இன்று “பாயி த்வஜ்”. அதனால் இப்போதே (மதியம் மணி மூன்று) கிளம்புகிறேன்”. சதானா கிளம்பி விட்டாள். காலை முதல் அவள் எதையும் செய்து கிழித்திருக்க வாய்ப்பில்லை. கை நிறைய மருதாணியும் ‘மேக் அப்’பும் உயர்ந்த ரக பருத்திப் புடவையும் அதை விட விலையுயர்ந்த பூ வேலை செய்த ‘ஷால்’ என அவளும் அவள் தோழிகளும் ஒருவரை ஒருவர் சந்தித்து சமூக உறவுப் பகட்டை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருந்தார்கள். சங்கரன்னுக்கு ‘பாயி த்வஜ்’ என்றால் என்ன என்று விளக்கினார் அவனது மேலாளர். நம்மூரில் (பெரிதும் பிராமணர்கள் கொண்டாடும் )காரடையான் நோன்பு போன்றதாம். இன்று அவர்கள் அன்னதானம் செய்து கணவன் நலத்துக்காக துர்க்கா பூஜை செய்வார்களாம்.
“மெட்டி போடறாங்களே ஒழிய அனேகமா தாலியே காணுமே சார்” என்றான்.
” அதெல்லாம் உனக்கு எதுக்கு? டெல்லியிலே உனக்குப் புரியாத விஷயம் எத்தனையோ இல்லையா?”
அது என்னவோ உண்மைதான். அலுவலகத்துக்கு வந்து போவது, வேலை செய்வது செய்யாமலிருப்பது இவை எல்லாமே அவரவர் விருப்பப்படி.
“ஒரு மதராஸி என் செக்ஷனுக்கு வந்திருப்பது எனக்கு மிக மகிழ்ச்சி. உங்கள் மூளையும் உழைப்பும் தலை நகரில் எங்கும் மதிக்கப் படுகிறது” அவன் பதில் சொல்லவில்லை. திரும்பித் தமிழ் நாட்டுக்குப் போவது இந்த ஆளாலேயே தடை படக்கூடும் என்று அச்சமாயிருந்தது. ஒரு ஆபிஸர் இட மாற்றம் கிடைத்த பின்னும் ஒரு தமிழனை ‘இன்னொரு மதராஸி வரும் வரை விட மாட்டேன்’ என்றாராம்.
மிகவும் உற்சாகத்துடன் ராஜ்தானியில் வந்து வசந்தி அவனை ஏற்றி விட்டாள் இடமாற்றம் கிடைத்து அவன் கிளம்பிய போது. “சந்தோஷமாப் போயிட்டு வாங்க. வேளா வேளைக்கி சாப்பிடுங்க. பருப்புப் பொடி, எள்ளுப் பொடி, இட்லி மொளகாப் பொடி எல்லாம் வெச்சிருக்கேன். சமைச்சே சாப்பிடுங்க..” இருள் பிரியாத விடியற் காலையில் அவளை ‘ப்ளாட்ஃபாரத்’தில் இருந்து ரயில் நகர்ந்தது. நாட்கள் நகரவில்லை.
முதலில் தங்கியிருந்த அறையில் சகாவுடன் ஒத்து வராமற் போக குழம்பிக் கொண்டிருந்த போது தான் ராமச்சந்திரன் அவனைத் தன்னுடன் தங்கும் படி அழைத்தான். இருவர் கால் நீட்டிப் படுக்க மட்டும் இடம். ஒரே குளியலறை. 2500 வாடகை. சங்கரன் பங்கு 1250.
எனக்கு எப்பவும் ரூம் சுத்தமாக இருக்க வேண்டும் என்றுதான் துவங்கினான் ராமச்சந்திரன். காலையில் கையில் நியூஸ் பேப்பரை எடுத்தவுடன் ‘பெருக்கலாமேன்னு பாத்தேன்’ என்பான். ‘இந்தப் பெட்டியை நகத்துங்க.. ஷூவையெல்லாம் எடுத்து வெளியே வையுங்க..’ பத்துக்குப் பத்து கூட இல்லாத அறையில் துடைப்பத்தைச் சுழற்றுவது கடினமா? இல்லை சாமான்களை திருப்பி வைப்பது கடினமா?
ஆரம்பத்தில் ‘நீங்க பாத்தரம் தேய்ங்க.. நான் சமைக்கறேன்..’ என்றவன் காலையில் ‘துணி துவக்கறேன்’ என்று ஆரம்பிப்பான். பாதி நாள் வீடு சுத்தமாக வைக்கும் விழா.அறையை ஒட்டி பால்கனி இரண்டாகப் பிரிக்கப் பட்டு ஒரு பகுதி சிறு மேடையுடன் சமையலறை என்னும் பெயர் பெற்றிருந்தது.
ராமச்சந்திரன் பேசிக் கொண்டே இருப்பான். வாய் ஓயாத பேச்சு. தனது இலாகா பற்றி, அதில் தான் எத்தனை மதிப்பானவன் என்று அளப்பு.
முனிர்காவில் இரண்டு பேர் எதிரே நடந்து போக முடியாத அளவு நெரிசலான சந்துகளில் நான்கு மாடிக் கட்டிடங்கள். ஒவ்வொரு கட்டிடத்துக்கும் கீழ்த்தளத்துக்கும் கீழே சுரங்கத் தளம் ஒன்று உண்டு. அந்த வீட்டு சொந்தக்காரர் அதை ‘கொடொவுனா’கத் தனது கடைக்காக வைத்திருப்பார். இல்லை ‘கொடொவு’ னையே வாடைகைக்கு விட்டிருப்பார். கொடொவுனிலிருந்து ஒரு சைக்கிளில் கூட சிமென்ட் மூட்டைகளை எடுத்துப் போக முடியாதபடி குறுகலான சந்துகள். கழுதைகள் முதுகில் சுமந்து முனிர்காவின் குன்றுப் பகுதியில் மேலே ஏறிச் செல்லும் சந்துகளில் நகரும்.
அந்த மாதிரி ஒரு கழுதையாக குறுகலான இந்தக் குடியிருப்பில் தான் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்று தான் சங்கரனுக்குத் தோன்றும். ‘டெலிபோன் கம்பெனியில்’ வேலை செய்கிர ஒருவர் தனியாளாக பக்கத்து ‘போர்ஷனில்’ தங்கி இருந்தார். சங்கரனுக்கும் அவருக்கும் இரண்டு வித்தியாசம். சென்னைக்கு அவர் நினைத்த போது பேசுவார். அவர் வீட்டிலிருந்தும் பேசுவார்கள். மொபைல் இந்த அளவு சல்லிசாக வராத காலம். அது. வசந்தி ஒரு ‘கான்டாக்ட் நம்பர் ‘ வேண்டும் என்ற போது ராமச்சந்திரன் தடுத்தான். ‘எனக்கும் அந்த ஆளுக்கும் ஒத்து வரல்ல. நான் துணி ஊறப் போடறதப் பாத்த அப்பறமும் அவன் ஊறப் போட்டான். புடிச்சி எகிறிட்டேன்’ என்று தடையுத்தரவு போட்டான். ‘செல்’ வாங்கிடுங்களேன். எனக்கும் யூஸ் ஆகும்’ என்றான். வாடகையை மிச்சம் பிடிக்க இவனுடன் வந்தால் மேலும் செலவுக்கு வழி சொல்கிறான். அனேகமாக இந்த அறையில் தன்னை அகதியாகவே அனுமதித்திருப்பதாகப் புரிந்தது. ‘கானாட் ப்ளேஸி’ல் 620ம் எண் பஸ் பிடித்து ‘மோதி பாக்’க்குப் பிறகு ‘ந்யாய் மார்க்’ முதல் ஆரம்பித்து ‘ஆகாஷ் வாணி’ வரை வரும் ‘கோல் சக்கர்’களில் பஞ்சாபி டிரைவர்கள் வளைத்து ஓட்டும் போது வண்டிக்குள் நிற்பது சர்க்கஸ் வித்தை தான். போதாக் குறைக்கு ‘மெட்ரோ ரயில்’ ஆயத்த வேலைகள் ‘கானாட் ப்ளேஸ்’ஸிலேயே தொடங்கி வாகன நெரிசல் மிகுந்திருக்கும். காலை எட்டு எட்டரைக்குப் போனால் ஸீட் கிடைக்கும். ஆனால் ஐயா சமையலை முடிக்க மாட்டார். சமைத்ததை எல்லாம் ஒன்று ஒன்றாக எடுத்து வைக்க வேண்டும். அவன் தொண தொணப்பை மீறி அள்ளிப் போட்டுக் கொள்ள வேண்டும். அவன் கிட்டத்தட்ட (வைத்த இரண்டு ஆழாக்கில்) பாதியைச் சாப்பிட்டு விட்டு மீதியில் பாதியை மதிய உணவாகக் கட்டி எடுத்துக் கொண்டு விடுவான். பொறுக்க முடியாத சங்கரன் ஒரு நாள் ‘நான் இனி வெளியே சாப்பிட்டுக்கறேன்’ என்று வெட்டிக் கொண்டான்.
சென்னையிலேயே சங்கரன் மதிய உணவு கொண்டு போவது கிடையாது. கேன்டீனில் எதையாவது சூடாகச் சாப்பிடுவான். அதனால் டெல்லிக்கு டிஃபன் பாக்ஸ்’ கொண்டு வரவில்லை. ஆபீஸ் கேன்டீனில் ‘சோலே படூரே’யும் , ‘மசாலா தோசா’வும் கிடைக்கும். முதல் நாள் ‘சோலே படூரே’வுடன் ‘சன்னா’ (மசாலா மிகத் தூக்கலாகத்) தின்று இரவு வயிறு சதி செய்து விட்டது. ஒருவர் ‘பாரகம்பா ரோடில்’ ‘ஸ்டேட்ஸ்மேன் ஹவுஸ்’ எதிரே உள்ள இட்டிலிக் கடையைக் காட்டினார். சூடான இட்டிலி சாம்பார். மதியப் பிரச்சனை தீர்ந்தது. சாம்பாரை அப்படியே குடிக்கும் வட இந்தியக் கும்பல் மதியம் ஒரு மணி தாண்டிப் போனால் நெரியும். கூடுமான வரை ஒரு மணிக்குப் பத்து நிமிடம் முன்பாவது போய் விடுவான். சில நாட்களில் ‘டைரக்டர்’ அப்போதுதான் (12.30 மணி சுமாருக்குத் தான்) ‘டிஸ்கஷனு’க்காகக் கூப்பிடுவார்.
அவன் வந்த புதிதில் மே மாத வெய்யிலில் வீசும் புழுதியில் அனற் காற்றில் இட்டிலிக்காக அலைவது பெரிய சவாலாயிருந்தது.
வாரா வாரம் ஞாயிறு மட்டும் வீட்டுக்கு எஸ்டிடி போட்டு ரூ.50 வரை பேசுவான். போன வாரம் குழந்தை கணேஷ் பேசவில்லை. ஜுரம், சரியாகி விடும் என்றாள் வசந்தி. இரண்டு நாளாய் குழந்தை முகம் மனதில் தோன்றி மருக அடித்துக் கொண்டிருந்தது. டைரக்டரிடம் கேட்டால் ‘எஸ்டிடி’ பண்ண அனுமதிப்பார். ஆனால் இது வரை தைரியம் எழவில்லை. இன்று கேட்டால் என்ன? அவன் அவரது அறைக்குள் நுழையும் போதே ‘இவனுகளுக்குன்னு தனித் தொகுதி வேறே. எம்பி ஆன உடனே நூறு கேள்வி கேட்டு அதுக்கு பதில் சொல்ற தலையெழுத்து நமக்கு. மத்தவங்க இருக்கற தொகுதியிலே பிரச்சனையில்லே. இவன் ஜாதிக்காரங்கதான், அந்தத் தொகுதிதான் கஷ்டப் படுதான். பெஹன் சூவத். ‘பார்லிமென்ட் கொஸின்’ பற்றி யாரிடமோ இரைந்து பேசிக் கொண்டிருந்தார். டெலிபோனை வைத்தவர் ‘ஜிஎம்’ கையெழுத்தை வாங்கி உடனே போய் ‘பார்லிமென்ட் ஸெக்ஷன்’ல கொடுங்க’ என்று இந்தியில் ஆணையிட்டு ஃபைலை இவன் கையில் கொடுத்தபடி எழுந்தார். இன்று செலவைப் பார்க்காமல் சாயங்காலம் கணேஷைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
அன்று மாலை கிளம்புகிற நேரம் பார்த்து இன்னொரு ‘பார்லிமென்ட் கொஸன்’. இரவு பஸ்ஸைப் பிட்க்க நடந்தால் ஒரு மத ஊர்வலத்துக்காக போக்குவரத்து வழி மாற்றப் பட்டிருந்தது. 680ல் ஒன்றரை மணி நேரம் நின்று முனிர்காவில் இறங்கும் போது பசியில் தலை சுற்றியது. ‘மெஸ்’ மூடும் நேரம். முதலில் அங்கே விரைந்தான். ‘மெஸ்’ஸில் ஊற்றிய குழம்பு கெட்டுப் போன வாடை அடித்தது. சாதத்தை சேர்த்து எடுத்துக் கொட்ட முடியுமா? ஊசச் சாப்பாடு உள்ளே இறங்கும் போது வசந்தியை சமையல் சரியில்லை என்று திட்டிய சம்பவங்கள் உறுத்தின.
பத்து மணி ஆகி விட்டது. அகர்வால் ஸ்வீட் கடை அருகே இருந்த மருந்துக் கடையில் Paxil மாத்திரை இல்லை. ‘வெளியே சாப்பிடுகிறேன்’ என்று ராமச்சந்திரனிடம் ரோசமாகச் சொல்லி இருக்க வேண்டாம். சாப்பாட்டுக்கு நேரம் ஒதுக்காமல் மருந்தைத் தேடி அலைந்திருக்க வேண்டும்.
வீட்டை நெருங்கும் போது கீழ்த்தள வாசற் கதவு, இரும்புக் கதவு மூடியிருந்தது. மணியை அடித்தான். ஐந்து நிமிடம் ஆகி விட்டது. வீட்டுக்காரனுக்கு இரவு நேரங்கழித்து வருவது பிடிக்காது. வேண்டுமென்றே கூட நிற்க வைக்கிறானோ? மாத்திரை போடாமல் எப்படி இரவை ஓட்டப் போகிறோம் என்று பதட்டமாக இருந்தது. இந்த அலைக்கழிப்பில் வீட்டுக்குப் போன் செய்ய நினைத்தது மறந்து விட்டது. இப்போது போகலாம். திறந்து பார்த்து விட்டு மூடினால் மறுபடி திறக்க மாட்டான். அவனிடம் நிறைய வசவும் ராமச்சந்திரனிடம் உபதேசமும் வாங்க வேண்டி இருக்கும். மூக்குக் கண்ணாடியோ, வீட்டு சாவியோ, பேனாவோ எதையாவது மறந்து வைத்தாலே ‘ என்ன ஸார் மறதி நோயா உங்களுக்கு ‘ என்று தைப்பான். இந்த மருந்தின் பெயரும் காரணமும் தெரிந்தால் இதைச் சொல்லிச் சொல்லியே கொன்று விடுவானே. நிற்க முடியாமல் பதட்டமும் உடல் நடுக்கமும் மிகுந்தன. வாசற் படியில் தலையைப் பிடித்தபடி உட்கார்ந்தான்.
**__
**__**
** வசந்தியின் குரல் அந்த சிறுகதையைத் தொடர்ந்து வாசிப்பதைத் தடுத்து நிறுத்தியது. “என்னங்க திரும்பித் திரும்பி உங்க டெல்லிக் கதையையே படிச்சிக்கிட்டிருக்கீங்க?”
“நல்லா வந்திருக்கா?”
“கண்டிப்பா… நல்லாத்தான் வந்திருக்கு.”
**__
**__**
** “வணக்கம் ஸார்”
“வணக்கம்”
“நான் சென்னைலேருந்து லதா மேடத்தோட பீஏ பேசறேன் ஸார். நாங்க அனுப்பி வெச்ச ‘மதராஸி ‘ அப்படிங்கற ஷார்ட் ஸ்டோரி கிடைச்சிதா? ”
“கிடைச்சிதுங்க.”
” டெல்லியில ஸெட்டிலான் ஒருத்தர் இந்த எபிஸோடுக்கு லீட் றோல் ப்ளே பண்ணணும்னு மேடம் விரும்பறாங்க.”
“யா. நான் அவங்க ஈமெயிலைப் பாத்தேன். ஸூட்டபிளா ஒருத்தர் தமிழ்ச் சங்கத்தில ஆக்டிவ் மெம்பர். அவரு ஒத்துக்கிட்டுருக்காரு”
“கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன். நற்கதி அருள்வாயம்மா. ” இந்த பாட்டுக்கு ஒரு மேல் ஸிங்கர் வேணும்”
” நல்லா லைட் மியூஸிக் பாடரவர் ஒருத்தர் பாட ரெடியா இருக்காரு”
“ஸார் ஷூட்டிங் டிஸம்பர் டைம்ல தான் அமையும் போலிருக்கு. குளிர் அதிகமாச்சே. வர்ற டீமுக்கு நீங்கதான் தங்க ஏற்பாடு செய்யணும் ஸார்”
“ஷ்யூர்”
“தேங்க்யூ. பிறகு போன் பண்ணறோம் ஸார்”
“தேங்க் யூ. பை”
**__
**__**
**
காற்றில் ராஜேந்திரன் கவிதை தொடர்ந்தது.
செல்ல ஒரு திசை வேண்டும்
அது
எட்டாகப் பிரிந்தால்
ஒரு
திக்கு வேண்டும்
கும்பிடும் கல்
இலக்காக இருந்தது
கோபுரத்தில் கிளிகள்
இயல்பாயிருந்தன
சிறகுகள் இல்லாமல்
சில நெல் மணிகளுக்கு
ஒரு சீட்டை
எடுத்து ஒரு கிளி
எதற்கோ கட்டியம் கூறியது
கனன்று வரும்
கொல்லன் உலையினின்று
விலங்குகளை
உடைக்கும் கொடுப்பினை
இல்லாக் கோடாலி
கனவுகள் செங்கற்கள்
ஆகும்
நொடிகள்
விதை நெல்லாய்
பசித்திருக்க
வாய்த்திருக்கிறது
எலும்புச் சிறை
இறுக்கவில்லை
ஆனால்
எப்போதும்
சுற்றி வளைக்கிறது
—————————–
- நினைவுகளின் சுவட்டில் – 94
- சென்னையில் கழிந்த முதல் ஒரு பகல்
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 22
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 35
- மாமியார் வீடு
- கல்வியில் அரசியல் பகுதி – 2
- BAT MAN & BAD MAN பேட் மேனும், பேட்ட் மேனும்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பெரு வெடிப்புக்கு முன்பே பிரபஞ்சத்தில் கருந்துளைகள் சில இருந்துள்ளன (கட்டுரை 81)
- பூசாரி ஆகலாம்,! அர்ச்சகராக முடியாது?.
- ‘பினிஸ் பண்ணனும்’
- பூமிதி…..
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -4
- குடத்துக்குள் புயல்..!
- தஞ்சை பட்டறை செய்தி
- முள்வெளி அத்தியாயம் -18
- குற்றம்
- தாகூரின் கீதப் பாமாலை – 23 பிரிவுக் கவலை
- சிற்றிதழ் வானில் புதுப்புனல்
- உய்குர் இனக்கதைகள் (3)
- வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது
- ஓரு கடிதத்தின் விலை!
- பதிவர் துளசி கோபால் அவர்களின் “என் செல்ல செல்வங்கள்” : புத்தக விமர்சனம்
- தில்லிகை
- கணினித்தமிழ் வேந்தர் மா.ஆண்டோ பீட்டர் அவர்களுக்கு ஒரு அஞ்சலி
- தாவரம் என் தாகம்
- நகர்வு
- பிறை நிலா
- உலராத மலம்
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
- தமிழில் எழுதப்படும் பகுத்தறிவு சார்ந்த வலைப்பதிவுகளைத் தொகுத்து, ” தமிழ் பகுத்தறிவாளர்கள்” என்ற தளத்தை நிறுவியுள்ளோம்.
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 29)
- கற்பித்தல் – கலீல் கிப்ரான்
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-11)
- திருப்பதியில் நடைபெற்ற சாகித்ய அகாதெமியின் வடகிழக்கு மற்றும் தென்னிந்திய எழுத்தாளர்களின் சந்திப்பில் இடம் பெற்ற சில கவிதைகள்
- பஞ்சதந்திரம் தொடர் 53
- அப்படியோர் ஆசை!
- விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது