ரசிப்பு
வாசு ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறான். இருபத்தியேழு வயது இளைஞன். அந்த வயதுக்கே உரிய துடுக்கும், பழக்க வழக்கங்களும் உண்டு. கைநிறைய சம்பளம் வேறு. கேட்க வேண்டுமா? நண்பர்கள் வட்டமும் அப்படித்தான். ஆளுக்கொரு பைக், கேர்ள் பிரண்ட், சனிக்கிழமை மாலை வேளைகளில் மது. வாழ்க்கைப் பயணம் சந்தோஷமாக கழிந்தது. அந்த சனிக்கிழமை மட்டும் வராமல் இருந்திருந்தால்… எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.
சனிக்கிழமை விடுமுறை நாள்தான். ஆனால் பெரும்பாலும் வாசு ஆபீஸுக்கு வந்து விடுவான். காரணம் மற்ற நண்பர்களும் அன்று ஆபீஸுக்கு வந்து விடுவார்கள். ஆபீஸ் வேலை என்று காரணம் சொன்னாலும் அது அரை மணி அல்லது ஒரு மணி நேர வேலை மட்டும்தான். மற்றபடி அன்று தங்களுக்கு பிடித்த ஜோடிகளுடன் அரட்டை அடிக்கலாம். வெளியில் எங்காவது சுற்றலாம். சினிமாவுக்குப் போகலாம். சாயந்தரமானால் மது போதையில் மூழ்கலாம். இது வழக்கமான விஷயம்.
ஆனால் அந்த சனிக்கிழமை அவனுக்கு நிம்மதியில்லாமலே கழிந்தது. முதல் நாள் வெள்ளிக்கிழமை மதியத்திலிருந்து வனிதா அவனிடம் பாராமுகமாகவே இருக்கிறாள். இன்று வந்தவுடன் அவள் பேசுவாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் நாள் முழுவதும் வனிதா அவனிடம் பேசவில்லை. காரணமும் அவனுக்கு தெரியவில்லை. தானே சென்று பேசலாம் என்றால் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தான். போன வாரம்தான் தன் காதலை அவளிடம் சொல்லியிருந்தான்.
‘நேற்று காலையில்கூட நன்றாகத்தானே பேசினாள். மதிய உணவின் போது கூட அந்த ராகவன் அவ்வளவு நல்லவனில்லை, அவன்கூட அதிகமாக பேச்சு வச்சுக்காதே என்று சொன்னேனே! ஆனால் இன்று என் கண் முன்னாடியே அவனுடன் சிரித்து சிரித்து பேசுகிறாள். நேற்று நான் அவ்வளவு சொல்லியும் என்னை வெறுப்பேற்றுவதற்காகவே இப்படி பண்ணுகிறாள். என்ன செய்வது’. அவன் மனம் பூராவும் பற்றி எரிந்தது.
அங்கே இருக்கப் பிடிக்கவில்லை. உடனே அங்கிருந்து கிளம்ப வேண்டும். போய் எங்காவது தன்னை மறந்து குடிக்க வேண்டும். அப்போதுதான் கொஞ்சம் நிதானம் வரும். பிரவீனைக் கூப்பிட்டான். இரண்டு பேரும் கிளம்பி வழக்கமாகப் போகும் பாருக்கு போனார்கள்.
“என்னடா, என்னவோ போல் இருக்கே” பிரவீன் கேட்டான்.
“இன்னிக்குப் பூரா வனிதா என் கூட பேசவே இல்லடா. அந்த ராகவன் கூட பேசாதேன்னு சொல்லியும் என்னை வெறுப்பேத்தற மாதிரியே அவன்கூட சிரிச்சு சிரிச்சு பேசுறாடா” என்று பொரிந்தான் வாசு.
“டேய்! நீயாக எதுவும் அர்த்தம் பண்ணிக்காதே. அவன் அவளுக்கு டீம் லீடர். அந்த வகையில் அவனோடு பேசியிருப்பாள்” என்று வாசுவை சமாதானப்படுத்த முயன்றான்.
“இல்லடா, என்னால சகிச்சுக்க முடியல” என்று சொன்ன வாசு இன்னொரு லார்ஜுக்கு ஆர்டர் பண்ணினான்.
“டேய், வாசு! போதும், நீ ஏற்கெனவே ஓவர். இதுக்கு மேலே போனேன்னா தாங்காதுடா” என்று எச்சரிக்கை செய்தும் வாசு கேட்கவில்லை.
தன்னுடைய மனத்தாங்கலை எல்லாம் நண்பனிடம் கொட்டித்தீர்த்தான் வாசு.
“சரி மணி 11.00 ஆகிவிட்டது. வா, உன்னை வீட்டில் போய் விட்டுட்டு போறேன்” என்று பிரவீன் எழுந்தான்.
“ஏய், நானே போயிருவேன்டா, நான் ரொம்ப ஸ்டெடியா இருக்கேன்டா, நீ போய்க்கோ! நானே பைக்கை ஓட்டிட்டு வீட்டுக்குப் போயிடுவேன்” என்றபடியே கிளம்பினான் வாசு.
சொல்லிவிட்டானே ஒழிய வண்டியில் உட்கார்ந்த பிறகுதான் தெரிந்தது. தலை சுற்றுகிறது, வண்டி ஸ்டெடியாக போகவில்லை என்பது. ஆனால் பக்கத்தில்தான் வீடு. இன்னும் கொஞ்ச தூரம்தான். அதோ அந்த திருப்பத்தை கடந்து விட்டால் வீடு வந்து விடும். என்ன இது! மெதுவாக ஓட்டினாலும் வண்டி நேராகப் போகவில்லையே!. சரி கொஞ்சம் வேகமாக அந்த திருப்பத்தை தாண்டி விடலாம் என்று வேகமானான்.
இதோ வந்து விட்டது. ஆனால் அது என்ன? குறுக்கே ஏதோ தெரிகிறதே! சுதாரிப்பதற்குள் வந்த வேகத்தில் அந்த இரும்புத் தடுப்பில் மோதினான். வாசு தூக்கி எறியப்பட்டு பக்கத்தில் இருந்த இரும்பு பைப்பின் மீது மோதினான். தலைக்கவசம் இல்லை, தலையிலிருந்து ஏதோ பிரிவது போல் இருந்தது. பிறகு எதுவுமே நினைவில்லை.
ஆஸ்பத்திரியின் உள்ளே இருந்த அந்த மரபெஞ்சில் மாணிக்கம் உட்கார்ந்திருந்தார். மாணிக்கம் ஒரு போலீஸ் அதிகாரி. இது போல ஆக்ஸிடென்ட் ஆன கேஸ்களெல்லாம் அவரிடம்தான் வரும். அவர் பக்கத்தில் இருந்தவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார், “தண்ணி சார்! ஃபுல் மப்பு, மண்டையில் சரியான அடி, ஆள் பிழைக்க மாட்டான்” என்றார்.
பதிலுக்கு “இந்த பசங்கள எல்லாம் என்னன்னு சொல்றது சார். வீட்டுக்கும் அடங்கறதில்ல. கைல நல்லா காசு புழங்குது. குடிச்சு அடிபட்டு இப்படி வந்து சாகக் கிடக்கிறான்கள்” என்றார் பக்கத்தில் இருந்தவர்.
வாசுவை எமர்ஜென்சியில் அட்மிட் செய்து விட்டு வெளியே காத்திருக்கிறார் அந்த போலீஸ் அதிகாரி. வாரத்துக்கு இரண்டு மூன்று கேஸ் இது போல் வந்து விடும். மருத்துவர் வந்து செத்தானா, பிழைத்தானா என்று சொல்லும்வரை அங்கேதான் தேவுடு காக்க வேணும். சே! என்ன பொழப்பு இது. பொணத்தை வாங்கி உறவினர்களிடம் ஒப்படைத்து, எல்லா ஃபார்மாலிட்டீஸும் முடிந்த பிறகுதான் போக முடியும்.
கொஞ்ச நேரத்தில் கதறி அழுது கொண்டே ஒரு நடுத்தர வயது பெண்மணியும் அவளது கணவரும் வந்து சேர்ந்தார்கள். அவர்களைப் பார்த்தாலே வாசுவின் அம்மா, அப்பா என்று தெரிந்தது. அந்த அம்மா அழுது புலம்பினாள்.
“என் பையனுக்கு இப்படி ஆகிவிட்டதே! கடவுளே, என் புள்ளையைக் காப்பாத்து!” என்று கதறி அழுதாள். பையனை கண்டிச்சு வளர்க்காமல் இப்போ வந்து குய்யோ முறையோ என்று கத்துவதைப் பார் என்பது போல பரிதாபமாக அந்த அம்மாளைப் பார்த்தார் மாணிக்கம்.
நியூரோ சர்ஜன் தாமோதரன், வாசுவின் மெடிக்கல் ரிப்போர்ட்களை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். இருபத்து நான்கு வருட அனுபவம். சிக்கலான கேஸ்கள் என்றால் உடனே தாமோதரன் அழைக்கப் படுவது வழக்கம். பிறகு வாசுவை எக்ஸாமின் செய்த டாக்டர்கள் சொல்வதைக் கேட்டார். எல்லோரும் ஒரே வார்த்தையைத்தான் சொன்னார்கள். அவன் பிழைப்பான் என்ற நம்பிக்கையில்லை.
தலையில் அடிபட்டிருப்பதால் மூளைப்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கிறது. அவனுக்கு நினைவு இல்லை. பிழைப்பது கடினம். அப்படியே பிழைத்தாலும் கோமா ஸ்டேஜில்தான் வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டி வரும் என்பதுதான் எல்லா டாக்டர்களுடைய அபிப்பிராயமும். ஆனால் தாமோதரனின் அனுபவம் மிக்க கண்களுக்கு ஏதோ ஒன்று நெருடலாகப் பட்டது.
இந்த அளவுக்கு அடிபட்டு மூளை சேதமாகி இருந்தால், அவன் இதுவரை உயிரோடு இருக்க வாய்ப்பில்லை. வேறு ஏதோ விஷயமிருக்கிறது. அது என்னவேன்று தலைப்பகுதியை முழுவதுமாக ஆராய்ந்தால் தெரியலாம். உடனே வாசுவின் தலைப்பகுதியை ஸ்கேன் செய்வதற்கு ஏற்பாடு செய்ய சொன்னார். இன்னும் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் ரிப்போர்ட் ரெடியாகி விடும். அந்த அறையிலிருந்து வெளியே வந்தார்.
அவரைப் பார்த்ததும் வெளியே காத்திருந்த மாணிக்கம், “சார், என்ன விஷயம் சார், ஆள் பிழைப்பானா?” சீக்கிரம் முடிவு தெரிந்து விட்டால் இங்கிருந்து கிளம்பலாம். டாக்டர் அவரைப் பார்த்து, “எதுவும் இப்போது உறுதியாகச் சொல்ல முடியாது. ஸ்கேன் ரிப்போர்ட் வந்த பிறகுதான் தெரியும்” என்றபடி நகர்ந்தார்.
அந்த போலீஸ் அதிகாரி பக்கத்தில் இருந்தவரிடம் சொன்னார். “நான் சொல்லலை. இது தேறாத கேஸ். ஸ்கேன் அது இதுன்னு ஃபார்மாலிட்டிக்காக ஏதாவது பண்ணி, பிறகு அவன் செத்துட்டான்னு சொல்லிருவாங்க பாருங்க” என்று அவர் சொல்வதை கொஞ்ச தூரத்தில் வாசுவின் அப்பா அதிர்ச்சியுடன் பார்த்தவாறு இருந்தார். மனைவியை கட்டுப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தார். ஆனால் அவராலேயே தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அவருடைய மனைவி தன்னை மறந்து, “என் புள்ளைக்கு ஒண்ணும் ஆகாது. அவன் நிச்சயம் பிழைச்சுப்பான். எனக்கு நம்பிக்கை இருக்கு. நான் கும்பிடுற காமாட்சி என்னைக் கைவிட மாட்டா” என்று புலம்புவதை விசும்பலுக்கிடையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
நேரம் கடந்து கொண்டிருந்தது. தாமோதரன் ஸ்கேன் ரிப்போட்டை அலசிக்கொண்டிருந்தார். அவர் சந்தேகப்பட்டது சரிதான். தலையில் மூளைக்கு அருகில் இரத்தக்கசிவு ஏற்பட்டு உறைந்திருக்கிறது. அதை சரி செய்து விட்டால் வாசு பிழைக்க அதிகமான வாய்ப்பு இருக்கிறது. டாக்டர் தாமோதரனுக்கு நம்பிக்கை வந்துவிட்டது. தன்னுடைய இத்தனை வருட அனுபவம் இப்போது ஒரு உயிரைக் காப்பாற்றப் போகிறது. உடனே ஆபரேஷனுக்கான ஏற்பாடுகளை செய்யச் சொன்னார்.
ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணி. பிரவீன் தூங்கி எழுந்ததும் தலை லேசாக வலிப்பதை உணர்ந்தான். எல்லாம் நேற்று குடித்த மதுவின் வேலை. இன்னும் கொஞ்ச நேரம் அப்படித்தான் இருக்கும். திடீரென வாசுவின் நினைவு வந்தது. நேற்று கொஞ்சம் ஓவராக குடித்துவிட்டு, தானே பைக்கை ஓட்டிக்கொண்டு போனானே, எப்படி இருக்கிறான் என்று போன் செய்து கேட்கலாம் என்று அவனுடைய நம்பரை தட்டினான். சுவிட்ச் ஆஃப் செய்யப் பட்டிருந்தது. அவனுக்குள் ஒரு சந்தேகம் வந்தது.
ஏதோ ஒரு பதற்றம் அவனைத் தொற்றிக் கொண்டது. போனை ஆஃப் செய்திருக்கிறானே, ஏன்? சார்ஜ் இல்லையோ. போனை சார்ஜ் கூட போடாமல் என்ன செய்கிறான்? ஒருவேளை இன்னும் தூங்குகிறானோ. மறுபடி போனை எடுத்தான். அவனுடைய வீட்டு லேண்ட்லைன் நம்பரை சுழற்றினான். பதிலில்லை. என்ன ஆயிற்று. எல்லோரும் எங்காவது வெளியே கிளம்பி போய் விட்டார்களா? ஒன்றும் புரியவில்லை.
எழுந்து குளித்து விட்டு காலை உணவை முடித்தான். வாசு ஏன் போனை சுவிட்ச் ஆஃப் செய்திருக்கிறான் என்ற கேள்வி மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. நேரே அவனுடைய வீட்டுக்கே போய் பார்த்து விடலாமா? அதுதான் சரி. பைக்கை எடுத்துக் கொண்டு வாசு வீட்டுக்குப் போனான். வீடு பூட்டியிருந்தது. பக்கத்து வீட்டில் விசாரித்தான்.
“உனக்குத் தெரியாதா தம்பி, நேற்று அந்தப் பையன் குடிச்சுட்டு வண்டி ஓட்டிட்டு வந்து, ரோட்டில் இருந்த இரும்புத் தடுப்பில் மோதி தலையில் பலத்த காயம். ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள். பிழைப்பது கஷ்டம் என்று சொல்கிறார்கள்” என்றார் அந்த வீட்டில் இருந்த பெரியவர் ஒருவர்.
“அய்யய்யோ” என்றான். மனம் பதைபதைத்தது. இதற்கு ஒரு வகையில் நானும் அல்லவா காரணம். உடனே போய் பார்க்க வேண்டும். “சார், எந்த ஆஸ்பத்திரி என்று தெரியுமா?” என்றான் படபடப்போடு. “இங்கேதான் விஜயா ஆஸ்பத்திரி என்று சொன்னார்கள்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார் பெரியவர்.
பிரவீன் பைக்கை ஸ்டார்ட் பண்ணினான். ‘கடவுளே! எதுவும் ஆகாமல் இருக்கணுமே. எல்லாம் இந்த வனிதாவால் வந்தது. இந்தப் பெண்களே இப்படித்தான். வாசுவை சாவுவரை கொண்டுபோய் விட்டாளே’ வண்டியில் போகும்போதே பல நினைவுகள். இதோ ஆஸ்பத்திரிக்கு வந்தாயிற்று. வண்டியை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தான்.
யாரிடம் போய் கேட்பது. ரிசப்ஷனில் மஞ்சள் சுடிதாரில் ஒரு பெண் இருந்தாள். “மேடம், ஆக்ஸிடென்டில் தலையில் அடிபட்டு வாசுன்னு….” என்று முடிப்பதற்குள் “முதல் மாடியில் ICU வில் இருப்பதால் இப்போது பார்க்க முடியாது. அவருடைய சொந்தக்காரர்கள் ரூமுக்கு வெளியே வராண்டாவில் காத்திருக்கிறார்கள். போய் பாருங்கள்” என்றாள்.
மேலே சென்றான். வாசுவின் அம்மாவும், அப்பாவும் அழுது வீங்கிய கண்களுடன் சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தார்கள். அருகே சென்றான். “பிரவீன், வாசு இப்படி பண்ணிட்டானேப்பா” என்றபடி இவனைப் பார்த்து கதறினாள் வாசுவின் அம்மா.
“கவலைப் படாதீங்கம்மா, எல்லாம் சரியாகி விடும்” என்று ஆறுதல் சொன்னான். ஆனால் உள்ளுக்குள் அவனுடைய மனசாட்சி உறுத்தியது. நீயும் ஒரு காரணமல்லவா? எப்படியாவது அவன் பிழைத்துக் கொள்ள வேண்டும். ‘கடவுளே! உன்னை நம்புகிறேன். நீதான் வாசுவைக் காப்பாற்ற வேண்டும்’ மனதில் பிரார்த்தனை பண்ணினான்.
பிரவீன் வாசுவின் அம்மாவிடம் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த மாணிக்கம் அவனருகில் வந்தார். அவனிடம், “தம்பி, நீங்க யாரு?” என்று கேட்டார்.
“நான் வாசுவோட பிரண்டு. இரண்டு பேரும் ஒரே ஆபீஸில்தான் வேலை செய்கிறோம்”.
“சரி, என் கூட வாங்க. சில டீட்டெயில்ஸ் எனக்கு வேண்டும்” என்று சொல்லிவிட்டு தன்னுடன் அழைத்துச் சென்றார்.
“பாடியை ஒப்படைக்கும் போது சில தகவல்களை ஃபார்மில் நிரப்ப வேண்டும். அவனோட அப்பா அம்மாவை இப்போது ஏதும் கேட்க முடியாது” என்றார். அவருக்கு அவருடைய கவலை.
“சார், அப்படியெல்லாம் சொல்லாதீங்க. வாசு, எப்படியும் பிழைச்சுக்குவான்” என்றான் பிரவீன்.
“எனக்கு மட்டும் அவன் பிழைக்க கூடாதுன்னு ஆசையா தம்பி, இது வழக்கமா நடப்பதுதானே! நான்தான் அடிக்கடி இது போல நிறைய கேஸை பார்க்கிறேனே” என்றார் மிகுந்த நம்பிக்கையுடன்.
தாமோதரன் ஆபரேஷன் ரூமிற்குள் சக டாக்டர்களுடன் ஆபரேஷனில் தீவிரமாக இருந்தார். அவருக்கு நம்பிக்கை வந்து விட்டது. வாசு பிழைத்து விடுவான். இன்னும் கொஞ்ச நேரம்தான். அவனைப்பார்த்து எல்லோரும் எப்படி சந்தோஷப்படுவார்கள். ஒரு உயிரைக் காப்பாற்றும் பொறுப்பை கடவுள் நம்மிடம் தந்திருக்கிறார். எவ்வளவு உன்னதமான தொழிலில் நாம் இருக்கிறோம். இன்று நிம்மதியாக தூங்கலாம். தாமோதரனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது. வாசு பிழைத்து விட்டான். அந்த மகிழ்ச்சி அவருடைய முகத்தில் தெரிந்த்து. தாமோதரன் அந்த ரூமை விட்டு வெளியே வந்தார்.
அவரைப்பார்த்தவுடன் மாணிக்கம் வேகமாக அவரை நெருங்கி வந்தார்.
“டாக்டர் சார்”
சட்டென திரும்பினார் தாமோதரன். மாணிக்கத்தை என்ன என்பது போல் பார்த்தார்.
“பாடியை இங்கேயே வாங்கிக்கலாமா, அல்லது ஜி.ஹெச்சுக்குப் போகணுமா?” என்று பவ்யமாக கேட்டார் மாணிக்கம்.
palanis72@ymail.com
- ஒவ்வொரு கல்லாய்….
- பசிலிகுருவியின் குஞ்சு ரத்தம் வழியகிடக்கிறது
- மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -43
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! கெப்ளர் விண்ணோக்கியின் அற்புதக் கண்டுபிடிப்பு : இரட்டைப் பரிதிகள் சுற்றும் இரு கோள்கள்
- All India Tata Fellowships in Folklore 2012-2013
- விவசாயி
- ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் எழுதியிருக்கிறது காலம்.
- அக்னிப்பிரவேசம் -1
- அம்மா
- மணிபர்ஸ்
- மெல்ல இருட்டும்
- நம்பிக்கைகள் பலவிதம்!
- பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் மணிவிழா
- (100) – நினைவுகளின் சுவட்டில்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -2
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -28
- “ஆத்மாவின் கோலங்கள் ”
- தமிழ்ப்பேராய விருதுகள் பெற்றோர் பட்டியல்
- கால் செண்டரில் ஓரிரவு
- சிற்றிதழ் பார்வை – கல்வெட்டு பேசுகிறது
- பிரான்ஸ் வொரெயால் தமிழ்க்கலாச்சார மன்றம் புகைப்பட கண்காட்சி
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 37) பன்மடங்கு பூரிப்பு எனக்கு
- துண்டிப்பு
- எகிப்து : சிதைந்த கனவுகள் – திரைப்படம்
- பருத்தி நகரம் : திருப்பூர் படைப்பாளிகளின் தொகுப்பு
- இலக்கிய நிகழ்வு: கோவை இலக்கியச் சந்திப்பு / நிகழ்வு 22
- தாகூரின் கீதப் பாமாலை – 31 நீ அருகில் உள்ள போது… !
- தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் நூற்றாண்டு விழாவையொட்டி நடாத்திய சிறுகதைப் போட்டி முடிவுகள் – 2012
- மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே
- இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு..
- வழி தவறிய கவிதையொன்று