ரசிப்பு எஸ். பழனிச்சாமி
நேற்று காலையில் கண் விழித்த போது, அப்படி ஒரு விசித்திர அனுபவம் ஏற்படும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அன்று முழுவதும் அதைப் பற்றிய நினைப்பே மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருந்தது. இப்போது நினைத்தாலும் நேற்று நடந்தது அப்படியே என் கண் முன்னால் நிற்கிறது.
எங்கள் வீட்டில் எப்போதும் சைவ உணவுதான் என்பதால், ஞாயிற்றுக்கிழமை என்றால் மதிய உணவுக்கு காளான் பிரியாணியோ அல்லது பன்னீர் பிரியாணியோ, அதுவும் இல்லாவிட்டால் காளான் குழம்போ வைப்பது வழக்கமான விஷயம். அதிலும் என் மனைவி வைக்கும் காளான் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும் என்பதால் காலையிலேயே காளான் வாங்க நான் கடைக்கு கிளம்பி விடுவேன்..
ரிலையன்ஸ் ஃப்ரஷ் போன்ற கடைகளில் போய் பொருள் வாங்குவதில் ஒருவகை சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது. அந்த ஏ.ஸி. யும், பொருட்களை தனித்தனியாக அடுக்கி வைத்திருக்கும் விதமும், நமக்குத் தேவையானவற்றை நாமே எடுத்துக் கொள்ளும் வசதியும் மனதில் ஒரு திருப்தியைக் கொடுக்கும். அது மட்டுமல்ல, நம்மைப் போன்ற நடுத்தர வர்க்க மனிதர்கள் நிறையப் பேரை அங்கு பார்க்கலாம். அவர்கள் நம்மைப் பார்க்கும் பார்வையும், நம்மிடம் பேச ஏதாவது வாய்ப்பு கிடைத்தால் அதில் தெரியும் மரியாதையும் நமக்குள் ஒரு கர்வத்தை ஏற்படுத்தும். எல்லோரும் குறைந்தது 200 ரூபாய், 300 ரூபாய் என்றுதான் பில் போடுவார்கள். அதனாலேயே நான் அங்கு போனால் 100 ரூபாய்க்கு குறையாமல்தான் எப்போதும் வாங்குவேன்.
அதற்குக் காரணம், 100 ரூபாய்க்கு குறைவாக வாங்கினால் பில் போடுபவர் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்? என்ற எண்ணம்தான். அதிலும் பில் போடுவது ஒரு இளம் பெண்ணாக இருந்து விட்டால் நம்மை கேவலமாக பார்க்க மாட்டாளா? அது மட்டுமல்ல, நமக்கு அடுத்து பில் போடுவதற்காக வரிசையில் நிற்பவர்தான் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்? அதனால் இருபது ரூபாய்க்கோ முப்பது ரூபாய்க்கோ ஏதாவது வாங்க வேண்டியது இருந்தால் வேறு கடைகளில் வாங்கி விடுவேன்.
நேற்று. காலையில் எழுந்து காபி குடிக்கும் போதே என் மனைவியிடம் சொல்லி விட்டேன், மதியம் காளான் குழம்புதான் வேண்டும் என்று. ஃப்ரஷ்ஷாக காளான் வாங்க வேண்டுமென்றால் ரிலையன்ஸ் ஃபிரஷ் கடைக்குத்தான் போக வேண்டும். அதுவும் காலை 9.00 மணிக்குச் சென்றால் அப்பொழுதுதான் வந்திறங்கிய புத்தம்புதிய காளான்கள் கிடைக்கும். இருப்பதிலேயே நல்லதாக செலக்ட் பண்ணி எடுத்துக் கொள்ளலாம்.
கடைக்கு உள்ளே நுழைந்து காளான் வழக்கமாக வைக்கப்பட்டிருக்கும் இடத்தை நோக்கிச் சென்றேன். ஆனால் அங்கே ஆப்பிள் பழங்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. காளானை வேறு இடத்துக்கு மாற்றி விட்டார்கள் போலும். இது போல் அங்கு அவ்வப்போது மாற்றிக்கொண்டேதான் இருப்பார்கள். கடையின் சிப்பந்தி ஒருவரை அழைத்து காளான் எங்கே இருக்கிறது என்று கேட்டேன். அவர் உள்ளே கையைக் காட்டி “அங்கே இருக்கிறது” என்றார். போய்ப் பார்த்தால் புதிதாக வந்திருந்த காளான்கள் வெள்ளை வெளேரென்று கண்ணைப் பறித்தன.
ஒரு பாக்கெட்டை எடுத்துக் கொண்டு, புதினா, கொத்துமல்லி இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றேன். புதினா ஒரு கட்டும், அப்பொழுதுதான் கொண்டு வந்து வைத்த கொத்துமல்லி ஒரு கட்டும் எடுத்துக் கொண்டு கறிவேப்பிலையை தேடினேன். அது அந்த ரேக்கில் அடியில் உள்ள தட்டில் வைக்கப்பட்டிருந்தது. அங்கே, சுமாராக இருபத்தி நான்கு வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் வஜ்ராசனத்தில் அமர்ந்தது போல் முழங்காலைத் தரையில் மடக்கி உட்கார்ந்து கொண்டு, கறி வேப்பிலைச் செடியை எடுத்து ஒவ்வொரு இலையாகப் பறித்து கையில் உள்ள பிளாஸ்டிக் பையில் போட்டுக் கொண்டிருந்தான்.
எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இது போல் யாரும் செய்வதை அதுவரை நான் பார்த்ததில்லை. அவன் எழுந்தால்தான் நான் கறிவேப்பிலை செடியை எடுக்க முடியும். சரி, கொஞ்ச நேரம் காத்திருப்போம் என்று அவன் பின்னால் நின்றேன். செடியில் உள்ள இலையை மட்டும் பறித்து எடை போட்டால் ரூபாய் மிச்சமாகுமே என்று இப்படி செய்கிறானா? ரொம்பவும் சிக்கனமாக இருப்பவனோ? அதுவும் இவன் வந்து கறிவேப்பிலை வாங்குகிறானே, ஒரு வேளை சுயமாக சமையல் செய்வானோ? அல்லது அம்மாவுக்காக வாங்கிக் கொண்டு போகிறானோ? எப்படி யோசித்தாலும் பதில் கிடைக்கவில்லை.
கொஞ்ச நேரம் கழிந்தது. ஆனால் அவன் எழுந்திருப்பது போல தெரியவில்லை. “கொஞ்சம் முன்னால் நகர்ந்து கொள்ளுங்கள். கறிவேப்பிலை எடுத்துக் கொள்கிறேன்” என்றேன். அவன் கொஞ்சம்கூட அசையவில்லை. எனக்கு அவன் மேல் எரிச்சல் வந்தது. ரொம்பவும் கஷ்டப்பட்டு குனிந்து, கிடைத்த இடைவெளியில் கொஞ்சம் கறிவேப்பிலையை எடுத்து என்னுடைய கூடையில் போட்டுக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தேன். இன்னும் சில பொருட்களை சேகரித்துக் கொண்டு பில் போடும் இடத்துக்குச் சென்றேன்.
இரண்டு இடத்தில் மட்டுமே பில் போட்டுக் கொண்டிருந்தார்கள். அதில் கூட்டம் குறைவான கவுண்டருக்குச் சென்று வரிசையில் நின்றேன். எனக்கு முன்னால் அந்த இளைஞன் நின்று கொண்டிருந்தான். அவன் கறிவேப்பிலையை தவிர வேறு ஒன்றும் எடுக்கவில்லை. அதை எடை போட்டால் சரியாக ஒரு ரூபாய்க்கு இருந்தது. வெறும் ஒரு ரூபாய்க்கு பில்லா? என்று அந்தப் பையனை அதிசயமாகப் பார்த்தேன். பில் போட்ட பெண் “சில்லரையாகக் கொடுங்க சார்” என்று அவனிடம் கேட்டாள். “இரண்டு ரூபாய்தான் இருக்கிறது” என்று கொடுத்தான். மீதி சில்லரை இல்லை என்றாள் அந்தப் பெண். அவன் சரியென்று கிளம்பி விட்டான்.
அவனுடைய செயல் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. சரியாக ஒரு ரூபாய்க்கு எப்படி கறிவேப்பிலை இலையைப் பறித்தான்? அப்படி கணக்குப் பார்ப்பவன் ஏன் மீதி ஒரு ரூபாயை வாங்காமல் போனான்? புரிந்துகொள்ள முடியவில்லை. அடுத்து நான் பில் போட்ட போது, மற்றதெல்லாம் சேர்த்து 140 ரூபாய் பில் ஆனது. நான் எடுத்தது கொஞ்சம் கறிவேப்பிலைதான். ஆனால் அதற்கு ஒரு ரூபாய் நாற்பது பைசா என்று பில்லில் இருந்தது. அந்தப் பெண்ணிடம் கேட்டேன், “இதற்கு முன்னால் வந்த பையன் கொண்டு வந்தது நிறைய கறிவேப்பிலை, அதற்கு ஒரு ரூபாய்தான் பில். ஆனால் எனக்கோ கொஞ்சம் கறிவேப்பிலைக்கு 1.40 ரூபாயா” என்றேன். “அதுதான் அவரிடம் இரண்டு ரூபாய் வாங்கி விட்டேனே” என்றாள் அந்தப் பெண். ஆனால் ஒரு ரூபாய்க்கு பில் பண்ணியதைப் பற்றி வேறு ஒன்றுமே சொல்லவில்லை.
எனக்கோ நேற்று முழுவதும் அதே சிந்தனையாகவே இருந்தது. இன்று ஆபீஸில் வேலை செய்து கொண்டிருந்த போது ரிசப்ஷனிஸ்ட் சியாமளா என்னை போனில் அழைத்து, உடனே ரிசப்ஷனுக்கு வரச்சொன்னாள். அங்கு போனபோது, ‘எம்.டி. யைப் பார்க்க அருண் இன்டஸ்ட்ரீஸ் கம்பெனியின் எம்.டி. வாசுதேவன் வந்திருப்பதாகவும், இப்போது பிஸியாக இருப்பதால் ஒரு பத்து நிமிடம் அவர்களை கான்பரஸ் ஹாலில் உட்கார வைத்து குடிக்க குளிர்பானம் கொடுக்குமாறும் எம்.டி. என்னிடம் சொல்லச் சொன்னதாக’ சொன்னாள்.
வாசுதேவன் ஏற்கெனவே எனக்கு அறிமுகம் ஆனவர்தான். நான் அவரை அழைப்பதற்காக வெயிட்டிங் ரூமிற்குச் சென்றேன். எனக்கு ஒரே ஆச்சரியம்! நான் நேற்று ரிலையன்ஸ் ஃப்ரஷ்ஷில் பார்த்த அந்த கறிவேப்பிலை வாங்கிய இளைஞன், வாசுதேவன் அருகில் அமர்ந்திருந்தான். அவர்களை வரவேற்று கான்பரஸ் ஹாலுக்கு அழைத்துச் சென்றேன். அங்கு உட்கார வைத்து “இன்னும் பத்து நிமிடத்தில் எம்.டி. உங்களை அழைப்பதாக சொல்லியிருக்கிறார், கூலாக ஏதாவது சாப்பிடுகிறீர்களா?” என்று கேட்டேன்.
“கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்” என்றார் வாசுதேவன். நான் பியூனை அழைத்து, இரண்டு கிளாஸில் தண்ணீரும், இரண்டு கிளாஸில் கூல் ட்ரிங்ஸும் கொண்டு வந்து அவர்களுக்கு கொடுக்கச் சொன்னேன். அதை எடுத்துக் கொண்டவர், “இது என்னோட சன் அருண். அருண் இன்டஸ்ட்ரீஸ் கம்பெனியின் டைரக்டர்” என்றார். அதைக் கேட்டவுடன் எனக்கு ஏற்பட்ட வியப்புக்கு அளவேயில்லை. ‘இது போன்ற பதவியில் இருக்கும் ஒரு பணக்காரனா ஒரு ரூபாய்க்கு கறிவேப்பிலை வாங்கினான்? நேற்று நான் பார்த்த சம்பவத்தையே என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் இப்போது அதைப் பற்றி அவனிடம் கேட்க முடியுமா என்ன?
பத்து நிமிடத்தில் எம்.டி., அவர்களை அழைத்து வரச்சொன்னார். அழைத்துக் கொண்டுபோய் அவர் ரூமில் விட்டுவிட்டு வந்தேன். இன்னும் எனக்கு வியப்பு விலகவில்லை. வேலையிலும் கவனம் செல்லவில்லை. அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவர்கள் வெளியே வந்தார்கள். எம்.டி.யும் கூடவே வந்து வாசல் வரை சென்று வழியனுப்பி வைத்தார். பிறகு என்னை அழைத்தார். “சிவராமன், இன்று சாயந்திரம் சோழா ஹோட்டலில் வாசுதேவன் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். நான் இன்று மும்பை செல்ல வேண்டியிருப்பதால் என்னால் அதில் கலந்து கொள்ள முடியாது. என் சார்பாக நீங்கள் அதில் கலந்து கொள்ளுங்கள்” என்றார்.
‘விருந்துக்கு செல்வதால் எனக்காக காத்திருக்க வேண்டாம்’ என்று என் மனைவியிடம் சொல்லிவிட்டு, ஹோட்டல் சோழாவிற்கு கிளம்பினேன்.
அந்த ஹாலில் ஒரு ஓரமாக நீளமான டேபிளில் சாப்பாடு ஐட்டங்கள் சூடேற்றப்பட்டுக் கொண்டு இருந்தன. சின்னச் சின்ன சிக்கன் துண்டுகள் மற்றும் மது கிளாஸ் உள்ள தட்டை கழுத்தில் தொங்கவிட்டபடி சிப்பந்திகள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தனர். எனக்குத்தான் பொழுது போகவில்லை. நான் மதுவையும் மாமிசத்தையும் தொடாதவன். பைனாப்பிள் ஜூஸ் இருக்கிறதா என்று கேட்டு ஒரு கிளாஸ் வாங்கிக் கொண்டு ஒரு ஓரமாக நின்றிருந்தேன். மதுவிற்குப் பின் பஃபே முறையில் விதவிதமான உணவுகள் சாப்பிடலாம். ஆனால் அதுவரை எனக்கு யாரும் கம்பெனி கொடுக்க மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அருண் என்னை நோக்கி வந்தான்.
“நீங்களும் மது அருந்த மாட்டீர்களா?” என்று என்னைப் பார்த்து கேட்டான். “இல்லை. மது அருந்துவதில்லை. மாமிசமும் சாப்பிடுவதில்லை” என்றேன்.
“அந்த மாதிரி இருந்தால் இது போன்ற விருந்துகளில் கலந்து கொள்ளும்போது மிகவும் தர்ம சங்கடமாக இருக்குமே” என்றான்.
“ஆமாம்! ஆனால், உங்களுக்கும் இந்தப் பழக்கமெல்லாம் இல்லாதது ரொம்பவும் ஆச்சரியமாக இருக்கிறது” என்றேன்.
“என்னுடைய கவனமெல்லாம் இப்போது பிசினஸில்தான் இருக்கிறது. என்னுடைய அப்பா ஆரம்பித்த இந்த கம்பெனியை நம்பர் ஒன் கம்பெனீயாக கொண்டுவர வேண்டும். அதுதான் என் ஒரே லட்சியம்” என்றான். அவன் பேச்சு எனக்கு வியப்பை அளித்தது.
“ஆனால் உங்கள் செயல் வித்தியாசமாக இருக்கிறதே, இப்போது நீங்கள் சொல்வதற்கும், நேற்று நீங்கள் செய்ததற்கும் சம்பந்தம் இல்லையே?” என்றேன்.
“எதைச் சொல்கிறீர்கள்?” என்றான் என்னை நிமிர்ந்து பார்த்து.
“நேற்று ரிலையன்ஸ் ஃப்ரஷ்ஷில் ஒரு ரூபாய்க்கு கறிவேப்பிலை வாங்கினீர்களே, அப்போது நான் அங்கேதான் இருந்தேன்” என்றேன்.
“ஓ! அதுவா, அது ஒரு பயிற்சி! போட்டி மாதிரி. அதில் நான் தேறி விட்டேன்” என்றான்.
“பயிற்சியா? என்ன பயிற்சி? ஒன்றும் புரியவில்லையே!” என்றேன்.
“பிசினஸை பெரிய லெவலுக்கு எடுத்துப் போவது பற்றி அப்பாவிடம் அடிக்கடி பேசுவேன். எனக்கு குரு, வழிகாட்டி எல்லாம் என் அப்பாதான். என்னுடைய லட்சியத்தை ஊக்குவிக்கும் விதமாக அவர் சில விஷயங்கள் சொல்வார். எப்படிப் பட்ட சிந்தனையும், மனோபாவமும் இருந்தால் ஒருவன் நினைத்ததை சாதிக்க முடியும் என்று சொல்வார்” என்றான். எனக்கு என்ன சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை. அவனே தொடர்ந்தான்.
“தோல்வியைப் பற்றிய பயம் இருக்கக்கூடாது, மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற தயக்கம் இருக்கக் கூடாது. எந்த ஒரு செயலையும் மிக நுணுக்கமாகத் திட்டமிட்டு செய்ய வேண்டும் என்பது மாதிரி அந்த விஷயங்கள் இருக்கும்” என்றான்.
“அதற்கும் நேற்று நீங்கள் செய்ததற்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டேன்.
“அப்பா சொன்ன தகுதிகள் எனக்கு இருக்கிறது என்பதை நிருபிப்பதற்காக நான் ஒரு சில முயற்சிகளை செய்வேன். அதை சரியாக நிறைவேற்ற முடிந்தால் ஒரு சின்ன சந்தோஷம் கிடைக்கும். அந்த மாதிரி சின்னச்சின்ன வெற்றிகள் நம்மை பெரிய விஷயங்களில் வெற்றி பெறத் தேவையான ஊக்கத்தையும், நம்பிக்கையையும் கொடுக்கும். அப்படித்தான் கறிவேப்பிலை வாங்கியதும். அது போன்ற கடைகளில் ஒரு ரூபாய்க்கு பில் போடுவதற்கும் ஒரு தைரியம் வேண்டுமல்லவா?” என்றான்.
“ஆமாம், அதற்கு மிகுந்த தைரியம் வேண்டும்” என்றேன். “எனக்கு இன்னொரு ஆச்சரியம். அது எப்படி சரியாக ஒரே ஒரு ரூபாய் வருமாறு அதை அளந்து எடுத்தீர்கள்?” என்றேன்.
“முதல் நாளே எங்கள் வீட்டு சமையல்காரர் சுப்பையாவிடம் பத்து ரூபாய்க்கு கறிவேப்பிலை வாங்கிவரச் சொல்லி இலையைப் பறித்து எடை போட்டு பழகினேன். என் முயற்சியைப் பாராட்டி அப்பா என்னைக் கம்பெனியில் டைரக்டராக ஆக்கியிருக்கிறார். அதற்குத்தான் இன்றைய விருந்து” என்றான்.
எனக்கு மலைப்பாக இருந்தது. ஒரு ரூபாய்க்கு கறிவேப்பிலை வாங்க, பத்து ரூபாய்க்கு கறிவேப்பிலை வாங்கி, இலையைப் பறித்து பழகி, பிறகு சரியாக ஒரு ரூபாய்க்கு பில் போட்டு….என்ன ஒரு கணக்கு; என்ன ஒரு துல்லியம். இந்தப் பையன் நிச்சயமாக நினைத்ததை சாதிப்பான் என்று தோன்றியது. “உங்கள் முயற்சியில் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்” என்று அவனுக்கு கை கொடுத்தேன்.
- பஸ் ரோமியோக்கள்
- சாந்த சொரூபியான ஒரு பஞ்சாபி -2
- வாதம் – விவாதம் – ஒரு ஜாலியான அலசல்
- பத்மினி சாகுமளவிற்கு உன்னை நேசித்தாள் சந்திரசோம
- வாயு
- கேளா ஒலிகள் கேட்கிறவள்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -6
- நிழல்
- இடைவெளிகள் – 12: மண்ணும் மனிதர்களும் இடைவெளிகளும்
- நம்பிக்கை ஒளி! (3)
- திருமதி சௌந்தரநாயகி வைரவன் சிங்கப்பூரில் தமிழ் தமிழர் .
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 41) நளினக் குறும்புகள்
- கவிதை
- கிழவனும் கடலும் ஒரு வாசகனின் புரிதலில்
- தாகூரின் கீதப் பாமாலை – 35 கானம் பாடினேன்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : மூலக்கூறு முகிலில் புவிக் கடல்கள் போல் 2000 மடங்கு நீர் ஆவி கண்டுபிடிப்பு
- கைப்பீயத்து என்றால் என்ன?
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –32
- எதிர் வினை!
- அக்னிப்பிரவேசம்- 5
- உத்தமம் INFITT – உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றத்தின் மாநாடு…
- கதையே கவிதையாய்! (9)
- மன தைரியம்!