அக்னிப்பிரவேசம் -1

This entry is part 8 of 31 in the series 16 செப்டம்பர் 2012

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

 yandamoori@hotmail.com

தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

நவம்பர் 12, வியாழக்கிழமை,

ராயப்பேட்டையில் ஒரு மகப்பேறு ஆசுபத்திரி.

நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த அறையைத் தவிர ஆஸ்பத்திரி முழுவதும் நிசப்தமாய் இருந்தது.

அந்த அறையில் மட்டும் என்றுமே நிசப்தத்தைக் காணமுடியாது. பிறப்பு இறப்புக்கு நடுவே போராட்டம் அங்கே நிரந்தரமாய் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். ஒரு ஜீவனின் உயிரை சோதித்தபடி மற்றொரு ஜீவன்  பிறக்கும்  இடம் அதுதான். பெண்ணாகப் பிறந்தவள் எந்த சங்கோஜமும் இல்லாமல் தன் வலியை வெளிப்படையாய் ஒப்புக்கொள்ளும் இடமும் அதுதான்.

அந்த அறையில் நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்கள் இருவர் இருந்தார்கள். பக்கத்து அறையில் லேடி டாக்டர் உறங்கிக் கொண்டிருந்தாள். நர்ஸ் ஒருத்தி பிரசவ வேதனைப் பட்டுக்கொண்டிருந்த இரு பெண்களையும் சமாதானப் படுத்திக் கொண்டிருந்தாள். எத்தனையோ கர்ப்பிணி பெண்களை அந்த சமயத்தில் அனுசரணையாய் நடத்தியிருக்கும் மென்மை அந்தக் குரலில் இழையோடி இருந்தது.

அந்த அறையிலேயே இன்னொரு நர்சும் உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் பெயர் ஆதிலட்சுமி.

பிரசவ வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கும் இரு பெண்களுக்கும் ஏறக்குறைய ஒரே வயதுதான் இருக்கும். பிரசவ நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

தேவையான சமயத்தில் எழுப்பும்படி சக நர்ஸிடம் சொல்லிவிட்டுப் போய்ப் படுத்துக் கொண்டுவிட்டாள் ஆதிலட்சுமி. அவள் ஒரு சினிமா பைத்தியம். அன்று மாலைதான் முதல் ஆட்டம் சினிமாவுக்குப் போயிருந்தாள். பக்கத்துப் பக்கத்தில் இரண்டு தியேட்டர்கள். ஒன்றில் எம்.ஜி.ஆரின் படம். மற்றொன்றில் சிவாஜியின் படம். பூவா தலையா போட்டுப் பார்ப்பது அவளுடைய மற்றொரு பழக்கம். டாஸ் போட்டுப் பார்த்துவிட்டு எம்.ஜி. ஆரின் படத்திற்குப் போனாள்.

பிரசவ வேதனை பட்டுக் கொண்டிருந்த இரண்டு பெண்களில் ஒருத்தியின் பெயர் நிர்மலா. ஒல்லியாய், சிவப்பாய் இருந்தாள். பணக்கார வீட்டுப் பெண்ணைப் போலத் தொற்றமளித்தாள். வலி தாங்க முடியாமல் உரத்த குரலில் கத்திக் கொண்டிருந்தாள்.

பக்கத்து கட்டிலில் இருந்தவள் அருந்ததி. திடமாய், தெம்பாய் இருந்தாள். வலியை வெளியில் காட்டிக் கொள்ளாமல் பொறுத்துக் கொண்டிருந்தாள். ‘ஆணா பெண்ணா என்று கடந்த ஒன்பது மாதங்களாய் நீடித்துக் கொண்டிருந்த சஸ்பென்ஸ் விரைவில் தீர்ந்து விடப் போகிறது இருவருக்கும்.

இருவருக்கும் வலி அதிகரித்தது. நர்ஸ் இருவரையும் சமாதானப் படுத்திக்கொண்டே ஆதிலக்ஷ்மியையும் எழுப்பினாள்.

நல்ல கனவில் ஆழ்ந்திருந்த ஆதிலட்சுமி கண்களைக் கசக்கிக் கொண்டே எழுந்து கொண்டாள். அவள் கனவில் பணக்காரனின் மகன் திருடனாய் வளர்ந்து எம்.ஜி.ஆர். ஆகி  ஹீரோயினுடன் டூயட் பாடிக் கொண்டிருந்தான்.

நர்ஸ்கள் இரண்டு பேரும் ஆளுக்கொரு பெண்ணின் அருகில் நின்று பணிவிடை செய்தபடி தைரியம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதற்குள் டாக்டரும் வந்துவிட்டாள்.

நிமிடங்கள் பாரமாய் கழிந்து கொண்டிருந்தன.

திடீரென்று நிர்மலா வீலென்று கத்தினாள். அதுவரை வலியை அடக்கிக் கொண்டிருந்த அருந்ததியும் கூட! அவ்வளவு நேரமாய் அனுபவித்து வந்த துன்பம், டென்ஷன் எல்லாம் ஒரேயடியாய்த் துடைத்தெறிந்தாற்போல் போய் விட்டது. இரு பச்சிளம் குழந்தைகளின் அழுகைக் குரல் கேட்டது. சரியாய் அதே சமயத்தில் கடியாரம் பன்னிரண்டு அடித்து ஓய்ந்தது.

இவ்வுலகத்தின் சுக துக்கங்களை, சந்தோஷத்தை, வேதனையை பகிர்ந்துக் கொள்வதற்கு ஒரு வினாடி கூட வித்தியாசம் இல்லாமல் இரு குழந்தைகளும் ஒரே நேரத்தில் இந்தப் பூமியின் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கின.

அனுபவிக்கும் அதிர்ஷ்டம் இருந்துவிட்டால் இந்த வாழ்க்கை முழுவதும் இல்லாத சந்தோஷம் வேறு இல்லை. ஜாதகம் மட்டும் சரியாக இல்லை என்றால் வாழ்க்கை முழுவதும் நரகம்தான். அதிர்ஷ்டத்தையும், ஜாதகத்தையும் நம்பிக்கொண்டு இருக்காமல் தன்னுடைய ஆற்றல் மீது நம்பிக்கை வைப்பவர்களுக்கு இந்த உலகத்தைப் போன்ற சவால் வேறு இல்லை.

ஆதிலட்சுமி இரு குழந்தைகளையும் வாஷ்டப் அருகில் எடுத்துச் சென்றாள்.

அப்பொழுத்துதான் அவளுக்கு அந்த யோசனை வந்தது. அதில் எந்த சுயநலமும் இல்லை. எந்த நோக்கமும் இல்லை. ஏதோ த்ரில்! அவ்வளவுதான்.

அவள் பார்த்த சினிமாவில் திருடன் ஒருவன் தன் மகனை இடம் மாற்றி விடுகிறான். திருடனின் மகன் திருடனாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நிரூபிக்கிறான்.

இங்கே அவ்வாறு இல்லை. அப்படி எதுவுமே இல்லை. இருவரும் தன்னிடம்தான் இருக்கிறார்கள். மாற்றிப் பார்த்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம்! திரும்பவும் அது தவறு இல்லையா என்ற குற்ற உணர்வு.

அவள் நாணயத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ‘தலை விழுந்தால் மாற்றி விடுகிறேன்’ என்று எண்ணிக்கொண்டே காற்றில் வீசிவிட்டு உள்ளங்கையில் பிடித்துக் கொண்டாள்.

தலை விழுந்தது.

ஆதிலட்சுமி திரும்பிப் பார்த்தாள். இரண்டாவது நர்ஸ் குழந்தைகள் பிறந்த நேரத்தைக் குறித்துக் கொண்டிருந்தாள். அவள் ஒன்றையடுத்து இன்னொன்றாய் குழந்தைகளைக் கொண்டுவந்து இரு தாய்மார்களுக்குப் பக்கத்தில் படுக்க வைத்தாள்.

நிர்மலாவுக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை. அவள் பக்கத்தில் படுக்க வைத்த குழந்தையின் இடது துடையில் சிறிய மச்சம் ஒன்றைப் பார்த்தாள் ஆதிலட்சுமி. தான் இன்று செய்த காரியத்திற்கு அடையாளமாய் அருந்ததியின் பக்கத்தில் இருந்த குழந்தையின் (அந்தக் குழந்தை நிர்மலாவின் மகள்) இடது துடையின் மீதும் சிறிய அடையாளம் ஒன்றைக் குறியிட்டாள். இருபத்தைந்து வருடங்கள் கழித்து இந்த அடையாளத்தைக் கொண்டுதான் அவள் தாயையும் மகளையும் ஒன்று சேர்த்து வைக்கப் போகிறாள்.

அந்த விதமாய் ஒரு சினிமாவைப் பார்த்துவிட்டு வந்து, சும்மா ‘என்னதான் நடக்கும் பார்ப்போம்’ என்ற நியாயமற்ற குறும்பு எண்ணத்தால் ஒரு நர்ஸ் செய்த காரியம் இரு பச்சிளம் குழந்தைகளின் வாழ்க்கையை மாற்றி விட்டது.

ஆனால் இந்த அக்கினிப்பிரவேசம் கதை அந்த விதி மாறுபாட்டைப் பற்றியது இல்லை.

*******

நிர்மலா முதலில் கண்களைத் திறந்தாள்.

“இதோ பார்த்துக் கொள் உன் குழந்தையை” என்று ஆயா தூக்கிக் காண்பித்தாள்.

“பெண்குழந்தையா!” நிர்மலா சோர்வுடன் கண்களை மூடிக் கொண்டாள்.

“பெண் குழந்தையா என்று அவ்வளவு வேண்டாத வெறுப்புடன் சொல்லாதே. எதற்காக இந்த ஏமாற்றம்? உன்னை உன் மகள் பார்த்துக் கொள்வது போல் நாளைக்கு உன் கணவனும், மகனும் கூட பார்க்க மாட்டார்கள்” என்றாள் ஆயா அனுபவம் கற்பித்த பாடத்தினால்.

பேச்சுக்குரல் கேட்டு அருந்ததியும் கண்களைத் திறந்தாள். எதிர்பார்ப்புடன் ஆயாவைப் பார்த்தாள்.

“நீயும் உன் குழந்தையைப் பார்த்துக் கொள். ரோசாப்பூ போல் எவ்வளவு அழகாய இருக்கிறாள் தெரியுமா?”

“ரொம்ப அழகாய் இருக்கிறாள் சிஸ்டர்” நன்றியுடன் நோக்கினாள் அருந்ததி.

“உங்கள் இருவரின் குழந்தைகளும் ஒரே நேரத்தில் பிறந்தார்கள். இருவரின் ஜாதகமும் ஒன்று போல் இருக்கும். என் இத்தனை வருட சர்வீசில் இது போல் நடந்ததே இல்லை” என்றாள் டாக்டர் குழந்தைகளின் பிறந்த நேரத்தை குறித்த ரிஜிஸ்டரைப் பார்த்துக் கொண்டே.

அருந்ததி நிர்மலாவைப் பார்த்து முறுவல் பூத்தாள். நிர்மலா பதிலுக்கு முறுவலித்துவிட்டு கண்களை மூடிக் கொண்டாள்.

ஸ்ட்ரெச்சர் மீது அருந்ததி பக்கத்தில் குழந்தையை படுக்க வைத்து ஜெனரல் வார்டுக்குக் கொண்டு போனாள் ஆயா.

“தங்கப் பதுமையாட்டம் மகள் பிறந்திருக்கிறாள். அய்யாவிடம் சொல்லி இனாம் வாங்கித் தரணும்.” போகும் போது சொன்னாள் ஆயா.

“அப்படியே வாங்கித் தருகிறேன்” என்றாள் அருந்ததி. அவளுக்கு களைப்பு அதிகமாக இருந்தது. கண்கள் சொக்கிக் கொண்டு வந்தன. பக்கத்தில் குழந்தையைப் பார்க்கும் போது தூங்குவது சரி இல்லை என்று தோன்றியது.

குழந்தை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. போர்வையை எடுத்து குழந்தைக்கும் சேர்த்துப் போர்த்திவிட்டாள். ‘பழம் புடைவையைக் கொண்டு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இடுப்பு வலி எடுத்ததும் அரக்க பறக்க வந்தாகி விட்டது’ என்று நினைத்துக் கொண்டாள்.

******

நிர்மலாவுக்காக முன் கூட்டியே ரிசர்வ் செய்திருந்த குளிர்சாதனம் பொருத்தப்பட்ட அறைக்குள் அவளைக் கவனமாய் அழைத்துச் சென்றாள் ஆயா.  அவளுக்காக நியமிக்கப்பட்ட நர்சு எல்லாவறையும் ஏற்பாடாய் வைத்திருந்தாள். நிர்மலாவை படுக்கையில் படுக்க வைத்து, வீட்டிலிருந்து கொண்டு வந்த கம்பளியைப் போர்த்தி விட்டாள். குழந்தைக்கு உடை அணிவித்து தொட்டிலில் படுக்க வைத்தாள்.

குழந்தைப் பற்றி நிர்மலாவுக்குக் கவலை இல்லை. அவள் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டாள்.

கணவனை எதிர்பார்க்க வேண்டிய தேவைகூட இல்லை என்று தெரியும்.

******

வார்டில் எல்லோரையும் பார்த்தபடி வந்து கொண்டிருந்த விஸ்வத்தை தொலைவிலிருந்தே கண்டுவிட்டாள் அருந்ததி. அவள் முகம் சந்தோஷத்தால் மலர்ந்தது.

“மொத்தத்தில் நீங்கதான் ஜெயித்தீங்க.” அவன் அருகில் வந்ததும் சிரித்துக் கொண்டே சொன்னாள்.

“உனக்கு எப்போதும் நான் ஜெயிப்பதும் நீ தொற்பதும்தானே பிடிக்கும். இரவு முழுவதும் ரொம்ப கஷ்டப்பட்டாயா?” குழந்தையின் சுருட்டை முடியைத் தடவிக் கொண்டே அன்புடன் கேட்டான்.

“ரொம்பத்தான் கஷ்டப்பட்டேன். இப்போ ஒன்றும் தெரியவில்லை. எப்படி -இருக்கிறாள் உங்கள் மகள்?”

“தங்கச்சிலையாட்டாம்,  என்னைப் போலவே இருக்கிறாள்.” சிரித்தான் அவன். தொடர்ந்து “ஜாடை எல்லாம் இப்போ தெரியாது என்று நினைக்கிறேன். முதலில் கொஞ்சம் காபி குடி” என்று டம்ளரில் விட்டு அவளிடம் தந்தான். ‘என்னைப் போலவே’ என்று அவன் சொன்னதைக் கேட்டுப் பக்கத்தில் இருந்த நர்ஸ் சிரித்துக் கொண்டாள்.

விஸ்வம் பையிலிருந்து பழைய உடையை எடுத்து குழந்தைக்கு ஜாக்கிரதையாய் அணிவித்தான். பழைய புடவையை கிழித்து ஒன்றை படுக்கையின் மேல் விரித்து குழந்தையை அதில் படுக்க வைத்தான். மற்றொன்றை எடுத்துப் போர்த்தினான்.

“இப்போதிலிருந்தே மகளுக்கு சிசுரூஷை தொடங்கி விட்டீங்களே.”

“ஆமாம் பின்னே! என்ன இருந்தாலும் என் தங்கக்கட்டி இல்லையா? பாவானா.. பெயர் நன்றாக இருக்கிறதா?”

“ரொம்ப நல்லா இருக்கு.” திருப்தியாய் சிரித்தாள் அருந்ததி.

********

“அய்யா வந்தாங்களா?” தூங்கி எழுந்ததும் கேட்டாள் நிர்மலா.

“இல்லீங்கம்மா. டிரைவர் வந்தான். குழந்தைக்கு வேண்டியதெல்லாம் கொண்டு வந்து கொடுத்தான். முடிந்தால் மாலையில் வருவதாக சொல்லச் சொன்னாராம்.”

நிர்மலாவின் விழிகளிலிருந்து கண்ணீர் துளி ஒன்று உதிர்ந்து போர்வையில் கலந்து விட்டது. ‘ஒருக்கால் மகன் பிறந்து இருந்தால் வந்திருப்பாரோ என்னவோ.’ நர்ஸ் கொடுத்த மாத்திரையை விழுங்கிவிட்டு ஹார்லிக்ஸ் குடித்துவிட்டு திரும்பவும் தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டாள். குழந்தைக்கு ‘சாஹிதி’ என்று பெயர் வைத்தது போல் கனவு வந்தது அவளுக்கு.

************

அருந்ததி குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரி படிகளில் இறங்கிக் கொண்டிருந்தாள். இன்னொரு பக்கத்திலிருந்து நிர்மலா வந்து சேர்ந்தாள். குழந்தையை நர்ஸ் தூக்கிக் கொண்டு வந்தாள்.

இருவரின் பார்வையும் கலந்தன. ஒருவருக்கொருவர் எந்த உறவு இல்லை என்றாலும் ஏதோ தெரியாத நெருக்கம்! அவ்விருவரையும் ஆதிலட்சுமி பார்த்துக் கொண்டிருந்தாள். சொல்லி விடுவோமா என்று நினைத்தாள். ஊஹும்! இப்போது கூடாது. இருபத்தைந்து வருடங்கள் கழித்து சொல்ல வேண்டும். இருவரின் முகவரியும் தன்னிடம் இருக்கிறது. அன்று சொன்னால்  எவ்வளவு அதிசயமாக இருக்கும் அந்தக் காட்சி! கண்ணீர்த் துளிகள்… சந்திப்பு.. “இருவரையும் என் குழந்தைகள் போல் பார்த்துக் கொள்கிறேன்’ பணக்காரி சொல்வது.. தொலைவில் நின்றுகொண்டு ஆனந்தக் கண்ணீர் மல்க செய்த தவறுக்கு பச்சாத்தாபம் அடைந்தபடி தான்.. இவ்விதமாய் யோசித்துக் கொண்டிருந்தாள் ஆதிலட்சுமி.

“எந்தப் பக்கம் போகணும் நீங்க?” நிர்மலா கேட்டாள்.

“திருவல்லிக்கேணி. நீங்க?”

“அடையார்.”

இந்த உரையாடலினால் ஏற்பட்ட தாமதத்திற்கு படிகள் கீழே பியட் காரில் காத்திருந்த சந்திரன் பொறுமையற்றவனாய் பார்த்தான். அதைக் கவனித்த நிர்மலா “போய் வருகிறேன்” என்று படிகளின் இறங்கி சென்றுவிட்டாள்.

பின்னாலேயே விஸ்வம் கொண்டு வந்த ரிக்ஷாவில் ஏறிக்கொண்டாள் அருந்ததி.

இரண்டு வாகனங்களும் எதிர் எதிர் திசையில் நகர்ந்தன, இரு குழந்தைகளின் எதிர்காலத்தைப் போலவே.

******

“குழந்தை பிறந்த நேரத்தை குறித்தார்களா? நக்ஷத்திரம் என்ன?” மனைவிடம் கேட்டான் விஸ்வம்.

“அந்த நர்ஸ் யாரோ ரொம்ப நல்லவளாய் இருக்கிறாள். வினாடியுடன் சேர்த்து நேரத்தை குறித்துக் கொடுத்தாள்” என்று பேப்பரை எடுத்துக் கொடுத்தாள்.

அதே நேரத்தில் காரில் போய்க் கொண்டிருந்த நிர்மலாவும் குழந்தை பிறந்த நேரத்தைப் பார்த்தாள். இரண்டு பேப்பரிலும் இருந்த நேரம் ஒன்றுதான், ஜோதிட சாஸ்திரத்தைப் பரிகாசம் செய்வது போல்.

00 Hours 13th Friday.

Series Navigationஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் எழுதியிருக்கிறது காலம்.அம்மா
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

2 Comments

 1. Avatar
  தங்கமணி says:

  மிகவும் பிடித்த எழுத்தாளர் எண்டமூரி வீரேந்திரநாத். தமிழில் துளசிதளம் வந்த காலத்திலிருந்தே இவரது விசிறி

  இந்த தொடரை தரும் திண்ணைக்கும் கௌரி அவர்களுக்கும் நன்றிகள்.

 2. Avatar
  harini says:

  Nice start, enaku piditha elutharin kathaiyin muthalil irunthu padipatharku santhosama ullathu.

  Intha iniayathai patri kooriya gorwi kirubanandan ammavirku nanrigal.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *