முள்வெளி அத்தியாயம் -22

This entry is part 29 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

முள்வெளி 
அத்தியாயம் -22

மாலை மணி ஏழு.

‘லாட்ஜி’ன் தனிமை தற்போதைய மனநிலையில் சற்று கூடுதலாகவே வாட்டுவதாகத் தோன்றியது.

இதுவரை கம்பெனி ‘கெஸ்ட் ஹவுஸி’ல் தான் தங்கியிருக்கிறான். சென்னையிலிருந்து அவன் கிளம்பும் போது எப்போதும் ‘கெஸ்ட் ஹவுஸ்’ ‘சூட் நம்பர்’ எதுவென்னும் ‘மெயில்’ தானே வந்து விடும். ஆனால் இந்த முறை சொந்த செலவில் டெல்லி வந்து ‘கரோல் பாக்’கில் தங்க வேண்டிய நிலை.

காலையிலிருந்து கண்ணாமூச்சி விளயாடுகிறான் விஷால். ‘எஸ் எம் எஸ்’ ஸுக்கு பதிலில்லை. மெயிலுக்கும் அதே கதி. விஷாலை சந்திக்காமல் விட்டிருக்கலாம். சொந்த செலவுதான். வேறு வழியில்லையென்றால் இப்போது கூட கிளம்பி விடலாம். தொழில் முறைக் கட்டாயம் இது என்னும் எண்ணம் மோலோங்கி நின்றது. இன்றைய தினம் எப்படி முடியும் என்பது தெரியாது. மாறாக இந்த முனைப்பை விட்டு விட்டால் அதன் பின் விளைவாக காலம் கடக்கும் முன் செயற் படாமற் போன கையாலாகாத தன்மை கொக்கியாய் குத்தி இழுத்துக் குழியில் தள்ளிவிடும்.

எட்டு மணிக்கு விஷால் ‘நான் கரோல் பாக் வந்து விட்டேன்’ என்றான். தான் இருக்கும் விடுதியையும் அறை எண்ணையும் சொன்னான் பாண்டியன்.

அறைக்குள் வந்ததும் விஷால் கையைக் குலுக்கி ” கைஸே ஹோ? படியா?” எனத் துவங்கினான்.

“நாம் ஆங்கிலத்திலேயே பேசுவோம்” (உன் பாஷையில் நான் பேசி ஒட்டுறவாடிய காலம் மலை ஏறி விட்டது)

“பாண்டியன். இன்றைய நிலவரத்துக்கு நீ மட்டுந்தான் பொறுப்பு ” எந்தத் தயக்கமுமின்றி ஆங்கிலத்துக்கு மாறினான் விஷால்.

“விஷால். பொறுப்பு என்றவுடன் நினைவுக்கு வருகிறது. என்னிடமிருந்து நீ டேட்டா பேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் பொறுப்பை இந்த ப்ராஜக்ட் துவக்கத்திலேயே எடுத்துக் கொண்டு விட்டாய்”

“இது எளிமையாக ஸிஸ்டத்திலேயே இருக்கிறது. இதில் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?”

“பார் விஷால். சுற்றி வளைக்காதே. கஸ்டமர் எந்த தைரியத்தில் ஒரே ஒரு வருடம் முடிந்த பின் ஏஎம்ஸி வேண்டாம் என்கிறான் என்பதற்கு நான்தான் காரணம் என்கிற மாதிரி நீ ஒரு பொய்யைக் கட்டமத்திருக்கிறாய்”

“நோ பாண்டியன்.. பிராஜக்ட் தொடங்கும் போது நீ என்னிடம் ‘மேக் ஓவர்’ செய்யும் ஸ்டேஜில் நாம் இருவருமே பொறுப்பாக இருந்தோம். நான் தனியாக வேலை செய்யத் துவங்கும் போது என்னுடைய பொறுப்பில் யார் யாருக்கு அக்ஸஸ் தேவையோ அவர்களுக்கு புது பாஸ் வர்ட் கொடுத்து மீதி பேரை கழற்றி விட்டேன்.”

“பிறகு என் பெயர் எங்கேயிருந்து இதில் வந்தது?”

“கஸ்டமர் ஏஎம்ஸி வேண்டாம் என்றால் நம்முடன் வேலை பார்த்தவன் யாரோ ‘கோட்’ தெரிந்தவனாக இருக்க வேண்டும். அல்லது மற்றவர் பாஸ் வர்ட் வழியாக உள்ளே வந்திருக்க வேண்டும்”

“அப்படியே இருக்கட்டும். எனக்கு என்ன சம்பந்தம் என்பது தான் பிரச்சனை”

“பாண்டியன். நிர்வாகம் இன்னும் உன்மீது சந்தேகத்தில் இருக்கிறது. என் மேல் அல்ல. உன் நண்பன் என்பதால் உன்னை நேரில் பார்த்துப் பேச விரும்பினேன்.

“அவர்கள் கவனத்தை என் மீது திருப்பி விட்டு நட்பு என்று புதிதாக ஏதோ பேசுகிறாய் விஷால். என்னுடைய நாட்கள் எண்ணப் படுகின்றன என்கிறாயா?”

“ஸாரி பாண்டியா.. நீ என் மீது அனாவசியமாக சந்தேகப் படுகிறாய். நிர்வாகத்துக்கு இதுவரையில் நம் இருவர் மீதுமே ஒரே மாதிரி தான் நம்பிக்கை இருந்தது. இப்போது உன் மீது சந்தேகம் வந்திருப்பதற்கு நான் எப்படிப் பொறுப்பு?”

“சரி நான் காரணமாயிருக்க இயலாது என்று நீ நிறுவ முயலவேயில்லையே?”

“இது உன் அவசர முடிவு. நான் முயலவேயில்லை என்று எப்படி முடிவு கட்டினாய்?”

“சரி. இப்போது உண்மையான நிலவரம் என்ன என்பதையாவது வெளிப்படையாகச் சொல் விஷால்”

“உன்னை நிறுவனம் இப்போது ஏன் இழக்க இயலாது என்பது உனக்கு நன்றாகவே தெரியும் பாண்டியன்.. ஆனால் இந்த ப்ராஜக்ட்டுக்குப் பிறகு உன் தேவை இருக்காது”

“ஏற்கனவே டிபிஏவுடன் சேர்த்து ப்ராஜக்ட் லீடர் என்று இரண்டு வேலை பார்க்க நீ முன் வந்தால் கட்டாயம் என் தேவை இருக்காது”

“நான் டெல்லியில் இருப்பதால் தலைமையின் எல்லா முடிவுகளுக்கும் என்னைப் பொறுப்பாக்க முயலாதே பாண்டியன். ஐடி இண்டஸ்ட்ரியில் எதுவுமே நிலையில்லை என்பதை ஸீனியரான உனக்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. ”

“ஓகே விஷால். இதை நானாக நிறுவனத்திடம் எடுத்துச் செல்ல விரும்பவில்லை. ஒன்று அவர்களாக என்னிடம் ஆரம்பிக்கட்டும். அல்லது நான் உரிய நேரத்தில் எடுத்துப் பேசுகிறேன்.”

“பாண்டியன். டெல்லி நிர்வாகம் பற்றிய ஒரு தெளிவான கண்ணோட்டம் உன்னிடம் இல்லை. இப்போது நிர்வாகத் தலைமையில் நிறையவே மாற்றங்கள். இதை நீ கவனித்தால் என்னைப் பற்றிய சந்தேகம் தீரும்”

“ஒகே விஷால் உன்னை புண்படுத்தி இருந்தால் வருந்துகிறேன்” என்றதும் பேச்சு திசை மாறியது. அன்றிரவே சென்னை திரும்பினான்.

மூன்று மாதம் கழித்து பாண்டியன் ஏற்கனவே நிறுவனத்துக்கு அனுப்பிய மெயிலின் பிரதி விஷாலுக்குக் கிடைத்தது. அனுப்பியது பாண்டியனேதான்.

‘அன்பு நிறுவனத்தாருக்கு, இத்தனை நாள் நான் வேலையில் இருக்க இயன்றதற்கு நன்றி. நான் தற்போது வரை உபயோகித்த பாஸ் வர்ட் மற்றும் இந்த ப்ராஜக்ட்டின் முடிவில் கட்டமைத்த ப்ரோக்ராம் கோட் அனைத்தையும் ஒப்படைத்து விட்டேன்.

ஒரு டிபிஏ எப்படிப் பணி புரிய வேண்டும் என எனக்குப் பட்டதோ அவை அனைத்தையும் ஒரு ‘டெக்ஸ்ட் ஃபைலில் இணைத்துள்ளேன். தற்போதைய டிபிஏவுக்கு இது பயன்படலாம். எனது செயற்பாட்டைக் காலம் கடந்தேனும் நீங்கள் சரிபார்த்தால் அது நிறுவனத்துக்கு நல்லது.

அடுத்ததாக ப்ராஜக்ட் லீடர் என்னும் பணியில் நான் காட்டும் ஜாக்கிரதை பற்றிய ஒரு குறிப்பு. இந்த ப்ராஜட் முக்கிய கட்டத்தைத் தாண்டி ‘ப்ரொடக்ஷனுக்’குத் தயார் என்று நமது கஸ்டமருக்கு சொல்லும் முன்னே நான் என் எனது உதவியாளர் அனைவரது பாஸ் வர்டை மாற்றி , அனைவரையும் நமது சர்வரில் மட்டுமே கடைசி ஒரு மாதமாகப் பணியாற்ற வைத்தேன். இந்த ப்ராஜக்ட் சம்பந்தமான எந்த விதமான கோட் அல்லது ‘எர்ரர் டேபிள் ஸல்யூஷன்ஸ்’ வெளியாக இந்த நிமிடம் வரை வாய்ப்பில்லை. ஆனால் எனக்குப் பின்னால் வருபவர் என் பெயரைக் களங்கப் படுத்தாமல் தடுப்பதற்காக இதை நினைவு படுத்துகிறேன்.”

விஷால் அந்த மெயிலை வாசித்து இரண்டே நாட்களில் அவன் பணிகள் இன்னும் ஒரு மாதத்திற்குப் பிறகு தேவையில்லை என்னும் மெயில் நிறுவனத்திடமிருந்து அவனுக்கு வந்தது.

விஷால் உடனே பாண்டியனின் எண்ணைத் தொடர்பு கொண்டான். அது உபயோகத்திலில்லை. அவன் அனுப்பிய மெயிலுக்கும் பாண்டியனிடமிருந்து பதிலில்லை.
**__
**__**
**
மீன் கொத்தி விரைகிறது
பெருகும் வேகமாய்
மீனும்

பகலுக்கு ஈடுகொடுக்கும்
பாய்ச்சலில்
இரவை எது லாவகமாய்க்
கொத்திப் போனதென
மீள் நினைவில்லை

விடிந்து எழுந்த போது
சில பட்டாம் பூச்சி
சிறகுகள்
தலையணையிலிருந்து உதிர்ந்தன

துளிர்த்துக் கள் நிரம்பும்
பானைகள் வார்த்த
சக்கர சுழற்சி
நிற்காமல்

தென்னையின் மேலே
வாடிச் சருகாகி
கீழே பசுமையாய்
ஒரு கொடி

மங்கும் மாலையில்
தூரத்தே ஒரு
மர மையத்தில்
மரமேறி
ஏறுகிறானா
இறங்குகிறானா

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 33) சூரிய வெளிச்சமும் முகிலும்மானுடர்க்கென்று……..
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *