நான் ரசித்த முன்னுரைகளிருந்து…. 1. இராஜாஜி – வியாசர் விருந்து.

This entry is part 10 of 21 in the series 21 அக்டோபர் 2012

நான் ரசித்த முன்னுரைகளிருந்து……
—————————————————
1. இராஜாஜி – வியாசர் விருந்து.
=========================

– வே.சபாநாயகம்.

“கானார் இமயமும் கங்கையும் காவிரியும் கடலும் நானாநகரமும் நாகமும் கூடிய நன்னிலமான” நமது பாரத நாட்டில் தோன்றிய முனிவர்களும், ஞானிகளும், பக்த கவிஞர்களும் வாயிலில் காத்திருக்கிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். அவர்களை வாயிலில் காக்கச் செய்துவிட்டு நாம், உத்தியோகஸ்தர்களையும் பணக்காரர்களையும், இன்னும் அற்பர்களையும் காணவேண்டி, அவர்களது வாயிலில் காத்துக்கொண்டு நிற்கிறோம். இது என்ன மடமை! நான் புதிதாகச் சொல்லவில்லை. ஒரு பெரிய ஆங்கில மேதாவி இப்படி ஆங்கில மக்களுக்கு ஒருசமயம் சொன்னார். அதையே நானும் எடுத்துச் சொல்லுகிறேன். நமக்கென்று பாரத நாட்டில் மிகப்பெரிய முனிவர்களும் ஞானிகளும் தோன்றித் தங்களது இதயங்களைக் கடைந்தெடுத்து அமுதத்தைத் தர நிற்கிறார்கள். அதை விட்டுவிட்டுப் பயனற்ற பொருட்களை நாடி அலைந்து காலம் கழிக்கிறோம்.

நம்முடைய இதயத்துக்குள் தினமும் குருக்ஷேத்திரம் நடைபெறுகிறது. நல்ல எண்ணங்கள் ஒருபுறம் நிற்க, பாப எண்ணங்கள் மற்றோரு பக்கம் நம்மை இழுத்துச் செல்கின்றன. பாரத யுத்தமே இந்தப் போராட்டத்துக்கு உருவகமாக வைத்துக் கவி பாடினார் என்று நம்முடைய இதிகாசங்களை வெறும் பஞ்சதந்திரக் கதைகளாகச் சிலர்
வியாக்கியானம் செய்து சமாதானம் சொல்லி வருகிறார்கள். நம்முடைய புனிதப் புராணங்களையெல்லாம் வெறும் உருவகங்களாகவும் ஈசாப் கதைகளாகவும் செய்து விடுவது எனக்குச் சம்மதமில்லை. உருவகங்களைக்கொண்டு நாம் பிழைக்க முடியுமா? கண்ணனும் பார்த்தனும் சீதையும் அனுமனும் பரதனும் பூஜைக்குரிய உயிர் கொண்ட உண்மை மூர்த்திகள். வெறும் கதா பாத்திரங்களல்ல. பெரியோர்களையும் பெற்றோர்களையும் வீர புருஷர்களையும் பார்த்து அவர்களை பின்பற்றுவது ஒரு விதம். பரதனையும் சீதையையும் பீமனையும் பின்பற்றுவது உயிர்கொண்ட முன்னோர்களைப் பின்பற்றுவது போல! கங்கையினின்றும் காவேரியினின்றும் தாகத்துக்குத் தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த ஆறுகள் குடிதண்ணீர் சாதனங்கள் மட்டும் அல்ல. ஜீவநதிகள், வணங்கவேண்டிய தெய்வங்கள்.

தருமம் நியாயம் இவற்றைக் காண்பது எளிது. கடைப்பிடித்தல் அரிது. கண்டதைக் கடைப்பிடிப்பதற்கு வேண்டிய ஆற்றல் சிலருக்கு உண்டு; சிலருக்கு இல்லை. திருதராஷ்டினன் அந்த ஆற்றல் இல்லாமல் துன்பத்தில் மூழ்கினான். திருதராஷ்டினன் பட்ட துயரத்தைப் படித்து, அறிவோடு ஆற்றலும் நமக்குக் கொடுக்கவேண்டும்
என்று நாம் கடவுளை இறைஞ்ச வேண்டும்.

தரும சங்கடங்களில் சிக்கி எந்தக் கடமையைச் செய்வது எதை விடுவது என்று தீர்மானிக்க முடியாமல் பலர் பலவிதமாக நடந்து கொள்வார்கள். நாம் அவர்களைக் குறைகூறல் ஆகாது. இதற்கு எடுத்துக்காட்டு:
கும்பகர்ணன் செய்தது ஒரு விதம், விபீஷன் செய்த்து மற்றொரு விதம். தருமம் பெரிதென்று ஒருவன் நினைத்தான். அண்ணனுக்குச் செய்ய வேண்டிய கடமையே பெரிதென்று ஒருவன் நினைத்தான். பீஷ்மரும் கும்பகர்ணனும் தங்கள் பிழைப்புக்குப் பிராயச்சித்தமாக உயிரைத் தந்தார்கள். அப்படிச் செய்வதற்குத் துணிந்தவர்களே தருமத்தைப் புறக்கணிக்கக்கூடும். இப்படியெல்லாம் நாம் அறிவு பெறுவதற்காகவும், உள்ளத்தின் அழுக்கைப் போக்கிக் கொள்வதற்காகவும் புராணங்களும் நம்முடைய புனித நதிகளும் உயிர் கொண்டு ஓடுகின்றன. அவற்றில் குளிப்போமாக!

சென்னை
18-12-56 – சக்கரவர்த்தி ராஐகோபாலாச்சாரி.

Series Navigationகதையே கவிதையாய்! (10)வாக்கியமொன்று தானாய் உள்புகுந்தது….. திராவிட மொழிகளின் கவிதைச் சங்கமம்
author

வே.சபாநாயகம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *