வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -36

This entry is part 1 of 29 in the series 18 நவம்பர் 2012

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே

அற்றம் தரூஉம் பகை

மனிதனின் பயணம்

இருட்டறையில் நுழைந்து ,கருவாய் வளர்ந்து , வெளிச்சத்திற்கு வந்து, உலக வாழ்க்கையில் பல பருவங்களைக் கடந்து இறுதியில் மீண்டும் மண்ணுக்குள் இருட்டறையில் புகவும் பயணம் முடிகின்றது.

குழந்தைப் பருவம் தாயின் அரவணைப்பிலும் மற்ற பெரியோர்களின் அன்பிலும் பாதுகாப்பாக வளர்கின்றது.. இறகு முளைக்கவும் பறந்து செல்லும் பறவையைப் போல் கற்ற பின் உழைக்கத் தொடங்கி தனக்கென்று ஒரு குடும்ப வளையத்தில் புகுந்து கொள்கின்றான். அன்பு வட்டமாயினும் அங்கே கடமைகளும் கட்டுப்பாடுகளூம் இருக்கின்றன. இறுதியில் முதுமை முடக்கிப் போட, இயலாமையும் சலிப்பும் சேர்ந்து வாட்ட, நினைவுகள் மட்டும் துணை நிற்க வாழ்கின்றான். அதுவும் சிறிது சிறிதாக ஒடுங்கி உயிரும் அடங்கி மண்ணுக்குள் போய்விடுகின்றான்.

குழந்தைப் பருவத்திலிருந்து தனக்கென்று ஒரு பொறுப்பு வரும் வரை அவன் வாழும் காலம்தான் அவன் வாழ்க்கைக்கே முக்கியமானது. அடித்தளம் மட்டுமல்ல, சுற்றுச் சுவர்கள்,, தாங்கும் உத்திரங்கள் என்று அவன் வாழ்வுக்குத் தேவையான உறுதியை, திறனை அடையும் பருவக் காலம் இதுதான். இந்த விபரங்களை விவரித்து எழுதப் போனால் நீண்ட தொடர் தனியாக எழுத வேண்டியிருக்கின்றது.மேலை நாடுகளில் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தனித்தனியாக எழுதியிருக்கின்றார்கள். எழுதுவது சுலபம். ஆனால் நடைமுறைப்படுத்துவதில் அக்கறை காட்டுவதில்லையே!. சில தகவல்கள் மட்டும் குறிக்க விரும்புகின்றேன்

அக்காலத்தில் குருகுலக் கல்வி என்று நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். குறிப்பிட்ட வயதில் அங்கு கொண்டு விட்டால் கல்வி கற்கும் காலம் முடிந்துதான் பிள்ளைகள் வீட்டிற்கு வரமுடியும். அங்கிருக்கும் கட்டுப்பாடுகளை மீறினால் வெளியே அனுப்பப்படுவார். என் காலத்தில் ஆசிரியருக்குக் கோபம் வரும் படியாக நடந்தால் பெஞ்சின் மேல் ஏறி நிற்க வேண்டும். அல்லது தலையில் குட்டுவார்கள். கையில் பிரம்படியும் கிடைக்கும். இப்பொழுது நடப்பது என்ன? சில இடங்களில் ஆசிரியர் அடித்து மாணவன் செத்ததாகச் செய்திகள் ஒருபக்கம். மாணவன் ஆசிரியரைக் கத்தியால் குத்திக் கொன்றதாக செய்திகள் இன்னொரு பக்கம். ஆசிரியர் – மாணவர் உறவு இப்படி இருக்கலாமா?

சங்க காலத்திற்குப் பின்னர் நம் கல்வி முறைகள்பற்றி மட்டும் தனி ஆய்வுகள் செய்து விளக்கமாக எழுதப்பட வேண்டும். இருப்பது போதாது.

அரசு விதிப்படி ஐந்து வயது முடிந்தவுடன் பள்ளியில் சேர்க்கப்படலாம். இப்பொழுது நாகரீக உலகில் இரண்டு வயதில் கூட போவதற்குப் பள்ளிகள்.

2 வயதில் play school

3 – 5 வயதுவரை preschool.

அதன்பின் பள்ளியில் முதல் வகுப்பில் சேர வேண்டும்.

ஆக தாயின் பராமரிப்பில், பெரியவர்களின் பார்வையில் குழந்தைகள் இருக்க முடிவது இரண்டு வருடங்கள். அதிலும் தொலைக்காட்சி பெட்டி வந்த பின் தாயின் அக்கறையும் குறைந்து விட்டது. பணிக்குச் செல்லும் தாயாக இருந்தால் வீட்டில் பெரியவர்கள் பார்வையில் அல்லது ஆயாவின் துணையுடன் இருக்கவேண்டும். அதுவும் இல்லையென்றால் குழந்தைகள் காப்பகத்தில் விட்டுவைக்க வேண்டும். (வீட்டு வேலை செய்பவர்களில் சிலர் தங்கள் குழந்தைகளுக்கு சாராயம் கொடுத்து உறங்கச் செய்துவிடுவர். இதனை ஏற்கனவே எழுதியிருக்கின்றேன்)

ஒரு செய்தி.

ஒரு பெண் கையில் குழந்தை ஒன்றை வைத்துக் கொண்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள். காரில் வந்த பெண்மணி ஒருவர் கார் நிற்கவும் அவள் காருக்கு அருகில் வந்து பிச்சை கேட்டிருக்கின்றாள். காரில் அமர்ந்திருந்த பெண்மணிக்கு அதிர்ச்சி. அந்தக் குழந்தை ஒரு டாக்டரம்மாவின் குழந்தை. வீட்டில் இருக்க வேண்டிய ஆயா ஓர் டாக்டரின் குழந்தையை தன் பிச்சை வியாபாரத்திற்கு உபயோகப்படுத்திக் கொண்டிருக்கின்றாள்.

வீட்டிலும் குழந்தைகள் வளரும் சூழ்நிலை என்ன? எனக்கே ஒரு அனுபவம் ஏற்பட்டது. என் மருமகள் வெளியில் போயிருந்தாள். 6 மாதக் குழந்தை என் பேரனை மடியில் வைத்துக் கொண்டு அன்று டி. வி. பார்த்துக் கொண்டிருந்தேன். இடையில் விளம்பரம் வரவும் அந்த சத்தம் கேட்டு பேரக் குழந்தை அதனைப் பார்க்க ஆரம்பித்தது. விளம்பரம் முடியவும் முகத்தைத் திருப்பிக் கொண்டது. தற்காலக் குழந்தைகளின் மூளையின் திறன் சக்திவாய்ந்தது. ஓசையும் ஒளியும் சீக்கிரம் அதன் கவனத்தை ஈர்க்கின்றன.. இச்சூழலில் குழந்தைகள் வளர வேண்டும்

பின்னர் பள்ளிக்குச் செல்லும் பொழுது புரியாதவர்களின் சந்திப்பு தொடக்கம். சிலர் நண்பர்களாவார்கள். சிலரைப் பிடிக்காமல் போகும். ஒரு சிலர் விரோதிகள்போல் ஆகிவிடு கின்றனர். அவர்களுக்கு மத்தியில் பழகும் பொழுது குழந்தைகளின் மன நிலை, குணம் அமைய ஆரம்பிக்கின்றது. பள்ளியிலிருந்து திரும்பும் பிள்ளைகளிடம் பள்ளியில் அன்று எப்படி இருந்தது என்று கேட்கும்பெற்றோர் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. பெற்றோர்களுக்கு குழந்தைகள் வாங்கும் மதிப்பெண், கிரேட் தான் முக்கியம். ஜெயமோகன் அவர்கள் இணையத்தில்” யூத்து” பற்றி படிப்பும் அவர்களின் போக்கும் கடிதங்கள் மூலமாக அலசப்பட்டுள்ளது.. அதில் அவர் சொன்ன ஒரு கூற்று உண்மை. நம் கல்வி சோற்றுக் கல்வி என்பது.

நான் இருப்பது அமெரிக்கா. என் பேரனும் பேத்தியும் இங்குதான் படிக்கின்றார்கள். பேரன் அடிக்கடி சொல்வான் இந்தியக் கல்வி “copy and paste “ என்று. குழந்தைகளின் திறனை வளர்க்க உதவும் சூழல் கல்வியிலும் இல்லை. வீடுகளிலும் இல்லை. இதனை வருத்தத்துடன் சொல்ல வேண்டி யிருக்கின்றது. அக்கடித்தங்களில் இன்னொன்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தன்னம்பிக்கை வளர்க்கும் சூழல் பற்றி. இவைகள் பற்றி மனம்விட்டு சில உண்மைகள் பதிய விரும்புகின்றேன்.

முன்பெல்லாம் வீட்டுப் பெரியவர்களைப் பார்த்து பல பண்புகள் கற்றுக்கொள்வார்கள். ஆனால் இப்பொழுது வீட்டு நிலைமையும் மாறிவிட்டது

அம்மா கிட்டே சொல்லாதே என்று அப்பாவும் அப்பா கிட்டே சொல்லாதே என்று அம்மாவும் தங்கள் பிள்ளைகளுக்குப் பொய் சொல்லப் பழக்கி விடுகின்றார்கள். அவர்கள் முன்னால் பெரியவர்களின் சண்டைகள். சில வீடுகளில் மனைவி, குழந்தையை வெளியில் இருக்கச் சொல்லி யாரோ ஒருத்தியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று கூத்தடிக்கும் ஆண்கள். பிள்ளைகள் முன்னால் சிகரெட் குடிப்பதுவும், சாராயம் குடிப்பதுவும் அந்த பிஞ்சு மனத்தில் எந்த பண்பை விதைக்கும்?

மேலை நாட்டு நாகரீகம் என்றவுடன் பெரும்பாலானோர் அமெரிக்காவைக் குறிப்பிடுவர். சிறுவர்களாக இருக்கும் பொழுது இங்கு கல்வி முறை சிறப்பாக இருப்பதை மறுக்க முடியாது. சிறுவயதிலேயே புத்தகங்கள் படிக்க வைப்பார்கள். பள்ளியில் கேள்விகள் கொடுப்பார்கள். இவர்கள் பதில்கள் எழுத வேண்டும். புத்தகங்கள் படிக்காமல் எழுத முடியாது. ஏதாவது ஆய்வுகள் சிலர் சேர்ந்து செய்தல் வேண்டும். பள்ளிப் படிப்பின்றி நீச்சல், தற்காப்பு கலைகள், விளையாட்டு என்று கற்க அனுப்பப் படுவார்கள். தொலைக்கட்சியில் வரும் கார்ட்டூன் கதைகள் கூட வயதுக்கேற்ற படக்கட்சிகள், கதைகள் வரும். பெற்றோர் எதைப் பார்க்கச் சொல்லி இருக்கின்றார்களோ அதைத்தான் பார்ப்பார்கள். சிறந்த கட்டுப்பாடுகளில் வளரும் குழந்தகளுக்குப் பின்னர் சுதந்திரம் கொடுக்க ஆரம்பிக்கின்றனர். சிறிது சிறிதாக அந்த சுதந்திரக் காற்றில் தங்களை மறக்க, பலர் தங்களை இழக்க ஆரம்பித்து விடுகின்றனர். உயர்நிலைப் பள்ளிக்குப் போக விட்டு இப்படிப்பட்ட சுதந்திரம் கிடைக்கின்றது.

ஒழுக்கத்திலிருந்து தடுமாற்றமும் ஆரம்பமாகின்றது. ஒழுக்கம் என்பதும் நாம் வைத்தது தான். ஆனால் போதை மருந்தில் தன்னை மறப்பது, திருடுவது, வன்முறையில் இறங்குவது, மற்றவர் உயிரை மட்டுமல்ல தன் உயிரையும் அழிப்பதுவும் சாதாரணமாவது சரியா? இங்கே சில செய்திகளைக் கூற வேண்டும்.

ஆரம்பத்தில் மினியாபோலிஸ் பக்கத்தில் இருக்கும் மார்ஷல் என்ற ஒரு சின்ன கவுண்டியில் இருந்தோம். பேரனுடன் படிக்கும் இரு அமெரிக்க மாணவர்கள் அடிக்கடி வீட்டிற்கு வருவார்கள். அவர்களின் தாயார் என் மருமகளின் தோழியானார்கள். ஒருமுறை அவர்கள் வீட்டிற்குச் சென்றோம். அங்கே போயிருந்த பொழுது கண்ட காட்சி. அன்றுதான் கடையிலிருந்து இரண்டு துப்பாக்கிகள் வாங்கி வந்திருக்கின்றனர். இரு குழந்தைகள் கைகளில் அந்தத் துப்பாக்கிகள். நல்ல வேளை குண்டுகள் இன்னும் போடவில்லை. நம் வீடுகளில் தீபாவளி வந்தால் பட்டாசு விட வாங்கும் துப்பாக்கிப் போல் வைத்திருந்தனர். கடையில் வாங்கும் பொழுது குறிப்பிட்ட வயது மட்டும்தான் சான்று. அப்பாவிற்கு ஒன்று அம்மாவிற்கு ஒன்று. ஆனால் வைத்திருப்பது அந்தக் குழந்தைகள். நான் அந்த அம்மாவைக் கேட்டவுடன் பிள்ளைகளிடமிருந்து துப்பாக்கிகளை வாங்கி உள்ளே வைத்துவிடுவோம் என்றார்கள். ஆனால் நடைமுறையில் பாதுகாப்பாக வைப்பதில்லை.

ஒரு பள்ளியில் திடீரென்று இரு மாணவர்கள் நுழைந்து பல மாணவர்களையும் ஓர் ஆசிரியரையும் சுட்டுவிட்டு தங்களையும் சுட்டுக் கொண்டு இறந்தனர். 6 வயதுக் குழந்தை வீட்டிலிருந்து துப்பாக்கி எடுத்துவந்து முதல்நாள் தன்னிடம் சண்டையிட்ட தன் வயதுக் குழந்தையைக் கொன்றது. ஏன்? மாணவர்கள், இளைஞர்கள் துப்பாக்கியால் உயிர் வாங்குவதும் தங்கள் உயிரைப் போக்கிக் கொள்வதும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கின்றது.

இன்று இந்தியாவில் நடப்பதென்ன? தங்களை சினிமா ஹீரோக்களாக நினைத்துக் கொண்டு குற்றம் புரியவும் கொலை செய்யவும் ஆரம்பத்திருக்கின்றனரே ஏன்?

பள்ளிகளில் பாடத் திட்டங்களில் கல்வி முறைமட்டும் மாற்றினால் போதுமா? திறனை மட்டும் வளர்த்தால் போதுமா? என் காலத்தில் moral class என்று ஒரு வகுப்பு இருக்கும் . நீதிக் கதைகள் சொல்வார்கள். ஒழுக்கம்பற்றி, நற்குணம்பற்றி பேசும் பாட்டிகள் இப்பொழுதில்லை. கடவுள் மறுப்பு கொள்கையை வைத்துக் கொள்ளட்டும். ஆனால் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவைகளை வளர்க்க என்ன செய்கின்றோம். வீட்டிலும் சூழல் மாறிவிட்டது. பள்ளியிலும் வாழ்வியல் பற்றிய வகுப்புகள் கிடையாது. திறன் மட்டும் வளர்ந்தால் போதாது. ஒழுங்கான வாழ்வியலும் அந்தந்த வயதுக்கேற்ற பாடங்கள் எழுதப்பட்டு அவைகளையும் சிறப்புப் பாடமாகச் சேர்க்கப்பட வேண்டும்.

பாலியல் கல்வி என்று சொல்லி ஆண், பெண் உறவுகளை எப்படியெல்லாம் வைத்துக் கொள்வது என்று எழுதுவதும் சொல்லித்தரவதும் கல்வியா? அது கலவி பற்றியது. பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் இவர்களுக்கு வயதுக்கேற்ற அறிவுரைகள் சொல்லும் படியான தகவல்கள் இருக்க வேண்டும். செய்திதாளிலும், எல்லோரும் வாசிக்கும் வார இதழ்கள், மாத இதழ்களிலும் வருவதும் பாலியல் கல்வியல்ல. முதலில் இதனை முறைப்படுத்த வேண்டும். உளவியல் மருத்துவர், குழந்தைகள் மருத்துவர், கல்வியாளர் கூடி , பேசி பாடத்திட்டம் எழுதப்படவேண்டும்.

இன்னொன்றையும் சொல்ல விரும்புகின்றேன். எனக்கு ஒரு தங்கை. அவள் பெயர் சரசா. ஒரு நாள் தன் ஐந்து வயது பேரனைக் கட்டிப் பிடித்து முத்தமிடாள் உடனே அந்தக் குழந்தை என்ன சொன்னது தெரியுமா?

பாட்டி முத்தா கொடுக்காதே. அப்பா, அம்மா மாதிரி கல்யாணம் செய்திருக்கணும். அவங்கதான் முத்தம் கொடுக்கலாம்.

இது எப்படி குழந்தைக்குத் தெரிந்தது?

ஒரே கட்டிலில் பெற்றோர்களுடன் குழந்தையும் படுக்கின்றான். அது தூங்கிவிட்டது என்று நினைத்து, கணவனும் மனைவியும் உறவு கொள்கின்றனர். குழந்தை தூங்காமல் இருட்டில் நிழல்காட்சியைப் பார்க்கின்றது !

இது சிந்திக்க வேண்டிய பிரச்சனை

முன்காலத்தில் கணவன் மனைவி சேர்ந்து படுக்க மாட்டார்கள். மனைவி குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருப்பாள். மெதுவாகக் கணவன் வந்து தட்டி எழுப்பிக் கூட்டிச் செல்வான். வீட்டில் ஏதோ ஒரு இருட்டுப் பக்கம் அவர்களின் கலவி நடைபெறும். இக்காலத்தில் இந்த முறை சொன்னால் நம்ப மாட்டர்கள்.

மேலை நாட்டில் பெற்றவர்கள் ஒரு புறமும் , குழந்தை வேறு அறையிலும் தூங்குவார்கள். இப்படி தனித் தனியாக படுக்க அவ்வளவு பெரிய வீட்டிலா வாழ்கின்றோம்? குழந்தையைத் தனியாகப் படுக்க வைக்க மனம் ஒப்புமா?

ஒவ்வொரு தம்பதிகளும் வீட்டுச் சூழல் பார்த்துப் பேசி ஓர் வழி செய்து கொள்ள வேண்டும். பொதுவாக இதற்கு எந்த ஆலோசனையும் கூற முடியாது.

மற்ற பிரச்சனைகள் சிலவற்றையும் பார்க்கலாம்.

வீட்டைவிட்டு கல்விக்காக வெளிவரும் சிறுவர்கள் எதிர்கொள்ளூம் சூழல்களில் ஏற்படும் சில குணங்கள்

பழகும் தன்மை, விட்டுக் கொடுத்தல், சமரசம் செய்துகொள்ளல். , உதவி செய்தல், பொறுத்துக் கொள்ளுதல், ஊக்கம் பெறுதல், நட்பின் வலிமையறிதல் போன்ற இன்னும் சில பழக்கங்கள் நல்ல குணங்களுக்கு வழிவகுக்கும்.

விரும்பத்தகாத குணங்களூம் ஏற்படும்

கோபம், போட்டிகளில் தோல்வி யுற்றால் விரோதம். தனக்கு மட்டும் என்ற சுயநலம், வசதியானவர்களைப் பார்த்து வரும் ஆசைகள், பொறாமை, காழ்ப்புணர்ச்சி, தன்னை ஒரு ஹீரோவாகக் காட்ட செய்யும் பாவனைகள், பொய்கள், போலித்தனம், இவைகளால் படிப்பில் அக்கறை யின்மை, வீட்டிற்க்கு வந்த பின் பெற்றோர், உடன்பிறந்தோர், வீட்டிலுள்ள பெரியவர்களிடம் உண்மைகளை மறைத்தல், பொய்க் காரணங்கள் சொல்லுதல், வெளியிலுள்ளவர்களிடம் காட்டும் பாசம் கூட தன் சொந்தங்களிடம் காட்டுதல் குறைதல், கற்பனையுலகில் மிதத்தல் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

வீட்டில் பெரியவர்கள் சிறுவர்களை சரியானபடி வழி காட்டுதல் குறைந்துவிட்டது. முன்பு அவர்கள் வாழும் விதத்திலிருந்தே கற்றுக் கொள்ள நிறைய இருந்தன. இப்பொழுது நிலைமை மாறிவிட்டது

டீன் ஏஜ் அதாவது இளம் காளைப்பருவம் வந்துவிட்டால் பெண்களிடம் கவர்ச்சி உணர்தல், புகை பிடித்தல், போதை மருந்து சாப்பிடுதல் ஆரம்பிக்கும் காலம். பலர் இவைகளில் தங்களை இழக்க ஆரம்பிக்க வேண்டிவரலாம்.

“காதல்.” இந்த சொல்லே போதை தரும்.முன்பெல்லாம் மரபுக் கவிதைகள் எழுதிவந்தோம். இப்பொழுது புதுக்கவிதைகளின் காலம். காதல் கவிதைகள் எழுதுவது சுலபம். அதிலும் விழிகளூம் இதழ்களும் படும்பாடு. இக்காலத்தில் பெண்களில் பலரின் போக்குகள் மாற ஆரம்பித்திருக்கின்றன. காதலை அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக் கொள்ள மாட்டாள். அதே நேரத்தில் காதல் இல்லையென்றும் கூறமாட்டாள். அதற்குள் நம்ம பையன் கிறுக்கு பிடித்து குடிக்க ஆரம்பித்துவிடுவான். அவள் வேறு ஒருவனைத் தேர்ந்தெடுத்துவிட்டால் உடனே இவன் தன் உயிரை மாய்த்துக் கொள்வான். இவன் அறிந்த காதல் அப்படி. எத்தனை இளைஞர்களை நான் மீட்டிருக்கின்றேன்.

அடுத்து இவர்களைச் சுற்றி வளைப்பது ஊடகங்கள்.

ஊடகத்தாக்கங்கள் இவர்களை சுழலாகச் சுற்றிக் கொண்டிருக்கின்றன.

அக்காலத்தில் இப்பருவம் பாதுகாப்பில் இருந்தது. ஆனால் இக்காலம் வழுக்கல் நிறைந்தது. அவர்களை மட்டும் குற்றம் கூறமுடியுமா? கற்பூர புத்தியுள்ளவனும் தன் வாழ்க்கையை மட்டுமல்ல பிறர் வாழ்க்கையையும் சுட்டு அழிக்கின்றானே!

அரசியல் தெரிந்து கொள்ள வேண்டியதுதான். ஆனால் அரசியலில் மாணவர் பருவத்தில் இறங்குவது படிப்பதற்கு சரியா?

அரட்டை மூலம் ஆரம்ப காலத்தில் இளைஞர்கள் பலர் அறிமுகமனார்கள். பொறியியல் படிக்கும் மாணவன் ஒருவன் சொன்னது

வேலைக்குப் போனால் அதிகாரிகள் மிரட்டல், ஊர் மாற்றல் இருக்கும். அரசியலில் நுழைந்தால் சில கடைகளை மிரட்டினால் கூட காசு கிடைத்துவிடும். சம்பாதிக்க குறுக்கு வழிகள் நிறைய இருக்கு.. மாணவனின் மனத்தில் வன்முறையும், குறுக்கு வழி வாழ்க்கையும் விதைக்கும் அரசியல் வாழ்க்கை அந்தப் பருவத்தில் இருக்கலாமா?

பொழுது போக்கிற்கு சினிமா பார்க்கலாம். சினிமாப் பைத்தியங்களாக வேண்டுமா?

இன்னொரு புதிய மாற்றம் வளர ஆரம்பித்திருக்கின்றது. பல இடங்களிலிருந்து வரும் மாணவர்கள் ஓரிடத்தில் சேர்ந்து தங்க வேண்டிய நிலை. குறுக்கு வழியில் பணம் சேர்க்க கொள்ளை யடித்தல், பெண்களை வைத்து தொழில் நடத்துதல் போன்ற பழக்கங்கள். வேலையில்லா திண்டாடம் ஒரு புறம். தேவையான கூலி கிடைக்காதது இன்னொரு புறம்.

ஆரம்பித்திலேயே நிறைய சம்பாத்தியம் கிடைக்கும் வேலைகளில் இருந்தால். வீடு தேடும் பொழுது தனியாக வந்தால் வீடு கொடுக்க மாட்டார்கள். ஓர் ஆணும் பெண்ணும் தம்பதிகள் என்று பொய் சொல்லிக் கொண்டு குடிபோவது ஆரம்பமாகி யிருக்கின்றது. சேர்ந்து வாழும் பொழுது இருவருக்குள்ளும் நெருக்கம் உண்டாகிவிடும். நண்பர்கள் கூடி குடிப்பதுவும் உண்டு, அப்பொழுது அங்கே ஆண், பெண் என்று பார்ப்பதில்லை. ஆதிகால வாழ்க்கைக்குப் போய்விடுகின்றனர். ஒருவருக்கு மாற்றல் கிடைத்தால் வீட்டைக் காலி செய்ய வேண்டும். புது வீட்டிற்குப் போகும் பொழுது புதிய தம்பதிகள். இத்தகைய வாழ்க்கை மேலை நாடுகளில் வாழும் “ living together” வாழ்க்கையுமல்ல. காசுக்காக ஆண் வியாபாரிகள் தொழில் வேறு.

தங்கள் வீட்டுப் பிள்ளைகள் நிறைய சம்பாதித்துக் கொடுப்பதில் காரும் வீடும் வசதிகளூம் கிடைப்பதில் சில பெற்றோர்களும் பிள்ளைகள் எப்படி நடந்து கொண்டாலும் தடுப்பதில்லை.

இல்லறத்தின் இனிமையும் அமைதியும் இந்த இளைஞர்களுக்குக் கிடைக்குமா? இவர்களுக்குப் பிள்ளைகள் பிறந்தால் அவர்களுக்கு உறுதியான வாழ்க்கை அமையுமா?

இத்தனை சுனாமிகளுக்கு மத்தியில் வாழும் சிறுவர்களை, இளைஞர்களை சரியான பாதையில் செல்வதற்கு நாம் என்ன செய்கின்றோம்?

அவர்கள் யார்?

நம் வீட்டுப் பிள்ளைகள்.!

இந்த சமுதாயத்தின் எதிர்காலத்திற்குச் சொந்தமானவர்கள்

எதிர்காலம் என்ற ஒன்றைச் சரியாகக் கூட உணர முடியாத சக்கைகளாக ஆகிவிடுதல் சரியா?

இவைகளுக்குப் பொறுப்பு யார்?

ஒருவரா அல்லது இருவரா? ஒவ்வொருவரும் பொறுப்பானவர்கள். மனிதன் சுயநலத்தில் இந்தப் பிஞ்சுகளைக் கருக விட்டுக் கொண்டிருக்கின்றோம்

கல்வி முறைகள் மாற வேண்டும். திறன் வளர்க்கும் பாட முறைகளும் ஒழுங்கான வாழ்வியலுக்கு உள்ளமும் உடலும் தயார்ப்படுத்தும் சிறப்பு பாடத் திட்டங்களும் வகுக்கப்பட வேண்டும். பள்ளியில் விளையாட்டுகள், யோகா போன்றவைகளூக்கு முக்கியத்துவம் தர வேண்டும். இவைகளைக் கருத்தில் கொண்டு ஆய்வு செய்து கல்வி முறைகளை மாற்றி அமைத்தல் வேண்டும். பெற்றொர் களுக்கும் அவ்வப்பொழுது சில வகுப்புகள் நடத்திடல் வேண்டும். ஒரு முறை திட்டம் போட்டு விட்டால் அப்படியே கடமை முடிந்துவிட்டது என்று இருக்கக் கூடாது. அடிக்கடி நடை முறை செயல்பாடுகளைப் பார்த்து குறைகள் காணில் திருத்தங்கள் செய்தல் வேண்டும்.

எந்தத் திட்டமும் தொடர் கண்கானிப்பில் இருந்தால்தான் திட்டத்தின் நோக்கம் நிறைவேறும்.

நான் ஒன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். தவறாக எண்ண வேண்டாம் இதுவும் பார்த்து அறிந்ததே. ஆசிரியன் மாணவர்களை அழைத்துக் கொண்டு வெளியில் போய் சேர்ந்து குடிக்கக் கூடாது. மாணவர்களை வழி நடத்த வேண்டிய ஆசான் blue film நடத்தி, தனி சம்பாத்தியம் தேடக் கூடாது. ( இது கற்பனையல்ல. ஓரிடத்தில் நடப்பதை ஒரு நிருபர் காட்டினார். நான் பதைத்துப் போய் திட்டிவிட்டு வந்தேன் )திரை மறைவில் நடக்கும் குற்றங்கள் எத்தனை எத்தனை.?!

திண்டாடித் தவிக்கும் இளைஞர்களைத் திட்டுவதை விட்டு சரியான பாதையில் திருப்ப எத்தனை பேர்கள் முயல்கின்றோம்?!

நிறைய பேசுவோம். எழுதுவோம். நற்செயல்களில் எத்தனை பேர்கள் களத்தில் இறங்கி பணி செய்கின்றோம் ?!

ஓர் செய்தி கூறப் போகின்றேன். இது பலருக்கும் தெரியாதது. நினைவில் கூட இதை நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம்.

நாகரீகம், சுதந்திரம் என்றவுடன் நினைவிற்கு வரும் நாடு அமெரிக்கா.

சுதந்திரம் சிலருக்குக் கசக்க ஆரம்பித்தது. கசப்பு போய் பயம் வளர ஆரம்பித்தது.

அமெரிக்காவில் குழந்தையும் தாயும் தனித்தனியான அறைகளில்தான் படுக்க வேண்டும். கருவறையில் வைத்துக் காப்பாறியவள் பின்னால் அதனைத் தனியாக அமர்த்திவிடுகின்றாள். குழந்தை, சிறுவனாகி, சிறுவன் இளைஞனாகி இப்படி பருவங்கள் மாறும் காலத்தில் அவனுக்கு ஏற்படும் துணைகள் நண்பர்கள்தான். Sleep over என்றும் நண்பர்கள் கூடித் தங்குவர்கள். சில வீடுகளில் குழந்தைகளுக்கு play house என்று தனிக் குடில்கள் கூட உண்டு. இந்த வாழும் முறையினால் தங்களிடம் ஏற்படும் தகாத குணங்களைக் கண்டு ஒரு சிலர் வெறுத்தனர். தங்கள் வாழ்க்கை சீராக இருக்க வேண்டும் என்ற தாகம் வளர ஆரம்பித்தது. கல்லூரிகள்,, பல்கலைக் கழகங்கள் போய் தங்களுக்கு நல்லதொரு திட்டம் கொடுக்க வேண்டினர். யாரும் உதவவில்லை. பல பெரியோர்களை வேண்டினர். வழி காட்டவில்லை.. அரிமா சங்கத்தை நாடினர். அவர்கள் தேடலுக்கு ஓர் விடிவு ஏற்பட்டது. அரிமா சங்கத்தினர் கூடிப் பேசி இளைஞர்களின் நல்ல நோக்கத்தைப் புரிந்து கொண்டனர்.

அரிமா சங்கம் பல்கலைக் கழங்களை நாடியது. கேட்பவர்கள் கேட்டால் எதுவும் கிடைக்கும். அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. ஆய்வு செய்து அருமையான ஓர் திட்டம் வகுத்துக் கொடுத்தனர். அரிமா சங்கம் அத்திட்டத்தைப் பல நாடுகளில் செயல்படுத்த விரும்பியது. அதற்குப் பயிற்சி யாளர்களின் பயிற்சி யாளர்களுக்கு முதலில் பயிற்சி தர வேண்டும். செய்திகள் பறந்தன. செயல் வடிவம் பெற்றன. அந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அத்திட்டத்தின் பெயர்

QUEST

இத்திட்டதில் பயிற்சி பெற்றவர் திருமதி ராஜேஸ்வரி அனந்த ராமன் அவர்கள். இவருக்கு 14 மொழிகள் தெரியும். பள்ளியின் தலைமை ஆசிரியை. ஸ்கவுட்டில் முக்கிய பதவியில் இருப்பவர். நூற்றுக் கணக்கான கைத்தொழில்கள் தெரிந்தவர். பாட, ஆட, எழுத என்று பல கலைகள் தெரிந்தவர். பத்திரிகை உலகத்திற்கு நன்கு அறிமுகமானவர். இவரும் இவர் கணவரும் பல ஆண்டுகளாக அரிமா சங்கத்தில் இருந்து பல பணிகளைச் செய்தவர். அமெரிக்கா சென்று பயின்றவர். இவரிடம் இந்த திட்டம் ஒப்படைக்கப்பட்டவுடன் வேகமாக பயிற்சி வேலைகள் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு குழுவாகக் கூட்டிப் பயிற்சி தந்தனர்..

நான் பணீயிலிருந்து ஓய்வு பெற்று வீட்டில் இருந்தேன். சமுகப் பணிக்கு ஓய்வு கிடையாது. இப்பயிற்சியில் நானும் சேர்ந்தேன். பயிற்சி காலத்தில் என் சிந்தனைகள் விரிந்தன. எநத அளவு நாம் இதனை செயல்படுத்தலாம், எந்த அளவு இளைஞர்களுக்கு உதவலாம் என்பதை அடுத்துப் பார்க்கலாம்.

“சரியாகச் சிந்திக்காமலும் புத்தியை உபயோகிக்காமலும் , மனதுக்குகந்தபடிப் போகும் வழி நம்மை ஒரு நிலையில் இல்லாமல் செய்துவிடும்..எப்பொழுதும் மனோ தைரியம் இழக்கக் கூடாது. ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகே நாம் ஓர் காரியத்தில் இறங்க வேண்டும். நம் கடமையிலிருந்து வழுவாது, நம் சுயநலம் மட்டும் நாடாது பொது நலத்தில் மனதைச் செலுத்தி தர்மப்படி நடக்க வேண்டும். “

என். கணேசன் [வாழும் கலை]

தொடரும்

புகைப்படத்திற்கு நன்றி

Series Navigationக. நா. சுவும் நானும்(2)
author

சீதாலட்சுமி

Similar Posts

8 Comments

 1. Avatar
  Dr.G.Johnson says:

  இந்தத் தொடரில் பிள்ளைகளின் வளர்ப்பில் நமது பங்கு பற்றி சீதாலட்சுமி அவர்கள் அலசி ஆராய்ந்துள்ளார்கள். நாகரீகம் வெகு வேகமாக முன்னேறிவரும் இந்நாட்களில் பிள்ளைகளின் வளர்ச்சியும் வேறு விதமாகவே போய்க்கொண்டிருகிறது. உதாரணமாக இரண்டு வயது குழந்தைக்கு கைப்பேசியும் தொலைகாட்சி பெட்டியையும் இயக்கத் தெரிகிறது. தாயிடம் இல்லாமல் வீடு வேலைகாரியுடனோ அல்லது குழைந்தைகள் காப்பகத்திலோ இருக்க கற்றுக்கொள்கின்றன.
  பிள்ளைகளின் வளர்ப்பில் அவர்களின் சுற்றுச் சூழல் பெரும் பங்கு வகிக்கின்றது. உதாரணமாக கிராமத்தில் வளரும் பிள்ளைக்கும் நகரத்தில் வாழும் பிள்ளைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அது வறுமைக்கும் வளமைக்கும் உள்ள வேறுபாடு. இரு பிரிவினரையும் ஒரே விதத்தில் காண இயலாதுதான். இது பொதுவான பெரும் பிரச்னையே!
  காலையில் வயலுக்கு சென்றுவிடும் ஏழை விவசாயத் தம்பதியினர் தங்களின் பிள்ளைகளை எந்த விதத்தில் சரியான முறையில் பராமரிப்பார்? அவர்களால் வேலைக்காரியை நியமிக்க முடியாது. இவர்கள் பெரும்பாலும் தாத்தா பாட்டிகளிடம் வளர்வதுண்டு. கூட்டுக் குடும்பங்களில் இத்தகைய நன்மை இருந்தது. பிள்ளைகளுக்கு இதன்மூலம் சொந்தபந்த உறவுகளும் பெரியவர் மீது மதிப்பும் மரியாதையும் இயற்கையிலேயே இவ்வாறு ஊட்டப்பட்டது. ஆனால் கூட்டுக் குடும்பம் இல்லாத நகர வாழ்க்கையில் சித்தப்பாவும் மாமாவும் அங்கிள் என்றுதான் அழைக்கப்படுகின்றனர்! அவர்களுக்கு முறையான உறவு முறைகள் தெரிவதில்லை. அதோடு அளவுக்கு அதிகமான செல்லமும் பணமும் தரப்படுவதால் இவர்கள் இளம் வயதிலேயே சுதந்திரமாக செயல்பட விரும்புகின்றனர். படிப்பில் கவனம் செலுத்தாமல் கேளிக்கைகளில் நேரத்தை வீணடிப்பது, தீய நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, சிறு வயதிலேயே புகைக்கவும் குடிக்கவும் கற்றுக்கொள்வது, திரைப்பட கதாநாயகர்கள்போல் நடக்க நினைப்பது போன்ற சிக்கல்களில் மாட்டிக்கொள்கின்றனர்.
  மற்றொரு இமாலாய பிரச்னை இளம் வயதினரிடைய வளர்ந்துவரும் பாலியல் ஆர்வம்! இதற்கு முக்கிய பங்கு ஆற்றுவது நமது திரைப்படங்களும் இணையத்தளமும் எனலாம். இப்போதெல்லாம் வயதுக்கு வந்ததுமே இளம் வயதினர் பாலியல் ஆராய்ச்சியில் வீழ்கின்றனர். இதனால் தகாத உறவும், தேவையற்ற கற்பமும், பல்வேறு மன உளைச்சலுக்கும் ஆளாகி தங்களின் எதிகாலத்தை பாழ் படுத்திக்கொள்கின்றனர். பாலியல் இன்பத்தை உணர்ந்தபின்பு எந்தவிதமான அறிவுரையும் எடுபடாது!
  பாலியல் பற்றிய விழிப்புணர்வை எந்த வகையில் போதித்து இவர்களை திருமண வயதுவரை காத்திருக்கச் சொல்வது? இப்போதெல்லாம் பாலியல் ஹார்மோன்கள் அதிவேகத்தில் செயல்படுவது கண்கூடு!
  இக் கட்டுரையில் திருமதி ராஜேஸ்வரி அனந்த ராமன் மூலமாக நடத்தப்படும் குவெஸ்ட் எனும் நிறுவனம் எவ்வாறு இத்தகைய பிரச்னைகளை சமாளிக்க முயன்றுள்ளது என்பது பற்றியும் விளக்கினால் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
  தன்னலம் கருதாது இவ்வாறு பழுத்த வயதிலும் பொதுநலம் கருதி சிறந்த சமுதாயப் பார்வையுடன் தொடர்ந்து இப்பகுதியைப் படைத்துவரும் சீதாலட்சுமி அம்மையாருக்கு எனது அன்பு வாழ்த்துக்கள். ..டாக்டர் ஜி. ஜான்சன்.

  1. Avatar
   seethaalakshmi says:

   அன்பு ஜான்
   தங்கள் வருகைக்கு நன்றி. உடல்நிலை காரணமாகக் கணினி பக்கம் வர முடியாமல் இருந்தேன். எனவே உடனே பதில் கொடுக்க முடியவில்லை. நீங்களும் அருமையாகப் பிரச்சனைகளை அலசி இருக்கின்றீர்கள். நன்றி.
   குவெஸ்ட் திட்டம் பலரின் முயற்சியில் பிறந்தது. பல திட்டங்கள், சட்டங்கள் நாமும் இயற்றினோம். ஆனால் சமுதாயத்தை ஒரு கட்டுக்குள் கொண்டு வர முடிந்ததா?. முன்னால் இரண்டு அடி வைத்தால் பின்னால் நான்கு அடி இழுக்கப் பல ஊடகங்கள் இருக்கின்றனவே. தோல்விகளைக் கண்டு துவண்டு விடக் கூடாது. இந்தளவு சட்டங்களும் திட்டங்களும் இல்லாமல் போயிருந்தால் என்றோ மீண்டும் காட்டு விலங்குகளாக முற்றிலும் மாறியிருப்போம். நல்ல எண்ணத்தில் முயற்சிப்போம்
   சீதாலட்சுமி

 2. Avatar
  jayashree shankar says:

  ////கல்வி முறைகள் மாற வேண்டும். திறன் வளர்க்கும் பாட முறைகளும் ஒழுங்கான வாழ்வியலுக்கு உள்ளமும் உடலும் தயார்ப்படுத்தும் சிறப்பு பாடத் திட்டங்களும் வகுக்கப்பட வேண்டும். பள்ளியில் விளையாட்டுகள், யோகா போன்றவைகளூக்கு முக்கியத்துவம் தர வேண்டும். இவைகளைக் கருத்தில் கொண்டு ஆய்வு செய்து கல்வி முறைகளை மாற்றி அமைத்தல் வேண்டும். பெற்றொர் களுக்கும் அவ்வப்பொழுது சில வகுப்புகள் நடத்திடல் வேண்டும். ஒரு முறை திட்டம் போட்டு விட்டால் அப்படியே கடமை முடிந்துவிட்டது என்று இருக்கக் கூடாது. அடிக்கடி நடை முறை செயல்பாடுகளைப் பார்த்து குறைகள் காணில் திருத்தங்கள் செய்தல் வேண்டும்.

  எந்தத் திட்டமும் தொடர் கண்கானிப்பில் இருந்தால்தான் திட்டத்தின் நோக்கம் நிறைவேறும்./////

  அன்பு அம்மா..

  நீங்கள் எழுதிய அத்தனையும் இன்று நடைமுறையில் ஒவ்வொரு விதமாக ஒவ்வொரு வீட்டிலும் பிரச்சனைகளாக எதிர்கொள்கிறார்கள். யாரும் மறுக்க முடியாது. நீங்கள் சொல்லியிருப்பதை கடைபிடித்தால் , ஒரு திட்டமாக எடுத்து செயல்பாட்டில் இறங்கினால் ஓரளவு எதிர்கால சந்ததியை காப்பாற்றலாம்.
  அம்மா…அருமையாக எழுதி இருக்கிறீர்கள். உங்கள் எழுத்துக்கள் சிந்தனைக் கதவைத் தட்டுகிறது. வளரும் பயிர்களைப் பாதுக்காக்கும் கடமை விவசாயிக்கு இருப்பது போல….! நாளைய ஆரோக்கிய சமுதாயத்தை இன்றைய இளந்தளிர்களைக் காப்பதில் தான் உருவாக்க முடியும் என்பதால் நீங்கள் சொல்லியிருக்கும் திட்டம் அமுலாக்கப் பட வேண்டும் .
  உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் . உங்கள் சேவை மகத்தானது.
  அன்புடன்

  ஜெயா.

  1. Avatar
   seethaalakshmi says:

   அன்பு ஜெயா
   உன் தொடர் வருகைக்கு நன்றி. பிறப்பே ஒரு பெண்ணின் வலியில்தான். கடலில் அலைகள் ஓயாது. வாழ்க்கையில் பிரச்சனைகளூம் ஓயாது. இது போன்ற எழுத்துக்கள் ஓர் ஊன்றுகோல். புரிந்தவர் பயன் பெறுவர்.
   ஒவ்வொருவரும் முடிந்த மட்டும் நல்ல எண்ணங்ளுடன் முயற்சிப்போம்.
   எழுத்து படிப்பவர்க்கு மட்டும் அதுவும் சரியான பாதையில் சிந்திப்பவர்க்குமட்டும் உதவும்
   பேச்சு அதனைவிட வலி,மையானது
   மிகவும் வலிமையானதும் பயன் தரக்கூடியதுவும் களப்பணியே
   முடிந்தவர் முடிந்ததையாவது செய்யட்டும்.
   மனிதம் காப்போம்
   அன்பு அம்மா

 3. Avatar
  Arulgnanasekaran says:

  இது ஒரு அருமையான அனுபவம் வாய்ந்த கட்டுரை, இன்றய காலகட்டத்தில் சிறுவர் முதல், பெரியவர் வரை தெரிந்து கொள்ளவேண்டிய செய்திக்ள். பெரியவர்கள் எப்படி குழந்தைகள் இருக்கும்போது நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கு
  இந்த கட்டுரை பயனுள்ளது. குழந்தைகளுக்கு எப்படிபட்ட கல்வி தேவை என்பதற்கு இது ஒரு அருமையான கட்டுரை.
  அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் பலர் “copy and paste “ முறையில்தான் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
  நிறைவான செய்திவழங்கியதற்கு நன்றி… மேலும் தொடர வாழ்த்துக்கள்…

  1. Avatar
   seethaalakshmi says:

   அன்பு அருள்
   பெயரிலேயே “அருள்” சுமந்திருக்கின்றீர்கள். வருகை தந்தமைக்கு நன்றி. உங்களால் முடிந்தளவு இந்த சமுதாயத்திற்கு உதவி செய்யவும். தெரிந்தவர்ல்கள், அருகில் உள்ளவர்களுக்கு உங்களுக்கு எதெல்லாம் நன்மைதரும் என்று தோன்றுகின்றதோ அதனைச் சொல்லவும். எங்கே கேட்கப் போகின்றார்கள் என்று தளரந்துவிட வேண்டாம். இதுவே என் வேண்டுகோள்
   சீதாலட்சுமி

 4. Avatar
  R.Karthigesu says:

  சீதாம்மா,

  வழக்கம் போல அனுபவத்திலிருந்து பேசுகிறீர்கள்.

  மேற்குலகிலும் சரி, கீழை நாடுகளிலும் சரி, குழந்தை வளர்ப்புக்கான வழிமுறைகள் மாறியும் வளர்ந்தும் வருகின்றன. மேலை நாடுகளில் அறிவு வளர்ச்சிக்கும் திறன் வளர்ச்சிக்கும் முதன்மை கொடுக்கப்பட்டு ஒழுக்கம் இரண்டாவதாகத்தான் வைக்கப்படுகிறது. ஒழுக்கம் என்பது (ஒரு சில அடிப்படை விதிகள் தவிர) பிள்ளை தானாகக் கற்றுக்கொள்ளட்டும் என்றே விடப்படுகிறது. ஒழுக்கம், கட்டுப்பாடு என்று குடும்பம் அதன் மீது திணிப்பது குழந்தையின் மனவளர்ச்சியை முடக்கக் கூடும் என்ற எண்ணமும் இருக்கிறது.

  கீழை நாடுகளில் ஒழுக்கம் அதிகமாகப் போற்றப்படுகிறது. ஆனால் இங்கும் ஆங்கில முறைக் கல்விக் கூடங்களில் இது அதிகம் வலியுறுத்தப்படுவதில்லை. தாய்மொழிக் கல்விக்கூடங்களில்தான் இது அதிகம் வலியுறுத்தப்படுகிறது . அதற்கு மேல் குடும்பம்தான் பொறுப்பு.

  இதையெல்லாம் பார்த்து பிள்ளைகளுக்கு இந்தக் காலத்தில் ஒழுக்கமும் அடக்கமும் இருப்பதில்லை என்கிறோம். ஆனால் இந்தக் காலத்துத்துப் பிள்ளைகளிடம்தான் அறிவு வளர்ச்சியும் திறன் வளர்ச்சியும் அதிகம் இருக்கிறது. எது முக்கியம்?

  ஒழுக்கம் அடக்கம் என்பவை தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தோடு இணக்கமாக வாழப்பழகிக் கொடுத்தால் போதும் என்பதுதான் மேற்கத்திய கோட்பாடு என்று தெரிகிறது. “அறஞ்செய விரும்பு” என்றெல்லாம் அது நீளுவதில்லை.

  ரெ.கா.

  1. Avatar
   seethaalakshmi says:

   அன்பு கார்த்திகேசு அவர்களுக்கு
   வருகை தந்தமைக்கு நன்றி
   உங்கள் பின்னூட்த்திற்குப் பதில் எழுத ஆரம்பித்தால் அதுவும் ஓர் நீண்ட கட்டுரையாய் எழுத வேண்டும்.. அப்படிப்பட்ட கேள்வியைக் கேட்டிருக்கின்றீர்கள். “ ஒழுக்கம் “ பற்றிய விளக்கங்கள் அடுத்து விரிவாக எழுதுகின்றேன். அடக்கம்பற்றியல்ல. அருமையான தமிழ்ச் சொல். இந்த சொல்லில் நிறைய விளையாடலாம். தாங்கள் ஓஎ எழுத்தாளர். பல கதைகளே புனையலாம். அச்சம், மடம், னாணம், பயிர்ப்பு இதனை தூக்கி எறியச் சொன்னவன் பாரதி. சிறுவயது முதல் எனக்குக் கிடையாது. என்னிடம் , பெண்மையும் மென்மையும் கிடையாது. இவைகளை என் இயல்புகளாகச் சொல்கின்றேன். குறை, நிறை என்பது ஒவ்வொருவரும் ஒரு கருத்தை வைத்திருப்பார்கள், அதற்கேற்ப பொருள் எடுத்துக் கொள்ளலாம். இந்தக் குணங்களால் எனக்குப் பிரச்சனைகளூம் வந்திருக்கின்றன. என்னைக் கண்டு பயந்து ஒதுங்கியும் இருக்கின்றனர்
   தொடரைச் சீக்கிரம் முடிக்க எண்ணுகின்றேன். உங்கள் வார்த்தைகள் “ஒழுக்கம், அடக்கம்” பற்றி எழுதாமலும் செல்ல முடியாது. செல்லவும் கூடாது இன்றைய சமுதாயத்தில் ஊசலாடிக் கொண்டிருப்பவைகள். ஓரளவாவது எழுத முயற்சிக்கின்றேன் ஏற்கனவே வெளீயில் இருந்து என்னைத் தூண்டுபவர்களில் சில எழுத்தாளர்கள் இருக்கின்றனர். ஜெயகாந்தனிடம் இதுபற்றிப் பேச வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியிருக்கின்றீர்கள்
   வெறும் பொழுது போக்கிற்காக எழுதுபவரல்ல நீங்கள் என்று அறிவேண்.
   இறைவன் எனக்கு சக்தி கொடுக்கட்டும்.
   உங்கள் வரவு எனக்கு உற்சாகத்தை அளிக்கின்றது
   நன்றி
   சீதாலட்சுமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *