வாயுள்ள கன்றும் பிழைக்கும்…!

This entry is part 14 of 42 in the series 25 நவம்பர் 2012

ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம்.

அம்மா….இங்க பாரேன்..யாரோ ஒரு விஜய் ரசிகன் தன் கையை பிளேடால கீறி இரத்தத்தால விஜய் கட் அவுட்டுக்கு அபிஷேகம் பண்றான் , இன்னொரு ரசிகன் பாலால அபிஷேகம் பண்றான்….அதோட இல்லாம ஒரு ரசிகன் தன்னோட உள்ளங்கையில கற்பூரத்தை எரியவிட்டு ஆரத்தி வேற காட்டினான். எப்படி இருந்தது தெரியுமா? எல்லாம் என் மொபைல் ல போட்டோ எடுத்திருக்கேன்..இதோ… என்று காண்பித்த அரவிந்த், தீபாவளி ரிலீஸ்…”இளைய தளபதி விஜய் ” படம் ” துப்பாக்கி ” பார்த்துட்டு வந்த கதையை வரி வரியாகச் சொல்லி என் எரிச்சலைக் கிளப்பிக் கொண்டிருந்தான்.

இதென்ன புது தினுசா இருக்கு…?.நாளுக்கு நாள் பசங்களோட பைத்தியக்காரத்தனம் ஜாஸ்தியாப் போச்சு…இதை விஜய் நேராப் பார்த்தால் கூட ஏத்துக்க மாட்டான். இப்படி செய்யுங்கன்னு இவங்க கிட்ட கேட்டானா?சினிமாவில் நடிக்கிறது தான் அவன் தேர்ந்தெடுத்த தொழில். அவனோட வாழ்வாதாரம். அதை அவன் சிறப்பாகச் செய்யறான்.வாழ்க்கையிலும் ஜெயிச்சுட்டான்..இதைக் கூடச் சரியாப் புரிஞ்சுக்காமல் ரசிகன்ன்னு நீங்களே உங்களுக்கு முத்திரை குத்திக்கிட்டு எதைச் செய்தாலும் அது பைத்தியக்காரத்தனம் தான்.

அந்தப் பிள்ளை, ரசிகன்னு சொல்லிண்டு தனது கையைக் கீறிக் கொண்டதை பார்த்தால் அவனைப் பெத்தவங்க எவ்வளவு வேதனைப் படுவாங்க தெரியுமா? இரத்தம் என்ன காப்பியா..? , டீயா ..?.ஈஸியா கடையில் கிடைக்கறதுக்கு..? இரத்தத்தால ஒரு உயிரை கொடுக்கவும் முடியும், குடிக்கவும் முடியும் . இதைப் போயி போட்டோ எடுத்துண்டு வந்து என்கிட்டே காமிக்கிறியே உனக்கு எங்க போச்சு புத்தி…? அவன் தான் அறிவு கெட்டத்தனமா செஞ்சிருக்கான்….அதை வேடிக்கை பார்க்கிற ஒருத்தனுக்குமா ரத்தத்தோட அத்தியாவசியம்…என்னன்னு தெரியலை..?.நீங்கள்லாம் என்னத்தப் படிச்சு…! இவனுக்கு எப்போ புத்தி வந்து…!

உருப்படாத ஜென்மங்கள்….! நீயே பாரு… ஒருத்தன் செஞ்சால் அதையே தொடர்ந்து ஆயிரம் பேரு செய்வாங்க….எதுக்கு , ஏன் செய்யறோம்னு கூட யோசிக்காமல்..இதுதான்…..ஹீரோ வொர்ஷிப்……! என்னோட இந்த பதிலில் விஜய் ரசிகன் அரவிந்துக்கு கோபம் மூக்கை கிழித்துக் கொண்டு முன்னுக்கு வந்தது.

அம்மா….என்னை நீ என்ன வேணாச் சொல்லு…என்….தளபதி விஜய்-யை ..அவரை நீ அவர்…இவர்ன்னு தான் சொல்லணும்…என்று அதிகாரமா குரலை எழுப்ப..

“துப்பாக்கி” படத்தில் என்னமா நடிச்சிருக்கார் தெரியுமா? அவரோட படத்துக்கு ப்ளாக்கில் டிக்கெட் ….நூறு ரூபாய் டிக்கெட்டு நானூறு ரூபாய்…உட்காரக் கூட இடம் கிடைக்கலை…நின்னுண்டே தான் படம் பார்த்தேன்….அவ்ளோ கூட்டம்..

சரியாப் போச்சு…! நினைச்சேன்….வீட்டுல அடங்காத பிள்ளையை ஊரு அடக்கிடுமாம்…அது மாதிரி இருக்கு நீ சொல்றது.அப்படி பணத்தைக் கொடுத்து பனிஷ்மென்ட் வாங்கிட்டு வராம இருந்தா என்ன. ? பண்டிகை நாளும் அதுவுமா….தலையெழுத்து நன்னாத்தானிருக்கு. போ. அலுத்துக் கொண்டே கவலையுடன் நகர்ந்தேன். அவரு…. இவருன்னு சொல்லணுமாம்…இத யார்ட்ட போய் சொல்வேன்.

நீ தான் லூசு..நானும் அவரு இவருன்னு சொன்னேன்னு வெய்யி….நானும் லூசோடா அம்மா லூசுன்னு ஆகாதோ ?….எனக்கே இதைச் சொல்லிவிட்டு சிரிப்பை அடக்க முடியவில்லை.

நேத்து உன் மொபைலில் நீ விஜய்யின் துப்பாக்கி ஸ்டில்லை காண்பித்து அவன் போட்ட மாதிரியே ஷர்ட் வாங்கித் தான்னு சொல்லி..நானும் அப்பாவும் கடை கடையா ஏறி இறங்கி அந்த ஸ்டில்லை ஒவ்வொரு கடையிலும் காட்டி…இது போல ஷர்ட் இருக்கான்னு.? கேட்டுக் கேட்டு…….”கஷ்டம் ….கஷ்டம்..” என்று தலையில் அடித்துக் கொண்டு… கடைக்காரனே எங்களைப் ஒருமாதிரி பார்க்கிறான்.

ஸார்….நிறைய காலேஜு பசங்க இந்த வாட்டி…இதே வேலையா அலையறானுங்க…… அப்படி என்ன தான் “துப்பாக்கியோ”. துப்புக் கெட்ட பசங்க….ன்னு…நான் சொல்லலை….கடைக்காரர் சொன்னார். என்து அவனது முகம் போன போக்கைப் பார்த்து நான் சொல்லி சமாளித்துக் கொண்டே….அவர் சொன்னதைக் கேட்டு . எங்களுக்கே ஒருமாதிரி போச்சு.தெரியுமா?

நான் அந்த ஷர்ட்டைக் கேட்டதும்..பரவாயில்லைடா..நாங்க வாங்கித் தரோம்ன்னு சொல்லிட்டு இப்பச் சொல்லிக் காட்டறேளே ..! இருபது வயது இளரத்தம்..சூடேறுகிறது.

எப்போ தான் இந்த தமிழ்நாடு, சினிமாக்காரனோட வலையில் இருந்து மீண்டு சுயமா சிந்திப்பானுங்களோ.?…இந்த சினிமா மயக்க மருந்துப் புகையில் தான் இங்கே எல்லாரும் சுவாசிக்க வேண்டி இருக்கு. தளபதி…தளபதின்னு அடிச்சுக்கறியே…ஒரு தடவையாவது அஷ்டபதி சொல்லேன்…. அருளாவது கிடைக்கும். என் ஆதங்கம் வெடித்தது..

இருபது வயசில நீங்க மட்டும் என்ன பஜனையா பண்ணினேள்.? இப்போ..மட்டும் என்ன…எப்பபாரு …இன்டர்நெட்…! என்று அவனது குற்றப் பத்திரிகையை என்னை நோக்கித் திறக்க ஆரம்பித்ததும் நான் அங்கிருந்து ” எஸ்கேப்” பட்டனைத் தட்டினேன்.

ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டமாம்….அது போலத் தான் இருந்தது இதுவும்.. வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது. பல்கலைக் கலக மூடுவிழா !!! கல்லூரியில் எழுந்த ஆசிரியர்கள் பிரச்சனை மாணவர்களுக்கு விடுமுறையைக் கால வரையறையின்றி வாரி வழங்கியது…! சிலருக்குக் கொண்டாட்டம் ! பலருக்குத் திண்டாட்டம் !

செமஸ்டர் நடந்து கொண்டிருந்த நாள், முதல் நாள் இரவு இரண்டு மணி வரைப் படித்து விட்டு , அடுத்த நாள் பரீட்சை எழுதப் போகும் பயத்தில்…படித்தது வர வேண்டும் என்ற எதிர்பார்பில் சென்று…கேள்வித் தாளைப் பார்த்து… “ஆஹா…இந்த செம்ல கண்டிப்பாப் …பாஸாயிடலாம் ” அதான்..கேள்வியே ஈஸியா இருக்கேன்னு சந்தோஷத்தோடு எழுதும் போது தான் பூஜை வேளையில் கரடி புகுந்தது போல…. “போதும்டா நீங்க எழுதினது….இந்த செமெஸ்டர் செல்லாது….யாரும் உங்க விடைத்தாளைத் திருத்த மாட்டோம்…”ஸ்ட்ரைக்” என்று அறிவித்த போது விடை தெரியாமல் முழித்தவர்களுக்கெல்லாம் தெய்வம் வந்து வரம் தந்தது போல.. போட்டது போட்டபடியே வெளியே ஓடிக் கொண்டிருந்தனர். எழுதிக் கொண்டிருந்தவர்களும்..காரணம் ஏதும் அறியாமலே. .வேறு வழியே இல்லாமல்…. அரை மனதோடு வெளியேறினர்.

அடுத்த அரை மணி நேரங்களில் அவரவர் வீடுகளுக்குச் செல்ல தயாராக. வளாகத்தில் தங்கிப் படிக்கும் வெளி மாநில மாணவர்கள் மூட்டை முடிச்சோடு அடுத்தது என்ன? என்ற கேள்வியோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு புறப்படுகின்றனர். சிலருக்கு தம் ஊருக்குப் போகப் பிரயாணத்திற்கு டிக்கெட் வாங்கக் கூட கையில் பணமில்லை. அங்க இங்க கடனை வாங்கி கையிலிருந்த மொபைல் ஃபோனை விற்று பணம் சேர்த்து கொண்டு ஊருக்குக் கிளம்பினார்கள்.

அரவிந்தின் நெருங்கிய தோழர்கள் கன்னையாவும், மாதவனும் வாரணாசிக்குச் செல்ல வேண்டும். சிதம்பரத்தில் இருந்து கடலூர் சென்று அங்கிருந்து இரவு ரயிலைப் பிடித்து வேறு ரயிலில் மாறிச் சென்று விடலாம் என்று முடிவு செய்தனர்.

டேய்..அரவிந்த்…நீயும் எங்களோட ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து எங்களை ரயில் ஏற்றி விட்டுட்டுப் போயேன்….கூட வாயேன்..என்று அழைக்கவும்..வீட்டிற்கு விஷயத்தை ஃபோனில் சொல்லிவிட்டு அங்கிருந்து நேரே கடலூர் சென்று விட்டான் அரவிந்த் சரி..சீக்கிரம் வந்துடு…என்று சொல்லி வைத்தேன்.

இரவு நெடு நேரமாகியும் வீடு திரும்பாதவனை எண்ணி கைபேசியில் தொடர்பு கொண்டேன். என்னாச்சு..? இத்தனை நேரமா உனக்கு ரயில் ஏற்றி விட? இப்போ எங்கே இருக்க…? என் கேள்விகளுக்குத் தயக்கமுடன் அவனது ஒரே பதில்.

இன்னும் நாங்கள் கடலூர் ரயில் நிலையத்தில் தான் இருக்கோம் .. காலையில் அவங்களை ஏற்றி விட்டு நான் வந்து விடுவேன்மா. விடியற்காலை மூணு மணிக்குத் தான் ரயில் வருமாம். அது வரை இங்கே தான்….நாங்க …பிளாட்பாரத்தில் ரெஸ்ட்…இங்கயே தூங்கறோம்….! என்று சொல்லிவிட்டு வைத்து விட்டான்.

காலையில் அரவிந்த் வீட்டுக்குள் வந்த கோலத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டேன்…அவனது சட்டைக் காலரில் ரத்தக்கறை. முகத்தில், கண்ணில் ஒரு இனம் தெரியாத பயம். உடலில் நடுக்கம் ! ஏதோ மலையைப் புரட்டிய களைப்பு ! இரவெல்லாம் தூங்காமல் ஒரு மணி நேரம் வண்டி பைக்கை ஓட்டி வந்ததால் முகத்தில் சோர்வு.

என்னாச்சுடா…அரவிந்த்? எங்கியாவது சண்டைக்கு… கிண்டைக்கு… போனியா…? ஏன் இங்கே….ரத்தக்கறை ? என்னுள் எழுந்தது படபடப்பு. துடிப்பு. நேத்து நீ “துப்பாக்கி” பார்த்துட்டு வந்து அந்தக் காட்சியை எனக்கு உன் மொபைல்ல ஃபோட்டோ பிடிச்சுக் காட்டினியே…அப்பவே எனக்குள்ளே பயம் வந்தாச்சு.. சொல்லு அர்விந்த் என்னாச்சு..? என்று பதற்றத்தோடு நான் குடிக்கத் தண்ணீரோடு நீட்டிய டம்ப்ளரை வாங்கி மடக் மடக் கென்று குடித்து விட்டு..நீ நினைக்கறா மாதிரி ஒண்ணுமில்லை..நான் பண்ணின காரியத்தை கேட்டால்… நீ நிச்சயம் இப்படித் துடிக்க மாட்டே…இன்ஃபாக்ட் சந்தோஷப்படுவே..தெரியுமா…? என்று பீடிகை போட்டான்

ராத்திரி நீ ஃபோன் பண்ணும்போது எத்தனை மணியிருக்கும் …?

ம்ம்….ஒரு பதினோரு மணி இருக்கும்….அப்போ நன்னாத்தானே இருந்தே…பிறகு என்னாச்சு?

சொல்றேன்…அப்போ பிளாட்பாரத்தில் யாரும் இல்லை…நானும் கன்னையாவும் மாதவனும் தான்…கொஞ்சம் தள்ளி ஒரு குஜராத்தி குடும்பம் இருந்தது. ரயில் வர மூணு மணியாகும்னு சொன்னதும் நாங்களும் அங்கியே படுத்துண்டு தூங்கிப் போயிட்டோம்…!

ஒ…யாராவது வந்து அடிச்சாங்களா? எனக்குத் தெரியும்…வயசுப் பசங்க நட்ட நடு ராத்திரில ரயில்வே ஸ்டேஷன்ல தனியா இருந்தா….ஏதோ கேஸ்ன்னு நினைச்சு…ரோந்து போலீஸ் பிடிச்சுண்டு போய் முட்டிக்கு முட்டி தட்டி….அதுக்குத் தான் நீ எங்கியும் போகவேண்டாம்னு சொன்னேன்…புரிஞ்சுதா…? நமக்கேன் வீணா வம்பு….சொல்லிக் கொண்டே என் கண்கள் அவனது முழங்காலைப் பார்த்தது. வேற எங்கியாவது அடி பட்டிருக்கோ….கண்கள்….தேடியது…நல்லவேளையாக ஒண்ணும் தென்படலை.

உன் கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா? என்னைச் சொல்ல விடேன்

சரி சொல்லித் தொலை சீக்கிரம்….அப்பறம்…என்னாச்சு ?

திடீர்னு ஒரு சத்தம்…..ரொம்பப் பக்கத்துல…”அம்ம்மா…ம்ம்ம்மம்மா….அம்மம்மா…ன்னு” தொடர்ந்து கேட்டுண்டே இருந்தது. நாங்க மூணு பேருமே முழிச்சுண்டோம்..

டேய்…அரவிந்த்…எங்கேர்ந்துடா இந்த சத்தம்….?

பசு மாட்டுக் கன்றோட குரல்டா…இது….ஆனா எங்கேர்ந்து வருது.. புரியலையே…!

பக்கத்துல வேற ஒண்ணுமே கண்ணுக்குத் தெரியலை…ஆனா குரல் மட்டும் கேட்கிறது…எப்படி?…இவ்ளோ ஸ்பஷ்டமா… எனக்கு பயம்மா இருக்குடா…!

ம்ம்ம்….ஆமாண்டா…கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் ஏதும் இல்லை…நாலு பக்கமும் வெறிச்சுன்னு கெடக்கு..பிளாட்பாரம் வெளிச்சத்தைத் தவிர மற்ற இடங்களில் ஒரே கும்மிருட்டு வேற. டேய்…கன்னையா …மனுஷப் பேய் கேள்விப் பட்டுருக்கோம்…..மாட்டுப் பேய் கேள்விப் பட்டிருக்கியாடா..?

அடப் போடா…நீ வேற…இந்த நேரத்துல …பேய், பிசாசுன்னு சொல்லிக்கிட்டு. இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டு படுத்துக் கொண்டிருக்கும் போதே…மறுபடியும் அதே குரல்….அபயக் குரல்….கேட்டுக் கொண்டே இருந்ததாம்.”அம்மா….ம்ம்ம்மம்ம்மாமா….” என்று.

டேய்…மூணு பேரும் கண்ணை இறுக்க மூடிக்குவோம்டா…இது எங்கேர்ந்து வருதுன்னு புரியலை…ரொம்பப் பக்கத்துல ஒண்ணுமே இல்லாத இடத்தில் இப்படி சத்தம் மட்டும் எங்கேர்ந்து வரும்? அவர்கள் நடுங்க ஆரம்பித்து கண்களை மூடிக் கொண்டார்கள்.இளங்கன்றுகள் அன்று பயமறிந்தது.

திடீரென ஒரு ஆள் நடமாடும் அரவமும் அதைத் தொடர்ந்து…”ஹை ..ஹய்…உஷ்…உஷ்…..ஜா..ஜா…ஜா..” என்று கைத்தடியால் தட்டும் சத்தம்….கேட்கவும் இவர்கள் நிம்மதியில் இவர்கள்…ஆஹா மனிதக்குரல் என்று எழுந்து நிற்கவும்..

தூரத்திலிருந்த அந்த குஜராத்திக்காரர் தனது கைத்தடியால் பிளாட்பாரத்தின் விளிம்பில் நின்றபடி….குனித்து தண்டவாளத்தின் அருகில் தட்டிக் கொண்டிருக்க….. இவர்களும் ஆவலுடன் அங்கு ஓடிச் சென்று பார்க்க அங்கே ஒரு பசுங்கன்று தண்டவாளப் பள்ளத்திலிருந்து மேலே பார்த்துக் கத்திக் கொண்டிருந்தது.

நடை மேடையின் இறுதியிலிருந்து அது தண்டவாளத்தின் நடுவில் நடந்து உள்ளே வந்து விட்டது…புரிந்தது. இப்போது அதனால் மேலே ஏறவும் இயலாது. இன்னும் அந்த பிளாட்பாரம் முழுதும் கடந்தால் தான் சமதளத்திற்கு அதனால் வரவும் முடியும் அதற்குள் எந்த ரயிலும் வராமல் இருக்க வேண்டும்….

இவர்களுக்கு இப்போது எல்லாம் புரிந்தது. கீழே பார்த்தால் அந்தக் கன்றின் கண்களில் காருண்யம். “என்னை மேலே தூக்கி விடேன்….பயம்மா இருக்கு…” என்பது போல.

மேலே இருந்து வா…வா…என்றால் வருமா? சற்றும் யோசிக்காமல் அரவிந்த் கீழே குதித்து விட்டான்.. பசுங்கன்று பயத்தில் உறைந்து அங்கேயே நின்று விட்டதாம்.

அதே நேரத்தில் தூரத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் பூதம் போல் உறுமி கொண்டு வேகமாக வந்து கொண்டிருந்ததாம்.

பரபரப்புடன் எதையும் யோசிக்காமல்…அரவிந்த் அந்த பசுங்கன்றை அலாக்காகத் தூக்கவும்… அது ஒரு நூறு கிலோ எடை இருக்குமாம் அது திமிறவும்…. ஒரே கட்டாகக் கட்டி நடைமேடையில் தூக்கி மேலே போட்டுவிட்டு…தான் சுதாரித்துக் கொண்டு எம்பிக் குதித்து மேலே ஏறி நின்றதும்.அந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்டேஷேனைக் கடக்கவும் சரியாக இருந்ததாம்.

அவன் இதைச் சொல்லச் சொல்ல திக் திக் கென்று இருந்தது எனக்கு. அப்போ அந்தக் காயம்…எப்படி. வந்தது? குழம்பினேன் நான்.

ம்ம்ம்.. அதை நான் தூக்கியதும் திமிறி முகத்தை பலமாக பயத்தில் ஆட்டியது…அதுக்கு நல்ல வேளையா சின்னக் கொம்பு தான் முளைச்சிருந்தது. அப்படியும் அது குத்தி லேசா தோல் கிழிஞ்சிடுத்து..அதான் ரத்தம்..ஆனால் தோள்பட்டையில் ஒரே வலி… மேலே ஏறினவுடனே…ரயில் க்ராஸ் பண்ணிச்சு…..எனக்குள் அடி வயிற்றிலிருந்து ஒரு பயம்..ஒரு சுருட்டல்…..நடுக்கம்…உடம்பெல்லாம் அப்படியே புல்லரிச்சுப் போச்சு….அந்த உணர்வை எப்படி சொல்றதுன்னே தெரியலைம்மா….ஆனா ஒரு இனம் புரியாத வேதனைன்னு சொல்லலாம்.

அச்சச்சோ…என்று அந்தக் காயத்தைப் பார்த்தேன்…சரி …இதனால் ஒண்ணுமில்லை….பகவான் ஒரு காரணம் இல்லாமல் ஒரு காரியத்தை நடக்க விட மாட்டார் அரவிந்த்…உன் ஃப்ரெண்டு மாதவன் கூப்பிட்டதால் தானே அங்கே போயிருக்கே. வாயுள்ள கன்று பிழைச்சிடுத்து. நீ இப்போ செய்திருக்கிற காரியம் ஒரு உயிரைக் காப்பாற்றிய உத்தம காரியம். இதற்காக நீ சிந்திய ரத்தம் சில துளியாக இருந்தாலும் அது உன்னத செயலுக்காக சிந்தியது.

ஆமாம்மா…அந்த குஜராத்தி காரர் சொன்னார்…தம்பி நீ உயிர் பிழைச்சது பாக்கியம்…. அந்த பசுங்கன்றைக் காப்பாற்றியது புண்ணியம்…ன்னு

நீ செய்திருக்கிற இந்த தீரச் செயல் தான் உண்மையான ஹீரோ செய்கிற ஒரு காரியம். இது பெத்தவங்களுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும் தெரியுமா? தன்னுயிரைப் பொருட்படுத்தாமல் இன்னொரு வாயில்லாத பிராணியை காப்பாத்தத் துணிஞ்ச உன்னைப் பார்க்கும் போது எனக்கு ரொம்பப் பெருமையா இருக்குடா.

வார்த்தையால் சொல்லிவிட்டேன்….ஆனால்…மனசுக்குள் ஒரு உணர்வு.. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்னு சொல்றாப் போல…..ஒரு வாரமா ஜுரத்தில் கிடந்தேன். தற்போது அரவிந்தின் காயமும் ஆறிபோச்சு. என் காய்ச்சலும் தீர்ந்து போச்சு !

ஆனால்..விஜய் ரசிகன் எல்லாரும் அப்படித் தான்…..சமயத்தில் சமயோஜிதமா நடந்துப்பாங்க தெரியுமா? அவன் முகத்தில் மந்தகாசம்.

தான் பெற்ற மகன் தன் உயிரைப் வைத்து ஒரு நல்ல காரியம் செய்து விட்டு வந்திருக்கிறான்…அவனுக்குப் பிடித்தவனைப் புகழ்ந்து பேசி அவனை மகிழ்விக்க நினைத்தேன்.

ஆமாண்டா….அர்விந்த்……இனிமேல் விஜய் ரசிகர்கள் எல்லாரும் அவா அவா பெத்தத் தாயை அன்பா கவனிச்சுப்பாங்க. ..இல்லையா…? அதான் எங்கே பார்த்தாலும் அவங்களோட ஹோர்டிங்க்ஸ் விளம்பரம் இருக்கே. நீ சொல்றபடி பார்த்தால் விஜய் என்கிற அந்த “சக்தி” உங்களுக்கெல்லாம் ஒரு நல்ல இன்ஸ்பிரேஷன் தான்…..நான் ஏத்துக்கறேன். யாராயிருந்தால் என்ன ? நல்ல விஷயம் நடந்தால் சரி…இதை நான் சொன்னதும் அரவிந்துக்கு ஏற்பட்ட சந்தோஷம் ஒரு தாயாய் இனம் கண்டுகொள்ள முடிந்தது.

அம்மா…..எலெக்ட்ரிசிட்டி பில்லைக் கட்டணும்னு சொன்னியே…தா…போய் கட்டிட்டு வரேன்…சொல்லிவிட்டு “கூகுள் …கூகுள் …பண்ணிப் பார்த்தேன் உலகத்துல…உன்னைப் போல ஒரு அம்மா எங்கும் பிறக்கவில்ல…..” சந்தோஷமாகப் பாடிக் கொண்டே போகிறான் ரசிகனாக அரவிந்த்.

நான் விஜய்யைப் பாராட்டியதில் அதிக மகிழ்ச்சியடைந்த ஹீரோ அரவிந்தைப் வியப்புடன் பார்க்கிறேன்.

வெகு சமீபத்தில் நடந்த இந்த சம்பவம் மனதை நெகிழ்வடையச் செய்தது.

Series Navigationரஞ்சினியும், இஞ்சி கசாயமும்ரூபம்
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Comments

 1. Avatar
  பவள சங்கரி says:

  அன்பின் ஜெயஸ்ரீ,

  மனம் நெகிழ்ச் செய்த கதை. ஹீரோ ஒர்ஷிப் என்று இனி யாரும் மட்டமாகப் பேச வேண்டியதில்லை. எதையும் நாம் எந்த விதத்தில் எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்ததுதான் எல்லாமே. நல்ல கதை.

  “உயிரைப் பனயம் வைத்து” என்று வர வேண்டும் இல்லையா. ஒரு வார்த்தை விட்டுப்போயிருக்கிறது என்று நினைக்கிறேன். நன்று ஜெயஸ்ரீ, வாழ்த்துக்கள். வழ்க்கம் போல அருமையா நடை!

  அன்புடன்
  பவள சங்கரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *