ஹெச்.ஜி. ரசூல்
லட்சுமணனின் பழங்குடிகவிதை எழுத்தை திறந்து பார்த்தால் சகுனாகுருவியின் கத்தல் ஒலி கேட்கிறது. இது கெட்ட சகுனத்தை முன்னறிவிக்கும் குரலாக புலப்படுகிறது. செம்போத்தும் குறுக்கே பறந்துகெட்ட சகுனத்தை அறிவிக்கிறது. பிறிதொரு இடத்தில் கேட்கும் பெருமாட்டி குருவியின் குரல் அசைவு நல்ல காரியம் நடக்கப் போகிறது என்பதற்கான ஒலிக்குறிப்பாகிறது. தனது வாலால் மண்ணை தட்டிக் கொண்டே போகும் குணமுடையது சுள்ளாம்பூக்கை குருவி. உலகம் அழியும் போது மனிதர்கள் யாராவது உயிருடன் இருக்கிறார்களா என்பதை அறிந்து வரும்படி கடவுளால் கட்டளையிட்டு அனுப்பப்படும் குருவியாக சுள்ளாம் பூக்கை குறித்த பழங்குடி மக்களின் புனைவு விரிகிறது.
பசிலிக்கா என்பது பச்சைக்குருவி. அந்நியன் கல்பட்டு மார்பில் காயம் பட்டு ரத்தம் வழியக்கிடக்கிறது பசிலி குருவியின் குஞ்சு. இருள் சூழும் நேரத்தில் வாசலில் வந்து கிளி சத்தமிட்டால் ஊரிலுள்ளோர் அனைவருக்கும் சமமாய் ஏதேனும் கிடைக்கும் என்பது பிறிதொரு நம்பிக்கை.
பழங்குடிகளின் வாழ்வு அழிக்கப்படும் துயரம் கெட்ட சகுனமாக இக்கவிதைப் பரப்பெங்கும் படர்ந்து கிடக்கிறது. அழிவிற்கும் வாழ்தலுக்குமான போராட்டமாக பழங்குடிகளின் நம்பிக்கைகளும் தொன்ம உலகமும் விரிகிறது. பெருமாட்டி குருவியின் குரலின் அறிகுறி இதற்கான தடயங்களை உருவாக்கிச் செல்கிறது. அழிவிற்கு பிறகான இருப்பை காண்பதற்கு விருப்பமுறும் ஆதிமனம் ஒரு சுள்ளாம் பூக்கையை பறக்க விட்டிருக்கிறது. இந்த பறவைகளுடான பழங்குடிகளின் உலகம் இயற்கையின் பிரிக்க முடியாத வாழ்வாகி இருப்பதன் அத்தாட்சியாக இருக்கிறது.
ஒடியன் எனத் தலைப்பிடப்பட்டுள்ள லட்சுமணனின் இத்தொகுப்பின் சொல்லாடல் ஒரு எதிர்மறைக் கருத்தியலைக் கொண்டுள்ளதாகவும் கருதலாம். பழங்குடிகளின் மந்திரங்கள் குறித்த நம்பிக்கை இயற்கையை வென்றெடுக்க, தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர, பல்வேறு வடிவங்களில் பாவனை மந்திரமாக, தொத்து மந்திரமாக பண்பாட்டு வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. ஆனால் இத்தொகுப்பின் “ஒடியன்’ தாயின் கர்ப்பத்திலிருந்து சிசுவை எடுத்து தைலம் செய்யும் மந்திரவாதியாக உருவகிக்கப்படுகிறான். இங்கு மந்திரச் சடங்கு ஒரு பயங்கரவாத தோற்றம் கொள்கிறது. இயற்கையையும், வனத்தையும் அழிக்கும் சமவெளிகாரர்களான ஆதிக்க சாதியினரையும் வனத்துறை அதிகாரத்தையும் ஒடியன்களாக குறிப்பீடு செய்யும் நோக்கில் இருந்தாலும் கூட, இந்த வகையான மந்திரவாதத்தின் பூர்வீகப் பண்பு இன்னும் துலக்கமுற வேண்டியதாய் இருக்கிறது.
இந்த வகையில் பழங்குடிகளின் பிறவகையான மந்திர சடங்குகளையும் ஒடியனின் வழியாக கண்டடையலாம். பூர்வீக நிலம் அபகரிக்கப்பட்ட ஆதிவாசியின் குரல் பழிதீர்க்கும் படலத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது. நல்லது நடக்குமா கெட்டது நடக்குமா என செம்புத்தண்ணி பார்க்கும் நம்பிக்கையும் இதனுள் இயைந்து வெளிப்படுகிறது. ஆதிவாசிகளின் ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு குரு உண்டு. அவர்தான் எல்லா நல்லது கெட்டதற்கும் பொறுப்பு செம்பில் தண்ணீரை நிரப்பி அதில் குறி பார்த்து நல்லது கெட்டதை அறிந்து கொள்வார்கள்
பழங்குடிகளின் நம்பிக்கைகளில் பிறிதொன்று தண்ணீர் மந்திரம். ஆதிவாசிகளின் ஒரு குலப்பிரிவினரான சம்பகாவினரிடத்தில் இடம்பெறும் சொல்லாடல் புழுகுண்டு பாடோம் என்பதாகும். மாட்டின் குளம்பில் புழுப்பிடித்தால் அதை உதிரவைக்க ஆதிவாசிகளால் தெளிக்கப்படும் மந்திரித்த நீர் வல்லமை மிக்கது என்பதான நம்பிக்கையாகவும் இது அமைகிறது.
வெட்டுண்ட தலையை ஒட்டவைக்கும் வெட்டுதழே
வனத்தின் தாவரங்களும், பறவைகளும், விலங்குகளும் இயல்பு மாறாத பொலிவுடன் இக்கவிதைக்குள் பங்கெடுத்து கொள்வது இத்தொகுப்பின் முக்கியத்துவத்தை உணர்த்திச் செல்கிறது. அதுவும் இக்கவிதைகள் இருளர்களின் பழங்குடி மொழியிலேயே வெளிப்பட்டிருப்பது கவனத்திற்குரியது. வரிவடிவம் தமிழிலிலும் ஒலிவடிவம் இருளர்மொழியிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆதிப்பழங்குடிகளின் வாழ்வில் தாவரங்கள், மூலிகைகள் மிக நெருக்கமான உறவை ஏற்படுத்தியிருக்கின்றன. உணவாகவும், மருந்தாகவும் தாவரங்கள் உருமாறியிருக்கின்றன. பசியைத் தணிக்க மாகாளி கிழங்கு உதவுகிறது. பல்வலிக்கு மருந்தாக புங்கே இலையும் மருந்தாக வேம்பும், கஞ்சாவும், வயித்தை சுத்தப்படுத்தும் மூலிகையாக ரேயகங்கும் இடம் பெறுகிறது. இந்த வனத்தின் சொத்தெல்லாம் அந்நியர்களால் காப்புரிமை பெறப்பட்டு அபகரிக்கப்படுகிற வேதனையையும் இக்கவிதைகள் இணைத்துப் பேசுகின்றன.
பல்லுக்கூ புங்கே / பசிக்கூ மாகாளி
தலேக்கு ஊஞ்சே/ காஞ்சா வேப்பே
துப்பினெ காரி / இன்னூங்காயாலே
இப்போ வருகே / எம்த்து மூளையே
நிம்த்துன்னு பதிகாக்கு
வயித்து அழுக்குக்குதே ரேயகங்கு
இருளர்களின் இயல்பான வாழ்வில் தம்மியான மனைவியின் இடம் முதன்மை பெறுகிறது. எங்கே போனாலும் கணவன் காளி தம்மிக்கு பின்னால்தான் செல்கிறான். காளி ஏதேனும் தப்பு செய்துவிட்டால் தம்மி அவனை தட்டிக்கேட்டு அடிக்கிறாள். மலையினத்தின் இத்தகைய வாழ்வை விழிபிதுங்க ஏளனத்தோடு பார்க்கிறார்கள். கீழிருந்து வந்து குடியேறிய அயல்வாசிகள். இந்த அந்நியர்களின் உள்ளத்தில் விசம் நிறைந்திருக்கிறது. சுண்டமுள் ஒருவகையில் மருத்துவ குணம் பொருந்தியதாக இருக்கிறது. பொதுவாக விசக்கடி ஏற்பட்டால் அதை இறக்க சுண்டமுள்ளால் மூன்று முறை அடிப்பது இருளர் மரபின் வழக்கம். நாள் பூராவும் அடிச்சாலும் விசம் இறங்காது என்பதாக இந்த அயல் வாசிகள் மீதான பழங்குடிகளின் விமர்சனம் மேலெழும்புகிறது.
இன்னாக்கு அச்சாமே பாக்கா
ஆனேகட்டிக்கு வந்த வாசி
சுண்ட முள்ளூல / நாளெல்லா அடீச்சாலூ
திருகாதில்லே இவுங்க வெசாம்
வெட்டுண்டிருப்பதை ஒட்டவைக்கும் மூலிகை வெட்டுதழே. இந்த வெட்டுதழையால எங்க உடம்பில எவனோடே தலையையோ ஒட்ட வைப்பதுபோல ஆதிவாசி குலங்களை கூறுகூறா பிரிச்சு சிறுபான்மையாக்கி சமவெளி சாதியினரின் தலையில் ஒட்டவைக்கும் அரசியலுக்கு எதிரான குரலையும் இக்கவிதைகள் பேசுகின்றன.
பழங்குடிகள் வேட்டை சமூகத்தின் கூறுகளையும் உள்ளடக்கி வாழ்பவர்கள். இதில் மீன்வேட்டையும் முக்கியம் பெறுகிறது. எதை கொல்வது, எதை விடுவது என்பது குறித்த தேர்விலும் மீன்களை பிடிக்கும் முறையிலும் செயல்படும் அறம் குறித்து ஒரு கவிதை கேள்வி எழுப்புகின்றது. சமவெளிப்பகுதியிலிருந்து மலைப்பிரதேசத்திற்கு வந்து இங்குள்ள நீர்நிலைகளில் மீன்பிடிக்கும் முறை மனிதாபிமானமற்ற வேட்டைச் செயல்பாடாகும். இது நீர்நிலைகளில் தோட்டாக்களை வெடிக்க வைத்து எல்லா வகை மீன்களையும் கொன்று பிடிக்கும் முறையாக இருக்கிறது. பழங்குடி மக்களின் மீன்பிடி முறையோ வேறானதாகும். இதற்கு இருளர்கள் பயன்படுத்தும் சொக்குமரப்பட்டை இயற்கையான மீன் வளத்தை முற்றிலும் அழிக்காமல் காக்கும். இம்மரத்தின் இலையை, பட்டையை கசக்கி நீரில் போட்டால் மீன்கள் மயங்கி மிதக்கும். ஆதிப்பழங்குடிகள் பெரிய மீன்களைப் பிடித்துவிட்டு குஞ்சுகளை நீரில் விட்டுவிடுவார்கள். கொஞ்ச நேரத்தில் அவை மயக்கம் தெளிந்து நீந்த ஆரம்பித்துவிடும். இதுபோன்றே விலங்கின வேட்டையின்போது குட்டிகளையும், சூல் கொண்ட மிருகங்களையும் கொல்லுகின்ற பழக்கம் பழங்குடி மரபில் இல்லாத ஒன்றாகும். குட்டிகளை கொல்வதுமில்லை, செனமான் சுத்துனால் வலையை விரிப்பதில்லை என்பதாகவும் இக்கவிதை பேசுகிறது.
வேங்கே மடுவிலே வெடிபோடும் வலையா
நா வெüஞ்சே கெண்டே நல்லா திந்து ஆடி மூஞ்சாச்சு
ஒங்குஞ்சும் சாகேடா
குட்டியே கொல்லுகாதில்லே
செனமான் சுத்துதுன்னா வெலயே விரிக்காதில்லே
முச்சூடும் சொரண்டும் பழக்கோ முடுகனுக்குமில்லே
ரெக்கே திங்கா பக்கி
புங்கரே கேட்டு போட்டுக்கோயி
சொக்குமரப்பட்டே
கெரையே கொன்னு நாட்டுக்குள்ளே போடுகாக்காகாது
சாபம் போட்டுகொனே ஓடு.
மலை பொரித்த குஞ்சான யானை
பழங்குடிகளின் வாழ்வு வனத்தின் காணுயிரிகளோடு நெருக்கமான வாழ்தலைக் கொண்டது பழங்குடிகளின் அன்றாட அனுபவமும் பயணமுமாக இது நிகழ்கிறது. ராஜாவென அழைக்கும் யானை இக்கவிதைகளின் பல வெளிகளில் அலைந்து திரிகிறது. காட்டில் இருக்கும் ஏழு யானை பலத்தோடு நான் வருகிறேன். நீயும் நானும் இணைந்து நிற்போமா என கேட்கும் வரிகளில் ஏழு யானை இருளரின் ஏழு குலங்களை குறிப்பீட்டாக்கம் செய்கிறது. பழங்குடி கவிதை மொழி மிக அற்புதமாக யானையை மலை பொரித்த குஞ்சு என படிமப்படுத்துகிறது. கள்ளிமுள்ளில் சிக்கி நிலவு குருதி வடிக்கும் ஒரு இரவில் மலைபொரித்த குஞ்சான யானை அந்நியன் நட்டுவைத்த கருவேல மரங்களை உடைத்தெறிந்துவிட்டு காட்டாற்றுக்கு குளிக்கப் போகிறது. கேளையாடு கத்தும் சத்தத்திற்கு பயிரமரம் காதுகளை விரித்து காத்துக்கிடக்க, கண்ணில் விளக்கை வைத்துக் கொண்டு யானை உணவும் நீரும் தேடுகிறது. ஆனால் நீரை தன்னில் சேமித்து வைத்திருக்கும் நீர் முள்ளி கிழங்கும்கூட கிடைக்கவில்லை. பிறிதொருகவிதையில் இந்த யானை காடுவெட்ட வனத்துறைபோட்ட சாலையின் அருகில் நின்ற இருளனை ஒதுக்கிவிட்டு மரம் வெட்ட காண்டிராகிட் எடுத்தவனை சபித்துக் கொண்டு மிதித்து தள்ளுகிறது. வெட்டிய பலாப்பழத்தின் வாசனையை எங்கிருந்தாலும் கண்டுபிடித்து வந்துவிடுகிறது யானை. எனவேதான் பாடம் நடத்தாத ஆசிரியருக்கு தண்டனையாக தங்கள் ஊருக்கு மாற்றலாய் வந்த அதிகாரிக்கு பரிசாக அவர் ஜீப்பில் இரண்டு பலாப்பழத்தை வெட்டிப்போட வேண்டுமென ஆதிவாசி சொல்கிறார். காட்டையும் அதன் வளங்களையும் சுரண்டிக் கொழுக்கும் அதிகாரத்திற்கு எதிரான செயல்பாடாக “யானை’ எதிர்வினையை நிகழ்த்துகிறது. இங்கு ஓரே ரத்தம் கவிதையில் மார்பில் ரத்த வழியக் கிடக்கும் பசலிக்குஞ்சுக்கு நியாயம் கேட்க இருளன் சொல்கிறான். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நீ செல்லும் கோயில் மரத்தில் கோபத்தை கூடாக வைத்திருக்கும் குளவி உனக்கு தீர்ப்பு சொல்லும் என்கிறான்.
காட்டுப்பன்றியின் வயிற்றில் பாய்ந்த அம்பு
இந்திரன் மொழிபெயர்ப்பில் 2002ல் வெளிவந்த கடவுளுக்கு முன்பிறந்தவர்கள் கவிதை நூலில் இடம்பெற்றிருக்கும் சில கவிதைகளும் இந்தியப் பழங்குடிகளின் வாழ்தலுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவு நெருக்கத்தையும் முரணையும் பேசுகின்றன. ஜார்கண்ட் பகுதியில் வாய்மொழி மரபாக பேசப்படும் கவிதை ஒன்று யூகலிப்டஸ் மரத்திற்கும் உயிரினங்களுக்குமான உறவின்மையைக் மிக நுட்பமாக சித்திரப்படுத்திக் காட்டுகிறது.
யூகலிப்டஸ் மரங்கள் அழகானவைதான் þ ஆனால்
ஆடுகள் மேயும் புற்களுக்கான நிலத்தடி நீரை குடித்துவிடுகின்றன.
குளத்துக்குப் பக்கத்தில் பாறையில் கூட
அவை செழித்து வளர்கின்றன þ ஆனால்
அவை உதிர்க்கும் இலைகள் குளத்திலுள்ள நிறைய மீன்களை சாகடித்துவிடுகின்றன.
ஒரிசாவின் சடுமொகன் பகுதியின் படைப்பாளி அல்சென்சஸ் எக்கா கவிஞரின் படைப்பு ஒன்று விலங்கினத்திற்கும் மனிதனுக்கும் இடையிலான முரணையும், இயற்கை உயிர்களின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் மனித நடத்தையின் வன்முறையையும் எடுத்துப்பேசுகிறது. மான்குட்டியை சாகடிப்பதும், யானையின் துதிக்கையை வெட்டி வீழ்த்துவதும் காட்டுபன்றியின் வயிற்றில் அம்பை பாய்ச்சி கொல்வதும், புறாவின் சிறகுகளை பிடுங்கி மெதுவாக சாகடிப்பதையும் மரணத்தின் மீதான பாடலாக எழுதிச் செல்கிறார். இதில் உடனடி மரணம், தள்ளிப்போடப்பட்ட மரணம் என்பதான இரண்டு கூறுகள் செயல்படுகின்றன. இந்த தள்ளிப் போடப்பட்ட மரணத்தின் அம்சமாக ஒரு உயிர் துடிதுடித்து மரணமடைவதை ஒரு நீண்ட காலவெளியில் பார்த்து ரசிக்கிற மனத்தின் குரூரத்தையும் வெளிப்படுத்திச் காட்டுவதாக இது அமைகிறது.
அவர்கள் மான்குட்டியின் காலைப்பிடுங்கிவிட்டு
அதைச் சாகவிடுகின்றனர்
யானையின் துதிக்கையை வெட்டி
சாகும் வரையில் ரத்தம் சொரிய விடுகின்றனர்
காட்டுப் பன்றியின் வயிற்றில் பாய்ந்து அம்பை
அப்படியே விட்டுவிட்டு
சூரியன் மறையும்வரை அதை கத்தி சாகவிடுகின்றனர் அது
மெதுவாகச் சாவதை கவனித்து கொண்டுள்ளனர்.
இது நீதியா?
புகுத்திமாரி பழி தீர்க்கிறாள்
இயற்கையின் உடலாக வாழ்வதற்கும், அதை அழிப்பதற்கு எதிராகவும் இயங்குகின்ற படிமங்கள் இயல்பினை மீறாமல் இயல்பான வாழ்வை வாழ்வதற்கான உத்தரவாதத்தைக் கோருகின்றன. பழங்குடி கலாச்சாரத்திற்கும் நம்பிக்கைகளுக்கும், வாழ்தலுக்கும் நெருக்கடியைக் கொடுக்கும், கொங்கு மண்சார்ந்த அதிகாரத்தின் மீது எதிர்வினைகளாக இவை கிளம்புகின்றன. பால்சுரக்கும் பசுவுக்கும் கண்ணுகுட்டிக்கும் இடையிலான வாழ்வாதாரப் பிரச்சினையாகவும் இது உருவாகிறது. பசு சுரக்கும் பால் அதன் கன்றுக்குத்தான், அதை கறந்து சொசெட்டிக்கு ஊத்துன்னு சொல்றது அநியாயம் அப்படி சொல்கிற கொங்கன கண்டா பாம்பகண்ட மாதிரி என்பதாக அக்கவிதை பேசுகிறது.
கண்ணுகுட்டி துள்ளிக் கெடாக்கூ
பாலே கறந்து சொசேட்டிக்கூ ஊத்துங்கா கொங்கே
அத்துபாலு அத்து குட்டிக்கு
பால்போசிக்குள்ளே பாம்பும் கண்டே
ஆடு மேய்க்கும் கோசியைப் பார்த்து ஆடு பேசுவதாக ஒரு கவிதை இடம் பெறுகிறது. தீனி கிடைப்பதற்காக லஞ்சம் கொடுத்து ரிசர்வ் காட்டில் மேய்க்கும் கோசியே நான் ஆட்டை ரேஞ்சர் வீட்டுக்கு விருந்தாகப் போகிறேன் அதற்கு முன்னே கோசியே என்னை கொண்ணு திந்துரு இப்பவே. இது அதிகாரத்தால் பறிக்கப்படும் மேய்ச்சல் சமூகத்தின் நிலையற்ற உரிமை குறித்து கவனம் கொள்ளச் சொல்கிறது.
லட்சுமணனின் கவிதைகள் இருளர் பழங்குடிகளின் தொன்மக்கதையாடல்களை மறு உருவாக்கம் செய்து தருகின்றன. இக்கதையாடல்கள் குறித்த பரிச்சயத்தோடு கவிதையை வாசிப்புக்கு உள்ளாக்கும்போது அர்த்தங்கள் பல்கிப் பெருகுகின்றன. இவ்வகையிலான கவிதை ஒன்றுதான் புகுத்திமாரி. குறுங்கவிதை வடிவத்தில் அக்கவிதை வரிகள் இவ்வாறாக இடம் பெறுகின்றன.
நோகாமே திந்து திந்து வேறேயா கெடாக்கும் முனியே
தலக்கட்டிக்கும் முண்டக்கட்டிக்கும் நீவிரு ஆரு
நின்னே தேடித்தா அலேஞ்சு கொண்டிருக்கினார்
எத்து பூட்டேன் தலே பெத்த புழு
இக்கவிதையில் இடம் பெறும் முக்கிய சொற் கூறுகளாக முனி, தலக்கட்டி முண்டக்கட்டி, பூட்டேன் தலே பெத்த புழு என்பவற்றை எடுத்துக்கொள்ளலாம். இக்கவிதை உருவாக்கும் சூழலை தேனெடுக்கும் காட்சியோடு இணைத்துப் பார்க்க முடியும். தலைக்கட்டி என்பது தேன்கூட்டின் மேல்பகுதி, முண்டக்கட்டி என்பது அடிப்பகுதி. அதுபோல் “முனி’ என்பவன் மலை மண்ணை ஆக்ரமித்திருக்கும் அந்நியனாகிறான். தேன்கூட்டின் மேல்பகுதிக்கும் கீழ்பகுதிக்கும் உரிமை கொண்டாட நீ யாரு என எந்தவித நோவுதலும் இல்லாமல் அபகரிக்க வந்த அந்நியனை நோக்கி இருளர் கேள்வி கேட்கிறார். என்னுடைய பூட்டன் தலே பெத்தபுழு உன்னை பழிவாங்க அலைந்து கொண்டிருப்பதாகவும் எச்சரிக்கை விடுகிறாள். இக்கவிதையில் இடம்பெறும் பூட்டன்தலே பெத்த புழு என்கிற சொல்லாடலுக்கு ஒரு வரலாற்று தொன்மம் இருப்பதைப் பார்க்கலாம்.
முன்பொருகாலம் காட்டிடை வாழ்ந்த ஒரு இருளர் தம்பதி தேனெடுக்கச் சென்றபோது ஒரு மரத்தின் உயரத்தில் தேன்கூடுகள் இருப்பதை பார்த்து விடுகிறார்கள். இருளர் மரத்தில் ஏற மனைவி கீழே நிற்கிறாள். மேலே சென்ற இருளர்ஆண் புகையைப்போட்டு தேனீச்சைகளை விரட்டுகிறான். அப்போது மேலிருந்து ஒரு குரல் தலைப்பகுதிவேண்டுமா (தலைக்கட்டி) அடிப்பகுதி வேண்டுமா (முண்டக்கட்டி) எனக் கேட்கிறது. மனைவி தலைக்கட்டி கேட்க அவளது கணவனின் தலை கூடையில் வந்து விழுகிறது அதிர்ச்சியடைந்து அழுது கதறுகிறாள். குரல் கணவனுடையது அல்ல முனியினுடையது என்பதை அறிந்து கொள்கிறாள். பின் கூடையில் வைத்த தலையை எடுத்துக் கொண்டு பதியை நோக்கிச் செல்கிறாள். ஆனால் ஊர்போய் சேர்வதற்கு முன்னால் கணவனின் தலை புழுத்து அதிலிருந்து புழுக்கள் நெளியத் தொடங்கின. அப்பெண்ணைத்தான் ஆதிவாசி மக்கள் புகுத்திமாரி தெய்வமாக வணக்க வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த வரலாற்று தொன்மத்தின் பின்னணியில்தான் தனது பாட்டனின் தலையிலிருந்து வந்த புழு உன்னை பழிதீர்க்க இன்னும் தேடிக் கொண்டிருக்கிறது என்பதான பழி தீர்க்கும் குரலாக இருளர் பெண்ணின் கவிதைக்குரல் ஒலிக்கிறது.
சூது கவிதை உக்கிரமாக ஒடுக்குமுறைக்கு எதிரான பழங்குடிகளின் கலகத்தையும், பழி தீர்த்தலையும் எழுதிச் செல்கிறது. பழங்குடிகளின் வம்சத்தையை அழிக்க முயலும் அதிகார வர்க்கத்தின் வஞ்சக நடவடிக்கைக்கு ஆளாகும் ஆதிவாசிகளின் நிர்க்கதியையும் பதிவு செய்கிறது.
ஆணைக்கட்டி பகுதியில் இருளர்களை தொந்தரவு செய்த பாகரை ராஜாவின் மகன் கொல்லப்படுகிறான். மண்ணுக்காரனும், மூப்பனும் இந்தக் கொலையைச் செய்கிறார்கள். நீண்டகால இடைவெளிக்குப் பிறகு பாகரைராஜா படையெடுத்து சென்று பாறைக்குள் புதையல் போலிருக்கும் வேட்டைக்கருவிகளையும், தங்கத்தையும், செல்வங்களையும் கைப்பற்ற வேண்டுமெனில் ஏழு குலங்களில் ஒன்றான கரட்டிகர் குடும்பத்தின் தலைச்சன் பெண் அல்லது ஆணினுடைய தலைவேண்டும் எனக் கேட்டதாக இக்கதையாடல் வெளிப்படுகிறது.
இதுபோன்றே மாறுபட்டதெரு தொன்மகதையாடலை தொதுவர்களின் வாழ்வியலிலிருந்தும் அறிந்து கொள்ள முடிகிறது. இது மரபு வழியாக வைதீகமனம் வழிபடும் ராமனுக்கு எதிர்திசையில் இயங்குகிறது. மேல்முடி பகுதியில் வாழ்ந்த தொதுவர்களுக்கும், ராமபக்தர்களுக்கும் இடையிலான மோதலில் தொதுவர்கள் தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்படுகிறார்கள். பிறர் துரத்தப்படுகிறார்கள். தொதுவர்களின் எருமை உள்பட எல்லா சொத்துக்களும் கொள்ளையடிக்கப்படுகின்றன. தங்களை தோற்கடித்த படையின் தலைவனான ராமனின் உயிர்போனபின்தான் மொட்டையடிக்க வேண்டுமென்று காலங்காலமாக தொதுவர்கள் நீண்ட முடியோடு காத்திருகிறார்கள். தொன்மங்களின் உரையாடல் வைதீக மரபை எதிர்த்து உருவான பழங்குடி மரபின் அடையாளமாக மாறுகிறது.
கோவன் மூப்பனும் கோனையக்காவின் கதையும்
வரலாற்றியல் இனவரைவாளர் எட்கர்தர்ஸ்டனின் ஆங்கில மூலத்தில் அமைந்த தென்னிந்திய குலங்களும் குடிகளும் தொகுப்பு நூலில் நூற்றுக்கணக்கான பிற இன குலங்களின் வரலாற்றோடு இருளர், கோத்தர், தொதுவர், ஏரவாளர், மலையாளப்பழங்குடிகள் என பல்வகைப்பட்ட பழங்குடிகளின் பூர்வீகமும், இனவரைவியல் கூறுகளும் களப்பணி ஆய்வின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன. முனைவர் பகக்தவசல பாரதி தமிழகத்தில் பழங்குடிகள் நூலில் கொல்லிமலை, பச்சைமலை, சேர்வராயன், ஏலகிரி, ஜவ்வாது, சித்தேரி, கல்வராயன், பாலமலை உள்ளிட்ட பகுதிகளில் வாழும் பழங்குடிகள் குறித்தும் இருளர்கள் மலையாளிகள், முதுவர்கள், பளியர்கள், காணிக்காரர்கள், குறும்பர்கள், மலைக்குறவர்கள், காட்டு நாயக்கன் உள்ளிட்ட முப்பத்தி ஆறுக்கும் மேற்பட்ட அட்டவணை பழங்குடிகள் குறித்த விரிவான அறிமுகத்தைச் செய்கிறார். இன்னமும் வரிவடிவம் பெறாத பழங்குடிகளின் மொழி, வாய்மொழி வரலாறு, பழங்குடிகளின் தோற்றுவாய் பற்றி பேசும் தொன்ம சித்தரிப்புகள், இடப்பெயர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட வரலாறுகள், காலங்காலமாக சொல்லித் தரப்பட்ட பழமரபு கதைகள், பிறப்பு, வளர்ப்பு, திருமணம், வழிபாடு, மரணம் குறித்த சடங்குகள், ஆடல் பாடல் சார்ந்த கலைவெளிப்பாடுகள் என பழங்குடிகளின் உலகம் விரிந்து கிடக்கிறது.
பழங்குடிகளின் தோற்றம் குறித்த தொன்மங்களும் இடப்பெயர்ச்சிக்கான காரணங்களும் ஒரு வரலாற்று ரீதியான மறுவாசிப்பின் வழி உணர்த்தப்படுகிறது. இதன் பொதுவான கருத்தியலாக வெளிப்படுவது நிலப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்த பழங்குடி அரசனும் மக்களும், சேர சோழ பாண்டிய அரசர்களால் நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள், பழங்குடி அரசுகளை அரசியல் அதிகாரத்தின்வழி கைப்பற்றியதன் தொடர்ச்சியாக துரத்தப்பட்டபோது, மலைகளுக்கும், கானகங்களுக்கும் தப்பியோடி வாழ்ந்த தமிழ் மக்கள் இந்த பழங்குடிகள் என்பதாக இதனை கண்டடைய முடிகிறது.
இது குறித்து முனைவர் பக்தவசல பாரதி தனது நூலின் சில பகுதிகளில் விவரணை செய்கிறார்.
முதுவர்களின் பூர்வீகம் மதுரை நாயக்க மன்னர்கள் போடிநாயக்கனூரில் பாண்டியரைப் போரிட்டு தோற்கடித்தபோது ஒரு பிரிவினர் தம் குழந்தைகளை முதுகில் சுமந்து ஆனைமலை, ஏலமலை, கேரளமலை இடங்களுக்கு சென்று தங்கினர். குழந்தைகளை முதுகில் சுமந்ததால் முதுவர் என்றழைக்கப்பட்டனர். பளியர்கள் எனப்பட்டவர்கள் பாண்டிய மன்னனின் படைகளால் சிதறடிக்கப்பட்டபோது ஒரு பிரிவினர் பழனி மலைகளில் வந்து மறைந்து வாழ தலைப்பட்டனர். திருநெல்வேலி, களக்காடு, கல்லிடைக்குறிச்சி பகுதி குறுநில மன்னர்களாய் இருந்தவர்கள் பாண்டியனிடம் தோல்வியுற்ற பிறகு எஞ்சியோர் திருவாங்கூர் பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.
ஏழாம் நூற்றாண்டில் கொங்கு, சோழ, சாளுக்கிய மன்னர்களால் தோற்கடிக்கப்பட்ட பல்லவர்களின் ஒரு பிரிவினர் காடு மலைகளில் வாழத் தலைப்பட்டனர். உணவு சேகரிப்பு, காட்டெரிப்பு வேளாண்மை, உழுது பயிரிடுதல் போன்ற வாழ்வியல் முறைக்கு முள்ளாகிய அம்மை பயன்படுத்திய காரணத்தால் முள்ளு குறும்பர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். ஆங்கிலேயரால் தோடர்கள் என அழைக்கப்பட்ட தொதவர்கள், கோத்தர்கள், என பழங்குடியினர் பற்றிய விவரிப்புகள் நீண்டு செல்கின்றன. இதில் வரலாற்றுக்கும் முற்பட்ட காலத்திலிருந்தே இனக்கூறுகளை தனித்துவமாக கொண்டிருக்கும் மக்களை தொல்குடிகள் என்றும் நீண்ட நெடுங்காலம் தம் நிலப்பகுதியில் வாழும் மண்ணின் மைந்தர்களை முதுகுடியினர் என்றும் பலநூற்றாண்டுகளுக்கு முன் சமவெளிப்பகுதியிலிருந்து மலைப்பகுதிக்கு குடியேறியவர்களை பழங்குடியினர் என்று வரையறை செய்வதையும் கண்டு கொள்ளலாம்.
இப்பின்னணியிலேயே இருளர் குறித்த சொல்லாய்வு மற்றும் வரலாற்று தொன்மமும் இடம் பெற்றிருக்கிறது. இருளர் என்கிற சொல்லாய்வில் எருளர் என்பது மருவி இருளர் ஆனது என்ற ஒரு கருத்து உண்டு எரிளி என்பதற்கு கிழங்கு என்றும், காரு என்பதற்கு மக்கள் என்றும் எரிளை கிழங்கு தோண்டி உண்பவர்கள் எருளர் என்பதாக இருந்தது பின் மருவி இருளர் ஆனது என்பதாக இது முன்வைக்கப்படுகிறது. இருளருக்கான வரலாற்றியல் ஆய்வாக சொல்லப்படும் கூற்று கீழ்கண்டவாறு விவரணை செய்யப்படுகிறது.
மலைகள் சூழ்ந்த கோவை வனப்பகுதியை ஆட்சி செய்தவன் கோவ மூப்பன். இருளர் தலைவனான கோவன் மூப்பன். பத்தாம் நூற்றாண்டில் சின்னஞ்சிறு கிராமமான கோவன் பதியை ஆட்சி செய்து வந்தான். சோழ மன்னனின் ஆட்சி விரிவாக்கம் செய்த போது பழங்குடி அரசன் கோவன்மூப்பன் மீது போர்தொடுத்து அவன் அழிக்கப்பட்டான். தோல்வியடைந்த அம்மக்கள் அடர்வனங்களிலும், காடுகளிலும் விரட்டப்பட்டனர். இருள் சூழ் வனங்களில் இம்மக்கள் பதுங்கி வாழ்ந்ததால் இருளர் ஆயினர். கோவன்பதி கோயமுத்தூர் ஆனது என்பதான மாற்று வரலாறு முன் வைக்கப்படுகிறது.
இரா. முருகவேள் இருளர்களின் வரலாற்று பின்புலத்தோடு பழங்குடி வழிபாடு இந்துத்துவமயமாக்கப்படுகிற விதத்தையும் குறிப்பிட்டுச் சொல்கிறார்.
இன்றைய கோயமுத்தூர் அன்று ஒரு சின்னஞ்சிறிய இருளர்பதி அதன் தலைவன் கோவன் மூப்பன். கோனையக்கா அப்பதியின் தாய் தெய்வம். சமணர்கள் கோனையக்காவின் கோவிலைக் கைப்பற்றி அதை தாராதேவி ஆலயமாக மாற்றினர். அங்கு வாழ்ந்த இருளர்கள் ஒடுக்கப்பட்ட மக்களாக மாற்றப்பட்டிருக்கலாம். பின்பு சமணர்களை விரட்டிவிட்டு ஆதிக்கத்துக்கு வந்த சைவம் தாராதேவியை கோனியம்மனாக மாற்றியது இன்றும் நியான், சோடியம், ஆவி விளக்குகள் ஒüõரும் நகரின் மையத்தில் கோனியம்மனாக பெயர் சூட்டப்பட்ட கோனையக்காவின் கோவில் இருக்கிறது. ஆனால் அன்பும் எளிமையும் கொண்ட அவள் குடிகள் எங்கோ காற்றில் மறைந்து போய்விட்டார்கள். தொலைவில் மங்கலாகத் தெரியும் நீலமலைகளுக்குள் அவர்கள் விரட்டப்பட்டுவிட்டார்கள்.
சமணமும், பெüத்தமும், சைவமும், வைணவமும், பழங்குடி மக்களுக்கு அழிவைத்தான் கொண்டு வந்தன. அவை உழைக்கும் மக்களுக்கு எதிராக ஆளும் வர்க்கங்கள் பயன்படுத்திய ஆயுதங்கள்தான். பின்பு வந்த ஆங்கிலேயர்கள் காடுகளை ஏகாபத்திய நுகர்வுக்கான பொருளாக மட்டுமே பார்த்தனர் என எழுதிச் செல்லும் லட்சுமணனின் கவிதையிலும் கோவன் பதியின் பூர்வீக வரலாறும் கோனையக்காவின் உயர்சாதி மயமாக்கலும் வெளிப்பட்டிருக்கிறது. நிலம் அபகரிக்கப்பட்டு வனங்களுக்கு கோயமூப்பனும், மக்களும் பற்றிய பதிவில் தாழிக்குள்ளிருக்கும் எலும்ப சேர்த்து சதை உருவம் பெற்று எங்க பாட்டன் கோயமூப்பன் பழிதீர்க்க வருவதாக ஒடுக்கப்பட்டவர்களின் மறு உருவாக்கம் குறித்த புனைவை லட்சுமணன் எழுதிச் செல்கிறார்.
எத்தூ பாட்டேன் கோயமூப்பன்
தாழிக் குள்ளேருஞ்சு எலூம்பே சேத்தூ
சதே வெச்சு வருவினா பழி தீக்காக்கூ
கோனையக்கா கவிதையின் வழி லட்சுமணனும் கோனையக்கா, கோனையம்மனாக உயர்சாதி மயமாக்கப்பட்ட வரலாற்றை பதிவு செய்கிறார். கோனியம் மனின் பேச்சாக இக்கவிதை வெளிப்படுகிறது. நெய்விளக்கு ஏற்றுகிறீர்கள், நேரத்துக்கு நேரம் பூசை, தங்கத்துல பாவாடை, ஜம்முன்னுதேரு எல்லாமும் இருக்கு ஆனால் என் பூர்வகுடிகளை மட்டும் காணவில்லை பூமிதட்டிப்போகும் சுள்ளாம்பூக்கே பறவையே அவங்களை கண்டுபிடிச்சு கொடு என இக்கவிதையின் வரிகள் கேட்கின்றன.
இப்போ எத்து பேரு கோணியம்மே
நெய்வெளாக்கூ நேராத்துக்கு பூசே
தங்காத்துலே பாவாடே ஜம்முன்னதேரு
பக்தி… ஏழுசில்லு நாளியா வழிகூ
பாசோ… ஒரு கொட்டு கூடா இல்லே
ஏங்கிருக்காங்களோ பிதுருகா…
பூமி தட்டி போவியா.. சுள்ளாம் பூக்கே…
குரிச்சியானும் நீலச்சேலையும்
முனைவர் சி. மகேசுவரன் தனது விளிம்பு நிலைக்குத் தள்ளப்படும் தமிழகப்பழங்குடியினர். பதிவில் விளிம்புநிலையாக்கம், தொழில் மயமாதல், புலப்பெயர்ச்சி, பழங்குடி மரபு அழிப்பும் இந்துத்துவமயதாலும் என்பதான தளங்களில் பழங்குடிகளின் வாழ்வியல் சிதைவுறுதை, வெளிப்படுத்துகிறார் முதுவர் பழங்குடிகளின் தாய் தெய்வ வழிபாடு, முக்தி குளத்து அம்மன் வழிபாடமாகவும், தொதுவர்களிடத்தில் தற்போது இடம்பெறும் கூட்டுவிளக்கு பூசையையும் பழங்குடி மரபு, இந்துத்துவ மயமாதலாக மேல்நிலையாக்கம் பெற்றுள்ளதை கள ஆய்வின் வழியாக விளக்குகிறார்.
லட்சுமணனின் பிக்ஷ கவிதை சுண்டங்கோழி, பன்றி என கிடைக்கிறதை தின்னும் அசைவ உணவுப்பழக்கத்திற்கு மாற்றாக மலைகளின் இந்து ஆசிரமங்கள் அரசு விடுதிகளில் இலைதழைகளை தின்னச் சொல்லி சுலோகங்களை சொல்லிச் சொல்லி, நாக்கும் மனமும் மரத்துப்போக வைதீக பிராமணத்தையும் சைவத்தையும், உயர்சாதி மயமாக்கலையும் நடைமுறைப்படுத்துவதைக் கண்டு ஆத்திரமிட்டு ஆதிவாசி கேட்கிறான் குரிச்சியா எச்சடா போனே? இங்கே குரிச்சியான் என்ற சொல் பிராமணர்களை தீண்டத்தகாதவர்களாக கருதுகின்ற வயநாட்டு பழங்குடியினரை குறிக்கிறது. பிராமண வைதீக மரபுக்கும், அவைதீக, மாற்று மரபிற்கும் இடையிலான மோதலாக இது வெளிப்படுகிறது.
இருளர் பெண்களின் பண்பாட்டு நடத்தைகளின் இயல்புத்தன்மையும் சுதந்திரமான நடமாட்டமும் கொங்கு பண்பாட்டு கலாச்சார தாக்கத்தால் சிதைவுண்டு போவதையும், மேலாதிக்கத்தின் சவால்களை எதிர்கொள்வதையும் லட்சுமணனின் கவிதை பேசிச் செல்கிறது. அப்பா வாங்கிக் கொடுத்த பச்சபாவாட அண்ணன் வாங்கிக் கொடுத்த நீலச்சேலை, தொட்டிலில் தூங்கிய காலந்தொட்டே கழுத்தில் அணிந்திருந்த பாசிமாலை போன்றவற்றையெல்லாம், கணவன் இறந்தபிறகும் அப்படியே இருளர் பெண் அணிந்திருக்கிறாள் இதைப் பார்த்த கவுண்டச்சி, இருளச்சிக்கு திமிரு அடங்கவில்லையென சாடுகிறாள்.
இருவேறு பண்பாடுகளின் மோதலாக இன்னுமொரு சம்பவத்தை கவி லட்சுமணன் காட்சிப்படுத்துகிறார். மாடு பொட்டக்கண்ணு போட்டதற்கு மகிழ்ச்சியடைந்து கல்யாணத்திற்கு கூப்பிடுவதுபோல் ஊரெல்லாம் சொல்லும் நாய்க்கச்சி பேத்தி பிறந்ததற்கு ஏன் புலம்பித்திரிகிறாள் என்பது இருளச்சிக்கு புரியாத புதிராகவே இருக்கிறது.
மாடு பொட்டக்கண்ணு போட்டிருக்கு
கண்ணாலங்கணக்கா எல்லாத்துக்குஞ் சொல்லுகா
கோமயம் தெளிச்சினா
கோமாளி நாய்க்கனுக்கு பொங்கல் வெக்கினா எதுக்கோ
பொறந்தது பேத்தியுண்ணு பொணங்குதா நாய்க்கச்சி
வகுப்புக்கு வெளியே நானும் எத்துமொழியும்
இருளர்பண்பாட்டின் மற்றுமொரு முக்கிய கூறாக இருப்பது மொழி குறித்த கவனமாகும். இந்திய அளவில் ஆஸ்திரிய ஆசியமொழிக்குடும்பம், திபேத்திய þ பர்மிய மொழிக்குடும்பம், திராவிட மொழிக்குடும்பம் என்பதாக அமைந்துள்ளது. இன அடிப்படையில் அந்தோமான் நிகோபர் தீவுகளில் வசிக்கிற நீக்ரோவினர், மியான்மர் தென் கிழக்கு ஆசியத் தீவுகளிலும் வசிக்கும் முண்டா இனத்தினர், அசாம், அருணாசலபிரதேசம், மிசோ, மணிப்பூர், அசாம், நாகலாந்து, மேகாலாயா பகுதிகளில் வசிக்கும் சீனா, திபெத்திய தன்மைகள் கொண்ட கோந்த் மங்கோலியர், வட, நடு, தெற்கு இந்திய திராவிடமொழிகளைப் பேகம் மாலர், ஓரள இருளர் பேசும் கோததர், தொதவர், காடர், காணிகாரர், ஊராளி திராவிட பழங்குடியினர் என்பதாக பூகோளவியல், இன மொழிக்குடும்ப அடிப்படையில் வகைப்பாட்டை மேற்கொள்ளலாம். இந்த வகையில் பழங்குடிகள் கலப்பின மொழியை மலை மொழியாக பேசுகிறார்கள். கேரள மாநிலம் பாலக்காட்டு மலையோரக் காடுகளில் வாழும் இரவாளர்கள், தமிழ் மழையாளமொழிக்கலப்பான சரிவிநாளு என்ற மொழியை பேசுவர். குறவர்கள் இந்தோ ஆரிய குடும்ப வகையான வாக்ரிபோலி மொழியை பேசுகின்றனர்.
தமிழகத்தில் வாழும் மலையின இருளர் தமிழ் தெலுங்கு, கன்னடம் கலப்பு மொழியை பேசுகின்றனர். இந்தியாவில் இன்னும் பலப்பல பழங்குடிகளின் மொழி வரிவடிவம் பெறாமலே உள்ளது. ஒலிவடிவம் மட்டுமே அவற்றிற்கு உண்டு. பழங்குடிகளின் மலைமொழி பிறமொழி ஆதிக்கத்தால் அழிக்கப்படுவதும், ஒலிவடிவத்திலிருந்து வரிவடிவத்திற்கு மாறாமல் பேச்சு வழக்கு நிலையிலேயே மறைந்து போவதும் கல்விச் சூழலில் அதற்கான நெருக்கடியும் ஒரு துக்ககரமான நிகழ்வாகும். தன் மலைமொழி அழியும் வேதனையை மைய நீரோட்டத்திலிருந்து விலக்கப்பட்டிருக்கும் அவலத்தை இருளர்கள் எதிர்கொள்ளும் விதமாக ஒரு கவிதையின் வரி இவ்வாறாக முடிவுறுகிறது.
வகுப்பூக்கு வெளியே / முட்டி போட்டு நின்னு கொண்டிருக்கோம் / நானும் எத்து மொழியும்.
தானாய் முளைத்த ஏழாயிரம் நாத்து
லட்சுமணனின் கவிதைகளில் தீவிரமாக செயல்படும் மற்றுமொரு அம்சத்தை அதிகாரத்திற்கு எதிரான கலகக் குரல் என மதிப்பிடலாம். அரசு எந்திரம் பெருவடிவங்களில் கட்டமைத்திருக்கும் வருவாய்துறை, அவனத்துறை, சுற்றுலாத்துறை, வளர்ச்சித்துறை என சமூக பொருளாதார அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் பழங்குடி மக்களுக்கு எதிரான செயல்பாடுகளாக அமைந்திருப்பதை மிக வீச்சாக இக்கவிதைகள் விமர்சனப்படுத்துகின்றன.
கெவர்மெண்ட்வேலை / காரேலே கூரே / படிக்காகாசு / படிச்சாவேலை
சர்காரு வேலை / சலுகே மசூரு / எல்லாந்தருகேங்கே / அச்சான்னா
ஏந்தருகாதில்லே / சாதி சட்டிபிக்கெட்டு
மலை வாழ் மக்களுக்கு சாதிச்சான்றிதழ் பெறுவதிலுள்ள சிக்கல்களும் நெருக்கடிகளும் படிப்பு, வேலை, லோனு, சலுகே மசூரு என எல்லாம் அறிவிக்கும் நீ இதுக்கெல்லாம் அடிப்படையாகத் தேவைப்படும் சாதிச் சான்றிதழை தராமல் ஏமாத்துகிறாயே என பாதிக்கப்பட்டவர்களின் குரலை உரக்கப்பேசுகிறார்.
அஞ்சு இட்டிலிக்காக ஆறு ஏக்கர் நிலத்தை பறிகொடுத்த பழங்குடிகள் இன்று அதிலேயே கரியன் செட்டிகளால் அமைக்கப்பட்ட செங்கல் சூளையில் ரத்தம் சுண்ட மண் சுமக்கிறார்கள். இன்னும் மலை வாழ் கிராமங்கள் சாலை வசதி, மின் வசதி இல்லாமல் இருளிலேயே வாழ்ந்து வருகிறார்கள். சமவெளிப் பகுதியில் சிறிது நேரம் மின்சாரம் தடைப்பட்டால் கேளையாடாக கத்துபவர்கள் தாங்கள் மின் இணைப்பு கேட்டால் காடும், மிருகங்களும் அழிந்துவிடும் என மின் இணைப்பை தர மறுக்கிறார்கள். ஆனால் உங்களுக்கு நீரும் வெளிச்சமும் கொடுக்கும் பில்லூர் அணை எங்கள் மலைகளில்தான் இருக்கிறது. ஆனால் நாங்களோ இன்னும் இருளிலேயே கிடக்கிறோம் என்பதான முடக்கப்பட்ட வாழ்வை லட்சுமணன் சித்தரித்து காட்டுகிறார்.
வனங்கள் மரங்களின் தாய்வீடாக காட்சியளிக்கிறது இயற்கையையும், தட்பவெட்ப சூழலையும் இயல்புத்தன்மையோடு மழைப்பொழிதலையும் உருவாக்குகிறது இந்நிலையில் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் நிதி உதவியோடு அரசுகள் சமூக வனக்காடுகள் திட்டத்தை அமுல்படுத்துகின்றன. பலகோடி ரூபாய்களில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் நடப்படும் மரக்கன்றுகள் அதிகார வர்க்கத்தால் சூறையாடப்படுகின்றன. ஐந்தாயிரம் வீரிய ரக மரக்கன்றுகளை நடும் திட்டத்தில் நான்காயிரத்தை அதிகாரிகள் விழுங்கி விடுகிறார்கள். மீதியை மழையால் அழிந்தது, வெயிலால் காய்ந்தது என்றும் கணக்குகாட்டிவிடுகிறார்கள். எந்த ஜப்பானும் இல்லாமல் தானாக வளர்ந்து கிடக்கின்ற ஏழாயிரம் மரக்கன்றுகள் என ஒரு கவிதை பன்னாட்டு மூலதன உதவியோடு அரசு நடத்தும் காடு வளர்ப்புத்திட்டத்தை நேரடி விமர்சனம் செய்கிறது.
எருவூம் போடுகாலே பெட்டும் போடுகாலே
நிரூத்து காலே நீளோம் பாக்காலே
தானே மொளாய்க்கூ ஏழாயிரம் நாத்து
மலைக்குள் ஒந்து பழங்குடி மக்களின் உயிருக்கு உலை வைக்கும் தீய ஆவியாக செடிக்காரன் கருதப்படுகிறான். இக்கவிதையில் செடிக்காரன் சுரண்டித்தின்னும் அதிகார வர்க்கத்தை குறிக்கும் தீய ஆவியாக அர்த்தம் பெறுகிறான்.
பிணத்துக்கு கல்யாணம்
வன உரிமைச்சட்டங்கள் எல்லாம் பழங்குடிகளின் நில உரிமையை தக்கவைப்பதற்கான நியாயங்களைச் செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்ட குப்பிலிகா குலத்தினர் மேற்கொள்ளும் பிணத்துக்கு கல்யாணம் சடங்கியலை பெரிய பட்டி கொப்பேலே கெடக்கான் குப்பிலிகா சொல்லாடலின் வழி கவிதைக்குள் தடயங்களை உருவாக்குகிறார். குப்பிலிகா குலத்தினர் ஊசிமலைக்கு வேட்டைக்கு போனபோது ஒரு பதியில் வயசுக்கு வராத பெண்ணை இளைஞனுக்கு திருமணம் பேசி முடிக்கிறார்கள். பிறகு தங்கள் வாரிசை பதிக்கு திருப்பிவிடுகிறார்கள். பல வருடங்கள் கழிந்தபோது இச்சம்பவமே மறந்து போனது. ஒருநாள் அப்பெண்ணின் ஊராரிடமிருந்து மணப்பெண்ணை அழைத்துபோக அழைப்பு வருகிறது. மாப்பிள்ளை வீட்டார் அங்கு சென்ற போதுதான் இறந்துபோன பெண்ணை அலங்கரித்து உட்கார வைத்திருப்பது தெரிய வந்தது. மாப்பிள்ளை வீட்டார் பிணத்தை எடுத்து புதைத்துவிட்டு ஊருக்கு போகிறார்கள். இந்நிகழ்வின் குறியீடே பிணத்துக்கு கல்யாணம் என்கிற சொல்லாடலாக உருமாறி உள்ளது.
இழந்துபோன தனது பழைய காட்டை மீட்டிட குரலெழுப்பும் இருளன் வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையிலான பதட்டத்தை மற்றொரு சடங்கியலின் வழியாக உரையாடல் செய்கிறான். வனக்குழுவினர் அதிகாரங்கள் எல்லாம் காட்டை அழிப்பதை தவிர பேறெதையும் செய்யவில்லை என்பதாக இது தொடர்கிறது.
பிணத்தை புதைக்கும் முன்பு மாமன், மச்சான் உறவினர் ஒருவன் குழிக்குள் இறங்குவான் அவன் மே என்றால் மாடு பே என்றால் ஆடும் வட்டமாக சைகைக்காட்டினால் சாப்பிடும் தட்டும் கொடுக்க வேண்டும். அவ்வாறு சொல்லியவுடன் குழியிலிருந்து அவனை தூக்கவில்லையென்றால் இறங்கியவன் இறந்துவிடுவான். தூக்கியபிறகு அவன் கேட்டதை கொடுக்கவில்லை என்றால் தூக்கியவன் இறந்துவிடுவான் என்பதாக இரு விரிவடைகிறது.
ஒடியனில் தென்படும் கவிதையாக்கம் குறித்த பிரச்சினையில் உடனடி அரசியல் சார்ந்த எதிர்வுகளை ஒவ்வொரு கவிதையின் அமைப்பாக்கத்திலும் திட்டமிட்டே வைத்திருப்பது பிரச்சினைப்பாடுகளை மட்டுமே பேசும் கவிதைகளாக குறுக்கிவிடுகின்றன. ஒற்றைத்ள அர்த்தத்தை மீறி இயங்குவதற்கான சாத்தியங்களையும் குறைந்து போகிறது. இது கவிதையை அரசியல் நோக்கங்களுக்காக மட்டும் சேவகம் செய்ய வைக்கின்றன உரைநடை ஊடகத்தின் வாயிலாகவும் இத்தகைய அரசியல் கடமையை நிறைவேற்ற முடியும். பழங்குடியினரின் கவிதை எழுத்து, பழங்குடியினரைப் பற்றிய கவிதை எழுத்து என்பதான வித்தியாசங்களால் இத்தகைய முரண்பாடுகள் எழவும் வாய்ப்பு உண்டு. என்றாலும் லட்சுமணனின் கவிதைகள் அனைத்திலும் கீழ்நாடு மலைநாடு பழங்குடி கலாச்சாரம் கொங்குமண் கலாச்சாரம் என்பதான எதிர்வுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதில் அதிகாரம் பண்பாட்டின் வழியாக செயல்படும் விதத்தை கண்டுணர முடிகிறது. மறுபுறத்தில் அரசு அதிகாரத்தின் செயல்பாடு பழங்குடிகளின் வாழ்வின் இருப்புக்கே ஆபத்து விளைவிக்கிற அபாயத்தையும் சொல்லிச் செல்கிறது. நகரமயமாக்கல், எந்திரமயமாக்கல், தொழில் மயமாக்கல் என்று பேசப்படுகிற வளர்ச்சிக் கோட்பாடுகள் அனைத்தும் பழங்குடி கலாச்சாரத்தின் இதயத்துடிப்பை நிறுத்தி வைப்பதாகவே உணர்த்துகின்றன.
பழங்குடி இருளர்களின் பண்பாட்டு நம்பிக்கைகளையும், தொன்மங்களையையும், புதுவகை மலை மொழியையும் கவிதையாக்கம் செய்துள்ள லட்சமணனின் ஒடியன் தமிழின் விளிம்புநிலை கவிதைப்பாய்ச்சலுக்கான ஒரு குறியீடு பழங்குடிகள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் அனுபவங்களையும் பல்வேறு அடக்குமுறை நுகத்தடிகளில் சிக்குண்டு அதிகாரங்களால் சிதைவுற்று கிடக்கும் துயரத்தையும் ஒருசேர இக்கவிதைகள் கிளர்ந்தெழுந்து பேசுகின்றன. பண்பாட்டு அடையாளங்களின் அரசியலை முன்னிலைப்படுத்துகின்ற இக்கவிதைகளின் உலகம் தொன்ம விரிவுகளோடு மீண்டும் புதிய வாசிப்பிற்கான உயிர்ப்புத்தன்மையையும் வழங்குகிறது.
லட்சுமணன்
ஒடியன் (கவிதைகள்)
பக்கங்கள் ,,, 87 விலை ,,, 50/
மணிமொழி பதிப்பகம் திருவண்ணாமலை- -1
04175 ,, 251980
- ஒவ்வொரு கல்லாய்….
- பசிலிகுருவியின் குஞ்சு ரத்தம் வழியகிடக்கிறது
- மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -43
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! கெப்ளர் விண்ணோக்கியின் அற்புதக் கண்டுபிடிப்பு : இரட்டைப் பரிதிகள் சுற்றும் இரு கோள்கள்
- All India Tata Fellowships in Folklore 2012-2013
- விவசாயி
- ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் எழுதியிருக்கிறது காலம்.
- அக்னிப்பிரவேசம் -1
- அம்மா
- மணிபர்ஸ்
- மெல்ல இருட்டும்
- நம்பிக்கைகள் பலவிதம்!
- பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் மணிவிழா
- (100) – நினைவுகளின் சுவட்டில்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -2
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -28
- “ஆத்மாவின் கோலங்கள் ”
- தமிழ்ப்பேராய விருதுகள் பெற்றோர் பட்டியல்
- கால் செண்டரில் ஓரிரவு
- சிற்றிதழ் பார்வை – கல்வெட்டு பேசுகிறது
- பிரான்ஸ் வொரெயால் தமிழ்க்கலாச்சார மன்றம் புகைப்பட கண்காட்சி
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 37) பன்மடங்கு பூரிப்பு எனக்கு
- துண்டிப்பு
- எகிப்து : சிதைந்த கனவுகள் – திரைப்படம்
- பருத்தி நகரம் : திருப்பூர் படைப்பாளிகளின் தொகுப்பு
- இலக்கிய நிகழ்வு: கோவை இலக்கியச் சந்திப்பு / நிகழ்வு 22
- தாகூரின் கீதப் பாமாலை – 31 நீ அருகில் உள்ள போது… !
- தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் நூற்றாண்டு விழாவையொட்டி நடாத்திய சிறுகதைப் போட்டி முடிவுகள் – 2012
- மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே
- இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு..
- வழி தவறிய கவிதையொன்று