சின்னஞ்சிறு கிளியே…!

2
0 minutes, 6 seconds Read
This entry is part 24 of 32 in the series 1 ஜூலை 2012

கோமதி

 

மாடி வராண்டாவில் பளபளவென்று உடையணிந்தபடி பட்டாம்பூச்சிபோல் நின்றிருந்த ஸஹானாவை கீழே இருந்து அர்ஜுன் கூப்பிட்டான். “ஸஹானா” என்று ராகத்துடன்! உடனே, “ஹாய்!” என்று கையசைத்துச் சிரித்தாள் ஸஹானா.

 

“ஆச்சு, மணி நாலடிச்சாச்சு. கிளம்பிட்டா ராணி! இனிமே இருட்டினாத்தான் உள்ளே நுழைவாள்”, என்று அம்மா பாட்டியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

 

“ஆமா, நாம தான் உள்ளே அடைஞ்சுண்டிருக்கோம், அதுபாட்டிலே வெளியே போய்ட்டுவரட்டுமே, அதுக்கென்ன?“ என்று பாட்டி ஸஹானாவுக்குச் சார்பாய் பேசினாள்.

 

கோகுலத்தில் கண்ணன் வளர்ந்ததுபோல் அந்தத் தெருவுக்கு ஸஹானாதான் கண்ணம்மா! வயதான தாத்தா, பாட்டி முதல் சிறுவர் சிறுமியரும் அவளை அவரவர் பாணியில் பல ராகங்களில் ‘ஸஹானா”, என்று கொஞ்சுவார்கள். அவளுக்கும் எல்லோருக்கும் “ஹாய்! ஹாய்!” என்று கையை உயர்த்தி பதில் சொல்லும் பாங்கே அழகுதான்!

 

அந்தத் தெருவில் மாலை நான்கு மணி அடித்தால் குட்டிப்படைகள் முற்றுகைதான்; ராஜபரிபாலனம்தான்! இருட்டியபின் அம்மாவோ அப்பாவோ வந்து கூப்பிட்டபிறகுதான் வீட்டுக்குள் நுழைவது அவர்கள் வழக்கம். அந்தக் குழுவில் சிந்து தான் வயதில் பெரியவள். நான்காம் வகுப்பு படிக்கிறாள். அவள் சொல்வதை மற்றவர்கள் கேட்பார்கள்.

 

அர்ஜூன் யூ.கே.ஜி; மாதுரி எல்.கே.ஜி; ஸ்மிதா யூ.கே.ஜி; மானஸா எல்.கே.ஜி; மற்றும் தெருக்கோடியிலிருந்து அர்விந்த் ’ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட்’, பூனம் எல்.கே.ஜி ஆகிய குழந்தைகளும் வருவார்கள். எல்லோரும் விளையாடும்போது ஸஹானா வருவாள். அவளுக்கு இன்னும் பேச்சே வரவில்லை. இன்னும் இரண்டு வயது பூர்த்தியாகவில்லை. இந்தக் குழந்தைகளிடம்தான் அவள் நடக்கவே கற்றாள். இப்போஒது ஒவ்வொன்றாய் பல வார்த்தைகளையும் கற்றுவருகிறாள். “ஜூ” என்று அவள் ஓடினாள் மற்றவர்கள் பிடிக்கவருவதுபோல் பின்னால் வருவார்கள். அவர்களைப் பார்த்து கலகலவென்று சிரிப்பாள் குட்டி ஸஹானா!

 

பிடிபட்டுவிடுவாள். மற்றவர்களுக்கு இணையாகத் தானும் விளையாடுவது போல் ஒரு பெருமிதவுணர்வில் அவள் முகம் ஜொலிக்கும்! கன்னடத்தில் ‘பேடா’ சொல்ல வராது. ‘பேலா’ என்பாள். ‘கொடு’ என்பதற்கு ‘கொலு’ என்பாள். அப்படி தாத்தா, அஜ்ஜி, அம்மா, அப்பா, மாமா என்று சில வார்த்தைகள் மிக இனிமையாகப் பேசுவாள்.

 

“தாங்க்ஸ்” என்பதற்கும் ஏதோ சொல்லி கைகுலுக்குவாள் அவளுக்கேயுரிய மொழியை நாம் உபயோகிக்கக்கூடாது. எந்தக் குழந்தை அழுதாலும் அவளுக்கு வருத்தம் ஏற்படும். உடனே சமாதானம் செய்யவேண்டும். அவள் யாரிடம் போனாலும், யாரைக் கூப்பிட்டாலும் அவர்கள் மிக மிக அன்பாக அவளைத் தூக்கிக் கொஞ்சி உருகிப்போவார்கள்.

 

அர்ஜூனனின் அம்மா சுதாவுக்கு ஸஹானா என்றால் உயிர். அவள் தெருவில் வந்துவிட்டால் அவளைப் பார்ப்பதே சுதாவின் வேலை. பெண்குழந்தையின் அழகே தனிதான்! அதிலும், இவள் மிக அருமையான குழந்தை! துளி அழுக்கு படியாதபடி எப்படி விளையாடுகிறாள்! கவுன் ஒரு சிறிதும் கசங்குவது கிடையாது. தூங்கி எழுந்தால் கூட ரோஜா மலர்ந்ததுபோல் ஒரு பிரகாசம்! அர்ஜுனன் விளையாடிவிட்டுவந்தால் குளிக்காமல் படுக்கையில் விட முடியாது. அப்படியொரு தூசி; அழுக்கு.

 

“அவளை, ஸஹானாவைப் பாருடா, துளி அழுக்குப் பண்ணிக்கிறாளா பாரு…. கை கால் எப்படி சுத்தமா இருக்கா பாரு”, என்பாள் சுதா.

 

“ஐயே, அது குழந்தைம்மா, அதுக்கு என்ன விளையாடத் தெரியும்?அதப் போயி பெரிய மனுஷி மாதிரி சொல்றியே!”, என்பான அர்ஜூன்.

 

“போட, குழந்தையா இருக்கும்போதே எத்தனை சமத்தா இருக்கு. இது பெரிசானா ரொம்ப கெட்டிக்காரியா வரும்”, என்பாள் சுதா.

 

“ஆமாம் போ – ஒனக்கு என்னைக் கண்டா எப்பவுமே பிடிக்காது. அதையே வச்சுண்டு கொஞ்சு போ”, என்பான் அர்ஜூன். ஸஹானா ஒரு பொம்மையையோ, ஒரு விளையாட்டுப்பொருளையோ உடைக்க மாட்டாள். ஒரு பொருளைக் கொட்ட மாட்டாள். பிறர் பொருளை எடுக்க மாட்டாள். பிடிவாதம் அழுகை என்று கிடையவே கிடையாது. எப்போதுமே சிரித்தமுகமாகத்தான் இருப்பாள்!

 

சிந்துவை இந்து என்றும் ஸ்மிதாவை இதா என்றும் கூப்பிடுவாள். ஒருநாள் ஸஹானா “ஜூ” என்று ஓடும்போது சுதா போய் பிடித்தாள். அம்மா என்று அவள் காலைக் கட்டிக்கொண்ட குழந்தையை சுதா அள்ளியெடுத்துக்கொண்டாள். அவளுக்கு பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே’ நினைவு வந்தது. எல்லோருமே ஆண் குழந்தைகளை ”கிருஷ்ண விக்கிரகம் போல இருக்கே!” என்று வர்ணிப்பார்கள். நம் பாரதி தான் ‘கண்ணம்மா’ என்று பெண்ணைச் சொல்லி ‘பேசும் பொற்சித்திரம்’, ‘ஆடிவரும் தேர்’, ‘பிள்ளைக் கனி யமுது’ என்று மெச்சி அனுபவித்துப் பாடியுள்ளார்.என்ன மென்மை! என்ன இனிமை! பெண் என்னும்போதே மனதில் ஒரு குளிமை ஏற்படுகிறது. ஏனோ சுதாவுக்கு ஸஹானாவிடம் ஒரு தனி பாசம் உண்டாகிறது என்று அவளுக்கே தோன்றியது.

 

ரகு அடுத்த வீட்டுப் பையன். அவனுக்கு பத்துவயதிருக்கும். அவனால் சரியாகப் பேசமுடியாது. அவனைப் பள்ளிக்கு அனுப்பவே இல்லை. குழந்தைகள் விளையாடு வதை அவன் ஓரிடத்தில் உட்கார்ந்தபடி பார்த்திருப்பான. மற்ற குழந்தைகள் அவனை விளையாட்டில் சேர்த்துக்கொள்வதில்லை. சில நேரங்களில் அவனுக்கு வலிப்புநோய் வருவதால்தான் அவன் பெற்றோர் எங்கேயும் அவனை அழைத்துப்போவதில்லை. குழந்தைகளுக்கு பயம். எனவே அதிகமாக அவனுடன் பேசமாட்டார்கள்.

 

அன்று ஸஹானா ‘ஜூ’ என்று ஓடியபோது  அர்ஜூன் பிடிக்க ஓடினான். தெருவில் ஒருவன் ஸ்கூட்டரில் வந்ததை குழந்தைகள் பார்க்கவில்லை. ஆனால், அந்தப் புதியவன் வண்டியை நிறுத்திவிட்டான். என்றாலும், குழந்தைகள் பயந்துவிட்டனர். பிறகு, சில நாட்கள் ஓடி விளையாடவே அவர்களுக்கு ஆர்வமில்லை. ஓரிடத்தில் உட்கார்ந்து கதை பேசி பாட்டுப் பாடி என்று பொழுதைக் கழித்தனர்.

 

ஒரு வாரம் ஆன பிறகு மறுபடியும் விளையாட்டு பழையபடி தொடங்கியது. அந்தத் தெருவின் ஆண்கள் மாலை நான்கு மணிக்கு மேல் தெருவில் நுழையும்போது வண்டி யிலிருந்து இறங்கி நடந்து வண்டியைத் தள்ளியபடிதான் வருவார்கள். தங்களுடைய குழந்தைகள் விளையாடுவது அவர்களுக்குத் தெரியும். மறுபடியும் ஸஹானா ‘ஜூட்’ ஓடியபோது உட்கார்ந்திருந்த ரகு தெருக்கோடியைக் கவனித்தான்.

 

அங்கு ஒரு கார் திரும்பிக்கொண்டிருந்தது. மானஸா ஸஹானாவைப் பிடிக்க ஓடினாள். சட்டென்று ஒரு தெருவின் குறுக்காகப் படுத்துவிட்டான். காரும் உடனே நின்றுவிட்டது. தெருவில் கூட்டம் கூடியது. ஆனால், ரகு சிரித்தபடி எழுந்துவிட்டான். குழந்தைகள் பதறிநின்றனர். ஸஹானா “அண்ணா”, என்று அழுதாள். எல்லோருக்குமே ஆச்சரியம். குழந்தைகள் வரும்போதே கார் வருவதை நிறுத்த ரகு அப்படி ஒரு வேலை செய்து நிறுத்திவிட்டான். வலிப்பு ஏதுமில்லை.

 

மற்ற குழந்தைகளிடம் ரகு வைத்த அன்பு எத்தகையது என்பதைப் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எல்லோரும் புரிந்துகொண்டனர். அன்று முதல் ஸஹானா அவனைப் பார்த்தால்  “அண்ணா” என்று அன்போடு அழைப்பாள். அவனும் கையைத் தூக்கி “ஹா!” என்பான். மற்ற குழந்தைகளும் “ரகு அண்ணா” என பிரியமாய் அழைக்கும்போது அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

———————–

Series Navigationஅஞ்சுவன்னங்களும் அரபுக் குதிரைகளும்துருக்கி பயணம்-8 – இறுதிப் பகுதி
author

கோமதி

Similar Posts

2 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    CHINNANCHIRU KILIYE by KOMATHY is a neat little short story involving innocent children who play togetherr in the evening. The introduction of SAHANA brings out the cute little charming girl before our eyes.Quoting BARATHY’s CHINNANCHIRU KILIYE and equating KANNAMMA to the natural charm, innocence and beauty of little girls who are like flowers is appropriate indeed. The handicapped RAGU’s timely action by falling on the road to save SAHANA from the car, has added meaning to the story! Congratulations to the writer KOMATHY!..Dr.G.Johnson.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *