வாழ நினைத்தால்… வீழலாம்…!

This entry is part 26 of 31 in the series 4 நவம்பர் 2012


  (இது ஓர் உண்மைச் சம்பவம்)

 

காலேஜ் படிப்புக்காக ஊரைவிட்டு  விட்டு ஹாஸ்டலில் தங்கி படிக்கும் வைரவன் தனது பரிச்சை ரிசல்டைப் பார்க்க கிளம்பிக்கொண்டிருந்தான். தூரத்தில் டீக்கடையிலிருந்து “வாழ நினைத்தால் வாழலாம்…வழியா இல்லை பூமியில் ” என்ற பாட்டுக்  கேட்கிறது…இவனும் அந்தப் பாடலை  முணுமுணுத்தபடியே மகிழ்ச்சியோடு நடக்கிறான். மனதுக்குள் கண்டிப்பா “பாஸ் ஆயிடுவேன்…”என்றும் ஒருதரம் சொல்லிக் கொண்டான்.

பல்கலைக்கழகத்தின்  டீன் அலுவலகம் முன்பு என்றுமில்லாமல் ஏகப்பட்ட மாணவர்கள் கூட்டம். இன்னும் சற்று நேரத்தில் ஆறாவது செமெஸ்டர்  ரிசுல்டுகளை நோட்டீஸ் போர்டில் ஒட்டப் போவதாக வந்த அறிவிப்பு தான் அத்தனை கூட்டத்துக்குக் காரணம். அவனைப் போலவே ஆர்வத்தோடு மாணவர்கள் ஒன்று கூடி காத்திருந்தார்கள். அங்கே சலசலப்புக்கு பஞ்சமில்லை.

டேய்..வைரம்…!..உனக்கு எதுனா பழைய அரியர் இருக்காடா மச்சி….! வைரவனைப் பார்த்து நண்பன் வாசு சத்தமாகக் கேட்கிறான்.

இதுவரைக்கும் இல்லடா…ஆனா இந்த ஆறாவது செம் ல….ஒரு லேப் டெஸ்ட்  மட்டும் ஊத்திக்கிடுமோன்னு திகிலா இருக்குடா. அதான் கூட்டம்னாலும் பரவால்லன்னு வந்துட்டேன். ஆமா அங்க எப்படி….? என்று

ஏண்டா  என்னிய , டென்ஷன் பண்ணீட்டு…எனக்கு அம்புட்டும் அரியர் தான் விழுவும்….ஆனாலும் ஐயா ஜாலியா இருப்பாண்டா….எல்லாம் கட்டக் கடைசீல பார்த்துக்கலாம்னு தான்…வாசு ரொம்ப ஈஸியா  சொல்வதைப் பார்த்து….வைரவனுக்கு என்னவோ போலிருந்தது.

என்னடா மச்சி  …! காண்டாயிட்டியா? எங்கப்பா நல்லா விசாரிச்சுட்டுத் தான் இங்க கொண்டாந்து சேர்த்தாரு. ஒரு வேளை  எதிலுமே ஐயா பாசாகலைன்னு வெய்யி….கட்டு நோட்டை வெட்டினாப் போதுண்டி …..கைமேல பாஸ் சர்டிபிகேட்டு…இதெப்படி இருக்கு..?

அதில்லடா…நீயெல்லாம் பணக்கார ஊட்டுலேர்ந்து வர….உனக்கெல்லாம் அப்பாவோட பிசினெஸ், தோட்டம், தொறவு..வயலு வாய்க்கா ஏக்கர் ஏக்கரா நஞ்ஜையும் , புஞ்ஜையும்  இருக்கு….நீ என்ன படிச்சியா…பாஸானியான்னு கூட யாரும் கேட்க மாட்டாங்க..அதான் நீ எப்பவும் ஜாலியா இருக்க. ஆனால் நம்ம கதை அப்படியா…? வீட்டுக்கு போனதுமே….அம்மா ரொம்பக் கஷ்டப் பட்டு கடன உடன வாங்கி , நகைய வித்து உன்ன என்ஜினீயரிங்  படிக்க வைக்றேண்டா…நீ தலையெடுத்து வந்தால் தான் தங்கச்சி சுகந்தியை  மேற்கொண்டு படிக்க வைச்சு நல்ல எடத்துல கல்யாணம் கட்டிக் கொடுக்க முடியும்…அந்தப் புள்ளைக்கு நீ தாண்டா அண்ணனுக்கு அண்ணனா ஒரு நல்லது செய்யணும்ன்னு கஷ்டப் பத்திரிகை வாசிக்க ஆரம்பிச்சுடுவாங்கடா…..அந்த டென்ஷன் எனக்குத் தாண்டாத் தெரியும்.

உங்கப்பா என்ன ஆனாருடா…?

அப்பா இறந்து போயி நாலு வருஷம் ஆச்சுடா. எங்கம்மா தான் எங்களுக்கு எல்லாம். நான் மட்டும் பாஸாகலைன்னு வெய்யி …வெறகுக் கட்டையைத் தூக்கிறும்..நாங்க…..சரியாப் படிக்கலைன்னா அம்புட்டுக் கோவம் வரும்..அம்மாவுக்கு.

பேசிக்கொண்டிருக்கும் போதே அங்கு சலசலப்பு அதிகமாகி  நோட்டீஸ் போர்டின் அருகே  மிட்டாய்க்  கடையில் ஈ மொய்ப்பது போல மொய்த்துக் கொண்டு நின்றனர்.

 டேய் வாசு நான் போய் என் ரிசல்டைப்  பார்த்துட்டு வந்துறேன்…..சொல்லிக் கொண்டே முந்தியடித்துக் கொண்டு தன்னுடைய எண்ணை  பதிவாகி இருக்கா என்று தேட ஆரம்பித்தான்…தேட, தேட, தனக்கு முன்னால்  இருக்கும் எண்ணும் பின்னால் இருக்கும் எண்ணும்  மட்டும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருந்தது.அவனது எண்  மட்டும் ஏனோ  அவமானத்தில் ஒளிந்து கொண்டிருப்பது போலத் தெரிந்தது…அப்போ….அப்போ…நான் ஃ பெயிலா…? அதிர்ச்சியில் ஒரு நிமிடத்தில் இறுகிப் போன நரம்புகளோடு எதுல போயிருக்கும், என்று அடுத்த கவலைக்குத் தாவினான்.  இப்போ என்ன பண்றது? அம்மா கேட்டால் என்ன சொல்றது..தொண்டைக்குள் ஏதோ ஒரு பந்து உருண்டு வந்து அடைப்பது போலிருந்தது. இது வரைக்கும் ஐஞ்சு செம்ல ஒரு அரியர் கூட வைக்கலை…இதென்னது கடைசி வருஷத்தில் இப்படிக் காலை வாரி விட்டுடுச்சே…அவனுக்குள் முதன் முதலாக தோல்வி வந்து குடலைக் குலுக்கி விட்டுப் போனது போல் தோன்றவே…ச்சே….என்று அங்கு மேற்கொண்டு நிற்கப் பிடிக்காமல் விறு விறுவென்று நடக்க ஆரம்பித்தான்.

டேய்…வைரம்…நில்லுடா…என்னாச்சு சொல்லு…போச்சா? என்று கேட்டோபடியே வாசு இவனை நோக்கி ஓடி வருகிறான்.

தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் குதூகலமாக விசிலடித்துச் சிரித்து கும்மாளம் போட்டுக் கொண்டே வந்து கொண்டிருந்தார்கள்.

ஒரு ஆறு டிஜிட் எண்  அரை நிமிடத்தில் மனதைத் கரப்பாம்பூசியாக கவிழ்த்துப் போட்டுவிட்டதே.
விரக்தியோடு நடக்கும் வைரவனை வேக நடை போட்டு எட்டிப் பிடித்த வாசு….அவனது தோளில் கையை போட்டு…ஏண்டா இதுக்குப் போய்  இவ்ளோ ஃபீல் பண்றே…அடுத்த “செம்”மோட சேர்த்து எழுதிக்க வேண்டியது தானே…டேக் இட் ஈஸி  பாலிஸி ….என்று சிரிக்கிறான்.

அடப் போடா…நீயெல்லாம் ஒரு..! போய் உன் ரிஸல்டப் பாருடா…வாசு…!

அதெல்லாம் ஒன்னியும் வேண்டாம்…எனக்கு ..வருவது தானே வரும்…..! உனக்கு இதுவும் கடந்து போகும்..!

வாடா வைரம்…காண்டீன்ல போய் ஒரு டீ  குடிச்சிட்டு வரலாம்.

எப்டீடா….உன்னாலா..? நீ ஆளவிடுரா….நான் வரல….நீ எங்கியாவது போ..நான் ரூமுக்குப் போறேன்.

வாசுவை அங்கேயே கட் செய்து விட்டு தன்னுடைய ஹாஸ்டல்  ரூமுக்குப் போவதற்காக நடக்கிறான்  வைரவன். இதென்ன இப்படியாச்சே…. வெண்ணைத்  திரண்டு வரும் வேளையிலே தாழி உடைந்த கதை போல….!  எப்படி இதை அம்மாவிடம் சொல்வது. தெரிஞ்சால் ரொம்ப வருத்தப் படுவாங்களே ..நாலு அடி அடிச்சால் கூடப் பரவாயில்லை…ஆனால் அடிக்க மாட்டாள்…மனசுக்குள் தானே வருத்தப்படுவாங்க . அம்மாவின் மௌனம் தான் அவனைக் கொல்லாமல்  கொல்லும் .

வைரவன்  என்ஜினியரிங்  தான் படிப்பான் என்று ஒத்தக் காலில் நின்று காலேஜு …..காலேஜா… ஏறி இறங்கி கடைசீல இந்த பல்கலைக் கழகத்தில் இடம் வாங்கி….வைரவனை எலெக்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் சேர்த்து விட்டுத் தான் சாப்பிடவே செய்தாள். அவ்வளவு வைராக்கிரம் அம்மாவுக்கு.

கடன் பட்டு, இருந்த கொஞ்ச தங்கத்தையும் வித்துத் தான் இந்த வைரத்தைப் படிக்க வெச்சாங்க….நான் இப்படி ஃ பெயில் ஆவேன்னு கனவுல கூட நினைக்கலை. நல்லாத் தான் எழுதி இருந்தேன்..அப்படியும் எப்படிப் போச்சு…திரும்பவும்  ரெண்டு விடைத்தாளை மட்டும்  திருத்தச் சொல்லலாமா?

நினைத்தவன் நேராக ஆபீஸ் ரூமுக்குச் சென்று அங்கிருந்த அட்மின் ஹெட் கிட்ட விஷயத்தைச் சொல்கிறான். சொல்லும்போதே துக்கம் தொண்டையை அடைக்கிறது. என் அம்மா ரொம்ப ரொம்ப கஷ்டப் பட்டு படிக்க வைக்கிறாங்க சார்…அவன் முடிக்கும் முனே…அவர்..

அப்டீன்னா நீ நல்லாப் படிச்சிருக்கணம்…..அதை விட்டுட்டு இப்போ இங்க வந்து முதலைக் கண்ணீர் விட்டா என்ன அர்த்தம் ?

ஸார் நல்லா எழுதின பரிட்சை ஸார் அது..வேணா திரும்பத் திருத்தச் சொல்லுங்க…சார்..கண்டிப்பா பாஸ் ஆயிடுவேன்..என்று உறுதி தொனிக்கும் குரலைக் கேட்ட அவர்..

அப்போ…இங்க நான் வெத்து வேட்டா இருக்கோம்னு சொல்ல வரியா? திரும்பல்லாம் திருத்த முடியாது. அதெல்லாம் அப்பவே நிப்பாட்டியாச்சு. வேணா ஒண்ணு  செய்யி..ஒரு பேப்பருக்கு இம்புட்டுன்னு கொடுத்தா….பாஸ் ஆக வாய்ப்பு இருக்கு. ஆனா ரகசியமா இருக்கணும்…

எம்புட்டு சார் செலவாகும்.?

ஒரு பேப்பர் பாசாக இருபதாயிரம்…முடியுமா..?

தூக்கி வாரிப் போட்டவன்……..ஸார்…நாப்பதாயிரம் இருந்துச்சுன்னா நான் படிப்பையே  நிறுத்திட்டு பலசரக்குக் கடை வெச்சுருவேன் ஸார்.

எவண்டா அவன் …வாயைக் கெளர வந்து நிக்கிறதப் பாரு..!… போடா…போடா….கடைய வெச்சுக்கோ…இல்ல என்னமோ செய்யி…..வந்துட்டானுங்க..கல்லூரிக்கு ..வெறுங் கையிலே முழம் போட ! .! எரிச்சலானார் அவர்.

என்ன அநியாயம்…இது…?  மீளாத எண்ணத்திலிருந்து..இதெல்லாம் ஒரு யுனிவர்சிட்டி….எங்க லஞ்சமும் ஊழலும் இருக்கக் கூடாதோ ….எந்த இடத்தில் உண்மை கற்பிக்கப் படணுமோ…அங்கியே பொய்யும், பித்தலாட்டமும், லஞ்சமும், ஊழலும் தலை விரித்தாடுது.  உங்க ஆசைக்கு ஏழைப்  பையன்கள் நாங்க தான் கெடச்சோமா ?

இந்தக் காலேஜிலிருந்து நான் நிச்சயம் பாசாகி வெளிய போக முடியாது… ஒவ்வொன்னுக்கு ஒரு விலை போட்டு கறக்காமல் வெளிய விடமாட்டாங்க. இதெல்லாம் அம்மாட்ட சொல்ல முடியுமா…? சொன்னால் ஓடி வந்து யாரதுன்னு…எல்லாத்தையும் வெட்ட வெளிச்சமா செஞ்சுப் புடுவாங்க…பெறகு……….என் கதை கந்தல் தான்.மூஞ்சி தெரியாத போதே ஆடிப் பார்க்குறாங்க…இதுல “இவன் தான்னு” தெரிஞ்சுப்புட்டா…படிப்புல கத்தி வெச்சுருவானுங்க.. அத்தோட நிக்காமல் அம்மாகிட்ட ஒண்ணுக்கு ரெண்டா சொல்லிக் கொடுத்து…! இதெல்லாம் வேண்டுமா? பேசாம வாயைத் திறக்காம ரூமுக்கு போய்ச் சேரு .

மனசாட்சி சொன்னபடியே ரூமுக்குப் போய்  தொப்பென்று  கட்டிலில் விழுகிறான். பசி வயிற்றைக் கிள்ளுகிறது……படிப்புக்குப் பேரமா? வைரவனின் மனசு ஆற்றாமையில் துடிக்கிறது.  அம்மாவின்  குரலைக் கேட்க வேண்டும் போலிருந்தது. எல்லாத்தையும் சொல்லி அழவேண்டும் போல இருந்தது.

கைபேசியை எடுத்துப் பார்க்கிறான்…பாலன்ஸ்  இருபது ரூபாய் இருந்தது… அம்மாவுக்கு எண்ணை அழுத்துகிறான்.

ரிங் டோன் நீண்டு கொண்டே இருந்தது…! இவன் பொறுமை இழக்குமுன்பு  அம்மாவின் குரல் “ஹலோ” என்றது.

ஹலோ…அம்மா..நான்தான் வைரவன் பேசறேன்…நல்லாருக்கியாம்மா..! தங்கச்சி நல்லாருக்கா..?

சொல்லுடா வைரவா…இன்னைக்கு ரிசல்ட்டுன்னு சொன்னியே… .என்னாச்சு…? பாஸு தானே…நீயி..?

இல்லம்மா வந்து  …. அவன் தொண்டைக் குரல் அடங்கியது.   வார்த்தை தத்தி தத்தி  வந்தது.  ரெண்டு அரியர் …  வந்திருச்சும்மா…எப்பிடிண்டே தெரியலை….!

என்னடா சொல்றே நீ…ஃ பெயிலா.அதும் ரெண்டு சப்ஜெக்ட்டுலையா…? நல்லாப் படிக்கலையா? எம்புட்டு அடிச்சுக்கறேன்….நம்ம வாழ்க்கைய நிர்ணயம் பண்றதே உன் படிப்பு மேல தான் இருக்குன்னு…எல்லாம் இப்போ செவுடன் காதுல ஊதின சங்கு தானா? நீ அடுத்த வருஷமே கம்புஸ் இன்டர்வியூ ல செலக்ட்டு ஆகி நல்ல வேலைக்குப் போய் ஆயிரம் ஆயிரமா சம்பாதிக்கப் போறேன்னு நான் இங்க கனவு கண்டுக்கிட்டு இருக்கேன்….நீ என்னாடான்னா…இப்படி குண்டைத் தூக்கி போடுற..! மனசுல அம்மா எம்புட்டுக் கஷ்டப் படுதுன்னு நெனப்பு இருந்தாத் தான…உனக்கு..!

அம்மா….அப்டில்லாம் சொல்லாதம்மா. உனக்கென்ன தெரியும்? இங்க நடக்குறது…இந்தப் படிப்பு    கஷ்டம் தெரியுமா? எண்ணிய ஏன் இதுல கொண்டாந்து சேர்த்தே….இதுல நீ பணத்தைக் கட்டி…என்னை ரேஸ் குதிரை கணக்கா ஓடு….ஒடுன்னா …..நான் எங்கிட்டு ஓடுவேன்… பிடிக்கலீங்கம்மா..நேத்து ஒரு அசைன்மென்ட் சரியா எழுதலைன்னு அந்த லெக்சரர்   ஏன்டா  சரியா  படம் போடல ன்னு கேட்டாரு…”கரண்ட்டு இல்ல சார்ன்னு” காரணம்  சொன்னேன்…அதுக்கு    பொம்பளப் பிள்ளைங்க முன்னாடி வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டினாரு…எங்கிட்டாச்சும் ஓடிப் போயிரலாமன்னு இருக்கு…தெரியுமா..?

தப்பெல்லாம் உன் பேர்ல வெச்சுக்கிட்டு வாத்தியாரை குத்தம் சொல்ல ஆரம்பிச்சுட்டியா…? இத்த எங்கிட்டிருந்து கத்துக்கிட்ட…?

அம்மாவின் இந்தக் கேள்வி சுளீறேன்றது  வைரவனுக்கு….சரி  என்னான்குறே  நீ..? என்று புரிந்துகொள்ளாத அம்மாவிடம் எரிச்சலானான்….

உனக்கு எப்போ காம்பெஸ்  இன்டர்வியூ …அதுல உன் ரோஷத்தைக் காட்டி ஜெயிச்சுக் காட்டி வேலையை பிடி…ஆமா சொல்லிட்டேன்…..என்ற டக்கென இணைப்பைத் துண்டித்தாள் அம்மா.

அம்மா எப்பவுமே இப்படித் தான் தான் கோபமாய் இருப்பது போலவே காட்டிக் கொண்டு ஜெயிப்பவள்.அம்மாவின் குணம் நன்கு தெரிந்தும்… அழுகை முட்டிக் கொண்டு வந்தது வைரவனுக்கு. அவனுக்கு ஆறுதலாக ஒன்றுமே இல்லாதது போலிருந்தது…ஆண்மை அழுகையை அடக்கியது. மனதினுள் தோன்றிய வேகம், கோபம் இரண்டும் புதிதாக சேர்ந்து அருகில் இருக்கும் எதையாவது   ஓங்கி ஆத்திரம் தீர குத்தி உடைக்க வேண்டும் போல கைகள் துடித்தன…..

சே…என்ன கையாலாகாத தனம்….! கையைக் கட்டி வாயைக் கட்டி, காலைக் கட்டி…..எந்தக் குற்றமும் செய்யாமலேயே…என்னை இறுக்கி எத்தனை விலங்குகள்…?   காற்றிருந்தும் எனக்கு மூச்சிழுக்க முடியவில்லை.

வைராக்கியத்தோடு நடந்தான்…”அம்மாவுக்குக் காமிக்கணும்..நான் யாருன்னு…! எப்படியும் இந்த காம்பசில் வேலை கண்டிப்பா  கிடைக்கணும்..”
என்று சொல்லிக் கொண்டு அதற்காக தன்னை தயார் செய்து கொண்டிருந்தான்  அப்பப்போ வாசுவைப் பார்க்கும் போது  ஏனோ அவன் மேல் கோபம் கோபமாக வந்தது வைரவனுக்கு. எவ்வளவு சுகவாசியா கவலையே இல்லாமல் இருக்கான்…! உன் தலையெழுத்தைப் பாரு…என்று மனம் சொல்லிக் கொண்டே இருந்தது.

அன்று அவனுக்கு சொல்லியபடியே பெரிய நிறுவனத்தின் காம்பஸ் நேர்முகம்….ஒவ்வொரு கட்டமாக தாண்டி இறுதிக் கட்ட குரூப் டிஸ்கஷன்ல தோற்றுப் போய்  வெளியேறிய வைரவனுக்கு.. அதிரடியாய்..அம்மாவின் தொலைபேசி அழைப்பு பயத்தை உண்டு பண்ணியது.

தயங்கியபடியே சொன்னான்…” அம்மா…எனக்கு வேலை இல்லை..நான் தோற்றுவிட்டேன்…சரளமா ஆங்கிலம் பேச வரலை….எப்டியும் அடுத்த கம்பெனில செலக்ட் ஆகிடுவேன்,,,,,” நம்பிக்கையோடு சொன்னான்….

வழக்கமாக அம்மாவின் அர்ச்சனைகள்…..புத்திமதிகள்.., ஆராதனைகள் வேதனை தந்து அவனுக்கு சலிப்பைக் கொடுத்தன.

அதன் பின்பு வந்த இரண்டு நேர்முகத்திலும் முந்தையது போலவே தோற்றுப் போன வைரவன் நிராகரிக்கப் பட்டபோது….ஏண்டா வைரவா…..நீ எந்தப் பொண்ணு பின்னாடியும் சுத்தலையே..? பின்ன ஏண்டா உனக்கு வேலை கெடைக்கலை…? அடுத்த கம்பெனில மட்டும் நீ செலக்ட் ஆகலை…. உன் மூஞ்சியவே நான் பார்க்கமாட்டேன்  தெரிஞ்சுக்கோ…. நீ என் மகனே இல்ல  !   என் கனவெல்லாம் பாழாயின பாதகா !  நான் யார் முகத்திலும் இனிமேல் விழிக்க முடியாது நீ ஃபெயிலானதால் …. என்று கோபமாக இணைப்பைத் துண்டித்த போது இவனுக்குத் தன் இதயமே துண்டானது போலிருந்தது…

என்ன கேள்வி கேட்டுட்டாங்க அம்மா…இத்தனைக்கும் எத்தனையோ பசங்க ரொம்ப மோசமா இருக்காங்க…நான் எந்த தப்பு தண்டாவுக்கும் போகாத போதே….இங்கு நடக்கிற கொடுமை ஒனண்ணுமே தெரியாம இப்படி பழி சொல்றாங்க….உலகத்துல நல்லதுக்கே காலம் இல்லையோ….நொந்து போன மனதோடு வெந்து போய்  புரண்டு, புரண்டு அன்று எப்படியோஉறங்கிப் போனான்…வைரவன்.

அடுத்த வாரமே புகழ்பெற்ற கம்பெனியிலிருந்து நேர்முகத்திற்கு இவன் பெயர் அழைக்கப் பட்டதும்…..வரிசையில் நின்று….காத்திருந்து…காத்திருந்து ..ஒவ்வொரு கட்டமாகத் தாண்டி இறுதியாகக் இவன் கிடைத்துவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கையில்….இவன் பெயர் நிராகரிக்கப் பட்டதை அறிந்து உள்ளுக்குள் உடைந்து போனான்….ஏதோ இந்த காம்பஸ் இண்டர்வியூ வில் தனது வாழ்க்கையே தொலைந்து போனதைப் போல உணர்ந்தவன்..சென்ற முறை அம்மா திட்டினானாலும் இன்று காலை…நல்லமுறையில் பேசி ஆசி சொன்னது திருப்தியாகத் தான் இருந்தது. இருந்தும் என்னாச்சு…?

இன்டர்வியூவில் ஜெயிப்பது அவ்வளவு கடினமா? தன்னை விடச் சரியாகப் படிக்காதவர்கள் கையில் செலக்சன் லெட்டர்  இருப்பதைப் பார்த்து அம்மா சொல்வது சரிதானோ…நான் எதற்கும் லாயக்கில்லாதவனா…? இன்று காலை அம்மா செய்த ஆசிகள் பொய்த்துப் போனது..சென்ற வாரம் ” இனி முன் முகத்தையே பார்க்க மாட்டேன்” என்று கோபத்தில் சொன்ன வார்த்தை எதிரொலிக்கிறது…நல்ல விஷயங்கள் எப்போதும் தோற்றுப் போகுமோ…? இந்த முறையும் நான் தோற்றுவிட்டேன்…எனக்கு வேலை இல்லை… இனிமேட்டு வேற எந்த கம்பெனியும் கூட காம்பஸ் க்கு  வராது என்று சொன்னால்…..அம்மா துடித்துப் போவாள்.

வைரவன் கழிவிரக்கத்தில் துவண்டு போனான். அதீதமான விரக்தி அவனை யதார்த்தத்தை மறக்கச் செய்தது. தூரத்திலிருந்து கை அசைக்கும் வாசுவை ஏறெடுத்தும் பார்க்காமல் கால்போன படி காலேஜை விட்டு வெளியேறினான். அத்தனை நேரம் கழுத்தில் இறுக்கிக் கொண்டு தான் பெரிய நிறுவனத்தில் ஆஃபீசர்  என்ற நினைப்பைத்  தந்த “கழுத்து டையை”  கழற்றி உதறித்  தூர வீசினான். தன தலையிலிருந்த பாரம் சிறிது காற்றோடு பறந்து போனதாக உணர்ந்தான்.

நடக்க நடக்க…காலேஜ் அவனை விட்டு விலகிச் தூரம் சென்றது. அந்தப் பெரிய அரக்கன் அவனைத் தன் பிடியிலிருந்து அவிழ்த்தது போல சிலிர்த்தான் வைரவன்.

ஆஹா…சுதந்திர மனசு…..மெல்லப் பறக்க ஆரம்பித்தது. ஆனால் என்ன..இந்த சுதந்திரம் தற்காலிகமானது. மீண்டும்…நாளை சிக்க வைத்து சிறைப்படுத்தி விடும்….சுதந்திரம்.  படிப்புக் கைதி, தாயின் பிடிப்புக் கைதி.  அவனுக்கு வேண்டியது இப்போது விடுதலை.

இதை நிரந்தரமாக்க வேண்டும்…! படிப்பு, புத்தகம், ப்ராஜெக்டு, அரியர்ஸ், செமெஸ்டர் , நேர்முகம், வேலை,வாழ்க்கை…இதிலேர்ந்து தப்பிக்கணும்..அது தான் நிரந்தர சுதந்திரம்…நெஞ்சை அமிழ்த்தும் சுமை, மன உளைச்சல் …இதை இங்கேயே இறக்கி வைக்கணும்..இந்த இனம் தெரியாத  வழியிலிருந்து என் ஆன்மாவைக்  காப்பாற்றியாகணும்…நிம்மதியா தூங்கணும் . மீளாத துக்கத்தில் .!என்னைக் கட்டிப் போட்ட அத்தனை மானசீக விலங்குளையும் தகர்த்து எறியணும்..!

நினைக்கும் போதே வைரவனுக்கு அப்படி ஒரு வாழ்க்கையில் வாழ வேண்டும் போலிருந்தது. அவன் நடந்து நீண்ட தூரம் வந்து விட்டதை அருகிலிருந்த ரயில்வே லெவல் கிராஸிங் நினைவு படுத்தியது.

கை காட்டிக் கம்பத்தில் பச்சைக் சிக்னல் அனுமதி அளித்தது ரயில் வரவுக்கு

“நில்” என்ற சிவப்பு விளக்குகள் அவனை முறைத்துப் பார்த்து நிறுத்த எச்சரித்தன….இவனுக்கு அதைக் கல்லால் அடிக்க வேண்டும் போலிருந்தது.

அதனடியிலிருந்த அபாயக் குறியோடு மண்டையோடு …”இங்கே வா வாழ உனக்கு வழி சொல்றேன்” என்று அழைத்து அபாயங்களை உபாயங்களாக்கிக்  கொண்டிருந்தது.

எங்கிருந்தோ திரைப் பாடல்…”வாழ நினைத்தால் வாழலாம்…வழியாய் இல்லை பூமியில் ” என்று அலறிக் கொண்டிருந்தது…..!

தூரத்தில் பெரிய சப்தத்தோடு கட்டுப்பாடின்றி அதிவிரைவாக வந்து கொண்டிருந்தது வைரவனுக்கு எமனாக அந்த எக்ஸ்ப்ரஸ் ரயில்…!

அது லெவல் கிராசிங்கை நெருங்கி வரவும்…”வாழ… நினைத்தால்… வீழலாம்…”  என்று வைரவனின் மூளைக்குள் கட்டளைகள் ரயிலை விட வேகமாக  விழுந்திட….ஒரே பாய்ச்சலில் அவன் கால்கள் தண்டவாளத்தை முன்னோக்கிப் பதிக்கவும்…!

“ஒதுங்கிப் போடா முண்டமே….” என்று அனாசயமாக எஞ்சின் வைரவனை இரண்டாகப் பிளந்து தூக்கி எறிந்து, அவன் வேண்டிய நிரந்தர விடுதலை கொடுத்து விரைந்தது.

சற்று தூரத்தில் வண்டி பிரேக் போடப் பட்டு திடீரென நின்றது.  எஞ்சின் டிரைவர்கள் இறங்கி  ஓடி வந்தனர்.

அடுத்த சில நொடிகளில்….அவனை யார்…..?.அவன் பேரென்ன..? என்று அறியும் ஆவலில் அருகிலிருந்த  தலைகள் “மொய்க்கும் ஏறும்பாகச்”   சூழ்ந்து கொண்டார்கள்.

பல்கலைக் கழகத்தில் அவனது பெயர் கொண்ட ஃபைல்கள்  நிரந்தரமாக மூடப் பட்டன.

வைரவனின் அம்மா…!  செய்தி கேட்டு துடி துடித்தபடி மகளோடு  பறந்து வந்தாள்.  தான் கடைசியாக அவனிடம் பேசிய வார்த்தையை எண்ணி எண்ணி தன்  “தப்புப் பண்ணிட்டேன்…தப்புப் பண்ணிட்டேன்” என்று தலையில் அடித்துக் கதறிக் கொண்டிருந்தாள் .

பரீட்சைகள் மாணவருக்கு எமனா ?  ஃபெயில் மார்க்குகள் கொடுத்து பணம் கொள்ளை யடிக்கும் கல்லூரி அதிகாரிகள் எமனா ?   பாஸ் பண்ணாத பையனுக்கு தாய் தந்தையரே எமனா ?  எத்தனை எமதர்மர் வீசும் பாசக் கயிற்றில் தப்பி ஓர் அப்பாவி மாணவன் உயிரோடு வாழ நினைப்பான் ?

==============================

==============================
Series Navigationநிம்மதி தேடிதாகூரின் கீதப் பாமாலை – 38 என் ஆத்மாவின் கீதம்
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

7 Comments

  1. Avatar
    bandhu says:

    எப்படியும் வேலை கிடைத்துவிடும் என்று நினைத்திருந்தேன்.. உண்மை சம்பவம் என்று இருப்பதால்.. மனதை பிசைகிறது!

    1. Avatar
      ஜெயஸ்ரீ ஷங்கர். says:

      ஆம்.இப்படி நடந்திருக்கக் கூடாது..சோகம் தான்.
      சோகத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

  2. Avatar
    Dr.G.Johnson says:

    வாழ நினைத்தால் வீழலாம் எனும் ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களின் சோகமான ஓர் உண்மைக் கதையைப் படித்து சோகம் கொண்டேன்.வைரவன் போன்ற எத்தனையோ இளம் உள்ளங்கள் இவ்வாறு மனம் உடைந்து நிரந்தர விடுதலை காண இத்தகைய தற்கொலையில் தங்களின் இன்னுயிரை மாய்த்துள்ளனர்..கேவலம், கல்விக் கூடங்களில் சேர்வதற்கும், தேர்வில் வேல்வதற்கும்கூட லஞ்சம் வாங்கும் கேடுகெட்ட சமுதாயமாக மாறிவரும் இந்த அவலம் என்று மாறும்? நம் இளைஞர்களின் சோகம் என்று தீரும்? புத்தக படிப்பையும் மனப்பாடம் செய்யும் திறனையும் வைத்து வெற்றி தோல்விகளை நிர்ணயம் செய்யும் இந்த கல்வி முறையில் முதலில் மாற்றம் வேண்டும். அனால் எந்த விதமான மாற்றம் வந்தாலும், லஞ்சம் எனும் கோர அரக்கன் உள்ளவரை எந்த மாற்றமும் பயன் தரப் போவதில்லை. ஒரு சிக்கலான சமுதாய அவலத்தை அழகான புனைவாக எழுதியுள்ள ஜெயந்தி ஷங்கர் அவர்களுக்கு பாராட்டுகளும் தீபாவளி நல்வாழ்த்துகளும் உரியதாகுக!…..டாக்டர்.ஜி.ஜான்சன். .

  3. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர். says:

    அன்பின் டாக்டர் ஜி.ஜான்சன் அவர்களுக்கு,

    வித விதமாய் காளான்கள் போல முளைத்துக் கொண்டிருக்கும் சமுதாய அவலங்களுக்கு ஆணிவேர் லஞ்சமும் ஊழலும் தான்.
    உங்கள் கருத்துகள் நிஜம். கெடுதல்கள் மறைய வேண்டும். நன்மைகள் பெருகிப் பெருகி உயரவேண்டும்.
    தங்களது கருத்துக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

    1. Avatar
      seethaalakshmi says:

      அன்பு ஜெயா
      கொஞ்ச நாட்களாக கதைகள் படிப்பதில்லை. பொதுவாகப் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. ஆனால் உன் கதையின் தலைப்பு என்னைத் தள்ளி விழவைத்துவிட்டது.. கதையின் நிகழ்வுகள் இன்றும் தொடர்கின்றன. அந்தக் கதையில் கல்லூரி வட்டார மொழி, வீட்டில் உரையாடல், ஊழல்களின் உளறல்கள் அருமையாக அமைந்திருக்கின்றன. ஒரு காலத்தில் எழுத்துலகத்தில் தனி இடம் பெறுவாய். இந்த அம்மாவின் ஆசிகள்
      சீதாம்மா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *