பவள சங்கரி
ஓய்வு பெற்ற ஒரு சி.பி.ஐ. உயர் அதிகாரியின் மலரும் நினைவுகள்
ஆசிரியர் : கே.ஏ. ராஜகோபாலன்
ஆங்கில மொழியின் தமிழாக்கம் : ராணிமைந்தன்
பக்கம் :320
முதற்பதிப்பு – பிப்ரவரி 2000
நடுவண் புலனாய்வுச் செயலகம் (Central Bureau of Investigation) பன்னாட்டு காவல்துறைக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ அமைப்பாகச் செயல்படுகிற, நாட்டுப் பாதுகாப்பு குறித்த முக்கிய விசயங்களை ஆய்வு செய்யும் இந்திய அரசாங்கத்தின் உயர்நிலை புலனாய்வுத் துறைதான் சி.பி.ஐ என்கிற இந்தத் துறை. சிறப்புக்காவல் நிறுவனத்திலிருந்து 1963இல் தோற்றுவிக்கப்பட்டது. இத்துறை பணியாளர் நலன், குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துக்கான மத்திய அமைச்சகத்தின், பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வுச் செயலகம் செயல்படுகிறது. நம் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்குப்பின், ஏப்ரல் 1,1963 முதல் சிறப்புக் காவல் நிறுவனத்திலிருந்து சிற்சில மாற்றங்களுடன் நடுவண் புலனாய்வுச் செயலகம் நிர்வகிக்கப்பட்டு செயல்பட ஆரம்பித்துள்ளது.
ஊழல் எதிர்ப்புப் பிரிவு மற்றும் குற்றப்பிரிவு (தனி) எனும் இரு சிறப்புப் பிரிவுகள் உருவாக்கப்பட்டு, பொதுவான குற்றங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் குற்றப்பிரிவு (தனி) உருவாக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, முக்கியத்துவம் வாய்ந்த ஊழல், கொலை, ஆள்கடத்தல், தீவிரவாதம் போன்ற வழக்குகளில் நடுவண் புலனாய்வுச் செயலகம் பெரும் பங்காற்றுகிறது. . தேசியப் பொருளாதார நலனைக் காப்பது மற்றும் உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் பரிந்துரைக்கும் வழக்குகளிலும் இவ்வமைப்பு முக்கிய பங்காற்றுகிறது.
இந்த புலனாய்வுத்துறை மூலமாக கீழ்கண்ட மூன்று பிரிவுகளில் தங்கள் செயல்பாடுகளை மேற்கொள்கின்றனர்:
1. ஊழல் எதிர்ப்புப் பிரிவு: அனைத்து மத்திய அரசுத் துறைகள், மத்திய நிதித்துறை மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் மற்றும் ஏய்ப்பு வழக்குகளைப் புலனாய்கிறது.
2. பொருளாதாரக் குற்றப்பிரிவு: வங்கி மற்றும் நிதி ஏய்ப்பு, ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் அந்நியச் செலாவணி மோசடிகள் பெருமளவிலான போதை மருந்து பதுக்கல் மற்றும் கடத்தல் வழக்குகளைப் புலனாய்கிறது.
3. குற்றப்பிரிவு (தனி): ஆள் கடத்தல் வழக்குகள், குண்டுவெடிப்பு மற்றும் தீவிரவாத செயல்கள் தொடர்புடைய வழக்குகளைப் புலனாய்கிறது.
இதன் இயக்குநர் இதற்கு தலைமை வகிக்கிறார். இவர் தலைமைக் காவல்துறை இயக்குநர் அல்லது மாநிலக் காவல்துறைக் கண்காணிப்பாளர் தரத்திலான இந்திய காவல்துறை (ஐ.பி.எஸ்) அதிகாரியாக இருப்பார்.
”காவல்துறை பணி என்பது சுவையானது. ஆனால் சவால்கள் நிரம்பியது. ஆழ்ந்த சட்ட அறிவு, விசாரிப்பதில் ஆற்றல், நிர்வாகத் திறமை, சமயோசித புத்தி, துணிவு இவை அனைத்திற்கும் மேலாக அப்பழுக்கற்ற நேர்மை இவையெல்லாம் இந்தப் பணியைச் செம்மையாக ஆற்றுவதற்கு தேவையான முக்கியமான பண்புகள். காவல்துறை ஒரு கடினமான துறை. இங்கே வெற்றிகள் எண்ணப்படுவதில்லை. தோல்விகள் பூதாகாரமாக்கிக் காட்டப்படும்” என்ற ஓய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரி திரு எஸ்.ஸ்ரீபால் ஐ.பி.எஸ். அவர்களின் அணிந்துரையுடன், ஆர்வமாக உட்புகச்செய்கிறது. காவல்துறை என்பது எப்பொழுதுமே ஒரு மூடுமந்திரமாகவே சாமான்யர்களுக்கு தோற்றம் காட்டுவது இயல்பு.. பலவிதமான விமர்சனங்களுக்கு உட்படுவதால் இவர்கள் நல்லவர்களா அல்லது கெட்டவர்களா என்ற தெளிவான ஒரு போக்கு பிடிபடுவதில்லை. காவல்துறை உங்கள் நண்பன் என்ற அறிவிப்பை சகல இடங்களிலும் பொறித்து வைத்திருந்தாலும், ஏனோ அத்துறையை எளிதாக அணுகும் துணிச்சல் இன்றும் வருவதில்லை.. நல்ல விசயங்களையும், சாதனைகளையும்விட பல கசப்பான அனுபவங்கள மற்றும் வக்கிரங்கள் மட்டுமே ஊடகங்களில் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுவதும் ஒரு காரணமாகிவிடுகிறது.. குற்றமும், குறையும் அறவே இல்லாத துறை என்று எங்குமே இல்லை.
“அன்றைய சி.பி.ஐயின் மற்ற அதிகாரிகளைப் போலவே ராஜகோபாலன் அவர்களும் ஒரு மிக நேர்மையான அதிகாரி. நேர்மை ஒரு நற்குணம் என்பதைவிட அப்போது அதுஒரு அவசிய குணமாகவே சி.பி.ஐயில் தேவைப்பட்டது. தான் 1962ல் மத்திய புலனாய்வுத் துறையில் பணியில் சேர்ந்தபோது அங்கே அதிகாரிகளிடம் காணப்பட்ட நேர்மை 1992ல் நான் விருப்ப ஓய்வு பெற்ற சமயத்தில் குறைந்திருந்தது. இந்த வேதனைக்குரிய உண்மையை நான் அத்துறையின் உள் கூட்டங்கள் பலவற்றில் வெளிப்படையாகவே சொல்லி வருத்தப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். மத்திய புலனாய்வுத் துறையில் இப்போது ஊழல் மிகவும் அதிகமாகிவிட்டது என்று கேள்விப்படுகிறேன்.அரசின் மற்ற துறைகளில் வேகமாக வீசிக்கொண்டிருக்கும் ஊழல் சூறாவளியிலிருந்து மத்திய புலனாய்வுத் துறைகூட தப்ப முடியாமல் அதில் சிக்கிக் கொண்டிருப்பது பெரும் சோகம்” என்றும், 1976-77ல் சர்க்காரியா கமிஷன் பணியில் தான் இருந்த போது தான் பணியாற்றிய அதே அலுவலக கட்டிடத்தில் கே.வீராசாமி அவர்கள் மீதான வருமானதிற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கைத் தான் விசாரித்துக் கொண்டிருந்தபோது, திரு ராஜகோபாலன் அவர்களின் நேர்மையான செயல்திறம் குறித்தும் மற்ற அதிகாரிகளுக்கு அவர் ஒரு முன்மாதிரியாக இருந்தார் என்றும், இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் மத்திய புலனாய்வுத் துறையின் ஓய்வு பெற்ற இணை இயக்குநர் திரு கே.மாதவன் அவர்கள இந்நூலுக்கு அளித்துள்ள மதிப்புரையும் குறிப்பிடத்தக்கது.
திரு கே. ஏ ராஜகோபாலன் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்நூல் அதன் சாரமும், கருத்தும் மாறாமல் அப்படியே அழகு தமிழ் நடையில் திரு ராணிமைந்தன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, என்பதை தம்முரையில், 1998 ஆம் ஆண்டு குற்றால அருவியில் தம் மனைவியுடன் குளுகுளுவென குளித்துக் கொண்டிருக்கும்போது இந்நூல் பிறந்த கதையுடன், தெளிவாகக் கூறியுள்ளார்.
“சம்பள்ம் தவிர இன்னும் பல வழிகளில் வருமானம் பெற ஒரு போலீஸ் அதிகாரியால் முடியும் என்பது நன்கு தெரிந்திருந்தும் ஒரு முறைகூட அந்த வழியில் என்னைச் சிந்திக்க அவள் தூண்டியதில்லை. நேர்மையாக வாழ விரும்பும் ஒரு அதிகாரிக்கு இப்படிப்பட்ட மனைவி எப்பேர்ப்பட்ட வரம் என்பது அப்படி ஒரு மனைவி வாய்த்தவருக்குத்தான் புரியும் “ என்று தம் அன்பு மனைவி அம்மணிக்கு காணிக்கையாக்குகிறார் இந்நூலை.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு, வெள்ளைக்காரர் ஆட்சிக்காலத்தில் அழகியசிங்கம் என்கிற தன்னுடைய தந்தையார் ஸ்டேஷன் ஹவுஸ் ஆபீசராக (இன்றைய சப்-இன்ஸ்பெக்டர்) பணியாற்றிய போது, ‘தீவட்டிக் கொள்ளைக்காரன்’ என்கிற கொடுக்கூர் ஆறுமுகம் என்பவன், ஒரு பயங்கர குற்றவாளி. சிரமப்பட்டுப் பிடித்த அவனை, அவருடைய உயர் அதிகாரியான, ஊழல் பேர்வழி சர்க்கிள் இன்ஸ்பெக்டர், விடுதலைச் செய்ய உத்தரவிட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில், வெள்ளைக்கார அதிகாரி, அந்த ஊழல் இன்ஸ்பெக்டரின் பக்கம் இருந்ததால், தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில்,சர்.பி.டி ராஜன் அவர்களின் உதவியோடு படித்து முடித்து, ஆசிரியப் பணியில் சேர்ந்த சம்பவம் மிகச் சுவைபட விளக்கப்பட்டுள்ளது. இப்படித்தான் போலீஸ் மரபணு தம் குடும்பத்தில் வேறூன்றியிருக்க வேண்டும் என்று கூறுகிறார். ஆறு பேர் கொண்ட தங்கள் குடும்பத்தை நல்லபடியாக காப்பாற்ற போதுமானதாக இருந்த அவர் தந்தையின் மாதச் சம்பளம் அறுபது ரூபாய் என்பது மிக ஆச்சரியமான விசயமாக இருக்கிறது.
தம்முடைய உற்ற தோழன் ராமகிருஷ்ணன், ஒரு அமெரிக்க ஆயில் நிறுவனத்தின் அதிகாரியாக இருந்தவரின் மகன், மிக புத்திசாலி மாணவன் என்பதால், கணிதம், வேதியல், இயற்பியல் போன்ற பாடங்களை அவனிடம் கற்றுக்கொள்ள வந்தவர், நண்பனின் தாயாருக்கு எடுபிடி வேலைகள் செய்ததன் மூலமாக குடும்பத்தில் ஒருவனாக இடம் பிடித்ததோடு, தாம் ஒரு அய்யங்காராக இருந்து கொண்டு, அய்யர் பெண்ணான அம்மணியை புரட்சிகரமாக திருமணம் செய்து கொண்ட 1947ம் காலத்திய சம்பவத்தை விளக்கிய பாங்கு சுவாரசியம்.
அடுத்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நண்பனுடனே சேர்ந்து படித்து, பின்பு நண்பன் இந்தியன் ரெவின்யூ சர்வீசிலும், தான் விமானப்படை பயிற்சியில் இணையவும் இருவரும் இரு வேறு திக்கில் பிரிந்து போகிறார்கள். விமானம் ஓட்டும் பயிற்சியில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக ராயல் இண்டியன் நேவியின், செயல்பாடு பிரிவிற்கு மாற்றப்பட்டு, 1943 இறுதியில், அப்பிரிவின் சப்.லெப்டினெண்ட்டாக, கடலுக்கு அடியில் வைக்கும் கன்னி வெடிகளை அகற்றுவது, ஸ்ரீலங்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆஸ்திரேலியாவைச் சுற்றியுள்ள அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் எதிரிகளின் நீர் மூழ்கிக் கப்பல்களைக் கண்டுபிடிப்பது போன்ற பல்வேறு அனுபவங்களைப் பெற்றிருப்பது ஆச்சரியமான செய்தியாக இருக்கிறது.
முடி வெட்டுவதில் ஆரம்பித்து, நேரம் தவறாமை, ஒழுக்கநெறி பிறழாமை போன்ற காவல்துறை கட்டுப்பாடுகளை மிகச் சுவையாக விளக்கியுள்ளார்.
இரண்டாம் உலக்ப்போரின்போது தான் இந்திய கடற்படையில் ஸ்ப் லெஃப்டினட்டாக எக்ஸிக்யூட்டிவ் பிரிவில் இருந்தவர், போர் முடிந்தவுடன் படையிலிருந்து விலக விருப்பம் தெரிவித்தவ்ர்களுக்கு,சிவில் பணி உத்திரவாதம் உள்ளிட்ட சில சலுகைகளை நம்பி விலகியவர், தனக்கான எந்த வேலையும் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கவில்லை என்று நகைச்சுவையாக விவரித்திருக்கிறார். அடுத்து தன் நண்பர் கென் பியர்சன் என்ற ஆங்கிலேய போலிஸ் துணை கமிஷனரின் உதவியால் மீண்டும், காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டர் பதவியைப் பெற்றிருக்கிறார். பயிற்சியின் போது 93 ரூபாயும், பின்னர், 135 ரூபாய் சம்பளம் என மிகக் குறைவாக இருந்ததாலும், ஒப்புக்கொள்ள மனமில்லாமல், அங்குள்ள சப் இன்ஸ்பெக்டரிமே யோசனை கேட்கலாம் என சென்றபோது, வெள்ளை சட்டை, வெள்ளை அரைக்கால் சட்டை, வெள்ளை ஷீக்கள், வெள்ளை காலுறைகள் என்று கடற்படை கம்பீரத்துடன் காரிலிருந்து இறங்கியவரை, விஐபி என்று நினைத்து பெரிய மரியாதை கொடுத்ததையும், தர்ம சங்கடத்தில் தாம் நெளிந்ததையும் வினயமாக விளக்கியுள்ளார். இறுதியாக அதே பணியில் சேர்ந்தும் விட்டார்.
‘மரணத்தோடு ஒரு நேர்முகம்’ என்ற தலைப்பிலான கட்டுரையில் ஆசிரியர் திரு கே.ஏ ராஜகோபாலன் குறிப்பிட்டுள்ள உண்மைச் சம்பவம் ஒரு திரில்லிங் கதை படித்த அனுபவம் கொடுத்ததும் உண்மை.
‘ரெயில்வேயில் ஒரு சதித்திட்டம்’ என்ற தலைப்பில், ஐம்பதுகளின் தொடக்கத்தில், கம்யூனிஸ்ட் இயக்கத்தினரால் ஏற்பட்ட பிரச்சனைகளை மிகத் தெளிவாகக் காட்டியுள்ளார். ரயில்களை தடம் புரளச் செய்யும் முயற்சியை முறியடித்த விதம் மிகச் சுவாரசியம்… “விருத்தாச்சலம் நகரத்துக்கும் பெண்ணாடம் இரயில் நிலையத்திற்கும் இடையே ஒரு சிறிய ஆற்றின் மீதான ரெயில்வே பாலம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. சதி வேலை காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது” என்று தொலைபேசியில் வந்த செய்தியின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு டிராலியில் விரைந்து அடுத்து எடுத்த நடவடிக்கைகள் அனைத்தையும் விளக்கிய விதத்தில் இருக்கையின் நுனிக்கு வந்து விழப்போனதும் விழிப்பு ஏற்பட்டது….
இரகசிய செய்திகளைச் சேகரிப்பதில் இயல்பாகவே தனக்கு இருந்த ஆர்வத்தைக் கண்டுகொண்ட மேலதிகாரிகள் இவரை மாவட்ட இரகசியப் புலனாய்வுத்துறை சிறப்புப் பிரிவிற்கு தலைமையேற்க மாற்றப்பட்டிருக்கிறார். 1951 – 52 காலகட்டத்தில் புதுச்சேரியில் இருந்த ஃபிரெஞ்சு அரசு இந்தியாவுடன் இணைய வேண்டி உள்ளூர் மக்கள் நடத்திய இயக்கத்தை முடக்கப் பார்த்ததால் இந்திய ஃபிரெஞ்சு அரசுகளுக்கு இடையில் உறவு சுமுகமாக இல்லாத நேரம் இணைப்பு எதிர்ப்பாளர்கள் அவ்வப்போது இந்திய எல்லைக்குள் தொந்திரவு கொடுத்துக் கொண்டிருந்தனர். இதனைச் சமாளிக்க இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் தனக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கியிருந்ததனால் புதுச்சேரி இணைவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஃபிரெஞ்சு அரசு உணருகிற ஒரு சூழ்நிலையையும் வெற்றிகரமாக உறுவாக்கிய விதத்தை விவரமாகக் கொடுத்துள்ளது சிறப்பு.. சக அதிகாரியின் தில்லு முள்ளையும் அப்பட்டமாக எடுத்துரைக்கிறார். இப்படியாக மாநில காவல்துறை தலைமை அலுவலகத்தில் கிரிமினல் புலன் விசாரணைத் துறையின் அரசியல் இரகசியத் தகவல் பிரிவு எனப்படும் சிஐடி ஸ்பெஷல் பிரிவில் பணியாற்ற வந்ததாகக் கூறுகிறார்.
1940களின் இறுதியில் – 50களின் தொடக்கத்தில் தேர்தல் மூலம் அன்றி வன்முறையால் அரசாங்கங்களைக் கவிழ்த்து அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவதில் நம்பிக்கை கொண்டிருந்த போக்கு கம்யூனிஸ்டுகளிடையே காணப்பட்டது என்கிறார். அடுத்து இரகசியப் பிரிவிலிருந்து, சட்டம், ஒழுங்கு துறைக்கு பதவி உயர்வும், இட மாற்றமும் பெற்று பணிபுரிந்த நாட்களில் சுவையான, சிரமமான சில வழக்குகளை கையாளுகின்ற வாய்ப்பு குறித்து அதன் சுவை குறையாமல் விளக்கிய பாங்கு நன்று.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து சொல்லும் போது, திருச்சியில் ஆகாஷ்வாணி/ஆல் இந்தியா ரேடியோ என்ற பெயரை திருச்சி வானொலி நிலையம் என்று மாற்றக்கோரி முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் அவர்கள் மறியல் போராட்டத்திற்கு தலைமை தாங்கி, வானொலி நிலையம் முன்பு தினசரி மறியல் நடத்திக் கொண்டிருந்தது அதில் ஆயிரக்கணக்கானோர் பங்கு கொண்டு நடத்திய போராட்டத்தை சொற்ப அளவிலான காவலர்களைக் கொண்டே சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதையும் சுட்டிக்காட்டியதோடு அப்போராட்டம் முழுவதையும் விளக்கமாகவும், அதைச் சமாளித்த விதம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் தீ விபத்து என்று விடிகாலை ஐந்து மணிக்கு வந்த செய்திகேட்டு சக ஊழியர் தனராஜ் என்பவர் கிறித்துவர் என்பதால் முழு பொறுப்பும் தாமே ஏற்க வேண்டி வந்ததாகவும், மூலவர் ஸ்ரீரங்கநாதர் தீநாக்குகளின் வெப்பத்தில் எரிந்து கொண்டிருந்தார் என்கிறார். மனிதச்சங்கிலி அமைத்து தீயின் மீது தொடர்ந்து தண்ணீர் ஊற்றப்பட்டாலும், தைலக்காப்பு முழுமையாக எரிந்தபின்பு தான் தீயின் கோரத்தாண்டவம் தணிந்தது என்கிறார்.
தீ விபத்திற்குப் பிறகு முன்பு இருந்ததைவிட சுவாமி உருவ அளவில் மூன்றில் ஒருபங்கு குறைந்திருந்தார் என்றும் முகத்தில் ஒரு நீண்ட திலகம் அடையாளமாய் காணப்பட்டது என்றும் கூறுகிறார். வேறு எந்த நாமம் போன்ற வடிவமும் இல்லை என்று உறுதியாகக் கூறுகிறார். இந்த ஆலயத்தைப் பொறுத்தவரை வடகலை – தென்கலை தகராறு ஒரு நீண்ட வரலாறு என்று அதற்கான விளக்கமும் தெளிவாகவேக் கொடுத்துள்ளார். நெற்றியில் இடும் நாமம் விளைவித்த சண்டையிது என்றும், யானையின் நெற்றி கூட இந்த சண்டையில் அடிபட்டது என்கிறார்… இதுபற்றி மிகத்தெளிவான ஆய்வறிக்கைக் கொடுத்துள்ளார்.
தன் சிபிஐ பணி நாட்கள் குறித்த விளக்கத்தையும், சீருடையும், ஆயுதமும் இல்லாமல் உள்ளூர் சீருடை போலீசிடமிருந்து விலகிப் பணியாற்றுவது குறித்து விளக்கியுள்ளார். சி.பி.ஐயின் பணியில் ஒரு சங்க்டம் உண்டு என்கிறார். அரசியல் காரணங்களுக்காகவோ, அல்லது வேறு எந்த காரணத்திற்காகவோ அனுமதியை மாநில அரசு திரும்பப் பெற்றுக் கொண்டால் அந்த வழக்கில் சி.பி.ஐ. தொடர்ந்து தலையிட முடியாது. அந்த வழக்கைப் பொறுத்தவரை சி.பி.ஐ பல் பிடுங்கியப் பாம்பாகிப் போகும், அந்த நிலை இன்றைக்கும் அப்படியேதான் இருக்கிறது என்கிறார்.
சற்று பிற்பட்ட காலத்திய நூல்களை வாசிக்கும் போது அது அக்காலத்தின் கண்ணாடியாக பலவிதமான இன்றைய மாற்றங்களை அறியச்செய்வதும் சுவை கூட்டுகிறது. அந்த வகையில் திரு கே.ஏ.ராஜகோபாலன் அவர்களின் நினைவுச் சுவடுகள் நமக்கு பல விசயங்களை சுவைபட விளக்குகின்றது.
தாம் பணிக்குச் சேர்ந்த காலங்களில் ஐம்பதுகளில், சி.பி.ஐ. தில்லியில் தலைமையகத்தையும் நான்கு மெட்ரோ நகரங்களின் கிளைகளையும் கொண்டு, பொருளாதாரக் குற்றங்களை மட்டுமே கவனம் செலுத்துவதாக இயங்கி வந்தது என்கிறார். ஒவ்வொரு மாநிலத் தலைநகரிலும் சி.பி.ஐ.க்கு தனி யூனிட் இருந்ததாகவும், ஊழல் புகார்கள் மீதான ரகசியத்தகவல்களைத் திரட்டுவதும், அரசு நிறுவனங்களின் மீதான, மற்ற பொதுத்துறை ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதும் இந்த யூனிட்டின் முக்கியமான பணி என்கிறார்.
திரு ராணிமைந்தன் அவர்கள் தம் மொழிபெயர்ப்பில், பெரிய மெனக்கெடல்கள் இல்லாமல் வெகு எளிதாக பல ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் வழங்கியிருப்பது வாசிப்பவர்களுக்கு எளிமையாக இருந்தாலும், தமிழ் ஆர்வலர்கள் இதனை வரவேற்பது சிரமம்தான். குறிப்பிட்ட துறை சார்ந்த இடுகைகளுக்கு சுத்த தமிழாக்கம் செய்வதால் அந்த இடுகையின் அழுத்தம் குறைய வாய்ப்பிருப்பதாக எண்ணியிருக்கலாமோ என்று தெரியவில்லை.
தன் உயர் அதிகாரியின் ஆர்டர்லி ஒருவர் தன் மகனின் பள்ளிச் சேர்க்கை சிபாரிசிற்காக வந்தபோது ஒரு அதிகாரியின் அறைக்குள் நுழையுமுன் கடைப்பிடிக்க வேண்டிய எந்த விதி முறைகளையும் அவர் கடைப்பிடிக்கவில்லை என்று சுட்டும் போது, அந்த விதிமுறைகளுக்கான விளக்கமும் சுவையான பகிர்தல…
“ஒரு கான்ஸ்டபிள் என் அறைக்குள் வந்து என்னைச் சந்திக்க வேண்டுமானால் முதலில் என் ரைட்டர் மூலமாக அனுமதி பெற்று, உள்ளே வந்ததும் முறையான சல்யூட் அடித்து அட்டென்ஷனில் நிற்க வேண்டும். நான் ‘அட் ஈஸ்’ சொல்லும் வரை அவர் அப்படியே இருக்க வேண்டும். இதையெல்லாம் ஏதோ நான் என் பதவிக்கு இருந்த பந்தாவாக பறைசாற்றவில்லை. காவல்துறையில் இப்படிச் சில விதி முறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு நிலையிலும் இப்படிப்பட்ட ஒழுக்க விதி முறைகள் கடைபிடிக்கப்படும்போது அது ஒட்டு மொத்தமாக காவல்துறையின் ஒழுக்க நிலையை உயர்த்தும் என்பதற்காகவே இவை வலியுறுத்தப்படுகின்றன” என்ற விளக்கம் சுவாரசியம்…
இந்தப் பிரச்சனையில் அன்றைய தினமே உடனடியாக தாம் குற்ற ஆவணங்கள் பிரிவிற்கு (Crime Records Bureau) மாற்றப்பட்டதையும், அது பணி ஓய்வு பெறப்போகும் அதிகாரிகள் மட்டுமே கொஞ்ச நாளைக்கு அங்கு போடுவார்களாம்… அங்கும் தம்முடைய முழு கவனத்தால் இரண்டு வாரங்களில் தாம் கொடுத்த குறிப்புகளின் உதவியால் பல குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதும், திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டதும், குற்றப்பிரிவு கமிஷனர் திரு சுவர்ணா ஐ.பி.எஸ் தன் பணி நேர்த்தியைப் பாராட்டியதும் அத்னால் அதற்கு பிறகு நேர்ந்த பிரச்சனைகளையும் தெளிவாக எந்த ஒளிவு மறைவுமின்றி, அவரவர்களின் சொந்த பெயருடனேயே வெளியிட்டிருப்பது அவருடைய துணிச்சலான சுபாவத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.. இறுதியாக 1963 மார்ச் மாதம் தில்லியில் தலைமையகத்தில் பணியில் அமர்ந்து, 1979 நவம்பர் வரை அங்கே பெருமைக்குரிய வகையில் பணியாற்றியதாகக் குறிப்பிடுகிறார். அப்போது வந்த பதவி உயர்வுகள், பதக்கங்கள் என்று அனைத்தும் அவர்தம் வல்லமையை நிரூபிப்பதாக இருக்கிறது.
தில்லி சி.பி,ஐயில் பொருளாதாரக் குற்றப்பிரிவில் போலீஸ் துணை சூபபரிண்டென்டென்ட் என்ற தகுதியில் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வெல்ல ஆலைக்கழிவு – மொலாஸஸ் கட்டுப்பாடு மற்றும் வெல்லக்கட்டுப்பாடு உத்திரவுகளை மீறிய ஒரு வழக்கு என்பதையும் அதன் சுவையான போக்கையும், பெயர்களுடன் அதாரப்பூர்வமாக தெளிவாக விளக்கிய பாங்கு அருமை.
அதேபோன்று பல்வேறு கொலை, கடத்தல் வழக்குகளில் ஈடுபட்டிருந்த தௌலத்ராம் என்பவருக்கு இரட்டைக் குழல் துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமம் வழங்கப்பட்டதும், ஒட்டகத்தின் மீது ஏறி தப்பித்த கதையும் சுவைதான்.
நார்கோடிக்ஸ் பற்றி வழங்கியுள்ள குறிப்பு பயனுள்ளது. விதவிதமான பல புதிய போதை வஸ்துகளின் பெயர்களும் இதில் அடக்கம். சைக்கோட்ராஃபிக் மருந்துகள் என்பது உட்கொள்ளும் அந்தத் தனி நபரை உள்ள ரீதியாக தன்னோடு ஒரு வினோத முறையில் உறவாட வைக்கும் தன்மை கொண்டது என்பது சிந்திக்க வைக்கிறது. நம் நாட்டில் நகர்ப்புற மக்களே அதிகமாக போதைக்கு அடிமையாகிறார்களாம். வட இந்தியாவில் சில கிராமங்களில் இந்தப்பழக்கம் இருந்ததாகச் சொல்கிறார்..
ஃபரூகாபாத், ஃபதேகர் ஆகிய கங்கை நதிக்கரையில் அமைந்த இரு நகரங்கள் பற்றியும், அவ்வூர் மக்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் துப்பாக்கி வைத்திருப்பதை கௌரவமாகக் கருதுவதும், தன்னையும் தன்னுடன் வந்த ராமச்சந்திரன என்பவரும் பிராமணர்கள் என்று தெரிந்து கொண்டு, தங்களை கீழ்ச்சாதியினர் என்று கருதி, குடிநீர் கூட கையால் தரமாட்டார்கள், பக்கெட், கயிறு கொடுத்து, கிணற்றைக் காட்டி விடுவதோடு, ஒரு பாத்திரம், பால் கொடுத்து அடுப்பையும் பற்ற வைத்துக் கொடுப்பார்கள் தாங்களே சுட வைத்து குடித்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருப்பது ஆச்சரியப்படும்படி இருக்கிறது.
1960களின் பிற்பகுதியில் கர்நாடக மாநிலத்தின் ஆளுநராக இருந்து வந்த, திரு.தர்மவீரா ஐ.சி.எஸ் படித்தவ்ர். மத்திய அரசுக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்குகள் இருந்த, ஒரு ஜெர்மனியக் கம்பெனியால் கட்டப்பட்ட இன்றைய விஸ்வேஸ்வரா இரும்பு எஃகு கம்பெனி என்று அழைக்கப்படுகிற அன்றைய பத்திராவதி இரும்பு எஃகு கம்பெனி, இயக்கி வைத்த ஆளுநர், அது ஒரு போலி என்பதை உணர்ந்த போது கொதிப்படைந்த ஆளுநரின் நடவடிக்கைகள் குறித்த பகிர்வும் சுவார்ரசியமாகவே இருக்கிறது.
பாண்டிச்சேரி இறக்குமதி லைசென்ஸ் ஊழல், (அப்போதைய பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்களால் விசாரிக்கப்பட்டது) ஆந்திரப்பிரதேச உரப் போக்குவரத்து ஊழல், (1973 – 1975 – தில்லியின் சி.பி.ஐ. வழக்குகளுக்கான சிறப்பு சி.பி.ஐ. நீதிபதி தங்கள் விசாரணையின் தரத்தை அவருடைய தீர்ப்பின் போது வெகுவாகப் புகழ்ந்துள்ளது) பிலாய் உருக்கு ஆலை – கழிவுப்பொருள் கையாள்வதில் ஊழல், போன்றவற்றின் மிக விளக்கமான கட்டுரைகள் வாசிப்பதற்கு ஆச்சரியமேற்படுத்துகிறது.
1996ம் ஆண்டின் பிரபலமான சர்க்காரியா கமிஷன் குறித்த பதிவில், அந்த கமிஷன் ஏன் எதற்காக அமைக்கப்படது என்பதில் தொடங்கி, அது குறித்த தெளிவான பாரபட்சமற்ற பார்வையை வெளிப்படுத்தியதாகவே உணர முடிகிறது.
“1952ல் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து அமைக்கப்பட்ட கமிஷன்கள், அவை தந்த அறிக்கைகள், அந்த அறிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இவற்றை வைத்துப் பார்க்கும்போது, இத்தகைய கமிஷன்கள் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு குறித்து பொது மக்கள் கொதித்து எழும்போது ஆளும் கட்சி தன்னைக் காத்துக் கொள்ளப் பயன்படுத்தும் கேடயங்களாகவே பயன்பட்டிருக்கின்றன என்ற எண்ணமே மக்கள் மனதில் மேலோங்கியிருக்கிறது. கமிஷன் அமைத்ததும் எதிர்ப்புக் குரல் தாற்காலிகமாக அடங்கிப் போகிறது. மக்களின் நினைவாற்றலுக்கு ஆயுள் கம்மி என்பது தெரிந்த உண்மையாகையால் நாளடைவில் எல்லாமே மறந்து போகும்” என்று ஆழ்ந்து சிந்திக்கும் வகையில் எழுதியிருப்பதும், இன்றைய பல விசயங்களுக்கும் இந்த நிலை ஒத்துப் போவதும் ஒப்புக்கொள்ள வேண்டியதாகிறது.
சர்க்காரியா கமிஷனுக்கு உதவி செய்ய தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட திரு விஜயராகவன் திறமைமிக்க கை சுத்தமான மிக நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியின் ஒத்துழைப்பு முழு அளவில் கிடைத்ததால் விசாரணைக்காக ஒரு முழுமையான அலுவலகத்தை அமைப்பதில் தனக்கு எந்தவிதமான சிரமமும் ஏற்படவில்லை என்கிறார்….
திரு.கருணாநிதி மீதான நீளமான புகார் பட்டியல் மேலெழுந்தவாரியாகவே அமைந்திருந்தன என்கிறார். புகார்ப்பட்டியலில் தாம் என்ன எழுதியிருக்கிறோம் என்பது பற்றிய செயல் முறை நுட்பங்கள் ஏதும் திரு எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு இருக்கவில்லை. அவர் நம்பிக்கைக்குரிய சிலர் தொகுத்துத் தந்த புகார்ப்பட்டியலில் அவர் கையெழுத்துப் போட்டு அனுப்பியிருந்தார் என்றுதான் யூகிக்க வேண்டியிருந்தது என்கிறார்.
ஜஸ்டிஸ் சர்க்காரியாவின் ஆழ்ந்த சட்ட நுண்ணறிவும் அனுபவமும் தங்களுக்கு,ஆதாரப்பூர்வமான புகார்களை மட்டும் முழு அளவிலான விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உதவியாய் இருந்தது என்றதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ‘ஓபன் என்கொயரி’ என்ற இரகசியமற்ற திறந்த விசாரணை சாத்தியமானது என்கிறார்…
அந்த விசாரணையில் தான் சில மனிதர்களின் சுபாவங்களை நன்கறியும் அரிய வாய்ப்பு கிடைத்ததாகவும், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எப்படியெல்லாம் அவர்கள் அமைச்சர்களைக் காட்டிக் கொடுத்தார்கள் என்பதை நேரில் காண முடிந்தது என்கிறார். நடந்திருக்கும் ஊழலில், ஒருவர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதற்கான ஆதாரங்களோடு அவரை நெருக்கினால், தன்னுடன் அதில் சம்பந்தப்பட்டிருக்கும் மற்றவர்களையும் காட்டிக்கொடுக்க அவர்கள் தயங்கவே இல்லை, சிலர் தாமாகவே முன்வந்து இன்னொருவரைக் காட்டிக் கொடுத்து சி.பி.ஐயை திருப்திப்படுத்த முயன்றார்கள் என்கிறார்..
கர்நாடக நில ஒதுக்கீடு ஊழல் பற்றிய நினைவலைகளும் தெளிவு. மத்திய அரசு அதிகாரி என்ற முறையில் தன் ஐம்பத்து எட்டாவது வயதில் பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டியிருந்தாலும் தனக்கிருந்த அதீத பாப்புலாரிட்டியினால் இந்திய எண்ணெய் கழகத்தின் நிர்வாகம் இரண்டு ஆண்டுகள் தன் பணியை நீடித்தது என்கிறார். தான் ஓய்வு பெற்றபின்பும், பொதுத்துறை நிறுவனங்களையும், தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளையும் நல்ல முறையில் நிர்வகிக்கும் திறன் பெறுவது எப்படி என்பது பற்றிய தனக்கிருந்த ஆழமான அனுபவத்தை பயனுள்ள வழியில் செலவழிக்கும் வகையில் ஒரு நிர்வாக ஆலோசகராக மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவதையும் அழகாக விளக்கியிருக்கும் விதம் இன்றும் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு செய்வதறியாது குழம்பி, மன அழுத்தத்திற்கு ஆளாகும் பலருக்கு ஒரு படிப்பினையாக அமையவும் வாய்ப்பாகிறது.
சின்னச் சின்ன நினைவுகள் என்று பல சுவையான வழக்குகளைக் குறித்துள்ளார். லஞ்ச ஊழல் தொடங்கும் விதம் பற்றிய விளக்கமும் அனுபவப்பாடமாக அமைந்திருப்பது இனிமை.
இறுதியாக மனித நிர்வாகத்தில் தாம் கற்ற பாடங்கள் என்ற தலைப்பில், மனிதர்களை நிர்வகிக்கும் கலையைத் தாம் கற்ற விதத்தை கூறும் போது சில சம்பவங்களையும் ஆதாரமாகக் கொடுத்து விளக்கியுள்ள பாங்கு இன்றைய அதிகாரிகளுக்கும் பயன்தர வல்லது என்றாலும் அது மிகையாகாது. திரு கே.ஏ ராஜகோபாலன் அவர்களின் மலரும் நினைவுகள் நல்லதொரு அனுபவப் பாடமாக அமைந்துள்ளது தனிச்சிறப்பு எனலாம்.
காவல்துறையில் தம் குடும்பத்தில் மூன்று தலைமுறை – தந்தை அழகியசிங்கம், தான் மற்றும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான தம்முடைய மகனார் வெங்கடேஷ் ராஜகோபால் ஆகியோரின் புகைப்படங்களுடன், தம்முடைய மற்ற முக்கியமான புகைப்படங்களும் இணைத்து வாசகர்களுக்கு சுவை கூட்டியுள்ளார்கள்.
நிறைவடைந்தது.
- மீளாத பிருந்தாவனம்..!
- குணங்குடியாரின் படைப்புலகமும் பதிப்பு வரலாறும்
- எனக்கு வந்த கடிதம்
- லாஜ்வந்தி (உருது மூலம்: சர்தார் ரஜீந்தர் சிங் பேடி)
- காத்திருப்பு
- என் காவல் சுவடுகள் – புத்தக மதிப்புரை.
- நட்ட ஈடு
- சிறிய பொருள் என்றாலும்…
- நகரமும் நடைபாதையும்
- கம்பனின் காவியம்” இன்றும் என்றும் காலத்தை வென்று வாழும்! ஏன்?”
- மணக்கால் எஸ் ரங்கராஜன் – ஆவணப்படம் வெளியீடு அழைப்பிதழ்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -3
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 21
- முள்வெளி அத்தியாயம் -17
- கல்வியில் அரசியல் -1
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 28) இரவிலும், பகலிலும்
- தாகூரின் கீதப் பாமாலை – 22 எவளோ ஒருத்தி ?
- அறுபது வருடங்களுக்கு முந்திய ஒரு கணம்
- நினைவுகளின் சுவட்டில் (93)
- பொன்னாத்தா அம்படவேயில்ல…
- பிரபஞ்சனின் “ மரி என்கிற ஆட்டுக்குட்டி “ ஒரு மீள் பார்வை
- 100 கிலோ நினைவுகள்
- 2015 ஆண்டில் பரிதி மண்டலம் கடந்து புதுத் தொடுவான் உளவப் போகும் நியூ ஹொரைசன் விண்கப்பல் !
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 34
- வீட்டை விட்டுப் பிரியும் கோவலனும் கண்ணகியும்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று எட்டு
- பில்லா -2 இருத்தலியல்
- உய்குர் இனக்கதைகள் (2)
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-10)
- பஞ்சதந்திரம் தொடர் 52 சமயோசித புத்தியற்ற குயவன்
- இழப்பு
- மதநிந்தனையாளர்கள் என்று பெயர் சூட்டி அப்பாவிகளை கொல்லும் பாகிஸ்தான் கலாச்சாரம்