விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது

This entry is part 37 of 37 in the series 22 ஜூலை 2012

இரா.முருகன்

 

1939 ஜனவரி 27 வெகுதான்ய தை 14 வெள்ளிக்கிழமை

 

அண்ணா இது தான் அரசூர்னு ஒரு ஓர்மை. கிச்சிலிப் பழ வர்ணத்துலே அந்தக் குட்டை இருக்கே, போன விசை வந்தபோது பார்த்து மனசில் பதிஞ்சு இருக்கு.

 

துர்க்கா பட்டன் பரபரப்பாக வேதையனை எழுப்பினான்.

 

அழுத்தமான மஞ்சள் கலரில் ஜிலேபி பிழிந்து தலையில் கொம்பால் அடித்து நீட்டி வைத்த மாதிரி எழுத்துகளில் வரப் போகும் ஸ்டேஷன் பெயர் எழுதியிருக்கிறது. இது வழக்கமான மலையாளம் என்றாலோ கன்னடம் என்றாலோ துளுவன் படித்து விடுவான். கண்ணடை வேணும். ஒற்றைக் கண்ணில் அந்தக் கண்ணாடியைப் பொருதி மூக்கால் பிடித்துக் கொண்டால் போதும். தூரத்திலே பறக்கிற பட்சி,  மிதக்கிற யட்சி எல்லாமே துல்லியமாகத் தெரியும். மஞ்சள் பலகையில் எழுதின எழுத்து தமிழில் இருந்தால் எந்தக் கண்ணாடியால் பிரயோஜனம்?

 

ரயில் மெல்ல அசைந்து நிற்கப் போவது போல் போக்குக் காட்டி திரும்ப ஊரந்தது.

 

வேதையன் எழுந்து உட்கார்ந்தான். நேற்றைக்கு விடிகாலையிலே புறப்பட்டு, மஞ்சேரி, பொள்ளாச்சி, திருச்சி இப்படி தெற்கு நோக்கி பயணம்.

 

மானாமதுரை ஜங்க்ஷனில் வண்டி நின்றபோது துளுவன் ஓடிப்போய் ரயில்வே போஜன சாலையில் வாங்கி வந்த நாலு இட்டலியும், காரசாரமான துவையலுமாக சாப்பிட்டு கண்ணைச் சுழற்றிக் கொண்டு வர, உட்கார்ந்தபடிக்கே உறங்கியும் போய்விட்டான் வேதையன்.

 

சாமா அனுப்பிய கடிதம் தான் அவனை வரவழைத்தது. அவசரமாக எழுதி, மேலே ஸ்டாக்காக மகா ராஜஸ்ரீ என்று ஆரம்பித்து  சாமிநாத சர்மா என்று முடித்து நீளமாகக் கையெழுத்தை சர்க்கார் ஃபைலில் போட்டு அனுப்புவது போல் கிறுக்கி சாமா அனுப்பியிருந்தான். டிபுடி கலெக்டர் என்கிற படியால் ஜில்லா முழுசும் அறிமுகமான பிரமுகர். வேதையனுக்கு சொந்தக் காரன் தான். ஆனாலும் நினைவு வைத்திருந்து துக்கப் பத்திரிகை வைத்திருக்கானே.

 

வேதையன் அப்பா ஜான் கிட்டாவய்யர் இருந்திருந்தால், தங்கை இறந்து போனதற்கு, அதுவும் காசியில் போய் மரித்ததற்கு எப்படி எதிர்வினை செய்திருப்பார்?

 

அப்பன் ஒரு வித்தியாசமான பேர்வழியாக இருந்தார் என்பதை வேதையன் நினைத்துப் பார்த்தான். கிறிஸ்துவும் வேணும், யாராவது போகும்போது வாங்கிவரச் சொல்லி அனுப்பி கூஜா நிறைய அம்பலப்புழை பால் பாயசமும், மகாதேவ க்ஷேத்ரத்தில் வழுதணங்காய் நைவேத்தியமும் கூட வேண்டும்.

 

குரிசுப் பள்ளியில் தென்காசி முனியனின் பாண்டி மேளக் கோஷ்டியும் அப்பு மாராரின் செண்டையும் பதிவாக ஞாயிற்றுக்கிழவை பிரார்த்தனைக்கு முன் வாசிக்க வைக்கலாம் என்று அப்பன் சொன்னதை வேறு யாரும் ஏற்றுக் கொள்ளாததால் அதை நடப்பாக்க முடியாமலேயே போய்விட்டது. சர்ச் என்றால் மென்னியை நெரிக்கிற அவசரத்தில் வெள்ளைக்காரன் குரலை பாசாங்கு செய்து அதே போல் மலையாளத்தில் ஏசு கிறிஸ்து மீது உருகுகிற ஸ்தலம் இல்லை அப்பனுக்கு. ஆனந்த பைரவியில் கிறிஸ்து பிறந்ததின சோபான கீர்த்தனமும், அடாணாவில் அப்போஸ்திலர்களோடு வலம் வந்த வரலாறும், சஹானாவில் சிலுவைப்பாடும் சிட்டைப் படுத்தி வைத்தவன் ஜான் கிட்டாவய்யன். அடுத்த வருடமாவது அதை எல்லாம் சாமாவோ மருதையனோ அச்சுப்போட உதவி செய்ய, புத்தக ரூபமாகக் கொண்டு வர வேண்டும். இந்த பயணம் துக்கம் கொண்டாடி வர மட்டுமே.

 

இதுதான் போலே இருக்கு பட்டா. இறங்கிடலாம். என் கண்ணடையை எங்கே கொண்டு போய் வச்சே? உன்னோடதுன்னு எடுத்து இடுப்புலே செருகினியோ? கண்ணும் தெரியலே மண்ணும் தெரியலே.

 

வேதையன் புகார் செய்துகொண்டே கையில் கொண்டு வந்திருந்த கித்தான் பையில் துழாவிக் கொண்டிருந்தான்.

 

அண்ணா, அதை முகத்திலே பொருதி வச்சுத்தான் இருக்கறதா ஒரு தோணல்.

 

வேதையன் போதும் என்று கைகாட்டியபடி மூக்குக் கண்ணாடியைச் சட்டைப்பையில் வைத்துக் கொண்டபோது ரெயில் நின்றது. ரெண்டு வயோதிகர்களும் சிரித்துக் கொண்டே இறங்கினார்கள். அரசூரே தான்,

 

குதிரை வண்டி ஏற்பாடு செய்து கொண்டு புகையிலைக் காரர்  வீடு என்று சொன்னது இம்மியும் பிசகாது அரை மணி நேரத்தில் கொண்டு வந்து சேர்த்து விட்டான் வண்டிக்காரன்.

 

இதேது இங்கே கட்டாந்தரையும் தரிசு பூமியுமா இருந்தாலும் செடி கொடி மண்டிக்கிடக்கே.

 

சப்பாத்திக் கள்ளி இதெல்லாம். சாப்பிட ஆகாது.

 

வேதையன் சொன்னபோது வண்டிக்காரன் கையில் குதிரை லகானைப் பிடித்தபடியே பலமாகத் தலையை ஆட்டி மறுத்தான். இது அவன் ஊராக்கும். தப்பான தகவலை யார் சொன்னாலும் அவன் குறுக்கிட்டுத் தெளிவு படுத்தணும் என்ற கட்டாயம் குரலில் தெரிந்ததை வேதையன் ரசித்தான்,

 

சப்பாதிக்கள்ளி இல்லே சாமி. வேலி காத்தான். நீங்களும் நானும் சாப்பிட முடியாதுதான். ஆனா அங்கே பாருங்க.

 

அவன் காட்டிய திசையில் வெள்ளாடு ஒன்று பின்காலில் எக்கி நின்று முட்களுக்கு இடையே இருக்கும் சொற்ப இலைகளை நாவால் லாவகமாக உருவி எடுத்து அசை போட்டுக்கொண்டு இருந்தது.  ஜீவிக்க உசிரோடு கூட கொஞ்சம் புத்தியையும் அடைத்து அனுப்பி விடுகிறான் ஆண்டவன். அததுக்கு அந்தந்த மாதிரி இத்திரியாவது சாதுரியம். வேதையன் நினைத்தான்.

 

இந்த வீடுதான் ஐயா.

 

வண்டியை நிறுத்தியபடியே பின்னால் திரும்பிச் சொன்னான் வண்டிக்காரன்.

 

எத்தனையோ வருடம் முன்னால் பார்த்த அதே ஊர். அதே தெரு. கொஞ்சம் எல்லாமே அளவு குறைந்து சுருங்கி யார் பார்வைக்கு காட்சி வைக்கிறதுக்காக ஏற்படுத்தின மாதிரி.

 

புகையிலைக்கடை வீட்டுக்கு அடுத்து காரை உதிர்ந்து நிற்கும் அரண்மனை தான் பள்ளிக்கூடமாக மாறி இருக்கிறது. சாரி சாரியாகக் குழந்தைகள் உள்ளே போன மணியமாக இருக்கிறார்கள். குடை பிடித்து, பாளைத்தார் உடுத்தி வாத்தியார்மார்களும்.

 

வேதையன் படி ஏறி வீட்டுக்குள் போனபோது சாமா திண்ணையில் யாரோடோ பேசிக் கொண்டிருந்தான். அவனோடு சம்பாஷணை செய்து கொண்டிருந்தவனின் தலை நிற்காமல் ஆடிக் கொண்டிருந்தது. ‘ஆனா என்ன, கொடுத்து வச்ச மகாராஜி’ அவன் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.

 

வேதையனும் பின்னாலேயே அவனுடைய தளர்ந்த நிழல் போல் துர்க்கா பட்டனும் படி ஏறி வருவதை சாமா பார்த்தான். வா வா என்று சொல்ல வாய் வரை வந்துவிட்டதை அடக்கிக் கொண்டு மௌனமாகத் தலையை அசைத்தான். முன்னால் இருந்தவனும் அவர்கள் பக்கமாகப் பார்த்து விட்டு தலையாட்டலைத் தொடர்ந்தபடி சொன்னான்.

 

கல்யாணச்சாவு சார். அதேதான்.

 

அவன் சாமா வீட்டுக்குள் இருந்து யாரோ கொண்டு வந்த காப்பியை ஒரு துளி மிச்சம் இல்லாமல் குடித்து முடித்து திரும்பத் தலையாட்டியபடி வைபோகம் என்றபோது சாமா கை கூப்பி அப்புறம் பார்க்கலாம் என்றான்.

 

துக்கித்தவன் மனசே இல்லாமல் இறங்கிப் போனான்.

 

துக்கம் கேட்க வந்ததிலேருந்து தலையாட்ட ஆரம்பிச்சான். அரை மணி நேரமா அதான் செஞ்சுண்டிருந்தான். அம்மா இருந்தா சிரிச்சிருப்பா. நீ வந்தியோ நான் பொழச்சேனோ.

 

அது நானாக்கும் அனுப்பி வச்சது. காப்பி கொண்டு வரல்லேன்னா இன்னும் சோபானம் சோபானம்னு பாடிண்டிருப்பார்.

 

சாமா பெண்டாட்டி சிரித்தபடி இவர்களை வரவேற்று விட்டு வெற்று தம்ளரோடு உள்ளே போனாள்.

 

உன் கூடப் பேச வேண்டியது உனக்கு கைமாற வேண்டியதுன்னு ஒருபாடு இங்கே உண்டு. முதல்லே நீயும் பட்டனும் குளிச்சு ஆகாரம் பண்ணுங்கோ. வென்னீர் போட்டு ரெடியா வச்சிருக்கு.

 

வேதையனைக் கையைப் பிடித்துக் கிணற்றடிக்குக் கூட்டிப் போனான் துர்க்கா பட்டன்.

 

தலை துவட்ட துண்டு எடுத்துக்காம கிணத்தடிக்குப் போயிட்டியே.

 

சாமா மொரிச் என்று வெள்ளைத் துண்டோடு வந்து பட்டனிடம் கொடுத்தான். இரைத்து ஊற்றி வைத்திருந்த கிணற்று நீரை கொதிக்கக் கொதிக்க வேம்பாவில் போட்டு வைத்திருந்த வென்னீரோடு கலந்து வேதையன் முதுகில் ஊற்றிக் கொண்டிருந்த பட்டன் கை நடுங்க செம்பை வைத்துவிட்டு அதை வாங்கினான்.

 

அண்ணாவுக்கு இடது காது சரியாக் கேட்கலே. கையும் ஆத்திர அவசரத்துக்கு வழங்க மாட்டேங்கறது.

 

சாமா வேதையனை பரிதாபமாகப் பார்த்தான். அவன் தரையில் குத்துக்காலிட்டு தலைகுனிந்து அடுத்த குவளை நீர் முதுகை நனைக்க சிறகு உதிர்த்த கிழட்டுப் பறவை போக குந்தியிருந்தான்.

 

பட்டனுக்கும் கால் தள்ளாடுகிறது. கை நடுக்கம். சாமாவுக்கு கண் பார்வை அடிக்கடி மறைக்கிறது. இந்த கிட்டத்தட்ட ஒரே வயசு மனுஷர்களில் மருதையன் மட்டும் தான் இன்னும் திடகாத்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறான். அவனுக்குள்ளும் என்ன தளர்ச்சி இருக்கோ?

 

சாமா கிணற்றடியில் துவைக்கிற கல்மேல் உட்கார்ந்து குவளை நீரை வேதையன் மேல் சரித்தான்.

 

பட்டா, என்னது முதுகு பொள்ளிப் போகும். தணுத்த வெள்ளம் கலக்க மறந்து போனியோ?

 

வேதையன் அவசரமாக புகார் செய்தபடி தலையை நிமிர்த்த சாமாவைப் பார்த்துச் சிரித்தான்.

 

டெபுடி கலெக்டரை குளிப்பாட்டி சீராட்ட ஊர்லே ஆயிரம் பேர் இருக்க டி.சி என்னைக் குளிப்பாட்ட கொடுத்து வச்சிருக்கணுமே.

 

சாமா துக்கம் கேட்க வந்தவன் போல் தலையை ஆட்டினான்.

 

கொடுத்து வச்சிருந்தா இப்படி கூட்டிண்டு போய் அம்மாவைத் தொலைச்சுத் தலை முழுகிட்டு வந்திருப்பேனா வேதையா. எல்லாம் என் தலையெழுத்து.

 

இரு வந்துட்டேன். இன்னிக்கு முழுக்க பேசிட்டுப் போகத்தானே வந்திருக்கேன்.

 

வேதையன் சுதேசி சோப்பை மேலே தேய்த்தபடி அவனைக் கையமர்த்தினான்.

 

அடுத்த நாலைந்து குவளை மேலே விழுந்து நுரைத்து வழிந்ததும் போதும் என்று எழுந்தான் வேதையன். பட்டன் அவனுக்குக் குழந்தை மாதிரி தலையைத் தாழ்த்தி வைத்து ஈரம் போகத் துவட்டி விட்டான். சாமாவுக்கு மனசுக்கு இதமான காட்சியாக அது இருந்தது.

 

இவனை நான் உள்ளே கூட்டிப் போறேன். நீயும் குளிச்சுட்டு வா பட்டா.

 

சாமா கைத்தாங்கலாகப் படி ஏற்றி வேதையனை உள்ளே கூட்டிப் போனான்.

 

ரெண்டு இட்டலிக்கு மேல் வேண்டாம் என்று கை காட்டி விட்டான் வேதையன். அவனுக்கு ஆகாரமும் பானமும் கூட தேவை சுருங்கிக் கொண்டிருக்கிறதை சாமா கவனித்தான். வயோதிகம் சில பேரை பெருந்தீனிக்காரன் ஆக்குகிறது. வாய் ஓயாமல் பேச வைக்கிறது.  அஞ்சு நிமிடத்துக்கு ஒரு தடவை ஒரு மிடக்கு பானம் செய்ய வைக்கிறது. கண்ணுக்குக் கீழே சதை தொங்கி தூங்கும் நேரத்தில் வாயில் எச்சிலாக வழிந்து தன்மையை மாற்றிப் போடுகிறது. இன்னும் சில பேரையோ யோகி ஆக்கி ஆளைச் சுருக்கி ஆகாரத்தைச் சுருக்கி ஆத்மாவைப் பெருக்கியோ விரித்தோ என்னமோ மாயம் செய்கிறதும் அதே வயோதிகம்தான். சாமாவும் வயோதிகன் தான். எந்தப் பக்கம் அவன் போகிறான் என்றுதான் அவனுக்கு அர்த்தமாகவில்லை.

 

வேதையா, பயணம் எல்லாம் சௌகரியமா இருந்துச்சா?

 

மருதையன். காலையில் ஊரைச் சுற்றி நடந்து விட்டு அரைக்கால் சட்டையும் வியர்வையில் நனனந்த பனியனுமாக ரேழிக் கதவை ஒட்டி நின்று சொன்னான்.

 

ரிடயர்ட் பிரின்சிபால் சாருக்கு என்ன, ஜாம்ஜாம்னு வந்து இறங்கியிருக்கார். நீ உள்ளே வாயேன் மருதையா. ஒரு வாய் காப்பி சாப்பிட்டபடி மலபார் நியூஸ் எல்லாம் கேட்கலாம்..

 

இன்னும் குளிக்கலியே சாமிகளே.

 

ஆனாலும் அவன் உள்ளே வந்து பாயில் எட்டி உட்கார்ந்தான்.

 

கூடத்தில் இன்னொரு மடக்கு காப்பியோடு சாமா பெண்டாட்டி வந்தபோது அதுவும் வேண்டாம் என்று மறுத்து விட்டான் வேதையன். பட்டன் மட்டும் தட்டாமல் வாங்கிக் கொண்டான். காப்பி சோம பானம் சுரா பானம் போல. தேவர்கள் ஆசிர்வதித்து அனுப்புவது. நடு ராத்திரிக்கு எழுப்பி யாராவது நீட்டினாலும் பவ்யமாக வாங்கிப் பருக வேண்டியதே தேச ஆச்சாரம் என்றான் பட்டன்.

 

சாமிகளே, சாயாவையும் இப்படி சாமி பிரசாதம் ஆக்கிடப் போறாங்க என்றான் மருதையன்.

 

இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம்.

 

பாதியில் நிறுத்தினதை மீண்டும் தொடங்கினது போல் சாமா தரையைப் பார்த்தபடி சொன்னான்.

 

அவன் நினைப்பு அம்மா பகவதியைப் பற்றி என்று அங்கே யாருக்கும் யாரும் எடுத்துத் தர வேண்டி இருக்கவில்லை.

 

ஒரு நாள். ஒரே ஒரு நாள். அது கூட அவளைத் தூக்கி எறிஞ்சு ஏதும் சொல்லலே. பட்டணத்திலே இருந்து கட்டித் தூக்கி வந்திருந்த ஏதோ கலசத்தை கங்கையிலே விடறதுக்கு மறந்து போச்சு. சத்திரத்துலேயே ஒப்படைச்சுட்டுப் போனா அவங்க பார்த்துப்பாங்கன்னு சொன்னது அவளுக்கு ஆகலே.

 

குழந்தை பொம்மை மேல் வைக்கிற பிரியம் மாதிரி அந்த கலசத்து மேலே அம்மா வைச்சிருந்தாங்கன்னு தெரிஞ்சும் கொஞ்சம் ஏனோ தானோன்னு நாங்க நடந்துட்டது தப்புதான்.

 

மருதையன் காபி டபராவை தரையில் கரகரவென்று அங்கேயும் இங்கேயும் நகர்த்திக்கொண்டே சொன்னான்.

 

காசியை விட்டுக் கிளம்பற அன்னிக்கு விடி காலையிலே, அவ அப்படி எல்லாம் தனியாப் போறவ இல்லே., ஏதோ ஒரு தைரியம், தன்னம்பிக்கை. நடந்து எங்கேயோ போய்ச் சேர்ந்துட்டா. மணிகர்ணிகா கட்டம்னு மசானம். அங்கே எப்படிப் போனா, எதுக்குப் போனா. ஒண்ணும் தெரியலே.

 

பைராகிக் கூட்டத்துக்கு பின்னாலே போகாம அவங்க முன்னாடி நான் புகுந்து புறப்பட்டு நடந்திருந்தா அம்மா பிழைச்சிருப்பாளோ என்னமோ.

 

கங்கையிலே அந்த புண்யாத்மா கலக்கணும்னு இருந்திருக்கு. நீங்க யாரு என்ன செஞ்சாலும் அது பாட்டுக்கு அது நடந்து தான் இருக்கும்.

 

பட்டன் தீர்மானமாகச் சொன்னான். அவன் சொன்னதற்கு எதிர்ப்பேச்சில்லை.

 

வேதையன் சாயந்திரமே கிளம்பி விட்டான். துக்கம் கேட்க வந்த இடத்தில் ராத்தங்கக் கூடாது என்று பட்டன் வற்புறுத்தி இருந்தான்.

 

அவன் கிளம்பும்போது சாமா ஒரு பழுப்பு உறையை எடுத்து வந்து கையில் கொடுத்தான்.

 

என்ன இது சாமா?

 

பட்டிணம் ரிடையர்ட் எமிக்ரேஷன் ஆபிசர் நீலகண்டன் வகையிலே உனக்கு வர வேண்டியது. பிரிச்சுப் பாரு.

 

பட்டன் கண் கண்ணாடியை நீட்ட அதை பிரித்தான் வேதையன்.

 

மலையாளத்தில் எழுதிய பழைய பத்திரம். அவனுக்கு அம்பலப்புழை நிலத்தை பாத்தியதை ஆக்கி மகாதேவன் எழுதிக் கொடுத்தது. ரிஜிஸ்தர் ஆப்பீசில் எண்ட்ரி போட வேண்டி சமர்ப்பித்த கோப்பி என்று மேலே ராஜாங்க முத்திரையிட்டு நெம்பர் எழுதி வைத்தது.

 

‘கொல்ல வருடம் ஆயிரத்து எழுபத்து நாலு மேடம் ஒண்ணு. கிறிஸ்து சகாப்தம் ஆயிரத்து எண்ணூற்றுத் தொண்ணூத்தொன்பது. கொல்லூர் தேவி க்ஷேத்ரத்தில் புஷ்பம் சார்த்தி உத்தரவு கிடைத்தபடி அம்பலப்புழை மகாதேவய்யன் நல்ல தேக ஆரோக்யமும், ஸ்வய புத்தியும் பூர்ண திருப்தியுமாக தனது சிறிய தகப்பனார் அம்பலப்புழை ஜான் கிட்டாவய்யன் குமாரனும் ஒன்று விட்ட சகோதரனுமான வேதய்யனுக்கு எழுதிக் கொடுத்தது யாதெனில்’.

 

இது எங்கே இருந்து எனக்கு எப்படி?

 

அவன் கேள்வி எதுக்கும் யாரிடமும் விடை இல்லை.

 

தெரிஞ்சு என்ன ஆகணும்? உங்களது உங்க கைக்கு வந்தாச்சு. அவ்வளவுதான்.

 

பட்டன் மூட்டைகளைச் சுமந்து கொண்டு முன்னால் போனான்.

 

ஆயுசுக்கும் அவனைத் தொடர்ந்தால் போதும் என்பது போல் அவன் கால் தடம் பதிந்த பாதையில் வேதையனும் இறங்கி நடந்தான்.

 

(தொடரும்)

Series Navigationஅப்படியோர் ஆசை!
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Comments

  1. Avatar
    ravi says:

    Murugan Sir, your writing is so fantastically deep, varied, indepth, nonformulaic work, a great writer you are. It amazes me how many details you have captured in every line, and I wonder if one writer can KNOW so much of rich detail from any life he himself has not lived through and yet I am sure you have not lived in the times and places you have written. Would love to share my appreciation in email, I think I have your email from long ago.

    You are truly a World-class writer – I should say, world-expanding writer. Best wishes, Ravi Annaswamy, Cleveland OH.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *