ஏகாலி

This entry is part 5 of 32 in the series 1 ஜூலை 2012

மிகப் பிரம்மாண்டமான அரங்கம். கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. சபையின் நாயகன் 27 வயது இளைஞன். கருத்த நெடிய உருவம். ஒல்லியான தேகம். எந்த ஆடம்பரமும் இல்லாத ஒரு சாதாரணமான பேண்ட், சட்டை, கண்களில் ஒளி மின்ன, பரபரப்பான பார்வை, சபையில் அலைந்து யாரையோ தேடிக் கொண்டிருக்கிறது அவ்வப்போது. அரசு உயர் அதிகாரிகளும், சில விஞ்ஞானிகளும், வெளிநாட்டிலிருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே வந்திருந்த தொழிலதிபர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என்று சபை களைகட்டத் தொடங்கியிருந்தது. மகனுக்கு எதற்காக இந்த விழா எடுக்கிறார்கள், அவன் அப்படி என்ன சாதித்திருக்கிறான் என்று எதுவுமே புரியாமல், இது போன்ற கற்றவர்கள் சபையில் மிகவும் அன்னியப்பட்டு தான் இருப்பதாக உணர்ந்து முதல் வரிசையில் இருக்கையின் விளிம்பில் இழுத்துப் போர்த்திய நூல் சேலையுடன், மெலிந்த, வாடிய தேகத்துடன்  பெருமை பொங்க அமர்ந்திருந்தாள் அவனுடைய தாய்.

காரின் இருதய பாகமான கார்ப்பரேட்டரில் ஒரு புதுமையான கண்டுபிடிப்பை உட்புகுத்தி இன்று எரிபொருள் தட்டுப்பாடான காலத்தில் 50 சதவிகித எரிபொருள் சிக்கனம் செய்யக்கூடிய ஒரு சாதனையைச் செய்துள்ள ஏகலைவனுக்குத்தான் இந்த பாராட்டு விழா. அதுமட்டுமல்ல இவனுடைய கண்டுபிடிப்பின் காப்புரிமை கிடைக்கும் வாய்ப்பிற்காக முயற்சி செய்யும் பொருட்டும் பல கார் தொழிற்சாலை அதிபர்களின் பிரதிநிதிகள் ஆவலாகக் காத்திருந்தனர். மேடையில் அனைத்து பிரபலங்களுக்கும் அறிமுகம் செய்து கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தாலும், கண்கள் மட்டும் அரங்கின் வி.ஐ.பிக்கள் இருக்கையை வலம் வந்து கொண்டிருந்தது… திடீரென்று தான் எதிர்பார்த்து காத்திருந்த அந்த விஐபி வந்து தம் இருக்கையில் அமரவும் அவனுடைய முகத்தில் ஒரு அமைதிப் புன்னகை ஒளிவீசுவதை தாமும் கவனித்து பெருமிதம் கொண்டாள் அந்த தாய்.

விழா ஆரம்பமாகி விட்டது. வழமையான வரவேற்பு மற்றும் பாராட்டு வசனங்களுக்குப் பிறகு, மாவட்ட ஆட்சித்தலைவர் ஏகலைவனுக்கு மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்ததோடு ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தின், மிக ஏழ்மையான ஒரு குடும்பத்தில் பிறந்து இன்று உலகமே பாராட்டி கொண்டாடும் வகையில் ஒரு அரிய கண்டுபிடிப்பை வழங்கி, தாம் பிறந்த நாட்டிற்கும், பெற்ற அன்னைக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்றும், வெகு விரைவில் நம் ஜனாதிபதியிடம் விருது பெறப்போகிறார் என்றும் அறிவித்த போது சபையில் கரவொலி எழும்பியது.

அடுத்து ஏகலைவனை ஏற்புரை அளிப்பதற்காக அழைத்தார்கள். அவனுடைய பேச்சைக் கேட்க சபையே ஆவலாகக் காத்திருக்க பலத்த கரவொலிகளுக்கிடையே எழுந்து வந்து, சபையை ஒரு முறை ஆழ்ந்து நோக்கியவன், முதல் வார்த்தையாக இந்தப் பரிசும், பாராட்டும் மொத்தமும் தன் அன்னையையே சாரும் என்றும் அவையோரின் அனுமதியுடன் தன் அன்னைக்கு இந்த மேடையில் அதற்கான நன்றியைச் செலுத்த  விரும்புவதாகக் கூறி, இருக்கையின் விளிம்பில் ஒட்டாமல் அமர்ந்திருந்த அந்தத் தாயை மேடைக்கு அழைத்தான். சற்றும் எதிர்பாராத அந்த தாய் சங்கடத்தில் நெளிந்து கொண்டு அமர்ந்திருக்க விழா அமைப்பாளர்கள் குழுவில் இருவர் சென்று அவரை கையைப்பிடித்து அழைத்து வந்தனர். தம் கையில் இருந்த மாலையை தன் அம்மாவின் கழுத்தில் போட்டு, நெடுஞ்சாண்கிடையாக அந்த மேடையில் அன்னையின் காலில் வீழ்ந்து ஆசி பெற்றபோது அவருடைய கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தம் ஏழாவது வயதிலேயே, குடித்து சீரழிந்து போன தன் தந்தையை இழந்த பின்பு, தாய் தன்னை வளர்க்க பட்ட துயரங்களை, வீட்டு வேலை செய்து மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்து போன உண்மையை தயக்கமின்றி எடுத்துக் கூறியபோது அனைவரின் கண்களும் கலங்கித்தான் போனது. அடுத்து தன் கண்டுபிடிப்புகளும் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்தும் மிக அழகாக எடுத்துரைத்தான். பலவிதமான சோதனைகளையும் கடந்து இந்த கண்டுபிடிப்பு இன்று நம் நாட்டிற்கு முழுமையாக அர்ப்பணிக்கப்படுவதாக அறிவித்தான். இந்த காப்புரிமை மூலமாக பெரிய தொழிற்கூடம் அமைத்து கார்ப்பரேட்டர் தயாரித்தால் அதைத் தங்களுக்கு முழுவதுமாக கிடைக்க ஒப்பந்தம் பெறலாம் என்று பல நிறுவனங்களும் காத்துக் கொண்டிருந்தபோது, தான் மேலும் ஆய்வுப் பணியில் ஈடுபடப் போவதாகவும், இந்த காப்புரிமையை தான் முழுமையாக ஒருவருக்கு சமர்ப்பிக்கப் போவதாகவும் ஒரு பிரபல பத்திரிக்கையில் பேட்டியும் கொடுத்திருந்தான். அதற்காகவே, அதை அறிந்து கொள்ளும் ஆவலில் அனைவரும் அவனுடைய பேச்சை மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் அதை வெளியிடக்கூடிய அந்த கட்டத்திற்கு வந்திருந்தான். இந்த கண்டுபிடிப்பின் முழு முதல் மூலக்காரணம் எவரோ, அவருக்கே இதன் முழு உரிமையையும் கொடுக்கப் போவதாக அறிவித்தான். இதைச் சொன்னவன், அடுத்த வார்த்தையாக,

“ஐயா, வாங்க…. முதலாளி ஐயா வாங்க” என்று அந்த அரங்கின் விஐபிக்களின் இருக்கையில் மூன்றாம் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவரைப் பார்த்துக் கூப்பிட்டான். அனைவரும் ஒரு சேர ஆவலுடன் திரும்பிப் பார்த்தனர். அப்போது அந்த குறிப்பிட்ட இருக்கையில் அமர்ந்திருந்த, விஜயன் என்ற பரத் குரூப் ஆப் இன்ஜீனீயரிங் கம்பெனி முதலாளியும், தனக்குப் பின்னால் யாரையோ கூப்பிடுகிறார்கள் என்று எண்ணி திரும்பிப் பார்த்தார். ஆனால் ஏகலைவன் திரும்பவும், “ஐயா உங்களைத்தான், முதலாளி ஐயா, வாங்க” என்று திரும்பவும் தம் கையை நீட்டிச் சொன்னபோது அரங்கின் அத்துனை பார்வையும் தம்மீது விழுந்த போதுதான் தம்மை அழைப்பதை உணர்ந்து ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்ற விஜயன் மெல்ல எழுந்து நின்றார்.

மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் என்ன நடக்கிறது என்று புரியாத நிலையிலேயே சென்று மேடையில் அமர்ந்தார். அனைவரும் வாழ்த்து சொன்னபோதுதான், ஏகலைவன் அந்த முழு காப்புரிமையையும் அவருக்குக் கொடுப்பதாக முடிவு செய்திருப்பது புரிந்தது. தன்னையே நம்ப முடியாமல் கிள்ளிப் பார்த்துக் கொண்டார். இது எப்படி சாத்தியமாகும், தனக்கு எப்படி கொடுக்க முடியும் என்ற குழப்பமே அவர் முகத்தில் அதிகமாக இருந்தது. அப்போதுதான் ஏகலைவன் திரும்பவும் அவர் அருகில் சென்று ஒரு மாலையை எடுத்து அணிவித்து, ஆசி பெற்றுவிட்டு, பேச ஆரம்பித்தான்.

தான் இன்று நம் நாட்டிற்கு மட்டுமல்லாமல் இந்த உலகத்திற்கே சவாலாக இருக்கக் கூடிய எரிபொருள் சிக்கனம் என்ற பெரும் பிரச்சனைக்கு ஒரு துளித்தீர்வு, கொடுக்க முடிந்ததில் பெரும் மகிழ்ச்சியடைவதாகவும், தன்னுடைய ஆய்வுப்பணி அத்தோடு நிற்காமல் மேலும் பல திட்டங்கள் வைத்துள்ளதாகவும் கூறியபோது அரங்கமே கைதட்டலில் திளைத்தது. இந்த தன்னுடைய முழு முயற்சியின் அடிநாதமே விஜயன் என்கிற இந்த முதலாளிதான் என்று கூறியதோடு தம்முடைய கண்டுபிடிப்பின் முழு காப்புரிமையையும் அவருக்கேச் சொந்தம் என்று கூறி அதற்கான சான்றுப் பத்திரமும் அவர் கையில் கொடுத்தபோது, மறுக்க இயலாமல் அதை வாங்கிய நேரம் அவருடைய இரு கைகளும் நடுங்கியது அப்பட்டமாகத் தெரிந்தது.

அடுத்து விஜயன் தம் நன்றியுரை வழங்க வேண்டிய தருணத்தில், கண்கள் கலங்க அவர் பேசியபோது சபையே மௌனமாக அமர்ந்திருந்தது. ஊசிமுனை அமைதி நிலவியதன் காரணம் அந்தக் காட்சி அப்படியே அனைவரின் மனக்கண்களில் விரிந்ததுதான்………

ஜெயலட்சுமியின் ஒரே மகன் ஏகாலி என்று அழைக்கப்படுகிற ஏகலைவன். மகனுக்கு ஆறு வயது இருக்கும் போதே கார்ப்பரேசனில் கடைநிலை ஊழியனாக பணியில் இருந்த அவனுடைய தந்தை மொடாக்குடியின் காரணமாக ஈரல் கெட்டு உயிரை விட்டபின்பு, சாப்பாட்டிற்கே சிரமப்பட்ட காலத்தில் பரத் கம்பெனியின் முதலாளி விஜயன் வீட்டில் வேலை வாங்கிக் கொடுப்பதாக பக்கத்து வீட்டு பெண் சொன்னதால் அவர்கள் வீட்டில் போய வேலைக்குச் சேர்ந்தாள். கபடமில்லாமல் சொல்கிற வேலை அத்தனையும் செய்து, வெகு விரைவிலேயே எஜமானி அம்மாவின் விசுவாசியாகிவிட்டாள். மகனையும் அரசு உதவி பெறும், பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தாள். அங்கேயே மதிய உணவும் சாப்பிட்டுக் கொண்டு படித்து வந்தான். மாலையானால் அம்மாவைப் பார்க்க முதலாளி வீட்டிற்கு ஓடி வந்துவிடுவான். அங்கேயே தோட்டத்தின் பக்கம் உட்கார்ந்து படிக்க ஆரம்பிப்பான.. நாளடைவில் முதலாளியின் இரு மகன்களும் மெல்ல பழக ஆரம்பித்த போது, அவர்களுடன் துணைக்குச் செல்வது, பையை தூக்க முடியாத போது தானும் தூக்கிச் சென்று கொடுப்பது என்று அப்படியே அவர்களுடன் இருக்கும் நேரங்கள் அதிகரித்தது.

மாலையில் அவர்களுக்குப் பாடம் கற்பிக்க பல தேர்ந்த ஆசிரியர்கள் வீட்டிற்கு வருவது வழக்கம். அந்த நேரங்களில் தானும் வெளியே ஒரு மூலையில் அமர்ந்து அந்த பாடங்களைக் காதில் வாங்கிக் கொண்டு தம் அறிவை வளர்த்திக் கொள்வதில் மிக வல்லமை படைத்தவனாக இருந்தான்… காலங்கள் உருண்டோடியது. தம் எடுபிடி வேலைகளையும் தொடர்ந்து கொண்டு கல்வியிலும் தேறிக் கொண்டிருந்தான். முதலாளியின் மகன்களின் கருணைப் பார்வையின் மூலம் தம் கல்வியும் பெரிய சிரமமில்லாமல் போய்க் கொண்டிருந்தது. முதலாளி அம்மாவும் அன்பே உருவாய் இருந்ததால் ஜெயலட்சுமியும், ஏகலைவனும் ஓரளவிற்கு பிழைப்பை ஓட்டிக் கொண்டிருந்தனர். இந்த சமயத்தில்தான், பள்ளியிறுதி வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மாகாணத்தில் முதல் மாணவனாகத் தேறியதால், முதலாளியின் மகன் சேர்ந்த அதே கல்லூரியில் இலவசமாக இருக்கை கிடைத்து தானும் இயந்திரவியல் பொறியியல் படிப்பு படிக்க வாய்ப்பும் கிடைத்தது பல்கலைக்கழகத்தின் முதல் மாணவனாகத் தேறிய போதுதான் சில விரும்பத்தகாத விசயங்கள் நடக்க ஆரம்பித்தது.

தாம் முதல் தரத்தில் தேறியுள்ள மகிழ்ச்சியை முதலாளியிடம் பகிர்ந்து ஆசி வாங்க வேண்டும் என்று ஆவலாக ஓடி வந்தான் வேறு சிந்தை ஏதுமற்ற அந்த தந்தையில்லாத ஏக்கத்தில் இருந்த இளைஞன்.

தம்மிடம் வேலை செய்பவளின் மகன் முதல் மாணவனாகத் தேறியிருக்கும் போது தம் சொந்த மகன் மிகக் குறைந்த மதிப்பெண் வாங்கிவிட்டானே என்ற ஆதங்கத்தில் இருந்த முதலாளியோ, அவனுடைய எண்ணம் ஏதும் உணராதவராக,

”என்னடா உன் வெற்றியை கொண்டாட வந்துட்டியா… போடா போ… இந்த படிப்பும், மார்க்கும் நாங்கள் போட்ட பிச்சைதானே…  பெரிசா வந்துட்ட “

“ஐயா, கஷ்டப்பட்டு படிச்சுதானங்களே இந்த மார்க்கு வாங்கினேன்.. நீங்க சொல்றாமாதிரி புத்தகமும், துணிமணியும் நீங்க போட்ட பிச்சையானாலும், படிப்பறிவு என்னதுதானுங்களே….”

“என்னடா.. ஏகாலிப்பயலே… எதிர்த்தாப் பேசறே… அவ்வளவு ரோசம் உள்ளவனா இருந்தா இந்த படிப்பு சர்டிபிகேட்டெல்லாம் கொடுத்துட்டு போய் ஏதாவது சாதிச்சுக்காட்டு பார்ப்போம்.. அப்ப ஒத்துக்கறேன் நீ அறிவாளின்னு..”

என்று ஏதோ கோபத்தில் வாய்க்கு வந்தபடி பேசிவிட்டார். வீட்டில் சென்று இதே நினைவாக இருந்தவனைப் பார்த்து வருத்தப்பட்டு கேட்ட தாயிடம்,

“அம்மா, முதலாளி ஐயா சொல்றதிலேயும் நியாயம் இருக்கில்லையா, அவிக குடும்பம் போட்ட பிச்சைதானே இந்த பட்டம், இது இல்லாம நானு ஏதாவது சாதிச்சு காட்டணும்மா…..” என்று ஏதேதோ சொன்னது அந்த படிப்பறிவில்லாத தாய்க்கு புரியவில்லை.

அதே யோசனையாக இருந்தவன் ஒரு நாள் என்ன நினைத்தானோ, தம்முடைய மொத்த கல்விச் சான்றிதழ்களையும் கொண்டுவந்து முதலாளி அம்மாவிடம் கொடுத்து ஐயாவிடம் சேர்த்து விடுங்கள் என்று சொல்லிச் சென்றவனை இன்றுதான் மேடையில் பார்க்கிறார். வீட்டை விட்டுச் சென்றவன் பல மாதங்களுக்குப் பிறகு அவ்வப்போது தம் தாயை மட்டும் வந்து பார்த்துவிட்டு ஏதோ தன்னால் முடிந்த பணம் கொஞ்சம் கொடுத்துவிட்டுச் செல்வதாகக் கேள்விப்பட்டதோடு சரி. பத்திரிக்கைகள் மூலமாக ஏகலைவனின் கண்டுபிடிப்புகள் பற்றி அறிந்து கொண்டு, விசாரித்த போது,  ஒரு சிறிய பொறியியல் நிறுவனத்தில் தம் திறமையைக் காட்டி வேலை வாங்கிக் கொண்டு அங்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தில் கால் வயிறும், அரை வயிறும் சாப்பிட்டுக் கொண்டு இந்த ஆய்வுப் பணியைச் செய்ததாகக் கேள்விப்பட்டதாகச் சொன்னார். இந்த காப்புரிமையை பெறுவதற்கு தாம் சற்றும் அருகதையற்றவன் என்றும், தம் மனதில் இவ்வளவு நாட்கள் பாரமாய் அழுத்திக் கொண்டிருந்த பாறையை இன்றுதான் இறக்கி வைத்தது போன்று தாம் உணர்வதாகச் சொன்னார். தாம் சொன்னது போலவே பட்டமும், பதவியும் இன்றியே பெரும் சாதனையைச் செய்து காட்டிவிட்டார் என்றார் பெருமை பொங்க.

அப்போது திரும்பவும் ஏகலைவன் மைக்கை வாங்கி, அன்று முதலாளி ஐயா இப்படி சொல்லாமல் விட்டிருந்தால், இன்று தானும் ஒரு வேளை ஒரு கம்பெனியில் சேர்ந்து சம்பளம் வாங்கிக் கொண்டு சுகமாக காலம் கழித்திருக்கக் கூடும். ஆனால் இன்று நாட்டிற்கே பயன்படும் ஒரு கண்டுபிடிப்பு சாத்தியமாகாமல் போயிருக்கலாம் என்றும் கூறிய போது, கைதட்டல்கள் எழும்பி, அதனை ஆமோதிப்பதாகவே இருந்தது.

விஜயன், தமக்கு அளித்த இந்த வாய்ப்பை தாம் முழுமையாக ஏற்றுக் கொள்வதோடு, இதில் கிடைக்கப்போகும் ஐம்பது விழுக்காடு ஈவுத்தொகையை ஏகலைவனுக்கு அளித்து அவரையும் தமக்குச் சமமாக ஒரு தொழிலதிபராக ஆக்கப் போவதாகவும் வாக்களித்தார்.

ஆனால் ஏகலைவனோ, அந்த நிதியின் மூலம் உலகத்தரத்திற்கு இணையாக ஆய்வுக்கூடம் ஒன்று அமைத்து, ஆய்வுப்பணியில் ஈடுபடும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக அதில் பணிபுரிய தளம் அமைத்துக் கொடுக்கப் போவதாக அறிவித்தபோது கரவொலி விண்ணைப் பிளந்தது.

————-

Series Navigationநினைவுகளின் சுவட்டில் (91)சித்திரவதைக் கூடத்திலிருந்து
author

பவள சங்கரி

Similar Posts

16 Comments

  1. Avatar
    பவள சங்கரி. says:

    அன்பின் திரு கணேசன்,

    தங்களுடைய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்
    பவள சங்கரி

  2. Avatar
    punai peyaril says:

    இந்த ஃபார்முலா செண்டிமென்ட் உயர்ந்த மனிதன் பாணி கதைகளில் இருந்த பவளசங்கரி வெளிவர வேண்டும். இந்த தேசத்தில் தனிமனித உரிமைகள் – இந்த அரசு ஏழை மாணவர்களுக்கு படிப்பு தர ஒழுங்காக முதலாளிகளிடம் தேர்தலுக்கு ஓசி காரும், மாதமாதம் கப்பமும் வாங்காமல் வரியை வாங்கியிருந்தால், இந்த நிலையே வராது- பற்றிச் சொல்லாமல் இன்னும் எத்துனைக்காலம் அண்டிப் பிழைத்தல், கண்ணீர் என கதைகள் தொடருமோ… எழுத்துத் திறமை வேறு.. எழுத்தின் கருத்தாட்கம் வேறு… 1946ல் கிடைத்த ஒரு கதை போல் இருந்தது…. உரிமைகள் புரிந்து முஷ்டிகள் உயர்ந்தால், கையேந்தி பிச்சை கேட்க வேண்டியதில்லை… அமெரிக்காவில் இந்த மாதிரி படிக்க செண்டிமெண்ட் காட்சிகள் இல்லை..? படிப்பு என்பது உரிமை… அது உணரப்பட வேண்டும்… அது வரை, ஏ “கயவன்”களை நாம் ஏகலைவன்கள் என்று நினைக்கலாம்…

    1. Avatar
      பவள சங்கரி. says:

      அன்பின் திரு புனைப்பெயரில்,

      வணக்கம். தங்களுடைய மனம் திறந்த கருத்துகளுக்கு நன்றி. சில நேரங்களில் மென்மையாகவும், இலை மறைவு,காய் மறைவாகவும் நம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள இது போன்று செண்டிமெண்ட் ஃபார்முலா ஒரு முகத்திரையாகிறதும் உண்மை. கப்பம்கட்டும் முதலாளிகள் ஒழுங்காக வரி கட்ட வேண்டும் என்பது நமக்கெல்லாம் பேராசைதான்.. நடக்க வேண்டும்! 1946ல் முடிந்து போன கதையல்ல இது.. பற்பல வடிவில் இன்றும் தொடர்வதை கண்கூடாகக் கண்டு, மனம் நொந்து எழுதியது.. கற்பனை சற்று கலந்திருந்தாலும், சத்தியமும் இருக்கிறது.. நேருக்கு நேர் காணும் காட்சிகளின் தாக்கமே இது போன்ற கதைக்களம். உரிமைகள் புரிய வேண்டும் என்பதற்காகவே இது போன்ற ஃபார்முலா செண்டிமெண்ட்.. முஷ்டியைஉயர்த்தச் செய்வதால் வன்முறை வெடிக்குமே ஒழிய, அதற்காக பெரிய மாற்றங்கள் உடனடியாக வந்துவிடப் போவதில்லை. அகிம்சையை நிலைநாட்ட நாம் காந்தி போல போராட முடியாவிட்டாலும், முஷ்டியை உயர்த்தி வன்முறை எண்ணத்தை இளைஞர்களிடம் தூண்டாமல் இருக்க வேண்டியதும் நம் கடமை என்று நினைப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன்..

      அன்புடன்
      பவள சங்கரி

      1. Avatar
        பவள சங்கரி. says:

        அன்பின் திரு புனைப்பெயரில்,

        கையேந்திப் பிச்சை கேட்பதும், அண்டிப் பிழைப்பதும் இருந்த காலம் முழுமையாக மறைந்துவிட்டது சொல்லமுடியவில்லை. அதுதான் உண்மை. அமெரிக்காவில் இது போன்று செண்டிமெண்ட் காட்சிகள் இல்லாததன் காரணம் அவர்களுடைய சூழ்நிலை.. வாழ்ந்து கெட்ட பலரை அங்கும் காண முடிகிறது. சென்ற வருடம் நான் அமெரிக்கா சென்றபோது, அதற்கு முன்பு பார்த்ததைவிட பல வித்தியாசமான காட்சிகளை காண முடிந்தது. பொருளாதார சிக்கலில் அம்மியும் காற்றில் பறக்கிறது. கையேந்தி பிச்சை கேட்கும், பயன்படுத்திய குளிர்பான புட்டிகளை சேகரிக்கும் மற்றும் நம் கையில் இருக்கும் உணவைக் கூட கேட்டு வாங்கி உண்ணும் பல காட்சிகளைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது.. ஒரு வேளை அவர்களும் அண்டிப்பிழைக்கும் கலை அறிந்திருந்தாலாவது பிச்சை எடுக்கும் நிலைக்கு செல்லாமல் இருந்திருக்கலாம். உலகமே இன்று ஒரு கிராமமாகச் சுருங்கி விட்டதில் பலதும் கலந்துதான் விட்டது.. பிச்சை புகினும் கற்கை நன்றே என்று மாணவர்கள் கிளம்பியது ஆரம்ப நிலை என்றால் சாத்வீகமான முறையில் போராடியேனும் கல்வி உரிமை பெற வேண்டியது அடுத்த நிலையாக இருக்க வேண்டும் என்பதே நம்முடைய ஆவல்.. உரிமையைப் பெறும் காலம் ஆரம்பமாகிவிட்டது.. ஆனால் அதன் பயணம் சரியான வன்முறையற்ற பாதையாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வேண்டியது அவசியம்

  3. Avatar
    jayashree shankar says:

    அன்பின் பவழா….
    ஏகாலி….யில் இருந்த தாக்கம்….ஒரு வேகம்..ஒரு தாகம்…!
    உங்கள் பின்னூட்டத்தில் இருந்த தாகம்…வேகம்….உண்மையின் தாக்கம்,!
    அசத்தலான, ஆழமான சிந்தனையில் எழுந்த வீரிய வித்துக்கள்..!
    பெருமையாக இருந்தது..படிக்கும்போது. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
    அன்புடன்
    ஜெயஸ்ரீ.

  4. Avatar
    punai peyaril says:

    ப.சங்கரி, நீங்கள் படித்திருக்காவிடில், மாக்ஸிம் கார்க்கியின், “தாய்”, ஆல்பர்காம்யூவின் “அந்நியன்’, சு.ராவின் “ஒரு புளியமரத்தின் கதை”, தி.ஜாவின் “மோகமுள்’ அமிர்தம், மரப்பசு, கி.ராவின் பிஞ்சுகள், கதவு, கோபல்லகிராமம், சுஜாதாவின், ஸிரிரங்கத்து தேவதைகள், படியுங்கள். பெண் எழுத்தாளர்கள் பலராக அந்த தளம் செல்ல வேண்டும். ஜெ,சோனியா,மம்தாபா,மாயாவதி, சசிகலா,நிரூபமா,இந்திரா நொய்யி, என்பன போல் பெண்களின் ஆளுமை இலக்கிய -தமிழ்- இன்னும் சரிவர இல்லை… அந்த வெற்றிடம் நிரப்ப உங்க்ளைப் போன்றவர்கள் நினைத்தால் முடியும்… பாலகுமாரன் தாக்கத்திற்கு முன் தி.ஜ எழுத்துக்களின் நேர்மை பா.குவிடம் கிடையாது என்பதறிக…

  5. Avatar
    s.ganesan says:

    my dear friend punaipeyaril must understand that everywriter has his / her own way of story writing…comparing wth one to another is not the right idea….i appreciate ur view that education is our basic right and should not beg….it is the victory for shankari that her story makes u to derive the above concept….wth best wishes to u and sankari…..

  6. Avatar
    punai peyaril says:

    it is the victory for shankari that her story makes u to derive the above concept….>>> Very funny…. for long time, there are stories that talks about rights to educate and rights to live.. and we have learnt many things from Tarkovsky , Bharathi kind of people. plz understand.

  7. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ஒரு தற்கால எரிசக்தி தேவையைக் கருத்தோட்டமாக வைத்து ஓர் அற்புத ஆக்கவினை நிகழ்ச்சியைக் கதையாக ஆக்கி நாட்டு வாலிபருக்கு வழிகாட்டிய பவள சங்கரி நமது பாராட்டுக்கு உரியவர்.

    1. Avatar
      பவள சங்கரி. says:

      அன்பின் திரு ஜெயபாரதன் அவர்களுக்கு,

      தங்களுடைய வாழ்த்துரைக்கு மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      பவள சங்கரி

  8. Avatar
    s.ganesan says:

    my dear friend punai peyaril in the past many writers have written about rights 2 educate and live….and many people learnt many things from them….that does not mean the present writers should not touch the subject…may be to make the people who r yet to learn should understand things..ok..take it easy my friend…regards…

  9. Avatar
    லறீனா அப்துல் ஹக் says:

    மகாபாரதத்தில் வரும் கிளைக்கதையில், கட்டைவிரலைக் குரு தட்சணையாகக் கொடுத்த ஏகலைவனின் பாத்திரத்தை, தன் பட்டப்படிப்புச் சான்றிதழையே சோற்றுக்கடன் தீர்க்க வழங்கிய ஏகாலியாய் மிக அழகாய் மீளுருவாக்கம் செய்துள்ளீர்கள், வாழ்த்துக்கள்!

    வழமையில், உதவி செய்யும் பெருந்தன்மையான பெரிய மனிதருக்குப் பதில், தன் தன்மானம் தீயாய்க் கிளர்ந்து எழுந்து நிற்கும் வகையில் சவால்விடுத்த ஒருவருக்கு நன்றிக்கடன் செலுத்துவது ஒரு வித்தியாசம். அதனை, “பவள சங்கரிக்கே உரிய டச்” என்று சொல்லலாம் என நினைக்கிறேன். :)

    இன்றைய இளவயதினர் எவ்வளவோ சாதிக்கிறார்கள்தான். ஆனால், படிப்பைப் பாதியில் கோட்டைவிட்டுவிட்டு தெருவில் சுற்றும் இளவட்டங்களுக்கும் குறைவு இல்லை என்பது வேதனையே.

    சகோதரர் ‘புனைபெயரில்’ சொல்வதிலும் உண்மை இருப்பதை மறுக்க முடியாது. இலட்சியமயமான இக்கதையில், யதார்த்தப் பண்பு குறைவே.

    எனினும், தோழி பவள சங்கரியும் நாமும் ஆசைப்படுவது போல், நாட்டுக்குப் பெருமைத் தேடித்தரும் சாதனையாளர்கள் நிறைய உருவாக வேண்டும். அதற்கு அவர்கள் மட்டுமல்ல, ஆசிரியர்கள், பெற்றோர், பள்ளிநிர்வாகம், அரசாங்கம் முதலான அனைத்துத் தரப்பும் பங்களிப்பாற்ற வேண்டும். கல்வி, காசுக்கு விலைகூவி விற்கப்படும் அவல நிலை மாறும்வரை, அனைவருக்கும் சமமானதும் தரமானதுமான கல்வி உரிமை என்பது ஒரு பெரும் கனவுதான்.

    இன்னும் நிறைய எழுதுங்கள் தோழி, வாழ்த்துக்கள்!

  10. Avatar
    பவள சங்கரி. says:

    அன்பின் லறீனா,

    தங்களுடைய ஆழ்ந்த புரிதலுக்கும், நியாயமான வாதத்திற்கும் மனமார்ந்த நன்றிகள். இதுபோன்ற உண்மையான விமர்சனங்கள் எழுதுகிறவர்களுக்கு பெரும் உற்சாகமும், அடுத்த முறை எழுதும் போது மேலும் கவனம் கொண்டு நம்மை மேம்படுத்திக் கொள்ளவும் வழிவகுக்கச் செய்பவை.. அன்பான வார்த்தைகள் ஊக்கமளிப்பவை. மிக்க நன்றி தோழி.

    அன்புடன்
    பவள சங்கரி

  11. Avatar
    Nathen says:

    தமிழைப் பற்றியும் தமிழ் நட்டைப் பற்றியும் இந்தக் கதையில் ஏதேனும் சொல்லப்பட்டிருக்க வேண்டும். நம்மை நாமே மறந்து விடக்கூடாது. தமிழன் உலகத்தின் உச்சிக்கு எப்படியாவது சென்றே தீரவேண்டும். தாங்கள் எழுதுகின்ற ஒவ்வொரு கதையும் இந்தக் கருத்தை அடியாகக் கொண்டே அமைதல் வேண்டும். இறுதியாக, கதைத் தலைவனின் பெயாராவது தமிழ்ப் பெயராக இருக்க வேண்டும்.
    உங்கள் ஆக்கத்திற்கு வாழ்த்துகள்.

    1. Avatar
      பவள சங்கரி. says:

      அன்பு நண்பர் திரு நாதன்,

      தங்களுடைய ஆழ்ந்த தமிழ் பற்றிற்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி. வரவேற்கத்தக்க கருத்துரை என்றாலும், சிறுகதை என்பதற்கும் கட்டுரைக்கும் உள்ள வித்தியாசமே இதுதான் இல்லையா.. கதையின் களத்தினூடே பயணிப்பது மட்டுமே சிறந்த சிறுகதையாக முடியும், அந்த முயற்சியே நமக்கெல்லாம் சாத்தியமாவது சிரமமாக இருக்கிறது என்பது வேறு விசயம். இருப்பினும் தாங்கள் கூறும் கருத்துகளும் கவனத்தில் கொள்ள வேண்டியவை என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். தங்கள் வாழ்த்திற்கு நனி நன்றி.

      அன்புடன்
      பவள சங்கரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *