குந்துமணியும் கறுப்புப் புள்ளியும்

This entry is part 15 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

தெலுங்கு மூலம் :சாரதா(Australia)

தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

மெல்போர்ன்லிருந்து அடிலைட்க்கு ஆபிஸ் வேலையாய் போகணும் என்று தெரிந்ததுமே குதித்து கும்மாளம் போடாத குறையாய் சந்தோஷப்பட்டான் ஸ்ரீதர். நிம்மதியாய் தங்கை சுநீதாவுடன் ஒரு மாதம் சேர்ந்து இருக்கலாம். சுநீதாவின் கணவன் மதுவும் ஸ்ரீதரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் மட்டுமே அல்லாமல் நல்ல நண்பர்களும் கூட. திருமணம் ஆகி நாடு விட்டு நாடு வந்த பிறகு இப்படி ஒருத்தர் வீட்டில் ஒருத்தர் நிறைய நாட்கள் சேர்ந்து இருப்பது இதுதான் முதல் தடவை.

அடிலைட் வந்து ஒரு வாரமாகி விட்டது. ஏனோ தெரியவில்லை. ஸ்ரீதருக்கு எதிர்பார்த்த அளவுக்குக்கு சந்தோஷம் இருக்கவில்லை. சுநீதாவும், மதுவும் தன்னிடம் பிரியமாகத்தான் இருக்கிறார்கள். தங்கையின் குழந்தைகள் திவ்யா, காவ்யா வீட்டில் இருக்கும் போது “மாமா மாமா” என்று சுற்றிச் சுற்றி வந்து கொண்டு இருக்கிறார்கள். பின்னே அசௌகரியமாக இருப்பானேன்?

ஒய்வு ஒழிச்சல் இல்லாமல் தங்கை வீட்டு வேலைகளுக்கு இடையே நலிந்துபோவது போல் தோன்றியது. மது சுநீதாவிடம் அன்பாகத்தான் இருக்கிறான். புடவை, நகை என்று வாங்கித் தருகிறான். வெளியில் அழைத்துக் கொண்டு போகிறான். ஆனால் வீட்டு வேலைகள் என்றால் அவனுக்கு சோம்பேறித்தனம் வந்துவிடும். காலை எழு மணிக்கு முன்னால் எழுந்துகொள்வது அவனுக்கு பழக்கம் இல்லை. புத்தகங்கள் வாசிப்பது, பாட்டு கேட்பது தவிர அவனுக்கு வெறு எந்த வேலையும் பிடிக்காது. இந்தியாவில் இருப்பது போல் இங்கே வேலைக்கு ஆட்கள் இருக்க மாட்டார்கள். சுனிதா ஒற்றை ஆளாய் சமையல் வேலை, வீட்டு வேலைகள், துணிகள் தோய்ப்பது, குழந்தைகளை கவனிப்பது, ஆபீஸ் வேலை என்று நலிந்து போய்க் கொண்டிருந்தாலும் அவனுக்கு எறும்பு கடித்தாற்போல் கூட இருக்கவில்லை. கணவன் மனைவி இரண்டு பேரும் வேலைக்கு போய் வந்து கொண்டிருந்தாலும் தங்கையின் கணவன் கொஞ்சம் கூட ஒத்தாசை செய்யாமல் இருப்பது அநியாயம் என்று தோன்றியது. சுநீதாவாவது சண்டை போட்டு வேலை வாங்காமல் இருப்பானேன்? பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாமல் தன்னால் முடிந்த ஒத்தாசை செய்யத் தொடங்கினான்.

அப்படியும் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒருநாள் கேட்டு விட்டான். சிரித்துக் கொண்டேதான் கேட்டான். “மது கொஞ்சம் ஒத்தாசை செய்தால் நன்றாக இருக்கும். எப்போதும் இப்படித்தானா? அல்லது எப்போதாவது உதவி செய்யும் வழக்கம் உண்டா?”

“அந்தமாதிரி எதிர்பார்ப்புகள் எதையும் வைத்துக்கொள்ளாதே. இந்த பாரத்தை என்றைக்காக இருந்தாலும் நான்தான் சுமக்கணும்.”

பதில் பேசாமல் சும்மா இருந்துவிட்டான்.

*****

ஞாயிற்றுக்கிழமை மது நூலகத்திற்குப் போயிருந்தான். வேலைகளை முடித்துக் கொண்டு அண்ணன் தங்கை சாவகாசமாய் உடகார்ந்து இருந்தார்கள். தங்கையின் மகள்கள் இருவரையும் கொஞ்சிக் கொண்டிருந்தான் ஸ்ரீதர்.

“இரண்டுமே பெண் குழந்தையாகி விட்டார்கள். ஒரு பையனாவது இருந்திருக்கலாம்.” சிரித்துக் கொண்டே சொன்னான்.

“பையன் இருந்து என்ன பண்ணப் போகிறான்? எனக்கு பெண்குழந்தை என்றால்தான் பிடிக்கும்.”

“ஏன் அப்படிச் சொல்கிறாய் சுனிதா? உனக்கு மட்டும் மகன் வேண்டும் என்று ஆசை இருக்காதா?

“இல்லை என்று சொன்னேனே?”

வியப்படைந்தான் ஸ்ரீதர். மகன் பிறக்க வேண்டும் என்று பைத்தியமாக இருக்கும் தாய்மார்களை, மகன்களை தலையில் வைத்துக் கொண்டு கொண்டாடி, எந்த விஷயத்திலேயும் மற்றவர்மீது சார்ந்திருக்கும் ஓட்டுன்னிகளாய் உருவாக்கும் தாய்குலத்தைக் கண்டிருக்கிறான்.

சுனிதா மேலும் சொன்னாள். “உணமைதான் அண்ணா! ஆண்குழந்தகளால் யார் சுகப்பட்டார்கள்? அவர்களால் சுயமாக ஒரு காரியத்தையும் செய்துகொள்ளத் தெரியாது. அவர்களுடைய பாரத்தை சிறுவயதில் தாய், இளமையில் மனைவி, மனைவி இல்லாது போனால் மகளோ, மருமகளோ சுமக்க வேண்டியதுதான். என் கணவனையே எடுத்துக்கொள். தனியாய் விட்டுவிட்டுப் போனால் அவருடைய உடைகளை கூட தேடி எடுத்துக்கொள்ளத் தெரியாது.”

“சின்னச் சின்ன விஷயங்களுக்கு மனதை வருத்திக் கொள்ளாதே சுனிதா.”

“இது சின்ன விஷயமா? ஒரு மனுஷி கடியாரத்து முள்ளுக்கு சமமாய் சலிப்போ எரிச்சலோ இல்லாமல் நாள் முழுவதும் உழைத்துக் கொண்டு இருக்கும் போது, கூட இருப்பவன் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு மீசையில் இல்லாத வெள்ளை முடியைப் பிடுங்கிக் கொண்டு உட்கார்ந்திருப்பது சின்ன விஷயமா? என்னுடைய பிரச்சினைகள், வேலைகள் அவனையும் சேர்ந்தது இல்லையா? மணல் துகள் கூட சின்னதுதான், கண்ணில் விழாதவரையில். வெறும் புடவை, நகை வாங்குவதுடன் மனைவியின் மீது அன்பு முடிந்து விடாது. எனக்கு மட்டும் பாட்டு கேட்க வேண்டும் என்றும், புத்தகம் படிக்க வேண்டும் என்றும் இருக்காதா? நான் எந்த நபரையாவது நேசித்தால் அந்த நபர் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால் பார்த்துகொண்டு சும்மா இருக்க மாட்டேன். என்னால் முடிந்த ஒத்தாசை செய்வேன். வீட்டு வேலைகள் செய்வதும் ஒரு கஷ்டமா என்று சொல்லாதே. இரண்டே இரண்டு நாட்கள் வீட்டில் எல்லோருக்கும் வேளைக்கு எல்லாம் செய்து வைத்துவிட்டு, அலுவலகத்துக்கும் போய் வா. அப்போது புரியும்.” கண்கள் சிவக்க ஆவேசமாய் மொழிந்த தங்கையைப் பார்த்து மிரண்டு போய்விட்டான்.

“போகட்டும். வேலையை விட்டுவிடு.”

“நீயும் சராசரி ஆணைப்போல் அறிவுரை வழங்குகிறாய் அண்ணா! you are solving a wrong problem. கஷ்ட சுகங்கள் புரிந்துகொள்ளும் அறிவு கணவனுக்கு இல்லை என்றால் மனைவி தன்னுடைய கேரீரை தியாகம் செய்ய வேண்டும். போகட்டும் பெண்பிள்ளைகளுக்கு படிப்பே வேண்டாம். வீட்டு வேலைகள் கற்றுக் கொடுத்தால் போதும் என்றால் அதுவும் முடியாது. தொழில்ரீதியான கல்வித் தகுதி இருந்தால் வரதட்சணையில் சலுகை கிடைக்கும் இல்லையா. அதுமட்டுமே இல்லை. கணவனாக இருப்பவன் அதிகம் சம்பாதிப்பவனாக இல்லாமல் போனாலோ, வருமானம் போதாமல் போனாலோ பெண்கள் வேலைக்குப் போகாமல் இருக்க முடியாது. அதனால் பெண்கள், தேவை ஏற்பட்டால் கணவனுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் வேலைக்குப் போக வேண்டுமே தவிர, தொழில் மீது விருப்பத்துடன் அல்ல. அதனால் பெண்கள் படிக்கும் போதே ‘இந்த படிப்பை வைத்துக் கொண்டு வேலைக்குப் போவேனோ, மாட்டேனோ, இந்த படிப்பு உதவுமோ உதவாதோ’ என்ற பற்றற்ற தன்மையுடன் படிக்க வேண்டும்.”

தங்கையின் லாஜிக்கை கேட்ட பிறகு ஸ்ரீதருக்கு தலையை சுற்றிக் கொண்டு வந்தது.

“அதனால் பிரச்சினை பெண்கள் வேலைக்குப் போவது அல்ல. ஆண்களிடம் இயல்பாகவே படிந்துவிட்ட சோம்பேறித்தனம், பொறுப்பற்ற குணம்.”

“உண்மையைச் சொல்லணும் என்றால் தாய்மார்களே மகன்களை அந்த விதமாய் வளர்த்து விடுகிறார்கள்.” எல்லோரையும் போல் குற்றத்தை பெண்கள் மீதே தள்ளிவிட்டான் ஸ்ரீதர்.

சுநீதாவுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. “சின்ன வயதில் செய்ய முடியாத எத்தனையோ வேலைகளை பெரியவர்கள் ஆன பிறகு கற்றுக் கொள்கிறோம். கார் ட்ரைவிங், சிகரெட் பிடிப்பது. அதை எல்லாம் சின்ன வயதிலேயே தாயின் விருப்பத்தின் படியே கற்றுக் கொள்கிறார்களா இந்த ஆண்கள்? வீட்டு வேலைகளை கற்றுக்கொள்ள என்ன கேடு வந்தது?”

ஸ்ரீதருக்கு வாயடைத்துப் போய் விட்டது.

சூழ்நிலையை எளிதாக்க முயல்வது போல் சிரித்துக்கொண்டே “போன ஜென்மத்தில் ஆணாய் பிறது மனைவியைப் பாடாய் படுத்தி இருப்பேன். இந்த ஜென்மத்தில் அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன்” என்று எழுந்து உள்ளே போனாள் சுனிதா.

ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்த காவ்யா “குந்துமணி தன்னுடைய கறுப்பை உணராது என்றால் என்ன மம்மி?” என்று கேட்டுக் கொண்டிருந்தாள் தாயை.

திடுக்கிட்டான் ஸ்ரீதர். தன்னுடைய விஷயம் என்ன? சுநீதாவைப் போலவே தன் மனைவி சரளாவும் தன் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டு வருகிறாளா?

தான் வீட்டில் சரளாவுக்கு கொஞ்சமோ நஞ்சமா உதவி செய்வான். ஆனால் அது அவள் வேலை பளுவை குறைக்கும் முயற்சி இல்லை. “இது நம் இருவரின் வேலை. ஆளுக்குப் பாதியாய் பகிர்ந்துக் கொண்டு செய்வோம்’ என்ற கண்ணோட்டத்தை விட “இது உன் வேலை. போனால் போகிறது பாவம் என்று கொஞ்சம் ஒத்தாசை செய்கிறேன்’ என்ற எண்ணம்தான் மேலோங்கி இருக்கும்.

அதனால் சிலசமயம் “மூட் இல்லை. போர் அடிக்கிறது” என்று சாக்கு சொல்லி வேலை செய்யாமல் தப்பித்துக் கொள்வான். மதுவைப் போலவே தனக்கும் இந்தியாவை விட்டு வந்தாலும் அங்கே செய்வது போல் வகை வகையாய், வக்கணையாய் டிபன், சாப்பாடு பிடிக்கும். அதனால்தான் சரளா ப்ரெட், சிரியல்ஸ் ஜோலிக்குப் போகாமல் தனக்குப் பிடித்த விதமாகவே சமைப்பாள். இந்தியாவில் இருப்பது போல் வேலைக்காரர்கள் இருக்க மாட்டார்கள் என்று தெரிந்து கூட அதே போல் செய்யவேண்டும் என்று தனக்கு தோன்றுவானேன்?

“சரளா! கார் டிரைவிங் கற்றுகொள். நானே எல்லாவற்றுக்கும் போக வேண்டும் என்றால் கஷ்டமாக இருக்கிறது” என்று தான் சொன்ன போது,

“இந்தியாவில் செய்வது போல் இங்கேயும் வெளிவேலைகளை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். டிரைவிங் எனக்கு சின்ன வயது முதல் பழக்கம் இல்லை” என்று தன் வாதத்தை தனக்கே ஏன் திருப்பவில்லை?

இந்தியாவில் இருக்கும் தம்பி கிஷோர் மட்டும்?

“அம்மா ஒண்டி ஆளாய் வீட்டு வேலைகள் செய்ய ரொம்ப கஷ்டப்படுகிறாள். நான் கல்யாணம் செய்துகொண்டு மருமகளை அழைத்து வந்து அம்மாவுக்கு ரெஸ்ட் கொடுப்பேன்” என்பான் தன்னால் ரெஸ்ட் கொடுக்க முடியாது என்பது போல்.

மெல்போர்ன் லிருந்து திரும்பி வந்தது முதல் ஸ்ரீதரிடம் ஏற்பட்ட மாறுதலைக் கண்டு முதலில் வியப்படைந்தாலும், சந்தோஷப்பட்டுக் கொண்டாள் சரளா. அடுத்தப் பிறவியில் பெண்ணாக பிறப்பதற்குப் பயந்து விட்டது போல், ஸ்ரீதர் மனைவிக்கு எல்லா வேலையிலும் உதவி செய்வதுடன் ஒத்தசையாகவும் இருந்தான்.

———

Series Navigationஅமேசான் கதை – 2 வாழ்வு தரும் மரம்தார் சாலை மனசு
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *