வானவில்லின்……வர்ணக் கோலங்கள்..!

This entry is part 28 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

(இது ஒரு உண்மை சம்பவத்தை நேரில் கண்டு புனைந்த கதை)

மணி நாலாகப் போறது…ஸ்கூல் விட்டு இந்திரா வரும் நேரம். அவளுக்கு ரெடியா ஹார்லிக்ஸ் கலந்து கூடவே கிரீம் பிஸ்கட்டும், சுண்டலும் வைத்து விட்டு, இன்னைக்கு இந்து, என்ன பிரச்சனையைக் கொண்டு வரப் போறாளோ…? எட்டு வயசு தான் ஆறது….மூணாங்கிளாஸ் படிக்கறதுக்குள்ளேயே தினம் ஒரு புகாரோடத்தான் உள்ளே நுழைவாள், இப்பவே இப்படி…என்ற கலக்கத்தோடு எதிர்பார்த்துக் காத்திருந்தாள் ரேகா.

வாசலில் ஆட்டோ சத்தம்..கேட்கவும் உற்சாகத்தோடு …இன்னைக்கு சீக்கிரமே வந்துட்டாளே..என்று வெளியில் வந்து நிற்க, ஆட்டோவை விட்டு இறங்கிய இந்திரா வழக்கத்திற்கு மாறாக முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவள்…”எப்போ வேணா அழுதுடுவேன்” என்று இவளை பயமுறுத்தினாள்.

“வா..வா..வா..வா..இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டியே…என் கண்ணம்மா …” என்று கட்டி அணைத்தபடியே இந்துவின் கையிலிருந்த லஞ்ச் கூடையையும், தோளில் கனத்த புத்தகமூட்டையையும் கை மாற்றி வாங்கிக் கொண்டு….அவளது “தூக்கி வச்ச முகத்தை” சட்டை செய்யாமல், வா….வா…கை கால் அலம்பீண்டு என்றவளை,வரலாம்…என்றவளை,

“அம்மா இத்தனை நாளா நான் உன்கிட்ட சொல்லாமே இருந்தேன். தினம் இந்தப் பிரியா என்னை அழ வைக்கிறாள். இன்னைக்கு டீச்சரும் சேர்ந்து கொண்டாள்.”

“அம்மா…..நான் கருப்பா..இருக்கேனாம் ……நான் காக்கா மாதிரி கருப்புன்னு ப்ரியா கிண்டல் செய்றாள் ? நீயே சொல்லும்மா…நான் கருப்பா ? உடைந்து போய் கேட்ட குழந்தையை….திடுக்கிட்டு அணைத்தவள்…”இன்று பிரச்சனை வேற விதமா… உருவம் எடுத்திருக்கு” புரிந்து கொண்ட ரேகா, செல்லத்துக்கு என்னாச்சு இன்னைக்கு…? யார் என்ன சொன்னா என் தங்கத்தை? என்று கொஞ்சி கன்னத்தில் முத்தமிட.

எல்லாரும் தான் சொல்றா…நான் கறுப்பாம்…ப்ரியா ரொம்ப சிவப்பாம்….என்னைக் கேலி பண்றா…உனக்குத் தெரியுமா? நான் நாளையில் இருந்து இந்த ஸ்கூலுக்குப் போக மாட்டேன்…போ..” தனது முடிவில் மிகவும் தீவிரமாகச் சொன்னவளை அதிர்ச்சியோடு பார்த்தாள் ரேகா…

இல்லடா கண்ணே….நீ இதுக்கெல்லாம் கவலைப் படக் கூடாது…நான் நாளைக்கு உங்க ஸ்கூலுக்கு வந்து பிரின்சிபால் மேடத்தைப் பார்த்து பேசறேன்.எல்லாம் சரியாயிடும். இப்போ நீ சமத்தாப் பாலைக் குடி…அம்மா இருக்கேன்..உனக்கென்ன கவலை…நான் பார்த்துக்கறேன்…அந்த சிவப்புப் ப்ரியாவை…! அவள் இங்கே தான் சிவப்பு… அவளே… அமெரிக்கா போனால், அங்க அவளை வெள்ளைக்காரிகள் எல்லாரும் கறுப்பின்னு கேலி பண்ணி சிரிப்பா….தெரியுமா..? என்று சமாதானப் படுத்த முயல…

ஏன்மா….அமெரிக்கால போனா ப்ரியாவையே கறுப்பின்னு கேலி பண்ணினா…என்னை என்ன சொல்லுவா..?அப்போ அமெரிக்காவில் சிகப்பா இருக்கறவா வேற மாதிரி இருப்பாளாம்மா… என்று கேட்டாள் இந்திரா.

இல்லை இந்து…இடத்துக்கு இடம் நிறம் வேறு படும்..அமெரிக்காவிலே வெள்ளைக்காரரைத் தவிர மற்ற எல்லாரும் கருப்பர்தான் ! …அதே போல ..நீக்ரோக்கள் ரொம்ப ரொம்ப கருப்பா இருப்பா…ஆனாலும் ரொம்ப அழகா இருப்பா. மனுஷா எல்லாரும் ஒரே நிறத்தில் இருக்க மாட்டா….ஒவ்வொருத்தர் ஒவ்வொரு நிறம்…நீ மாநிறம்..கோதுமை நிறம் தெரியுமா…? உன்னைப் போய் கருப்புன்னு யார் சொல்றா?

அம்மா….டீச்சரும் என்னைக் கருப்பி ன்னு தான் சொன்னா… ஏழு வர்ணங்கள் சேர்ந்த ஒரு வானவில், ஒளியிலிருந்து வருது ன்னு சொல்லித் தந்து….ஒவ்வொரு கலராச் சொல்லிட்டு…அப்படியே நாம கூட ஒவ்வொருத்தர் ஒவ்வொரு நிறத்தில் இருப்போம்… உதாரணமாக ப்ரியா சிவப்பு, கீதா மாநிறம், நந்தினி கருப்புன்னு… சொன்னாம்மா….எனக்குப் பிடிக்கலே . ! இந்த ஸ்கூல் வேண்டாம்மா…நான் படிக்க மாட்டேன்….. இனிமேல் இந்த டீச்சரிடம் !. ஏம்மா வானவில்லில் கருப்பு கலரே இல்லையே !!!! குழப்பத்துடன் கேட்டாள் இந்திரா.

மூன்றாவது படிக்கும் இந்திரா ரொம்ப புத்திசாலி.எல்லாத்தையும் துருவித் துருவி கேட்டு பதில் சொல்வதற்குள் போதும் போதும் என்றாகி விடும் ரேகாவுக்கு . ஏற்கனவே எதைச் சொன்னாலும் அதை அளவுக்கு அதிகமாகவே புரிந்து கொண்டு அதை பற்றி தனக்குத் தெரிந்ததையும் சேர்த்து சொல்லும் அறிவு. இப்ப கேட்கணுமா ? இந்திராவின் மனக் குழப்பத்துக்கு.

கண்ணம்மா….நான் தான் நாளைக்கு வரேன்னு சொன்னேன் இல்லையா..? இன்னைக்கு அப்பா வரட்டும், அவர்ட்ட சொல்லி என்ன சொல்றார்னு பாரு. உன் டாடி கரெக்ட்டா உனக்கு சொல்வார். சரியா..உங்க டீச்சர் அப்படி சொல்லிருக்க மாட்டா…உன் காதில் சரியா விழுந்திருக்காது..சரி..இதையே பத்தி நினைச்சுண்டு இருக்காதே….என்று சமாதானமாகப் பேச…

நோ…டீச்சரும், இந்திரா கருப்புன்னு சொன்னா…..நான் கேட்டேன்..அப்பறம்..ஆட்டோவில் ப்ரியா என்கிட்டே, கேக்கறா…இந்திரா, உங்கம்மா..தான் ரொம்ப சிவப்பாச்சே….அப்பறம் நீ ஏன் கருப்பாப் பிறந்திருக்கேன்னு.. இதைச் சொல்லும்போது இந்துவின் கண்களில் நீர் தளும்பி நிற்க…

இந்திராவை சேர்த்து அணைத்துக் கொண்டே..ஆதரவாக முதுகில் தட்டிக் கொடுத்தபடியே…..அப்படியாக் கேட்டா ப்ரியா…அவளுக்கு வாய் நீளம்……ப்ரியாவுக்கு கருப்புன்னா என்னன்னே தெரியாது….நீ கருப்பு கிடையாது…நீ மாநிறம்….நம்ப அப்பா நிறம். அப்பாவை யாராவது ஏதாவது சொல்றாளோ….? அப்பா ஆஃபீஸ போறாரே…..சரி..சரி…நீ கொஞ்ச நேரம் டிவீ பார்த்துக்கோ…ஆறு மணிக்கு டான்ஸ் கிளாஸ் இருக்கு…கிளம்பணம்.

அம்மா…இனிமேல் நான் டான்ஸ் கிளாஸ் கூட போக மாட்டேன்..கருப்பா நான் டான்ஸ் ஆடினா ப்ரியாவும், டீச்சரும்…எல்லாருமே சிரிப்பா…அதனால டான்ஸ்….வேண்டாம்..பிடிவாதமாக சொல்லிவிட்டு டிவீ யோடு ஐக்கியமாகிப் போனாள் இந்திரா..

இதென்னடா வம்பாப் போச்சு…..குழந்தையின் மனதில் இவ்வளவு ஆழமாக இந்த நிறப் பிரச்சனையை விதைத்து விட்டார்களே…பிஞ்சு மனம் எத்தனை பாடு படுகிறது…அடப் பாவமே…இந்த டீச்சருக்கு கொஞ்சம் கூட புத்தி இருக்காதா? எதை எதற்கு உதாரணம் தருவதுன்னு கூடவாத் தெரியாது? இப்படிப் பட்டவர்கள் எப்படி நாளைக்கு ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்? மனதில் எழுந்த கேள்வியை நாளைக்கு கண்டிப்பாக ஸ்கூலுக்குப் போய் ந்த பிரின்சிபாலிடம் சொல்ல வேண்டும், என்றெண்ணிய படியே கைபேசியைக் கையில் எடுத்தாள்.

இன்னைக்கு என்ன விசேஷமான விஷமம் கொண்டு வந்தா நம்ம பொண்ணு….? ஆவலோடு வெங்கட் கேட்க..

அதை ஏன் கேட்கறேள்….பாவம் இந்து …அவ கிளாஸ் டீச்சரும், அந்தப் ப்ரியாவும் இவளை நீ கருப்புன்னு சொல்லியிருக்கா….குழந்தை ரொம்பவும் மனசு வேதனைப் பட்டுண்டு வந்து சொன்னா..இப்படிக் கூடவா கேட்பா….அறிவு கெட்ட ஜென்மங்கள்…நீங்க வரும்போது அவளுக்குப் பிடிச்சதை வாங்கிண்டு வாங்கோ.. என்னாலே அவளைச் சமாதானம் செய்ய முடியலை ! அதைச் சொல்லத் தான் இப்போ போன்ல கூப்பிட்டேன்.சரியா…

என்ன ரேகா இது..? இந்த விஷயத்தை அவளை ஸ்போர்டிவா எடுத்துக்க வைக்கணும், சரி நான் வந்து பேசறேன்….இப்போ கொஞ்சம் வேலையா இருக்கேன்.நீயும் சேர்ந்துண்டு கவலைப் படாதே…என்ன…! ஆதரவாகச் சொல்லிவிட்டு கைபேசியின் தொடர்பைத் துண்டித்தாலும் மனதுக்குள் ஆடிப் போய்விட்டார். பெண் குழந்தைக்கு சில வேளையில் நிறம் தான் பலவற்றை நிர்ணயம் செய்யும்…இந்தச் சிக்கலில் இருந்து இந்திராவைச் சிக்க விடாமல் அவள் பிஞ்சு மனதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்.

மேற்கொண்டு வேலை செய்ய மனம் ஒத்துழைக்கவில்லை….தனக்கும் தனது கருப்பு நிறம் எத்தனையோ தடைகளை போட்டு வேடிக்கை பார்த்தது, இப்போது நினைவுக்கு வந்து மனசுக்கு முன்னால் நின்று கோரமாய்ச்சிரித்தது. வயது வந்த வாலிப ஆணுக்கும், பெண்ணுக்கும், நிறம் திருமணத் தடையாக இருந்து தொல்லை கொடுக்கும் போது, பெண் குழந்தையும் போராடத் தான் வேண்டுமா இந்தக் காலத்தில் ?..

எட்டு வருடம் முன்பு..ரேகா, பிறந்த குழந்தையோடு வீட்டுக்கு வந்ததும்..அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் ஒரு மாதிரி பார்க்க, ஒருத்தி வாய் விட்டு “என்னங்க ஆஸ்பத்திரியில் குழந்தையை யாரும் மாத்திடலையே” இல்ல…குழந்தை உங்க நிறத்தைக் கொள்ளலையேன்னு கேட்டேன்…என்று மென்னு முழுங்கியவளை….வெங்கட் பார்த்த பார்வையில் கூனிக் குறுகி அன்று காணாமல் போனவள் தான். அதன் பின்பு அவர்கள் கண்ணில் படவே இல்லை. தொடர்ந்து சங்கிலி போல் இதே எண்ணங்கள் அலை மோத….அலையோடுப் போராடிக் கொண்டிருந்தவன், உடனே இந்துக் குட்டியைப் பார்க்கணும்னு தோன்றவே…கணினியை மூடிவிட்டு கிளம்பினார்.

வீடு வரும் வரை வழியெல்லாம் வெங்கட்டின் மனம் அந்த கண்ணுக்குத் தெரியாத டீச்சரையும் , ப்ரியாவையும், என் செல்ல மகளை ஏன் அப்படி சொன்னீங்க, அப்படி என்ன நீங்க பெரிய சிகப்பு..? என்றெல்லாம் திட்டிக் கொண்டே வந்தது.

காரின் ஹாரன் சத்தம் கேட்டதும், எப்போதும் ஓடி வரும் இந்திரா ..இன்று வாசலுக்கு வராத போதே…இன்று அவளுக்கு மனசுக்குள் விழுந்த அடியின் அழுத்தம் புரிய ஆரம்பித்தது. எதுவுமே தெரியாதவர் மாதிரி, இந்தும்மா என்று அழைத்து விட்டு கதவோரம் ஓடி வருவாள் என்று நின்று பார்க்க…

திரும்பிப் பார்த்தவள், கோபத்தோடு மறுபடியும் வெடுக்கென்று டீவீயைப் பார்க்க ஆரம்பிக்க..”இந்த நிறத்துக்குக் காரணம் நீ தான்..” என்று சொல்லாமல் சொல்லியது அவளது செய்கை.

“தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு…” அந்த வேதனையை அந்தப் பிஞ்சு மனசு அனுபவிப்பது போல் இருந்தது…. சரி…சரியாகட்டும்….”இந்து…..இங்கே பார் என் கையில் ! உனக்குத் தான் இந்த பென்சில் பாக்ஸ்….டபுள் டெக்கர்..மேக்னட் மூடி….என்று சொல்லி அவள் முன்னே கொண்டு செல்ல, அதை ஒரு துச்சமாகக் கூட மதிக்காமல்….அதைப் வெடுக்கெனப் பிடுங்கி “இது ஒண்ணும் பெரிசில்ல….ங்கறா மாதிரி டப் பென்று பக்கத்தில் வைத்துக் கொண்டாள், இந்திரா.

ரொம்ப நாளாய் அவள் ஆசையாக் கேட்டது அந்த பென்சில் பாக்ஸ்….அது கூட அவள் மனசைக் கலைக்கலையே….என்று ஆச்சரியத்தோடு…”இந்து டியர்….என்னாச்சு? வா..வா…வா…இன்னைக்கு ஸ்கூல்ல என்னாச்சுன்னு டாடிட்ட சொல்லு, கேட்கறேன்.”….என்ற படியே டிவீயை அணைத்ததும்.

ஒண்ணும் வேண்டாம்….டிவி யைப் போடுங்கோ டாடி…”அட்வென்ச்சர் டைம்” பார்த்துண்ட்ருக்கேன்..என்று சிணுங்க…

தோ..பாரும்மா கண்ணா…உனக்காக இன்னைக்கு டாடி சீக்கிரமா வந்திருக்கேன்…வந்து பேசேன்…டிவிய
அப்பறமாப் பார்த்துக்கலாம்…ரேகா..இன்னைக்கு என்ன என் கண்ணம்மா ஏன் ரொம்ப டல்லா இருக்கா…நீ அவளை ஏதாவது திட்டினியா? என்ன….என்று கேட்டபடியே…அம்மாத் திட்டினாளா உன்னை..? என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு இந்துவைப் பார்க்க….

காஃபியை ஆற்றிக் கொண்டே வந்த ரேகா, நான் ஒன்னும் சொல்லலை… இன்னைக்கு என்னாச்சு தெரியுமா…? நான் சொல்லவா என்று இந்திராவைப் பார்க்க……

உடனே…இந்திரா .இயல்பாக .முந்திக்கொண்டு …நானே சொல்றேன் என்று எழுந்து ஓடி வெங்கட் அருகில் வந்து நின்றபடியே….டாடி…டாடி….இன்னைக்கு,எங்க டீச்சர் என்னைக் கருப்பா இருக்கேன்னு வெறுப்பா எல்லார்டையும் சொல்லிட்டா…எனக்கு ரொம்ப ஷேமா இருந்தது டாடி…என்றவள் கண்களில் சொரிந்தது கண்ணீர்….. இனிமேல் இந்த ஸ்கூல் எனக்கு வேண்டாம் டாடி..ப்ளீஸ்.. என்றவளை இழுத்து அணைத்தபடியே… பிரியா சொல்றா, கீதா சொல்றா நான் காக்கா கருப்பாம் !!

அடடா…..அப்படியா சொன்னா…நாளைக்கு அம்மாவும் நானும் உன் ஸ்கூலுக்கு வந்து….. அவங்க வாயை அடக்கச் சொல்றேன், என்று வெங்கட் கோபமாய்ச் சொன்னான்.

அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்..நான் இனிமேல் அங்க போக மாட்டேன்….போக மாட்டேன்…போக மாட்டேன்….எனக்கு இந்த ஸ்கூல் வேண்டாம்…படிப்பும் வேண்டாம்….இப்போ கூட நான் ஒரு ஹோம்வொர்க்கும் இன்னும் பண்ணலை.. அவள் குரலின் தீர்மானம்…வெங்கட்டை உலுக்கியது.

இந்தக் காலத்துக் குழந்தைகள் தங்களுக்கு எது வேண்டும் எது தேவையில்லை என்பதை எவ்வளவு தீர்க்கமாக தாங்களாகவே முடிவு செய்து கொள்கிறார்கள். அவர்கள் மனசுக்குப் பிடிக்காத, ஒத்து வராத எதையும் ஒதுக்குவதில் தான் எவ்வளவு நேர்த்தி. இருபது வருடங்களுக்கு முன்னால் கூட இப்படி இருக்கவில்லையே… என்று எண்ணியவன்…

சரி…போகாட்டா வேண்டாம்…வா…நாமெல்லாம் ஷாப்பிங் போயிட்டு வரலாம்…வரியா..?

நோ..டாட்…நான் டிவி பார்த்துக்கறேன்…நீங்க போங்கோ..என்று டிவீ பக்கம் முகத்தைத் திருப்ப.

ரேகா மெல்லிய குரலில் “பிடிவாதத்தில் அப்படியே உங்களைத் தான் உரிச்சு வெச்சுருக்கா…” என்று அர்த்தமுடன் சிரிக்க…

ஆமாமாம்….கோபத்தில் அப்படியே உன்னைத் தூக்கி சாபிட்டுடறா…. பார்த்தியா..என்று பதிலுக்கு சொல்ல…

இருவருக்குமே அந்த இறுக்கமான சூழ்நிலையிலும் ஏகாந்தப் புன்னகை வந்து மோதிச் சென்றது.

நீ போன் பண்ணி சொன்னதுக்கு அப்பறம் எனக்கு ஒரு வேலையும் ஓடலை, ரேகா..அப்படியே போட்டுட்டு வந்துட்டேன், நாளைக்குப் போனா…. இருக்கு….தலைவலி…ஆமாம்…நீ நாளைக்கு இந்துவோட ஸ்கூல் போய்ட்டு அந்த பிரின்சிபால் கிட்ட சொல்லிட்டு வந்துடேன்…நான் கூட வரலை. ஸ்கூல்ல உங்களை டிராப் பண்றேன்…ஓகே…

சரின்னா. இதை நான் கேட்கப் போறேன்.. நீங்க வர வேண்டாம். இதை எப்படியாவது சரியான முறையில் நாம் தான் கையாளணும், இல்லையா..? என்றபடி ரேகா சமயலறைக்குச் சென்றாள்.

மெல்ல மெல்ல அந்தி மயங்கி வானம் கருக்க ஆரம்பிக்க,

இந்தும்மா ..இங்க கொஞ்சம் வாயேன்….அழைத்ததும்..

என்ன டாடி…என்று வந்தவளை, இத்தனை நேரம் வானம் எப்படி இருந்தது…நீயே சொல்லு…

வெள்ளையா இருந்தது…..இப்போ ராத்திரி ஆகப் போரதுல்லியா அதனால கருப்பா ஆறது…அதுக்கென்ன இப்போ?
ம்ம்..ரொம்ப சரியா சொல்லிட்ட…நீயும்…என் இந்துக்குட்டி புத்திசாலி..இதையே அந்தப் பிரியாட்ட நீயே
கேளேன்..அவ முழிப்பா…தெரியாதுன்னு சொல்லிடுவா…ஏன் தெரியுமா ? கருப்பா இருக்கறவங்க ரொம்ப இன்டெலிஜெண்டா
இருப்பாங்க…..உன்னை மாதிரி.. என்னை மாதிரி.

போ..டாடி நீ பொய் சொல்றே..அப்போ அம்மா… மக்கா ?சிகப்பா இருக்கறவங்க ப்ரில்லியண்டா இருப்பாங்க…இல்லையா ரேகா…

அ….ஆமாம்…ஆம்மாம்..!

இப்போ பாரேன்…இந்த நிலா இந்த வானத்தில் தான் நாள் பூரா இருக்கு…பகலில் இப்படி பளிச்சுன்னு தெரியறதா ? நீயே யோசி…ஆனா வானம் கருப்பா மாறும்போது எப்படி நட்சத்திரங்கள் மின்ன அழகா பளிச்சுன்னு இருக்கு பார்த்தியா? “இரவுதான் பகாலகுது. பகல்தான் இரவாகுது. எல்லாத்தையும் இப்படி கருப்பு, வெளுப்பாக்குவது சூரிய ஒளிதான்.” என்று சொன்னான் வெங்கட்.

ரேகா முகத்தில் புன்னகை மின்னியது. அப்பா சரியா சொல்லிட்டார் இந்து

பகலில் பூமி அழகு, இரவில் வானம் அழகு…..இல்லையா…? அப்போ ரெண்டுமே முக்கியம் தானே…ஸ்வாமியே அதனால் தான் கருப்பு,வெள்ளை ன்னு இரவையும், பகலையும் படைச்சிருக்கார். கருமை நிறக் கண்ணன் தெரியுமே உனக்கு ? காக்கா கருப்பு..யானை கருப்பு…சூரியன் இல்லாவிட்டால் நிலா கூட கருப்பு தான்..அவ்வளவு எதுக்கு…அம்மா காதில் டாலடிக்குது பாரு வைரம்…அது கூட கறுப்புக் கரித்துண்டு தான், ஒரு நிறத்தில் இருந்து பிரிவது தான் பல வர்ணங்கள்…ஆனால் மூலாதாரம் எல்லாம் கருப்பு தான்…அதனால் கருப்பை வெறுக்காதே….சரியா..

டாடி…அப்ப அந்த ஏழு வர்ணங்கள்…?

ஒரே கருப்பு, வெள்ளையை மட்டும் பார்த்துண்டு இருந்தால் போர் அடிக்குமே..அதனால் தான் நமக்கெல்லாம் இன்னும் பல வர்ணங்களைக் காட்ட….மரங்கள்,பழங்கள்,பூக்கள்ன்னு படைச்சுக் காண்பிச்சு…அதுபோல் வானவில்லையும் காண்பிச்சார். பச்சை, மஞ்சள், ஊதா, ஆரஞ்சு, நீலம், சிவப்புன்னு பல வர்ணம் கொண்டது தான் நம்ம பூமி.

ஆமாம் டாடி…இன்னைக்கு டீச்சர் வானவில்லைப் பத்தித் தான் சொல்லித் தந்தா….மழைத் துளி ஒரே நிறந்தான். அதுல சூரிய வெளிச்சம் பட்டதும் ஏழுவர்ணங்களா சேர்ந்து பிரதிபலிச்சு வானவில்லாகத் தெரியுதாம்…அப்பத்தான் உதாரணத்துக்கு பிரியா சிவப்புன்னும், என்னைக் கருப்புன்னு சொன்னாப்பா..என்று வருத்தமான குரலில் சொல்ல…

வானவில்லில் ஏன் டாடி கருப்பு வர்ணம் இல்லை …? என்று இந்திரா கேட்டாள்.

வெங்கட் விழித்தார்.

ஒ…நீ அதை மனசில் வெச்சுக்காதே..மறந்துடணும்….இதோ பாரேன்…பக்கத்து வீட்டுல அந்த பிரவுன் பூனை எட்டு குட்டி போட்டுதே போன வாரம்…எல்லாம் ஒரே மாதிரியாவா இருந்தது…நீ கூட சொன்னியே….என்ன சொன்னே…நியாபகப் படுத்தி பாரு..

ஆமாம் டாடி…எட்டு குட்டியும் ஒவ்வொரு கலர்…அதுல நான் கூட கருப்பு பூனைக் குட்டியை நாம வளர்க்கலாம்னு சொன்னேனே..

ம்ம்ம்…..கருப்பும் வெள்ளையும் இல்லாமல் வாழ்க்கையில் எதுவுமே அழகா இருக்காது கண்ணம்மா…

எதுவுமே எழுதாமல் ஒரு உன் நோட்டை டீச்சர்ட்ட காட்டினா…என்ன சொல்வா…?

ஏன் ஹோம் வொர்க் பண்ணலைன்னு கேட்டு ..பனிஷ் பண்ணுவா…

அதே நோட்டில் உன் பென்சிலால எழுதிண்டு போனியானா உனக்கே எப்படி இருக்கும்…

நிம்மதியா இருக்கும்பா…ஹோம் வொர்க் முடிச்சுட்டோம்னு. ஆமாம் டாடி…வெறும் நோட்டு வேஸ்ட்…அதில் என்ன பிரிண்ட் ஆகி இருக்கோ அத வெச்சு தான் டாடி அதுக்கு வெயிட்..!

சரியா சொன்னே….வெரி குட். அதே போலத் தான் வெளித் தோற்றத்தில் ஒன்றும் இல்லை…கருப்போ..சிகப்போ…அவர்கள் எப்படி என்பது அவரவரின் அறிவுப் படி நடந்து கொள்ளும் விதத்தில் தான் மதிப்பு மற்றவர்களிடம் உயரும்….இப்போ புரிஞ்சுதா….இன்னொண்ணு சொல்றேன் கேளு….

டாடி இப்போ போதும்…எனக்கு புரிஞ்சுடுத்து, ஹோம் வொர்க் பண்ணனும்….நான் போறேன் டாடி…
எழுந்து துள்ளிக் கொண்டு ஓடியவளை ஆச்சரியத்துடன் பார்த்த ரேகா…

என்னப்பா…என்ன .மந்திரம் போட்டேள்….? இவ்வளவு தெளிவா போறா…

அவ உன் பொண்ணு இல்லையா…தெளிவா புரிஞ்சுண்டு ஹோம் வொர்க் பண்ணப் போறா…நல்ல குழந்தைடீ இந்து சொல்லும்போது பெருமை பொங்குகிறது….அவருக்கு…ரேகாவுக்கோ மகிழ்ச்சி …சரி வாங்கோ சாப்பிடலாம் நாழியாச்சு..என்றவளைப் பின் தொடர்ந்தபடியே..

வெள்ளை நிறத்தொரு பூனை- எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்.
பிள்ளைகள் பெற்றதப் பூனை – அவை
பேருக்கொரு நிறமாகும்.

சாம்பல் நிறமொரு குட்டி – கருஞ்
சாந்து நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி – வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி

எந்த நிறமிருந்தாலும் – அவை
யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும் – இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ?
தத்தரிகிட..தத்தரிகிட…தத்தோம்…

வீரா வேசமாக மன நிம்மதியோடு பாடிக் கொண்டே செல்ல. ரேகாவும் ரசித்தபடியே மன நிறைவோடு சிரிக்கிறாள்.

மறுநாள் பொழுது புலர்ந்தது

காலையில், இன்று இந்திராவோட ஸ்கூலுக்குப் போகவேண்டும் என்ற எண்ணத்திலேயே எழுந்த ரேகா, தன்
வேலைகளில் மும்முரமாகிறாள்.

கிளாசில் டீச்சர் ஹோம் வொர்க் செக் பண்ணிவிட்டு….சரி…இப்போ நேற்று நடத்திய பாடத்தில் இருந்து சில கேள்விகள் கேட்கப் போறேன்…யாருக்கு எது வரை புரிஞ்சிருக்குன்னு பாப்போம்..என்றவள் தொண்டையைக் செருமிக் கொண்டே…”வானவில்லில் எத்தனை வர்ணங்கள் ? …அது … எதனால்… எப்படித் தோன்றுகிறது…?”

எங்கே ப்ரியா…நீ சொல்லு….என்றதும்…

ப்ரியா தயக்கத்துடன் எழுந்து நின்று.யோசித்து ..வானவில்லில் வந்து ….. எட்டு வர்ணம் ! …வானவில்…வானத்தில் வருது . வானவில்….என்று முழுவதும் சொல்லாமல் திரு திருவென முழிக்க…கண்களை இறுக்க மூடிக் கொண்டு தலையில் இரண்டு தட்டு தட்டிப்பார்க்கிறாள்…ம்ஹும்….எதுவுமே நினைவுக்கு வெளியில் எட்டிப் பார்க்கவில்லை… யோசித்தவள்,
எப்படி வருதுன்னு தெரியலை டீச்சர்,

“ஆமா எட்டுன்னு கருப்பு நிறத்தையும் சேர்த்துக் கொண்டாயா ? தப்பு, தப்பு தப்பு ! உனக்கு கருப்பு தான் நினைவில் இருக்கு ! … நான் ஒரு கேள்வி கேட்டா…. நீ…எதையோ சொல்றே ப்ரியா….உனக்கு கிளாஸ்ல கவனமே போறாது….மக்கு..மக்கு..உக்காரு…

நீ சொல்லு..கீதா….!

டீச்சர்…வானவில்…மழை வந்தால் தான் வரும் டீச்சர்….திக்கி முக்கி..மேலே பார்த்து .பின்பு தெரியலை டீச்சர்…என்கிறாள் கீதா.

வெறும் மழை மட்டும் போதுமா வானவில் உண்டாக ? நீயுமா….கீதா…? என்று டீச்சர் அலுத்துக் கொள்ள….டீச்சரின் நம்பிக்கை புஸ்வாணமாக….

இந்திராவின் மனதுக்குள்…முதல்லப் ப்ரியா….ரெண்டாவதா கீதா…ரெண்டு பெரும் சிகப்பா இருக்கறவா …அப்போ மூணாவதா… யாரு…? என்று சுற்று முற்றும் திரும்பிப் பார்க்க,

டீச்சர்… இந்திரா…இந்திரா…உன்னைத் தான் எங்க பார்க்கிற.?.எழுந்து நின்று பதிலைச் சொல்லு….என்று அதட்டலாகவே கேட்க…

நானா..மூணாவது சிகப்பு …சந்தோஷத்தோடு எழுந்தவள்..வானவில்லுக்கு மழையும் வேணும், சூரிய ஒளியும் தேவை..என்று ஆரம்பித்து கட கட வென்று சரியான பதிலை அழகாகச் சொல்லி முடிக்கவும்…..

வெரிகுட்…எல்லாரும் இந்திராவுக்கு கிளாப்ஸ்…..தட்டுங்கள்…என்று கை தட்ட, ப்ரியாவும், கீதாவும் தவிர மற்ற பிள்ளைகள் தம்ப்ஸ் அப் என்று கட்டை விரலைத் தூக்கி காண்பித்து இந்திராவுக்கு ஜே..என்று சொல்ல…சந்தோஷத்தில் இந்திரா கல கல வென்று சிரிக்கிறாள்.

இந்து…இந்து… கண்ணம்மா….நாழியாச்சு பாரு…எழுந்திரு என்று அழைத்துக் கொண்டே வந்த ரேகா…இவள் சிரிப்பதைக் கண்டு..”நல்ல கனவு கண்டிருப்பா…” என்று அவள் உறங்கும் அழகை ரசித்தபடியே நிற்க…
ஆழ்ந்த உறக்கத்தில் அப்பாவின் மீது ஒரு காலை தூக்கி போட்டுக் கொண்டு படுத்திருந்த இந்திரா , கனவு கலைந்து எழுந்து…ஒ.. இதெல்லாம் கனவு தானா..? ச்சே…நிஜம் மாதிரியே இருந்ததே.. என்று ஏமாந்து…

அம்மா…இன்னைக்கு நீயும் ஸ்கூலுக்கு வருவ தானே,,.? என்று கேட்டு கொண்டே படுக்கையை விட்டு எழுந்தாள்.

ஆமாம்…வருவேன்…நீ விறு விறுன்னு கிளம்பு, டாடி நம்மளை ஸ்கூல்ல டிராப் பண்ணுவார்.சீக்கிரம் கிளம்பும்மா…என்றவள் அடுத்த ஒரு மணி நேரத்தில் வீட்டைப் பூட்டினாள்.

டாடி….நான் உங்க பக்கத்தில…முன்னாடி…ன்னு சொல்லிக் கொண்டே முண்டியடித்து கொண்டு காருக்குள் உட்கார…
என்ன அவசரம்…கார் கதவை மெல்லச் சாத்து..என்று சொல்லிக் கொண்டே புத்தகப்பையும், டிபன் கூடையுமாக ஏறி அமர்ந்த ரேகாவைப் பார்த்து…இந்த வயசில உன்னைக் கொண்டு போய் ஸ்கூலில் விடறேன் பாரு…ஹோம்வொர்க் எல்லாம் சரியா பண்ணிட்டியா? அப்பறம் டீச்சர் சிவப்பு ரேகா மக்கு… ரேகான்னு சொல்லி வீட்டுக்கு துரத்தி விட்டுடுவா….இல்லையா…இந்து..என்று கிண்டலாகச் சிரித்துக் கொண்டே காரை ஸ்டார்ட் செய்கிறார்.

போதுமே…நீங்களும் உங்க வேடிக்கை ஜோக்கும்…அசடு வழியறது…இந்து…இந்தப்பாவுக்கு எப்பவும் இப்படித்தான்..சீரியஸா ஒரு விஷயம் நடக்கும்போது தான் ஜோக் பேசுவார்…இல்லையா..இந்து..? என்று மகளைத் துணைக்கு அழைக்க…

நோ…ம்மா…மை டாட்…ஆல்வேஸ் ஹாப்பிமேன்..! என்று அப்பாவுக்கு ஹை ஃபை செய்ய..

இதைக் கேட்ட சந்தோஷத்தில் வெங்கட் காரை வேகமாக ஒட்டியபடியே…

ஏழு நிறங்கள்….ஒரு பாணம்
எழு ஸ்வரங்கள்…ஒரு ராகம்..
ஏழு முறை தான் பிறவி வரும் அந்த
எழிலும் நமக்குள்….
என்று பாடிக் கொண்டே..திரும்பி ரேகாவைப் விஷமமாகப் பார்க்க…

“ம்ஹும்ஹும்….”.என்று பதிலுக்குப் பாடியவள்,
வெட்கதோடு…”இந்து இருக்கிறாள்” என்று கண்ணைக் காட்டி.கன்னம் சிவக்கிறாள்.

கார் சிக்னலைத் தாண்டி விர்ரென்று பறக்க…

அம்மா…இன்னைக்கு ரொம்ப ஜாலியா இருக்கும்மா…இப்படி டெய்லி டாடியே டிராப் பண்ணினா, ஜாலிதான் என்று சந்துக்குள் சிந்து பாடி.. இந்து தன்னோட சொந்த பெட்டிஷனைப் போட்டுவிட்டு அம்மாவை பார்த்து கண் சிமிட்ட…

மற்ற குழந்தைகளோட ஆட்டோவில் போற சுகம் தனிடாச் செல்லம்….டோன்ட்…மிஸ்…தட்…என்றவர்.. வந்தாச்சு…ஸ்கூல் இறங்குங்கோ….என்றபடியே இவர்களை இறக்கிவிட்டு விட்டு ஹாரனோடு கிளம்பினார்.

கும்பல் கும்பலாகக் குழந்தைகள் நடந்து பள்ளியை நிரப்பிக் கொண்டிருந்தார்கள்.

பிரின்சிபாலின் அறைவாசலில் இந்துவின் கைகளைப் பிடித்தபடி நின்றிருந்த ரேகாவையும்..மற்றவர்களையும் பார்த்து அறைக்குள் இருந்து ஒருவர் வந்து…கடுமையான குரலில்..”எல்லாரும் ஒதுங்கி ஓரமா நில்லுங்க, வழி விடுங்க….வாசலை அடிச்சிட்டு நிக்காதீங்க..போங்க..போங்க….ஏம்மா ..உன்னத்தான் அந்தாண்ட போய்
நில்லும்மான்னா….என்று உச்சஸ்தாயில் கத்த..

தனது உடலைச் சுற்றி புர்கா அணிந்து கொண்டு கண்களில் கலக்கமும், பயமுமாக..கையோடு இந்து வயதில் பெண் குழந்தையோடு நின்றவள்..அவனது குரலைக் கேட்டு மேலும் குழம்பி ஒரு தூணின் பின்னால் ஒளிந்து கொண்டாள். அந்தக் குழந்தை மட்டும் ஆவலோடு தயங்கியபடியே அங்கிருந்து எட்டிப் பார்த்தது..

ஹாஸ்பிடல், கோவில், இங்கெல்லாம் கூட இந்த மாதிரி தான் வேலை பார்பவர்களின் குரலில் தான் அதிகாரம் தூள் பறக்கும்..என நினைத்துக் கொண்டாள் ரேகா. எங்கெல்லாம் பயத்தோடும், பக்தியோடும், பவ்யமாக மனங்கள் தலை வணங்குதோ…அங்கெல்லாமே…”நீங்கள்ளாம் முட்டாள்களடா ….இங்கேயெல்லாம் நாங்க தான் டாப்பு..மீதியெல்லாம் டூப்பு..”என்ற தொனியில் “கர்வம் தலை காக்கும்” மனிதர்கள் முன்னாடி நிற்பார்கள் போல என்று எண்ணிக் கொண்டாள்.

அந்த நீண்ட வராண்டாவில் அங்கங்கே….வண்ண நிற சார்ட் பேப்பரில்…”ஜாதி இரண்டொழிய வேறில்லை…”
“எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஓர் குலம்.. எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே” .என்றெல்லாம் வண்ண எழுத்துக்களில் கொட்டை எழுத்துக்களில் எழுதி ஒட்டியிருந்தது.
அருகே புத்தர்,பாரதியார், காந்தி, நேரு, இந்திரா காந்தி இவர்களின் படங்களும் இருந்தன…அவர்களின் பெயரையும் படித்துக் கொண்டே வந்த இந்திரா,…அம்மா…டாடிக்கு இந்திரா காந்தி ரொம்பப் பிடிக்கும் தானே..அதனால தானே எனக்குப் அவங்க பெயரை வைச்சீங்க…என்று கேட்கவும்…..ஆமாமாம்மம்…சத்தம் போட்டுப் பேசாதே…என்று இந்துவை அடக்கிய ரேகா தூணின் மறைவின் நிற்கும் அவளைப் பார்த்து…உங்க மகளா…? என்று கேட்கவும்…அங்கு நிற்கும் பெண் ரேகாவைப் பார்த்து இது உங்க மகளா? இங்க தான் படிக்குதா? என்று கேட்க…

அமாம்…இந்திரா..மூணாவது படிக்கிறா….இங்க தான்…! உங்க மகள்?!!

என் மகள் மும்தாஜ் பேகம், இங்க அட்மிஷன் கிடைக்குமான்னு கேட்க வந்தேங்க….இவளும் மூணாங் கிளாஸ் தான்…கிடைக்குமாத் தெரியலை…என்று சந்தேகமாகக் கேட்க….

செக்கச் செவேலென்ற பளிங்கு போன்ற வட்ட முகத்தில் கண்கள் இரண்டும் கருவண்டுகள் போல சுழல…. இந்திராவைப் பார்த்தவள் சிநேகமாகச் சிரித்து, நீ இந்த ஸ்கூலா..? உன் கூட நானும் படிக்கப் போறேன் என்றுசொல்லவும்..

புதுத் தெம்புடன் இந்திரா…உடனே மும்தாஜின் கைகளைப் பற்றியபடியே பேர் என்ன? என்று கேட்டு ரொம்ப நாள் சிநேகிதம் போல இருவரும் பேசிக் கொண்டே…ரேகாவைப் பார்த்துச் சிரிக்கிறாள் இந்து.

இவ்ளோ லேட்டா வந்திருக்கீங்களே…என்று ரேகாவும் இழுக்க…

அதில்லைங்க…இவ அப்பா போன மாசம் ஊருல ஒரு விபத்துல செத்துப் போயிட்டாருங்க…நான் புள்ளங்கள இட்டுக்கிட்டு இங்க வந்துட்டேன் எங்கம்மா வூட்டுக்கு…எங்கியும் ஸ்கூலுல எடம் கிடைக்கலைங்க….கடைசியா இங்க கேட்டுப் பார்க்கலாம்னு வந்தேன்…இங்க என்னடான்னா இந்த வெரட்டு வெரட்டுறாங்க….என்னாகப் போவுதோ..என் மகளோட எதிர்காலம்…என்று கவலையோட சொல்லும்போதே..

பியூன் ஓடி வந்து…ஏன்மா…உனக்கென்ன வேணும் என்று அவளைப் பார்த்துக் கேட்க…

அட்மிஷன் ..மூணாங் கிளாசுக்கு…என் மக..இவ மும்தாஜ்….என்று மகளைக் காண்பிக்க….

இவளின் பயம் அவனுக்கு பலமாகிப் போக…

ஏன்மா…உங்களுக்கெல்லாம் தான் காஜாத் தெருவில பள்ளியோடம் இருக்கே…அங்க போக வேண்டியது தானே….இங்க வந்து நின்னு ஏன் தொல்லை பண்றீங்க…சரி போயி அங்க உட்காரு…மேடம் வந்தால் தான் தெரியும்…என்று சொல்லி ரேகாவைப் பார்த்து…உங்களுக்கு என்ன..? ஆமா இந்தப் பாப்பா இங்க தான படிக்குது..அது ஏன் இங்க நிக்குது…ஏய் பாப்பா..நீ உன் கிளாசுக்கு ஓடு…என்றதும்…

இல்லை..நான் என் அம்மா கூட வந்திருக்கேன்….மேடத்தைப் பார்க்கணும்…என்றதும்…

எதுக்கு…?என்ன விஷயம்..?.சொல்லுங்க..? என்றவனின் தோரணையைப் பார்த்து தயக்கத்துடன் ஓரளவு சொல்லி வைத்தாள் ரேகா..

“இதெல்லாம் போயி ஒரு பிரச்சனையின்னிட்டு புகார் பண்ண வந்துட்டீங்களாக்கும்….சின்ன விஷயத்தைப் போயி யாராவது இப்படி பெரிசு பண்ணுவாங்களா…? ஏற்கனவே இங்கே ஆயிரம் பிரச்சனைகள்…தீர்க்கவே முடியாமல் இழுத்தடிக்குது….அதுல…இது வேற…கருப்பு…சிவப்பு..சிவாஜி படத்துல ரஜினி சிவப்பானது மாதிரி கதை சொல்லிட்டு……என்று அலுத்துக் கொண்டே நகர்ந்துவிட….அவன் போன பின்பு…மேடத்தின் அறையை எட்டிப் பார்க்கிறாள் ரேகா..

அறையின் உள்ளே….வெற்றிச் சிரிப்புடன்….சாமியாரின் பெரிய படம்…சுவரில் பாதி அடைத்துக் கொண்டு….
ம்ம்ம்…ம்ம்ம்..சரி தான்…பியூன் சொல்வதும் சரிதான்…பிரச்சனை தீராது தான்…..என்று மனதிற்குள் நினைத்து சிரித்துக் கொண்டாள்.

அடுத்த சில நொடிகளில் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க கால் தரையில் பாவாமல் புயல் போல் உள்ளே நுழைந்த பிரின்சிபால் மேடம் பட படப்பாக இருப்பதைப் பார்த்ததும்..”பேசாமல் திரும்பிபப் போயிடலாம் ” என்று ரேகாவுக்குத் தோன்றினாலும்….என்ன தான் ஆகுது பார்க்கலாம் என்ற அசட்டு தைரியத்தோடு வரிசையில் இந்துவின் கையைப் பற்றியபடி நிற்கிறாள்.

அறைக்கு உள்ளே சென்ற பியூன் வெளியே வந்து யாரிடமும் ஒன்றும் பேசாமல் “நோ அட்மிஷன் ” என்று கொட்டை எழுத்தில் எழுதிய பெரிய கரும்பலகையை வைத்து விட்டு….மும்தாஜின் அம்மாவைப் பார்த்து….”அதான்
சொல்லிட்டோமுல்ல…” என்பது போல ஒரு குறிப்பை உணர்த்தி விட்டு அறையின் கதவை வெளியில் இருந்தே
சார்த்தி விட்டு அந்த இடத்தை விட்டு நகரப் போனவனை..

என்னங்க தம்பி.. இப்படி பண்றீங்க…? நான் என் பொண்ணு விஷயமா மேடத்துகிட்ட… என்று ஆரம்பிக்கவும்…

“நீங்க இப்ப எந்தப் பிரச்சனையும் பண்ணாம இடத்தைக் காலி பண்ணினீங்கன்னா உங்களுக்கு நல்லது..மேடம் செம கடுப்பில் இருக்காங்க..நீங்க பேசாம பாப்பாவை இட்டுக்கிட்டு கிளாஸ் டீச்சரைப் போய் பாருங்க…வீணா வம்பு வளர்க்காமல்… நான் சொல்றத சொல்லிபுட்டேன்….அப்புறம் உங்க இஷ்டம்…என்று ஒரு குழப்பு குழப்பி விட்டுப் போனான்.

இந்துவும்….அம்மா…வாம்மா…என்னைக் என் கிளாசில் கொண்டு போய் விட்டுடு…இங்க எப்பவும் இப்படித் தான்..இத்தனை நேரம் நின்னது வேஸ்ட். என்று ரேகாவின் கையைத் தரதரவேண்டு இழுத்த படி அவளது கிளாஸ் ரூமை நோக்கி நடந்தாள்.. அவள் உள் மனம் சொல்லியது…பாவம் அம்மா…இப்போ மும்தாஜுக்கு அவ அம்மா அட்மிஷன் கேட்டு இங்கு வந்து நின்று பட்ட அவமான நிலை என் அம்மாவுக்கும் வேற ஸ்கூலில் வந்து விடக் கூடாது..அதுக்கு இந்த ஸ்கூல்லயே பேசாம இருந்திடலாம்..!

ஒரு பெரிய கண்டத்திலிருந்து தப்பியது போல ரேகா நிம்மதியாக மனம் மாறிய இந்துவின் பின்னால் அவளோடு கூட நடக்கிறாள்.

மும்தாஜ் தன் அம்மாவிடம்…மம்மி….நீ ஏன் பயப்படறே…இந்த ஸ்கூல் வேண்டாம் மம்மி ப்ளீஸ்…பாரேன் இந்திரா வருத்தப் பட்டு சொன்னா…உன்னையும் இவங்க மதிக்கவே இல்லை…”மதியாதார் தலைவாசல் மிதிக்காதே..” உனக்குத் தெரியாதா? இந்த ஸ்கூல் எனக்குப் பிடிக்கலை…வா போகலாம் என்று தான் தாயின் கரங்களைப் பற்றி இழுத்து திரும்பி கம்பீரமாக நடந்து சென்றாள்..அந்த நீள வராண்டாவில்..அவளிடம்…..இந்திரா காண்பித்து சொன்ன…” நாமெல்லாம் இந்நாட்டுமன்னராம் .. ! …நமக்குக் கிடைக்கும் மரியாதையைப் பாரேன்…” என்ற அந்த சார்ட் பேப்பரின் எழுத்துகள் கண்களில் பட….மம்மி…..இந்து சொன்னா…..

“பள்ளிக்கூடம் வெறுப்பை வளர்க்கக் கூடாது…
புத்தகங்கள் சுமையா இருக்கக் கூடாது..
பாடங்கள் பயமா இருக்கக் கூடாது…
டீச்சரே கேலி செய்யக் கூடாது..ன்னு ”

நீ சிவப்பா இருந்தாலும் இங்கே இடம் கிடைக்காது. இதெல்லாம் இல்லாத ஸ்கூலில் போய் சேர்ந்துக்கோ….இங்கே
ஒரே ஒரு கிறிஸ்த்துவ பொண்ணு தான் அவ கிளாசில் படிக்கிறாளாம்…அதுவும்..அவ அம்மா ஹிந்துவாம்….அதனால ஹிந்து பேர் வெச்சுகிட்டு இங்க படிக்கிறாளாம்…இங்க ஜாதி ரொம்ப பாப்பாங்க…நீ இங்கே படிக்கலைன்னு வருத்தப் படாதேன்னு சொன்னா..அதான் எனக்கும் சரின்னு தோணுது…சொல்லிக் கொண்டே அந்தப் பள்ளியில் பெரிய கேட்டைத் தாண்டி வெளியில் வந்ததும் சுதந்திரமாக இருந்தது இருவருக்கும்.

பாரதி கனவு கண்ட புதுமை பெண்கள் பிறந்து விட்டார்கள் என் பெருமையோடு நினைத்துக் கொண்டே…மகள் மும்தாஜை அணைத்தபடியே கலக்கமின்றி நடந்தாள் அவள்..

திடீரென வானம் கருத்து மழைத் தூறல் போட ஆரம்பித்தது….தூரத்தில் வானத்தில் பல வர்ணங்களோடு வானவில்லின் வர்ண ஜாலாம்….வில்லாக வளைந்து சிரித்தது.

மும்தாஜுக்கு சட்டென இந்துவின் சிரித்த முகம் கண்முன்னே தோன்றியது.
==========================================================

Series Navigationசுஜாதாவின் மத்யமர் புத்தக விமர்சனம்மாத்தி யோசி…!
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

2 Comments

  1. Avatar
    Sridevi says:

    நண்பர்களே உங்களது கருத்துக்கள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது.நான் வலைத்தமிழ் என்ற இணையதளத்தில் சில ஆன்மீக கட்டுரைகளை பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது.உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி http://www.valaitamil.com/spiritual-astrology-subcategory20-62-0.html

  2. Avatar
    punai peyaril says:

    This part of Valaitamil ad is sponsored by Sridevi :) சிம்ம ராசியை சேர்ந்த திருதேவிக்கு இந்த வாரம் நல்ல வாரமே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *