தொலைந்த உறவுகள் – சிறுகதை

This entry is part 36 of 37 in the series 2 செப்டம்பர் 2012

‘சாக்லேட் தாத்தா வந்திருக்கிறார்…சாக்லேட் தாத்தா வந்திருக்கிறார்’

 

தெருவில்  விளையாடிக்  கொண்டிருந்த என் மகள் உற்சாகமாய் ஓடிவந்து என் அப்பாவிடம் சொல்லிவிட்டு மறுபடியும் தெருவை நோக்கிச் சென்றாள்,  நீண்ட  நாள் எண்ணை விடாத வீட்டின்  காம்பவுண்ட் கேட்  ‘கிரீச்’   என்று  பாம்பின்  வாயில் மாட்டிக்கொண்ட எலியாய்  முனகியது, எனக்கு புரிந்துவிட்டது…வந்தவர் அப்பாவின் சிநேகிதர் ராஜாராமன் தான்… அப்பாவுடன் ஒன்றாக ஒரே ஆபீசில் வேலை பார்த்து  ரிட்டையர் ஆனவர். அவர் வரும் சமயமெல்லாம் ‘சாக்லேட்’வாங்கி வந்து என் குழந்தைகளுக்கு கொடுத்தே அந்தப் பெயரைப் பெற்றுவிட்டார்.

 

மகளுக்கு என்னவோ அவர்  ‘சாக்லேட் தாத்தா’ என்றாலும்… நாங்கள்  எல்லோரும்  சேர்ந்து அவருக்கு வைத்தப் பெயர் ‘நாரதர்’ அது  ஏன்  என்று  நீங்களே  போகப் போக புரிந்து கொள்வீர்கள்.

 

அவர் எங்கள் விட்டுக்கு வந்து சென்றாலே,  அன்று எங்கள் வீட்டில் அலை  அடிக்காமலே சுனாமி வந்து சென்றது போல ஒரு பிரளயத்தை உண்டு பண்ணிவிட்டு தான் செல்வார்,  அது அவருக்கு தெரியாமலே எப்பொழுதும் நடந்து  வரும்   வழக்கமான நிகழ்வுதான் .. சுனாமிக்கு தெரியுமா  தன்னால்  இவ்வளவு  அழிவு ஏற்பட்டது  என்று..

 

அவர் தன்னைப்பற்றி சுயதம்பட்டம் அடிப்பதில் பல்கலை பட்டம் வாங்காமலே டாக்டர் பட்டம் வாங்கியவர்.  ஒவ்வொரு முறையும் அவர் வரும் சமயம் தம்பட்டம் அடிப்பதும் அதனால் எங்கள்  வீட்டில்  அப்பாவின் கோபம் எங்கள் மேல் விஸ்வரூபமாகி அப்பாவுக்கும்  எங்களுக்கும்  வாய்ச்சண்டையாய் ஆரம்பித்து  அந்தச் சண்டை அவர் வரும் சமயமெல்லாம் வாய்தா வாங்கிக்

கொண்டிருப்பதும் அவருக்கு  தெரிந்திருக்க  வாய்ப்பில்லை தான்.

 

அவர்  அப்படி என்னதான் சொல்வார், வேறென்றும் இல்லை, அவருக்கு இரண்டு பிள்ளைகள், பையன் நன்றாக படித்து தற்சமயம் அமெரிக்காவில் செட்டில் ஆகி அங்கேயே தங்கி விட, பெண்ணோ, ஒரு  எம்என்சி  கம்பெனியில்  வேலை செய்து,  சென்ற வருடம் தான் ஒரு சாப்ட்வேர் எஞஜினரைக் திருமணம் செய்து அவளும் ஆஸ்திரேலியாவிற்குச்  சென்றுவிட..

 

அவர்கள் அங்கு நிம்மதியாய் இருக்கிறார்களோ இல்லையோ..எங்கள் நிம்மதியை நிர்மூலமாக்குகிறார்கள்…. அவரின் தந்தையின் .மூலம்.. இதற்கும்  எங்கள் சண்டைக்கும் காரணம் என்ன என்றா  கேட்கிறீர்கள்…. அவர் சொல்வதை கேட்டால் உங்களுக்கு நான்  சொல்வதின்  உண்மை  தெரிய வரும். 

 

ஆம்… தன் பையனும் பெண்ணும் நன்றாக வசதியாக் வாழ்வில் உயர்ந்து இருப்பதாக அவருக்கு ஒரு பெருமிதம், அதனால் அடுத்தவரைக் கண்டாலே, உபதேசம்.. ஆலோசனை ..கதாகாலட்சேபம்  செய்ய ஆரம்பித்து விடுவார், அது மட்டும் அல்ல,  தங்கள் பிள்ளைகள் தான் அதிபுத்திசாலிகள் என்றும், வெளிநாட்டில் அவர்கள் இருப்பதாலோ என்னவோ,  எங்களைக் கண்டாலே  எதோ  புழு  பூச்சிகளைப் பார்ப்பதைப் போல ஒரு  பார்வை  வீசுவார் பாருங்கள்….அப்படி ஒரு அலட்சியப் பார்வை..

 

அவர் ஒவ்வொரு  தடவை  வீட்டுக்கு  வரும்  சமயம்  தன்  பிள்ளைகளின்  பிரதாபத்தை சொல்லிவிட்டு போக, அப்பாவுக்கோ எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்த்தது போல ஆகிவிடும்.

 

அவர் இருக்கும் வரை அமைதியாய் இருப்பவர், அவர் வீட்டைத்  தாண்டி  தெருமுனை  கூட தாண்டி  இருக்கமாட்டார்.  ஆரம்பித்துவிடுவார் அவர் விட்டுச் சென்ற கச்சேரியை தன் பங்கிற்க்கு….அதுவரை  அமைதியாய்  இருந்த  அப்பாவா.. யாருமே நம்ப மாட்டார்கள்.

 

‘ஏண்டி …. புள்ளைங்களா பெத்திருக்கே … அவனப் பாரு… என்ன  பெருமையா  சொல்லிட்டுப் போறான்….நீயும் பெத்திருக்கியே… …நானும் படிபடின்னு  சொன்னேன் கேட்டாங்களா ….உன் பசங்க’

 

‘ஆங்… அவங்க எனக்கு மட்டும் தான் பசங்களா … ஏதோ உங்களுக்கு சம்பந்தமே  இல்லாத மாதிரி  பேசறீங்க …’

 

அம்மாவும் தன பங்கிருக்கு பதில் பேச

 

‘இந்த கிண்டல் பேச்சுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல… உன் குடும்பத்தில

யாராவது  படிச்சிருந்தா தானே.. உனக்கு அதன் அருமை தெரியும் … ஏதோ சொல்வாங்களாம் டாங்கிக்கு தெரியுமா தர்பூஸ் வாசனை….’

 

இப்படித்தான் தன் வாயில் எது வருகிறதோ அதைச் சொல்வார்.

 

 

‘என்னப்பத்தி எதுவானாலும் பேசுங்க… எங்க  குடும்பத்தைப்  பத்தி பேச  உங்களுக்கு  எந்த ரைட்ஸ்ஸும் இல்ல.. உங்க குடும்பத்தைப்  பத்தி  எனக்குத் தெரியாததா … உங்க  தம்பி  இருக்காரே  எப்படி  பரீட்சையில  பாஸ்  பண்ணீனாருன்னு  எனக்கு  மறந்து போச்சா என்ன … சொல்லவா…’

 

இப்படி ஆரம்பிக்கும் சண்டை…திசை மாறி.. பேச வேண்டிய விஷயத்தை மறந்து

குடும்ப பிரச்சினையாக மாறிவிடும்.

 

இது நாளொரு மொபைலும் தினம்  ஒரு  டிசைனாக மாறி  இருக்குமே  தவிர.. அதே பேச்சு….  அதே  பதில்  மாற்றம் ஒன்றும் இருக்காது…

 

இன்றைக்கு எதற்கு வந்திருக்கிறாரோ, எங்களுக்குள் கிலி உண்டாகிவிட்டது..

 

அன்று விடுமுறை தினம், அப்பா ஹாலில் அமர்ந்து தினசரியைப் படித்துக் கொண்டு இருந்தார்.. அதைத் தவிர அவருக்கு வேறு என்ன வேலை. அம்மா,சமையலறையில் இருக்க, என் மனைவியோ அம்மாவுக்கு துணையாக காய்கறிகளைக் நறுக்கித் கொண்டிருந்தாள்.. அம்மாவுக்கு  என்  மனைவியின்  சமையல் பிடிக்காது என்பது விஷயம் 

 

தங்கையோ அறையில் அமர்ந்து வரும் தேர்வுக்கு விழுந்து விழுந்து படித்திருக்க, ஆம் தூங்கிதூங்கி டேபிளில் மோதி  மோதி படித்துக்  கொண்டிருக்கிறாள்.

 

என் சீமந்திர புத்திரன் வீட்டிலின் உள்ளேயே கிரிக்கெட் விளையாடிக் கொண்டு.. அனைவரின் தலையைப் பதம் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

நான், எப்பொழுதும் போல இன்டர்நெட்டில் நுனிப்புல் மேய்ந்து கொண்டு இருந்தேன்.என் தம்பிக்கு வழக்கம் போல இன்னும் விடியவேயில்லை. அவனாவது  படிப்பான் என்று பார்த்தால், ஒரு மெக்கானிக் டிப்ளோமா வாங்கிவிட்டு,  இரவு பூராவும் வொர்க் ஷாப்பில் வேலை செய்து, கலைத்து போய் தூங்கிக் கொண்டிருக்கிறான்.

 

‘வாப்பா.. ராஜா… ‘

 

வந்தவர் அப்பாவின் அருகில் சோபாவில் வந்தமர்ந்தார்… கையில் ஒரு பெரிய பை இருந்தது.. எப்பொழுதும் ஒரு சின்ன கைப்பை இருக்கும், இன்று ஏனோ பெரிய பை… ஏதொ பெரிய வில்லங்கம் தான் என்று நினைத்துக் கொண்டேன்..

 

‘உஸ்… அப்பாடா என்ன வெயில் தாங்கவே முடியலே … வருசத்துக்கு  வருஷம் வெயில்  அதிகமாகி போறதே ஒழிய .. கொறையற  பாட்ட காணோம் ..’

 

‘என்னாப்பா .. பார்த்து  ரொம்ப நாளாச்சே…எப்படி இருக்கே…’

 

‘நான்  நல்லா இருக்கேன் … பையன்.. மருமக.. பேரன் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தாங்க… அவனுக்கு கெடைச்சதே ரெண்டு வாரம் தான் லீவ்.. அதான் பேரப்பிள்ள  கூடவே இருந்திட்டேன்..’

 

என்றவர்… பையன் அமெ ரிக்காவில் இருந்து கொண்டு வந்த சாக்லேட் பாக்ஸ்  ஒன்றையும் … மேலும் … ஒரு ஏலேக்ட்ரானிக் பொம்மையையும் அப்பாவிடம்  கொடுத்தார்…

 

அவர் சொன்னதைக் கேட்டதும் … எனக்கு தெரிந்து விட்டது …. இன்றைய  பிரச்சினையை  நாரதர்  தொடக்கத்திலே ஆரம்பித்துவிட்டார் என்று

 

‘எதுக்குப்பா… இதெல்லாம்…இவ்வளவு விலை கொடுத்து..’

 

‘பராவாயில்ல…உனக்கா வாங்கிட்டு வந்தேன் … உன் பேர கொழந்தைக்கு பிடிக்குமேன்னு தான் ….’

 

அதை வாங்கிய மகள் உடனே பிரிக்கத் தொடங்கினாள்..

 

‘ஆங்… அப்புறம் பையன், மருமக.. பேரன் எப்படி இருக்காங்க..’

 

‘பையன் நல்ல தான் இருக்கான்… அட்லாண்டலாவ்ல  வேலை செஞ்சான்.. இப்ப . கலிபோர்னியாவில சொந்தமா வீடு வாங்கி…. அங்கேயே செட்டில் ஆகப் போறானாம்… அப்புறம்… மருமகளும் வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டாளாம் .’

 

‘அப்ப .பேரனை யாரு பார்த்துப்பாங்க’

 

‘பேரன பேபி சிட்டர்ன்னு … அதான் .நம்ம ஊரு வேலைக்காரி  மாதிரி  அங்க இருக்காங்கலாம்   ..அவ கிட்ட கொடுத்து பாத்துக்கச் சொல்றாங்களாம்..’

 

‘எதுக்குப்பா … பையனுக்கு அம்மா மேல ஏக்கமா இருக்காது …’

 

 

 

 

‘நம்மஊரு  மாதிரி இல்ல அமெரிக்கா … சின்ன  வயசிலிருந்தே  பசங்களுக்கு  தனி படுக்க…தனி ரூம் …சுயமா குளிக்க கத்து கொடுக்க ஆரம்பிச்சுடுறாங்க ..அதும் இல்லாம… இபப வாங்கி இருக்கிற் வீட்ட  லோன்  போட்டு  வாங்கி  இருக்கானாம்…  ரெண்டு  பேரும்  வேலைக்குப் போனாத்  தான் வாங்கின கடன அடைக்க முடியுமாம் …’..

 

அங்க போயும் ப்ணக் கஷ்டம் தானா.. இதுக்காகாவா… அமெரிக்காவிலே இருக்க  எல்லாரும்  ஆசைப்படுகிறார்கள்… கேட்க  நினைத்து  மனதிற்குள்  சொல்லிக்கொண்டேன்..

 

‘அப்புறம்… பொண்ணு எப்படி இருக்கா…’

 

‘அவளும் நல்லா தான் இருக்கா… பேத்திக்கு லீவ் விடடா வர்றேன்னு சொன்னா…ஆனா. மாப்பிள… பிரான்ஸ் போய்  இருக்கிறாராம்.. அவருக்கு  உலகம்  சுத்தறதுக்கே நேரம் சரியா இருக்காம் ‘

தன மகன், மகளைப் பற்றி பெருமை பொங்கச் சொன்னார்..

 

‘அப்புறம்.. என்னைப் பத்தியே கேக்கறயே … உன் சின்னப் பையன் வேலை  தேடரான்னு சொன்னியே …என்னாச்சி..’

அதற்குள் அம்மா  காபியை எடுத்துக் கொண்டு வர

 

‘வாங்கண்ணா … எப்படி இருக்கீங்க.. அண்ணி எப்படி இருக்காங்க …

அக்கறையோடு கேட்டாள் அம்மா…

 

‘எல்லாம் நல்லா இருக்காங்கம்மா.. ‘

 

‘அவனும் தேடிட்டு தான் இருக்கான்… எங்க கெடைக்குது…  ஏதோ  தெரிஞ்ச மெக்கானிக் ஷாபபில இப்ப வேல செஞ்சிட்டு வரான் … ‘

 

‘சரவணா… பேங்க் வேலையெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு;

என்னைப் பற்றி கேட்டார்..

 

‘நல்ல போயிட்டு இருக்கு அங்கிள்…’ வந்தவர் காபி சாப்பிட்டு.. பேச வேண்டியதை எல்லாம் பேசிவிட்டு சாவகாசமாய் கிளம்ப…

 

மகள் .. அவர் கொடுத்த பொம்மையை  அக்கு வேறு ஆணி வேறாய் பிரித்து… விளையாடிக் கொண்டிருந்தாள்.

 

‘பாத்தியா… பார்வதி… ராஜா.. எவ்வளவு பெருமையா… அவன் பசங்கள பற்றி சொல்லிட்டு போறான்.. நமக்குன்னு வந்து பொறந்திருக்குப் பாரு..’

 

‘நம்ம பசங்களும் நல்லாதானே இருக்காங்க… அவங்களுக்கு என்னங்க கொறச்சல் ..’

 

‘ஒருத்தனாவது ஒழுங்கா படிச்சானா .. அவன்   தன்   பசங்கள  பத்தி   எவ்வளவு  பெருமையா    சொல்லிட்டு  போறான் ..’

 

‘பாரின் போனாதான் பசங்களா… நம்ம பசங்க நம்ப கூடவே நல்லாதானே சந்தோஷமா இருக்காங்க…’

 

‘சரி.. சரி… எதுக்கெடுத்தாலும் எதையாவது பேசிடு..’

இதையெல்லாம் கவனிதத என்னுடைய மனைவி…

 

‘என்னங்க.. எப்ப பார்த்தாலும் உங்க அப்பா.. உங்களை பத்தி மட்டமா பேசிட்டு இருக்கார்…நாம ஒண்ணா இருக்கிறது உங்கப்பாவுக்கு பிடிக்கல போல.. பேசாமா  நாம தனி குடித்தனம் போய்டலாமா…’

 

இது தான் சமயம் என்று என்னவளும்  சந்தடி  சாக்கில்  என்னை  உசுப்பேற்றிக்  கொண்டிருந்தாள் .

 

அப்புறம் அவளை எப்படியோ சமாதானம் செய்து .. ஒருவழியாக.. அவருக்கு தாங்களும் நன்றாக வளரவேண்டும் என்ற அக்கறையால்தான் அப்படி சொல்றார்..அவருக்கு எங்க மேல பாசம் அதிகம்.. அப்படி இப்படி என்று கூறி ஒருவாறு  அவளைச்  சமாதானம்  செய்தேன்…

 

சமாதானம் ஆனாளோ . இல்லையோ .. அப்போதைக்கு அந்த விசயத்தை விட்டு விட்டாள் .

 

ரு நாள்…

 

வீட்டின் போன் அடித்தது.. அப்பா எடுத்தார்… எதிர்  முனையில்  யாரென்று  தெரியவில்லை

…….

‘அப்படியா… அச்சச்சோ …. முன்னாடியே சொல்லி இருக்க கூடாதா … இதோ வந்திடறேன்..’   அவர் பேசுவதிலிருந்து ஏதோ ஆபத்து நடந்திருப்பதை என்னால் ஊகிக்க முடிந்தது

..

‘முடிஞ்சா.. என் பையனையும் கூட்டிட்டு வரேன்..’

..

‘அதெல்லாம் … பரவால்லப்பா… அவனுக்கு ஒன்னும் சிரமமில்ல’

 

ரீசிவரை வைத்தவர்.. என்பக்கம் திரும்பி..

 

‘சரவணா.. நீ பேங்க் போவும் போது… என்னையும் அழைச்சிட்டு போய்… நம்ம ராஜாராமன் வீட்ல ட்ராப் பண்ணிடு..’

 

‘என்னப்பா.. என்ன விஷயம்.. திடீர்னு..’

 

‘அவனுக்கு … நெஞ்சு வலியாம்… ஹாஸ்பிடல் போகணுமாம்… என்னையும் துணைக்கு வரச் சொல்லி இருக்கான்..’

 

அப்பாவை அழைத்துக்கொண்டு… ராஜாராமன் அங்கிள் வீட்டில அவரை இறக்கி விட்டு.. பேங்க் சென்றேன்…

 

மாலை வீடு திரும்பியவுடன்.. அப்பாவிடம்

 

‘அங்கிள்க்கு எப்படி இருக்கு இப்ப ..’

 

‘ஹார்ட்ல பைபாஸ் சுர்ஜெரி செய்யணும்ன்னு டாக்டர் சொல்லிட்டாராம் … கொஞ்சம் அடைப்பு இருக்காம்….’

 

‘ஐயோ…பாவம்…. இப்பதானே அவர் பையன் அமெரிக்காவிலிருந்து வந்திட்டு போனான்..’

 

‘அமாம்பா… அவருக்கு துணைக்கு யாரும் இல்ல இப்ப … அவரு சம்சாரத்துக்கும்  வயசாயிடுச்சி.. இப்ப நம்மள விட்டா அவனுக்கு யாரும் இல்ல ‘

 

‘அதனால என்னப்பா… நாம கூட இருந்து கவனிச்சிக்கிலாம்… அவர் பையனுக்கும் பொண்ணுக்கும் சொல்லியாச்சா..’

 

‘சொன்னாரு..’

 

‘எப்ப வராங்கலாம்..’

 

‘வரலியாம்… இப்பதான் … பையன் புது ஆபீஸ் போயிருக்காரானாம் … பணம் அனுப்பரேன் .. ஒரு நல்ல நர்ஸ் துணைக்கு வச்சி பாக்க சொல்லிட்டானாம் .’

 

‘மருமகள அனுப்பி வைக்க்கலாமே..’

 

‘இப்பதான்.. புதுசா வேலைக்கு சேர்ந்து இருக்காளாம்… வர்றது கஷ்டம்ன்னு  சொல்லிட்டானாம்.’

 

‘ஐயோ.. பாவம்… பொண்ணு என்ன சொன்னாளாம் ..’

 

‘அவ பொண்ணு..கேட்ட உடனே அழறாளாம்  . அவ வீட்டுக்காரன்..  ஆபீஸ்  டூட்டின்னு  சொல்லி அடிக்கடி வெளியூர் போயடரானாம்.. நீங்களே பாத்துங்கோப்பான்னு சொல்லிட்டாளாம் … எல்லா  சொந்தமும்  பந்தமும்  பணமும்  இருந்தும் ஒருத்தரும் பாக்க வரலையேன்னு அழராம்பா…. நான்தான் ஆறுதல் சொலிட்டு வந்தேன்..’

 

‘எப்ப ஆபரேஷன்…டேட் பிக்ஸ் பண்ணியாச்சா ‘

 

‘வர்ற பத்தாம் தேதி .’

 

ஆபரேஷன் நல்ல படியாக முடிந்து.. அன்று தான் டிஸ்சார்ஜ் …. நானும் அப்பாவும் ஹாஸ்பிடல் சென்றிருந்தோம்.. வெள்ளை நிற தேவதைகள் அங்கும் இங்கும் உலா வந்த வண்ணம் இருந்தனர்.

 

ராஜாராமன் பெட்டில் இருக்க…. கடைசியாக சீப் டாக்டர் அவரை பரிசோதனை  செய்து…

 

‘ஆபரேஷன் நல்ல படியா முடிஞ்சி… எல்லாம் நார்மலா இருக்கு.. இன்னிக்கு டிஸ்சார்ஜ் ஆகிடுங்க… வீட்ல கம்பலீட் ரெஸ்ட்ல இருங்க…  ரொம்ப டென்ஷன் ஆகாக் கூடாது . ‘

 

‘ரொம்ப நன்றி டாக்டர்…’

 

‘நன்றி எல்லாம் எனக்கு எதுக்கு… ஆண்டவனுக்கு நன்றி சொல்லுங்க…’  என்றவர் என் பக்கம் திரும்பி

 

‘இது உங்க பையனா…   நீங்க ஹாஸ்பிடல்ல சேர்ந்ததிலிருந்து ஆபரேஷன் வரைக்கும் சமயத்துல…  ஓடியாடி  தேவையான  மேடிசின் எல்லாத்தையும் சமயம் பார்தது வாங்கிட்டு வந்து . உங்கள நல்ல கவனிச்சாரு … நீங்க இவர பையனா பெத்ததுக்கு கொடுத்து வச்சிருக்கணும்…’

என்னைப்பார்த்து அவர் சொல்ல…

 

‘சார்.. நான் வந்து..’ நான் வாய் திறக்க…அதற்குள் அங்கிள் என் கையை பிடித்து..

 

‘இது… என் பிரண்டோட சன்… பேரு சரவணன். டாக்டர்… ஒரு பாங்க்ல களார்கா வேலை செய்யார் ‘ என்னை அறிமுகப் படுத்தினார்

 

‘ஒ அப்படியா… இந்த காலத்துல கூடப் பொறந்த பசங்களே கவனிக்காத போது..இவர் உங்கள நல்லபடியா கவனிச்சது ஆச்சரியமா இருக்கு …’  டாக்டர் என் தோளைத் தட்டி விட்டு நகர…

 

என் கையைபிடித்த .. அங்கிள்

 

‘ரொம்ப தேங்க்ஸ்பா..’என்றபோது… அவர் கண்களில் கண்ணீர்த்துளி எட்டிப் பார்த்ததை நான் கவனிக்க தவறவில்லை.. அப்பாவும் என்னை பெருமிதமாய்ப் பார்த்தார்.

 

மற்றொரு நாள்..

 

‘சாக்லேட் தாத்தா வந்திருக்கிறார்…சாக்லேட் தாத்தா வந்திருக்கிறார்’

என் மகள் உற்சாகமாய் ஓடிவந்து என் அப்பாவிடம் சொல்ல …

 

இப்போதெல்லாம் அங்கிள் வீட்டுக்கு வந்தால், தன் குடும்பத்தைப் பற்றி பெருமை பேசுவதில்லை .. அப்பாவும் முன்பு போல் சண்டை இடுவதும் இல்லை..

 

****** முற்றும் ******

 

Series Navigationஆர். பன்னீர்செல்வத்தின் “ 18 வயசு “வைகறை வாசம் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
author

ரிஷ்வன்

Similar Posts

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *