குரானின் கருவும் உருவும்

This entry is part 21 of 36 in the series 30 செப்டம்பர் 2012

முஸ்லிம்களின் புனித வேதமான குர்ஆனின் அத்தியாயங்களுக்கான தலைப்புகளில் பல கவித்துவக்குறியீடுகளாகவும், யதார்த்த மொழித் தன்மையாகவும் அமைந்துள்ளன. பிரபஞ்சத்தின் இயக்கமாகவும், இயற்கையின் அற்புதங்களாகவும் திகழ்கிற இடி (அர்ரஃது), அந்த ஒளி (அந்நூர்), மலை (அத்தூர்), புழுதிக்காற்று (அத்தாரியாத்), நட்சத்திரம் (அந்நஜ்மு), சந்திரன் (அல்கமர்), கிரகங்கள்(அல்புரூஜ்), விடிவெள்ளி (அத்தாரிக்), வைகறை(அல்பஜ்ர்), இரவு(அல்லைல்), முற்பகல் (அல்லுஹா) காலைப்பொழுது(அல்பலக்) என்பதாக இவை அமைந்துள்ளன.

உயிரினங்களின் அடையாளங்களைக் கொண்ட பெயர்கள் பிறிதொருவகை. பசுமாடு(அல்பகறா), கால்நடைகள்(அல்அன்ஆம்), தேனீ(அந்நஹல்), எறும்பு(அந்நமல்), சிலந்தி(அல் அன்கபூத்), யானை (அல்பீல்) என இவற்றை வரிசைப்படுத்தலாம்.

இவ்வாறு தலைப்பிட்ட குர்ஆனின் அத்தியாயங்கள் வெவ்வேறு உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளன. மாதிரியாக காலைப்பொழுது சிறு அத்தியாயத்தில் வைகறையின் அதிபதியான இறைவனிடம் இரவின் இருளிலிருந்தும், முடிச்சு போட்டு ஊதும் பெண்களிடமிருந்தும், பாதுகாவல் தேடுகிறது. இருளிலிருந்து ஒளியை நோக்கிய பயணமாக இது அமைகிறது.

அல்பீல்/யானை குறும் அத்தியாயத்தில் மக்கமா நகரின் கஃபாவை அப்ரஹா மன்னனின் யானைப்படைகளின் மூலம் அழித்தொழிக்க வரும்போது இறைவன் பறவைக்கூட்டங்களை அனுப்பி அவை எறிந்த சுடுமண் கற்களால் அப்படையே அழிந்துபோன நபி முகமது காலத்திற்கு முந்திய நிகழ்வை பதிவு செய்கிறது. இது குறியீட்டு மொழியாடல் வடிவத்திலும் வெளிப்பட்டுள்ளது.

நபி முகமது அவர்களுக்கு முற்பட்ட அரபு சமூக வரலாற்றை எழுதிச் செல்லுதல் என்கிற நோக்கில் குர்ஆனின் சில தலைப்புகளின் உள்ளடக்கம் அமையப்பெற்றுள்ளது. அல்அன்பியா – நபிமார்கள் என்னும் 21வது அத்தியாயம்

நபிமார்களான மூஸா, ஹாரூன் இபுராஹீம், லூத், இஸ்ஹாக், யாகூப், தாவூத், ஸுலைமான், யூனூஸ் உள்ளிட்டவர்கள் பற்றி பேசுகின்றன. மேலும் யூனூஸ், ஹுது, யூசுப், இப்ராஹிம், முகமது தலைப்பில் நபிமார் வரலாறுகள் தனித்தனி அத்தியாயங்களாகவும் அமையப்பெற்றுள்ளன. பனு இஸ்ராயீல் அத்தியாயத்தில் இஸ்ரவேலர்களான யூதகுல வரலாறு மூஸா நபியின் நிகழ்வுகளோடு வெளிப்பட்டுள்ளது.

இஸ்லாமிய கோட்பாடுகளின் உருவாக்கம் நிகழ்ந்த போது அங்கு நிலவிய யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பழங்குடி மக்களோடு உரையாடலை நிகழ்த்த வேண்டிய கட்டாயம் இருந்தது. இதன் வெளிப்பாடே அல்பகறா – பசுமாடு மற்றும் ஈஸா நபி (இயேசு)யின் பாட்டனாரான இம்ரானின் சந்ததிகளைப்பற்றி பேசும் ஆலு இம்ரான், தூதர்களை பொய்யர்கள் எனக்கூறி ஏற்றுக்கொள்ளாத ஹிஜ்ர்வாசிகளான ஸமூது சமுதாயத்தினரை வெளிப்படுத்தும் அல்ஹிஜ்ர் உள்ளிட்ட அத்தியாயங்களைக் குறிப்பிடலாம்.

குர்ஆனில் பெண்சார்ந்த பிரச்சினைகளை மையப்படுத்தி பேசும் பகுதிகளாக 19வது அத்தியாயம் மர்யம் (ஈஸா நபியின் தாய்) நான்காவது அத்தியாயம் அன்னிஸா – பெண்கள், 65வது அத்தியாயம் அத்தலாக்-விவாகரத்து உள்ளிட்டவற்றை குறிப்பிடலாம். முஸ்லிம் பெண்களுக்கான திருமணம், குடும்ப வாழ்வு, சொத்துரிமை, விவாகரத்து, வாரிசுரிமை சட்டங்கள் என பல தீர்மானிக்கப்பட்ட சட்ட விதிகளை இப்பகுதிகள் கொண்டுள்ளன.

அறிவுக்கும், கல்விக்கும் முதன்மையளிக்கும் அல்கலம் – எழுதுகோல் மனிதப்பிறப்பை ரத்தக்கட்டியிலிருந்து உருவானதாக புராதன உடலியல் விஞ்ஞானத்தை முன்வைக்கும் அல்-அலக் ஆகிய அத்தியாயங்களும், இவ்வரிசையில் குறிப்பிடத்தக்கன.

இஸ்லாமிய பொருளியலின் அடிப்படையான நலிந்த பிரிவினருக்கு செய்ய வேண்டிய தானதருமம், அடிமை முறை ஒழிப்பு, வணிகத்தில் பேண வேண்டிய நெறிமுறைகள் உள்ளிட்ட பிரச்சினைகளையும் வழிகாட்டுதல்களையும் இன்னும் பல பகுதிகளில் குர்ஆன் எடுத்துரைக்கிறது.

நபி முகமது தான் வாழ்ந்த காலத்தில் மக்காவில் பல கொடுமைகளுக்கு ஆளானார். ஏகத்துவம், தூதுத்துவம் சார்ந்து இஸ்லாமிய விளக்கங்களை சொன்னதற்காக நபி முகமது அவரது குடும்பத்தார் மற்றும் அவரது தோழர்களான முஸ்லிம்களை சமூக பொருளாதார விலக்கல் செய்து ஷுஅப் அபீதாலிப் கணவாயில் ஊரைவிட்டு விலக்கி வைத்தனர்.

மக்காவை விட்டு மதிநாவிற்கு புலம் பெயர்ந்த பிறகு நடைபெற்ற முஸ்லிம்கள் வெற்றியடைந்த பத்ருப்போர், குறைஷிகள் மூவாயிரம் பேர் மதினாவின் மீது தொடுத்த உஹதுப்போர், பனூநுளைர் யூதக்குலத்தோடு நடைபெற்ற பனூமுஸ்தலிக் போர், அகழ்போர் என நடைபெற்ற போர்கள் குறித்தும், இதில் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள்குறித்தும் அல்அன்பால்-போரில் கைப்பற்றப்பட்ட எதிரியின் பொருட்கள், அல் அஹ்சாப் -கூட்டுப்படையினர் உள்ளிட்டகருத்தாக்கங்களை சில அத்தியாயங்களும் பேசுகின்றன. சமகாலத்தில் விவாதிக்கப்படும் ஜிகாத்-புனிதப்போரின் கருத்தாக்கம் இதிலிருந்தே துவக்கம் பெறுகிறது.

தற்காப்பு போர், ஆக்ரமிப்பு போர் என இப்போர்களை வேறுபடுத்திப் பார்ப்பதின் வாயிலாக உலக அளவில் முஸ்லிம்களை அழித்தொழிக்கும் அமெரிக்க பயங்கரவாத ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டமாகவும் ஜிகாத்தை அர்த்தப்படுத்த வாய்ப்புள்ளது. ஜிகாதின் மற்றுமொரு பரிமாணமாக மன இச்சைக்கு எதிரான போர் ஜிகாதுல் அக்பர் எனவும் முன்வைக்கப்படுகிறது.

குர்ஆன் முன்வைக்கும் பிரபஞ்சம் தழுவிய கருத்தியல் கோட்பாடுகளாக ஒற்றுமை, கருணை, நீதி, சுதந்திரம், பொறுப்புணர்ச்சி, ஒழுக்கவியல் சிந்தனைகள் முன்வைக்கப்படுகின்றன.

முஸ்லிம்கள் தம் வாழ்வின் வழிபாடு, நடத்தை, கண்ணோட்டம் என ஒவ்வொரு அம்சத்திற்கும் குர்ஆனையே அடிப்படை வழிகாட்டும் நெறியாக முன்வைக்கின்றனர். இத்தோடு நபிமுகமது சொல், செயல்களை வாய்மொழி வரலாறுகளின் வழியாக பதிவு செய்து வைக்கப்பட்டிருக்கும் ஹதீது தொகுப்புகள் ஆதாரமாக உள்ளன. குர்ஆனின் செயல்முறை விளக்கமாகவே ஹதீதுகள் கருதப்படுகின்றன. நபிமுகமதுவின் மறைவிற்கு பிறகு இருநூறு ஆண்டுகள் கழித்து தொகுக்கப்பட்ட இந்த ஹதீதுகள் குறித்தும் பன்முக அளவிலான விளக்கங்கள்,விவாதங்கள் உண்டு.

குர்ஆனை எப்படி பொருள்கொள்வது என்ற அணுகுமுறையில் ஸுன்னிகளான சுன்னத்துல் ஜமாஅத்தினர், வகாபிகள் ஜமாஅத்தே இஸ்லாமியினர், குதுபிகள், மற்றும் ஷியாக்கள், அஹமதியாக்கள், அஹ்லே குர்ஆனிகள் என இயக்கங்களும், குழுமங்களும் வெவ்வேறுவிதமாக அர்த்தம் கொள்கின்றனர்.

மூலப்பிரதியிலிருந்து அர்த்தத்தின் வழி உருவான இந்த துணைப்பிரதிகள் நுண்ணிய அளவில் பல்வேறு கருத்தாக்கங்களில் வேறுபடுத்துதல் தன்மையோடு செயல்படுகின்றன. இந்நிலையில் குர்ஆன் குறித்து இஸ்லாமிய உள்வட்டத்தில் பல்வேறு இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகளுக்கிடையேயான(ஸ்கூல் ஆப் தாட்) உரையாடல் மிகவும் அவசியப்படுகிறது.

அதே நேரத்தில் இஸ்லாம் தவிர்த்த வெளிவட்டத்தில் மேற்குலகின், கீழைதேய வகுப்புவாத சக்திகளின் இஸ்லாம் குறித்து பெருகிவரும் விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
அல்மாய்தா 5-வது அத்தியாயத்தின் 60-வது வசனம் மற்றும் 2- 65 /7- 166 /7 – 179/ 25-44/ 47-12வசனங்களில் இடம்பெறும் அல்லாவால் சபிக்கப்பட்டவர்கள், நேர்வழி தவறியவர்கள், யூத கிறிஸ்தவர்களாக குறிப்பிடப்படுவதையும், அதில் இடம் பெறும் சொற்குறியீடுகளான பன்றி, குரங்கு ,மிருகங்கள் குறித்தும், அத்தவ்பா 9வது அத்தியாயம் 29 – 30 மற்றும் 5- 51/ 9-28 /2- 191 2/193 / 3- 28,30/4- 89/ 4- 91 /47-4 ,5,6/ 8-12 /8-65,66/ 9-123 வசனங்கள் என பல்வித குர்ஆனிய பகுதிகள் இவர்களால் எதிர்பிரச்சாரத்திற்கு எடுத்தாளப்படுகின்றன.

இன்றைய தகவல் தொடர்பு ஊடகங்களில் எழுப்பப்படும் இஸ்லாத்திற்கு எதிரான இத்தகைய கருத்துப்படிமங்களை இஸ்லாமிய அறிஞர்கள் கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இதற்கு குர்ஆன் பிரதிகளுக்குள்ளேயே பல்துறை அறிவு சார்ந்த மாற்று வாசிப்பினை, வரலார்றுச் சூழல் சார்ந்த புதிய அர்த்த பொருள்கோள்களை உருவாக்க வேண்டும்.

ஒற்றைத்தன்மைக்கு மாற்றான பன்மைச் சமுதாய வாழ்தலுக்கும், பன்முக பண்பாட்டு அடையாளங்களின் புரிதலுக்கும், மைய நீரோட்டத்திலிருந்து விலக்கப்பட்ட விளிம்பு நிலையினர் பாலின பாகுபாடுகளால் ஒடுக்கப்படுபவர், அதிகாரத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான பண்பாட்டு உரையாடல்களை நிகழ்த்துபவர் உள்ளிட்டவர்களுக்கான கலாச்சார வெளியை உருவாக்கும் விதத்திலும் குர்ஆனை வாசிப்பு செய்ய வேண்டும். இதுவே எதிரிகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிற அடிப்படைவாதத்திற்கும், பயங்கரவாதத் திற்கும் மாற்றான ஜனநாயக மறுசிந்தனையை உலகுக்கு வழங்கும்.

Series Navigationஅண்ணாவின் படைப்புகள் அனைத்தையும் படிக்கவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –30
author

ஹெச்.ஜி.ரசூல்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *