மரமும், நானும், விட்டுப் போன உரையாடல்களும்

This entry is part 28 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

 

(1)

’செளக்கியமா—’
திரும்பிப் பார்ப்பேன்.

எங்கிருந்து குரல்?
தெரியவில்லை.

சிறிது நேரம் சென்று
துணிகள் காயப்போட
வெளிமாடம் வருவேன்.

’செளக்கியமா—’
திரும்பிப் பார்ப்பேன்.

அருகிலிருந்து குரல்.
ஒரு மரம்
விசாரிக்கும்.

பத்து வருடங்கள் முன்
பார்த்த
அதே மரம்.

என் ஞாபகம் இருக்கிறதா?
-நான்.

ஞாபகமா?
-மரம்.

வேலை மாற்றலாகி
வந்து விட்டேன் இங்கே.
’வயசாயிருச்சே’?
-நான்.

என்ன சொல்கிறாய்?
புரியவில்லை.
-மரம்.

எத்தனை வருடங்கள்
இருக்கிறாய் இங்கு?
-நான்.

இந்தக் கணத்தில்
இருக்கிறேன்.
-மரம்.

அடுத்த கணத்தில்
இருப்பதில்லையா?
-நான்.

அடுத்த கணம்
இந்தக் கணமாகட்டும்.
-மரம்.

இங்கிருந்து

எங்கு செல்ல முடியும்

உன்னால்

அடுத்த கணத்தில்

நீ

இல்லாமல் போக.

-நான்

 

இங்கிருந்து கொண்டே

எங்கெங்கு நான்

செல்ல முடியும்

என்பதை

என் பறவைகளிடம் கேள்

சொல்லும்.

-மரம்.

(2)

மரம்
காற்றிலாடி
வெயில் நிழல்
வலை பின்னி
காலத்தைப் பின்னும்.

ஞாபகங்களில்லையா
உனக்கு?
-நான்.

ஞாபகங்களில்
வேர் கொள்வதில்லை  நான்.
-மரம்.

ஞாபகங்களில் நான்
வேர் கொள்கிறேனா?
-நான்.

நான் சொல்லவில்லை
அதை.
-மரம்

நானென்ன
மரமா மனுஷனா?
-நான்.

நீ
மரத்தைப்
புரிந்து கொண்டது அப்படி.
-மரம்.

பூக்கள் உதிர்கின்றனவே
ஞாபகமில்லையா?
-மரம்.

காலத்திடம் கேள்.
-மரம்.

பூக்கள் பூக்கின்றனவே
ஞாபகமில்லையா?
-மரம்.

காலத்திடம் கேள்.
-மரம்.

இப்போது ஒரு பறவை
வெளியேறிப் போனதே
கவனித்தாயா?
-நான்.

இப்போது ஒரு பறவை
ஒரு கிளையில் அமரும்
கவனித்தாயா?
-மரம்.

வந்து போகும் பறவைகள்
ஞாபகமில்லையா?
-நான்.

வரும் போகும்
எவை எவை முக்கியமல்ல.
-மரம்.

என்னை விசாரித்தாயே
எப்படி?
-நான்.

விசாரித்தேன்
ஒரு பறவையை
விசாரிப்பது போல
-மரம்.

நானும்
வந்து போகும்
பறவையா?
-நான்.

நீ
இழந்து போன
இறக்கைகளிடம் கேள்.
-மரம்.

(3)

நினைவு அலைகளில்
தளும்பிக் கிடக்கும்
என்
மனக்குளம்.

மரத்தின்
மருங்கு நிழல்
மனக் குளத்தில்
நிழல் பரப்பும்.

எனது சகாக்களின் நிழல்கள்
ஒவ்வொன்றாய்
மண்ணில் மறைகின்றன.
மனத்தில்
சோகம் மேலிடும்.
-நான்.
உண்மையாகவா?
-மரம்.

ஏன் சந்தேகம்?
-நான்.

உன்
நினைவு நதியில்
மிதந்து கிடப்பது
உனது சகாக்களின் பிணங்களா?
உன் பிணமா?
-மரம்.

என்ன உளறுகிறாய்?
-நான்.

உன் சோகம்
பயம்.
பயம்
உன் மரணம்.
-மரம்.

(4)

உனக்கு
சோகமும் சந்தோஷமும்
இல்லையா?
-நான்.

பூக்கள் பூப்பது போல்
பூக்கள் உதிர்கின்றன.
பூக்கள் உதிர்வது போல்
பூக்கள் பூக்கின்றன.

நீ
வேதாந்தம் பேசுகிறாய்.
-நான்.

வேதாந்தமும்
வேதாளமும்
உன் வேலை.
-மரம்.

இன்றிரவு
நீ
காணப் போகும் நட்சத்திரங்களும்
நிலாவும்
கடைசி முறை.
தெரியுமா?
-நான்.

இன்றிரவு
பூக்கும் நட்சத்திரங்களில்
பூத்துக் கொள்கிறேன்.
காயும் நிலாவில்
கனிந்து கொள்கிறேன்.
இது போதும்.
-மரம்.

(5)

மரம் சொன்ன
கடைசிச் சொற்கள்
என்
மனக்குளத்தில்
முடியாது
அலைகளைப் பரப்பும்.

மறு நாள்.
மரம் காணோம்.

மரம்
சரிந்த சரித்திரமாய்ச்
சாய்க்கப்பட்டு கிடக்கும்.

மற்றவர்களுக்கு
மரம் இருந்த இடம்
இப்போது
வெட்டவெளியாய் இருக்கும்.

எனக்கு மட்டும்
தெரியும்
இல்லாத மரமும்
இன்னும் பேசாது
விட்டுப் போன
உரையாடல்களும்.
—————————

Series Navigation2012 ஆகஸ்டு செவ்வாயில் இறங்கிய நாசாவின் தளவூர்தி இயங்கத் துவங்கியதுமொழிவது சுகம்: ஆகஸ்டு10-2012
author

கு.அழகர்சாமி

Similar Posts

Comments

  1. Avatar
    kavignar ara says:

    மரம் மீள் விதை தாய்
    தாய்க்கு சேய் ஆக விதை
    கவிதைக்கு தாய் கதை
    கதைக்கு கவிதை போல் .மரம் அறம்.வெட்டுபனுக்கு நிழல் தரும்
    இடம் தரும் வெட்ட (கிளை மேல் நின்று வெட்டிட)- ஆரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *