அக்னிப்பிரவேசம்- 5

This entry is part 20 of 23 in the series 14 அக்டோபர் 2012

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

yandamoori@hotmail.com

தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

 

பாவனா இன்டர் மூன்றாவது வகுப்பில் தேர்ச்சி பெற்றாள். ஏற்கனவே எல்லோரும் எதிர்பார்த்த விஷயம் என்பதால் யாருக்கும் வருத்தம் ஏற்படவில்லை. தொடர்ந்து மேல்படிப்புப் படிக்கும் ஆர்வம் கொஞ்சம் இல்லாமல் போய்விட்டது. வீட்டுப் பொறுப்பு முழுவதும் அவள் தலையில் விழுந்தது. விஸ்வம் வரன் தேடவேண்டும் என்று முடிவு செய்தான். பாவனாவின் அழகிற்கு வரன் கிடைப்பது கஷ்டம் இல்லை என்று நினைத்துவிட்டான்.

ஆனால் பள்ளிக்கூடம், வீடு, இருக்கும் ஊர் இவற்றைத் தவிர வேறு எதுவும் அறிந்திராத விஸ்வத்திற்கு மகளுக்குக் கல்யாணம் பண்ணுவது தான் நினைத்தது போல் அத்தனை சுலபம் இல்லை என்று அனுபவத்தில் தெரிய வந்தது.

மனைவிக்கு கேன்சர் நோய் வந்ததால் கேன்சர் எவ்வாறு பரவுகிறது என்று தெரிந்துகொள்ள முடிந்தது அவனால். ஆனால் வரதட்சிணை என்ற ஜாட்டியம் சமுதாயத்தில் எவ்வளவு வேகமாய், ஆழமாய் பரவியிருக்கிறது என்று தெரியவில்லை.

“மகளுக்குக் கல்யாணம் பண்ண வேண்டும் என்று நினைக்கிறேன். ஏதாவது வரன் இருந்தால் சொல்லுங்கள்’ என்று கேட்டால் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி “வரதட்சணை எவ்வளவு தர முடியும் உன்னால்?” என்பதுதான்.

“என் மகள் ரொம்ப அழகாய் இருப்பாள். படித்தும் இருக்கிறாள். வீட்டு வேலைகளை நேர்த்தியாய் செய்வாள்” என்பான்.

“அதெல்லாம் யாருக்கு வேண்டும்? ஒவ்வொரு மணமகனுக்கும் ரேட் பிக்ஸ் ஆகியிருக்கு.  இனி குமாஸ்தாக்கள், வங்கி அதிகாரிகள், டாக்டர்கள் என்றால் போகப் போக ரேட் அதிகமாகிக் கொண்டே போகும். பெண் அழகாய் இருந்தால் மட்டும் என்னவாம்? அழகை கடித்து விழுங்கப் போகிறோமா?”  என்று சிரித்தார்கள். “வேறு யாரிடமும் இப்படிப் பேசாதே” என்று இடித்துக் காட்டவும் செய்தார்கள்.

ஒரு வருடம் கழிந்த பிறகும் பாவனாவைப் பண்ணிக் கொள்வதற்கு ஒருத்தருமே வரவில்லை. நாட்கள் அதே ரீதியில் கழிந்து போய்க் கொண்டே இருந்தன.

*****

“அருந்ததி! பரபரப்புடன் உள்ளே வந்தான் விஸ்வம்.

“என்ன விஷயம்?” களைப்புடன் திரும்பிப் பார்த்தாள் அருந்ததி. அவள் முகத்தைப் பார்த்ததும் அவன் உற்சாகம் பாதியாகி விட்டது.

“என்னவோ சொல்ல வந்தீங்களே. என்ன?” கேட்டாள் அருந்ததி.

“ஒன்றும் இல்லை. பாவனாவைப் பெண்பார்க்க பிள்ளை வீட்டார் நாளைக்கு வருகிறார்கள்.”

“அப்படியா. மாபிள்ளை பையன் என்ன செய்கிறானாம்?” உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டே கேட்டாள் அருந்ததி.

பாவனா எழுந்து மெதுவாய் வெளியே வந்துவிட்டாள். ஆனால் கதவிற்கு அருகிலே அவள் பாதங்கள் நின்றுவிட்டன. விவரங்களைக் கேட்டுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்.

“வங்கியில் வேலை பார்க்கிறான். சீக்கிரத்திலேயே ஆபீசர் கூட ஆகி விடுவானாம். நம்ப பிச்சுமணிதான் கொண்டு வந்தான் இந்த வரனை.”

“நாளைக்காவது எனக்குக் கொஞ்சம் உடல்நிலை சரியாக இருந்தால் நன்றாக இருக்கும். பிச்சுமணியின் மனைவியை நாளைக் காலையிலேயே வீட்டுக்கு வரச் சொல்லுங்க. அப்படியே ஏதாவது ஸ்வீட், பழங்களை வாங்கிக் கொண்டு வந்து விடுங்கள். கடவுள் கிருபையால் இந்த வரன் முடிந்துவிட்டால் நன்றாக இருக்கும்.”

“நம் பாவனாவுக்கு என்ன குறைச்சல்? கடைந்தெடுத்த தந்தச்சிலை! கட்டாயம் அவர்களுக்குப் பிடித்துவிடும். சரி, நான் வெளியே போய்விட்டு வருகிறேன்.”

தந்தை எழுந்துக் கொள்வதை கவனித்துவிட்டுப் பின்னால் தோட்டத்தை நோக்கி நழுவி விட்டாள் பாவனா. அவள் இதயம் வேகமாக துடித்தது. தன் வாழ்க்கையில் பெண்பார்க்கும் படலம் தொடங்கப் போகிறதா?

பெண்பார்த்தல் நிகழ்ச்சியைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாளே ஒழிய, இதுவரை சுயமாய் அனுபவம் கிடையாது. சுந்தரி எப்போதும் தன் அனுபவங்களைப் பற்றிச் சொல்லி சிரிக்க வைத்துக் கொண்டிருப்பாள்.

சுமார் ஐம்பது பேர் பிள்ளை வீட்டார் வந்துப் பார்த்துக் கூட யாருக்குமே அவளைப் பிடிக்கவில்லையாம். கடைசியில் திருமணமாகாமலேயே நின்றுவிட்டாள்.

ஆனால் தானும் சுந்தரியும் ஒன்றா? தனக்குக் கொஞ்சமோ நஞ்சமோ படிப்பு இருக்கிறது. ஓரளவுக்காவது செலவு பண்ணக் கூடிய தந்தை இருக்கிறார். பாவனா உள்ளே போய் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள். மாசில்லாத அழகு. தந்தை சொன்னது போல் அழகானப் பெண் வேண்டும் என்று விரும்புகிறவர்கள் யாராலுமே மறுக்க முடியாத சௌந்தர்யம்!

பாவனாவுக்கு அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. அவர்களுக்கு எதிரே எப்படி உட்காருவது? எப்படி பதில் சொல்லுவது? எப்படிச் சொன்னால் நன்றாக இருக்கும்? பையனை நேருக்கு நேர் பார்க்கலாமோ கூடாதோ. அதுசரி, எந்தப் புடவையைக் கட்டிக்கொள்வது? தன் நிறத்திற்கு சிவப்பு வண்ணப் புடவை நன்றாக இருக்கும். ஆனால் சிவப்பு வர்ணம் அவ்வளவு நல்லது இல்லையோ? டேஞ்சர் நிறம் என்று நினைத்து விடுவார்களோ. இளம் ரோஜா நிறம் நன்றாக இருக்கும். ஆனால் அது மேனியின் வண்ணத்தில் கலந்து போய்விடும். இனி அவளிடம் எஞ்சி இருப்பது சிவப்பு பார்டர் கொண்ட பச்சை நிறப் புடவை.  ஆமாம், அதுதான் நன்றாக இருக்கும். அதை உடுத்திக் கொண்ட பொழுதெல்லாம் எல்லோருடைய பார்வையும் அவள் மீதே நிலைத்திருக்கும். இந்தச் சமயத்தில் சுந்தரி இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? எல்லாவற்றையுமே அவளே பார்த்துக் கொள்வாள். யோசனையிலேயே பாதி இரவு தாண்டிவிட்டது.

அதற்குப் பிறகு எப்போது தூங்கினாளோ அவளுக்கே தெரியாது.

“இந்தப் புடவை கட்டிக்கொள்” என்று பிச்சுமணியின் மனைவி அடர்த்தியான நீல நிறப் புடவையைக் கொடுத்தாள். அதைக் கட்டிகொண்டதுமே அவள் அழகு இருமடங்காகி விட்டாற்போல் இருந்தது. கூந்தலில் ஒரே ஒரு ரோஜாவை சூடிக் கொண்டாள்.

வெளியே பேச்சுக் குரல்கள் கேட்டன.

“அட! அவர்கள் வந்துவிட்டார்கள் போல் இருக்கு.” பரபரப்புடன் வெளியே போனார் தந்தை.

“அக்கா! மாப்பிள்ளை ரொம்ப ஜோராய் இருக்கிறார். சினிமா ஹீரோ போல் இருக்கிறார். அம்மா, அப்பா, அக்கா கூட வந்திருக்கிறார்கள். ரொம்ப பணக்காரர்கள் போலும். உடம்பு முழுவதும் நகைகள் போட்டுக் கொண்டு இருக்காங்க. அவர்கள் கட்டியிருக்கும் பட்டுப்புடவை ரொம்ப ஜோராய் இருக்கு அக்கா!”

பாவனாவின் மனதில் உத்வேகம் நிரம்பி இருந்தது. வியர்த்துக் கொட்டியது. பல யுகங்கள் கழிந்தாற்போல் இருந்தது. பிறகு பிச்சுமணியின் மனைவி வந்தாள்.

“வாம்மா” என்று உடன் அழைத்துச் சென்றாள். அவள் சொன்னது போல் பாயில் உட்கார்ந்து கொண்டாள்.

“உன் பெயர் என்னம்மா?” கேட்டது ஒரு பெண்ணின் குரல்.

“பாவனா” மெல்லிய குரலில் பதிலளித்தாள்.

“எது வரையில் படித்திருக்கிறாய்?” ஆண் குரல். மணமகனாய் இருக்க வேண்டும்.

“இன்டர் பாஸாகி இருக்கிறேன்.” அரைவினாடி நேரம் கடைக்கண் பார்வையில் பட்ட உருவம் அவள் உடலை புல்லரிக்கச் செய்தது. சினிமா ஹீரோவைப் போல் சிரித்துக் கொண்டிருந்தான்.

“அப்புறம் ஏன் விட்டு விட்டீர்கள்? மேற்கொண்டு டிகிரி படித்திருக்கலாமே?” அந்தக் குரலில்தான் எவ்வளவு கனிவு! எவ்வளவு மரியாதை!

“வீட்டு நிலைமை அனுகூலமாக இல்லை.”

அதற்குப் பிறகு அவர்கள் என்ன கேட்டார்கள் என்றோ, தான் என்ன பதில் சொன்னோம் என்றோ அவளுக்கே தெரியாது.

“இனி நீ உள்ளே போம்மா.” ஹாலை விட்டு வந்துவிட்டாளே தவிர அவள் மனம் அங்கேயே இருந்தது. அவர்கள் என்ன பேசிக் கொண்டு இருக்கிறார்கள்?

“தாம்பூலம் மாற்றிக் கொள்வோம். ஏற்பாடு பண்ணுங்கள்” என்றார் மாமனார்.

“மற்ற விஷயங்கள் எல்லாம்……. என்னால் அதிகமாக கொடுக்க முடியாது. இவளுடைய உடல்நிலை காரணமாக கொஞ்சம்கூட சேர்த்து வைக்க முடியவில்லை.”

“அதையெல்லாம் யார் கேட்டார்கள்? பெண் தங்க விக்கிரகம் போல் இருக்கிறாள். எங்களுக்கு வேறு எதுவும் தேவை இல்லை. பெண் எங்கள் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தால் போதும்” என்றாள் மாமியார்.

“எல்லாம் எங்க மகளின் அதிர்ஷ்டம்.” அருந்ததியின் முகம் மலர்ந்துவிட்டது.

“உங்க அதிர்ஷ்டம் உங்களுடையது அல்ல. எங்களுடையது. எங்க அண்ணியை இன்னொரு தடவை பார்க்கிறேன்.” நாத்தனார் எழுந்து உள்ளே வந்தாள். பாவனா ஜன்னலை விட்டு நகர்ந்து கொண்டாள்.

“எங்களுக்கு உன்னை ரொம்பப்  பிடித்துவிட்டது. உனக்கு அண்ணாவைப் பிடித்திருக்கா? இந்த விஷயத்தை அவனே கேட்டு வரச் சொன்னான்.”

பாவனா வெட்கத்தால் தலை குனிந்தாள்.

“உனக்கு எந்த மாதிரி நகைகள் பிடிக்கும்? எந்த நிறம் பிடிக்கும்? எல்லாவற்றையும் சொல்லிவிடு. நானே செலக்ட் செய்கிறேன். தங்கமாய் இருந்தாலும், பட்டுப் புடவையாய் இருந்தாலும் உன் நிறத்துடன் போட்டிப் போட முடியாது.”’

“அப்படிப் பேசாதீங்க. எனக்கு வெட்கமாய் இருக்கு.”

“அதெல்லாம் முடியாது. உன்னை எப்போதும் இப்படி டீஸ் செய்துகொண்டே இருப்பேன். நாத்தனார் என்றால் சும்மாவா?”

“எனக்கு எந்த நகையும், புடவையும் வேண்டாம். ஒரே ஒரு விருப்பம்தான்.” மறுபடியும் வாய்ப்புக் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம் பாவனாவுக்கு.

“என்ன?” அந்தப் பெண் சீரியஸாய் கேட்டாள்.

“ஒன்றும் இல்லை. அப்பாவைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாது. அவ்வப்பொழுது என்னை பிறந்தவீட்டுக்கு அனுப்பி வைப்பீங்களா? ஒருநாள் இருந்துவிட்டு திரும்பி வந்துவிடுவேன்.”

“அதென்ன பிரமாதம்” என்றாள் அவள் சிரித்துக் கொண்டே.

“அக்கா! அக்கா!” உலுக்கியபோதுதான் விழிப்பு வந்தது அவளுக்கு.

“எவ்வளவு நேரமாய் எழுப்பினாலும் எழுந்து கொள்ளவில்லையே?” தங்கை சொல்லிக் கொண்டிருந்தாள். எழுந்து மளமளவென்று கொல்லைப்புறம் போனாள் பாவனா. பிள்ளைவீட்டார் காலை பத்து மணிக்கு வருவதாய் சொல்லியிருந்தார்கள். ‘விடியற்காலையில் வரும் கனவு பலிக்கும் என்று சொல்வார்கள்.’ நினைத்துக் கொண்டே தயாராகத் தொடங்கினாள் பாவனா.

****

அரசாங்க ஆஸ்பத்திரி..

எந்த ஆஸ்பத்திரியில் முப்பதாண்டு காலமாக நர்ஸ் ஆக வேலை பார்த்து வந்தாளோ, அந்த ஆஸ்பத்திரியில் நோயாளியாய்ப் படுத்திருந்தாள் ஆதிலட்சுமி.

தன்னுடைய இறுதி நேரம் நெருங்கி விட்டதென்று அவளுக்குத் தெரிந்து விட்டது.

“கண்ணா!” என்றாள். மகன் அருகில் வந்தான்.

“உன்னிடம் ஒரு விஷயம் சொல்லணும். இது என் மனதைப் பல ஆண்டுகளாய்த் துளைத்தெடுத்துக் கொண்டே இருக்கிறது. சாகப் போவதற்கு முன்னால் உன்னிடமாவது சொன்னால்தான் என் மனம் நிம்மதி அடையும்.”

“என்னம்மா?” என்றான்.

அவள் சொல்லத் தொடங்கினாள். பதினாறு ஆண்டுகளுக்கு முன்னால் தான் பண்ணிய காரியத்தையும், அதனால் இரு குழந்தைகளின் வாழ்க்கை எவ்வாறு மாறியது என்று விவரங்களைச் சொன்னாள். தொடையில் போட்ட அடையாளத்தையும் சொன்னாள்.

“தெய்வம் என்னைப் பழி வாங்கிவிட்டது. நானே போய் எல்லோரையும் சேர்த்து வைக்கணும் என்று இருந்தேன். ஆனால் என்னையே அழைத்துக் கொண்டு போகிறது அந்த தெய்வம். நீ போய் உண்மை விஷயத்தைச் சொன்னால் தவிர மேல் உலகத்தில் இருக்கும் என் ஆன்மா சாந்தியடையாது.”

“யாரும்மா அவர்கள்?”

“ஒருத்தியின் பெயர் நிர்மலா. அவள் அட்ரெஸ் அடையாரில் சரியாகத்தான் இருக்கு. அந்தப் பெண் சாஹிதியைக் கூட நான் பார்த்திருக்கிறேன். இன்னொருத்தியின் பெயர் அருந்ததி. அவள் அட்ரெஸ்தான் கிடைக்கவில்லை. வீடு மாறிவிட்டார்கள் போலிருக்கு. எப்பொழுதோ பதினாறு வருஷங்களுக்கு முன்னால் நடந்த விஷயம் இல்லையா. அவளுடைய மகளுக்கு பாவனா என்று பெயர் வைத்ததாக நினைவு. கொஞ்சம் விசாரித்து, அவரவர்களின் குழந்தைகளை அவரவர்களிடம் சேர்பித்துவிடு. நான் செய்த பாவ காரியத்திற்கு மனப்பூர்வமாக பச்சாதாபம் அடைகிறேன் என்றும், என்னை மன்னித்து விடச் சொல்லி கேட்டுக் கொண்டதாக சொல்.”

“சரிம்மா. இனி நீ பேசாதே. எதைப்பற்றியும் யோசித்துக் குழம்பாதே. ரெஸ்ட் எடுத்துக்கொள்.”

ஆதிலட்சுமி கண்களை மூடிக் கொண்டாள். அடுத்த ஒருமணி நேரத்தில் அவள் உயிர் பிரிந்துவிட்டது.

******

சொன்ன நேரத்திற்கு இரண்டு மணி நேரம் தாமதமாய் வந்தார்கள் பிள்ளை வீட்டார். அதற்குள் பாவனா மூன்றாவது முறையாக மேக்கப் பண்ணிக்கொண்டாள்.

வந்தவர்களை மரியாதையுடன் வரவேற்று ஹாலில் உட்கார வைத்தான் விஸ்வம். தங்கை கிருஷ்ணவேணி அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உபசரித்துக் கொண்டிருந்தாள். அருந்ததி அருகில் அமர்ந்து கொண்டு அவர்களிடம் குசலம் விசாரித்தாள்.

எவ்வளவு கட்டுப் படுத்திக் கொண்டாலும் பாவனாவுக்கு லேசாக வியர்த்தது. கைக்குட்டையால் ஒற்றிக்கொண்டாள்.

“அக்கா!” உள்ளே வந்தாள் கிருஷ்ணவேணி. ‘மாப்பிள்ளைப் பையன் கொஞ்சம் கூட நன்றாக இல்லை. வந்தவர்களில் யாருமே நன்றாக இல்லை” என்றாள் வருத்தப்பட்டுக் கொள்வது போல். கனவு உலகத்தில் முதல் மேகத்திரை விலகி, வாழ்க்கையில் முதல் உண்மையை வெளிச்சப் படுத்தியது.

“போகட்டும் விடு. அழகாய் இல்லாவிட்டாலும் நல்ல குணம் இருந்தால் போதும்” என்றாள்.

அவள் கண்முன்னால் ஒரு காட்சி நிழலாடியது.

“நான் அழகாய் இல்லை. ஆனால் உனக்காகக் உயிரையும் தருவேன். உன்னை என் கண்ணின் இமையைப் போல் அருமையாய், பொக்கிஷமாய் பாதுகாப்பேன்“ என்று கண்ணீர் மல்கிய விழிகளுடன் வேண்டிக் கொண்டிருந்தான் ஒரு இளைஞன்.

வெளியே ஹாலில் காட்சி வேறு விதமாய் இருந்தது.

திருமணம் முடிவாகும் முன் சம்பந்தி வீட்டில் கையை நனைக்கக் கூடாது என்ற பழமொழியைக் கேள்விப்பட்டது இல்லையோ, அல்லது இந்த இடம் திகையுமோ திகையாதோ,  கிடைத்த வாய்ப்பை நழுவ விடுவதில் விருப்பம் இல்லையோ,. வைத்திருந்த பலகாரங்களை எல்லாம் ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள். காபியும் குடித்து முடித்த பிறகு “இனி பெண்ணை வரச் சொல்லுங்க” என்றார் பிள்ளையின் தந்தை மிடுக்காய்.

“பயப்படாமல் பதில் சொல்லணும் பாவனா. தலை குனிந்தபடியே உட்கார்ந்து கொண்டு இருக்கணும்” போன்ற தேர்வுப் பாடங்களை எல்லாம் கடைசி முறையாய் புகட்டிவிட்டு வெளியே அழைத்துக் கொண்டு வந்தாள் பிச்சுமணியின் மனைவி.

நான்கடி எடுத்து வைப்பதற்குள் பாவனாவின் இதயம் படபடத்தது. அந்த நாளில் அக்கினிப் பிரவேசம் பண்ணும் போது சீதையின் மனம் எப்படி இருந்ததோ தெரியாது. ஆனால் அவள் மட்டும் அந்த நாலடிகளையும் நெருப்பின் மீது நடந்து வந்தாற்போலவே உணர்ந்தாள்.

ஆறு ஜோடிக் கண்கள் அவளை உச்சி முதல் உள்ளங்கால் வரையிலும் பரிசோதித்தன. பெண்ணாய்ப் பிறந்தது தான் பண்ணிய பெரிய குற்றம் என்பது போல், பண்ணிய குற்றத்திற்கு தண்டனைக் கொடுக்கச் சொல்லி வேண்டுவது போலவும் தலைகுனிந்தபடி உட்கார்ந்து இருந்தாள் பாவனா.

“உன் பெயர்?” அது ஒரு பெண்ணின் குரல்தானா என்று வியப்படையும் விதமாய் கர்ணகடூரமாய் இருந்தது.

“பாவனா!”

“என்ன படித்து இருக்கிறாய்?”

“இண்டர் பாசாகி இருக்கிறேன்.”

“எங்கே? ஆம்பிளைப் பசங்க படிக்கும் காலேஜிலேயா?” இது ஆண் குரல். பையனின் தந்தை போலும்.

“இல்லைங்க. பெண்கள் கல்லூரியில்தான்.”

“பிழைத்தோமடா சாமி.” அது ஒரு பெரிய ஜோக்கைப் போல் எல்லோரும் பெரிதாக சிரித்தார்கள்.

“சரி, சமைக்க கிமைக்கத் தெரியுமா? கொஞ்சம் நிமிர்ந்து பதில் சொல்லும்மா.” பையனின் பெரிய அக்காவின் உத்தரவு!

பாவனா மெதுவாய் நிமிர்ந்தாள். “வரும். எல்லாம் செய்வேன்.”

“ஆமாம் பின்னே.” பிச்சுமணி சொன்னார். “அம்மா நோயாளி இல்லையா. செய்யாமல் எப்படி முடியும்?”

பாவனாவின் மனதில் சுருக்கென்றது. பன்னிரண்டு ஆண்டுகளாய் தாய் படுத்தப் படுக்கையாய் இருப்பது உண்மைதான். ஆனாலும் அவள் அவஸ்தை படுவதைக் காண சகிக்காமல் வருந்துவாளே தவிர அவள் ஒரு நோயாளி என்று யாருக்குமே தோன்றியது இல்லை. பாவனா ஓரக்கண்ணால் அவர்கள் பக்கம் பார்த்தாள். அரை டஜனுக்கும் குறையாமல் இருந்தார்கள். குரலில் மட்டுமே இல்லை, உருவத்திலும் கூட கொஞ்சம் கூட நாகரீகமோ, பண்போ தெரியவில்லை.

“எழுந்து நில்லும்மா ஒரு தடவை” என்ற குரலுக்கு பாவனா தந்தையை நோக்கித் திரும்பினாள். எழுந்திரு என்பது போல் கண்ணாலேயே ஜாடைக் காட்டினான் விஸ்வம்.

அவள் மெதுவாய் எழுந்து நின்றாள்.

“கொஞ்சம் தூரம் நடந்துக் காட்டு.”

பாவனாவின் தலையில் சம்மட்டியால் அடித்தாற்போல் இருந்தது. அந்த அதிர்ச்சியிலேயே நான்கு அடிகள் எடுத்து வைத்தாள்.

“அந்த தலைமுடி சொந்தம்தானா? சவுரியா?”

“சொந்தம்தான். பாவனாவுக்கு தலைமுடி நல்ல அடர்த்தி, நீளமும் ஜாஸ்தி.” பக்கத்தில் இருந்த அருந்ததி சொன்னாள்.

“எங்களோடதும் ஒருகாலத்தில் அடர்த்தியாகத்தான் இருந்தது. கல்யாணமாகி குழந்தை குட்டி பிறந்த பிறகு அப்படியேவா இருக்கும்?

ஆமாம். அழகு, தோற்றம்,  ஆரோக்கியம், வயது, பணம் .. எதுவுமே சாசுவதம் இல்லை. ஆனால் கல்யாணம் ஆக வேண்டிய பெண்ணுக்கு மட்டும் இவற்றில் எது இல்லாமல் போனாலும் கஷ்டம்தான்.

இந்த பெண்பார்க்கும் படலம் பெரும்பாலான பெண்களுக்கு சங்கடமாய் தோன்றாது. அது அப்படித்தான் என்ற எண்ணம் மனதில் ஸ்திரப்பட்டு போயிருக்கும்.

பையனின் அக்காக்கள் தம்மை பெண்பார்த்த அனுபவங்களை நினைவு கூர்ந்து கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பாவனா பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

‘மாப்பிள்ளைப் பையன் எதுவுமே கேட்கவில்லை. கேட்கச் சொல்லுங்கள்” என்றார் பிச்சுமணி கல்யாணத் தரகர் என்ற ஹோதாவில்.

“நான் கேட்பதற்கு பாகி என்ன இருக்கிறது? எல்லாம் அவர்களே பங்கு போட்டுக்கொண்டு கேட்டு விட்டார்களே?” என்றான் அவன் சிரித்துக் கொண்டே.

“இனி நீ உள்ளே போம்மா.”

அனுமதி கிடைத்ததுமே பாவனா அறைக்குள் சென்றுவிட்டாள். “நான்கு நாட்களில் செய்தி சொல்லி அனுப்புகிறோம்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள் அவர்கள்.

பிச்சுமணி வாசல்வரை சென்று டாக்சி சார்ஜ் கொடுத்து அனுப்பிவிட்டு உள்ளே வந்தார்.

“விஸ்வம்! அவர்களுக்குப் பெண்ணை ரொம்பப் பிடித்துவிட்டது என்று நினைக்கிறேன்.  சம்மதித்து விட்டாற்போல் தான் பேசினார்கள்” என்றார்.

“ஆனால் பையன் பார்ப்பதற்கு கொஞ்சம் கூட நன்றாக இல்லையே?” என்றாள் அருந்ததி கவலையுடன்.

‘அப்படி நினைத்தால் எப்படி? பையன் கருப்பாய் இருந்தாலும் நல்ல குணம் கொண்டவன். கேட்ட பழக்கம் எதுவும் இல்லை. பெண் அழகாய் இருக்கணும் என்று நினைத்தானாம். அதனால் வரதட்சிணை அதிகமாய் கேட்காமல் சம்மதிக்க வைப்பான் என்று நினைக்கிறேன். ஒரு வருஷமாய் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். பள்ளிக்கூட வாத்தியார் என்ன பெரிசா கொடுத்து விடுவான் என்று எண்ணிக்கொண்டு ஒருத்தன் கூட பெண் பார்க்க வரவில்லை.  அப்படி இருக்கும் போது ஆபீசர் ஆகப்போகும் இந்த பையன் மேல் இல்லையா?” என்றார் சுந்தரம்.

”அந்த நாத்தனார்கள் என்னங்க கொஞ்சம் கூட நாகரீகமே இல்லாமல்..” என்றால் பிச்சுமணியின் மனைவி.

‘பையன் வேலை நிமித்தமாய் வேறு ஊரில் இருப்பான். இவர்கள் எப்போதாவது நாலுநாள் தங்கிவிட்டுப் போவார்களே தவிர சாசுவதமாய் இருந்து விடமாட்டார்கள். எல்லோருமே வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். அந்த விஷயத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை” என்றார் பிச்சுமணி. அதற்குள் அந்த வரன் குதிர்ந்து விட்டாற்போலவே பேசிக் கொண்டார்கள் அவர்கள்.

————————

Series Navigationஎதிர் வினை!உத்தமம் INFITT – உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றத்தின் மாநாடு…
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *