கல்வியில் அரசியல் -1

This entry is part 15 of 32 in the series 15 ஜூலை 2012

சத்யானந்தன்

பகுதி ஒன்று – இணையான அதிகார மையங்கள்

அரசியல் என்றதும் ஏற்படும் எதிர்மறை எண்ணங்கள் ‘கல்வியில் அரசியல்’ என்றதும் கல்வியிலுமா? என்றெலாம் பரிணமிக்கக் கூடாது. அரசியல் குடும்பம் முதல் ஐநா சபை வரை கூட்டாக மனிதன் வாழும் அல்லது சேரும் எல்லா இடங்களிலும் இருக்கிறது. இருக்கும். எதற்காக ஒரு அரசியல் நடவடிக்கை எடுக்கப் படுகிறது, யாரால் எடுக்கப் படுகிறது என்பது முக்கியம். எதுவானாலும் ஒரு விஷ்யம் அரசியல் ஆக்கப் பட்டதுமே அது பற்றிய சீர்தூக்கிய அணுகுமுறைக்கோ பாரபட்சமற்ற விவாதத்துக்கோ வாய்ப்பின்றிப் போய் விடும்.

கல்வியால் அரசியல் என்பதே தமிழகத்தைப் பொருத்த உண்மை. 1937ல் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள், கட்டாய ஹிந்திக் கல்விக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்றது. இது திராவிடர் கழகத்தால் முன்னெடுத்துச் செல்லப் பட்டது. பின்னாளில் 1963ல் ஹிந்தி ஆட்சி மொழி என்று அறிவிக்கப் பட்ட போது மிகப் பெரிய அளவில் மாணவர் பங்கு பெற்ற போராட்டமாக ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. 1965ல் திரு. லால் பகதூர் ஸாஸ்திரி ஹிந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஹிந்தி ஆங்கிலம் இரண்டுமே ஆட்சி மொழியாக இருக்கும் என்று அறிவித்த பிறகே போராட்டம் நின்றது. ஆனால் அரசுப் பள்ளிகளில் இருந்து ஹிந்தி மறைந்து விட்டது. காங்கிரஸ் மறுபடி ஆட்சிக்கு வராமல் திமுக அதிமுக இரண்டும் மாறி மாறி ஆட்சியைப் பிடிக்க அடி கோலியது ஹிந்தி எதிர்ப்புப் போராட்டமே.

சமீபத்தில் டாக்டர் அம்பேத்கர் பற்றிய கார்ட்டூன் , ஹிந்தி எதிர்ப்பு பற்றிய கார்ட்டூன் ஆகியவை சிபிஎஸ்ஸி பாடத் திட்டத்தில் இருப்பது குறித்து சர்ச்சை எழுந்தது. சிபிஎஸ்ஈ முன்றாம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் ‘ஆஸாத் காஷ்மீர்’ என்று காட்டப் பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு பல்கலைக் கழகப் பாடத் திட்டத்தில் ஆண்டாள் பற்றிய சர்ச்சைக்குரிய சிறுகதை வெளியாகி உள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கபில் ஸிபல் (அமைச்சர் ) மற்றும் ஐஐடி அமைப்புக்களுக்கு இடையே மாணவரைத் தேர்வு செய்யும் நுழைவுத் தேர்வு பற்றி ஒரு நீண்ட இழுபறி நடந்து ஒரு தீர்வு கிடைத்திருப்பதாகத் தகவல். இன்னும் முழுவடிவம் வெளியாகவில்லை.

2011ம் ஆண்டு மத்தியில் செல்வி.ஜெயலலிதா அரசு ஆட்சிக்கு வந்ததும் சமச்சீர் கல்வி பற்றிய பெரிய மோதல் நிகழ்ந்தது. சென்ற அரசு வடிவமைத்த எல்லாப் பாடநூல்களையும் மாற்றி வேறு நூல்கள் அச்சடிக்க வேண்டும் என்று ஜெ முடிவு செய்ய கிட்டத்தட்ட இரண்டும் மாதம் மாணவர் பாடப்புத்தகம் இன்றித் தவித்தனர். கடைசியில் உச்சநீதி மன்றம் உத்தரவிட்ட பிறகே பழைய புத்தகங்களே வினியோகிக்கப் பட்டு பிர்ச்சனை முடிவுக்கு வந்தது.

சமச்சீர் கல்வி விஷயத்தில் ஜெ எதிர் ஏனையர் என்னும் அளவு விஸ்வரூபமான மோதல் நிகழ்ந்த போதுதான் பலருக்கும் தமிழ் நாட்டில் ‘ஸ்டேட் போர்டு’, மெட்ரிகுலேஷன் போர்டு, ஆங்கிலோ இந்தியன் மெட்ரிகுலேஷன் போர்டு என்னும் மூன்று விதமான அமைப்புக்களின் ஒப்புதலில் மூன்று விதமான பள்ளிகள் இயங்குவது தெரிய வந்தது. மூன்று விதமான பாடத் திட்டங்கள் வேறு. 1977 க்கு முன்பு மெட்ராஸ் யுனிவர்ஸிடிக்குக் கீழே தான் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அனைத்தும் இருந்தன. பின்னர் மெட்ரிகுலேஷன் போர்டு என்னும் தனி அமைப்பு உருவாக்கப் பட்டு அவை மெட்ராஸ் யுனிவர்ஸிடியை விட்டு வெளியே வந்தன.

பத்தாம் வகுப்பு வரை மெட்ரிகுலேஷன் பாடத்திட்டம் வேறு ஸ்டேட் போர்டு பாடத்திட்டம் முற்றிலும் வேறு. ஆனால் 11,12 வகுப்புகள் மெட்ரிகுலேஷன் பள்ளியிலேயே இருந்தாலும் அந்த மாணவருக்கான பாடத் திட்டம் ஸ்டேட் போர்டு பாடத் திட்டம் 11,12 வகுப்புக்களுக்கு ஒன்றே.

போர்டு வழி வகைப் படுத்துதல் தவிர மைனாரிட்டி இன்ஸ்டிட்யூஷன்ஸ் என்று சிறுபான்மையினர் சில உரிமைகளுடன் தமது பள்ளியை நடத்த தனி சட்ட திட்டங்கள் உள்ளன. அரசு உதவி பெறும் தனியார் பள்ளி, அரசு உதவி பெறும் மைனாரிட்டி இன்ஸ்ட்டிட்யூஷன்ஸ் என்று பல வகைப் பட்ட பள்ளிகள் உள்ளன. அரசு உதவி பெறும் தனியார் பள்ளி அரசின் கட்டுப்பாட்டுக்கு ஆட்பட்டு நிர்வாகத்தை தானே கவனிக்கும். மைனாரிட்டி நிறுவங்கள் அரசு உதவி பெற்றாலும் பெறா விட்டாலும் சுதந்திரமானவை. ஆர்டீஈ எனப்படும் ‘ரைட் டு எடுகேஷன்’ என்னும் அடிப்படையில் ஏழை மாணவருக்கு இலவசக் கல்வி தரும் கட்டாயம் மைனாரிட்டி நிறுவனங்களுக்குக் கிடையாது.

மைனாரிட்டி நிறுவனங்கள் மீது பல குற்றச்சாட்டுக்களும் அதாவது அவர்கள் மதப் பிரச்சாரம் மற்றும் மத அடிப்படையில் மாணவர் சேர்க்கை செய்கிறார்கள், தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் கேவலப் படுத்தப்படுகிறார்கள் என்பதும் ஓரளவு அடிப்படை உள்ள குற்றச்சாட்டுக்களே. அப்படி நாம் எதிர்மறையாகப் பார்க்கத் துவங்கினால் பல கிராமப் புறங்களில் முதலில் பள்ளி துவங்கியது கிறித்துவ அமைப்புக்களே என்பதையும், பல முஸ்லீம் பெண் குழந்தைகள் முன்னை விட கல்வி பெற்று முன்னேறுகிறார்கள் என்பதையும் சேர்த்துத் தான் பார்க்க வேண்டும். ஒரு சராசரி பெற்றோர் தமது ஊரில் எந்தப் பள்ளி நல்ல மதிப்பெண் உள்ள மாணவரை அதிகம் வெளிக் கொணர்கிறது என்று தான் பார்க்கிறாரே ஒழிய அது மைனாரிட்டியா என்ன மாதிரி அமைப்பு என்றெல்லாம் பார்ப்பதில்லை.

மேற்கண்ட வகைகளையும், அவற்றை நிர்வகிக்கும் அரசாங்க அமைப்புக்களையும் பார்க்கும் போது இணையான அதிகார மையங்கள் இயங்குவது தெளிவாகும். அரசியல் நிர்ணயச் சட்டப்படி கல்வி என்னும் விஷயம் மத்திய மாநில அரசுகள் இரண்டுமே கையிலெடுக்க வழி செய்யும் ‘கன்கர்ரன்ட் லிஸ்ட்’ டின் கீழே வருவது. இதனால் இரண்டு அரசுகளுமே கல்வியில் ஏதேனும் சாதித்துக் காட்ட விரும்புவர். ஆனால் சர்ச்சைகளே அதிகம்.

இந்தி எதிர்ப்பு தமிழகத்தில் எந்த அளவு ஒரு நிரந்தர அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது என்று பார்த்தோம். ஆனால் மத்திய மாநில அரசுகளின் மோதல் போக்கால் தமிழகம் ஒரு பெரிய வாய்ப்பை இழந்தது எத்தனை பேருக்குத் தெரியும்? நவோதயா என்று மாவட்டத்துக்கு ஒரு பள்ளியைத் துவக்கி அதை மத்திய அரசே நடத்தும் சிபிஎஸ்ஈ பாடத்திட்டத்தில் என்ற திட்டம் திரு ராஜீவ் காந்தியின் ஆட்சி காலத்தில் துவங்கப் பட்டது. அது ஹிந்தி திணிப்பாகி விடும் என்று சொல்லி அப்போதைய மாநில அரசு அந்த வாய்ப்பை நழுவ விட்டது, மற்ற தென் மாநிலங்கள் பயனடைந்தன. கேந்திரிய வித்யாலயா என்னும் மத்திய அரசு ஊழியருக்கான பள்ளிகள் தமிழகத்தில் ஏற்கனவே இருக்கத் தான் செய்கின்றன. நவோதயா பள்ளிகள் பொது மக்களுக்கு இலவச சிபிஎஸ்ஈ கல்வி தரும் கேந்திரிய வித்யாலயா போன்றவையே. நவோதயா அரசியல் ஆதாயத்துக்காக கைவிடப்பட்ட ஒரு நல்ல திட்டம்.

பள்ளி அளவில் நிகழும் அரசியலைப் பார்த்தோம். பல்கலைக்கழகங்கள் யாவுமே மத்திய அரசின் யூஜீஸீ யின் கட்டுப்பாட்டில் வருபவை. அங்கே உள்ள அரசியலை அடுத்த பகுதியில் பார்ப்போம் (தொடரும்)

Series Navigationமுள்வெளி அத்தியாயம் -17ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 28) இரவிலும், பகலிலும்
author

சத்யானந்தன்

Similar Posts

4 Comments

  1. Avatar
    Ramki says:

    சத்யாநந்தன்,
    எந்த அடிப்படையில் நவோதயா நல்ல திட்டம் என்கிறீர்கள்? மைய அரசு நிதி கிடைத்திருக்கும் என்பதினாலா? அல்லது தரமான கல்வி என்பதினாலா?
    ராம்கி

  2. Avatar
    Sathyanandhan says:

    அன்பு ராம்கி அவர்களுக்கு, காரணங்கள் இவை: ஒன்று சிபிஎஸ்இ பாடத்திட்டம் தமிழக ஸ்டேட் போர்டு பாடத் திட்டத்தை விட மேலானது. நீண்ட வருங்காலக் கண்ணோட்டத்தில் உகந்தது. மத்திய அரசு செலவில் தரமான பள்ளி நம் ஊர் பிள்ளைகளுக்குக் கிடைக்கும். சிபிஎஸ்இ மேல் சாதி, வசதியானவர், மத்திய அரசு ஊழியர் என்னும் ஏதேனும் ஒரு பின்னணி உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு மட்டுமே கிடைக்கிறது. நவோதயாவில் எல்லாக் குழந்தைகளுக்கும் கிடைக்கும். ஐஐடி போன்ற நிறுவனங்களில் படிக்க (நுழைவுத் தேர்வில் வெல்லவும்) சிபிஎஸ்இ படிப்பு மிகவும் அவசியம். அரசியல் காரணங்களுக்காக நல்ல வாய்ப்பு மறுக்கப் பட்டதாகவே கருதுகிறேன். அன்பு சத்யானந்தன்.

  3. Avatar
    punai peyaril says:

    சிபிஎஸ்இ ஒரு மூன்றாந்தர பாட திட்டம் என்பதே எனது அனுபவம். பிராக்டிகல் என்பது 10% கூட கிடையாது. வினித் ஜோஷி, கபில்சிபில் இருவரும் போட்டு மாணவர்களை எலிகள் போன்று சோதனை செய்யுமிடமே அத் திட்டம். இருப்பதில் ஐஜிசிஎஸி நன்று

  4. Avatar
    Sathyanandhan says:

    தங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. மூன்றாம் பிரிவான Commerce ஒப்பிடும் அளவு இருக்கிறது. Science and Maths பிரிவுகளில் அவ்வாறில்லை. ஆசிரியர் அல்லது கல்வியாளர் இன்னும் துல்லியமான ஒப்பிடலைத் தர இயலும். நன்றி. சத்யானந்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *