ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா
தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா
பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல ! ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல ! ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன.
பெர்னாட் ஷா (Preface to Mrs. Warren’s Profession Drama)
ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வி யுற்ற வணிகத்துறையாளர். வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர். இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார். நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வியுறும் நாடகங்களை எழுதினார். பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களை விமர்சனம் செய்து 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.
அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898), மிஸிஸ் வார்ரனின் தொழில் (Mrs. Warren’s Profession) (1893) போன்றவை. ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.
மேடம் மோனிகா வார்ரன் நாடகத்தைப் பற்றி :
[தமிழில் எழுதப் பேசும் வசதிக்காக பெர்னாட் ஷாவின் நாடகப் பெயர்கள் சிலவற்றை நான் எளிதாய் மாற்றி இருக்கிறேன்.]
பெர்னாட் ஷா நாடகத்தின் அடிப்படைக் கருத்து இதுதான் : ஏழ்மையாலும், சமூகப் புறக்கணிப்பாலும், தனிப்படுவ தாலும், இல்லாமையாலும், வேலையின்மையாலும் சில மாதர் பரத்தையர் தொழில் சிக்கிக் கொள்கிறார் என்பதாக பெர்னாட் ஷா தன் நாடக முன்னுரையில் கூறுகிறார். மிஸிஸ் மோனிகா வார்ரன் ஒரு நடுத்தர வயது மாது. உயர்தரப் பரத்தையர் மாளிகையை மேற்குடிச் செல்வந்தருக்கும், சமூகச் செல்வாக்கு மாந்தருக்கும் நடத்தி வரும் உரிமையாளி. நளினமும், நாகரீகமும் கவர்ச்சி மேனியும் கொண்டவள். மோனா லிஸா போன்று பார்க்க ஓர் அழகிதான். அவளுக்கு விவியன் என்றொரு வாலிபப் புதல்வி. மகள் கேம்பிரிட்ஜ் யுனிவெர்சிட்டி பட்டதாரி. அவளது கல்லூரிப் படிப்புக்குத் தொடர்ந்து பணத்தை அனுப்பிய அவளது அன்னை எப்படிப் பணம் சம்பாதிக்கிறாள் என்று தெரியாமல் இருக்கிறாள். அந்த இரகசியம் தெரிந்ததும் விவியன் வெகுண்டு, வெடித்து அன்னையைத் திட்டி அறவே வெறுக்கிறாள். தாய் சிறு வயதில் வறுமைப் பிடியில் பட்ட துயர்களைக் கூறிப் பரத்தையர் தொழிலில் தான் தள்ளப் பட்ட காரணத்தை விளக்குகிறாள். மகளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தர்க்கத்தின் முடிவில் உடன்பட ஒருவரும் இயலாது இருவரும் தாம் விரும்பும் தனித்தனிப் பாதையில் போகிறார். மோனிகா தன் பரத்தையர் தொழிலைத் தொடர்கிறாள். தாயைப் போல பிள்ளை என்பார் சிலர். ஆனால் விவியன் ஒரு விதி விலக்கு மங்கை. அவள் அன்னையைப் போலின்றி ஒரு கௌரவத் தொழிலில் உழைத்துச் சம்பாதிக்க ஈடுபடுகிறார்.
மிஸிஸ் வார்ரனின் தொழில் நாடகத்துக்குத் தடை உத்தரவு
1893 இல் எழுதிய பெர்னாட் ஷாவின் நாடகம் 1925 ஆண்டுவரை அடுத்தடுத்துத் தடை செய்யப்பட்டு இங்கிலாந்தில் அரங்கேறாது முடங்கியே மூலையில் கிடந்தது. பிரிட்டனின் அக்கால அரங்க மேடை அதிபரரான லார்டு சேம்பர்லின் “மிஸிஸ் வார்ரனின் தொழில்” நாடகத்தை எந்த நகரிலும் அரங்கேற்றக் கூடாது என்று தடை உத்தரவு போட்டார். காரணம் அந்த நாடகம் பரத்தையர் தொழிலைப் பற்றிக் காட்டி ஆடவரையும், மாதரையும் இழிவு செய்கிறது. பரத்தையர் தொழில் நாட்டில் ஊன்றி வளர்வதற்கு மூல காரணமே சமூகம் தான் என்பது நாடகக் காட்சியாக வெளியாவது அப்போது வரவேற்கப் படவில்லை. 1902 ஆண்டில் லண்டனில் உள்ள “நியூ லிரிக் கிளப்” தன் உறுப்பினர் மட்டும் பார்க்க அந்த நாடகம் முதலில் அரங்கேறியது. 1905 இல் நியூ யார்க்கில் “மிஸிஸ் வார்ரன் தொழில்” நாடகம் முதன்முதல் அரங்கேறிப் பாதியில் போலீசார் குறுக்கிட்டு நடிகர் குழுவினர் கைது செய்யப் பட்டனர். பொதுநபர் ரசிக்க 1925 ஆண்டில்தான் அதை லண்டன் நாடக அரங்குகள் மேடையில் காட்ட முன்வந்தன.
பரத்தைமைத் தொழில் (Prostitution) பற்றி பெர்னாட் ஷாவின் கருத்துகள்
பெர்னாட் ஷா 1893 இல் “மிஸிஸ் வார்ரனின் தொழில்” என்னும் நாடகத்தை எழுதினார். அது பரத்தைமைத் தொழலில் ஈடுபட்டு ஊதியம் சம்பாதிக்கும் மிஸிஸ் வார்ரனைப் பற்றியது. அந்த வெறுப்புத் தொழிலில் கிடைத்த பணத்தை மகளுக்குத் தெரியாமல் சேர்த்து மகளைப் பட்டப் படிப்பில் ஏற்றி வளர்த்த நிகழ்ச்சியே நாடகத்தின் ஆணிவேராய் அமைந்துள்ளது. இறுதியில் அதை அறிந்து கொண்ட மகள் ஆவேசம் கொண்டு அன்னையைப் பிரிவதே நாடக உச்ச முடிவாக எழுதப்பட்டுள்ளது.
மிஸிஸ் வார்ரன் உட்பட பரத்தைமைத் தொழிலில் பங்கு கொண்ட மற்றவரும், அவளது ஆசை நாயகரும் கண்ணியமாக காட்சி அளித்துப் போவதாய் பெர்னாட் ஷா காட்டி இருக்கிறார். இந்த கசப்பு நாடகத்தை தடை செய்யத் தகுதியுள்ள ஆபாச நடைப் போக்குகள், முரண்பாடுகள் எதுவும் வசனங்களில் இல்லை. பரத்தைமை பற்றிய ஆபாசக் காட்சிகள், அமங்கலச் சொற்கள், அதிர்ச்சி வரிகள் எவையும் நாடகத்தில் எங்கும் காணப் படவில்லை. நாடக வசனங்களை இரட்டைப் பொருளில் பெர்னாட் ஷா எழுதி இருப்பது திறமையான நவீன நடைப் போக்காக திகைக்க வைக்கிறது.
பரத்தையர் தொழில் மாளிகை வைத்து நடத்தும் மிஸிஸ் வார்ரன் முரண்பாடு நாடகத்தை பெர்னாட் ஷா எழுதியதின் நோக்கம் என்ன ? பரத்தைமைத் தொழிலின் மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட நெறிகள் அல்ல ! ஆடவரின் ஆதிக்க வன்முறை வெறிகள் அல்ல ! வறுமை, ஏழ்மை, பசி, பட்டினி, தனிமை, வேலையின்மை, சமூகப் புறக்கணிப்பு, முறிந்த குடும்பம், வன்முறைக் கற்பழிப்பு, கட்டாயத் தொழில் அழுத்தம் போன்ற சமூக இடை யூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன என்று பெர்னாட் ஷா தன் நாடக முகவுரையில் கூறுகிறார்
**********************
நாடக உறுப்பினர்
1. மேடம் மோனிகா வார்ரன் [Mrs. Kitty Warren] (45 வயது)
2. மிஸ் விவியன் வார்ரன் – [Ms. Vivie Warren] மோனிகாவின் ஒற்றை மகள் (வயது : 22)
3. பாதிரியார் சாமுவெல் கார்டுநர் [The Rev. Samuel Gardner] (வயது : 50)
4. பிராங்க் கார்டுநர் [Frank Gardner], விவியனின் காதலன் & சாமுவெல் பாதிரியாரின் மகன் (வயது : 20)
5. வில்லியம் பவல் [Praed] (நடுத்தர வயது) : மேடம் மோனிகாவின் கூட்டாளி
6. ஜார்ஜ் வாலஸ் (Sir George Crofts) (50 வயது) : மேடம் மோனிகாவின் தோழன்.
************************
மேடம் மோனிகாவின் வேடம்
(Mrs. Warren’s Profession)
நான்கு அங்கங்கள்
(மூன்றாம் அங்கம்)
அங்கம் –3 பாகம் –4
இடம்: ஹாஸ்லிமியர், ஸுர்ரி, இங்கிலாந்து
நடந்த ஆண்டு : 1893
பொழுது : அடுத்த நாள் காலை
அரங்க அமைப்பு: பாதிரியார் மாளிகைப் பூந்தோப்பு. உதய சூரியன் முகிலற்ற வானில் தனியாட்சி செய்கிறான். ஃபிராங்க் ஒரு நாற்காலில் அமர்ந்து மர நிழலில் காலையில் வந்த செய்தித் தாளைப் படித்துக் கொண்டிருக்கிறான். தந்தை பாதிரியார் மெல்லத் தள்ளாடிய வண்ணம் மாளிகையிலிருந்து வெளியே வருகிறார். கண்கள் சிவந்துள்ளன. தந்தையும் மகனும் தர்க்கம் புரியும் போது வில்லியம் வருகிறார். எதிர்பாராத விதமாய் மேடம் மோனிகா, மிஸ். விவியன், ஜார்ஜ் வாலஸ் மூவரும் வருகிறார். மிஸ். விவியனும் ஃபிராங்க்கும் தனிமை நாடி உல்லாசமாக இருக்கிறார்.
(சென்ற வாரத் தொடர்ச்சி)
ஃபிராங்க்: உன் தாயை நீ நெருங்கி ஆழ்ந்து நேசித்தால் அவளது உண்மையான அந்தரங்க வாழ்வு உனக்குப் பிடிக்காது. அவளது தற்காலிய நண்பர்களை நீ வெறுப்பாய். நீ அவளோடு தங்கி ஒரே வீட்டில் மன முறிவின்றி வாழ முடியாது. உன் தாய் கெட்டவள் ! அவளோடு நீ சேர்ந்தால் நீயும் கெடுவாய் ! அவளைத் தவிர்த்து நீ தனியாக வாழ். அவளது நிழலாய் வாழ நீ நினைக்காதே !
விவியன்: என் தாய் கெட்டவள் என்று நீ நினைப்பதால் அவளோடு வேறு யாரும் வாழக் கூடாதா ? அவள் தன்னிச்சையுடன் தனித்து வாழ அவளுக்கு உரிமை இல்லையா ?
ஃபிராங்க்: அப்படி எண்ணாதே விவியன் ! அவளது சுதந்திர வாழ்வதை யாரும் தடுக்க மாட்டார். யாரும் அவளைப் புறக்கணிக்கவும் மாட்டார் !
விவியன்: ஒருவேளை நான் என் தாயைப் புறக்கணித்தால் ?
ஃபிராங்க்: [விவியனை நெருங்கி கவர்ச்சியோடு பார்த்து] நீ உன் தாயோடு வாழக் கூடாது ! அதுவே என் வேண்டுகோள். அவள் உன்னையும் கெடுத்து விடுவாள். (கொஞ்சிய வண்ணம்) இப்போது நாம் இந்தத் தோப்பு இலைகளுக்குள் ஒளிந்து கொண்டு கண்ணாம் மூச்சி விளையாடுவோமா குழந்தைகள் போல ?
[விவியன் மீது கனிவாய்ச் சாய்கிறான் ஃபிராங்க்]
விவியன்: [பரிவுடன் தோளில் கிடத்தி] நான் குழந்தைக்குத் தாலாட்டுப் பாட்டு பாடவா ? தூங்கு கண்மணி தூங்கு !
ஃபிராங்க்: [கண்களை மூடிப் பாடுகிறான்]
மேதாவிப் பெண் சிங்காரி யோடு ஊதாரிப் பயல் ஒருவன்
காதல் கூத்தாடிக் களிப்போடு தான் வாழ்வானா ?
கையிலே காசில்லை ! கடன் தருவார் யாரு மில்லை !
விவியன்: [பதில் பாட்டு பாடுகிறாள்]
கோமாளி கூட குடித்தனம் நடத்தப் போறாள் ஒருத்தி
ஏமாளிப் பெண் வெறுவாய் மென்று வருமான மின்றி !
ஃபிராங்க்: [பாடுகிறான்]
சின்னச் சின்ன வீடு கட்டி
சிங்கார வீடு கட்டி
ஒன்னாக வாழ நினைத்தோம் நாமே !
விவியன்: (கனிவோடு) வயதான மனிதர் இப்படித்தான் குழந்தைகள் போல் விளையாடுவாரா ? நான் குழந்தையாய் இருந்த போது இப்படி விளையாட வில்லை. அருகில் வா ! உன் தலை மயிரைக் கோதி விடுகிறேன். அழகான தலை அலங்காரம் !
ஃபிராங்க்: நானும் விளையாட வில்லை. உன்னோடுதான் முதன் முதலில் விளையாடுவது. உன் மடிமேல் தலை வைத்து உறங்கி விடுவேன். எழுப்பாதே என்னை என் கண்மணி !
விவியன்: இப்படியே நம்மினிய பொழுது போகட்டும் !
ஃபிராங்க்: (கூர்ந்து நோக்கி) யாரோ வரும் அரவம் கேட்கிறது ! அந்த வாலஸ் கரடி வருகுது ! நம்மை நோக்கி வருகுது ! நம்மேல் பாயப் போகுது !
[ஜார்ஜ் வாலஸ் வேகமாக வருகிறார்].
ஜார்ஜ் வாலஸ்: [விவியனைப் பார்த்து] உன்னோடு நான் சில நிமிடங்கள் உரையாட வேண்டும் மிஸ். விவியன்.
விவியன்: நிச்சயமாகப் பேசலாம்.
வாலஸ்: ஃபிராங்க் ! நான் தனியாகப் பேச வேண்டும், மிஸ். விவியனோடு ! நீ போ ! உன்னைக் கிறித்துவ ஆலயத்தில் தேடுகிறார்.
ஃபிராங்க்: நான் எங்கு வேண்டு மானாலும் போகிறேன். ஆனால் ஆலயத்துள் மட்டும் போக மாட்டேன். பாபம் செய்தவன் நான் ! ஆலயத்தில் என் பாவத்தைக் கழுவ முடியாது.
என் தந்தையிடம் அதைச் சொல்லி பாப மன்னிப்பு கேட்கப் போவ தில்லை. அவரே பல தவறுகள் செய்தவர் ! குருடனே குருடனை
வழி நடத்த இயலாது. நான் தேவைப் பட்டால் மணி அடி. உடனே வந்து விடுவேன்.
[ஃபிராங்க்: மாளிகைக்குள்ளே போகிறான்]
வாலஸ்: வாலிபக் காதல் மன்னன் மிஸ். விவியன் ! ஆனால் பரிதாபம், கையில் காசு பணம் சிறிதும் கிடையாது இல்லையா ?
விவியன்: அப்படியா நினைக்கிறீர் ?
வாலஸ்: வெறுங்கை மட்டுமல்ல ! காலிப்பை ! வேலை கிடையாது ! கூலி வேலை செய்து பிழைக்க வேண்டும் ! சொத்துக்கள் எதுவும் கிடையாது. எதுக்கும் பயனில்லாதவன்.
விவியன்: அவனுடைய பலவீனத்தை அறிவேன் நான் ஜார்ஜ் !
வாலஸ்: அவன் ஏழையாய் இருக்கிறான். அதனால் என்ன தெரியுமா ? அவன் வறுமைக்குள் நாமும் பிடிபடுகிறோம் மிஸ். விவியன் ! பணம் பணம் தான் ! வறுமை வறுமைதான் !
விவியன்: மிக்க உண்மை மிஸ்டர் வாலஸ் !
வாலஸ்: நானதைச் சொல்ல வரவில்லை ! [அவள் அருகில் அமர்ந்து] நான் சொல்வதைக் கவனமாய்க் கேள் மிஸ் விவியன் ! நான் ஒன்றும் குமரியின் இளங் காதலன் அல்லன் ! ஆனால் இளங் குமரியைக் காதலிப்பதில் விருப்பம் உள்ளவன் !
விவியன்: உண்மையாய் இருக்கலாம் மிஸ்டர் வாலஸ் !
வாலஸ்: நான் நினைப்பதை முடிப்பவன் ! நான் முடிப்பதை நினைப்பவன் ! நான் மதிப்பதை என்ன விலை கொடுத்தும் வாங்குபவன் ! அந்த மாதிரி தனித்துவ மனிதன் நான் ! இப்போது நானோர் இளம் பெண்ணை மணக்க விரும்புகிறேன் ! அதில் வெற்றியும் அடைபவன். அதைப் பற்றி என்ன நினைக்கிறாய் நீ ?
(தொடரும்)
***************
தகவல் :
Based on The Play : Mrs. Warren’s Profession By : George Bernard Shaw, – Plays Unpleasant) (1958)
(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)
(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)
(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)
(d) The Wicked Wit of Oscar Wilde (1997)
(e) http://en.wikipedia.org/wiki/
(f) http://www.enotes.com/mrs-
(g) The Great Quotations Compiled By : George Seldes (1967)
(h) BBC DVD Video Limited – Bernard Shaw’s Mrs. Warren’s Profession Released in August 2006 (109 minutes)
(i) A Guide to the Plays of Bernard Shaw By : C.B. Purdom (1964)
(j) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)
(k) http://www.online-literature.
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (September 28, 2012)
http://jayabarathan.wordpress.
- ஒரு கூட்டம் புறாக்கள்
- பத்மஜா நாராயணன் : மலைப்பாதையில் நடந்த வெளிச்சம்
- ஆலமரத்துக்கிளிகள்
- சும்மா வந்தவர்கள்
- மறதிக்கெதிரான நினைவின் போராட்டம் – உரைகளும் கருத்தமர்வுகளும்
- வெளிநடப்பு
- இந்திய தேசத்தின் தலைகுனிவு
- சென்னையில் நடந்த முதல் வேலை நிறுத்தம்
- கண்ணீரில் எழுதுகிறேன்..
- சிறை
- நான்கு நண்பர்களும் சசிகுமாரும்
- ஓடியது யார்?
- ஒளி-ஒலி ஊடகங்களும் பெண்முன்னேற்றமும்
- காதல் துளி
- மறக்க முடியாத மாமனிதர் – டாக்டர் ஜி.ஜெயராமன்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -4
- பால்வீதி ஒளிமந்தை வெப்ப வாயு முகில் மூட்டத்தில் பதிக்கப் பட்டுள்ளது
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 39) காதலில் அடையாளம்
- தாகூரின் கீதப் பாமாலை – 33 பயணியின் கால்தடம் !
- அண்ணாவின் படைப்புகள் அனைத்தையும் படிக்க
- குரானின் கருவும் உருவும்
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –30
- எங்க வீட்டு தங்க ஊசிகள்…!
- கரிகாலன் இமயத்தில் புலிக்கொடி நாட்டியதாகக் கூறப்படுவது உண்மையா?
- நம்பிக்கை ஒளி! – 1
- நினைவுகளின் சுவட்டில் (101)
- மருத்துவ தொழிலில் தேவை ரண சிகிச்சை
- பத்தி எரியுது பவர் கட்டு
- அக்னிப்பிரவேசம் -3
- வெற்றியின் ரகசியம்!
- கதையே கவிதையாய்! (7) சிங்கமடங்கல் – கலீல் ஜிப்ரான்
- என்னுரை – டாக்டர். ஜி.ஜெயராமன்
- ஜெயபாரதனுக்கான வாழ்த்துக் கவி
- “சொள்ள மாடா! மாத்தி யோசி!”
- பஞ்சதந்திரம் தொடர் 58 – மூன்று ஸ்தனமுள்ள அரசகுமாரி
- அனைவருக்குமான அசோகமித்திரன்!