அம்ரா பாண்டியன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு மன்னார்குடியிலிருந்து வெளிவருகிறது “ கருக்கல் விடியும் “ இதழ். உயிர்மை, காலச்சுவடு அளவில் ஒரு வணிக இதழாக பரிணாமம் பெரும் முயற்சியில் இருப்பது இதழில் உள்ளடக்கத்திலேயே தெரிகிறது. கலை, இலக்கியம், அரசியல், பண்பாடு என்று அஞ்சறைப் பெட்டியாக அனைத்தையும் உள்ளடக்கி வெளிவந்திருக்கும் இதழின் மே-ஜூன் 2012 பிரதியைக் கண்ணுறும் வாய்ப்பு கிடைத்தது.
பல வண்ண பள பள அட்டை, கல்வியாளர் ஆயிசா இரா.நடராசனின் புகைப்படத்துடன், உள்ளே பரிதி பாண்டியன் கண்ட நேர்க்காணலுடன் 64 பக்கங்களில் கனமான இதழ். செயல் பங்களிப்பு ஏதும் செய்யாமல், வெறுமனே ஒரு கெத்துக்காக பட்டியலிடப்படும் ஆசிரியர் குழு இதிலும் உண்டு. ஆனால் தொடர்புக்கு யாருமே இருக்கமாட்டார்கள் என்பது யதார்த்த விதி. இந்த இதழ் அதிலும் கூட விதி விலக்கல்ல என்பது எனது நம்பிக்கை.
வெள்ளோட்டமாக மார்ச்-ஏப்ரலில் ஒரு இதழ் வந்திருக்கிறது. அதை ஒட்டிய கடிதங்கள் பக்கங்களை நிரப்புகின்றன. ஆனாலும் இந்த இதழும் முதல் இதழாகவே அச்சில் காட்டப்படுகின்றது. ஒவ்வொரு இதழும் முதல் இதழைப் போலவே கவனம் பெற்றது என்பதைக் காட்டுவதற்கு என்பதாகக் கொள்வோம்.
இதழில் என்னை ஈர்த்தது கதைகள். சோலை சுந்தரபெருமாளின் ‘வாலாட்டிக்குருவிகள் ‘, கவிஞர் பச்சியப்பனின் ‘ பாடு ‘. இதழுக்கு அழகு சேர்ப்பவை வீரசந்தானம், பாரதிராஜாவின் ஓவியங்கள். கூடுதலாக ஆங்காங்கே புகைப்படங்கள். லே அவுட்டிற்கும் பிழை நீக்கவும் மெனக்கெட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.
வங்கியிலிருந்து ஓய்வு பெற்ற சிவதாணு, தன் ஒரே மகனுக்கு பெண் தேடுவதும், கிராமத்தில் கூட்டுக்குடும்பத்தில் வாழும் பட்டதாரிப்பெண் போதும் என்று மகன் கோரிக்கை வைப்பதுமாகப் போகிறது வாலாட்டிக்குருவிகள். அப்படியான பெண் ஒருத்தி வங்காரமாவடி கிராமத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டு மகிழுந்தில் போகிறது சிவதாணு குடும்பம். நடுவில் கிழவி ஒருத்தி தன் வீட்டுக்கு சவுகரியமாகப் போக எண்ணி மகிழுந்தில் ஏறி தப்பான வழி காட்டும் காட்சித்திருப்பம் கதையைத் திசை திருப்பி விட்டு நம்மையும் அலைக்கழிக்கிறது. ஒரு வழியாக பெண் வீட்டார் வீடடைந்து, சம்பிரதாயம் முடிந்து, பெண்ணும் பிள்ளையும் தனித்துப் பேசும் காட்சியில் முடிச்சை அவிழ்க்கிறார் சு.பெ. கூட்டுக்குடும்பத்தில் அல்லல்பட்டு, தனிக்குடுத்தனத்திற்கு ஏங்கும் பெண், அதைக் கேள்விப்படும் சிவதாணுவின் அதிர்ச்சி எனக் கதை முடிகிறது. உளவியல் ரீதியாக பல தர்க்கங்களை ஏற்படுத்தும் முடிச்சு. இதையே கூட்டுக்குடும்பத்தில் வாழ ஆசைப்படும் சினேகா, தனிக்குடித்தனத்தில் மன அழுத்தம் ஏற்பட்டு, திரும்பவும் மாமனார், மாமியாருடன் சேரும் கதை சேரனால் நடிக்கப்பட்டு பிரிவோம் சந்திப்போம் என்று திரைப்படமாக வந்து விட்டது. இது உல்டா. அதில் ஏற்பட்ட தாக்கம் இதில் இல்லை என்பது நிகழ்வாழ்வின் யதார்த்தம் தொலைந்து போனதில் ஏற்பட்ட பிழை. தனிக்குடித்தனம் என்பது தற்கால நடைமுறை. கூட்டுக் குடும்பம் என்பது கனவு. கனவுகள் எப்போதுமே சுவாரஸ்யம். சு.பெ. இதை உணர்ந்தால் சிறந்த கதைகள் படைக்க முடியும் அவரால்.
புதிதாக திருமணமாகும் பெண் மலர். புருசன் வெங்கடேசனுக்கு ரெண்டே கால் ஏக்கர் நிலபுலன் உண்டு. தண்ணீர் பற்றாக்குறையால் ஒரு ஏக்கரில்தான் விவசாயம். மீதமுள்ள துண்டில் மிளகாய், தக்காளி, முள்ளங்கி எனப் பயிரிட்டால் லாபம் என யோசனை சொல்கிறாள் மலர். புது மனைவியில் அழகில் கிறங்கி, செயல்படுகிறான் வெங்கி. ஐ பிரீட் முள்ளங்கி, மிளகாய் என விதைக்கிறார்கள். பூச்சி அடித்து மிளகாய் பாழ். முள்ளங்கி பயிரை கண்ணும் கருத்துமாக வளர்க்கிறாள் மலர். செம்மண் சேறு பூசிய கால்களுடன் வயலில் இறங்கி வேலை செய்கிறாள். ஒரு சுமைக்கு இரண்டு சுமையாகக் காய்த்து கொட்டுகிறது முள்ளங்கி. சைக்கிளில் ஒரு சுமையை மேல்நகர் பக்கம் கொண்டு போகிறான் வெங்கி. இன்னொன்றைத் தலைச்சுமையாகக் கொண்டு நடந்தே தான் வாழ்ந்த துருகத்திற்குப் போகிறாள் மலர். தெரிந்தவர்கள், கூடப் படித்தவர்கள் வாங்குவார்கள் என்கிற நம்பிக்கை.
மார்கழி மாதத்தில் முள்ளங்கி சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பதால் யாரும் வாங்க மாட்டேன் என்கிறார்கள். அவரைக்காய் விற்கும் இடத்தில் முள்ளங்கியின் முனை கூடக் கிள்ளவில்லை எவரும். தூக்கிய சுமையை விற்காமல் நடந்தே கிராமம் நோக்கி வருகிறாள் மலர். வழியில் வெங்கடேசனின் சைக்கிள் மூக்காலம்பிறை கழனிக் கிணற்றின் ஓரம் நிற்கிறது. கேரியரில் மூட்டை இல்லை. அனைத்தையும் விற்று விட்டானே! தன்னை வந்து கூட்டிப் போயிருக்கக் கூடாதா என்று மனதிற்குள் அங்கலாய்க்கிறாள் மலர். சுமையை இறக்கி விட்டு எட்டிப்பார்த்தால். மாட்டை விரட்டிக் கொண்டிருக்கிறான் வெங்கி. காலடியில் முள்ளங்கி மூட்டை அவிழ்ந்தபடி.. “மாடு தின்னட்டும்னு பாத்தா மோந்துகூட பாக்க மாட்டேங்குது “ என்கிற வெங்கடேசனின் வார்த்தைகளில் இருக்கும் சோகமும், இயற்கையை அறியாத அறிவீனமும் பளிச்சென்று வெளிப்படுகின்றது. பல கேள்விகள். கிராமத்துப் பெண் மலருக்கு மார்கழி மாதம் முள்ளங்கி விற்காது எனத் தெரியாதா? வந்த விலைக்கு மொத்த வியாபாரியிடம் விற்கச் சொல்லும் பால்கார கணேசனின் வார்த்தைகளைப் புறக்கணிப்பது ஏன்? தெருத் தெருவாக அலையும் வெங்கி, விற்பனையாகாது என்று தெரிந்தபின் சந்தைக்குப் போய் விற்காதது ஏன்? நஷ்டமானாலும் கைக்காசு கொஞ்சம் கிடைத்திருக்குமே!
‘நறுக்கென நவிலா நக்கீரன்’ சேலம் கி. இளங்கோவை ஞாபகப்படுத்துகிறார் பரிதி பாண்டியன். நாஞ்சில் நாடனைப் பற்றிய முந்தைய இதழ் கட்டுரைக்கு தன்நிலை விளக்கம் கொடுக்கிறேன் பேர்வழி என்று, தான் எழுத மறுக்கும் வார்த்தைகள் என்று கோடிட்டு அத்தனை கெட்ட வார்த்தைகளையும் நாஞ்சில் நாடன் மொழியிலேயே அச்சில் ஏற்றி இருக்கிறார். வெங்கட்சுவாமிநாதன் – சுந்தரராமசாமி குழாயடி சண்டை அடுத்த தலைமுறைக்குத் தொடர்ந்தது போல் இருக்கிறது. அடுத்தடுத்த இதழ்களில் இன்னமும் சிலரை பரிதி வம்புக்கு இழுக்கலாம் போலத் தெரிகிறது. தொடர்ந்தால் அம்ரா பாண்டியனுக்கு பக்கங்கள் ரொப்பும் வேலை எளிதாகி விடும்.
த.ரெ. தமிழ்மணியின் ‘ நத்தையின் அழுகை ‘ கவிதை நூலை விமர்சித்து ஒன்றரை பக்கங்கள். சாம்பிளுக்கு ஒரு கவிதை: “ காடழித்த வீட்டு / கண்ணாடியைக் கொத்தும் குருவிகள் / வாழ்வு மீட்புப் போராட்டம். “ இப்படி இருந்தால் இன்னமும் சுகமாக இருந்திருக்குமே! காடழித்துக் கட்டிய வீட்டின் / கண்ணாடியைக் கொத்தும் / குருவிகள். சில சுயமுன்னேற்ற வழிகள், சமூக விமர்சனம், அவலங்களைச் சுட்டும் விமர்சன வரிகள் எனக் கோள் காட்டியிருக்கிறார் கலைபாரதி தன் மதிப்புரையில். ஆரம்பத்தில் பேருந்தின் சன்னலோர இருக்கையில் கண் நீரைத் துடைத்துக் கொண்டாராம் இவர். விழுந்த தூசி காரணமாக இருக்குமோ?
ஈழம் பற்றிய கட்டுரைகளும். புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகளும் இன்றியமையாத் தேவையாகி விட்டதை இந்த இதழும் உணர்ந்திருக்கிறது. தனி ஈழம் பற்றி ஒரு கட்டுரை, கல்வி பற்றிய நேர்க்காணல், மேலாண்மை பொன்னுசாமியின் கட்டுரை போன்ற கடிதம், நா.விச்வநாதன், வியாகுலன், ப.மதியழகன், விக்கிரமாதித்யன் நம்பி கவிதைகள் என நிரம்பி ‘வழிகிறது’ இதழ். இதில் கவிதாங்கதன் கவிதையை வெளியிட்டு அவரோடு ஒரு தொலைபேசி உரையாடலையும் வெளியிட்டு அது ஒரு மோசமான கவிதை எனப் பதிவு செய்கிறார் ஆசிரியர். எடுத்துக்காட்டாக அவர் ஆர்.ஜெயந்தியின் பாடவேளைக் கவிதையை வெளியிட்டதுதான் நகைச்சுவையின் உச்சக்கட்டம். இதயத்திற்கு அருகில் வந்த இளம்திரையனின் கொசுக்கவிதையை மேற்கோள் காட்டியிருக்கலாம்.
பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படும் இதழ்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்கிற நடைமுறையில் இருந்து விலகி வந்தால், கருக்கல் தடம் பதிக்கும். இல்லையென்றால் பத்தோடு பதினொன்று.
0
தொடர்புக்கு:
எம்.எஸ். பாண்டியன், 5/103, மெயின் ரோடு, அசேசம், மன்னார்குடி, திருவையாறு மாவட்டம் – 614001. தொ பே: 04367 255694. அலைபேசி: 7598428694
- நினைவுகளின் சுவட்டில் – 94
- சென்னையில் கழிந்த முதல் ஒரு பகல்
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 22
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 35
- மாமியார் வீடு
- கல்வியில் அரசியல் பகுதி – 2
- BAT MAN & BAD MAN பேட் மேனும், பேட்ட் மேனும்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பெரு வெடிப்புக்கு முன்பே பிரபஞ்சத்தில் கருந்துளைகள் சில இருந்துள்ளன (கட்டுரை 81)
- பூசாரி ஆகலாம்,! அர்ச்சகராக முடியாது?.
- ‘பினிஸ் பண்ணனும்’
- பூமிதி…..
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -4
- குடத்துக்குள் புயல்..!
- தஞ்சை பட்டறை செய்தி
- முள்வெளி அத்தியாயம் -18
- குற்றம்
- தாகூரின் கீதப் பாமாலை – 23 பிரிவுக் கவலை
- சிற்றிதழ் வானில் புதுப்புனல்
- உய்குர் இனக்கதைகள் (3)
- வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது
- ஓரு கடிதத்தின் விலை!
- பதிவர் துளசி கோபால் அவர்களின் “என் செல்ல செல்வங்கள்” : புத்தக விமர்சனம்
- தில்லிகை
- கணினித்தமிழ் வேந்தர் மா.ஆண்டோ பீட்டர் அவர்களுக்கு ஒரு அஞ்சலி
- தாவரம் என் தாகம்
- நகர்வு
- பிறை நிலா
- உலராத மலம்
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
- தமிழில் எழுதப்படும் பகுத்தறிவு சார்ந்த வலைப்பதிவுகளைத் தொகுத்து, ” தமிழ் பகுத்தறிவாளர்கள்” என்ற தளத்தை நிறுவியுள்ளோம்.
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 29)
- கற்பித்தல் – கலீல் கிப்ரான்
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-11)
- திருப்பதியில் நடைபெற்ற சாகித்ய அகாதெமியின் வடகிழக்கு மற்றும் தென்னிந்திய எழுத்தாளர்களின் சந்திப்பில் இடம் பெற்ற சில கவிதைகள்
- பஞ்சதந்திரம் தொடர் 53
- அப்படியோர் ஆசை!
- விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது