(செப்டம்பர் 11 பாரதியார் நினைவு நாள் சிறுகதை:)
மலர்மன்னன்
ரயிலடியில் இறங்கி வெளியே வந்த ராமசாமிக்குக் கிழக்கு மேற்குத் தெரியவில்லை. பொழுது அப்போதுதான் புலர்ந்து கொண்டிருந்தது. எதிராளி முகந் தெரிய ஆரம்பிக்கவில்லை. புதுச்சேரி அவருக்கு முன்பின் அறியாத ஊர். இங்கே யாரிடம் என்னவென்று விசாரிப்பது?
அவன் வெறித்துப் பார்த்துக்கொண்டு நிற்பதைப் பார்த்து ஓடி வந்தான், ஒரு ஆள். “சாமீ, வண்டி வேணுமா” என்றான்.
‘சரி’ என்று அவன் பின்னால் நடந்தான். அந்த ஆள் போய் நின்ற வண்டி விநோதமாக இருந்தது. அதுவரை மாட்டு வண்டியும் குதிரை வண்டியுந்தான் இவனுக்குத் தெரியும். இது விசித்திரமாக இருந்தது. முன்னால் ஒரு சக்கரம், பின்னால் இரண்டு. திறந்த கூரை. உட்கார மெத்தை வைத்த இருக்கை.
“குந்துங்க சாமீ” என்றான் அந்த ஆள். அவன்தான் அந்த விநோத வண்டியின் சொந்தக்காரன் என்பது அப்போதுதான் புரிந்தது. சவாரி கிடைக்கும் என்றுதான் அவ்வளவு அக்கறையாக உறவாடியிருக்கிறான்!. ‘குந்துங்க’ என்று அவன் சொன்னதும் அதற்கும் சரி என்று அந்த வண்டியில் ஏறி உட்கார்ந்தான். வண்டியில் இடமில்லையே, இந்த வண்டிக்காரன் எங்கே உட்கார்ந்து எப்படி வண்டியை ஓட்டப் போகிறான் என்று குழம்பினான். சரி, எப்படி ஓட்டுகிறான் என்று பார்க்கத்தானே போகிறோம் என்று மனம் தெளிந்தான்.
“எங்கே சாமீ போகணும்” என்று வண்டிக்குப் பின்னால் நின்று கொண்டு குரல் கொடுத்தான், வண்டிக்காரன். பின்னாலிருந்து வண்டியைத் உந்தித் தள்ளிக்கொண்டே சாலைக்கு வந்தான். இது என்ன மாதிரியான வண்டி என்று ராமசாமிக்குப் புரிந்துவிட்டது. ஒரு புறம் சிரிப்பாகவும் மறுபுறம் பரிதாபமாகவும் இருந்தது. இப்படி ஒரு மனிதனை உள்ளே உட்காரவைத்துப் பின்னாலிருந்து இன்னொரு மனிதன் தள்ளிக்கொண்டு போகிற வண்டியில் பயணம் செய்துதான் ஆக வேண்டுமா என்றும் தோன்றியது. ஆனால் வேறு மாற்று வழியில்லை. இந்த ஊரில் இதைவிட்டால் வேறு வாகன வசதி இல்லைபோல் தோன்றியது.
“பாரதியார் வீடு தெரியுமா? பாட்டெல்லாம் எழுதுவார். அவர் இங்கே எங்கே இருகிறார் தெரியுமா?”
“பாட்டுக் கட்டற பட்டணத்து எஜமான். கோட்டுப் போட்டு முண்டாசு கட்டற சுதேசி எஜமான். மீசை வெச்சு நெத்தியிலே எப்பவும் நீள வாட்டிலே பொட்டும் வெச்சிருப்பாரே, அவர் தானுங்களே? ஊரிலே இருக்கற புஸ்ஸு வண்டிக்காரன் அத்தன
பேருக்கும் அள்ளிக் கொடுக்கற மவராசன் வீடுதானே? தோ, போவலாம்” என்று வண்டியை கன வேகமாகத் தள்ளத் தொடங்கினான், வண்டிக்காரன். தள்ளிக்கொண்டே அவனிடம் பேச்சுக் கொடுக்கலானான். பின்னாலிருந்து குரல் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. அதென்ன புஸ்ஸு வண்டி? ஓ, புஷ் வண்டியாக இருக்குமோ ஒருவேளை? பின்னாலிருந்து தள்ளிக் கொண்டுதானே வருகிறான், வண்டிக்காரன்?
“இதோ, இப்ப நா இடுப்புல கட்டியிருக்கறதுகூட அந்தப் பாட்டுக் கட்டற சுதேசி ஐயா குடுத்ததுதாங்க. யாரும் எதுவும் கேக்கவே வேணாம். அரையிலே கட்டினதை, அது எம்மாம் புச்சா, சரிகை வேட்டியா இருந்தாலும் கொஞ்சங்கூட யோசனை பண்ணாம எடுத்துக் குடுத்துடுவாரு. பழசாப்போன முண்டாசுத் துணியை எடுத்து இடுப்புல கட்டிக்குவாரு. ‘ஜம்முனு இருக்கே பாண்டியா’னு சிரிச்சுட்டுப் போய்க்கிட்டே இருப்பாரு…”
ராமசாமி வண்டி போகிற வீதிகளின் இருபுறங்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே பயணம் செய்தான். வீட்டு வாசல்களில் பெண்கள் சாணி தெளித்துக் கோலம் போடத் தொடங்கியிருந்தார்கள். அந்தச் சாணி தெளிக்கிற சப்தம்கூட கதி பிசகாமல் ஒரு தாளக்கட்டுடன் கேட்பதற்கு ரம்மியமாக இருந்தது.
வீதி தோறும் வயதின் பிரகாரம் குனிந்தும் உட்கார்ந்தும் கோலம் போடுகிற பெண்கள் அவர்களையும் அறியாமலே அந்த விடி யிருளுக்கு ஒரு சோபையைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
ராமசாமி இப்போது போய்க் கொண்டிருப்பது பாட்டுக் கட்டற பட்டணத்து சுதேசி எஜமான் வீடு தேடியே என்றாலும் அவன் உண்மையில் பார்க்க வந்தது அவரையல்ல.
எங்கே போனார்? எப்படிப் போனார் என்றெல்லாம் மூளையைக் குழப்பிக் கொண்டு அரசாங்கத்தார் தவிக்கையில், ஸ்விட்ஸர் லாந்துக்குப் போய் விட்டார், ஜெர்மனியில் இருக்கிறார் என்று ஆளுக்கொன்றாய் வதந்திகளும் பரவச் செய்த சாகச புருஷன் கடைசியில் பிரிட்டிஷ் நாட்டாமை செல்லுபடியாகாத, ஃபிரெஞ்சு இந்தியப் பிரதேசம் என்று அறியப்பட்ட புதுச்சேரிக்குத்தான் தப்பிச் சென்றுவிட்டார் என்று தெரிய வந்தது. கல்கத்தாவிலிருந்து அருகிலேயே இருக்கும் ஃபிரெஞ்சு ஆளுகை ஊரான சந்த நகருக்குப் போய் அங்கிருந்து கடல் மார்க்கமாகவே ஃப்ரெஞ்ச்சு இந்தியப் பிரதேசத்தின் தலைநகர் என்று பெயர் பெற்ற புதுச்சேரிக்குப் போய்ச்சேர்ந்துவிட்ட அசகாய சூரர் அரவிந்த கோஷ் மீது கொடியாலம் ரங்கசாமி ஐயங்காருக்கு அபாரமான பிரேமை. அரவிந்த பாபு புதுச்சேரிக்குத்தான் வந்திருக்கிறாரா என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிந்துகொள்ளாவிட்டால் உறக்கம் பிடிக்காது என்றாகிவிட்டது அவருக்கு. தம்மிடம் வந்து போகும் இளைஞன் ராமசாமி அரசியல் பேசுவான். பத்திரிகைகள் படிப்பான். நாட்டு நடப்புகளையெல்லாம் நன்றாகவே தெரிந்து வைத்திருப் பான். பட்டணத்திலிருந்து வந்துகொண்டிருந்த இந்தியா பத்திரிகையைப் பாராயணம் செய்வான். ஸ்வதேச கீதங்கள் என்று ஒரு சிறு பிரசுரம் இரண்டணா விலையில் அப்போது எங்கு பார்த்தாலும் விற்பனையாகிக் கொண்டிருந்தது. அதிலிருந்த ஒரு பாடல்விடாமல் மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டு பாடி ‘ஆகா, ஆகா இதல்லவா பாட்டு, இபோதைக்குத் தேவையான பாட்டு’ என்று சிலாகித்துக்கொண்டு தொடை தட்டுவான்.
ஒரு தடவை ராமசாமி வந்திருந்தபோது, ‘அரவிந்த பாபு புதுச்சேரிக்கு வந்துவிட்டதாகப் பேசிக்கோள்கிறார்களே, அது உண்மையாக இருக்குமா’ என்று கேட்டார், ரங்கசாமி ஐயங்கார்.
“எனக்குக் குறி சொல்லவோ ஆரூடம் பார்க்கவோ தெரியாதே” என்றான் ராமசாமி குறும்பாக.
“நீ ஜோசியம் எல்லாம் சொல்ல வேண்டாம். அதையாவது விட்டுவை. அதற்கு பதில் ஒரு நடை புதுச்சேரிக்கே போய்ப் பார்த்துவிட்டு வந்தால் போதும். அரவிந்தர் நம்ம ஊர்ப்பக்கம் வந்திருக்கிறார் என்கிறார்கள். அது நிஜமாக இருந்தால் அவருக்கு நம்மால ஆனதைச் செய்ய முடிகிறதா பார்க்கலாம்” என்றார், ரங்கசாமி.
ராமசாமிக்கு மனசுக்குள் குதூகலம் பொங்கியது. இப்போதெல்லாம் இந்தியா பத்திரிகை புதுச்சேரியிலிருந்துதானே வந்துகொண்டிருக் கிறது! அப்படியானால் அவரும் அங்கேதானே இருந்தாக வேண்டும்? சென்னைப் பட்டணத்திலிருந்து திடீரெனக் காணாமற் போனவர் தானே அவரும்? அவர் போய்ச் சேர்ந்திருக்கிற இடமும் புதுச்சேரி என்றுதானே சொல்லிக்கொள்கிறார்கள்? தானாக வருகிறது அவரை தரிசிக்கிற சந்தர்ப்பம்! நழுவ விடலாமா?
“நீங்கள் சொன்னால் போகிறேன்” என்றான் ராமசாமி. அதற்கு நீங்கள் எல்லா ஏற்பாடுகளும் செய்துகொடுத்தால் போகிறேன் என்று அர்த்தம். அது புரியாதவரா கொடியாலம்? ராமசாமியின் சம்மதத்துக்காகவே காத்திருந்தவர்போல் உடனடியாக உள்ளே விரைந்து தாராளமாகப் பணத்தை அள்ளிக் கொண்டு வந்து திணித்தார்.
“இப்பவே பொறப்படு. எவ்வளவு நாள் வேணாலும் இருந்துட்டு வா. ஆனா அரவிந்த பாபு அங்கதான் இருக்கார்னு தெரிஞ்சதுமே தகவல் கொடு. எனக்கும் தரிசிக்கணும் அவரை. அலிப்பூர் ஜெயில்ல தனிமைக் கொட்டடியிலே ஸ்ரீ கிருஷ்ண தரிசனம் கிடைச்ச மஹான். ஜெயில் அறைக் கம்பிகள், கதவு, வெளியே பாரா இருந்த வார்டர், உயரமான ஜெயில் மதில் சுவர்கள், சிறைக்குள்ளே அடைபட்டுக்கிடந்த கொலைகாரன், கொள்ளைக்காரன், நிழல் கொடுத்த மரம், அரவிந்த கோஷ் குற்றவாளின்னு சாதிச்ச பப்ளிக் ப்ராசிக்யூட்டர், வழக்கை விசாரிச்ச மாஜிஸ்திரேட்னு சகலரையும், சகலத்தையும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவாவே பார்த்த ஆன்ம சொரூபி.. அவரோட பார்வை படறதுக்கே புண்ணியம் பண்ணியிருக்கணும்” என்றார், கொடியாலம் ரங்கசாமி.
அந்தப் புண்ணியத்தைச் சம்பாதிப்பதற்கு முன் சி. சுப்பிரமணிய பாரதி என்கிற தனது மானசீக ஆதர்சத்தைக் காணப் போய்க் கொண்டிருக்கிறான், ராமசாமி.
வண்டி ஈசுவரன் தர்மராஜா கோயில் வீதியில் ஒரு வீட்டின் வாசலில் போய் நின்றது. “வீடு வந்தாச்சு சாமீ” என்றான் வண்டிக்காரன். ராமசாமி வண்டியிலேருந்து இறங்கிக் கொண்டான். ‘எவ்வளவு சத்தம்’ என்று வண்டிக்காரனிடம் கேட்டான்.
“சுதேசி ஐயாமார்கிட்டயும் அவங்களைத் தேடி வரவங்ககிட்டயும் நாங்க எதுவும் கேக்க மாட்டோம், சாமி. அவங்களா எவ்வளவு குடுத்தாலும் சந்தோசம்.”
ராமசாமி சட்டைப் பையிலிருந்து ஒரு எட்டணா நாணயத்தை எடுத்து அவனது உள்ளங் கையில் அழுத்தி வைத்துவிட்டு தயக்கத்துடன் வாசற்படியேறிச் சென்றான்.
வீட்டின் கதவு சாத்தியிருந்தது. மெதுவாகத்தான் தட்டினான். பயனில்லை. ‘ஸார்’ என்று குரல் கொடுத்தான். மூன்றாவது முறையாகக் குரலை மேலும் உயர்த்தி அழைத்தபோது வாட்ட சாட்டமான ஒரு இளைஞன் வெளிப்பட்டு, “யாரு?” என்றான்.
“நாந்தான்.”
“நான்னா?”
“நான்னா நாந்தான். அசலூர்.”
“யாரைப் பார்க்கணும்?”
“சுப்பிரமணிய பாரதியார்.”
‘சரி, மெத்தையிலே இருக்கார். மேலே போலாம்’ என்று அவன் வழிகாட்டிக்கொண்டு முன் செல்ல, இவன் பின் தொடர்ந்தான். இருவருமாக மாடிக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.
அங்கே அவர் நின்றிருந்தார். முதுகு சிறிதும் வளையாமல் நட்டுவைத்த திரிசூலம் மாதிரி நின்றார். எதிரே சுவரில் கரிய நிறக் காளி உக்கிரமாக நின்ற கோலத்தில் படமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தாள். அவர் காளியையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார். இவனுக்கு உள்ளுக்குள் உணர்வுகள் பொங்கி யெழுந்ததில் நினைவு தப்பிவிடும்போல் இருந்தது. சிரமப்பட்டுத் தன்னைச் சமாளித்துக்கொண்டான்.
அவனுக்கு வேறெதுவும் செய்யத் தோன்றவில்லை. நேராக அவரிடம் சென்று நெடுஞ்சாண் கிடையாகக் காலில் விழுந்தான். அவர் பதறிப் போய் ஓரடி பின் வாங்கினார். பிறகு ஒரே பாய்ச்சலாகக் குனிந்து அவனைத் தூக்கி நிறுத்தினார். “இந்த மாதிரி நமஸ்காரம் எல்லாம் வேண்டாம். சிறு பையனாகத் தெரிகிறீர். நீர் யார்? எங்கே வந்தீர்?” என்றார்.
“அயாம் ஃப்ரம் திருப்பழனம் நியர் கும்பகோணம், இட் ஈஸ் ஆன் தி வே டு திருவையாறு. மை நேம் ஈஸ் வி. ராமஸ்வாமி. ஃபாதர்ஸ் நேம் ஈஸ் வரதராஜ ஐயங்கார் (கும்பகோணம் அருகே திருவையாறு செல்லும் வழியில் உள்ள திருப்பழனத்திலிருந்து வருகிறேன். பேரு வ. ராமஸ்வாமி. அப்பா பேர் வரதராஜ ஐயங்கார்)” – பள்ளி மாணவனைப் போல அடக்கத்துடன் பதில் சொன்னான். இங்கிலீஷ் தெரியும் என்று காட்டிக் கொள்வதில் உள்ளூர ஒரு பெருமையும் இருந்தது.
அவன் சொல்லி முடித்ததுதான் தாமதம், அவர் முகம் நெருப்பு மாதிரி கனன்றது. விழிகள் வெளியே தெறித்து விழுந்துவிடும் போல உருண்டன. “ஏ அப்பா, அடே பாலூ, உனக்கு சமமா இவர் இங்கிலீஷிலே பொளந்து கட்டறார்டா! இவர்கிட்டப் பேச என்னால ஆகாது. நீயே பேசு. என்ன வேணுமாம் இவருக்கு?”
அவன் வெட்கித் தலை குனிந்தான். கால்கள் துவண்டன.
“ஒரு தமிழன் மற்றொரு தமிழனுடன் இன்னும் எவ்வளவு காலத்துக்கு இங்கிலீஷிலேயே பேசணும்” என்று கேட்டார், அவர். மனக் கசப்பு பேச்சில் தெரிந்தது. அவனால் பதில் சொல்ல முடியவில்லை. குற்ற உணர்வுடன் மெளனமாக நின்றான். கண்களில் நீர் குளம் கட்டிவிட்டது.
“போகட்டும்! பாலு, இவருக்குக் கிணற்றடியைக் காட்டிப் பல் விளக்கப் பொடியும் கொடுத்தனுப்பு” என்று சமாதானப் படுத்தும் தொனியில் பேசி அவனைக் கீழ் தளத்துக்கு அனுப்பி வைத்தார்.
பல் துலக்கி, குளித்து உடை மாற்றி, அவரோடு கூடவே பலகாரமும் உண்டான பின் வந்த நோக்கத்தைத் தெரிவித்தான் ராமசாமி.
“அரவிந்த பாபு இங்கே இருப்பதாக உமக்கு எப்படித் தெரியும்? எனக்கே தெரியாதே” என்று விஷமமாகச் சிரித்தார், அவர். கண்களில் குறும்பு கூத்தாடியது.
அவர் விளையாட்டாகப் பேசுகிறார் என்பது தனக்குத் தெரியும் என்கிற பாவனையில் இவனும் சிரித்தான்.
“அது போகட்டும். தமிழ்ப் பாட்டிலே உமக்கு அபிமானம் உண்டா” என்று அவர் மறுபடியும் ஏதும் அறியாதவர் போலக் கேட்டார்.
அவன் அதற்கும் ஒரு சிரிப்புச் சிரித்தான்.
“எல்லாத்துக்கும் பதில் சிரிப்புதான்னா அதுக்கு அபராதம் உண்டு! ஒரு பாட்டைக் கேக்கறதைத்தான் இவ்விடத்துலே அபராதமா விதிக்கிறது வழக்கம்” என்று கூறிவிட்டு உடனே கனத்த சாரீரத்தில் பாடத் தொடங்கிவிட்டார்:
மண்வெட்டிக் கூலிதின்ன லாச்சே! – எங்கள்
வாள்வலியும் வேல்வலியும் போச்சே!
விண்முட்டிச் சென்ற புகழ் போச்சே! – இந்த
மேதினியில் கெட்டபெய ராச்சே!
இவனுக்காகவே பாடியது மாதிரி இருந்தது அவர் பாடிய பாட்டு.
அது ஒரு மறவன் பாடுவதாக இருந்த போதிலும் மொத்தத் தமிழ்ச் சாதியும் அரற்றுவதாகவே தோன்றியது. ஒரு தமிழனிடம் ஆங்கிலத்தில் தன்னை அறிமுகம் செய்துகொண்ட அவனது நாகரிகம் தமிழ் இனத்தின் கலாசாரச் சீரழிவைக் குறிப்பதாகவே அந்தப் பாடல் குத்திக் காட்டுவதாக அவனுக்குப் பட்டது. அவமானம் அவனைத் தின்ற போதிலும் சிறு பிரசுரங்கள் வாயிலாக மட்டுமே அதுவரை படித்துப் பரவசமடைந்த பாடல்களை இயற்றியவர் இப்போது தனக்காக நேருக்கு நேர் இருந்து பாடக் கேட்டதில் மெய்ம் மறந்து போனான்.
பிற்பகலில் அவராகவே அவனை அழைத்துக்கொண்டு வெளியே போனார். எங்கே என்று அவர் சொல்லவில்லை. அவனுக்கும் கேட்கத் துணிவில்லை. மெளனமாகப் பின் தொடர்ந்தான்.
வழியில் அவர் ஒரு வீட்டுக்குள் நுழைந்தார். அங்கே அவரை “அகோ, வாரும் பாரதி” என்று ஆர்ப்பாட்டமாக வரவேற்றார், அகன்ற நெற்றியில் திருமண் இட்டுக்கொண்டு லட்சணமாகக் காட்சி யளித்தவர்..
“இந்தப் பிள்ளையாண்டானுக்கு அந்த முரடரைப் பார்க்கணுமாம். நிஜமாவே அவர் இங்கதான் இருக்காரானு தெரிஞ்சுக்கறதுக் காகவே புதுச்சேரிக்கு வந்திருக்கார்!”
“அப்படியா? சரி, போய்ப் பார்ப்போம்” என்று அவரும் அவர்களுடன் புறப்பட்டார்.
“இவர்தான் மண்டையம் ஸ்ரீநிவாஸாச்சாரியார். நம்ம எழுத்து மத்தவாளுக்குப் போய்ச் சேர வாகனம் ஓட்டறவரே இவர்தான். இது வ. ராமஸ்வாமி. இவரும் ஐயங்கார்தான். இவருக்கும் தேசியக் காய்ச்சல் அடிக்க ஆரம்பிச்சாச்சுன்னுதான் தோணறது” என்று இருவரையும் பரஸ்பரம் அறிமுகம் செய்துவைத்தார், கவிஞர்.
மூவருமாக ஒரு விஸ்தாரமான பங்களாவுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். கவிஞரும் மண்டையமும் முன்னால் மாடிக்குப் படியேறிச் செல்கையில் அவனும் பின்னாலேயே சென்றான்.. மாடிப் படிக்கட்டுகள் ஒரு விசாலமான அறையின் வாயிலில் முடிவடைந்தன. அவர்கள் உள்ளே நுழைந்தபோது அறையின் ஒரு மூலையில் சுவரை ஒட்டினாற்போல் பளபளப்பாகத் துலக்கி வைத்த செப்புக் குடம் மாதிரி அமர்ந்திருந்தார் ஒரு யோகி. பார்த்ததுமே தெரிந்துவிட்டது, அரவிந்த பாபுதான் என்று.
“வாருங்கள் பாரதி” என்று ஆங்கிலத்தில் நட்புடன் வரவேற்றார் அரவிந்தர். மண்டையத்தையும் புன்முறுவல் காட்டி வரவேற்றார். அவர்கள் அவரை நோக்கி முன்னேறிச் சென்றனர். இவன் கூப்பிய கரங்கள் விலகாமலே அவர்களைப் பின் தொடர்ந்தான்.
அரவிந்தர் அவனை ‘யார்’ என்கிற பாவனையில் .ஏறிட்டு நோக்கினார். அதைப் புரிந்துகொண்டதுபோல், “இவர் தமிழ் நாட்டு தேச பக்தர்களில் ஒருவர். உங்களை தரிசித்துவிட்டுப் போவதற் காகவே புதுச்சேரிக்கு வந்திருக்கிறார்” என்று அறிமுகம் செய்து வைத்தார், கவிஞர்.
அரவிந்தர் பரிவுடன் அவனைப் பார்த்துப் புன்னகைத்தார். அவருக்குள்ளேயிருந்த அன்புப் ப்ரவாகம் அவரது விசாலமான கண்கள் வழியாக. வெளியே வழிந்தது.
அதற்குள் அங்கே பார்வைக்கு வங்காளியைப் போல் காட்சியளித்த ஒரு வாலிபன், “ஓ தமிழ் நாட்டு தேச பக்தரா? அப்படியானால் தேச பக்தராக இருக்க அனுமதி வேண்டி அரசாங்கத்துக்கு மனுச் செய்துகொண்டாகிவிட்டதா?” என்று ஏளனம் தொனிக்கக் கேட்டான்.
தென்னாட்டு தேசியவாதிகள் மிதவாதிகளிலும் கடைந்தெடுத்த மிதவாதிகளாம்! அதைத்தான் அப்படிச் சொல்லிக் காட்டுகிறான்!
கவிஞரின் முகம் காலைச் சூரியன் போல் சிவந்தது. சுட்டும் விழிச் சுடர்களால் அவனை ஒரு பார்வை பார்த்தார்.
“அடிமைகளில் ஒருவர் உயர்ந்தவர் இன்னொருவர் தாழ்ந்தவர் என்கிற பேதம் எல்லாம் உண்டா என்ன? எந்த மொழிக்காரனா யிருந்தால் என்ன? இந்தியன் எவனும் இன்றைக்கு அடிமைப் பட்டுக் கிடக்கிறவந்தானே! இதிலென்ன உயர்வும் தாழ்வும்?” என்று உறுமினார், கவிஞர்.
அந்த வங்காளி வாலிபன் தலையைக் குனிந்துகொண்டான்.
கவிஞர் சொன்னதை ஆமோதிப்பதுபோல் அரவிந்த பாபு விழிகளை இமைகளால் ஒருமுறை மூடித் திறந்து புன்னகை தவழ அமைதி காத்தார்.
————————————————————–
ஆதாரம்: வ.ரா. என அறியப்படும் வ. ராமஸ்வாமி எழுதிய
‘மகாகவி பாரதியார்’
நன்றி: அமுதசுரபி செப்டம்பர் 2012
- புதிய அனுபவம்
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(நிறைவுப் பகுதி)
- தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் 68வது நிகழ்ச்சி
- காலமும் தூரமும்
- நல்லதோர் வீணை..!
- இடைவெளிகள் (10) – மிகைப்படுத்தலும் மனத்துள்ளலும்
- நேர்மையின்குரல்
- குரானுக்கான தப்சீர் எழுத்தியல் வரலாறு
- சிவாஜி ஒரு சகாப்தம்
- 6 ஆகஸ்ட் 2012
- கருப்பு விலைமகளொருத்தி
- ஆற்றங்கரைப் பிள்ளையார்
- கவிமுகில் – தாராபாரதி விருது வழங்கும் விழா
- 2014 ஆண்டில் ஏவப்படும் ஜப்பான் விண்கப்பல் ஹயபுஸா -2 வக்கிரக்கோள் மண்ணெடுத்துப் பூமிக்கு மீளும்
- ஓயாத உழைப்பும், மனிதநேயப் பண்பும்! கேப்டன் லட்சுமி சேகல் (1914 – 2012)
- காலம்….!
- கதையே கவிதையாய்! (3)
- அது ஒரு வரம்
- உயர்வென்ன கண்டீர்?
- காலத்தின் விதி
- சாகித்திய அகாதெமி விருது குறிஞ்சிச்செல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம்
- மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -41
- உரஷிமா தாரோ (ஜப்பான்)
- ஓடும் பஸ்ஸில் ஒரு நாடகம்..!
- இவ்வாண்டின் “ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது “ பெற்ற சுப்ரபாரதிமணியனின் “நீர்த்துளி ” நாவல்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -10
- என்ன செய்வார்….இனி..!
- இந்திய இன்சுரன்ஸ் பணம் & பிஎஃப் பணம் பணால் ஆக, நிதிஅமைச்சரின் யோசனை….
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 35) குற்ற மன்னிப்பு
- தாகூரின் கீதப் பாமாலை – 29 கானத்தைப் பாடும் தருணம்
- முள்வெளி அத்தியாயம் -24 (விடுபட்டுப் போன அத்தியாயம்)
- பழமொழிகளில் கனவும் நினைத்தலும்
- பாவைப் பிள்ளை சிறுவர் பாடல் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
- குற்றமும் தண்டனையும் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
- ஆர். பன்னீர்செல்வத்தின் “ 18 வயசு “
- தொலைந்த உறவுகள் – சிறுகதை
- வைகறை வாசம் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு