முள்வெளி அத்தியாயம் -15

This entry is part 1 of 32 in the series 1 ஜூலை 2012

மதியம் மணி பன்னிரண்டு.

“இன்னும் கொஞ்சம் காரக் கொளம்பு வெக்கறேன். நல்லாயிருக்கா…?” அவனுக்குக் கமறி விக்கியது.

“மெதுவா சாப்பிடுடா. ” தூக்க முடியாதபடி வயிறைத் தூக்கியபடி கை நிறைய அடுக்கியிருந்த கண்ணாடி மற்றும் பிற வகை வளையல்கள் ஒலிக்க மலர்விழி எழுந்து ஒரு டம்ளர் தண்ணீரைக் கொண்டு வந்து அவன் முன் வைத்தாள். “முதல்ல தண்ணியைக் குடிடா”

“ஆம்லேட்டை ரசம் வரைக்கும் வெச்சிருக்க மாட்டே.. இரு.. அப்பளம் சுட்டுப் போடறேன்.”

அப்பளம் சுட்ட படியே “ஏண்டா.. ஏதோ கால் சென்டராமே அதுக்கு நிறைய பசங்க வேலைக்கிப் போறானுங்களாமே”

“ஆரம்பிச்சிட்டியா.. உன் புருஷனுக்கும் இப்படித்தான் சோத்தைப் போட்டு உன் பல்லவியை ஆரம்பிப்பியா?”

“பேச்சை மாத்தாதடா.. கால் சென்டர் வேலைக்கிப் போனா என்ன?”

“அதுக்கு நுனி நாக்கு இங்கிலீஷ் வேணும்…டவுன் பஸ்ஸுல காலேஜுக்குப் போன மாதிரி ‘என்னா மச்சி’ ன்னு தமிளுல பேசிட்டு வந்திட முடியாது..”

“இங்கிலீஷ் எப்படியானாலும் கத்துக்கறது…” பொன்னிறமான இரண்டு அப்பளங்களை அவன் தட்டில் வைத்தாள்.

முகமெல்லாம் வியர்வை வழிய அம்மா ஒரு குடம் தண்ணீருடன் வந்தவள் “நீயும் உக்காரு மலரு.. நான் சாப்பாடு போடறேன்” என்றாள்.

“இரும்மா.. இவனை மிச்ச விஷயம் கேட்டுட்டு உடறேன்…” “அத்தக் கத்துக்கறது தானேடா?”

“அந்த இங்கிலிசு டவுனுல இங்கிலிசுலெயே பேசி வளந்த புள்ளைங்கிளுக்குத்தான் வரும். கத்துக்கறதாமே கத்துக்கறது…”

“என்னமோடா.. நீ தலையெடுத்து அம்மாவைக் காப்பாத்தணும்..”

“ஏன் நீ வேலைக்கிப் போயி மாமாவுக்கு ஒத்தாசையா இருக்குறதுதானே? எத்தன பொம்பளைங்க பையைத் தூக்கிக் கிட்டு வேலைக்கிப் போவுறாங்க? நீ ப்ளஸ் டூ பெயிலு. ஏதோ பொம்பளைப் புள்ளேன்னு குடுத்தனம் பண்ணறேன்னு தப்பிச்சிக் கிட்டே. ” அவன் மேலே பேசும் முன் அவன் கன்னத்தில் விழுந்த அறையில் அவன் வாயிலிருந்த சோறு வெளியே தெறித்தது. ஒரு நிமிடம் நிலை குலைந்து சுவரில் சாய்ந்து விட்டான்.

“புள்ளத்தாச்சியப் பாத்து பேசுற பேச்சாடா இது. பிரசவ செலவுக்கு, பொறக்குற கொளந்தக்கி மாமன் தரப்பு சீரா ஒரு பவுனு செயினு வாங்க வழியில்லாம..வெட்டிப் பயலே..”

“ஏம்மா.. அடிச்சே.. தம்பி பாரு பாதி சோத்தை விட்டு எளுந்து போயிட்டான்…” மலர் விழி கண்களில் நீர் நிறைந்தது.

இப்போது சித்ரா விடாமல் மொபைலில் தொடர்பு கொள்கிறாள். அவளது ‘மிஸ்ஸுடு கால்’ களால் போன் நிரம்பி வழிகிறது. இப்போதும் அவள் தான். அக்கா மலர் விழி அன்று அக்கறையோடு பேசியது அனைத்தும் இப்போது நினைவுக்கு வருகிறது. இந்த சந்தோஷ சமாச்சாரத்தை முதலில் மலரிடம் சொல்லாமென்றிருந்தால் அவள் மொபைல் ‘ஸ்விட்ச்ட் ஆஃப் ‘ என்றே வருகிறது. வேறு வழி தோன்றாமல் சித்ராவின் போனை ‘ரிசீவ்’ பண்ணினான். “என்னா விஷயம்?”

“ஏன் ரெண்டு நாளா போனே இல்லே?”

“சும்மா.. போன் பண்ணாதே. எனக்கு கால் சென்டர்ல வேலை கிடைச்சாச்சு. மாசம் எட்டாயிரம் சம்பளம். நான் பிஸி..” என்றான்.

**__
**__**
** லதாவின் கார் நின்றவுடன் அதனுள் ஒலித்துக் கொண்டிருந்த ‘அலைபாயுதே.. கண்ணா.. என் மனம் அலை பாயுதே.’ என்னும் பாடல் ஒலி ஓய்ந்தது.

தன்னுடைய கையில் இருந்த ‘முந்தல்’ என்னும் சிறுகதையை காருக்கு உள்ளேயே விட்டு விட்டு மருத்துவமனைக்குள் நுழைந்தாள்.

வரவேற்பாளர் ராஜேந்திரனைக் கீழே அழைத்து வர இயலாது என்று தெரிவித்ததும் ஒரு ‘வார்டு பாய்’ கூட வர மாடியில் ராஜேந்திரன் இருக்கும் அறையை அடைந்தாள்.

பரபரப்பும், வார்த்தைத் தேர்வில் பரவச உற்சாகமுமாகத் தன்வயமாகப் பேசும் ராஜேந்திரனா அது? கண்ணீரைக் கட்டுப் படுத்துவது மிகப் பெரிய போராட்டமாக இருந்தது லதாவுக்கு. “எதுக்காக எதைப் பணயம் வைக்கத் தயாராயிருக்கோம்? எந்த விலையைக் கொடுத்து எதை அடையத் துடிக்கறோம்கற கேள்வி எப்பவுமே நம்ம முன்னாடி நிக்கிது” என்பான்.

இப்போது அந்தக் கேள்வி அவனையே ஒரு வலையாகப் பின்னிப் பிணைத்திருப்பதாகப் பட்டது. “சுவாசம் என்னவோ தொடர்ச்சியா இருக்கு. ஆனா உயிரு போயிட்டுப் போயிட்டு வருதே” என்று எவ்வளவோ புலம்பியிருக்கிறான்.

விரல்களால் காற்றில் அளைந்து கொண்டு ஏன் இப்படி ஒடுங்கி விட்டான்?

காட்டுப் பூக்களைத் தேடி
வன தேவதை
வரும் நேரம்
இரவா பகலா என்று
சொல்ல முடியாது

தேவதையின் காந்தியில்
வனம் பிரகாசமாயிருக்கும்
மரக்கிளைகளைக் குலுக்கி
தொடுப்புகள் இல்லா
தூய மலர்கள் சிதற
அவள்
வைரப் பூவாய்
பிரகாசிப்பாள்

சிறகு விரிக்கும்
வரை தேவதை
புவிக்கு அன்னியமாய்த்
தென்படுவதில்லை

அவளின் அருகாமையில்
உள்ளார்ந்த
வலிகள் மறைந்து
மீட்சியை
அவள் நீங்கியதும்
உணர்வாய்

அவளைக் கண்டதும்
வரம் கேட்கும்
சுயநினைவிருந்தால்
விடுதலையே இல்லை உனக்கு

Series Navigationவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 19
author

சத்யானந்தன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    TRS SRIRAM says:

    hi, though i have not read the earlier parts, i feel u have tried to give your best in words,presentation,picturisation, etc. very nice and interesting to read. keep it up. good luck.

  2. Avatar
    sathyanandhan says:

    நன்றி திரு.ஸ்ரீராம். முள்வெளி நாவல் வடிவம் மிகவும் வித்தியாசமானது. ஒவ்வொரு அத்தியாயமும் தன்னளவில் முழுமையானது. நாவலின் தொடர் சடரான கதையும் கதாபாத்திரங்களின் வாழ்க்கை நம்முன் விரிவதும் நாவலின் இறுதி அத்தியாயம் வரை சுருதிபேதம் இன்றி நீளும். அன்பு சத்யானந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *