“அக்னி வெடிகள் & பட்டாசுகள்” இரத்தச் சிவப்பில் எழுத்துக்கள் சூரிய ஒளியில் மின்னிக் கொண்டிருந்தன. முதலைப்பட்டி கிராமத்திலேயே பெயர் பெற்ற பட்டாசு ஆலையில் நானும் ஒன்று என்ற கர்வம் அந்தப் பெயர்ப் பலகையின் பிரகாசக் கம்பீரமே சொல்லிவிடும்.
பட்டாசு ஆலைக்குள் இருக்கும் அறைக்குள்ளே தொழிலாளர்கள் வெகு மும்முரமாக இயந்திர கதியில் பட்டாசுகளை அடுக்கி அட்டைப் பெட்டிக்குள் திணித்து லேபிள் ஒட்டி, டேப் போட்டு மூடி விற்பனைக்குத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களை அவ்வளவு துரிதமாக வேலை செய்ய ஊக்கம் அளித்துக் கொண்டிருந்தது
அங்கிருந்த ஒருவரின் கைபேசி வானொலிப் பாடல்.
“கன்னித் தீவு பொண்ணா…கட்டெறும்புக் கண்ணா….
கட்டுமர துடுப்பப் போல இடுப்ப ஆட்டுறா…இவ..
கள்ளுப்பான உடம்பக் காட்டி கடுப்ப ஏத்துறா…மத்தாப்புப் போல….” என்று அலறி ஆடவருக்கு சூடேற்றிக் கொண்டிருந்தது.
டேய்…வேலு..இன்னும் முத்து வரலியாடா வேலைக்கு..? நானும் பார்க்கறேன்..ஒரு வாரமா லேட்டா தான் வரான், வெள்ளென போயிற்றான்..பெரியையாவுக்குத் தெரியுமாடா இது…? தெரியாதுன்னு வெச்சுக்க…தெரிஞ்சுச்சுன்னா அம்புட்டுத்தேன்…மாப்ளைக்கு மஞ்சத் தண்ணி ஊத்திறுவாரு…! ஒரு குரல் சந்தோஷித்தது.
ஆமாடா மச்சி…! பக்ரித் பக்ரியோட சேர்த்து நிக்க வெச்சுருவாருல்ல. ஆனாலும் இந்த முத்துவுக்கு இம்புட்டு தெகிரியம் எங்கிட்டிருந்துதான் வந்திச்சோ. அவன் பாட்டுக்கு வாரான்…அவன் பாட்டுக்குப் போறான். நம்மால முடியுமா..? பெரிசு சிம்ம அவதாரம் எடுத்து தலைய தரையில உருட்டிருமே. இது வேலு…!
ஏய்…..வேலையைப் பாருடா…அதான் நல்ல பாட்டு ஓடுதில்ல…இப்பப் போயி என்னாத்துக்கு அந்த முத்துப் பயலோட பேச்சு. பாவம்..அதுவே அனாதை…நம்ம மாதிரி மேஜரா..? தெகிரியமா வேலை பார்க்க…பயந்து பயந்து ரூமுக்குள்ளே அடைஞ்சு கெடக்கோணம் . இது இன்னொரு குரல்.
அதெல்லாம் உள்குத்து…இருக்குற சமாச்சாரம்….நமக்கெதுக்குங்கற
இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போதே வெளியே வந்து நின்ற டாட்டா சுமோவின் ஹாரன் சத்தம் முதலாளி வந்துவிட்டார் என்ற அபாய சங்கை ஊதியது.
டேய்…டேய்…பெரியையா…வந்து
அடுத்த நொடி அந்த அறை ஆடி அடங்கி நிசப்தத்தில் மயான மௌனம் கடைப்பிடித்தது.
வண்டியிலிருந்து இறங்கிய பெரியய்யா பாண்டியன் பெருமிதத்தோடு தனது கத்தி மீசையை நீவி விட்டுக் கொண்டே “ய்க்கு …ய்க்கு .ய்க்கு ….”என்று கனத்த கனைப்பு சத்தம் கொடுத்த படியே கம்பீரமாக அவரது பட்டாசு ஆலைக்குள் பாதம் வைத்து பணியாளர்கள் வேலை செய்யும் அறைக்குள் நுழைகிறார்.
இந்தா….வேலு…! போன வாரம் சரவெடி லோடு போச்சே….சேர்ந்ததாத் தகவல் வந்துச்சா? இன்னைக்கு லோடுக்கு எல்லாம் ரெடியா இருக்கா? எம்புட்டு தரம் சொல்றேன்..எனக்கு ஒரு ஃபோனைப் போட்டு எந்நேரம் ஆனாலும் சொல்லுடான்னு…!
ஆமாங்கய்யா….”இப்பத் தான் சொல்லணும்னு நெனைச்சேன்…அதுக்குள்ளாற நீங்களே வந்துட்டீங்க…! அந்த லோடு போயி டெலிவரி ஆயிடுச்சிய்யா. இப்போ புது லோடு ரெடியாயிட்டிருக்கு. மதியம் போயிடும்யா . கணக்குப் பிள்ளகிட்ட கணக்கைக் கொடுத்திருக்கேன்யா.
அட…ஆமா..எங்கடா அந்த முத்துப் பயலக் காணோம்..நான் வரும்போதெல்லாம் இருக்க மாட்டேங்கறான். போன லோடு சரவெடி எல்லாம் அவன் தான செஞ்சது…? செக் பண்ணித் தான அனுப்பின..?
ஆமாங்கய்யா…இங்க சீக்கிரமா வேலைய முடிச்சுபோட்டு பைண்டிங் பிரஸ்ல பார்ட் டைமா வேலை பண்றா ப்புலய்யா…நோட்டுப் புத்தகம், டயரி எல்லாம் பண்றதா சொன்னான். நான் சொன்னதா சொல்லிப்புடாதீங்க.
எங்கிட்டுப் போறான்….?
நம்ம பெரிய தெரு படையாச்சி அண்ணனில்ல…அவரோட புத்தக பைண்டிங் பிரஸ்க்கு…போறான்யா.
அம்புட்டுத் தூரம் தெனாவெட்டாகிப் போச்சா….அவனுக்கு. எம்புட்டு நாளா இது நடக்குது?
ஒரு வாரமாத்தேன் பெரியையா.
அட நீயுமாடா களவாணிப் பயலே….ஒரு வாரமா முழு பூசணிக்காய சோத்துல மறைச்சி வெச்சுருக்கே…வாயில என்ன உருளைக்கிழங்கா வெச்சிருக்கே . கூட்டுக் களவாணிப் பயலுவளா…அவரு பார்ட் டைம் பாக்குறாராம்.இவரு அவரு வாயைப் பார்குறாராம்….இருங்கடா…நான
அங்கு முத்துவின் பூட்டிய அறையைப் பார்த்து…”இருடா…உன்னிய கொத்தாப் புடிச்சாந்து இந்த ரூமுக்குள்ளே
போட்டு மூடறேன். பெறவு தான் உனக்கு புத்தி வரும். நினைத்த வேகத்தில் கிளம்பினார். அவர் மனதுக்குள் முத்து ஆலையில் இட்ட கரும்பாகப் சக்கையாகிக் கொண்டிருந்தான்.அவரது அறிவுக்குள் முத்து விஸ்வரூபமாகத் தெரிந்தான். எலேய்…முத்து….உன்ன….உன்ன
நீ என் கைக்குள்ளார இருக்குற வரைக்கும் தானடா நான் நிம்மதியா கவலையில்லாம இருக்கலாம். உன் வேகம் இங்கன எவனுக்கு இருக்கு? அதானே நானே அடக்கி வெச்சுருக்கேன். அவரது மனசு உண்மையை சொல்லிப் பார்த்தது.
O O O O O O O O O O O O
பெரியகடைத் தெரு படையாச்சி புத்தக பைண்டிங் பிரஸ் அறையில்….
கட்டுக் கட்டாக கட்டிங் மெஷினில் வெட்டி வந்த வெள்ளைக் காகிதங்களை எண்ணிக்கையில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான்..முத்து.
அருகில் இருந்த ராமன், கட்டிங் மெஷினுக்குள் வெள்ளைத் தாள்களை நுழைத்து சீராக்கிய படியே, முத்து…உனக்குத் தான் படிப்புன்னா உசிருன்னு சொல்றியே பெறவு உனக்கெதுக்கு இந்த வேலையெல்லாம் பேசாமப் பள்ளியோடம் போயி படிக்கிற வழியப் பார்ப்பியா….இந்த வயசுல இங்க வந்து நின்னுக்கிட்டு…எனக்கெல்லாம் படிப்பே வராது….அதான் நான் காகிதம் கிழிக்கிற உத்தியோகம் பார்க்கறேன்..!
என்று விரக்தியில் சிரிக்கிறார்.
ராமண்ணே, நான் எட்டாப்பு படிக்கேலத் தான் கட்டிக் குடுத்த எங்கக்கா புருஷன் மேற்கொண்டு தொழில் தொடங்கப் ஒரு லட்சம் பணம் கொண்டுட்டு வந்தாத்தேன் என் கூடச சேர்ந்து வாழலாமுன்னு சொல்லிட்டு எங்க ஊட்டாண்ட கொண்டுட்டு வந்து விட்டுட்டு போயிட்டாரு.செண்பகக்கா அளுதுகிட்டு நின்னுச்சு. எங்கம்மாவும் அப்பாவும் என்ன செய்யுறதுன்னு வெளங்காம பெரியையாக்கிட்ட பேசி என் அக்காவையும் அங்கனயே வேலைக்கு சேர்த்து விட்டாக. பெறவு நீ மட்டும் என்ன படித்து அரசு வேலைக்கா போவப் போறேன்னு சொல்லி, பெரியையாக்கிட்ட கெஞ்சிக் கூத்தாடி அவர்கிட்டயே எனக்கும் வேலைக்குக் கேட்டாக. அவரு பையன் வயசு கம்மி..வேலை தரமாட்டேன்னு சொல்லி பிகு பண்ணிக்கிட்டாரு. பெறவு அம்மா கூலியைக் கம்மியாத் தந்தாப் போதும்னு சொல்லவும் வேலை கொடுத்தாரு. அன்னிக்கு வெடி மருந்தைத் தொட்டவன் தான்..ஆனால் சரவெடி செய்யுறதுல எண்ணிய அடிச்சிகிட ஆளே இல்ல தெரியுமா? இப்போ இங்க செவவகாசில சும்மாக் கில்லி விஜய் மாதிரி..பிரிச்சி மேய்ஞ்சிடுவேன். ஆனா…என்ன ஒரு ஆசை…படிப்பு போயிடுச்சேன்னு அதான் இப்படி பிரஸ்ல வேலை செஞ்சாச்சும் நோட்டுப் புத்தகத்துக்கும் எனக்கும் ஒரு உறவு வெச்சுக்கிடலாம்னு தான் அண்ணாச்சிகிட்ட கெஞ்சி இங்க வேலைக்கு சேர்ந்தேன்.
2005 யிலண்ணே ….பெரியையாவோட பழைய பட்டறையில வேல பார்த்துக்கிட்டிருக்கும்போது நான் லோடு புக்கிங் பண்ணப் போனவரோட கூடப் போயிருந்தேன்….அந்நேரம் பார்த்து பெரிய வெடி விபத்து..அம்மா..அப்பா அக்கா மூணு பேருமே செத்துப் போயிட்டாக. மொத்தம் எழுபது பேரு.அதுல இவைகளும் சேர்ந்தது…கரிக்கட்டையாத் தான் அவுங்கள பார்க்க முடிஞ்சிச்சி. பெறவு வவுத்துப் பசி…படிப்பும் வேணாம் மண்ணும் வேணாம்னு எனக்குத் தெரிஞ்ச புரிஞ்ச தொழில் இது மட்டும்தான்னு என்னை அனாதை ஆக்கிய அதேத் தொழில் கிட்டயே நானும் அடைக்கலம் ஆகிட்டேன்…அதெல்லாம் ஒரு கதைண்ணே . பெரியையா மூணு வேளையும் வவுறு பசிக்காம சோறு போட்ருவாரு. அந்த விசுவாசம் தான்….இன்னும் அங்கனயே கெடக்கேன்.அதையும் மீறி அங்கிட்டிருந்து “செத்த பணம் ” வரவேண்டியதிருக்குண்ணே .
அப்பிடியாடா….ஏண்டா முத்து….அதுக்குதேன் அரசு அதுல செத்த அம்புட்டு பேத்துக்கும் லட்ச லட்சமா பணம் தந்துச்சே. அவரைக் கூட அரெஸ்ட் பண்ணி ஜெயிலுக்கு அனுப்பி வெச்சு கொஞ்ச நாள் களி துன்னாரே ? அப்பவாடா….அதையாடா சொல்றே நீயி…!
ஆமாண்ணே…அதே தான்..! ஜெயில்லேர்ந்து வெளில வர்ரதெல்லாம்அவுகளுக்கு சினிமாத் தியேட்டர்லேர்ந்து வெளிய வர்ரது மாதிரி தாண்ணே .
நான் அப்போ மைனர்…மேஜாரான பெறவு பாஸ் புக்குல வரும்னு சொல்லிட்டாரு.அதும் இல்லாம செண்பகம் அக்கா அங்கன வேலையே செய்யலையின்னு ஒரே போடா போட்டுப்புட்டாரு. கலியாணம் கட்டிக் கொடுத்த உன் அக்கா இங்க எப்படிடா வேலை பார்பாள்னு என்னை மடக்கிப் போட்டாரு. “நீயும் இங்க வேலை பார்க்குறேன்னு யாருகிட்டயாச்சும் சொல்லி வெச்சா…பெறவு…உன்னையவும் மண் சட்டிக்குள்ளாரதான் அடைச்சி வெச்சிருவேன்னு சொல்லி பயமுறுததினாரு .
நான் செத்தா அளுகக் கூட யாருமில்லாத அனாதை தான்..அதான் அவுராப் பார்த்து என்ன தாராரோ தரட்டுமுன்னு
அவர் காலடியில நாயா சுத்திகிட்டு இருக்கேன். அவருக்கு இருக்குற பண பலம்…இன்சூரன்சு எல்லாம் வெச்சு வேற புதுக் கம்பெனி ஆரம்பிச்சுட்டாரு. இப்போ பிசினெஸ் ஓஹோன்னு போகுதுண்ணே ..ஏற்றுமதி கூட ஆகப் போகுதாம்..சின்னய்யா சொல்லுவாரு.
பயங்கரப் பார்ட்டிண்ணே ….டேஞ்சரான ஆளு..! அதாண்ணே நான் மொத்த பட்டாசுப் பட்டறைக்கே ஆப்பு வைக்கோணமின்னிட்டு போன வாரம் நான் செஞ்சு பார்சல் கட்டின 2000 வாலா சரவெடி டப்பாக்குள்ளார….!
என்னடா சொல்றே முத்து…அதுக்குள்ளார…எதுனா அணுகுண்டு வெச்சு அனுப்பிட்டியா….நீ பாட்டுக்கு அந்தாளு மேல இருக்குற கடுப்புல ஏடாக் கூடமா எதுனா செஞ்சு கடைசீல மாமியார் வீட்ல நிரந்தரமா மாட்டிக்கிடாதடா..!
அடப் போண்ணே….நீ வேற…ஒரே நேரத்துல என்னப் பெத்தவங்கள , கூடப் பொறந்தவள கரிக்கட்டையாப் பார்த்தவன் நான்.அப்பிடியெல்லாம் ஒரு நிலைமை என் எதிரிக்குக் கூட வரக்கூடாதுன்னு நினைப்பேன்.
இது முத்து வழி….! தனி வழி..! பொறுத்திருந்து தான் பாருங்களேன்…என்னிக்காச்சும் நான் நினைக்கிறது நடக்காட்டி என் பேரு…..
டேய்…டேய்…நிப்பாட்றா….யா
பின்னாலிருந்து எலேய்…முத்துவாடா நீயி…! இங்கிட்டு உட்கார்ந்து என்னத்த வெட்டுற….? ஈடுபட்ட பயலே…என்னியவே ஏமாத்தப் பாக்குறியா? தொலைச்சுப் புடுவேன்…நடடாப் பட்டறைக்கு…! பளார்…பளார் என்று முதுகில் விழுந்த அரையில் திணறி, திமிறிக் கொண்டு எழுந்த முத்து சிறிதும் எதிர் பாராமல் தன முதலாளியை அங்கே பார்த்ததும்…. ஐயா…மன்னிச்சுகிடுங்கய்யா…இ
எதுத்தாப் பேசுறே…அனாத நாயே….உனக்கென்னாத்துக்கு இம்புட்டு ஏத்தம்…மூணு வேளை சோறு போட்டு இருநூறு ரூபா என்கிட்டே வாங்கிட்டு எனக்கேத் துரோகம் பண்றியா.விளங்காத பயலே..!
தன்னோட முதலாளிக்கும் மனிதாபிமானத்திற்கும் இருக்கும் இடைவெளியை முத்து நன்றாகவே தெரிந்து வைத்திருந்தான்.
ஐயா…நான் அண்ணாச்சிகிட்ட சொல்லிபோட்டு சம்பளத்த வாங்கியாறேன்….நீங்க போங்க..நான் வந்திர்றேன்.
என்னடா சம்பளம் பிசாத்து சம்பளம்..இது பெரிய ராஜராஜ சோழனோட அரண்மனை கஜானா இருக்குற எடம் பாரு….! அவரு அப்பிடியே வாரிக் கொடுத்துடுவாரு….இவரு வாங்கி அயல்நாட்டுல கம்பெனி தொறக்கப் போறாரு….அப்பிடியேப் போட்டேன்னா….என்று சொல்லிக் கொண்டே ஓங்கித் தலையில் ஒரு தட்டு தட்டவும்,
தடுமாறினான் முத்து. போறேங்கய்யா ….என்றபடியே விருட்டென்று வெளியில் ஓடுகிறான் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் கூடத் ததும்பாமல் வறண்டு கிடந்தது. அவன் மனம் முழுதும் வலித்தது.
முத்து பெரியையாவின் கையால் அடிபட்டே வளர்ந்தவன் தான் இருந்தாலும் இப்போதெல்லாம் அடி வலிப்பதில்லை.அது நேராக அவனது இதயக் கல்வெட்டில் ஆணிபோல நிகழ்ச்சியைச் செதுக்கி வைக்கிறது .இப்படிச் செதுக்கிச் செதுக்கியே அவனது இதயம் ஒரு இரும்புக் கோட்டையை உருவாகிக் கொண்டிருந்தது.
விறு விறு வென்று ஆத்திரத்துடன் பட்டறைக்கு நடந்தவன் பெரியையாவின் அறையைத் தாண்டி தனது தனி அறைக்குள் போய் முடங்கிக் கொள்கிறான். அவனைச் சுற்றிலும் வெடி மருந்துகள், பாக்கிங் தாள்கள், பசைகள் என்று நெடி அவனது குடலைப் பிரட்டி எடுத்தது.பழக்கப் பட்ட வாசனை தான்…ஏனோ… இன்றைக்கு
அதே வெடி மருந்தின் வாசம் அவனை பின்னோக்கி விரட்டியது.
ஆரம்பத்தில் அவனது அம்மா…”இதப் பாருங்க தெனம் என் மவன் மாவுமில்லுக்காரன் மாதிரி வாரான்…வாடா ராசா தண்ணியூத்தி களுவி விடறேன்….என்று வாஞ்சையாக கூப்பிட்டு நன்கு தேய்ச்சு குளிப்பாட்டி விடுவாள்.
ஆத்தா…இம்புட்டுக்கும் நீ தான் காரணம் . நான் பாட்டுக்கு பள்ளியோடம் போய்க்கினு இருந்தேன். என்னிய நீ தான் இப்படி வேலையில சேத்து விட்டு இப்போ வேடிக்கை பார்க்குறியான்னு கத்துவான்.
என் ராசா…உன் அருமை பெரியையாவுக்கு நல்லாவே வெளங்கும் . என்ன வெளிய காட்டிகிட மாட்டாரு…அம்புட்டுத்தேன். நான் சொல்லுதேன் கேளு உனக்கு ராசாக் கெணக்கா எதிர் காலம் காத்துக் கெடக்கு.
அம்புட்டு ஏன்…நம்ம பெரியையாக் கூட சின்னப் புள்ளையா இருந்தப்ப உன்ன மாதிரி வேலை பார்த்தவிருதேன்.
சின்ன வயசுல கஷ்டப் பட்டா பெருசானதும் ஒக்காந்து துண்ணலாம் ..!
அப்போ…நீங்க ரெண்டு பெரும் சின்ன வயசுல கஷ்டப் படாம ஒக்காந்து தின்னீங்களா ? சாதாரணமாகக் கேட்டு விட்டு வெளியில் போய் வானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பான்.பின்பு ஒரு வெள்ளைத் தாளில் ஏதோ எழுதி ஆத்தா,….இதைப் படிக்கிறேன்…புரியுதாப் பாரேன்…என்பான்…!
டேய்…என்னடாது….நேரமாச்சுடா ஓடுடா பட்டறைக்கு…லேட்டாப் போனா முதலாளி முதுகைப் பேத்துருவாரு ..என்ற அம்மாவின் பயமுறுத்தல் குரல்…அவசரப் படுத்தும்.
இவனும் தான் எழுதிய கவிதையை சுருட்டி வீசி எறிந்து விட்டு பட்டறைக்குப் பறப்பான்.
“நரகாசுரனை ஒரு நாள்
நீங்கள் நினைப்பதால்
உங்களுக்கு ஒரு நாள் தீபாவளி…
உங்களையே நரகாசுரனாய்
நாங்கள் தினமும் நினைப்பதால்
தான் எங்களுக்கு தினம்
தினம் பட்டாசுடன் தீபாவளி…
உங்க சந்தோசம் எங்க துக்கம்…”
அவன் எழுதிய கவிதை காற்றில் சுருண்டு புரண்டு குப்பைத் தொட்டியை எட்டிச் சிரிக்கும் !
பெரியையா அடித்து அனுப்பிய ஆற்றாமையில் பழைய நினைவுகளும் நெஞ்சத்தை கனமாக்க முத்து வைராக்கியத்தோடு ஆபத்தான இரசாயனப் பொருளை எடுத்து அவசர அவசரமாக இன்னைக்கு எப்படியும் நூறு வெடி தயார் செய்து அந்தாளு முன்னாடி காட்டறேன்…நாளைக்கு ஆரம்பிச்சுக் கிடலாமின்னு நெனச்சேன்……என்று எண்ணியவன்…விறு விறுவென்று லாவகமாக வேலையில் இறங்கினான் முத்து. இந்த ரசாயனத்தின் நெடி அதன் அபாயத்தை அவனுக்கு பயமுறுத்தியது.
திடீரென வாசலில் நிழலாடவும்…முகத்தை நிமிர்த்திப் பாத்தா முத்து….அவன் வயதை ஒத்த முதலாளியின் மகன் அங்கே ஜீன்ஸ் பாண்ட்டும் டீ ஷர்ட்டுமாக சினிமாக்காரன் கணக்கா நிற்பதைப் பார்த்ததும்…மனசுக்குள் லேசாக ஒரு பொறாமை எட்டிப் பார்க்க மீண்டும் தலையைக் குனிந்து வேலையில் மும்முரமானான்.
டேய்…முத்து….நான் மேலப் படிக்க சிங்கபூரு போகப் போறேன்….இந்தா இந்த ஃபைலப் பிடி..ஓடிப் போயி இதுல இருக்குறத ரெண்டு காப்பி செராக்ஸ் பண்ணிட்டு வந்துரு. சீக்கிரம் ஓடு .
சின்னையா….உங்கப்பா நான் இந்த எடத்த விட்டு நவுந்தா என்னிய வைவாரு. அதும் இந்த இரசாயனத்தை இப்பத் தான் எடுத்தேன்….முடிக்க அரைமணி நேரமாகும்.
டேய்….அப்பா இங்கன தான் இருக்காரு…நீ போயிட்டு வா நான் சொல்லிக்கிறேன்..எனக்கு சீக்கிரம் போகணும்டா..! குடுடா நான் வேணா மீதியை அடைக்கிறேன்…!
அய்யய்யோ…வேணாம் சின்னையா….ரொம்ப டேஞ்சர்.
அடப் போடா…! எங்க பட்டறையில வேலை செஞ்சுட்டு எனக்கே நீ இல்லன்னு சொல்வியா..?
வேணாம்ணே ..இது டேன்ஜர் …அதான்….இந்த எடத்துல தப்பித் தவறிக் சிகரெட்டுப் பிடிக்கக் கூடாது….உங்களுக்குத் தெரியாததா..? நீங்கள் இங்கிட்டு வாசல்ல நில்லுங்க..நான் ஓடிப் போயிட்டு ஓடியாந்துறேன்……கொடுங்க அதை என்று ஃ பைலை வாங்கியவனை….
டேய்…நீ ரொம்ப ஓவராப் போய்கிட்டு இருக்கே…என்கிட்டே மிதிபடுவே…என்கிட்டயே உன் ஷோக்கைக் காமிக்கிறியா? ஓட்றா ….மடையா….!
சின்னையாவின் எகத்தாளமான குரலுக்கு அடங்கிய முத்து …நேராக பெரியையா அறையை நோக்கி
விரைகிறான். சின்னையா சொன்னால் கேட்க மாட்டாரு ரொம்பவும் பிடிவாதக் காரர் . எதுக்கும் ஒரு வாரத்தை பெரியையாகிட்ட சொல்லிட்டு போவலாம்.
ஐயா…சின்னய்யா வந்திருக்காரு…இதக் கொடுத்து எல்லாம் நகல் எடுத்தாரச் சொல்றாரு..நான் போகவா…?
எலேய்…..இந்த லொள்ளு தானே வேணாங்கறது…பிரஸ்சுக்கு சொல்லாமக் கொள்ளாமப் போகத் தெரியிது…
இதுக்கு என்கிட்டே என்ன வந்து கேட்டுகிட்டு நிக்கிற. போ…போ…சொன்னத செய்யி….எல்லாம் நான் போயி பார்த்துக்கறேன்…என்ற பெரியவர் தோளில் இருந்த துண்டை உதறியபடியே எழுந்தார். வேலு…..லோடு கிளம்பிருச்சா…? என்ற அவரின் குரல் கணீரென ஒலித்தது.
ஆச்சுங்கய்யா…..இப்பத்தான் வண்டி கிளம்புது…நானும் லாரி எடை மேடை வரைக்கும் போயிட்டு வந்திறேன்யா…!
என்று குரல் கொடுத்தான் வேலு.
சின்னையாவின் “அப்பாச்சி பைக்” அவன் உள்ளிருப்பதற்கு சாட்சியாக ஒரு மரத்தடியில் சாய்ந்து நின்று காத்துக் கொண்டிருந்தது.
தூரத்தில் காலில் செருப்புக் கூட இல்லாமல் முத்து “நகல்” எடுக்க எட்டி நடை போட்டுக் கொண்டிருந்தான்.
O O O O O O O O O O O O O
சென்னையில் பிரம்மாண்ட பில்டிங்கில் பத்தாவது மாடியில் இயங்கும் பன்னாட்டு வர்த்தக நிறுவனத்தின் முனைவர் ராஜேஷ் தனது டேபிள் மேலிருந்த 2000 வாலாக்கள் சரவெடிப் பாக்கெட்டை தட்டியபடியே…அவரது அசிஸ்டன்டிடம் “லுக் திஸ் சந்துரு….இந்த தீவாளி செலெபிரேஷனுக்கு நம்ம ஸ்டாஃப்ஸ் எல்லாருக்கும் ஒரு கிலோ ஸ்வீட்டும் இந்த மாதிரி ஒரு சரவெடி டப்பாவும் தரலாம்னு பிளான் பண்ணியிருக்கேன்….இது ஜஸ்ட் சாம்பிளுக்கு வாங்கியது. நல்லா வெடிக்குதான்னு டெஸ்ட் பண்ணணும் . எதுக்கும் பிரிச்சு ஒரு ஒன் ஹவர் வெய்யில்ல வைக்க சொல்லி சொல்லுங்க ஹவுஸ் கீப்பிங் கிட்ட…இதுக்கு ஒரு பட்ஜெட் தயார் பண்ணி கொடுங்க ஆர்டர் கொடுக்கணும்….தீவாளிக்கு இன்னும் டூ வீக்ஸ் தானே இருக்கு….என்றார்.
குட் ஐடியா சர்…நானே ஓபன் பண்ணிப் பார்க்கிறேன் என்று சொன்னதோடு அந்த அட்டைப் பெட்டியில் மேலுறையைக் கிழித்துத் திறக்க அங்கே….ஒரு செந்நிற நாகக் குட்டிப் பாம்புகள் அடங்கிக் கிடப்பது போல சரவெடிகள் சுருண்டு கிடந்தன. அதன் நடுவில் துருத்திக் கொண்டு ஒரு நான்காக மடிக்கப் பட்ட வெள்ளைத் தாள்…என்னவாக இருக்கும் என்று அதை உருவிப் பிரித்ததும்….முத்து முத்தான கையெழுத்தில் நீண்ட கடிதம்…மேற்கொண்டு படிக்கும் ஆவலைத் தூண்டியது.
ஸார் …! என்று சந்துரு அந்தக் கடிதத்தை முனைவர் ராஜேஷிடம் நீட்ட…அவர் அதை அலட்சியமாக வாங்கிப் படிக்க ஆரம்பிக்கிறார்.
அன்புள்ள அண்ணனுக்கு,
இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்கும் போது அனேகமா நான் உயிரோடு தான் இருப்பேன் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. அதுக்குக் காரணம் பட்டாசுத் தொழிலில் வேலை செய்யுற யாருக்குமே வாழ்க்கை நிரந்தரமில்லை. என்றாவது ஒருநாள் அந்த உடல்கள் எரிந்து சாம்பலாகிப் புகைந்து போகும் ! நீங்க லக்ஷ்மி வெடியில் நெருப்பு பத்த வெச்சிட்டு விலகி நின்னு அது எப்போ வெடிக்கும்னு காதைப் பொத்திக்கிட்டு காத்துக்கிட்டு நிப்பீங்க….அதிலிருந்து தீப்பொறி உங்களை பயம் காட்டிகிட்டே இருக்கும்..அதுபோலத் தான் எங்க நிலைமையும்.
இதே தொழிலில் 2005 ஆம் ஆண்டு நடந்த வெடி விபத்துல என் அம்மா, அப்பா, ஒரே அக்கா ன்னு என் குடும்பமே ஒரே நேரத்துல எரிந்து கருகிச் செத்துப் போனாங்க. ஏதோ ஒரு காரணத்துக்காக நான் அதிர்ஷ்டவசமாப் பொழைச்சிருக்கேன். அதோட காரணம் இப்போ எனக்குப் புரியுது. ஒரே நாளில் அனாதையான எனக்கு இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை பேரும் உறவுக் காரங்க மாதிரி தான் நினைக்கத் தோணுது.
என்னை மாதிரி எத்தனையோ பேர்களின் வயித்துப் பசியைப் போக்குவது இந்தப் பட்டாசுத் தொழில் தான்.வெடி செய்து வெடி செய்து நாங்களும் வெடி மருந்து கணக்காத்தேன் இருப்போம். அதுதான் விதின்னு என்னால இருக்க முடியலைண்ணே .நான் ஏழாப்பு வரிக்கும் படிச்சவன். விதி என்னும் தெரு என்னை இழுத்துக் கொண்டு வந்து நிப்பாட்டின எடம் தான் இதுன்னு நான் ஏன் அங்கனயே நிக்கணும்.? ஏன் புடிக்காத இந்தத் தொழிலில் உழன்று உயிர் விடணு ம் . இந்தப் பட்டாசு பண்றதை விட நோட்டுப் புத்தகம் செய்யும் பொது மனசு சந்தோஷப் படுது.
இந்த வெடியை, பட்டாசை புஸ்வானத்தை நீங்க ஏன் வாங்கோணம் ..? நீங்க யாருமே வாங்கலீன்னா இதை யாருமே தயாரிக்க முன்வர மாட்டாங்க.ஆயிரக்கணக்கா நாங்க தொழிலாளிங்க இங்க முதலாளிங்க கிட்ட அடிமையாய் கிடந்தது செய்யும் பட்டாசுங்க இதெல்லாம். அதுல பூரா பூரா…எங்க ஆற்றாமை, இயலாமை,கஷ்டங்கள்,வெறுப்பு, துயரங்கள்,இதெல்லாம் தான் நாங்க.. மருந்தா…அடைத்து வைக்கிறோம்.
அதெல்லாம் தான் உங்க வீட்டு வாசலில் வெடிக்கும் போது உங்களுக்கு சந்தோஷமா இருக்கு…!
இதுல ஒரு வருஷம் வித்தாலே போதும் மூணு வருஷம் உட்கார்ந்து திங்கிற அளவுக்கு லாபம் கிடைப்பது எங்க முதலாளிக்குத் தான்.ஆனால் தொழிலாளியான எங்களுக்கு நோய், நொடி, அல்லது வெடிப்பில் உயிரிழப்புதான்..!
இந்தத் தொழில் இல்லையினா இன்னும் வேற நல்ல தொழிலே எங்களுக்குக் கைகொடுக்கும். இங்கே இருந்து
செத்துப் போனா அரசு ஒரு லட்சம் , ரெண்டு லட்சம்னு நஷ்ட ஈடு வழக்கமா தரும். அந்தப் பணத்தை வாங்கும்போது “செத்தப் பணம்” ன்னு தான் மனசுக்கும் தோணும். அதே…அவங்க உயிரோடு இருக்கறப்ப எங்கள மாதிரி ஏழைங்களுக்கு பண உதவி கிடைத்தால் ஒரு இட்டிலிக் கடை வைச்சாவது நிம்மதியாப் பொழைப்போம்.
நாங்க யாருமே இந்த அபாயத் தொழில் பக்கம் போக மாட்டோமே.
எங்கள மாதிரி எத்தனை பேர் படிக்கும் ஆர்வம் இருந்தும் படிக்கச் முடியாமல் தவிக்கிறோம். நீங்க கஷ்டப் பட்டு உழைத்த பணத்தைக் கொண்டு வெடி வாங்கி அதை ஒரு நிமிஷத்துல குப்பையா மாத்தாமல் ஒரு ஏழைச் சிறுவனை தத்தெடுத்து அவன் படிக்கவும், நன்கு உடுத்தவும் வழி செய்து தீபாவளி வாழ்த்து சொல்லிப் பாருங்கள்.
அவன் உயிர் சிரிக்கும் ஓசையில் உங்கள் மனம் ராக்கெட் போல சந்தோஷத்தில் எகிறும்.
இங்கிருக்கும் அனைத்துப் பட்டாசுப் பட்டறையும் மூடி எல்லாம் கல்வி பயன்பாட்டு தொழிலாக மாறினாலும் எங்கள் கஷ்டங்கள் தீரும்.அதற்கு உங்களைப் போன்றோர்கள் தான் பட்டாசு வாங்காமல் உதவ வேண்டும்.
பட்டாசுகளை வாங்கவே வாங்காதீங்க..இனிமேட்டு வெடியே வெடிக்காதீங்க…!யாருமே ஏறெடுத்துப் பார்க்காத ஒரு விஷயம்..மண்ணோடு அழிந்து போகும்.ஒவ்வொரு தீபாவளியின் போதும் எத்தனை எத்தனை உயிர்ப் பலிகள்…அதனால் எத்தனை உயர் வலிகள் ..! இன்னும் நடந்துக்கிட்டுத் தானே இருக்கு.
சாவுக்கும் எனக்கும் அதிக தூரமில்லை. நித்தம் என் அருகில் எமதர்மன் காத்துக் கிடக்கிறார்ன்னு தான் சொல்லணும் .
உங்களுக்கெல்லாம் நரகாசுரன் இறந்ததை மகிழ்வாகக் கொண்டாடும் திருநாளாக…தீபாவளி..! ஆனால் எங்களுக்கோ…நீங்களே நரகாசுரன்களாக …! (அண்ணே…என்னை மன்னிச்சுக்கங்க..!)
தயவு செய்து எனது இந்த ஆசையை செய்தியாய் மக்களிடம் பரப்புங்கள்.
என் நியாயமான கோரிக்கையை நிறைவேத்துங்கண்ணே.
உங்க அன்புத் தம்பி.
முத்து.
படித்து முடித்ததும் அந்த ஜில்லென்று இருந்த அறையிலும் கூட ராஜேஷுக்கு வியர்த்து வழிந்தது.தான் வெறும் பட்டாசு என்று நினைத்திருந்த ஒரு சாதாரண விஷயம் எவ்வளவு பெரிய விஷயத்தை அந்த சிறுவன் மூலம் உணர்த்தியிருக்கு.தன்னையும் மீறி அவர் கண்கள் பனித்தது. ஒரு சின்னக் கடிதம் ஒரு பெரிய பன்னாட்டு வர்த்தகத்துக்குள் இருக்கும் செல்வந்தரின் மனதுக்குள் நுழைந்து மனிதாபிமானத்தை பல மடங்கு விஸ்வரூப மெடுக்க வைக்குமா ?அங்கு தான் பணமும், பதவியும் பல விதங்களில் பேசும்.
வீ ஷால் டூ சம் திங்….அண்ட் ஃ ப்ரம் திஸ் டைம் ஆன்வர்ட்ஸ் தேர் வில் பீ “நோ கிராக்கர்ஸ்”.தீர்மானமாகச் சொல்லிக் கொண்டவர்….அருகிலிருந்த சந்துருவிடம்….
சந்துரு..இந்த லெட்டரை அப்படியே ஸ்கான் பண்ணி எல்லோருக்கும் ஈமெயில் பண்ணிடுங்க அண்ட் லெட் மீ நோ த ஃபீட்பேக்…க்விக்…க்விக்…
அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் ஒரு சலசலப்பு. விஷயம் வந்த இடம் பெரிய இடம்..அதனால் “நோ கிராக்கர்ஸ்” வைரஸ் மாதிரி பரவிக் கொண்டு போனது.
அடாப்ட் சம் ஸ்கூல் அண்ட் வீ வில் கிவ் ஸ்வீட்ஸ் டு தி சில்ட்ரென். லெட் அஸ் செலேபெரேட் திஸ் தீவாளி
ஃபெஸ்டிவெல் இன் எ டிஃபரென்ட் வே ….அண்ட் லெட் திஸ் இஸ் தி பிகினிங் ஆஃப் “முத்து’ஸ் ஐடியா..”
அப்டியே இந்த லெட்டரை ப்ரெஸ்ஸுக்கும் மீடியாவுக்கும் நம்ம சார்புல கொடுத்து பப்ளிஷ் பண்ணச் சொல்லுங்க.
பப்ளிக் அவேர்நெஸ் கிடைக்கும்..சொல்லிக் கொண்டே இந்த வெடியை அப்படியே….பக்கெட் தண்ணீல போட்டு ஊறவெச்சு…ட்ராஷ் ல போடுங்க சந்துரு.
ராஜேஷுக்குத் தான் ஏதோ நல்ல காரியம் செய்வது போன்ற நிம்மதியை உணர்ந்தார்.
ஆம்…அங்கே…முகம் தெரியாத புரட்சி முத்து ஜெயித்துக் கொண்டிருந்தான்.
O O O O O O O O O O O O O O O O
முத்துவை அனுப்பிவிட்டு யாரும் வரமாட்டார்கள் என்ற தைரியத்தில் ஒரு உதட்டில் சிகரெட் துண்டைக் பிடித்துக் கொண்டே கைகளால் இரசாயனத்தை நீண்ட உருளைக் குழலுக்குள்ளே அடைத்துக் கொண்டிருந்தான் சின்னையா.
முத்துவின் அறைக்குள் தன் மகன் என்னதான் செய்கிறான் என்று பார்க்க அந்த அறைக்குள் நுழைந்த பெரியையா…அந்தக் காட்சியைக் கண்டதும் ஒரு நொடி நெஞ்சு அடைத்து. பக்கென நின்றது…அவருக்கு.
டேய்…என்ன காரியம்டா பண்றே….நாசமாப் போறவனே…..அவரது இறுதி வார்த்தையும் அதுவாகவே நின்றது.
அடுத்த நொடியில் எது நடந்து விடக் கூடாதென உள்ளம் பதறியதோ …. எது நடக்காது என்று சின்னய்யாவின் அசட்டு தைரியம் சொன்னதோ….எதற்காக முத்து முன் ஜாக்கிரதையாக இருக்கப் பயந்தானோ…அது நடந்தது ! பட்டாசுகள் பட்பட்டென் வெடித்தன தீபாவளிக்கு முன்பே பட்டறையில் ! எங்கும் கூக்குரல் ! தீ வெள்ளம் வேலை செய்த மக்கள் அலறிக் கொண்டு ஓடினர் ! பட்டறைக் கூடாரம் வெடித்து மேற்தளம் தூளானது ! அதெல்லாம் கரும்புகையாய் நெருப்பு ஜ்வாலையாய் கொழுந்து விட்டெறிந்து பலரது ஓலங்களைத் திரட்டிக் கொண்டிருந்தது.
திரும்பிக் கொண்டிருந்த முத்து அதிர்ச்சியில் உறைந்து அப்படியே கற்சிலையாய் நின்று கொண்டிருக்க…எங்கிருந்தோ ஓடி வந்த ஒருத்தி…”அடே….முத்து நீ இங்கனையா இருக்கே…. உன் ஆத்தா தான் உன்னியக் காப்பாத்திபுட்டாடா….இப்பத்தா
பெரியையா கொடுத்த ஆக்ரோஷம், கோபம், வெறுப்பு, எகத்தாளம் எல்லாம் வளர்ந்து உருவெடுத்து அவரைப் பார்த்துத் திரும்பியது . அதே ஜ்வாலைக்குள் அவரும் அவர் மகனும் கருகிப் போனார்கள்.
தனது கை காலிலிருந்த விலங்குகள் தகர்க்கப் பட்டு முதுகில் கிடந்த பாறாங்கல் உருண்டை கீழே விழுந்து உருள்வதைப் போல நிமிர்ந்தான் முத்து. பின்பு ” ஒழியட்டும்..இந்தத் தொழில்..இத்தோட ஒழியட்டும்..” என்று கதறியபடியே தன்னோட மேல்சட்டையைக் கழட்டி வீசி எரிந்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் விரைவாய் நடந்தான்.
கனன்று கொழுந்து விட்டெறிந்து வெடித்துச் சிதறிக் கொண்டிருந்த அறைகளில் தீயணைக்க வண்டிகள் அதி வேகமாக மணி அடித்துக் கொண்டே வந்து கொண்டிருந்தது.மனித அலறல்கள் அடங்கி அங்கே சுடுகாடு போல் புகையும், கரித்தூள்களும் மேல் எழுந்து மயான அமைதி தவழ்ந்தது.
தீபாவளி நினைவாய் செத்துப் போன நரகாசுரன் பூதாகரமாய் உயிர் பெற்று அங்கு நின்று சிரித்துக் கொண்டிருந்தான் !
==============================
- மானுடம் போற்றுதும்
- இலக்கியப்பயணம்: —கனவு இலக்கிய இதழுக்கு வெள்ளிவிழா —- கனவு 25
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –34
- நம்பிக்கை ஒளி! (4)
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம் முடிவு) அங்கம் -3 பாகம் -8
- இயேசு ஒரு கற்பனையா?
- அக்னிப்பிரவேசம் -7
- கொசுறு பக்கங்கள்
- காரைக்குடி கம்பன் கழகத்தின் பவளவிழா
- ‘பாரதியைப் பயில…’
- தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு 2012
- நான் ரசித்த முன்னுரைகளிருந்து………….. 2. பாரதியார் – பாஞ்சாலி சபதம்.
- சி.சு. செல்லப்பாவின் நூற்றாண்டு நிறைவினைக் கொண்டாடும் வகையில் தளத்தின் முதல் இதழ் சி.சு. செல்லப்பாவுக்கு அஞ்சலி
- தாகூரின் கீதப் பாமாலை – 37 யாருக்குத் தெரியும் ?
- வைதேஹி காத்திருந்தாள்
- ஆரோகணம் & பிட்சா – டிஜிடல் தமிழ் சினிமா புரட்சியின் மைல்கல்கள்
- தானாய் நிரம்பும் கிணற்றடி ..அய்யப்பமாதவனின் சிறுகதைத் தொகுதி எனது பார்வையில்
- கவிதைகள்
- பழமொழிகளில் கல்லும் கல்லெறியும்
- மணலும், நுரையும்
- மீட்சிக்கான விருப்பம்
- தபால்காரர்
- தீயில் கருகிய சில உன்னத உறவுகள் நினைவுகள்
- மரப்பாச்சி இல்லாத கொலு
- “தீபாவளி…… தீரா வலி….. !”
- ஸ்வாத் பள்ளத்தாக்குக்கு போகும் சாலை: வெறுப்பு அழித்ததை மனிதம் மீட்கிறது.
- லூப்பர் ( ஆங்கிலம் )
- பேரரசுவின் திருத்தணி
- கற்பனைக் கால் வலி
- மனிதாபிமானம்!!
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! விரைவாக மாறும் வெளிக்கருவால், பூமியின் காந்தப் புலமும், ஈர்ப்பு விசையும் பாதிக்கப் படுகின்றன.
- சிறுவன்
- முப்பெரும் சக்தியின் நவராத்திரி..!
- மன்னை சரஸ்வதி தாயுமானவன் எழுதிய ‘நெல் மணிகள்’கவிதைத்தொகுப்பு