அடையாளம்

This entry is part 31 of 42 in the series 25 நவம்பர் 2012

சத்யானந்தன்

எழும்பூர் நூலகத்திலிருந்து ரயில் நிலையத்துக்கு பஸ் அதிகம் கிடையாது. நடந்து போவது என்பது அனேகமாக முடிவான ஒன்று தான். இருந்தாலும் ஐந்து நிமிடமேனும் பஸ் ஸ்டாப்பில் நின்று பிறகு மெதுவாக நடப்பதே வழக்கமாகி இருந்தது மீனாவுக்கு. இன்று நடக்க உடல் நிலை இடம் கொடுக்காது. எனவே பத்து நிமிடத்துக்கு மேலாக நின்று கொண்டிருந்தாள். முதுகுப்பை இன்று ஏனோ சுமையாகத் தோன்றியது. மாலை ஐந்து மணிக்கும் பளீரென வெய்யில் அடித்துக் கொண்டிருந்தது. பஸ்ஸுக்காகக் காத்திருப்போர் சொற்பமே என்று காட்டுவது போல கார்கள், ஆட்டோக்கள், இருசக்கரம் என ஏகப்பட்டவை விரைந்து கொண்டிருந்தன. நூலகத்தில் இவ்வளவு நேரம் அவள் எதிரே அமர்ந்து படித்துக் கொண்டிருந்த அவள் வயதுப் பெண் ஒருத்தி தனது நண்பனை அணைத்தபடி அவனது இருசக்கரத்தில் பஸ் ஸ்டாப்பைக் கடந்து சென்றாள். அவள் போல கட்டிப் பிடித்தபடி இல்லை. வெறுமனே அமர்ந்து வருவதைக் கூட கதிர் ஒப்புக் கொள்வதில்லை. துப்பட்டாவால் முகத்தை மூடிக் கொள்வதாகக் கூடச் சொல்லிப் பார்த்தாள். அவன் உடன் படவில்லை. சினிமா பார்ப்பது என்றாலும் சரியாக உள்ளே அனுமதிக்கும் போது தான் தென்படுவான். அந்த இருளில் கொஞ்சலில் சில்மிஷத்தில் காதல் தெரியும். ஆறுதலாக இருக்கும். ஆனால் படம் முடியும் போது யாரோ போல் கிளம்பி விடுவான். அவனுக்கு திருமண வயதில்லை என்பது புரியாமலில்லை. ஆனால் அவன் வெளியில் தன்னுடன் தென்பட் ஏன் இவ்வளவு சுணங்குகிறான் என்பது பிடிபடவில்லை. மேற்படிப்பில் விருப்பமில்லை என அவன் ஸேல்ஸ் வேலைக்குப் போய் விட்டான். இந்த நூலக வளாகத்திற்கு வருவது வெளியில் உள்ள பூங்காவில் தன் சகாக்களை சந்திக்கத் தான். சந்திக்கும் வரை காத்திருக்கத் தான். ஒரு முறை ஷாப்பிங்க் போக அப்பா லைப்ரரிக்கு வந்து அழைத்துப் போகிறேன் என்றார். அன்றைக்கு என்று பார்த்து பவர் கட் என்று நான்கு மணிக்கே நூலகத்தை மூடி விட்டார்கள். வேறு எங்கேயும் போக வழியில்லை. நூலக வாயிற் தோட்டத்துக் கல் இருக்கைகளுள் ஒன்றில் அமர்ந்து கழித்துக் கட்ட வேண்டிய குறுஞ்செய்திகளை அழித்துக் கொண்டிருக்கும் போது “எக்ஸ்க்யூஸ் மீ” என்று அவன் குரல் கேட்டது. “நீங்கள் யாருக்காகவோ காத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்” என்றான் கதிர் லாகவமான ஆங்கிலத்தில். என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. மிகவும் கட்டுப் பெட்டியாக எழுந்து செல்லவோ “உன் வேலையைப் பார் ‘ என்று சொல்லவோ தோன்றவில்லை. வெறுமனே தலையை அசைத்தாள். “நானும் காத்திருக்கிறேன் ஒரு நண்பருக்காக. தோழிக்காக இல்லை” . பதில் சொல்லாமல் அவனை உற்றுப் பார்த்தாள். ” எனக்குத் தோழி என்று யாருமே இல்லை” என்று நிறுத்தினான். அவள் மௌனமாகவே இருந்தாள். ” உங்களைப் பார்த்தால் நட்பு காட்டும் தன்மை தெரிகிறது” என்றான். அவளையும் அறியாமல் புன்னகைத்தாள். “தண்ணீர் கிடைக்குமா?” என்றான். பதில் பேசாமல் தனது முதுகுப் பையில் இருந்த பாட்டிலை எடுத்து நீட்டினாள். சற்று அருந்தி நன்றி சொல்லித் திருப்பித் தந்தான். அவள் கையிலிருந்த மனித வளம் பற்றிய புத்தகம் அடுத்த பேச்சின் அடிப்படையானது. எம்பீஏ பற்றியும் மனித வளம் பற்றியும் மட்டும் தான் அவன் அன்று நிறையப் பேசினான். அப்பா தான் முதலில் தென் பட்டார். அவன் நண்பன் வந்தானோ. அல்லது வந்தபின் இங்கிதம் கருதி பக்கமாய் ஒதுங்கிக் காத்திருந்தானோ. அப்போது தலையை மட்டும் அசைத்து விட்டு அவள் கிளம்பிவிட்டாள். ஆனால் அன்றே கதிர் அவளது வகுப்புத் தோழன் வசந்த்தை முந்தி விட்டான். வசந்த் வெறும் படிப்பு மட்டுமே பேச முடியும். எதோ ஒரு நுட்ப யூகத்தில் அவனும் அத்தோடே நின்றிருந்தான். வசந்த் அதைத் தாண்டிப் பேசி இருந்தால்? ஏன் பேசவில்லை என்று கூடத் தோன்றுகிறதோ? மீனாவிடம் ஏனோ இந்தக் கேள்விகள் சமீப காலமாக முளைத்தன. கதிர் கோல்டன் பீச்சில் “காட்டேஜ்” “புக்” பண்ணப் போன போது வெறும் “ரைட்ஸ்” மட்டும் போதும் என்று எது சொல்லத் தூண்டியதோ அதுவேதான் இந்தக் கேள்விகளுக்கும் வித்திட்டிருக்கலாம்.

பஸ் வந்தது. நிற்க இடம் இருக்குமா என்பதே சந்தேகம். முன் வாயில் வழியாக ஏறி பெண்கள் பக்கம் ஒதுங்கினாள். நிற்கவே தென்பில்லை. உபத்திரவமான நாட்கள். சில்லறையைத் தேடி கை மாற்றி மாற்றி சீட்டு வாங்கும் முறையில் சீட்டு வாங்கி முடிக்கும் முன்னே மொபைல் ஒலித்தது. கதிராக் இருக்க வாய்ப்பில்லை. அவன் வேலை விஷயமாக பெங்களூர் நான்கு நாட்கள் போவதாகவும் “ரோமிங்”க்கில் “இன்வர்ட் கால்” ” அவுட்வர்ட்” இரண்டுமே செலவாகும் என்று சொல்லியிருந்தான். “எஸ் எம் எஸ்”ஸும் ஏற்கனவே குறைந்திருந்தது. அழைப்புக்குப் பதில் அளித்தாள். “நான் லைப்பிரரி ஸெக்யூரிட்டி பேசறேம்மா. மீனாவா?” “ஆமா ஸார்”. ” உன்னோட ஐடி கார்ட்டை விட்டுட்டுப் போயிட்டம்மா. கையெழுத்துப் போடறப்போ. உன் செல் நம்பரை ரெஜிஸ்டர்ல பாத்து போன் பண்ணறேன். அடுத்த முறை வர்றப் போ போன் நம்பரைச் சொல்லி வாங்கிக்க” “இப்ப உடனே வரட்டா ஸார்” “ஓகே. இன்னும் அரை அவர்ல வா. எனக்கு ட்யூட்டி முடியற நேரம்.” “உடனே வரேன் ஸார்”. இத்தனையும் பேசி முடிக்கும் முன் பஸ் எக்மோருக்கே வந்து விட்டது. இன்றோடு அனேகமாக் லைப்ரரி வேலை முடிந்த நிலை. இன்னும் ஓரிரு முறை தேவைப் பட்டாலும் எப்போது வருவேனோ? செலவைப் பார்த்தால் ஆகாது. காலேஜில் அடையாள அட்டை இல்லாமல் நுழையவே முடியாது. இந்த சோதனை நாட்களில் உடல் மனம் இரண்டுமே மிகவும் சோர்ந்து மறதி பதட்டம் என்று மேலும் தொல்லை. செலவைப் பார்க்காமல் ஒரு ஆட்டோவை அழைத்தாள். அரை மணி என்ன? பத்து நிமிடத்தில் போய் விடலாம். போலீஸ் கமிஷனர் ஆபீஸைத் தாண்டும் போது பஸ் ஸ்டாப்பில் தான் அணைத்திருந்தவனின் இருசக்கரத்திலிருந்து இறங்கி பேருந்து நிறுத்ததில் ஒரு பெண் இறங்கினாள். அவன் தன் வண்டியை ஓரமாக் நிறுத்தி “ஸ்டாண்ட்” போட்டுக் …..கதிர் இல்லை அது? விரையும் ஆட்டோவிலிருந்த் திரும்பிப் பார்க்கும் போது ஒரு கார் குறுக்கே வந்து விட்டது. ஏனோ அது கதிர் தான் என்று அழுத்தமாகப் பட்டது. வண்டியை நிறுத்தியவன் இன்னும் அங்கே தான் இருப்பான். “டிரைவர். ஆட்டோவை யூ டர்ன் எடுங்க. பின்னாடி ஒரு சொந்தக் காரங்க தென்பட்டாங்க” ‘என்னம்மா பேஜார் பண்ற? இந்த டிராபிக்ல எங்கே யூ டர்ன் போடறது? இறங்கிப் போ. துட்டை முதல்ல கொடு” என்று ஆட்டோ ஓரங்கட்டப் பட்டது. பணத்தைக் கொடுத்து விட்டு இறங்கி உடல் ஒத்துழைத்த அளவு ஓடினாள். அரை மணிக்குள் போய் அடையாள அட்டையை வாங்க வேண்டுமே என்று கவலை குறிக்கிட்டது. அது இரண்டாம் பட்சமாகி ஓட்டம் தொடர்ந்தது.

Series Navigationபழமொழிகளில் காலம்வாழ்க்கைச் சுவடுகள்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *