும் ரொம்ப திறமையாக டாபிக்கை திசை திருப்பிவிட்டு சமாளித்து விட்டேன். இதற்கு முன்பு என் கடிதத்தை அச்சில் பார்த்திருந்த முட்டாள்கள், என் கதைகளும் பிரசுமாகி இருக்கும் என்று நம்பியதுடன் அந்த செய்தியை மற்றவர்களிடம் பரப்புவதற்கு துணை புரிந்தார்கள். எனக்குக் கிடைத்து வந்த மதிப்பு திடீரென்று கூடிவிட்டது. பெண்களுக்கு நடுவில் எனக்கு தனியாக அங்கீகாரம் கிடைத்துவிட்டது.

ஓவியக் கலையில் கையை வைப்போமா என்று கூட தீவிரமாக முயற்சி செய்தேன். அதென்ன வேடிக்கையோ நான் கிளி பொம்மையை வரைவோம் என்று முயற்சி செய்தால் அது கழுகாக மாறிப் போய்விடும். திரும்பவும் அதன் கீழே “கழுகு” என்று எழுதினால் ஒழிய என்னைத் தவிர வேறு யாருக்கும் புரியாது. எரிச்சலடைந்து ஒரு நல்ல நாளாய் பார்த்து என் ஒன்று விட்ட தம்பி வரைந்த இரண்டு ஓவியங்களை எடுத்துக் கொண்டு போய் ஓவிய கண்காட்சியில் வைத்தேன்.

முட்டாள் பசங்கள்! பேச்சு முச்சு இல்லாமல் திகைத்துப் போய் விட்டார்கள். “நீ ஓவியம் கூட வரைவாயா?” என்று ஒருத்தன் கேட்டான். “நீங்க கவிதை கூட எழுதுவீங்களா?” என்று பெண்ணொருத்தி ஆர்வம் தாங்க முடியாமல் கேட்டுவிட்டாள்.

உண்மையிலேயே கவிதை எழுதுவோம் என்று உட்கார்ந்துக் கொண்டேன். எவ்வளவு யோசித்தாலும் ‘கானல் நீர்.. காய்ந்து ஓட்டிப் போன வயிறுகள்… ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சும் நிலச்சுவான்தார்கள்” இவைகளைத் தவிர எனக்கு வேறு எந்த டாபிக்கும் நினைவுக்கு வரவில்லை. ஏற்கனவே இவற்றின் மீது நிறைய பேர் கொள்ளைப் போய் விட்டது போல் பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளிவிட்டார்கள். (ளாம்!) கவிதைக்கு எனக்கும் எட்டாவது பொருத்தம் என்ற முடிவுக்கு வந்துவிட்டு திரும்பவும் பழைய வழியை பின்பற்றி எப்போதோ பழைய பத்திரிகைகளில் வெளிவந்த கவிதைகளை புதிதாக வெள்ளைக் காகிதத்தில் எழுதி வகுப்பில் நண்பர்கள் வட்டாரத்தில் சுழலவிட்டேன். வழக்கம்போல் வாயைப் பிளந்தார்கள். சிலர் இன்னும் ஒரு படி முன்னால் சென்று எனக்கு பட்டப் பெயர் சூட்டினார்கள், இளம் பாரதி என்றும், கலை ரசிகன் என்றும். நான் விரும்பியதும் அதுதான் என்பதால் உள்ளூர ரொம்ப சந்தோஷமடைந்தேன்.

அவ்வப்பொழுது ‘இதெல்லாம் என்ன?’ என்ற கேள்வி எழுந்தால் மட்டும் நிர்தாட்சிண்யமாய் அடக்கி விடுவேன்.

சதுரங்க ஆட்டத்தில் என்னுடைய நண்பர்கள் இருவரை மட்டும் என்னால் தோற்கடிக்க முடியும், நான்தான் அவர்களுக்கு செஸ் விளையாட கற்றுக் கொடுத்தேன் என்பதால். கல்லூரி போட்டிகளில் நான் இரண்டாவது ரவுண்டில் தோற்று போன போது (முதல் ரவுண்டில் வாக் ஓவர் மூலமாய் எனக்கு ஒரு பாயின்ட் கிடைத்தது) படிப்பின் மீது கவனம் செலுத்தியதால் சரியாக பிராக்டீஸ் செய்யவில்லை என்று புருடா கொடுத்தேன். ஏற்கனவே என்னை  தனித்தன்மை நிறைந்த நபராக போற்றி வந்த மக்கள் அந்த வருட சாம்பியனின் அதிர்ஷ்டம் நன்றாக இருப்பதால் நான் இறுதி சுற்றுக்கு வரவில்லை என்று வியாக்கியானம் செய்தார்கள். எனக்குக் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இருக்கவில்லை. எனக்கு வேண்டிய சூழ்நிலையை நானே ஏற்படுத்திக் கொண்டு விட்டதில் திருப்தியாக இருந்தது.

இறுதியில் ஃபேர்வெல் பார்ட்டி அன்று சுனிதா என் அருகில் வந்து பேசியதில் நான் முழு அளவில் ஹீரோவாகி விட்டேன்.

அவள் இத்தனை நாட்களும் தன சிநேகிதிகளைத் தவிர மற்றவர்களிடம் பேசுவது ரொம்ப குறைவு. அவள் தானாகவே வந்து பார்ட்டியில் என்னை ஒரு ஓரமாக அழைத்துச் சென்று பேசியதை நிறைய பேர் ரகசியமாக கவனித்தார்கள்.

எனக்கு பெண்களிடம் பேச வேண்டியும் என்ற விருப்பம் மட்டும் இருந்தது. ஆனால் காதல் கீதல் என்ற உணர்வு மட்டும் எப்போதும் இருந்தது இல்லை. என் பார்வையெல்லாம் “உயர்வாக” தென்படவேண்டும் என்பதில்தான் இருந்தது.

சுனிதா என்னிடம் பேசியது வேறு. அவள் இத்தனை நாளாக என்னை ரகசியமாக கவனித்து வருகிறாள் என்றும், அவளுக்கு என்னிடம் தனிப்பட்ட அபிமானம் இருக்கிறதென்றும் முதல் அரைமணி நேரத்தில், அவள் படித்த புத்தகங்களில் பத்தில் ஒரு பங்கு கூட நான் படித்தது இல்லை என்று இரண்டாவது அரைமணி நேரத்தில், நான் எப்படி இருக்க வேண்டும் என்று இத்தனை நாளாக முயற்சி செய்து வந்தேனோ அவள் அதற்கு இருமடங்கு அதிகமாகவே இருந்து வருகிறாள் என்றும் உரையாடல் முடியும் தருணத்தில் தெரிய வந்தது. கடவுளே! இவள் உண்மையிலேயே கலைவாணி!!

இறுதியில் அவள் “உங்களிடம் ஒன்று கேட்கலாமா? உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால்” என்றாள்.

ஏற்கனவே நொந்து சுண்ணாம்பாகிவிட்டாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் “என்ன?” என்றேன். இவ்வளவு நேரமாக பேசிக் கொண்டு இருந்தாலும் நான் எங்கேயும் பிடிபட்டு விடவில்லை. இறுதி வரையிலும் “ஆஹா.. அப்படியா’ என்று சமாளித்து விட்டேன் என்றால் அது உண்மையிலேயே அதிர்ஷ்டம்தான்.

“நம் இருவரின் ரசனைகளும், கருத்துகளும் பெரும்பாலும் ஒத்துப் போகின்றன. உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால் அவ்வப்பொழுது நாம் கடிதங்களில் சந்தித்துக் கொள்வோம்” என்றாள்.

ஆட்டோகிராப் கொடுத்து வாங்கும் போது யாருக்கும் கொடுக்காத தன்னுடைய முகவரியை  நான் கேட்காமலேயே கொடுத்தாள். நான் பதற்றத்தை மறைத்துக் கொண்டு மகிழ்ச்சி அடைந்துவிட்டது போல் நடித்தேன்.

மூன்று வருடங்கள் கழித்து பார்வதியுடன் திருமணமாயிற்று. மேலும் முப்பது வருடங்கள் கழிந்த போது தாத்தாவும் ஆகிவிட்டேன். மகன்கள், மருமகள்கள், பேரன்கள் எல்லோரும் வேறு ஊரில் இருக்கிறார்கள். நான் மட்டும் பார்வதியுடன் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஊரிலேயே செட்டில் ஆகிவிட்டேன்.

கல்லூரியில் எனக்கு இருந்த பெயர் மற்றும் புகழை என் உறவினர் வட்டத்திலேயும் ஏற்படுத்திக் கொண்டு  விட்டேன். வேதாந்தம் ஆகட்டும், அரசியல் ஆகட்டும் எங்கேயோ கேட்ட கருத்துக்களை, இன்னொருத்தருடைய எண்ணங்களை என்னுடையதாக சொல்லி வந்தேன். உண்மையில் என்னைப் போன்றவர்கள் இருப்பார்களா என்று கேட்டால் இருப்பார்கள். அவ்வளவு என்? நானே இல்லையா?

எப்போதாவது விழாக்களுக்கு, கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு போனால் எல்லோருக்கும் நடுவில் எனக்கு என்று  ஒரு தனி மரியாதை கிடைத்து வந்தது. போகப் போக எனக்கு வந்த சங்கடம் புரிய வந்தது. சாதராண மனிதனாக எல்லோருக்கும் நடுவில் என்னால் வளைய வர முடியவில்லை. எப்போதும் கம்பீரம் என்ற முக்காட்டுக்கு பின்னால் இருக்க வேண்டிய கட்டாயம். உறவினர்கள் என்னிடம் சகஜமாக பேசத் தயங்கினார்கள். ஏதோ கடவுளையே பார்ப்பது போல் பக்தியுடன் வழிபட்டார்கள்.

நான் பாட்டுக்கு சொல்லிக் கொண்டே போகிறேன். உங்களுக்கு போர் அடிக்கவில்லை இல்லையா? சுனிதா சமீபத்தில் ஒரு கடிதம் எழுதி இருந்தாள். இரண்டு பக்கங்கள் இருந்த அந்த கடிதத்தில் எனக்கு பாதி கூட புரியவில்லை. நான் எழுதப் போகும் கடிதத்திற்காக, தன்னுடைய கடித்தத்தை மிஞ்சிய ரசனைகள் நிறைந்த கடிதத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக எழுதியிருந்தாள்.

நல்ல வேளை என்று நினைத்துக் கொண்டேன். ஒரு பிழையும் இல்லாமல் தமிழில் ஒரு பேரா எழுத முடியும் என்ற நம்பிக்கை இம்மியளவிலும் எனக்கு இல்லை. அவளுக்கு என்மீது இருக்கும் நம்பிக்கையை அனாவசியமாக ஒரு கடிதம் எழுதி பாழடிப்பதில் விருப்பம் இல்லாமல் சும்மா இருந்துவிட்டேன். ஏனோ தெரியவில்லை. அவளுடைய முகவரியை மட்டும் பத்திரமாக எடுத்து வைத்தேன்.

ஆனால் காலம் எப்போதும் ஒன்றுபோல் இருக்காது இல்லையா. என் அபிமான எழுத்தாளர் காலமாகி பத்து வருடங்கள் ஆகி விட்டன. அது ஒரு மாற்றம் என்றால் இன்னொரு மாற்றத்தைப் பற்றிச் சொன்னால் ஒருக்கால் நீங்கள் வியப்படையக் கூடும்.

கடந்த சில வருடங்களாக என் மனதில் ஒரு போராட்டம் தொடங்கி விட்டது. இத்தனை நாட்களாக நான் அடக்கி வைத்திருந்த குற்ற உணர்வு திடீரென்று பொங்கி எழும்பியிருக்க வேண்டும்..

நான் யார்? எதற்காக இந்த பொய்யும் பித்தலாட்டமும்? மக்களுக்கு நடுவில் இந்த அளவிற்கு புகழை பெற்று நான் சம்பாதித்தது என்ன? நான் ‘நான்தான்’ என்று எனக்கு மட்டுமே தெரிந்து, மற்றவர்களுக்கு இன்னொரு விதமாக தோற்றமளித்து,  நான் என்ன சாதித்து விட்டேன் என்ற கேள்வி எனக்குள்ளேயே எழும்பி, அது என்னை எரிமலைக் குழம்பாக தகிக்கத் தொடங்கியது.

ஆமாம். குறைந்த பட்சம் என்னுள் நடக்கும் இந்த போராட்டத்தை ஒருத்தரிடமாவது சொல்ல வேண்டும். நான் ஏதோ ரொம்ப பெரியவன் என்ற நினைப்பைத் தவிர ‘ நான் இன்னார்’ என்று சொன்னாலும் புரிந்துகொள்ள முடியாத பேதை என் பட்டிக்காட்டு மனைவி.. எவ்வளவு ஹீனமான நிலைமை! இத்தனை நாளும் அவளுடைய அப்பாவித்தனத்தை அதிர்ஷ்டமாக நினைத்து வந்தேன்.

மகன்களிடம் சொல்லுவது அனாவசியம். சொல்லக்கூடிய பொறுமை (துணிச்சல்) எனக்கு இல்லை.

ஆமாம். சுனிதாவிடம்தான் சொல்ல வேண்டும்.

அவள் எங்கே இருக்கிறாளோ? அவளுக்குத் திருமணம் ஆன இரண்டாவது வருடமே கணவன் இறந்து போய்விட்டதால் பிறந்த வீட்டுக்குத் திரும்பி வந்து விட்டாள் என்றும், இந்த ஊரிலேயே எங்கேயோ இருப்பதாக சமீபத்தில் சங்கர் தென்பட்டபோது சொன்னான். எவ்வளவு முட்டாள் நான்! குறைந்த பட்சம் இரக்கம் தெரிவித்து ஒரு கடிதமாவது எழுதாமல் போய் விட்டேன்.

இப்போது உங்களுக்கு இந்தக் கதையின் கடைசி திருப்பத்தைச் சொல்லட்டுமா? சுநிதாவுக்குக் கடிதம் எழுதுவோம் என்றாலும், நேரில் போய் சந்திப்போம் என்றாலும் அவளுடைய முகவரி எங்கே வைத்தேன் என்று தெரியவில்லை.

என்னுடைய தவறு எதுவும் இல்லை. காலை முதல் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். பழைய அட்டைபெட்டிகள், மர பீரோ, ட்ரங்குப் பேட்டிகள்..

பக்கத்து அறையிலிருந்து என் மனைவி சொல்லும் வார்த்தைகள் கேட்டுக் கொண்டிருந்தன.

‘என்னவோ போங்க. என் வீட்டுக்காரர் காலை முதல் எதையோ தேடிக் கொண்டே இருக்கிறார். என்ன வேண்டும் என்று கேட்டால் சொல்ல மாட்டேன் என்கிறார். சொன்னால் நான் தேடி தந்து விடுவேன் என்று பயமாம்.”

உண்மைதான். சுநிதாவின் முகவரி கிடைத்தால் அவளைச் சந்தித்து என் மனப் போராட்டத்தை அவளிடம் முழுவதுமாக சொல்லி விட வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால், உண்மையிலேயே முகவரி கிடைத்து விட்டால் சந்திப்பேன் என்ற தைரியமோ, குறைந்த பட்சம் சந்திக்கக் கூடிய துணிச்சலோ இரண்டுமே இல்லை. அதனால்தான் சொல்லவில்லை. ஆனால் தேடிக் கொண்டே இருப்பேன்.

என் கதையை முழுவதுமாக கேட்டுக் கொண்டீர்கள் இல்லையா! உங்களிடமும் அதையே வேண்டுகிறேன். அவளுடைய முகவரி எங்கேயாவது உங்களுக்குக் கிடைத்தால் ….. தயவு செய்து…. என்னிடம் சொல்லாதீங்க..

 

“ Rachana” என்ற தெலுங்கு மாத பத்திரிகையில் வெளிவந்த கதை

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் 49நீட்சி சிறுகதைகள் – பாரவி
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

5 Comments

  1. Avatar
    s.ganesan says:

    This story reveals the human psychology…most of the people pretend to be more knowledgeable like our hero…well done ravi and gowri…

  2. Avatar
    Gowri Kirubanandan says:

    மொழிபெயர்ப்பு கதைகளையும் வாசகர்கள் கவனிக்கிறார்கள் என்பதிலும், ரசிக்கவும் செய்கிறார்கள் என்பதிலும் மிக்க மகிழ்ச்சி.

  3. Avatar
    லறீனா அப்துல் ஹக் says:

    அன்புமிக்க கௌரி,

    வழமைபோலவே அசத்திட்டீங்க.

    சமூகத்தில் இதுபோன்ற இயல்புடைய மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். காலப்போக்கில் தனிமைப்படுத்தப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றார்கள். நல்லதொரு கதையை மொழிபெயர்க்க எடுத்துக்கொண்ட உங்கள் தெரிவுக்கு எனது வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *