பெண்டாட்டியாத்தாள் பெரியாத்தாள்
புகழ்பெற்ற பலமும் வீரமும் பெற்றவனும், அநேக அரசர்களின் கூட்டத்தினர் வணங்குவதால் அவர்களுடைய கிரீடங்களின் ரத்தினங்களின் காந்திக் கிரணங்களால் ஜ்வலிக்கும் பாதபீடத்தையுடையவனும், சரத்காலத்துச் சந்திரனின் நிர்மலமான கிரணங்களைப் போன்ற கீர்த்தியுடையவனும், சமுத்திரம் வரையிலுள்ள பூமிக்கு அதிபதியுமான நந்தன் என்ற அரசனிருந்தான். அவனுக்கு எல்லா சாஸ்திரங்களின் தத்துவங்களை நன்கு அறிந்தவனான வரருசி என்ற மந்திரி ஒருவன் இருந்தான். அவனுடைய மனைவியும் காதல் சண்டையால் கோபித்துக் கொண்டாள். மிகவும் பிரியமான அவள் அநேக விதமாக திருப்திப்படுத்தப்பட்டும் கூட சந்தோஷமடையவில்லை. அப்பொழுது அவள் கணவன், ‘’அன்பே, எதைச் செய்தால் நீ திருப்தியடைவாய்? அதைச் சொல். கட்டாயம் செய்கிறேன்’’ என்றான். பிறகு ஒருவிதமாக அவள், ‘’நீ தலையை மொட்டையடித்துக் கொண்டு என் கால்களில் விழுந்தால் அப்பொழுது திருப்தியடைந்தவளாவேன்’’ என்று சொல்ல, அவ்விதமே அவன் செய்தபொழுது அவள் பிரசன்னமானாள்.
பிறகு நந்தனின் மனைவி அதேபோல் கோபித்துக்கொண்டு சந்தோஷப்படுத்தப்பட்டும் திருப்தியடையவில்லை. நந்தன், அன்பே, நீ இல்லாமல் ஒரு கணப்பொழுதுகூட நான் ஜீவிக்கமாட்டேன். கால்களில் விழுந்து உன்னைத் திருப்திப் படுத்துகிறேன் என்றான்.
‘’ஒரு துண்டை வாயில் கௌவிக்கொண்டு நான் உன் முதுகில் ஏறிக்கொண்டு உன்னை ஓட்டுவேன். ஓடிக்கொண்டே நீ குதிரை போலக் கனைத்தால் அப்பொழுது பிரசன்னமாவேன்’’ என்றாள் அவள். அவனும் அப்படியே செய்தான்.
பிறகு காலை வேளையில் சபையில் உட்கார்ந்திருக்கும் அரசனிடம் வரருசி வந்தான். அவனைப் பார்த்து அரசன், ‘’வரருசி! ஏன் காலமற்ற காலத்தில் உன் தலையை மொட்டை அடித்துக் கொண்டாய்?’’ என்று கேட்டான்.
அவன் அதற்கு, ‘’ஸ்திரீகளால் உத்தரவிடப்பட்ட புருஷன்…’’ என்றபடி பதிலளித்தான்.
அதனால், மூடனே! நீயும் நந்தன் வரருசி மாதிரி ஸ்திரீயால் வசீகரிக்கப்பட்டவனே! அதனால் அவளால் ஏவப்பட்ட நீ என்னைக் கொல்ல முயற்சித்தாய். ஆனால் உன் வார்த்தை தோஷத்தாலேயே காட்டிக் கொடுக்கப் பட்டாய். இவ்விதம் சரியாகத்தான் சொல்லப்படுகிறது.
தன்னுடைய பேச்சு தோஷத்தினாலேயே கிளியும் ஸாரிகமும் கூட்டிலடைக்கப்படுகின்றன. கொக்குகள் அடைக்கப்படுவதில்லை. மௌனமே எல்லாவற்றையும் சிந்திக்கச் செய்யும்.
நன்கு மறைத்துக் காக்கப்பட்டிருந்தும், உடலைப் பயங்கரமாகக் காட்டியபோதிலும், புலித்தோலால் மூடப்பட்ட கழுதை கனைத்ததால் கொல்லப் பட்டது.
என்றது குரங்கு.
‘’அது எப்படி?’’ என்று முதலை கேட்க, குரங்கு சொல்லிற்று:
புலித்தோல் போர்த்த கழுதை
ஒரு ஊரில் சுத்தபடன் என்ற வண்ணான் ஒருவன் இருந்தான். அவனிடம் ஒரு கழுதை இருந்தது. அதுவும் புல் கிடைக்காததால் மிகவும் தளர்ச்சியடைந்தது. அந்த வண்ணான் காட்டில் சுற்றும் பொழுது ஒரு இறந்த புலியைக் கண்டான். ‘’ஆஹா! எனக்கு நன்மை ஏற்பட்டுள்ளது. இந்தப் புலித்தோலால் கழுதையை மறைத்து இரவில் வார்க்கோதுமை வயலில் அவிழ்த்து விடுகிறேன். வயலின் காவலாளிகளும் இதைப் புலியென்று எண்ணி இதை விரட்டமாட்டார்கள்’’ என்று எண்ணி, அவ்விதமே செய்தபொழுது கழுதையும் தன் விருப்பப்படி கோதுமைக் கதிரைத் தின்றது. விடியற்காலையில் வண்ணான் மறுபடியும் அதைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். இவ்விதமே நாட்கள் சென்றபொழுது அது பருத்த சரீரமுடையதாயிற்று. கஷ்டத்துடனேயே கொட்டிலுக்குள் சென்றது.
பிறகு ஒருநாள் கழுதை வெகுதூரத்தில் பெண் கழுதையின் கனைப்பைக் கேட்டது. அதைக் கேட்ட மாத்திரத்தில் தானும் கனைக்க ஆரம்பித்தது. அப்பொழுது அந்த உழவர்கள் ‘இது கழுதை புலித்தோலால் மறைக்கப்பட்டுள்ளது என்று அறிந்து’ கட்டை கல் அம்புகளால் அதை அடித்துக் கொன்றனர்.
அதனால்தான், ‘நன்கு மறைத்துத் காக்கப்பட்டும்…’ என்று நான் சொன்னேன்’’ என்றது குரங்கு.
இவ்விதம் முதலையுடன் குரங்கு பேசிக்கொண்டிருக்கும்பொழுது வேறு ஒரு ஜல ஜந்து வந்து முதலையிடம் ‘’ஏ முதலையே, உன் மனைவி ஆகாரம் எடுத்துக்கொள்ளாமல் இருந்து இறந்துவிட்டாள்’’ என்றது. அதைக்கேட்டு முதலை துக்கமடைந்த மனதுடன் புலம்பியது. ஐயோ, அதிர்ஷ்டமற்ற எனக்கு என்ன நேரிட்டுள்ளது!
யார் வீட்டில் தாயாரில்லையோ அன்புடன் பேசும் மனைவியும் இல்லையோ அவன் காட்டிற்குச் செல்ல வேண்டு. காடு அவனுக்கு வீடு போல் பயங்கரமானதில்லை.
என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். அதனால் நண்பா, நான் செய்த சிறு அபராதத்தை மன்னித்துக்கொள். நான் அவள் பிரிவினால் அக்னிப் பிரவேசம் செய்யப் போகிறேன்’’ என்றது முதலை. அதைக் கேட்டுக் குரங்கு சிரித்துக் கொண்டே, ‘’உன்னை நான் முதலிலிருந்தே அறிவேன். நீ ஸ்திரீயினால் வசீகரிக்கப்பட்டவன். ஜெயிக்கப்பட்டவன் என்று எனக்குத் தெரியும். இப்பொழுது அதற்கு ருசு கிடைத்து விட்டது. ஆகவே, மூடனே, சந்தோஷப்படவேண்டிய நீ துக்கப்படுகிறாய். அப்படிப்பட்ட மனைவி இறந்தால் அதை உற்சாகமாகக் கொண்டாடுவதுதான் தகும்.
எந்த மனைவி கெட்ட நடத்தையுடையவளாகவும், எப்பொழுதும் கலகப்ரியையாகவும் இருக்கிறாளோ, மனைவி உருவிலுள்ள அவளை புத்திசாலிகள் பிஞ்சில் பழுத்ததாக அறிகின்றனர்.
அதனால் மிக்க முயற்சியுடன் ‘ஸ்திரீ’ என்னும் பெயரைக் கூட உச்சரிக்காதே! உன்னுடைய சொந்த சுகத்தை விரும்பினால் பூமியிலுள்ள எல்லாப் பெண்களையும் விட்டுவிடு.
எது மனதிலுள்ளதோ அது நாக்கில் வருவதில்லை. எது நாக்கிலுள்ளதோ அது வெளியில் வருவதில்லை. எதைச் சொல்கிறாளோ அதைச் செய்வதில்லை. பெண்களே விசித்திரமான நடத்தை யுள்ளவர்கள்தான்.
பெண்ணின் கெட்டெண்ணத்தைக் காட்ட இது ஒன்றே போதும். வேறு எதற்கு? தன் வயிற்றில் பிறந்ததானாலும் அந்தப் பிள்ளையைக் கொல்கிறாள். கொடூரத்தில் அன்பையும், கடினத்தில் மிருதுத் தன்மையையும், ரஸமற்றதில் ரஸத்தையும் வாலிபர்கள் இளம் பெண்களிடம் கற்பனை செய்கின்றனர்.
என்றது குரங்கு.
‘’அது இருக்கட்டும். பின் நான் என்ன செய்வது? எனக்கு இரண்டு விதமான அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் என் வீடு நாசமாகிவிட்டது. இரண்டாவது நண்பனுடைய வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. அல்லது விதியால் அடிக்கப்பட்டவர்களுககு இப்படித்தான் ஏற்படுமோ?
எவ்விதமெனில்,
என் பாண்டித்தியத்தைப் போல உன்னுடையது இரண்டு மடங்கானது. உனக்குக் காதலன், கணவன் இருவருமில்லை. பின் ஏன், அம்மணமே, அப்படிப் பார்க்கிறாய்?என்றது முதலை. ‘
’அது எப்படி?’’ என்று குரங்கு கேட்க, முதலை சொல்லிற்று:
அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டாளாம்
ஒரு ஊரில் ஒரு உழவர் தம்பதிகள் வசித்து வந்தனர். அந்த உழவனின் மனைவி கணவன் கிழவனாகிவிட்டதால் எப்பொழுது பார்த்தாலும் எங்கோ மனமுடையவளாக இருந்தாள். ஒருபொழுதும் வீட்டில் நிம்மதியடையவில்லை. அவள் பரபுருஷனைப்பற்றியே எண்ணி வந்தாள்.
பிறகு பிறர் பொருளை அபகரிக்கும் ஒரு தூர்த்தன் இவளைப் பார்த்து, ‘’அழகியே, மனைவியை இழந்த நான் உன்னைப் பார்த்ததும் மன்மதனால் பீடிக்கப்பட்டுள்ளேன். அதனால் எனக்குப் போகத்தின் சுகம் முழுவதையும் கொடு’’ என்று சொன்னான்.
அப்பொழுது அவள், ‘’அழகனே, அவ்விதமெனில், என் கணவனிடம் நிறையப் பணமிருக்கிறது. அவன் கிழப்பருவத்தால் நடக்கக்கூடச் சக்தியற்று இருக்கிறான். அதனால் அதை எடுத்துக்கொண்டு வருகிறேன். உன்னுடன் வேறு எங்காவது சென்று சுகபோகத்தை அனுபவிக்கிறேன்.’’ என்றாள்.
‘’எனக்கும் அந்த யோசனை பிடித்தமாக இருக்கிறது. விடியற்காலை இந்த இடத்திற்குச் சீக்கிரமாக வரவேண்டும். ஏதாவது அழகிய பட்டினத்திற்குச் சென்று உன்னுடன் இந்த வாழ்க்கையைப் பயனுள்ளதாக்குகிறேன்’’ என்றான் அவன்.
அவளும் ‘’அப்படியே’’ என்று சத்தியம் செய்து சந்தோஷமான முகத்துடன் தன் வீட்டை அடைந்து இரவில் கணவன் தூங்கும் எல்லாப் பொருளையும் எடுத்துக்கொண்டு விடியும் சமயத்தில் குறிப்பிட்ட இடத்தை அடைந்தாள். தூர்த்தனும் அவளை முன்னால் போகச்சொல்லி தெற்குத் திசையை நோக்கிப் புறப்பட்டான். இவ்விதமே உற்சாகத்துடன் அவளுடன் பேச்சின் சுகத்தை அனுபவித்துக்கொண்டே இரண்டு யோஜனை தூரம் சென்றதும் முன்னே நதியைப் பார்த்துத் தூர்த்தன் சிந்தித்தான். ‘’நான் இந்த அரைக்கிழவியுடன் என்ன செய்வேன்? மேலும் ஒரு சமயம் இவளை யாராவது பின்தொடர்ந்து வந்தால் என்ன செய்வது? அதனால் எனக்குப் பெரிய அனர்த்தம்தான் ஏற்படும். இவளுடைய பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு செல்கிறேன்’’ என்று எண்ணினான்.
இவ்விதம் அவன் எண்ணி அவளிடம், ‘’அன்பே, இந்தப் பெரிய நதியைக் கடப்பது கஷ்டம். அதனால் பணத்தை மட்டும் மறுகரையில் வைத்து விட்டுத் திரும்புகிறேன். பிறகு உன்னைத் தனியாக என் முதுகில் ஏற்றிக் கொண்டு சுலபமாகக் கடந்துவிடுவேன்’’ என்றான். ‘’அன்பனே அவ்விதமே செய்’’ என்று பதிலளித்தாள் அவள்.
அவளிடமிருந்து பணத்தைக் கொஞ்சமும் மிச்சம் வைக்காமல் எடுத்துக் கொண்டு மறுபடியும், ‘’அன்பே, உன் புடவையையும், ரவிக்கையையும்கூடக் கொடுத்துவிடு. அதனால் நீ ஜலத்தின் நடுவில் கவலையின்றிச் செல்லலாம்’’ என்று சொன்னான். அவ்விதமே அவள் கொடுத்தபொழுது அந்தப் போக்கிரி பணத்தையும் இரண்டு வஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டு அவன் நினைத்து வைத்திருந்த இடத்திற்குச் சென்று விட்டான்.
அவளும் இரு கைகளையும் கழுத்தில் வைத்துக்கொண்டு துக்கத்துடன் நதியின் கரையில் உட்கார்ந்திருந்தாள். அப்பொழுது ஒரு பெண்நரி ஒரு மாமிசத்துண்டைக் கவ்விக்கொண்டு அங்கு வந்தது. வந்து பார்த்தபொழுது அந்த நதியின் கரையில் பெரிய மீன் ஜலத்தை விட்டு வெளியில் வந்திருப்பதைப் பார்த்தது. அதைப் பார்த்ததும் அது மாமிசத் துண்டை விட்டு விட்டு அந்த மீனை நோக்கிச் சென்றது. இதற்குள் ஆகாயத்திலிருந்து ஏதோ ஒரு கழுகு பாய்ந்து அந்த மாமிசத் துண்டை எடுத்துக்கொண்டு உயரப் பறந்தது. மீனும் பெண் நரியைப் பார்த்ததும் நதிக்குள் நுழைந்து கொண்டது. அப்பொழுது வீண் சிரமமடைந்த அந்தப் பெண் நரியையும் கழுகையும் பார்த்துக்கொண்டே அந்த நிர்வாண ஸ்திரீ சிரிப்புடன்,
கழுகால் மாமிசம் அபகரிக்கப்பட்டது. மீனோ ஜலத்தினுள் சென்றுவிட்டது. மீனையும் மாமிசத்தையும் இழந்துவிட்டு என்ன பார்க்கிறாய், பெண்நரியே? என்று சொன்னாள்.
அதைக்கேட்டு பெண் நரி அவளும் தன் கணவன், பொருள், காமுகன் யாவரையும் இழந்திருப்பதைப் பார்த்துப் பரிகாசத்துடன்,
‘’என் பாண்டித்தியத்தைப்போல உன்னுடையது இரண்டு மடங்கானது. உனக்குக் காதலன் கணவன் இருவருமில்லை. அம்மணமே ஜலத்தில் நிற்கிறாய், என்று சொல்லியது.
இவ்விதம் அதற்குக் கதை சொல்லிக்கொண்டிருக்கும்பொழுது வேறு ஒரு ஜல ஜந்து வந்து முதலையிடம், ‘’ஐயோ, உன்னுடைய வீட்டையும் வேறு ஒரு பெரிய முதலை பிடித்துக்கொண்டு விட்டது’’ என்று தெரிவித்தது. அதைக் கேட்டு முதலை மிகவும் துக்கமடைந்த மனதுடன் அதைத் தன் வீட்டிலிருந்து வெளியேற்றும் உபாயத்தைப் பற்றி எண்ணலாயிற்று.
‘’ஐயோ, விதியால் கொல்லப்படும் என்னைப் பார்! எவ்விதமெனில்,
நண்பன் நண்பனல்லாதவனானான். இரண்டாவது, என் மனைவி இறந்தாள். வீட்டிலும் வேறு ஒருவன் புகுந்து கொண்டான். இப்பொழுது வேறு என்ன ஏற்படப் போகிறது?
அல்லது இவ்விதம் சொல்வதில்தான் எவ்வளவு நியாயமிருக்கிறது:
‘தளர்ந்த இடத்தில் கஷ்டங்கள் அதிகமாகின்றன.’ அதனால் இவனுடன் கூடச் சண்டை செய்யட்டுமா? அல்லது சமாதானமாகச் சொல்லி வீட்டை விட்டு வெளியேற்றட்டுமா? அல்லது பேதமோ, தானமோ கையாளட்டுமா? அல்லது இந்த வானர நண்பனையே கேட்கிறேன். ஏனெனில்,
கேட்கத் தக்கவர்களையும், நன்மை செய்பவர்களையும், குருவையும், எவன் கலந்து காரியம் செய்கிறானோ அவனுக்கு எந்தவிதமான காரியத்திலும் ஒரு தடங்கலும் நேரிடாது.
என்று முதலை எண்ணி மறுபடியும் நாவல்மரத்தில் ஏறியுள்ள குரங்கைப் பார்த்து ‘’நண்பனே, என்னுடைய இந்த துரதிருஷ்டத்தைப் பார்! இப்பொழுது என் வீட்டைக்கூட வேறொரு பலமுள்ள முதலை அபகரித்துக் கொண்டிருக்கிறது. அதனால் நான் உன்னைக் கேட்கிறேன். நான் என்ன செய்யட்டும்? சொல். சாமம் முதலிய நான்கு உபாயங்களில் எந்த உபாயத்தை உபயோகிப்பது?’’ என்று கேட்டது.
‘’நன்றிகெட்டவனே, நான் தடுத்தும்கூட ஏன் என்னை மறுபடியும் தொடருகிறாய்? நான் முட்டாளாகிய உனக்கு உபதேசம் கூடத் தரமாட்டேன். எவ்விதமெனில்,
யோசனை சொல்லத் தகாதவர்களுக்கு யோசனைகள் கொடுக்கப் படாது. பார்! முட்டாள் குரங்கினால் அழகிய கூடு நாசமாக்கப் பட்டது.
என்றது குரங்கு
‘’அது எப்படி?’’ என்று முதலை கேட்க, குரங்கு சொல்லிற்று,
————–
- நினைவுகளின் சுவட்டில் – 94
- சென்னையில் கழிந்த முதல் ஒரு பகல்
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 22
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 35
- மாமியார் வீடு
- கல்வியில் அரசியல் பகுதி – 2
- BAT MAN & BAD MAN பேட் மேனும், பேட்ட் மேனும்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பெரு வெடிப்புக்கு முன்பே பிரபஞ்சத்தில் கருந்துளைகள் சில இருந்துள்ளன (கட்டுரை 81)
- பூசாரி ஆகலாம்,! அர்ச்சகராக முடியாது?.
- ‘பினிஸ் பண்ணனும்’
- பூமிதி…..
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -4
- குடத்துக்குள் புயல்..!
- தஞ்சை பட்டறை செய்தி
- முள்வெளி அத்தியாயம் -18
- குற்றம்
- தாகூரின் கீதப் பாமாலை – 23 பிரிவுக் கவலை
- சிற்றிதழ் வானில் புதுப்புனல்
- உய்குர் இனக்கதைகள் (3)
- வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது
- ஓரு கடிதத்தின் விலை!
- பதிவர் துளசி கோபால் அவர்களின் “என் செல்ல செல்வங்கள்” : புத்தக விமர்சனம்
- தில்லிகை
- கணினித்தமிழ் வேந்தர் மா.ஆண்டோ பீட்டர் அவர்களுக்கு ஒரு அஞ்சலி
- தாவரம் என் தாகம்
- நகர்வு
- பிறை நிலா
- உலராத மலம்
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
- தமிழில் எழுதப்படும் பகுத்தறிவு சார்ந்த வலைப்பதிவுகளைத் தொகுத்து, ” தமிழ் பகுத்தறிவாளர்கள்” என்ற தளத்தை நிறுவியுள்ளோம்.
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 29)
- கற்பித்தல் – கலீல் கிப்ரான்
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-11)
- திருப்பதியில் நடைபெற்ற சாகித்ய அகாதெமியின் வடகிழக்கு மற்றும் தென்னிந்திய எழுத்தாளர்களின் சந்திப்பில் இடம் பெற்ற சில கவிதைகள்
- பஞ்சதந்திரம் தொடர் 53
- அப்படியோர் ஆசை!
- விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது