ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா
தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா
பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல ! ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல ! ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன.
பெர்னாட் ஷா (Preface to Mrs. Warren’s Profession Drama)
ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வி யுற்ற வணிகத்துறையாளர். வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர். இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார். நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வியுறும் நாடகங்களை எழுதினார். பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களை விமர்சனம் செய்து 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.
அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898), மிஸிஸ் வார்ரனின் தொழில் (Mrs. Warren’s Profession) (1893) போன்றவை. ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.
மேடம் மோனிகா வார்ரன் நாடகத்தைப் பற்றி :
[தமிழில் எழுதப் பேசும் வசதிக்காக பெர்னாட் ஷாவின் நாடகப் பெயர்கள் சிலவற்றை நான் எளிதாய் மாற்றி இருக்கிறேன்.]
பெர்னாட் ஷா நாடகத்தின் அடிப்படைக் கருத்து இதுதான் : ஏழ்மையாலும், சமூகப் புறக்கணிப்பாலும், தனிப்படுவ தாலும், இல்லாமையாலும், வேலையின்மையாலும் சில மாதர் பரத்தையர் தொழில் சிக்கிக் கொள்கிறார் என்பதாக பெர்னாட் ஷா தன் நாடக முன்னுரையில் கூறுகிறார். மிஸிஸ் மோனிகா வார்ரன் ஒரு நடுத்தர வயது மாது. உயர்தரப் பரத்தையர் மாளிகையை மேற்குடிச் செல்வந்தருக்கும், சமூகச் செல்வாக்கு மாந்தருக்கும் நடத்தி வரும் உரிமையாளி. நளினமும், நாகரீகமும் கவர்ச்சி மேனியும் கொண்டவள். மோனா லிஸா போன்று பார்க்க ஓர் அழகிதான். அவளுக்கு விவியன் என்றொரு வாலிபப் புதல்வி. மகள் கேம்பிரிட்ஜ் யுனிவெர்சிட்டி பட்டதாரி. அவளது கல்லூரிப் படிப்புக்குத் தொடர்ந்து பணத்தை அனுப்பிய அவளது அன்னை எப்படிப் பணம் சம்பாதிக்கிறாள் என்று தெரியாமல் இருக்கிறாள். அந்த இரகசியம் தெரிந்ததும் விவியன் வெகுண்டு, வெடித்து அன்னையைத் திட்டி அறவே வெறுக்கிறாள். தாய் சிறு வயதில் வறுமைப் பிடியில் பட்ட துயர்களைக் கூறிப் பரத்தையர் தொழிலில் தான் தள்ளப் பட்ட காரணத்தை விளக்குகிறாள். மகளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தர்க்கத்தின் முடிவில் உடன்பட ஒருவரும் இயலாது இருவரும் தாம் விரும்பும் தனித்தனிப் பாதையில் போகிறார். மோனிகா தன் பரத்தையர் தொழிலைத் தொடர்கிறாள். தாயைப் போல பிள்ளை என்பார் சிலர். ஆனால் விவியன் ஒரு விதி விலக்கு மங்கை. அவள் அன்னையைப் போலின்றி ஒரு கௌரவத் தொழிலில் உழைத்துச் சம்பாதிக்க ஈடுபடுகிறாள்.
மிஸிஸ் வார்ரனின் தொழில் நாடகத்துக்குத் தடை உத்தரவு
1893 இல் எழுதிய பெர்னாட் ஷாவின் நாடகம் 1925 ஆண்டுவரை அடுத்தடுத்துத் தடை செய்யப்பட்டு இங்கிலாந்தில் அரங்கேறாது முடங்கியே மூலையில் கிடந்தது. பிரிட்டனின் அக்கால அரங்க மேடை அதிபரரான லார்டு சேம்பர்லின் “மிஸிஸ் வார்ரனின் தொழில்” நாடகத்தை எந்த நகரிலும் அரங்கேற்றக் கூடாது என்று தடை உத்தரவு போட்டார். காரணம் அந்த நாடகம் பரத்தையர் தொழிலைப் பற்றிக் காட்டி ஆடவரையும், மாதரையும் இழிவு செய்கிறது. பரத்தையர் தொழில் நாட்டில் ஊன்றி வளர்வதற்கு மூல காரணமே சமூகம் தான் என்பது நாடகக் காட்சியாக வெளியாவது அப்போது வரவேற்கப் படவில்லை. 1902 ஆண்டில் லண்டனில் உள்ள “நியூ லிரிக் கிளப்” தன் உறுப்பினர் மட்டும் பார்க்க அந்த நாடகம் முதலில் அரங்கேறியது. 1905 இல் நியூ யார்க்கில் “மிஸிஸ் வார்ரன் தொழில்” நாடகம் முதன்முதல் அரங்கேறிப் பாதியில் போலீசார் குறுக்கிட்டு நடிகர் குழுவினர் கைது செய்யப் பட்டனர். பொதுநபர் ரசிக்க 1925 ஆண்டில்தான் அதை லண்டன் நாடக அரங்குகள் மேடையில் காட்ட முன்வந்தன.
பரத்தைமைத் தொழில் (Prostitution) பற்றி பெர்னாட் ஷாவின் கருத்துகள்
பெர்னாட் ஷா 1893 இல் “மிஸிஸ் வார்ரனின் தொழில்” என்னும் நாடகத்தை எழுதினார். அது பரத்தைமைத் தொழலில் ஈடுபட்டு ஊதியம் சம்பாதிக்கும் மிஸிஸ் வார்ரனைப் பற்றியது. அந்த வெறுப்புத் தொழிலில் கிடைத்த பணத்தை மகளுக்குத் தெரியாமல் சேர்த்து மகளைப் பட்டப் படிப்பில் ஏற்றி வளர்த்த நிகழ்ச்சியே நாடகத்தின் ஆணிவேராய் அமைந்துள்ளது. இறுதியில் அதை அறிந்து கொண்ட மகள் ஆவேசம் கொண்டு அன்னையைப் பிரிவதே நாடக உச்ச முடிவாக எழுதப்பட்டுள்ளது.
மிஸிஸ் வார்ரன் உட்பட பரத்தைமைத் தொழிலில் பங்கு கொண்ட மற்றவரும், அவளது ஆசை நாயகரும் கண்ணியமாக காட்சி அளித்துப் போவதாய் பெர்னாட் ஷா காட்டி இருக்கிறார். இந்த கசப்பு நாடகத்தை தடை செய்யத் தகுதியுள்ள ஆபாச நடைப் போக்குகள், முரண்பாடுகள் எதுவும் வசனங்களில் இல்லை. பரத்தைமை பற்றிய ஆபாசக் காட்சிகள், அமங்கலச் சொற்கள், அதிர்ச்சி வரிகள் எவையும் நாடகத்தில் எங்கும் காணப் படவில்லை. நாடக வசனங்களை இரட்டைப் பொருளில் பெர்னாட் ஷா எழுதி இருப்பது திறமையான நவீன நடைப் போக்காக திகைக்க வைக்கிறது.
பரத்தையர் தொழில் மாளிகை வைத்து நடத்தும் மிஸிஸ் வார்ரன் முரண்பாடு நாடகத்தை பெர்னாட் ஷா எழுதியதின் நோக்கம் என்ன ? பரத்தைமைத் தொழிலின் மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட நெறிகள் அல்ல ! ஆடவரின் ஆதிக்க வன்முறை வெறிகள் அல்ல ! வறுமை, ஏழ்மை, பசி, பட்டினி, தனிமை, வேலையின்மை, சமூகப் புறக்கணிப்பு, முறிந்த குடும்பம், வன்முறைக் கற்பழிப்பு, கட்டாயத் தொழில் அழுத்தம் போன்ற சமூக இடை யூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன என்று பெர்னாட் ஷா தன் நாடக முகவுரையில் கூறுகிறார்.
**********************
நாடக உறுப்பினர்
1. மேடம் மோனிகா வார்ரன் [Mrs. Kitty Warren] (45 வயது)
2. மிஸ் விவியன் வார்ரன் – [Ms. Vivie Warren] மோனிகாவின் ஒற்றை மகள் (வயது : 22)
3. பாதிரியார் சாமுவெல் கார்டுநர் [The Rev. Samuel Gardner] (வயது : 50)
4. பிராங்க் கார்டுநர் [Frank Gardner], விவியனின் காதலன் & சாமுவெல் பாதிரியாரின் மகன் (வயது : 20)
5. வில்லியம் பவல் [Praed] (நடுத்தர வயது) : மேடம் மோனிகாவின் கூட்டாளி
6. ஜார்ஜ் வாலஸ் (Sir George Crofts) (50 வயது) : மேடம் மோனிகாவின் தோழன்.
************************
மேடம் மோனிகாவின் வேடம்
(Mrs. Warren’s Profession)
நான்கு அங்கங்கள்
(இரண்டாம் அங்கம்)
அங்கம் -2 பாகம் -7
இடம்: ஹாஸ்லிமியர், ஸுர்ரி, இங்கிலாந்து
நடந்த ஆண்டு : 1893
காலம் : வேனிற் கால இரவு
அரங்க அமைப்பு: மிஸ் விவியனின் தோட்ட மாளிகை. வீட்டில் விளக்கு வெளிச்சம் உள்ளது. இருளில் கதவைத் திறந்து கொண்டு உள்ளே மோனிகா நுழைகிறாள். கூட ஃபிராங்க் வருகிறான். வெளியே நடந்து களைத்துப் போய் சோபாவில் அமர்கிறான். அவர்கள் பேசிக் கொண்டுள்ள போது, பாதிரியார், வாலஸ் நுழைகிறார். அதன் பின் உலவச் சென்ற விவியனும், வில்லியமும் வருகிறார். எல்லோரும் சப்பருக்கு அழைக்கப் படுகிறார். உண்ட பிறகு ஜார்ஜ் வாலஸ் தான் விவியனை மணந்து கொள்ள விரும்புவதாக மேடம் மோனிகாவிடம் தனியாகக் கூறுகிறார். விவியன் தன் தந்தை யார் என்று கேட்கிறாள். மோனிகா பதில் சொல்ல மறுக்கிறாள்.
(முன்வாரத் தொடர்ச்சி)
மேடம் மோனிகா: போதும் நிறுத்து ! நிறுத்து. நான்தான் உன் அன்னை. நம்பு நான் சொல்வதை ! சத்தியம் செய்கிறேன் நான். எனக்கே எதிராய் நீ இப்படிக் கிளம்பக் கூடாது ! நீ என் மகள் ! நான் உன் தாய். இப்படி நீ இடித்துரைப்பது சரியில்லை. நீ என்னை நம்ப மாட்டாயா ? சொல் நீ நம்பவதாய் !
விவியன்: யார் என் தந்தை ? முதலில் நீ அதைச் சொல் !
மேடம் மோனிகா: நீ என்ன கேட்கிறாய் என்று உனக்குத் தெரியவில்லை. நானதைச் சொல்ல முடியாது.
விவியன்: (அழுத்தமாக) உன்னால் கூற முடியும், நீ விரும்பினால் ! என் தந்தை யார் ? அதை அறிந்து கொள்ள எனக்குரிமை உள்ளது ! அதைச் சொல்ல உனக்கு ஏன் தயக்கம் ? சொல்லும் கடமை உனக்கு உள்ளது. சொல்லாமல் மறுக்க உனக்கு என்ன காரணம் உள்ளது ? இன்று நீ சொல்லாது போனால் நாளைக் காலையில் இந்த வீட்டில் என்னைக் காண மாட்டாய் !
மேடம் மோனிகா: என்ன கடூர வார்த்தைகள் ? என்னை விட்டுவிட்டுப் போய் விடுவாயா ?
விவியன்: ( வெறுப்போடு மூர்க்கமாக) நிச்சயம் போய் விடுவேன். ஒரு தயக்கமின்றி செய்வேன். எப்படி நான் வேதனைப் படுவேன், என் குருதிக் குழாய்களில் கறைபட்ட நிற நீர் ஓடுகிறது என்று அறிந்தால் !
மேடம் மோனிகா: இல்லை ! இல்லை ! இல்லவே இல்லை அப்படி யெல்லாம் ! என் உறுதி மொழி இது ! அப்படியானவன் யாருமில்லை ! அதை அறிவேன் நான் ! நீ சந்தித்தவர் யாருமில்லை ! நிச்சயமாய்ச் சொல்வேன் நான் !
விவியன்: (வைத்த கண் வாங்காமல் கூர்ந்து நோக்கி) ஓ ! நிச்சயமாய்த் தெரியுது அது மட்டும் உனக்கு ! (மோனிகா கண்ணைக் கசக்கி அழ ஆரம்பிக்கிறாள்) அழ வேண்டாம் தாயே ! நீ உணர்ந்தோ, உணராமலோ இப்படிச் சொல்கிறாய். இன்று போதும் இந்த குடும்பச் சண்டை ! சரி ! காலையில் எத்தனை மணிக்கு சாப்பிடுவாய் அம்மா ? எட்டரை மணி உனக்கு ஏற்றதா ? அல்லது சீக்கிரமா ?
மேடம் மோனிகா: (வெடித்தெழுந்து) கடவுளே ! நீ என்ன மாதிரிப் பெண்ணாய் உருவாகி இருக்கிறாய் ? என் மகள்போல் நீ நடக்க வில்லை ! வேதனையில் என்னைக் கொதிக்க வைத்து விட்டாய் இன்று !
விவியன்: நீ எதையோ என்னிடமிருந்து மறைக்கிறாய் ! ஏதோ ஓர் இரகசியம் இதில் உள்ளது. போதும் இன்று நீ ஓய்வெடுத்துக் கொள் !
மேடம் மோனிகா: நீ மூர்க்கப் பெண்ணாய் மாறி விட்டாய் ! உன்னைப் பெற்று வளர்த்த அன்னையைக் காலடியில் போட்டு மிதிக்கிறாய் !
விவியன்: (கடிகாரத்தைப் பார்த்து) இரவு மணி பத்து இப்போது ! நீ படுத்துத் தூங்கு !
மேடம் மோனிகா: எனக்கின்று தூக்கம் வராது. நீ பாய்த்த சொல்லம்புகள் என் நெஞ்சைக் கிழித்து இரத்தம் கொட்டுகிறது.
விவியன்: (அமைதியாக) ஏன் ? எனக்குத் தூக்கம் வரும்.
மேடம் மோனிகா: (துடிப்புடன், ஆவேசமாய்) இதயம் இல்லாத பெண்ணாய் நீ வளர்ந்து விட்டாய் ! என்னால் இந்தச் சொற்கணைகளைத் தாங்க முடியவில்லை என்னால் ! இந்த அநியாயத்தை நான் கேட்டுக் கொண்டு நிற்பதா ? உனக்கு என்ன உரிமை உள்ளது என்னை மீறிக் கேள்வி கேட்க ? நீ படித்துப் பட்டம் பெற்று உன்னத நிலை அடைய உனக்குப் பணம் உதவியது நான். என்னை இப்படி இகழ்ந்து பேச வெட்கப்பட வேண்டும் நீ !
விவியன்: (அமைதியாக) நான் உன்னை விட உயர்ந்தவள் என்று நான் ஒருபோதும் நினைக்க வில்லை. சம்பிரதாயத் தாயைப் போல் அதிகாரத்தோடு என்னிடம் பேசினாய் ! என் தந்தை யாரென்று சொல்ல உனக்கு விருப்பம் இல்லை ! என் சுய மதிப்பைக் காத்துக் கொள்ள உன்னோடு வாதாடினேன். என் சந்தேகங்கள் இன்னும் தீர வில்லை ! இந்தப் போர் இன்னும் ஓயவில்லை தாயே ! திரும்பவும் வருவேன் உன்னிடம் இதே வினாக்களுக்கு விடை தேடி.
(தொடரும்)
***************
தகவல் :
Based on The Play : Mrs. Warren’s Profession By : George Bernard Shaw, – Plays Unpleasant) (1958)
(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)
(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)
(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)
(d) The Wicked Wit of Oscar Wilde (1997)
(e) http://en.wikipedia.org/wiki/
(f) http://www.enotes.com/mrs-
(g) The Great Quotations Compiled By : George Seldes (1967)
(h) BBC DVD Video Limited – Bernard Shaw’s Mrs. Warren’s Profession Released in August 2006 (109 minutes)
(i) A Guide to the Plays of Bernard Shaw By : C.B. Purdom (1964)
(j) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)
(k) http://www.online-literature.
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (August 9, 2012)
http://jayabarathan.wordpress.
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொன்விழா இலக்கியப் போட்டிகள்
- தமிழ் ஸ்டுடியோவில் அம்ஷன் குமார் அவர்களின் விரிவான நேர்காணல்
- நினைவுகளின் சுவட்டில் – 97
- முள்வெளி அத்தியாயம் -21
- அமேசான் கதைகள் – 3 நிலவைத் தேடி..
- மீண்டும் அமைதி சமாதானம் அறிவிக்கப்படுகிறது
- இன்னும் உன் குரல் கேட்கிறது கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மு.வ. நூற்றாண்டு விழா
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் மற்றும் இலக்கியகம் ஏற்பாட்டில் சிறுவர்/இளையோர் சிறுகதைகள் பரிசளிப்பு விழா
- தமிழ் ஸ்டுடியோ ‘லெனின் விருது’ வழங்கும் விழா – 2012
- தாகூரின் கீதப் பாமாலை – 26 உறக்கத்தில் தவறிய காட்சி !
- பாற்சிப்பிகள்
- பி.வி.பிரசாதின் “ எப்படி மனசுக்குள் வந்தாய்”
- அற்புதமான ஓர் சுய முன்னேற்ற புத்தகம் – Who moved my Cheese
- வாழ நினைத்தால் வாழலாம்!
- பொன் மாலைப்பொழுது
- தியாக தீபம் – அன்னை இந்திரா (1917 – 1984)
- அரவான்
- சதாசிவம் மதன் “உயிரோவியம்” கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
- அவர் நாண நன்னயம்
- எம்.சி. சபருள்ளா “வியர்த்தொழுகும் மழைப்பொழுது” கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-13)
- 12 பியும் எகிறும் பி பி யும்
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 38
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 25
- ஆர். மாதேஷின் “ மிரட்டல் “
- 2012 ஆகஸ்டு செவ்வாயில் இறங்கிய நாசாவின் தளவூர்தி இயங்கத் துவங்கியது
- மரமும், நானும், விட்டுப் போன உரையாடல்களும்
- மொழிவது சுகம்: ஆகஸ்டு10-2012
- வெந்து முளைத்த விதைகள்:நாவல் குமாரகேசனின் ‘ கோட்டை மொம்மக்கா” சிறுகதைத்தொகுதி
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 32) மரித்த காதலன் !
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் – அங்கம் -2 பாகம் -7
- அமெரிக்கப் பார்வை – மீண்டும் ஒரு தேர்தல்
- பாலஸ்தீனக் கலாசாரமும், இஸ்ரேல் கலாசாரமும் : வளமைக்குக் கலாசாரம் காரணமா?
- பஞ்சதந்திரம் தொடர் 56
- விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூற்றி ரெண்டு