அக்னிப்பிரவேசம்- 11

This entry is part 42 of 42 in the series 25 நவம்பர் 2012

 

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

 yandamoori@hotmail.com

தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

பரீட்சை எழுதிவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தாள் சாஹிதி. இனி இரண்டு மாதம் எங்கேயும் போகாமல் வீட்டிலேயே இருக்கலாம் என்று நினைக்கும் போதே திருப்தியாய் இருந்தது.

தாய் பூஜையில் இருந்தாள். அதேதோ நாற்பது நாள் நோன்பு. தினமும் உபவாசம். இரவில் மட்டும் பழமும் பாலும் அருந்தி வந்தாள். அந்த நோன்பு யார் பண்ணச் சொன்னார்கள் என்று சாஹிதிக்குத் தெரியாது. ஆனால் தாயை அந்த நிலையில் பார்க்கும் போதெல்லாம் தந்தையின் மீது அளவு கடந்த கோபம் வந்தது.

சாஹிதி என்ன பண்ணுவதென்று புரியாமல் தோட்டத்தை நோக்கி நடந்தாள். புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு ஊஞ்சலில் உட்கார்ந்தாள். ஆனால் அதைப் படிக்கத் தோன்றவில்லை. தந்தைப் பற்றிய யோசனையில் மூழ்கி இருந்தாள். அதற்குள் காண்டெஸ்ஸா கார்  கேட் வழியாய் உள்ளே வருவது தென்பட்டது. சந்திரன் எப்போதும் போல் ஹாரன் அடிக்கவில்லை. காரை விட்டு இறங்கியவன் சாஹிதி பார்த்துக் கொண்டிருந்த போதே படிகளில் ஏற்ப போனவன் அப்படியே நின்றுவிட்டான். அவன் கைகள் காற்றில் எதையோ பிடிப்பதற்கு முயற்சி செய்வது போல் அலை பாய்ந்து கொண்டிருந்தன.

‘தந்தை அதற்குள் குடித்துவிட்டு வந்திருக்கிறாரா, என்ன?’ என்று எண்ணிக்கொண்டே சாஹிதி தன்னை அறியாமல் அந்தப் பக்கமாய் அடியெடுத்து வைத்தாள். அவள் தந்தை அருகில் போவதற்குள் அவர் இருகைகளாலும் மார்பை அழுத்திக் கொண்டே கீழே சரிந்துவிட்டார்.

சாஹிதிக்குப் பயம் ஏற்பட்டது. ஓட்டமாய் ஓடிப போய் பிடித்துக் கொண்டாள். கோபத்தை எல்லாம் மறந்து விட்டாள். வலியால் துடித்துக் கொண்டிருந்தான் சந்திரன்.

“சிம்மாசலம்… மம்மி..” அவ்வளவு பெரிய குரலில் என்றுமே கத்தியது இல்லை.

‘டாடீ! என்னவாச்சு டாடீ?”

“வலிக்கிறது சாஹிதி.” வாயிலிருந்து வார்த்தை கூட சரியாக வெளிவரவில்லை. வேலைக்காறாக்கள் எல்லோரும் ஓடிவந்தார்கள். அவனை உள்ளே தூக்கிக் கொண்டு போய்ப் படுக்க வைத்தார்கள். சாஹிதி போன் பண்ணி டாக்டரிடம் தெரிவித்தாள். அவர் உடனே வருவதாய்ச் சொன்னார். பயந்து போன சாஹிதி வேறு எதைப் பற்றியும் யோசிக்க முடியாமல் பூஜை அறைக்குள் ஓடினாள்.

‘மம்மி! டாடீக்கு என்னவோ ஆகிவிட்டது. சீக்கிரம் வாயேன்.”

“என்ன இது? பூஜையறைக்குள் செருப்பு காலோடு வந்துவிட்டாய்?” கோபமாய் கத்தினாள் நிர்மலா.

“என்னவென்று தெரியவில்லை மம்மி. டாடீ கீழே விழுந்துவிட்டார். வந்து பாரு.” கோபமாய் கத்தினாள். இது வழக்கம்தான் என்பது போல் நிர்மலா சுவாமி மாடத்திலிருந்து குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டு, பூவை எடுத்து தலையில் சூடிக் கொண்ட பிறகுதான் வெளியே வந்தாள்.

அதற்குள் டாக்டர் வந்துவிட்டார். அப்பொழுதுதான் அவன் குடித்துவிட்டு வரவில்லை என்றும் உண்மையாகவே உடல்நலம் சரியாக இல்லை என்றும் நிர்மலா புரிந்து கொண்டாள். உடனே அழுதபடி அவனை நெருங்கினாள்.

“பரவாயில்லை. மைல்ட் ஹார்ட் அட்டாக். கொஞ்ச நாள் முற்றிலும் ஒய்வு தேவை. மருந்துகளை அனுப்பி வைக்கிறேன். நர்சையும் ஏற்பாடு செய்யட்டுமா?” கேட்டார் டாக்டர்.

“தேவையில்லை. நானே பார்த்துக் கொள்கிறேன்” என்றாள் நிர்மலா. அவள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. சந்திரன் கண்களை மூடிய நிலையில் படுத்திருந்தான்.

நள்ளிரவு தாண்டிவிட்டது. சாஹிதிக்கு விழிப்பு வந்தது. எவ்வளவு முயன்றாலும் தூக்கம் வரவேயில்லை. மெதுவாய் எழுந்து தந்தையின் அறைக்குப் போனாள். சந்திரன் உறங்கிக் கொண்டிருந்தான். பக்கத்து சோபாவில் தாயும் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள். பூஜை புனஸ்காரங்களுடன் களைத்துப் போய் இளைத்து விட்டிருந்தாள் அவள். சாஹிதி அந்தப் பக்கமாய் வந்து உட்கார்ந்து கொண்டாள். தந்தையின் பக்கத்திலேயே சோபாவில் தாய். அவ்விருவரையும் ஒன்றாகப் பார்த்துக் கொண்டு அவள்! அந்தக் காட்சி ரொம்ப அபூர்வமாகத் தோன்றியது. என்றும் இல்லாதவாறு பாசப்பிணைப்பு தம் மூவருக்கும் இடையில்.

“சாஹிதி!”

தந்தையின் அழைப்பைக் கேட்டு திடுக்கிட்டாள்.

“தூக்கம் வரவில்லையா? இப்படி அருகில் வாம்மா.” அவர் குரலில்தான் எவ்வளவு பரிவு! இவ்வளவு நாளாய் அது எங்கே போய் ஒளிந்து கொண்டிருந்தது?

“இல்லை டாடீ!” என்று அருகில் போய் உட்கார்ந்து கொண்டாள். அவள் குரல் தழுதழுத்தது.

“குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடும்மா”

பக்கத்திலேயே இருந்த டம்பளரை எடுத்துக் குடிக்கச் செய்தாள்.

“பரீட்சை நன்றாக எழுதினாயா? தினமும் இரவில் ரொம்ப நேரம் வரையில் விழித்துக் கொண்டு படித்து வருகிறாயே. கவனித்துக் கொண்டுதான் இருந்தேன்.”

“நன்றாக எழுதினேன் டாடீ! முதல் வகுப்பு நிச்சயம்.”

“வெரிகுட்! நன்றாகப் படி. நீ எது வரையில் படிக்க விரும்புகிறாயோ, அவ்வளவும் படி. வெளிநாட்டுக்குப் போவதாக இருந்தாலும் சரி.”

“அப்படியே ஆகட்டும் டாடீ.”

“போய் படுத்துக்கொள் சாஹிதி. ரொம்ப நேரமாகி விட்டது. எனக்கு பரவாயில்லை. கவலைப் படாதே. பத்து நாட்களில் எழுந்து நடமாடுவேன்.”

“இனி ஒருபோதும் குடிக்காதீங்க டாடீ.” துணிச்சலை வரவழைத்துக் கொண்டு மெதுவாய் சொன்னாள். இருவரின் பார்வையும் சந்தித்துக் கொண்டன.

சந்திரன் மெல்லச் சிரித்துவிட்டு “சரி” என்றான்.

“என் மேல் ஆணை!”

“உன் மேல் ஆணை, போதுமா? போய்ப் படுத்துக்கொள்.”

அவள் அறைக்கு வந்து படுத்துக் கொண்டாள். சந்தோஷத்தாலும், திருப்தியாலும் மனம் பூரித்து விட்டிருந்தது. இது செண்டிமெண்டா? அல்லது குடும்ப வாழ்க்கையில் இருக்கும் அன்பின் சக்தியா? எதுவாக இருந்தாலும் அன்று இரவு அவள் நிம்மதியாக உறங்கினாள்.

*******

சந்திரன் நன்றாக தேறிவிட்டான். ஆனாலும் டாக்டர்கள் அவனை கட்டிலை விட்டு இறங்க அனுமதிக்கவில்லை. பரமஹம்சா வந்தான். நிர்மலா அவனுக்குக் கடிதம் எழுதி வழைத்திருக்கிறாள் என்று யாருக்கும் தெரியாது. அது மட்டுமே இல்லை. அவன் வந்திருப்பதாய் சந்திரனுக்குத் தெரியப் படுத்தவும் இல்லை. அவனைக் கொண்டு பூஜைகள் செய்ய வைப்பது தெரிந்தால், சந்திரன் ஆவேசப்படுவான் என்று நிர்மலாவுக்குத் தெரியும். பிரசாதத்தை மட்டும் சாப்பாட்டில் கலந்து அவனுக்குத் தெரியாமல் கொடுத்து வந்தாள்.

நான்கு நாட்களிலேயே சந்திரனுக்குக் கொஞ்சம் தெம்பு வந்து விட்டது. எல்லாம் நார்மலாக இருந்தது.

“கொஞ்சம் அப்பாவைப் பார்த்துக்கொள். நான் கோவிலுக்குப் போய் வருகிறேன்” என்றாள் நிர்மலா. அவள் நிறைய கடவுள்களுக்கு வேண்டிக் கொண்டிருந்தாள்.

“சரி மம்மி” என்று போய் தந்தையின் அறையில் உடகார்ந்து கொண்டாள். ஆரஞ்சு சாற்றைப் பிழிந்து குடிக்கக் கொடுத்தாள். சந்திரன் கண்களை மூடியபடி படுத்திருந்தான். ஏனோ தந்தை கொஞ்சம் சோர்வாக இருப்பது போல் தோன்றியது அவளுக்கு. ஒரு முறை டாக்டருக்குப் போன் பண்ணுவோமா என்று நினைத்தாள். தாய் வந்த பிறகு கேட்டுவிட்டுப் பண்ணுவோம் என்று சும்மாயிருந்து விட்டாள்.

சோபாவில் உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த சாஹிதி, தந்தையின் முகத்தில் தோன்றிய மாறுபாட்டைக் கவனிக்கவில்லை. அவள் பார்க்கும் போது அவன் முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியிருந்தது. சாஹிதி ஓடிப்போய் டாக்டருக்குப் போன் பண்ணிவிட்டு வந்தாள். அவள் திரும்பி வந்த போது அவன் நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்தான். அவள் பயம் கொஞ்சம் தணிந்தது.

“டாடீ! வலிக்கிறதா? மருந்து கொடுக்கட்டுமா?” அருகில் சென்று கேட்டாள். அவன் பதில் பேசவில்லை.

தந்தையின் உறக்கத்தைக் கெடுக்க விரும்பாமல் சாஹிதி அருகிலேயே உட்கார்ந்து கொண்டாள். டாக்டர் வந்தார்.

“இப்போ கொஞ்சம் தேவலை போலிருக்கு டாக்டர். தூங்கிக் கொண்டு இருக்கிறார்.”

அவர் பரிசோதித்துப் பார்த்துவிட்டு அவள் முகத்தை வருத்தத்துடன் நோக்கினார். “மம்மி எங்கே பேபி?”

“கோவிலுக்குப் போயிருக்கிறாள். இப்போ வந்து விடுவாள்.”

அவளிடம் எப்படிச் சொல்லுவது என்று அவருக்குத் தெரியவில்லை. “நீ வெளியே போய் உட்காரும்மா. அப்பாவிடம் நான் இருக்கிறேன்.”

சாஹிதி புரியாதவள் போல் பார்த்தாள். “எதுக்கு?”

“உயிர் போய்விட்டதும்மா. அவர் இனி இல்லை.”

ஒரு வேதனைக் கீற்று.. துக்கத்தால் இரண்டாய் பிளந்த ஓலம்! இதயத் தீயில் எரிந்து சாம்பலாகிவிட்ட அன்பு! மழையாய் பொழிந்த நயனங்கள்! அவள் அப்படியே நின்றுவிட்டாள்.

நிர்மலா உள்ளே வந்தாள். அதற்குள் அவளுக்கு விஷயம் தெரிந்து விட்டதென்று அவள் முகமே பறைச்சாற்றியது. கணவனுக்குப் பக்கத்திலேயே சரிந்துவிட்டு அழத் தொடங்கினாள். கையிலிருந்த பிரசாதம் நழுவி கீழே விழுந்தது.

‘ஸ்பெஷலாக பூஜை பண்ணி பிரசாதம் கொண்டு வந்திருக்கிறேன். சாப்பிடுங்க. ப்ளீஸ்.. சாப்பிட மாட்டீங்களா” என்று பைத்தியம் பிடித்தவள் போல் புலம்பிக் கொண்டிருந்தாள். சாஹிதிக்கு அவளைப் பார்த்தால் பயமாக இருந்தது.

“மம்மி!” என்று போய் மடியில் விழுந்து கதறினாள். அதற்குள் பரமஹம்சா உள்ளே வந்தான். இரண்டு நிமிடங்கள் கண்களை மூடிக் கொண்டு மௌனமாய் நின்றான்.

“சாஹிதி!” எழுந்துக்கொள் குழந்தாய்” என்று அவளை எழுப்பி உட்கார வைத்தான்.

“நிர்மலா! வாங்க சுவாமி அறையில் போய் உட்கார்ந்து கொள்ளுங்கள். அங்கேதான் மனதிற்கு நிம்மதி கிடைக்கும்.” அவள் இரு தோள்களையும் பற்றி எழுப்பினான். தோளைச் சுற்றிக் கைப் போட்டு நடத்தி அழைத்துக் கொண்டு போனான். மேல்தலைப்பு சரிந்து விழுந்ததை கூட கவனிக்க  முடியாதபடி துக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். ஆறுதல் சொல்லுவது போல் ஒரு கையால் அணைத்தபடி நடத்தி அழைத்துச் சென்று கொண்டிருந்தான் அவன். அவள் மார்பின் மீது அவன் கைப் பதிந்து இருந்ததை யாரும் கவனிக்கவில்லை. அவன் உதடுகள் கடவுளின் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தன.

நண்பனின் மரணம் அவனை மிகவும் தளரச் செய்து விட்டதென்று அவன் முகமே சொல்லியது. அந்த வேதனையை பிரார்த்தனையின் மூலமாக தாங்கிக்கொள்ள அவன் முயற்சி செய்து கொண்டிருந்தான்.

சாஹிதியின் இதயத்தில் எங்கேயோ ஏதோ குத்தியது போன்ற வேதனை! அந்த வேதனை தந்தையின் மரணத்தால் மட்டுமே வந்தது அல்ல.

.சந்திரனின் பிணத்தை ஹாலில் பாயில் கிடத்தினார்கள்.  சிம்மாசலம் தலைமாட்டில் தீபத்தை ஏற்றி வைத்தான். அந்த வெளிச்சம் பிணத்தின் முகத்தில் பட்டு விகாரமாய்த் தென்பட்டுக் கொண்டிருந்தது. ஊதுபத்தியின் புகையும், பிணத்தின் மீது தெளிக்கப்பட்ட கற்பூரமும் சேர்ந்து அறையில் பரவியிருந்த வேதனை நிறைந்த சூழ்நிலையை விரட்டியடிக்க செய்து கொண்டிருந்த முயற்சி பலனளிக்க வில்லை. அந்த நறுமணத்திலும் மரணத்தின் சாயல் பதிந்துக் கொண்டிருந்தது.

அவற்றுக்கெல்லாம் அதீதமான நிலையில் நிர்மலா சுவாமி அறையில் உட்கார்ந்து இருந்தாள். அவள் பார்வை சலனமற்று நிலைத்திருந்தது. பரமஹம்சா அவளுக்கு எதிரே உடகார்ந்து கொண்டு தியானம் செய்து கொண்டிருந்தான். ஹாலில் இருந்த காட்சியைவிட அறையில் தென்பட்ட இந்தக் காட்சிதான் எல்லோரையும் கவர்ந்து கொண்டிருந்தது. யார் யாரோ வந்தபடி இருந்தார்கள். நின்று கூடி பேசிக் கொண்டிருந்தார்கள். கணவன் இறந்து போனால் அழுது புலம்பாமல் பக்தியில் மூழ்கிவிட்ட அவளைப் பார்த்தால் அபூர்வமாகத் தோன்றியது. மதிப்பு ஏற்பட்டது.

சாஹிதி மட்டும் தந்தையின் பிணத்திற்கு அருகில் உட்கார்ந்து இருந்தாள். மௌனமாய் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் எண்ணங்களைச் சிதறடித்தபடி உறவினர்கள் அவள் அருகில் வந்தார்கள். அவளை அங்கிருந்து எழுப்பி உள்ளே அழைத்துச் சென்றார்கள். காண்டெஸ்ஸா காரில் தவிர எதிலும் பயணம் செய்திராத சந்திரனை இறுதிப் பயணத்திற்குத் தயார் செய்தார்கள். நிர்மலாவை வலுக்கட்டாயமாக வெளியே அழைத்து வந்தார்கள். முகத்தில் குங்குமத்தை அப்பினார்கள். எல்லோரும் பார்த்துக் கொண்டு இருக்கும்போது சந்திரனின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது.

எப்போதுமே தனியாய் பயணித்துக் கொண்டிருந்த சந்திரனின் இறுதி பயணத்திற்கு பந்துக்கள் எல்லோரும் கும்பலாய் வந்து சேர்ந்தார்கள். ஊர்வலம் தொலைவில்; போய் மறையும் வரையில் சலனமில்லாமல் அப்படியே பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள் சாஹிதி.

******

 

பத்து நாட்கள் கழிந்து விட்டன. சந்திரன் உயிருடன் இருந்த வரையிலும் உறவினர்கள் யாரையுமே நெருங்க விடவில்லை. தன் வெறுப்பை எல்லாம் அவர்களைத் தொலைவில் வைத்துத் தீர்த்துக் கொண்டான். ஆனால் இறுதிச் சடங்குகளுக்காக எல்லோரும் வந்து சேர்ந்தார்கள். ஏற்பாடுகள எல்லாம் பலமாக நடைபெற்றுக் கொண்டு இருந்தன. சாஹிதிக்கு அதையெல்லாம் பார்க்கும் போது உடல் பற்றி எரிவது போல் இருந்தது.

தாயை பல விதமாய் துன்புறுத்திக் கொண்டிருந்தபோது குறுக்கிடாத இந்தக் கோழைகள், இன்று அவர் போய் விட்டது தெரிந்ததுமே அவள் பொட்டை  அழித்து, வளையல்களை உடைத்தெறிந்து, பூவைப் பிய்த்தெறிந்து மகிழ்ச்சி அடைவதற்காக வந்திருக்கிறார்கள்.

“பெண்களுக்கு பூவும், போட்டும், வளையல்களும் அலங்காரச் சின்னங்கள். அவள் பிறந்தது முதல் இருப்பவைதான். ஆனால் கணவன் போனதுமே அவன் கட்டிய தாலியுடன் இவற்றையும் நீக்கச் செய்து அலங்கோலப் படுத்தி திருப்தி அடைகிறார்கள்.”

டீச்சர் ஏதோ ஒரு சமயத்தில் சொன்ன வார்த்தைகள் இவை. சாஹிதிக்கு பெரிய மாமாவிடம் மட்டும்தான் கொஞ்சம் பழக்கம் உண்டு.

அவரிடம் இதைப் பற்றி வாதம் புரிந்தாள். இதையெல்லாம் செய்யாமல் தடுக்கச் சொன்னாள். அவருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. போய் பரமஹம்சாவிடம் சொன்னார்.

‘சாஹிதி!” பரமஹம்சா அவள் தலை மீது கையைப் பதித்து ஆறுதல் சொல்லுவது போல் பரிவாகச் சொன்னான். “எதற்காக இந்த ஆவேசம்? வெள்ளத்துடன் எதிர்நீச்சல் போடுவது தவறு குழந்தாய். நம் முன்னோர்கள் எவ்வளவோ யோசித்து, சர்ச்சைகள் செய்து ஏற்படுத்திய சடங்குகள் இவை. உலகத்திலேயே தலைச் சிறந்த நூல்கள் நம் தர்ம சாஸ்திரங்கள். கடவுள் அம்மாவின் நெற்றியில் என்ன எழுதி வைத்திருக்கிறாரோ அதன்படிதான் நடக்கும். இதெல்லாம் முற்பிறவியில் செய்த கர்மாவின் பலன்கள்.

இதையெல்லாம் நீக்கி விடுவதால் அவள் சந்தோஷத்தையும், சுகத்தையும் துடைத்தெறிந்து விடுவதாக அர்த்தம் இல்லை. அவளை எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்க நாம் இருக்கிறோம். ஆவேசத்தை அடக்கிக் கொண்டு உன் அறைக்குள் போய் இரு. இதையெல்லாம் பார்க்காதே. போதுமா?”

‘அது இல்லை அங்கிள்..” ஏதோ சொல்லப் போனாள்.

“சாஹிதி! அவர்கள் செய்வது தவறு இல்லை. நம் ஆசாரங்களை, சம்பிரதாயங்களை இல்லை என்று மறுக்கும் அளவுக்கு பெரிய மனுஷி இல்லை நான். அதிகமாகப் பேசாதே. என்னை வருத்தப்பட வைக்காதே.” நிர்மலாவின் வார்த்தைகளைக் கேட்டதும் சாஹிதியின் ஆவேசம் அடங்கி விட்டது.

ஆவேசத்தை அடக்கி வைத்தால் இதயம் எரிமலையாய் மாறி என்றாவது பொங்கி விடலாம். அல்லது பொங்கும் பாலில் நீரைத் தெளித்தாற்போல் அடங்கிப்போய்க் கோழைத்தனத்திற்கு அடிகொலிடவும் கூடும். சாஹிதியைப் போன்ற  இன்ட்ராவர்ட்டுகளின் விஷயத்தில் இரண்டாவதுதான் என்றுமே நடக்கும்.

*******

பத்தாம் வகுப்புப் பரீட்சை ரிசல்டுகள் வெளிவந்தன. சாஹிதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றாள். அதை முன்பே எதிர்பார்த்து இருந்ததால் அவளுக்கு எந்த பரபரப்பும் ஏற்படவில்லை. அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவும் யாருமே இல்லை. நிர்மலா இன்னும் பழைய மனுஷி ஆகவில்லை. தினமும் பதினைந்து மணிநேரம் பூஜையிலே ஆழ்ந்து விடுவாள். அந்தப் பக்தியே அவளுக்கு சந்தோஷத்தை அளிக்கும் போது எப்படி மறுப்பு சொல்ல முடியும் என்பது பரமஹம்சாவின் வாதம். அதுவும் உண்மைதான் என்று தோன்றியது சாஹிதிக்கு.

“சாஹிதி!”

அவள் நிமிர்ந்து பார்த்தாள். பரமஹம்சா! அவன் அவளுடைய அறைக்கு வருவது இதுதான் முதல் தடவை.

“கங்கிராஜுலேஷன்ஸ்! எனக்கு ரொம்ப சந்தோஷமாய் இருக்கும்மா.”

“தாங்க்யூ அங்கிள்.’ வெட்கத்துடன் எழுந்து நின்றாள்.

“உட்காரும்மா.” அவன் இரு தோள்களையும் பற்றி உட்காரவைத்தான். தானும் எதிரே உட்கார்ந்து கொண்டான்.

“முதல் வகுப்பில் நீ தேர்ச்சி பெற்று இருக்கிறாய். இப்படி தனியாய் அறைக்குள் உட்கார்ந்து இருக்கலாமா? போம்மா, உன் சிநேகிதிகளை எல்லோரையும் கூப்பிடு. இன்று மாலை வீட்டில் பார்ட்டி கொடுப்போம். அல்லது ஹோட்டலில் ஏற்பாடு செய்யச் சொன்னால் செய்து விடுகிறேன்.  இன்றைக்கு எல்லோரும் ஜாலியாக பொழுது போக்கணும்.”

“வேண்டாம் அங்கிள். எனக்கு அவ்வளவு நெருங்கிய சிநேகிதிகள் யாருமே இல்லை.”

“அப்படி என்றால் சரி. இன்றைக்கு நாமே பார்ட்டி வைத்துக் கொள்வோம். அம்மாவையும் உன்னையும் நான் வெளியே அழைத்துக் கொண்டு போகிறேன்.”

“அம்மாவையா?” வியப்புடன் கேட்டாள் அவள்

“ஆமாம். எவ்வளவு நாட்களுக்கு அவளை வீட்டிலேயே கைதியாய் வைத்திருப்போம்? மெல்ல மெல்ல அவளை சாதாரண மனுஷியாய் மாற்றணும். இது நல்ல வாய்ப்பு.”

“ஆனால் டாடி இருந்தபோது கூட நாங்க என்றுமே பார்ட்டிகளுக்கெல்லாம் போனது இல்லை அங்கிள். மம்மிக்கு அதெல்லாம் பிடிக்காது.”

“நான் சொன்னால் வருவாள். முயற்சி செய்வதில் தவறு இல்லையே? மாலை எழுமணிக்கேல்லாம் தயாராக இரு. நான் நிர்மலாவிடம் பேசிவிட்டுப் போகிறேன்.” அவன் போய்விட்டான்.

சாஹிதியின் மனம் அவன்பால் நன்றியால் நிரம்பிவிட்டது. அந்த நாள் அவளுக்கு நன்றாக நினைவு இருந்தது. தந்தையின் இறுதிச் சடங்குகள் முடிந்த அன்றைக்கு உறவினர்கள் எல்லோரும் கூடினார்கள். நிர்மலா, சாஹிதி இருவரின் பொறுப்பையும் யார் ஏற்றுக் கொள்வது என்ற பிரச்சனை. வியாபாரத்தை அருகில் இருந்து நடத்த முடிந்தால் பரவாயில்லை. ஆனால் விற்றால் அவ்வளவாய் பணம் வரப் போவதில்லை. நிலைமை அவ்வாறு இருந்தது. நிர்மலாவின் உறவினர்கள் எல்லோரும் கிராமத்தில் நிரந்தரமாய் தங்கி இருப்பவர்கள். வியாபாரத்தை நிர்வகிக்கும் அளவுக்கு திறமை இல்லாதவர்கள். சொத்துதான் இருக்கிறதே என்று ஆதரவு கொடுக்க முன் வந்தால் அதன் மூலம் பொறுப்புகள் தலையில் வந்து விழக்கூடும் என்ற பயம் அவர்களுக்கு.

“போனால் போகட்டும். வீட்டையும் விற்றுவிட்டு என்னோடு வந்து விடுங்கள்” என்றார் நிர்மலாவின் பெரிய அண்ணா.

“சாஹிதியை நன்றாகப் படிக்க வைக்கணும் என்று நினைக்கிறேன். இங்கேயே இருக்கிறேன் அண்ணா” என்றாள் நிர்மலா.

“அதற்கென்ன வந்தது? ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைப்போம்.”

“அவள் ஏற்கனவே கொழை. தனியாய் இருக்க அவளால் முடியாது.” நிர்மலாவுக்கு அந்தப் பட்டிகாட்டிற்குப் போகச் சிறிதும் விருப்பம் இல்லை.

“அவ்வளவு கோழையாய் இருப்பவளுக்குப் படிப்பு எதற்கு? நிறுத்திவிட்டு நல்ல வரனாகப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைத்து விடுவோம்” என்றார் இன்னொரு அண்ணா.

சாஹிதியின் இதயத்தில் இடி விழுந்தாற்போல் இருந்தது. எல்லோருமாகச் சேர்ந்து அவளுடைய படிப்பை நிறுத்து விடுவார்களோ? இயலாமையுடன் தாயின் பக்கம் பார்த்தாள். அவள் எதுவும் சொல்ல முடியாமல் தலையைக் குனிந்துகொண்டாள். அப்பொழுது பரமஹம்சா தான் அவர்களுக்குக் கை கொடுத்தான்.

“நீங்கள் யாருமே சிரமப்பட தேவையில்லை. முதலில் இந்த சர்ச்சையே வேண்டியது இல்லை. நான் சந்திரனின் சிறுவயது நண்பன். அவனுடைய விய்பாரத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்தவன். கடவுளின் கிருபையால் சமீபத்தில் எனக்கு பணம் நிறையவே வந்து சேர்ந்து இருக்கிறது. இவர்களுடையது என்று எதுவும் இல்லா விட்டாலும் இவர்களுடைய பொறுப்பை எடுத்துக் கொள்ளக் கூடிய நிலையில்தான் இருக்கிறேன். நிர்மலாவுக்கு ஆட்சேபணை இல்லை என்றால் நான் இவர்களுக்கு கார்டியனாக இருக்கிறேன்.”

அங்கிருந்த எல்லோருக்கும் பரமஹம்சாவிடம் அளவற்ற மதிப்பு இருந்தது. தனிப்பட்ட முறையில் அவனை தெரியாவிட்டாலும் அவனுடைய கடவுள் பக்தி மூலமாய் பிரபலம் ஆகி விட்டிருந்தான். எல்லோரும் அவனுடைய அபிபிராயத்தை ஏற்றுக்கொண்டார்கள். நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள். எல்லோரையும் விட அதிகமாய் சந்தோஷமடைந்தது தான்தான் என்று தோன்றியது சாஹிதிக்கு.

ஹோட்டலில் பரமஹம்சா மதுபானம் அருந்தியதுகூட இயல்புக்கு மாறுபட்ட விஷயமாகத் தோன்றவில்லை.

*******

சாஹித்தி இன்டரில் சயின்ஸ் க்ரூப் எடுத்துக்கொண்டால். சயின்ஸ் எடுத்துக் கொண்டு இன்டர் படிக்கும் மாணவ மாணவிகளில் தொண்ணூறு சதவீதம் டாக்டர் ஆகிவிட்டாற் போலவே கனவு காணத் தொடங்கி விடுவது வழக்கம். டாக்டரைத் தவிர வேறு லட்சியம் இருக்காது. ஆனால் சாஹிதி உண்மையிலேயே புத்திசாலி.

ஒருநாள் அவள் கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வந்த போது வினோதமான காட்சி ஒன்று தென்பட்டது. பூஜை அறைக்குள் பரமஹம்சா யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். அவள் உள்ளே நுழைந்தாள். உள்ளே யாருமே இல்லை.

“யாருடன் நீங்க பேசிக் கொண்டு இருக்கீங்க அங்கிள்?” நிர்மலா சமையல் அறையில் எங்கேயோ இருந்தாள்.

பரமஹம்சாவின் கண்கள் ஒருவிதமான ஒலியுடன் ஜொலித்துக் கொண்டிருந்தன. “கடவுளுடன்” என்றான்.

அவள் “உண்மையாகவா?” என்றாள்.

அவன் சிரித்தான்.

“கடவுள் உங்கள் கண்களுக்கு தென்படுவாரா?”

அவன் சிரித்துவிட்டு “நானே கடவுளின் அம்சம். சமீபத்தில்தான் அந்த விஷயத்தைத் தெரிந்து கொண்டேன். மானிடர்களுக்கு சுக சந்தோஷங்களை வழங்குவதற்காக கடவுள் என்னை அனுப்பி இருக்கிறார்.”

“என்னால் நம்ப முடியவில்லை.”

“நம்பவேண்டாம். நம்பச் சொல்லி நானும் உன்னை கட்டாயப் படுத்தவில்லையே?”

அவளால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. “கடவுள் உங்களிடம் என்ன பேசினார்?” என்றாள்.

“இந்த வீட்டில் சந்தோஷமும், அமைதியும் நிலைநாட்டும்படியாக செய்யச் சொன்னார். இப்படி வாம்மா சாஹிதி.”

அவள் அருகில் சென்றாள். சிறு குழந்தையைக் கொஞ்சுவது போல் அவளை அணைத்துக் கொண்டு இரு கன்னங்களிலும் முத்தம் பதித்தான். “உன்னைப் பெரிய ஆளாய் ஆக்கும் பொறுப்பு என் மீது இருக்கிறது. அதைக் கண்டிப்பாக நிறைவேற்றுவேன். இது தெய்வத்தின் உத்தரவு” என்றான்.

சாஹிதி இரு கன்னங்களையும் அழுத்தமாய் துடைத்துக் கொண்டாள்.

“நான் சொன்னது போல் செய்வாயா?”

“கண்டிப்பாய் செய்கிறேன் அங்கிள்.”

“வாழ்நாள் முழுவதும்?

“இதென்ன அங்கிள்? நீங்க சொன்னதை நான் என்றைக்கு மறுத்து இருக்கிறேன்? நான் என்ன செய்யணும்?”

“எனக்கும் தெரியாதும்மா. தெய்வத்திடமிருந்து உத்தரவு வரணும்.” அவன் குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் இட்டான்.

கற்பூரத்தை ஏற்றி தனக்குத்தானே தீபாராதனை காண்பித்துக் கொண்டு, தனக்கே  நைவேத்தியம் சமர்பித்துக் கொண்டான். பிறகு அந்த பிரசாதத்தை எடுத்து அவள் வாயில் ஊட்டிவிட்டு “தீர்காயுஷ்மான்பவ” என்று ஆசீர்வாதம் செய்தான்.

(தொடரும்)

Series Navigationகாணோம்
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *