அக்னிப்பிரவேசம் – 6

This entry is part 19 of 21 in the series 21 அக்டோபர் 2012

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

yandamoori@hotmail.com

தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

பாவனாவுக்கு சுந்தரி எழுதுவது,

பாவனா! எப்போதும் க்ஷேம சமாசாரங்களை விசாரித்துவிட்டு  கடிதத்தைத் தொடங்கி, நலமாய் இருக்கிறேன் என்று நாலு வரிகளுடன் முடித்து விடுவதாக கோபித்துக் கொண்டு கடிதம் எழுதியிருந்தாய். என்னைப் போன்றவர்களுக்காக அரசாங்கம் கார்ட் விலையை ஏற்றவில்லை. ஆனாலும் அந்த சொற்ப தொகைக்காக, பத்து தடவைக் கேட்டு வாங்க வேண்டிய நிலையில் உள்ள நான் அடிக்கடி கடிதம் எப்படி எழுதுவேன்?

சம்பளம் தேவை இல்லாமல் வேளா வேளைக்கு எல்லாவற்றையும் செய்து தரும் மனைவி, தலையில் பணமூட்டையை வைத்துக் கொண்டு வருவாள் என்று சில ஆண்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று நீ படித்து இருப்பாய்.

அந்தந்த நேரத்திற்கு எல்லாம் செய்து தருவதற்கு வேலைக்காரியாய் உழைக்க தோதாய் இருப்பாள் என்று சில ஆண்கள் தங்கைகளுக்குக் கல்யாணம் செய்து வைக்க மாட்டார்கள். இதை நீ எங்கேயுமே படித்திருக்க மாட்டாய். என் அண்ணன் இந்த இரண்டையுமே செய்து விட்டான். மனைவியை சந்தோஷப் படுத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை அன்று அவள் சமையல் அறைக்கு வந்துவிட்டால் போதும் ‘லீவு நாளாவது கஷ்டப்படாமல் இருக்கக் கூடாதா. இப்படி வந்து உட்கார்’ என்று இரக்கம் காட்டுவான். குழந்தைகளை என்னிடம் விட்டுவிட்டு மனைவியுடன் சினிமா, டிராமா என்று ஊர் சுற்றுவான். நாளுக்கு பதினெட்டு மணி நேரமும், வாரத்தில் ஏழு நாட்களும் உழைக்கும் எனக்கு ஒய்வு தேவையில்லை. அவள் ஒருநாளைக்கு ஏழு மணிநேரம், வாரத்தில் ஆறு நாட்களும் கஷ்டப்பட்டால் கை நிறைய சம்பளம் வரும். ஆனால் எனக்கு தபால் கார்ட் வாங்கித் தருவதற்காக பத்துதடவை யோசிப்பார்கள்.

வீட்டில் உனக்கு வரன் பார்க்கிறார்கள் என்று தெரிய வந்தது. உன் தந்தையின் மீது உனக்கு எவ்வளவு அன்பு என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் தாய் தந்தை சாசுவதம் இல்லை. தங்கப்பதுமையாய் இருக்கும் உன்னை யாராக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு பண்ணிக் கொண்டு விடுவார்கள். போய் சுகமாய் இரு. அவனையும் சந்தோஷமாக வைத்துக்கொள். என் அனுபவத்தைக் கொண்டு சொல்கிறேன். பெண்ணுக்குக் கணவனின் வீட்டைப் போன்ற பாதுகாப்பான இடம் வேறு இல்லை.

அவன் அழகானவனாய், பணம் காசு படைத்தவனாய் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. மனைவியாய் உரிமையை சம்பாதித்துக் கொண்டு விட்டாயானால் போதும். வாழ்க்கை செட்டில் ஆகிவிட்டாற்போல் தான். நீ படித்து வேலைக்கு செல்பவளாக இருந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். ஆனால் இப்போது இந்த விதமாய் சந்தோஷப்பட்டுக் கொள்வேன். விரைவில் கல்யாணப் பத்திரிகையை அனுப்பி வைப்பாய் என்று எதிர்பார்க்கிறேன்.

சுந்தரி

கடிதத்தைப் படித்து முடித்துவிட்டு கவலையுடன் உட்கார்ந்திருந்தாள் பாவனா. வாழ்க்கையில் செட்டில் ஆன பிறகு கணவனிடம் சொல்லி சித்திக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். சுந்தரியின் நிலைமை நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டே போகிறது.

அவள் அந்த யோசனையில் ஆழ்ந்திருந்த போது விஸ்வம் பரபரப்போடு உள்ளே வந்தான். எப்போதும் போல் ‘குடிக்கத் தண்ணியைக் கொடு’ என்று கேட்கவில்லை. முகத்தில் முறுவல் கூட இல்லை. நேராக அருந்ததியிடம் போனான். பாவனா சந்தேகமடைந்தவளாய் போய் கதவு அருகில் நின்று கொண்டாள்.

‘வரதட்சிணை இருபதாயிரம், நாத்தனார் நான்கு பேருக்கும் பத்தாயிரம் சீர் வரிசை, பையன் வெளி ஊரில் வேலையாய் இருப்பதால் வீட்டிற்குத் தேவையான பர்னிச்சர், பாத்திர பண்டம் எல்லாம் வாங்கிக் கொடுத்தால் போதுமாம். எல்லாம் சேர்த்து எழுபதாயிரம் ஆகும் என்று பிச்சுமணி கணக்குப் போட்டான். என்ன செய்வது?”

“அவ்வளவு பணமா? எங்கிருந்து கொண்டு வருவீங்க? இப்போதே என் மருத்துவச் செலவுக்காக நிலத்தை அடமானம் வைத்திருக்கீங்க.”

“ஆமாம். இருக்கும் நான்கு ஏக்கரில் இரண்டை விற்றாலும் கடன் போக இருபதாயிரம் மிஞ்சுமோ என்னவோ. ஆபிசில் கடனுக்கு மனு போட்டு இன்னொரு இருபதாயிரம் வாங்க முடியும். அதுக்கு மேல் என்னால் முடியாது என்று சொல்லச் சொன்னேன்.”

“பெண்ணை பையனுக்கு ரொம்பவும் பிடித்திருக்கு. கொஞ்சம் குறைத்துக் கொள்வார்களோ என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்களேன்.”

“லாபம் இல்லை. அறுபது, எழுபது ரோக்கமாகவே தருகிறோம் என்று க்யூவில் நிற்கிறார்கள் அங்கே. அவர்களுக்கு நம் பெண்ணின் அழகு ஒரு பொருட்டு இல்லை.”

“சரி, விட்டுத் தள்ளுங்க. பையன் எப்படியும் பார்க்க நன்றாகவே இல்லை. வேறு வரன் பார்ப்போம். எதற்கும் வேளை வரணும்” என்றாள் அருந்ததி.

“அதுவும் உண்மைதான்.”

சம்பந்தம் தவறிப் போனதில் பாவனாவுக்கு வருத்தமும் இல்லை. சந்தோஷமும் இல்லை. திரும்பவும் காத்திருத்தல்.

*****

ஐந்தாவது முறை பெண்பார்க்கும் நிகழ்ச்சி. ஒரு வருட காலத்தில் நான்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சிகள் நடந்து முடிந்த அனுபவத்தால், இந்த முறை எந்தப் பயமும், சங்கோஜமும் இல்லாமல் போய் விட்டது. அவர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் தலை குனியாமல் பதில் சொன்னாள். அன்றைக்கு வந்தவர்கள் ரொம்ப பணக்காரர்கள். சொத்து எவ்வளவு அதிகமாய் இருந்தால் வரதட்சிணை அவ்வளவு அதிகமாய் கொடுக்க வேண்டியிருக்கும் என்று விஸ்வம் அவர்களை வரவேற்பதற்குக் கூட தயங்கினான். ஆனால் அவர்களுக்கு வரதட்சணை தேவையில்லை. பெண்ணின் ஜாதகம் போருந்தி விட்டது என்று தெரிந்ததுமே அவனுள் உற்சாகம் ஏற்பட்டுவிட்டது. தாமதம் ஆனாலும் நல்ல வரன் கிடைத்ததற்கு மகிழ்ந்து போனான். பாவனாவைப் பார்த்துவிட்டால் அவர்களால் மறுத்து விட முடியாது என்ற நம்பிக்கை அவனுக்கு. வந்தவர்களும் திருப்தி அடைந்து விட்டாற் போல்தான் தென்பட்டார்கள். அருந்ததி கூட உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு அவர்களுக்கு அருகில் உட்கார்ந்து இருந்தாள்.

பெண் பார்த்தல் முடிந்துவிட்டது. பாவனா உள்ளே போய்விட்டாள்.

“நீங்க தவறாக நினைக்கவில்லை என்றால் பெண்ணுடன் ஒரு வார்த்தை தனிமையில் பேசணும்” என்றாள் மாப்பிள்ளையின் பெரிய அக்கா.

“பரவாயில்லை. உள்ளே போங்க” என்றாள் அருந்ததி.

அறைக்குள் நுழைந்த இரு பெண்களையும் பார்த்துவிட்டு எழுந்து நின்றாள் பாவனா.

“என்னம்மா, என் தம்பியை உனக்குப் பிடித்திருக்கா?” சிரித்துக் கொண்டே அருகில் வந்தாள் அவள்.

பாவனா மேலும் வெட்கமடைந்தாள். ‘தூது அனுப்பியிருப்பானோ? என்னுடன் தனியாய் பேச விரும்புகிறானோ?’ என்று எண்ணிக் கொண்டாள் தனக்குள்.  இவ்வளவு நாட்களுக்குப் பிறகு அவள் கனவு பலிக்கப் போகிறது என்று தோன்றியது.

ஒருத்தி எழுந்து போய்க் கதவைச் சாத்தி விட்டு வந்தாள். பாவனாவுக்கு ஏனோ பயமாக இருந்தது. ‘இதேன்னது? பேச வேண்டும் என்றால் கதவைச் சாத்துவானேன்?’

“ஒன்றும் இல்லையம்மா. இதற்கு முன்னால் ஒரு பெண்ணைப் பார்த்தோம். சிவப்பாய், அழகாய் இருந்தாள். ஆனால் அப்புறம்தான் தெரிந்தது, அந்தப் பெண்ணுக்கு ஏதோ தோல் நோய் இருந்த விஷயம். அதனால்தான் ஒருமுறை உடைகளை நீக்கிக் காட்டும்மா, பார்த்து விடுகிறோம்.” அவள் மிகச் சாதாரணமாய் மெதுவாய் எடுத்துச் சொன்னாள். ஆனாலும் அவளுடைய ஒவ்வொரு வார்த்தையும் துப்பாக்கிக் குண்டாய் வெடித்தது. பாவனாவின் மேனி சிலிர்த்தது. ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது.

“வெட்கப்படத் தேவையில்லை. நாங்களும் பெண்கள்தானே.”

“எனக்கு எந்த நோயும் இல்லைங்க” என்றாள் மிரண்டு போனவளாய். வெளியில் சென்று தந்தையிடம் சொல்லக்கூட முடியாத நிலை.

“பயப்படவேண்டியது எதுவும் இல்லை. எல்லாம் முடிவாகி விட்டாற் போலத்தான். எங்கள் திருப்திக்காக. எங்க அப்பாவின் சந்தேகத்தை தீர்த்து வைப்பதற்காக.”

பாவனாவுக்கு என்ன பண்ணுவதென்றே புரியவில்லை. அம்மாவிடம் சொல்லிவிட்டுத்தான் உள்ளே வந்திருக்கிறார்கள். தாய், தங்கையின் முன்னிலையில் கூட புடவையை மாற்றிகொள்ளும் பழக்கம் அவளுக்கு இல்லை. இப்பொழுது முன்பின் அறியாத பெண்களுக்கு முன்னால், அவர்கள் தன் உடலை சோதிக்கும் போது தான் பொம்மையைப் போல் நிற்க வேண்டுமா? சீ.. இதேன்னது? எல்லாம் முடிந்த பிறகு இதை மறுத்துவிட்டால் வேண்டாம் என்று சொல்லி விடுவார்களோ? அப்பொழுது தான் பச்சாதாபம் அடைய வேண்டியிருக்குமோ. என்ன வேண்டுமானாலும் ஆகட்டும் என்று எண்ணிய பாவனா ஒவ்வொரு உடையாய் அவிழ்க்கத் தொடங்கினாள். அவள் வேறு விதமாக நினைக்கக் கூடாது என்று சிரித்தபடி பேசிக்கொண்டே இருந்தார்கள்.

ஐந்து நிமிடங்களின் வேலை முடிந்து விட்டது. அவர்கள் திருப்தியுடன் தலையை அசைத்தார்கள். பாவனா உடைகளை அணிந்து கொண்டாள். அவளுக்கு ஏனோ அந்தச் சமயத்தில் தனக்கும் ஒரு வேசிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று தோன்றியது.

“எல்லா விதத்திலும் பிடித்து விட்டது. சமையல், வீட்டு வேலைகள் எல்லாம் செய்வாயாமே. தையல், பூவேலைபாடு எதுவும் கற்றுக் கொள்ளவில்லையா?”

“அம்மாவுக்கு உடல்நிலை சரியாய் இல்லை. அதனால் வேறு எதுவும் கற்றுக்கொள்ள நேரம் கிடைக்கவில்லை. எல்லா வேலைகளையும் நான்தான் செய்யணும்.”

“ஆமாம், உங்க அம்மாவுக்கு என்ன உடம்பு?”

பாவனா தயங்கினாள். அருந்ததிக்கு கேன்சர் என்று தெரிந்து நிறைய சம்பந்தங்கள் பின்வாங்கி விட்டன. அதனால் யாரிடமும் அவர்கள் அதைப்பற்றி கேட்டால் தவிர சொல்லுவதில்லை.

ஆனால் வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் சேர்ந்து இருக்க வேண்டியவளாயிற்றே! அவளால் எப்படி போய் சொல்ல முடியும்?

“கேன்சர்! திடீரென்று வலியால் துடித்துப் போய் விடுவாள். சமையல் செய்ய முடியாது.”

‘அப்படியா? இந்த விஷயத்தை தரகர் சொல்லவே இல்லையே?” இருவரும் வெளியே போய் விட்டார்கள். பாவனா பயந்தபடி ஜன்னல் அருகில் போய் நின்றுகொண்டாள்.

அவர்கள் தந்தையை உலுக்கி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

‘அதெல்லாம் ஒன்றும் இல்லைங்க. கடைசி பையன் பிறந்த போது சின்ன ஆபரேஷன் நடந்தது. அதைச் சரியாக செய்யாததால் உள்ளே இன்ஃபெக்ஷன் ஆகிவிட்டதாம். அது கேன்சரில் கொண்டு போய் விட்டுவிட்டது. இந்த விஷயம் எங்களுக்குத் தெரிய வருவதற்குள் தாமதமாகி விட்டது. ஆபரேஷன் செய்து கருப்பையை எடுத்து விட்டார்கள்.”

மனைவியின் உடம்பைப் பற்றி யாரிடமும் இதுபோல் விளக்கம் சொன்னதில்லை விஸ்வம். கேட்டுக் கொண்டிருந்த பாவனாவுக்கு துக்கம் பொங்கி கொண்டு வந்தது.

“செய்தி சொல்லி அனுப்புகிறோம்.” அவர்கள் போய் விட்டார்கள். அவர்களின் பதில் புரிந்துவிட்டது.

அருந்ததி சலனம் இல்லாமல் அப்படியே உட்கார்ந்து விட்டாள். பாவனா ஓட்டமாய் ஓடிவந்து அவள் மடியில் தன்னைப் புதைத்துக் கொண்டாள். கரடு கட்டிய துக்கம் உருகிக் கண்ணீராய் வெளியேறிக் கொண்டிருந்தது.

“என்னைப் போன்ற துரதிர்ஷ்டசாலியின் வயிற்றில் பிறந்ததற்கு உனக்கு இது தான் தண்டனை. குழந்தைகளின் படிப்புக்கும், கல்யாணத்திற்கும் கூட என் உடல்நிலை தடையாய் இருக்கும் என்று தெரிந்திருந்தால் அப்போதே தற்கொலை பண்ணிக்கொண்டு இருப்பேன்.” அவள் கண்களிலிருந்து பொலபொல வென்று கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.

“அதில்லை அம்மா.. அவங்க… அவங்க..” பாவனா  தேம்பிக்கொண்டே நடந்ததை எல்லாம் சொன்னாள். வந்தவர்களை வழியனுப்பி விட்டு உள்ளே வந்து கொண்டிருந்த விஸ்வத்தின் செவிகளில் இவ்வார்த்தைகள் விழுந்தன.

பாவானாவும், அருந்ததியும் குமுறிக் குமுறி அழுது கொண்டிருந்தார்கள்.

அவனோ சிலையாய் நின்றுவிட்டான்.

(தொடரும் )

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 36 யார் ஊக்குவது என்னை ?தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் வைகறை என்ற சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட இருக்கிறது.
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *