பொன்னாத்தா அம்படவேயில்ல…

This entry is part 20 of 32 in the series 15 ஜூலை 2012

சிறுகதை ஜாசின் ஏ.தேவராஜன்

12.3.1970 மத்தியானம் ரெண்டு மணிக்கப்புறம்

காலம்பரவே எஸ்டேட்டு புள்ளைங்க ஸ்கூலுக்குக் களம்பிக்கிட்டிருத்திச்சிங்க. ஸ்கூலுன்னா கெரவல் கல்லு சடக்குல கித்தா காட்டு வளியா நாலு மைலு தாண்டிதான் பக்கத்து எஸ்டேட்டுக்குப் போணும் வரணும்.அது பெரிய எஸ்டேட்டு.எடையில அசாப்புக் கொட்டா, அதான் குப்ப எரிக்கிற கூண்டு. கூண்டுக்கு மேலா போங்காவா பெரிய ஓட்ட. அதுக்குள்ளாறதான் குப்பைய கொட்டுவாரு பரமேசு தாத்தா. அவரு ஒரு வயசான தனி ஆளு. அவருக்குன்னு எளுதி வச்ச மாரி இந்தியாவிலர்ந்து நாப்பது வருசத்துக்கு முன்னாடி… வந்தன்னைலிருந்து கூட்டுறதும் எரிக்கிறதும் எல்லாமே அவருதான். காலைல ஏலு மணிக்கி வரிசையா நாலு லயன பொறுக்க ஆரம்பிச்சாருனா பதினொன்னு பன்னண்டு மணிக்கெல்லாம் உருள வண்டியில தள்ளிக்கிட்டுப் போயி அசாப்பு கொட்டாயில கொட்டி எரிச்சிடுவாரு. கொளுத்துற வெயில்ல குபீர்னு எரியும். அதோட அவரு வேல முடிஞ்சிடுச்சின்னு வச்சிக்குவொமெ. மொட்ட வெயிலு அடிக்கறப்ப அங்கதான் சமயத்துல ஸ்கூலு வுட்டு வர்ற புள்ளைங்க ஓய்வெடுக்குங்க. இல்லாக்காட்டி அசாப்புக் கொட்டா பக்கத்துல ஓடுற பாசாவுல எறங்கி வெளையாடிக்கிட்டுக் களிமண்ண எடுத்துக்கிட்ட அப்புறமாதான் வூட்டுக்கே வருங்க.

அன்னைக்கி அப்படித்தான். காளிமுத்துக்கு அன்னைக்கின்னு பாசாவுல எறங்குல. அவனுக்கு மனசு நல்லார்ந்தா எறங்குவான். இல்லாக்காட்டி அசாப்பு கொட்டாய சுத்தி சுத்தி வருவான். கையில தப்பித் தவறி காசு கீசு எதாவது கெடைக்கும்ல, அதான்.சமயத்துல அங்க கெடக்குற கரிக்கொட்டய எடுத்து சொவத்துல படம் வரிவான். அவனுக்கு படம் வரிர்தன்னா ரொம்ப புடிக்கும். கோவிந்தசாமி வாத்தியாரு அடிக்கடி சொல்லுவாரு, ஆறாம்ப்புலேயே அளகா படம் வரிறவன் காளிமுத்துதான்னு. அதனால காளிக்கு எஸ்டேட்டுலயும் நல்ல பேரு. மாசத்துக்கு ஒருவாட்டி சம்பளம் போட்டோன ராத்திரி எஸ்டேட்டுல படம் போடுவாங்க. படத்தோட பேரு, யாரல்லாம் நடிக்கிறாங்கிறத, எத்தினி மணிக்கி படம் ஓடும்ங்கிறத எல்லாம் காளிமுத்துதான் எலுதுவான். இவனதான் நாலு மொலம் சதுர பலகைல எலுதி மாட்டச் சொல்லுவாரு யூனியன் கமிட்டி தலைவரு பத்துமல.. அவனோட கையெலுத்து குண்டு குண்டா பெருமாலு மண்டரு மாரி இருக்கும். கையெலுத்து நல்லாருந்தா என்னா, இன்னிக்கு தல எலுத்து நல்லாலையெ. எந்த மயிராண்டி எலுதி வச்சான்னு இவன் மனசுக்குள்ள செம்ம கடுப்பு; பொலம்பிக்கிட்டிருந்தான். கொஞ்ச நேரம் யோசிச்சிட்ட ஒடனெ கீல கெடந்த பேப்பர பாசாவுல நனைச்சி சொவத்த தொடைச்சான். அது சுமாரா அலிஞ்சிச்சி. திரும்பவும் அலிச்சான். எவ்ளதான் அலிச்சாலும் மனசுல நச்சுனு இருக்கெ. நல்ல வேள, மத்தவங்க யாரும் பாக்கல. இத போயி மொதல்ல அம்மாக்கிட்ட சொல்லணும். சொன்னா அம்மா மனசு சங்கடப்படும்னு இவனுக்கெங்கெ தெரியும்?

மறுநாளு 23 ஆம் நெம்பரு வெட்டுல காலலெ எட்டு மணி யிருக்கும்…

“காளி , பாத்து காயம் படாம வெட்டுடா. ரொம்பவும் லேசா வெட்டிடாதடா. பால் கொரஞ்சி போன பெரிய கெரானி கேப்பாரு தெரியுமா ?”

பொன்னாத்தா ஒரு நெரையிலயும் காளிமுத்து இன்னொரு நெரையலயும் மரம் வெட்டிக்கிட்டுப் போனாங்க. சனி நாயிரு வந்தாதான் பொன்னாத்தாவுக்கு கொஞ்சம் சொம கொரஞ்ச மாரியிருக்கும். இப்ப பையனுக்கு மரம் வெட்ட தெரியுரதனால பத்து மணிக்கி வெட்டி பாலெடுத்து ஸ்டோருல கொண்டு போயி ஊத்தி அப்புறம் தோம்ப கலுவி பன்னண்டு மணிக்கெல்லாம் வூட்டுக்கு போகமுடியிது. காளிமுத்துக்கிருக்கிற அக்கர அவங்கப்பனுக்கில்லியெ. மணி ஒம்போதாச்சி .இன்னிக்கும் வேலக்கி வரல. பொன்னாத்தாவுக்கு அவ புருஷன் மேல வெறுப்பு வர ஆரம்பிச்சிச்சி. என்னா பண்றது ? வாங்கி வந்த வரம் அப்பிடி!

“டே காளி பாத்து வெட்டிட்டுப் போடா. அங்க பாரு…பாலு சரியா பீலியில ஒலுகல. மங்க நேரா வெய்யி… மருந்து பூசிருக்கானுங்க… பாலு நல்லா வடியும். அடியில கம்பிய கட்டி இன்னொரு மங்கு வையு”

“அம்மா ! பெரிய கெராணி வந்துக்கிட்டிருக்காரும்மா !”

அட கடவுளெ… இன்னிக்குமா… டே நீ என்னா பண்ற… பேசாம உளிய மீனாச் செடியில மறச்சி வச்சிட்டு நல்ல புள்ளயாட்டம் மங்கு மட்டும் தொடச்சி குப்புற வச்சிட்டுத் தூரமா போயிடு. சின்ன புள்ளங்க மரம் வெட்டக்கூடாதுன்னு எஸ்டேட்டுல சட்டம் இருக்கு.

“யேம்மா? படிக்கிற புள்ளைங்க மரம் வெட்டுறது தப்பா. நாங்கல்லாம் நல்லா படிச்சி நல்லா வரணும்னு நெனைக்கிறாங்களோ!”

“அட போடா நீ வேற. இவங்களுக்கெல்லாம் நம்ம புள்ளைங்கெ ஸ்கூலுக்கே போவக்கூடாது. எங்க காலம் முடிஞ்சப்புறம்,பின்னெ யாருதான் மரம் வெட்டுறது? நாம படிச்சி அறிவாலியாயிட்டா!?”

“அப்புறம் யேம்மா நான் மரம் வெட்டக்கூடாதுன்றாங்க !?”

“மரத்துல காயம்பட்டா பாலு வடியாதெ. மரத்துல முண்டு முடிச்சி உலுந்துச்சுன்னா மரம் சீக்கிரம் செத்துப் போயிடுண்டா. இன்னும் பத்துப் பதினஞ்சு வருசத்துக்காவது இந்த மரங்க தாங்கணும்.அதான். டே எதுக்கும் நீ எங்கையாவது மறைஞ்சி போயிட்டு பத்து நிமிசம் கலிச்சி வாடா.”

செகப்பு பென்சில்ல மரத்துல கோடு போட்டுக்கிட்டு ஒவ்வொரு மரமா பாத்துக்கிட்டுப் பெரிய கிராணி வந்து சேர்ந்தாரு. ஆளு ஜம்முன்னு கிட்டத்தட்ட வங்காளி மாரி இருப்பாரு. கனமான சாரீரம்,

“பொன்னாத்தா, அந்த நெரைய யாரு வெட்டுனா ?”

பொன்னாத்தா எகிறி பார்த்தா. ஆளுயரத்துக்கு மீனாச்செடி வளந்ததனால தெளிவா தெரியல. கிராணி சொல்றது அநேகமா காளிமுத்து வெட்டிக்கிட்டுப் போன மூனாவது நெரையாதான் இருக்கும்.

“நாந்தான் வெட்டுனென் ஐயா…”

“எங்கிட்டியே பொய் சொல்றியா?”

“மரத்துல காயம் கீயம் பட்டுருச்சுங்களா ஐயா?”

“கம்பிய கட்ட சொன்னதுக்கு மரத்துல அடிச்சி வச்சிருக்கே.”

பொன்னாத்தா மூக்கு நுனியில வேர்வத் துளி தண்ணியா கோடு போட்டு சொட்டுன்னு மண்ணுல உதிர்ந்திச்சி. தலயில கட்டுன துண்ட அப்படியே மூஞ்சிய தொடச்சப்போ பொன்னாத்தாவோட சட்ட தொப்பையா நனஞ்ச மாரி தெரிஞ்சிச்சி.

பெரிய கிராணி பொன்னாத்தாக்கிட்டருந்து என்னா பதில் வரும்னு காத்துக்கிட்டிருக்கிற சாக்குல அவள உத்துப் பாத்துக்கிட்டிருந்தாரு.

“ஸ்பிரிங் கம்பி ஸ்டோருல இல்லன்னு மண்டுரு சொன்னாரு. வேற வலி தெரியில..அதான்… கொஞ்ச நாளிக்கி…”

“கொஞ்ச நாளிக்கின்னா… புருசன் வர்ற வரைக்கும் நான் ஒன்னோட ஒடம்புல கொஞ்ச நாளு ஆணியடிச்சிக்கிட்டு இருக்கவா…?”

பெரிய கிராணி திரும்பவும் பொன்னாத்தாவோட காது பக்கம் வந்து வேற மாரி மொள்ளமா அதையே சொன்னாரு. பொன்னாத்தா தலய தூக்கி நேருக்கு நேர் மொறச்சி பாத்தாப்புல. அது கிராணிக்கு வசதியாப் போச்சு.

“சும்மா பத்தினி மாரி வேசம் போடாத பொன்னாத்தா. நீ சம்மதிச்சின்னா என்னோட பங்களாவுல ஒனக்கொரு வேல போட்டுத் தரென். சம்பளம்… துணி மணின்னு எல்லாமெ தருவென். புள்ளைங்கள டவுன்ல போய்ப் படிக்க வைக்க நா ஒதவி செய்றென்.வரியா ஆணியடிக்கிறென்.”

பொன்னாத்தா கையிலயிருந்த உளிய கிராணி மூஞ்சிக்கி நேரா தூக்கிக் காமிச்சா. கிராணி உடுறதா இல்ல. நமட்டுச் சிரிப்பு சிரிச்சிக்கிட்டு ஒரு கைய இடுப்பலயும் இன்னொரு கைய மரத்து மேலயும் வச்சுக்க பொன்னாத்தா நடுவுல மாட்டிக்கிட்டு நகர முடியாம தவிச்சா.

“ரொம்ப திமிராத பொன்னாத்தா. நீ தெரிஞ்சிது அவ்ளதான். ஊரு ஒலகுத்துல நடக்காததயா சொல்றென். வெள்ளக்காரன் தொர பங்களாவ்ல எல்லாம் ஒங்க சனம் நொலய முடியுமா சொல்லு !”

பொன்னாத்தா வாயில பச்ச பச்சயா வந்துடுக்கிட்டிருந்திச்சி. அவளை நம்பி ஊட்டுல நாலு புள்ளைங்க, முருவம்மா கெலவி அல்லாரும் இருக்காங்க. அவங்கலுக்கெல்லாம் யாருதான் ஒல வெக்கிறது ? இதெல்லாம் மனசுல படமா ஓடுனப்ப கண்ணுல மல மலயா கண்ணீரு பெருக்கெடுத்துச்சி. ஆனா வரல, அதான் வறண்டு போச்செ. எப்படி வரும் ?

“ஒம்புருசன் அதான் முனியாண்டியப் பத்தி சொல்லவா…ம் ? அவன் என்னா பண்ணுனான் தெரியுமா…? என் வீட்டுல வேல செய்யுறாளே குப்புசாமி மகெ கன்னியம்மா… அவளெ… ! சொல்லவா… ம் ?!”

பொன்னாத்தா அப்படியே மரத்துல சரிஞ்சி அடி வேரு பக்கம் தொப்புன்னு ஒக்காந்தா. உளி ஒரு பக்கம் உல குட்டிச் சாக்கு ஒரு பக்கம் உல , அதுல உள்ள கட்டிப் பாலு அவ மனசு மாரி உருண்டு செதறிப் போனிச்சி.

பெரிய கிராணி அந்த எடத்த விட்டுக் காலியானதுக்கப்புறம் ,அம்மாவுக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு மேமூச்சு கீமுச்சு வாங்க காளிமுத்து ஓடோடி வந்தான். அம்மாவப் புடிச்சி உலுக்கி பெரிய கிராணி என்னா சொன்னார்னு தொல்லப் படுத்துனான். பொன்னாத்தா ஒன்னும் பாதியா சொன்னப்புறம் அவனுக்கு அசாப்பு கொட்டாயுல நேத்துப் படிச்ச கரிக்கட்ட எலுத்து சடார்னு ஞாபகத்துக்கு வந்துச்சு. ‘முனியாண்டி கன்னியம்மாவ டோக்கு போட்டார்’ னு அம்மாக்கிட்ட எப்படிச் சொல்றதுன்னு சொல்ல முடியாம கடசியா அது உண்மயாதாம்மா இருக்கும். சும்மானாச்சிக்கும் யாரும்மா எலுதுவாங்க ? நானும் அசாப்பு கொட்டாயுல படிச்செம்மா. மனசு கஷ்டமா யிருந்திச்சி… அத நான் அலிச்சிட்டேன்னான்.

13.3.1970 சாய்ந்தரம் மூனுலேர்ந்து அஞ்சு மணிக்கி

முருவம்மா கெலவி வாசப்படியாட்டம் மொறப்பா நின்னுட்டிருந்தா.

“தா வரான் பாரு மவராசன். ஏன்டா எடுபட்ட பன்டி ராஸ்கலு.மசுரு புடுங்கவா இவ்ளோ மொதுவா வரெ? போடா … ஊட்டுள்ளுக்குப் போயி ஒம்பொஞ்சாதிய பாரு. அறுத்துப் போட்ட சாவ மாரி சரிஞ்சி கெடக்குறா..”

“அதுக்குள்ளாற அல்லாரும் கூடிட்டானுவளா…? என்னா கடா வெட்டி சோறா போட்றோம் ? போங்கடா… போயி வேலய பாருங்கடா ! வந்துட்டானுங்க பூல நீட்டிக்கிட்டு…”

“சொல்றன்ல..! வக்காளி வந்தென்னா பொளந்துடுவென் படுவா ராஸ்கலு. போங்கடா போயி ஒம்பொட்டாட்டிய பாருங்கடா போங்கடா… எனக்கு முந்தான விரிச்சவலுக்கு என்னா செய்யனும்னு எனக்குத் தெரியுன்டா. ஏ கெலவி இதுக்கு என்னா ஆச்சி… மூஞ்சி யேன் வேத்துக் கெடக்கு…”

“தண்ணி தெளிச்சி வச்சிருக்கோம்டா.”

ஆசுபித்திரிக்கி கொண்டு போலயான்னு முனியாண்டி தங்கச்சிய பாத்துக் கேட்டான். தங்கச்சி பதில் சொல்லல.அண்ணன் மேல அவ்ள வெறுப்பு ! பொளப்பத்த நாயி மேல எ‎ன்ன கரிசனெ வேண்டிக் கெடக்கு?

“கிலிஞ்சிது போ கிருஷ்னகிரி… வாயில செவ செவயா வருதுடா. ஊரு மேயுற நாயிக்கி ஒம்போது சிருக்கியாம்…”

“கேக்குறன்ல… ஒழுங்கா சொல்லத் தெரியாதா ?”

“என்னா அந்த டாக்டருயா பாக்கோணும். அதுக்கு இவ செத்தே போயிரலாம் போல. டே முனியாண்டி பேசாம மூடிக்கிட்டு இருடா… பேச வந்துட்டான் பேச, பொளப்பத்தவன். அறுக்க மாட்டாதவனுக்கு அம்பத்தெட்டு அருவாளாம். இவ போயி இவனுக்கு வாக்கப்பட்டாள… அதச் சொல்லு, அப்பன் ஒரு பக்கம் கம்னாட்டி ஆத்தா ஒரு பக்கம் ஓடுகாலி…வவுத்துல பாடா அடிச்சிக்கிட்டு சொன்னெனெ… அது செரி இவனச் சொல்லு. அதுக்கின்னு சீமையில போயா கொண்டு வர முடியும்..? கழுதெக்கு எங்கெ புத்தி போனுச்சுங்கறென்!?

பாட்டி வெத்தலையைக் கொதப்பி ரெண்டு வெரல நொழ நொழ ஒதட்டுல வச்சி அல்லூருல பீச்சியடிச்சா. அது பசக்கன்னு அல்லூர் கங்குல ஒட்டிக்கிச்சி. பக்கத்து வீட்டு மாரியம்மாவுக்கு பொத்துக்கிட்டு வந்து என்னவோ கரிச்சிக் கொட்டிக் கிட்டு கடசி கடசியா ,யென் கூதில துப்பு கெழவின்னு மொறச்சிக்கிட்டுப் போனா. அப்புறம் வாளில தண்ணிய கொண்டாந்து அல்லூருல ஊத்துனா என்னத்தயோ மொணகிக்கிட்டு.

“இப்பொ மணி யென்னாவது … நாலஞ்சி இருக்குமா?”

“யேன்டா இன்னொரு மொடா தண்ணி வேணுமா… நெட்டுனது போதலயாக்கும்? நேத்திக்குத்தான் சம்பளம் போட்டான். நாளிக்கே முடிச்சிடுவெ. எங்கிட்ட ஒத்தக் காசு இல்ல சொல்லிப்புட்டென். இந்தா கெலவி, நீயும் கொஞ்சங் குடின்னு அம்மாவுக்கு ஒரு மொடக்கு குடுக்க வக்கிருக்கா பாரு… ஒங்கப்பென் இருக்கும்போது வாரத்துல மூனு நாளு குடுப்பான்டா. நீயும் இருக்கியெ… தண்டெக் களுதெ…!”

கெலவி இன்னொரு மொற எச்சிய துப்புனா. திரும்பவும் குருவி பலத்த நசுக்கி வச்ச மாரி செகப்பா ஆயிடுச்சி அல்லூரு. பக்கத்து ஊட்டுக்காரி இடுப்புல ஒரு கையும் இன்னொரு கையில கட்ட வெளக்கமாத்தையும் தூக்கி காமிச்சதுதான் பாரு… கெலவிக்கி வந்துச்சி பாரு கோவம், மொள்ள எந்திரிச்சி,

“என்னடி கொளுப்பெடுத்துடுச்சா… வந்தேன்னா… கிலிச்சிருவென் கிலிச்சி… தேவடியா சிருக்கி… மொறைக்கிறாளாம்ல மொறப்பு… என்னடி நிமிட்டி காமிக்கிறெ… நான் காமிக்கவா…நாற வச்சுருவென்!எங்கிட்ட வச்சிக்காத சொல்லிப்புட்டேன். “

“சும்மா மூடிக்கிட்டு போ கெலவி. ஒன்னல்லாம் வெலக்குமாத்தால நாலு சாத்து சாத்தாம வுட மாட்டென். அவரு வருட்டும். நல்லா வெச்சி வுட்றென் வச்சி. இரு கெலவி.”

“அடச்சி போடி பொட்ட களுத… மசுரு மொளைச்சோன அருப்பெடுத்து திரியுதுங்க. ஒங்கலல்லாம் நல்லா நொங்குனம்டி.” கை வெரல மடக்கி என்னமோ கொரங்கு மாரி செஞ்சி காமிச்சா கெலவி.

அதுக்குள்ளாற வாண்டுங்க எல்லாம் கையக் கட்டிக்கிட்டு சுத்தி நிக்க ஆரம்பிச்சிடுச்சிங்க.

“டே வாங்கடா ! என்னா பயாஸ்கோப்பு படமா காட்டுறேன். இந்தா எம் மயிர புடுங்கங்கடா.”

கெலவி சடார்னு அலுக்குப் பொடவைய இடுப்பு வரைக்கும் தூக்கி காமிச்சி அதயே திரும்ப திரும்ப சொன்னா… பக்கத்து வூட்டுக்காரிக்கி சகிக்கல. கண்ண மூடிக்கிட்டு வூட்டுக்குள்ள போயிட்டா. பசங்களுக்கெல்லாம் ஒரே சிரிப்பு. அவனுங்களுக்கு அதான் வேணும் போலுக்கு. மாசத்துல எப்படியும் ரென்டு வாட்டியாச்சும் கெலவி காமிச்சிருவா செம்பட்ட மசுரெ. பசங்க கும்பலா பாத்துருவானுவ. இனி எப்பவோன்னு ஏக்கமா போவானுவ.

“பொன்னாத்தா எந்திரிடி… நா மன்னிப்பு கேட்டுக்கிறென்டி… சத்தியமா ஒங்கம்மா சாவா நா தண்ணிய தொட மாட்டேன்டி. ஒனக்குத் தெரியுமில்ல… இந்த முனியாண்டி சொன்ன வாக்க தவற மாட்டான்னு. எந்திரி பொன்னாத்தா… இங்க பாரு காளி, ராமன், பெரியசாமி, செகப்பி எல்லாரும் காலுமாட்டாண்ட நிக்குறாங்க… நம்ம புள்ளங்கிடி… கண்ண முளிச்சி பாரு.”

முனியாண்டி வாயிலேர்ந்து எச்சியும் சாராயமும் பொன்னாத்தா மூஞ்சில தெரிச்சிச்சி. பச்ச தண்ணிக்கு தெளியாதவ இந்த எச்சிக்கி தெளிஞ்சிட்டா.

செத்த நேரங் கலிச்சி பொன்னாத்தா கண்ண முலிச்சி சம்மணம் போட்டு சொவருல சாஞ்சி ஒக்காந்தா. தலமயிரு கம்பி புருஸ் மாரி கலஞ்சி கெடந்துச்சி. பொன்னாத்தா புள்ளங்கள வாரி அணைச்சிக்கிட்டா. மறுபடியும் அழுவ முனியாண்டி ஒரேயிதா சலிச்சிக்கிட்டான்.

“அதான் சொல்லிட்டென்ல. வுட்டுறவன்டி… போன மாசம் குடிய நிப்பாட்டுனனா இல்லையா நீயெ சொல்லு… ஒன் தாலி மேல சத்தியம் பண்ணுனெனெ பொன்னாத்தா… மறந்துட்டியா…”

பொன்னாத்தா கண்ணுல நெருப்பு எரிஞ்சிச்சி… முனியாண்டி புரிஞ்சிக்கிட்டான்.

“இல்ல பொன்னாத்தா … நா வாணான்னுதான் சொன்னென்… பாலன் கிராணிதான் புது தண்ணின்னு ஊத்திக் குடுத்தாரு… சத்தியமா வெள்ளச்சாமி,மருதன் கிட்டெல்லாம் கேட்டுப் பாரென். அவனுங்களும் குடிச்சானுங்க… இனிமெ நா தண்ணி பக்கம் தல வச்சி படுக்க மாட்டென்டி.”

அன்னைக்கி ராத்திரி எட்டு மணிக்கப்புறமா

ரொம்ப நல்ல புள்ளையாட்டம் முனியாண்டி சீக்கிரமாவே கெணத்துப் பக்கம் குளிக்கப் போனான். அங்கதான் சாயந்தரம் ஊட்டு வேலயெல்லாம் முடிச்சப்புறம் பொம்பளைங்க ஆம்பிளைங்கெல்லாம் குளிக்கப் போவாங்க. ஆம்பிள பொம்பள குளிக்கிறதுக்கு ஒரே கெணருதான் ஆனா நடுவுல ஒரு தடுப்பு இருக்கும். பொம்பளைங்க ஒலுங்காதான் குளிப்பாங்க. இன்னிக்கு கெணத்துல வேற ஆளு யிருக்கமாட்டாங்களா… அதனால முனியாண்டி அவுத்துப் போட்டுதான் குளிப்பாரு. அப்படி குளிக்கும்போது வேணும்னெ சில பொடியனுங்க ஒலிஞ்சி நின்னு அவரு மேலயும் கீலயும் ஆட்டுறத வேடிக்க பாப்பானுங்க. பச்சநாட்டான் வாலப் பலம் மாரி மொத்தமா நீட்டா இருக்கும். தப்பித் தவறி சமயத்துல பொம்பள புள்ளைங்களும் தெரியாத்தனமா பாத்துறதுண்டு. விமலாக்கா, கன்னியம்மாக்கா, பொன்னியக்கா இவங்கல்லாம் பாத்துருக்காங்கலாம்.அதப் பாத்துக்கிட்டு இவனுங்கலும் கக்கூஸ்ல ஆட்டிப் பாப்பாங்க. ஒன்னுமெ வரமாட்டுங்கதென்னு பொலம்புவானுங்க.

இன்னிக்கி கையில காசு பொலங்கனுதானல, அதான் பொன்னாத்தா சம்பளக் காச எடுத்துக்கிட்டு மைனர் மதிரி சட்ட சிலுவாரெல்லாம் போட்டுக்கிட்டு டவுனுக்குப் போயி பெரிய புங்குஸ்ல பன்டி சூப்பு , ஆரேலு பெரட்டா ரொட்டி அப்படியெ பொன்னாத்தாவுக்கு ஒரு கைலியும் வாங்கிட்டு வந்தாரு முனியாண்டி. இதுக்கு முன்னாடி இப்படி வாங்கியாந்ததில்ல. சம்பளக் காசு மட்டுமில்ல. வேற ஏதோ பொலங்குது. எல்லாத்தையும் வாங்கியாந்து ஊட்டுல தொறந்து வச்சோன்ன மொலோர்னு மொச்சிதுங்க புள்ளைங்க. சண்ட போட்டுக்கிட்டே உரிஞ்சி உரிஞ்சி பன்டி சூப்ப குடிச்சிச்சிங்க.

பொன்னாத்தா அது வரைக்கும் மருந்துக்கும் வாய தொறக்கவேயில்ல. முனியாண்டிக்கும் என்ன காரணம்னு புரியல. ஏதாவது கேக்கப் போயி எரிஞ்சி உலுந்தான்னா… அதான் குத்துக் கல்லு மாரி பேசாமயெ இருந்தா.

“ஏ கெலவி இன்னிக்கி ஊட்டுல ஒன்னும் ஆக்க வேண்டா. பொன்னாத்தாவுக்கு இத போட்டுக் குடுத்து தின்னச் சொல்லு புரியுதா…? நான் வர ராத்திரியாகும்.”

“டே முனியாண்டி …செத்த நில்லண்டா… எனக்கு சம்சு வாங்கியாரச் சோன்னேனே…வாங்குனியா…கேக்கிறேன்லெ..!”

முனியாண்டி ரொம்ப தெலிவா இருந்ததால பாட்டி மரியாதயா பேசுனா.
“டே… நில்லேண்டா… எங்கடா போர… பொன்னாத்தாவ உட்டுட்டுப் போயிடாதடா… ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிடப் போவுதுடா…”

“பெரிய கெராணிய டவுன்ல பாத்தேன் கெலவி… வரச் சொன்னாரு… நான் போயாகணும். சும்மா தொனதொனன்னு பேசி கடுப்ப களப்பாத… வரும்போது கா போத்த சீனன் சம்சு வாங்கியாறென். போதுமா ! ஆள உடு இப்ப!”

முனியாண்டி பேசுனது பொன்னாத்தா காதுல நல்லா உலுந்துச்சி.

ராத்திரி ஒம்போது ஆச்சி. முனியாண்டி இன்னும் ஊட்டுக்கு வரல. புள்ளைங்கெல்லாம் கொசுக்கடியோடயோ கொறட்ட உட ஆரம்பிச்சிருச்சிங்க. கெலவி இன்னும் குறுக்க மறுக்க ஒலாத்திக்கிட்டுதான் இருந்தா. அவளுக்கு முனியாண்டிய விட அவன் வாங்கியார்ற சீனன் சம்சு மேலதான் குறி.

“யே… பொன்னாத்தா. போயி முனியாண்டிய கூட்டியா… அங்கெயெ டேரா போட்டுர்ற போறான். போ… போயி கையோட இலுத்து வா. கெலவி பொன்னாத்தாவ உசுப்பிக்கிட்டேயிருந்தா.”

எஸ்டேட்டுல ஒரு குருவி குஞ்சி சத்தமில்லாம வெறிச்சோடிக் கெடந்துச்சி. பொன்னாத்தா ஒன்னு மேல ஒன்னா படுத்துக் கெடக்குற புளைங்கள நல்லா பாத்துட்டு அவங்க தலய கோதி விட்டுட்டு கதவ பூட்டிட்டு கெளம்புனா.

ராத்திரி சமாச்சாரம்

பெரிய கெராணி பங்களான்ட நின்னு எல்லாத்தையும் பாத்துட்டா பொன்னாத்தா. பெரிய கெராணிக்கு பொண்டாட்டி புள்ளைங்க எங்கெயோ பகாங்குல இருக்காங்கலாம். அவங்கலுக்கெல்லாம் எஸ்டேட்டு ஒத்துவராதாம்னு சொன்னதுகூட பரவால. ஆனா… மெத்த நாக்காலில ஜம்முன்னு ஒக்காந்துக்கிட்டு கைலிய நலுவ வச்சிக்கிட்டு வேடிக்க பாத்தாரு… எத… கன்னியம்மாவ குனிய வச்சி முனியாண்டி அவ பின்னாடி நின்னுக்கிட்டு… சே ! கன்றாவி..கன்றாவி…!! பொன்னாத்தாவுக்கு காளி சாமி ஏறிருச்சி… ரெண்டுல ஒன்னு நடக்குறதே சரின்னு நேரா உள்ளுக்கே போயிட்டா!

பெரிய கெராணி மரக்கட்ட மாரி கையில விஸ்கி போத்தலோட,
“பாரு பொன்னாத்தா… நான் சொன்னென் நம்பலல்ல. நீயெ ஒங்கண்ணால பாரு”ன்னு இங்கிலீஸ்ல என்னமோ சொன்னாரு கருமாந்தரம். பொன்னாத்தா வந்ததுகூட அந்த ரெண்டு கலுதைக்கும் தெரியல. அந்த அளவுக்கு முனியாண்டியும் கன்னியம்மாவும் கண்ண மூடிக்கிட்டு தரையில கட்டிப் பொரண்டுக்கிட்டிருந்திச்சிங்க.

பொன்னாத்தா ஊரே கேக்குற மாரி ஓ…ன்னு அலுதா… வெலியில நாய்க்கு மட்டுந்தான் காது கேட்டுச்சு. அதுகூட பதிலுக்கு கொலைச்சிச்சி. இந்த ஜனங்க…? அவங்கல கொற சொல்லி என்ன ஆகப் போவுது… விடியக் காலைல பெரட்டுக்கு கெலம்பனும்… எல்லாம் யென் தலவிதி…தலவிதி… தலவிதி.. பாடா அடிச்சிக்கிட்டா!

வாடி பொன்னாத்தா… கன்னியம்மா கன்னியம்மாதான்டி… வெடலக் குட்டிடி… இவதாண்டி எனக்கு…முனியான்டி வாயில வந்ததெல்லாம் ஒளறுனான்.

இனி பேசி ஆகப்போறது ஒன்னுமில்லன்னு அப்பவே ஒரு முடிவெடுத்தா பொன்னாத்தா.

மறுநாள் காலைல…

ஜனங்க அல்லாரும் பொன்னாத்தாவக் காணாம பதறிப் போனாங்க. அம்மோனியா குடிச்சிட்டாளோ !? யூனியன் தலவரு காலைல சின்ன கமிட்டி மீட்டிங் போட்டு பரமேசு தாத்தா இன்னும் கொஞ்சம் வெட்டியானுங்கள காடு மேடெல்லாம் அலசிப் பாக்கச் சொன்னாரு. கொளத்துப் பக்கமும் தேடியாச்சி. பொன்னாத்தா கடசி வரைக்கும் கண்ணுல அம்படவேயில்ல. புள்ளைங்க ஆரும் வெலிய போகாம உடாம அலுதுக்கிட்டிருந்துச்சிங்க. முருவம்மா கெலவி ஒப்பாரி வச்சி ஊரையே கூட்டிக்கிட்டிருந்தா. மத்தியானம் வரைக்கும் எந்த தகவலும் வரல. எல்லாரும் சேந்து கூட்டமா சேந்து குசுகுசுன்னு மொனக ஆரம்பிச்சிட்டாங்க. முனியாண்டி ஆம்பிள சிங்கம் மாரி பெருத்த யோசனையில பீடிய நேக தொறந்து அதுல மான் சாப் பொயலய கொஞ்சமா எடுத்து உருட்டி பீடிக்குள்ள திணிச்சி பத்த வச்சிக்கிட்டிருந்தாரு. பொக அது பாட்டுக்கு சுருள் சுருளா மேகங் கட்டிக்கிட்ட மாதிரி காத்துல கலந்துச்சி.

நேத்து ராவுல நடந்தத மூச்சே விடல முனியாண்டி.

யூனியன் தலைவரு அண்ணாமலதான் இப்ப இதுக்கு ஒரு முடிவு சோல்லோணும்னு ஆளுங்க எதிர்பார்த்துக்கிட்டிருந்தாங்க. அவரு பேச்சுக்கு ஆரும் மறுப்பு தெரிவிக்க மாட்டாங்க. எவ்ளோ பெரிய பெரச்சனையானாலும் சமாளிக்கிற தெறம இவருக்கு மட்டுந்தான் இருக்கு. யூனியன் தலைவரு மட்டுமில்ல, ஜனங்களுக்கு ஏதாவது சிக்கல்னா ஒடனெ இவரதான் புடிப்பாங்க. எல்லாத்துக்கும் காரணம் இருக்கு. சுமாரா படிச்சவரு, தண்ணி கிண்ணியெல்லாம் இல்லாத மனுசன் இந்த எஸ்டேட்டுல இவர தவிர ஆரும் கெடையாது. சுருட்டு மட்டும் பத்த வெப்பாரு. அதனால, அண்ணாமல வாயால ஒரு உபாயம் கெடைக்குமாங்கிற மாரி எல்லாரும் எதிர்பாத்துக்கிட்டிருந்தாங்க.

“தா பாரு முனியாண்டி. இன்னும் ரெண்டொரு நாளு பொறுத்துதான் பாரென். ஒங்கஷ்டம் என்னான்னு தெரியுது. பொன்னாத்தா ரொம்ப நல்ல புள்ள. அவெ இப்படியொரு முடிவெடுப்பானு யாருதான் நெனைச்சா ? கொஞ்சம் பொறுமையா நெதானமா இரு. சாமிக்கிட்ட வேண்டிக்கிட்டு ஆக வேண்டிய வேலய கவனி. என்ன புரியுதா ?”

முனியாண்டிக்கு வெளங்கினுச்சா இல்லையான்னு அவனுக்கே தெரியாது. ஒலக மகா சோகங்கற மாரி மூஞ்சிய ஏலு மொலத்துக்கு வெச்சிக்கிட்டான்.

முருவம்மா கெலவி திண்ணைக்கும் குசுனிக்கும் குட்டிப்போட்ட பூன நடந்துக்கிட்டிருந்தா. கொஞ்ச சேரத்துல ஒரு வாளில தண்ணிய மொண்டாந்து வாசப்படியில ஊத்தி நாசமாப் போ தேவடியா சிறுக்கின்னு காரி துப்புனா. அதுக்குப் பெறகு ஒரு பயலும் வளவளான்னு பேச்ச நீட்டிக்கல. கெலவிக்கு இதெல்லாம் புடிக்காதுங்கறது நேத்து பொறந்த வாண்டுங்களுக்கும் தெரியும். எவனாவது ஏடாகூடமா பேசுனாக்கா ஒரே வழி இருக்கு… பொடவைய தூக்கிக் காமிச்சி அடில இருக்கிற செம்பட்ட மசுர பிடுங்கி எறிவா. அதுக்கப்புறம் எவ்வனாவது அங்கனெ இருப்பானுங்களா ? அட அப்படிப் பாக்கிறதுக்கு எவ்வனுக்காவது நெஞ்சுல தெராணி உண்டா ? அதுக்கெல்லாம் இன்னொருத்தன் பொறந்துதான் வரணும்.அன்னிக்கு கெலவிதான் கூட்டத்த கலச்சி வச்சா. எல்லாரும் கெளம்பிப் போயிட்டாங்க.

வூட்டுல கருமாதி செஞ்ச மாரி சாம்பிராணி பொகயா இருந்துச்சி. எல்லாம் இந்த கெலவி பண்ர வேலதான். வூட்ட பொறுக்கி அப்பிடி இப்பிடின்னு கண்ட வேலயெல்லாம் செஞ்சா. அதுக்குத் தோதா இன்னிக்குன்னு காலாம்பரவே முனியாண்டியும் கெணத்துக்குப் போயி குளிச்சிட்டு வந்துட்டான். புள்ளைங்களுக்கு வெவரம் தெரியல. பொன்னாத்தா பொன்னாத்தான்னு ஆளாளுக்கு பேசுனத வச்சி ஏதோ நடந்திருச்சி போல பேந்த பேந்த முளிச்சிச்சிங்க. கவல இல்லாமயா இருக்கும்.லேசா தெரிஞ்சுச்சி. ரெண்டாவது பையன் ராமனுக்கு தங்கச்சி பாப்பா செகப்பின்னா உசிரு. அவெகூடதான் எப்போதும் இடுப்புல தூக்கி வச்சிக்கிட்டு ஒட்டிக்கிட்டு இருப்பான். இன்னிக்கி கல்லு மாரி ஒக்காந்திருக்கான்.காளி மாத்திரம் பேயறைஞ்ச மாரி உண்மையாவே மூஞ்சிய உம்முன்னு வசிக்கிட்டிருந்தான். யாரும் அவன தொந்தரவுபடுத்த விரும்பல.

முனியாண்டியோட தங்கச்சி அதான் அலமேலு இருக்கிறத போட்டு சமைச்சிக்கிட்டிருந்தா. பாக்கப்போனா பொன்னாத்தாவுக்கு பக்க பலம்னா அலமேலுவதான் சொல்லோணும். அலமேலு ரொம்ப தங்கமானவெ. பதினெட்டு வயசுதான். ஆனா பக்குவத்துல இந்த எஸ்டேட்டுல அவெ ஒருத்திதான்னு எல்லாரும் கையெடுத்துக் கும்பிடுவாங்க . ஆனா ரொம்ப பேசமாட்டா.

ரெண்டு நாளைக்கப்புறமா

காளி மட்டுந்தான் ஸ்கூலுக்குப் போனான். பேயறைஞ்ச மாரி இருந்திச்சி மூஞ்சி. தலைய ஒலுங்கா வாராம பரட்டையனாட்டம் இருந்தான். யாரும் அவன்கிட்ட மொகங்கொடுத்துப் பேசல. சொல்லி வச்சாப்புல அவனெ எல்லாரும் பாவமா பாத்தாங்க. வாத்தியாருங்க ரொம்ப பேருக்கு நடந்த சமாச்சாரம் தெரியாது. அவனோட வகுப்பாசிரியரோட பேரு நாச்சிமுத்து. நாச்சி சாருக்கு எப்படியோ வெவரம் தெரிஞ்சிப் போச்சி. அநேகமா தோட்டக்காரு சொல்லிருப்பாரு.

சாப்பாட்டு நேரத்துல மெதுவா வந்த நாச்சி சாரு காளி மேல கையப் போட்டு சாப்பிடுறியான்னு கேட்டப்போ அம்மா கதய மூக்க சிந்திக்கிட்டே சொல்லிட்டான். அவருக்கே கண் கலங்கிப் போச்சுன்னா பாத்துக்குங்களேன். சாருக்கு தெரியும் காளியோட அம்மா எப்படிப்பட்டவங்கன்னு. இந்த நேரத்துக்கு எப்போதும் அம்மாதான் காளிக்கு சாப்பாடு கொண்டாருவாங்க. சாப்பாடுன்னா என்னா ? சமயத்துல நீராகர தண்ணி இல்லாக்காட்டி அப்பாவோட பீரு போத்தல்ல தே ஓ, வரக்கோப்பின்னு கொண்டாருவாங்க. காசிருந்தா தாவா ரொட்டி வாங்கிட்டு வருவாங்க. காளி சாப்பிட்டு முடிக்கிறத கண்ணாலப் பார்த்தப்பதான் திரும்பவும் வெட்டுக்குப் போயி ஒண்டியா பாலெடுப்பாங்க.

இன்னிக்கி அப்படியில்ல. பத்து மணிக்கி டிங் டிங்னு மணியடிச்சிச்சு. வயித்த அமுக்கிக்கிட்டு காளி ஸ்கூலுக்குக் வெளிய எட்டிப் பாத்தான். இன்னிக்கிப் பொண்ணப் பட்டினிதான்னு தெரிஞ்சிப் போச்சி!

Series Navigationநினைவுகளின் சுவட்டில் (93)பிரபஞ்சனின் “ மரி என்கிற ஆட்டுக்குட்டி “ ஒரு மீள் பார்வை
author

ஜாசின் ஏ.தேவராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *