ஆர். மாதேஷின் “ மிரட்டல் “

This entry is part 26 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

இன்னும் படம் பார்க்காதவர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுக்குள் இருக்கும் கோபாலை, அதாங்க நக்கீரனை நகர்த்திவிட்டு, படம் பாருங்கள். பிடிக்கும். இல்லையென்றாலும் பிடிக்கும், பைத்தியம்.

பெண்மையின் நளினம் கலந்த ஒரு நாயகன் ( வினய் ), ஆண்மையின் கம்பீரம் கலந்த (சில கோணங்களில் அவன் இவன் விஷால் போலவே இருக்கும் ) நாயகி (ஷர்மிளா மந்த்ரே). இவர்களை வைத்துக் கொண்டு, காமெடி பண்ணப் புகுந்தால், படம் மிரட்டல் போல இருக்கும். ஆனால் மிரட்டலாக இருக்காது.

கதை பட்டு நூல் கனம். ஊதினால் காணாமல் போகும். ஆடிட்டர் நாராயணன் (பாண்டியராஜன் ), உமா பத்மநாபனின் மகன் பப்லு (எ) கோட்டை அசோக். ஒரே தங்கை. வினய் நண்பர்களூடன், போலீஸ் உடையில், அடாவடி ரவுடியை ஏமாற்றி, 6 லட்சம் கறந்து, நண்பன் தங்கை கல்யாணத்திற்கு கொடுப்பதுபோல் காமெடி ஓபனிங்.

காமெடி தாதா பிரபுவின் ஒரே தங்கை தீபிகா. பக்க வாத்தியங்கள் கஞ்சா கருப்பு, சந்தானம் இத்யாதி.. வினய் தாதாவிடம் வேலைக்குச் சேர்ந்து, அவன் கோட்டையை ஹை டெக்காக மாற்றி, வருமான வரி அதிகாரிகளிடமிருந்து பணத்தைக் காப்பாற்றி, (ஒளித்து வக்கும் இடம் பறக்கும் ராட்சத பலூன் ), சங்கரின் எதிரி பிரதீப் ராவத்திடமிருந்து தீபிகாவை பல முறை காப்பாற்றி, கைக்கோர்க்கும் கடுகு கதை, வித்தவுட் காரம்.

மாதேஷ் ஷங்கர் ஸ்கூல். ஆனால் பிரமாண்டம் ஏதும் இல்லை. டோனி போல அவ்வப்போது ஹெலிகாப்டர் ஷாட் காண்பித்து ஒப்பேற்றி விடுகிறார். கண்ணில் ஒற்றி கொள்வது போல ஒளிப்பதிவு, பிசகாத லிப் சிங்க், ஷார்ப் எடிட்டிங், மனதில் ஒட்டாத பாடல்கள் என்று படம் முடிந்தாலும் போரடிக்கவில்லை என்பது +.

சந்தானம், சாரியாக, நாமத்துடன் வருகிறார். வழக்கமான கவுண்டர் ஸ்டைல் காமெடி என்றாலும் விரசம் இல்லை. ( “ நல்லதை நக்கறா மாதிரி வச்சிட்டு, கெட்டதை கேரியர்ல எடுத்துட்டு வரான்” )

வினய்க்கு உயரம் ஒரு மைனஸ். என்னதான் வளைந்து, நெளிந்து ஆடினாலும் ஒட்டகச்சிவிங்கி ஆடுவது போலவே உள்ளது. அவர் இனி காதல் தவிர்த்த (ஜெயங்கொண்டான் போல) படங்களில் நடிப்பது நலம். கஞ்சா கருப்பு படம் பூரா கத்திக் கொண்டே இருக்கிறார். படத்தில் அவரது பெயர் கத்தி.

மன்சூர் அலிகான் காது மட்டும் கேட்கும் பேரலிட்டிக் பெரியப்பா. காமெடி என்கிற பெயரில் அந்தப் பாத்திரத்தை இழிவு படுத்துகிறார்கள். கண்டிக்கத் தக்கது. ஆங்கிலமே தெரியாத பிரபு, பல ஆங்கில வார்த்தைகளை பேசுகிறார். ஊட்டி ஸ்கூல் வாசம் போகவில்லை. பாண்டியராஜன் கூழாங்கல் அடக்கினாற் போலவே பேசுவது மன்சூர் அலிகானை மிஞ்சுகிறது.

சிச்சுவேஷன் காமெடி என்பது ஒரு புதையல். அதை வென்றெடுத்தவர்கள் ஸ்ரீதரும் சித்ராலயா கோபுவும். அடுத்த படம் காமெடி என்றால், மாதேஷ் அந்தப் பழைய படங்களைப் பார்த்து விட்டு எடுப்பது உசிதம். ஒன்றிரண்டு உருவினாலும் தப்பில்லை. கம்பனைப் பாடியே காசு பார்க்கும் காலம் இது.

0

கொசுறு

விருகம்பாக்கம் யதுகிரி ஓட்டல் கைமாறி விட்டது. ஆனாலும் தோசை சுடுபவர்கள், அதே வட இந்திய இளைஞர்கள். பக்கத்திலிருந்த அருண் ஓட்டலை மூடிவிட்டதால், இங்கு வியாபாரம் பெருகும். பக்கத்துக் கடையையும் எடுத்து பொடி மசாலா தோசை போடப் போவதாக நாமம் போட்ட ‘ நான் வைஷ்ணவர் ‘ சொன்னார்.

கொஞ்சம் மழைக்கே விருகம்பாக்கம் காளி அம்மன் கோயில் தெருவில் கணுக்கால் தண்ணீர். வாய்க்கால் வெட்டிக் கொண்டிருக்கிறார்களாம். அது முடிந்த பின்பே வடிகால். அதுவரை நவீன பாக்கியராஜ் போல ‘ பேண்டை மடிச்சுக் கட்டு ‘

0

Series Navigationவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 252012 ஆகஸ்டு செவ்வாயில் இறங்கிய நாசாவின் தளவூர்தி இயங்கத் துவங்கியது

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *