மகேஷின் வாழ்க்கையில் நடந்ததெல்லாம் ஏதோ காலம் தவறாமல் புறப்பட்டுக் காலத்தோடு போய்க்கொண்டிருந்த நிச்சயிக்கப்பட்ட சொகுசு ரயில் பயணம் மாதிரிதான் இருந்தது. ” அவன் பொறந்தப்பறந்தான் அவுங்கப்பாவுக்கு ப்ரோமோஷன் வந்துச்சு. கேசுபோட்டு இளுத்துக்கிட்டிருந்த எங்க பூர்விக சொத்து, பங்காளிங்ககிட்டேந்து எங்களுக்கு வந்துச்சு. எங்கம்மாளுக்கு கவர்மெண்டுல பென்ஷன் கொடுத்தாங்க. இவன் எங்க குடும்ப அதிஷ்டம்ல… ” என்று பதினெட்டு வயசானாலும் மகேஷை உச்சிமோந்து சிலிர்த்துக் கொள்வாள் அவன் அம்மா.
ரயில்வே ஒர்க் ஷாப்பின் கிழக்கு வாசலிலிருந்து நேராக வரும் சாலை மெயின் ரோட்டோடு கலந்து கொஞ்சம் தூரம் பயணித்து, பின் கோபித்துக்கொண்ட மருமகள் தனிக்குடித்தனம் போவதுபோல் பிரிந்து வடக்கில் போகும் ரோட்டை ஒட்டி இருந்தது மகேஷின் வீடு. அந்த ப்ளாக்கின் முதல் வீடு என்பதால், சுற்றிலும் முள் படல்கொண்டு வளைத்துப் பெரிய தோட்டம் போட்டிருந்தார் அவன் அப்பா. அதிக நீளத்தில் அமைந்திருந்த தோட்டத்தின் மூலையில் மூன்று நான்கு மாடுகள் கட்டுமளவிற்குக் கொட்டகைபோட்டு அதில் இரண்டு எருமை மாடுகளும் ஒரு பசு மாடும் அப்போதைக்கு வளர்த்துக் கொண்டிருந்தார்கள். பசு மட்டும் எப்போதும் ஒன்றுதான். எருமைகளோ மூன்று அல்லது இரண்டு இருக்கும். நானும் மகேஷும் ரயில்வே ஸ்கூலில் படித்துக்கொண்டிருந்த ஒரு நாளில் ” இது மூணாவது ஈத்து . அந்த மடக்குக் கொம்பி கண்ணு போட்டதுக்கப்பறம் வித்துரணும் ” என்று எங்கள் வகுப்பில் ஐந்தாவது வருடமாக பத்தாம் க்ளாஸ் படித்துக்கொண்டிருந்த ரவியிடம் மகேஷின் அப்பா சொல்லிக்கொண்டிருந்தபோது நான் அவர்கள் வீட்டிற்குப் பால் வாங்கப் போய், கறக்கப்பட்டுக் கொண்டிருந்த எருமை மாட்டின் பின்புறம் தள்ளி நின்றுகொண்டிருந்தேன். மடக்குக் கொம்பி என்று சொல்லப்பட்ட எருமை மாடு இந்தக் காலத்து சைக்கிள் ஹேண்டில் பார் போல சைடில் வளைந்திருக்கும் ‘ ப ‘ மாதிரி ஒரு வடிவத்தில் கொம்பு வளைந்து ஒரு ஆப்பிரிக்கத் தனத்துடன் திமிறாக நின்றுகொண்டிருந்தது.
இந்த ரவிக்கு எப்படி மாடுகளின் மேல் ஆர்வம் வந்தது என்று தெரியவில்லை. அவன் என் பெரியண்ணாவுடன் எட்டாவது படித்துக்கொண்டிருந்தபோது, அப்போது சயின்ஸ் சப்ஜெக்ட்டில் மேலை நாடுகளில் மாடு வளர்ப்பு பற்றி இருந்த பாடத்தை மிக்க ஈடுபாட்டோடு ஆசிரியரிடம் கேட்டுப் படித்து அந்தப் பாடத்திலிருந்து வந்த இரண்டு கேள்விகளுக்கு பதில் எழுதி வாங்கிய பதினெட்டு மார்க்தான் அவன் அதுவரை சொந்தமாக எழுதி வாங்கிய மதிப்பெண்களிலேயே சிறப்பானது என்று என்அண்ணன் ஒருமுறை என்னிடம் சொல்லியிருந்தது எனக்கு அப்போது ஞாபகம் வந்தது. மகேஷின் அப்பா மேலும் ரவியிடம் , ” ஒரு காம்போட ஒரு பீச்சுக்கே அரைக்காப்படி நிக்கும். கறவை நல்ல கறவைதான். ஆனா ரொம்ப மொரடு. பொம்பளைங்க, பசங்க எல்லாம் இழுத்து கட்டி எல்லாம் ஏலாது. நமக்கே தண்ணி காட்டிடும் ” என்று பாலோடு தண்ணியைக் கலந்ததுபோல கொஞ்சம் பயத்தோடு ஆரம்பித்து அதையே பெருமை பொங்குமாறு மாற்றிப் பேசியது எனக்கு ஆச்சர்யமாயிருந்தது. ‘ அப்படி என்ன முரடு இந்த மாடு ‘ என்று ரவி அதன் பின் பக்கம் போய் அதன் வாலை நீவி விட்டு, வாலை ஒட்டின கீழ்முதுகில் சொத் சொத் என்று பலமாகத்தட்டியபின்னும் அந்த மடக்குக் கொம்பி ஒன்றும் செய்யாதிருந்ததில் துணிவுற்று முன் பக்கம் வந்து, மூக்கணாங்கயிற்றைப் பிடித்து அதன் மூஞ்சியில் பின் பக்கம் தட்டியபோதுபோல் தட்ட யத்தனித்த போது, மாடு லேசாக முகத்தை ஆட்ட, ரவியின் சட்டை அதன் கொம்பில் மாட்டிக்கொண்டு விட்டது. பயந்துபோன ரவி, கையைக் காலை ஆட்ட, அதில் கோபமான மடக்குக் கொம்பி ரவியை மரடொன்னா பேக் ஷாட் அடிப்பதுபோல பின் பக்கம் கொம்பால் தள்ளிவிட்டது. ரவியின் சட்டை கிழிந்து, பட்டன்கள் தெறிக்க , ரவியோ ஸ்லோ மோஷனில் பல்டி அடித்து அந்த மாட்டின் முதுகில் பொத்தென்று உட்கார அதை எதிர்பார்க்காத மடக்குக் கொம்பி, மேலும் கோபமாகிக் கயிற்றை அறுத்துக்கொண்டு வாசல் வழியாக ஓட ரவி தலை கலைந்த யமதர்மராஜனாய் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு மடக்குகொம்பிமேல் ஆரோகித்துப் போனது அந்த வட்டாரத்தையே கலகலக்க வைத்தது. இதையெல்லாம் பார்த்த மகேஷ் பயந்துபோய் அதனால் அவனுக்கு ஜுரம் வந்ததில் மடக்குக் கொம்பியை முன்னூறு ரூபாய் நஷ்டத்தில் அவன் அப்பா விற்றுவிட்டார்.
மகேஷுக்குப் பிடித்தது எது பிடிக்காதது எது என்று பார்த்துப் பார்த்து செய்யும் அவன் பெற்றோர்கள் மகேஷின் அண்ணனிடம் அப்படிப் பாசமாக நடந்துகொண்டதில்லை. மகேஷின் அண்ணன் பிறந்தபோது அவன் கல்வி கேள்விகளில் பெருமை அடைவதோடு , சிறந்த பக்தனாகவும் இருக்கவேண்டும் என்று எண்ணி அவன் அம்மா ஒற்றைக் காலில் நின்றதால் பக்தன் என்று பெயர் வைத்தார்கள். ஆனால் கல்வி கேள்விகளில் ” அப்படி இப்படி ” என்றிருந்தாலும், பக்தனுக்கும் பக்திக்கும் மட்டுமல்ல, பக்தனுக்கும் சாமிக்கும் ரொம்ப தூரம் என்றாகிவிட்டது. ” கடவுள் இல்லை! இல்லவே இல்லை ” என்றெல்லாம் அவன் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கவில்லை . அப்படிப் பிரச்சாரம் செய்தவர்கள் பின்னாலும் பெரிதாக ஒன்றும் அலையவுமில்லை. மகேஷ் பிறந்ததிலிருந்து அவன் பெற்றோர்கள் அவனை ” கடவுள் தந்த வரம் ” என்று கொண்டாடக் கொண்டாட பக்தனுக்கு அப்படிச் சொன்னவர்களைவிடக் கடவுளின் மீது தான் அதிகம் கோபம் உண்டாகிக் கடவுளை வெறுக்க ஆரம்பித்திருக்க வேண்டும் என்று உளவியல் ரீதியாக என் அண்ணன் ஒரு காரணம் கூறினான்.
ஹைஸ்கூல் படிக்கும்போது, நிறைய மாணவ்ர்கள் பரீட்சைத் தாளில், ” கடவுள் துணை அல்லது முருகன் துணை ” என்று எழுதியிருக்க , சில கிறிஸ்தவ மாணவர்கள் , ” ஏசு துணை ” என்றும் முஸ்லிம் மாணவர்கள் தங்கள் பங்கிற்கு, ” அல்லா துணை ” என்றும் எழுதிய பிறகே கேள்விகளுக்கான் பதிலை எழுதியிருக்க, பக்தன் மட்டும் ” கடவுள் இல்லை ” என்று எழுதியிருந்ததை, பெரியார் தத்துவங்களில் ஈடுபாடுகொண்டிருந்த முல்லை வேந்தன் என்ற ஆசிரியர் தேர்வின் இன்விஜிலேட்டராக இருந்தபோது பார்த்து பரீட்சை முடிந்தபின் அவனை வெகுவாகப் பாராட்டி ” நீ ரொம்ப நல்லா வருவே ” என்று பாராட்டியதோடு நிற்காமல், தான் பேசவிருந்த ஒரு சுய மரியாதைக் கூட்டத்திற்கும் அவனை அழைத்துச் சென்று பேச்சின் நடுவில் அவன் தேர்வுத் தாளில் எழுதியிருந்ததைச் சொல்லி, பக்தனையும் மேடையேற்றி ” இப்படிப் பட்ட சிந்தனை மிக்க மாணவர்கள் இருக்கும்வரை தந்தை பெரியாரின் கொள்கைகள் என்றும் வையகத்தில் வாழும் ” என்று வாழ்த்தியபோது, அந்தக் கூட்டத்தின் தலைவர், ” தம்பி, ஒன் பேரு என்ன ஐயா ? ” என்று மைக்கிலேயே கேட்டுவைக்க, ” இவனும் சத்தமாக, ” பக்தன் ” என்று விறைப்பாகச் சொல்ல, கூட்டத்தில் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டபோது , தலைவர் தன் உரையின் போது ” இந்த பக்தன் சாதா பக்தன் அல்ல சிறந்த பெரியார் பக்தன் ” என்று சொல்லிக் கைதட்டல் வாங்கிச் சென்றார்.. அன்று இரவு இதைக் கேள்விப்பட்ட பக்தனின் அப்பா, அவனைக் கண்டித்து , இனி அதுபோன்ற கூட்டங்களுக்குப் போகக்கூடாது என்று தடை வேறு விதித்துவிட்டார். அதெல்லாம் பள்ளிப் படிப்பு முடியும் வரைதான்.
பக்தனும் நான் பின்னாளில் படிக்கவிருந்த பிஷப் ஹீபர் கல்லூரியில்தான் படித்தான். காலேஜ் போகும் வழியில் புத்தூர் நாலு ரோடு தாண்டியவுடன் கொஞ்ச தூரத்திலேயே பெரியார் மணியம்மை மையம் இருந்ததே அவன் அந்தக் கல்லூரியைத் தேர்வு செய்யக் காரணமாயிருந்திருக்கும். அங்கு தினமும் போய்த் தன் பகுத்தறிவை வளர்த்துக்கொள்வதாய் என் அண்ணனிடம் சொல்வான். பாடம் சம்பந்தமாக அடிக்கடி விவாதம் செய்யும்போது , என் அம்மா பயந்து போய் ” டேய் குமார் ! அந்த பக்தனோடெல்லாம் ரொம்ப பழக்கம் வெச்சுக்க வேணாம். நீயும் வர வர அவம் மாதிரிதான் ஆயிண்டிருக்கே ! சந்தியாவந்தனம் கிடையாது ஒரு ஜபம் கெடையாது ! நெத்திக்கு இட்டுக்கறது கூட ஏதோ மூணாம்பிறை மாதிரி கொஞ்சமா கொஞ்ச நாழிக்கு தெரியறது. அப்புறம் காணாப் போயிடறது. நமக்குப் படிப்புதான் முக்கியம். மத்ததெல்லாம் தேவை இல்ல! நாலடியில இருக்கற கோயிலுக்குக் கூட ஒன்னால போக முடியறதில்ல. ஆனா ஒனக்கு அவனோட மணிக்கணக்கா நின்னு பேச முடியறது. என்னமோப்பா ! ஒன்னப் பாத்துதான் இதுகளும் கத்துக்கும். குட்டிச்செவுரு ஆகிடாதே ” என்று ஏதேதோ கோர்வையாகவும் கோர்வை இல்லாமலும் சொல்லிக்கொண்டிருந்ததின் பின், என் அண்ணன் பக்தனுடன் பேசிக்கொண்டிருக்கும் போது நான் நின்றால் நான் எதிர்பாராதிருக்கும்போது சுள்ளென்று முதுகில் அடிக்க ஆரம்பித்தான்.
பக்தன் பகுத்தறிவை வளர்த்துக் கொண்டிருந்த போதிலும் , பாட அறிவையும் வளர்த்துக் கொள்ளத் தவறவில்லை. நிறைய நேரம் என் அண்ணனுடன் படித்துக்கொண்டிருந்தாலும் மார்க் மாத்திரம் அதிகம் வராததில் அவன் கல்லூரி ஆசிரியர்களின் மீது அதிகக் காட்டத்தில் இருந்தான். தன்னிடம் தவறு ஒன்றும் இருப்பதாகப் படவில்லை பக்தனுக்கு. ” நல்லாத்தான் படிக்கிறேன். நல்லாத்தான் எழுதறேன் . ஆனாலும் மார்க் போடமாட்டேங்கறானுவ ! என்னய மாதிரித்தான் எழுதியிருக்கான் அந்த ரமேஷு . ஆனாலும் அவனுக்கு என்னய விட பத்து மார்க் கூடப் போட்ருக்கான் அந்தத் ப்ரொஃபசர் தாயோளிப்பய ” என்று என் அண்ணனிடம் பக்தன் புலம்பிக்கொண்டிருந்தபோது நான் பக்கத்திலிருந்தேன். பக்தன் இன்னும் என்ன கெட்டவார்த்தைகளையெல்லாம் ப்ரயோகிப்பானோ எனப் பயந்து என்னை என் அண்ணன் விரட்டிவிட்டான். இதே கதைதான் அவன் பட்டப்படிப்பு முடிவிலும் இருந்தது. அவனைச் சுற்றி இருந்த நண்பர்கள் ஹையர் செகண்ட் க்ளாஸ் வாங்கியிருக்க , பக்தன் மட்டும் மூன்றாம் வகுப்பில் பாசாகியிருந்தான்.
” படிக்கற புள்ளைங்களுக்கு , படிப்போட கடவுள் பக்தியும் சேர்ந்து இருந்தா அதுங்க நல்லா வெளங்கும். வெளியில இருக்கறவங்களப் பாக்க வேணாம். வீட்டுக்குள்ள இருக்கற சின்னதுங்களப் பாத்தாவது கத்துக்க வேணாம் ? என்ன ஜன்மமோ ! ” என்று ரிசல்ட் வந்தபோது பக்தனின் தாய் அவனுக்கு அர்ச்சனை செய்துகொண்டிருந்தாள். பக்தன் அன்று இரவு வெகு நேரம்வரை என் வீட்டிலேயே இருந்தான். என் அம்மா அவனுக்கு ஆறுதலாய் சில வார்த்தைகள் சொல்லிக் கொண்டிருந்தாள். அவன் வேறு ஏதாவது தவறான முடிவுக்கு போய்விடுவானோ என்ற பயத்தில் என் அண்னன் அவனை அவன் வீடுவரைக் கொண்டுவிட்டு வந்தான். பட்டப்படிப்புக்கான ரிசல்ட் வருவதற்கு முன்னால் பக்கத்தில் இருந்த சிம்கோ மீட்டர் என்ற கம்பெனிக்கு இண்டெர்வியூ போய்வந்திருந்த பக்தன் அது எப்படியும் கிடைத்துவிடும் என்று நம்பியிருந்த நேரத்தில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது மாதிரி ரிசல்ட் வந்த அடுத்த சில நாட்களில் வந்திருந்த கடிதத்தில், ” டியர் பக்தன், வி ரெக்ரெட் டு இன்ஃபார்ம் யூ தட் யூ ஆர் நாட் செலெக்டெட். யுவர்ஸ் சின்சியர்லி, ராமன் ( மேனேஜிங்க் டைரக்டர் ) ” என்றிருந்ததைப் படித்துவிட்டு ராமன் என்ற பெயரிலிருந்த கோபத்தில் அந்தக் கடிதத்தையும் அதன் அருகில் மகேஷ் ஸ்ரீ ராமஜயம் என்று தினமும் நூற்றியெட்டு தடவை எழுதிக்கொண்டிருந்த நோட்டையும் சேர்த்துக் கிழித்துவிட்டான். இது அபச்சாரமாகப் பட , மகேஷ் அன்று முழுவதும் அழுது சாப்பிடாமலிருக்க, மகேஷின் அப்பா பக்தனைத் தோளுக்கு மேல் வளர்ந்த பையன் என்றும் பார்க்காமல் அடித்துவிட்டார். என் அம்மா, மகேஷ் அம்மாவிடம் ” பக்தனுக்கு ஏழரை நடக்கறதோ என்னவோ ! அவன் ஜாதகத்தைக் கொஞ்சம் பாத்து ஏதாவது பரிகாரம் வேனும்னா பண்ணிடுங்கோளேன் ” என்று ஐடியா கொடுத்துக்கொண்டிருந்ததைக் கேட்டு பக்தன் அவன் ஜாதகத்துடன் மகேஷ் ஜாதகம் எழுதி வைத்திருந்த நோட்டையும் கிழித்துவிட்டான்.
” ” ஒம் புள்ள பாடத்தையெல்லாம் படிச்சுக் கிழிச்சது பத்தாதுன்னு , ராமஜயம் நோட்டு , ஜாதக நோட்டுன்னு எல்லாத்தையும் கிழிக்க ஆரம்பிச்சுட்டான். இப்படியே போனா சட்டையையும் வேட்டியையும் கிழிச்சுட்டு அலைய வேண்டியதுதான் பாக்கி ” என்று பக்தனின் அப்பா தன் மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
பக்தனின் சோகம் அதிகமாகிவிடுமாறுதான் எல்லாம் நடந்து கொண்டிருந்தது. மகேஷ் பி.யூ.சி படித்துக்கொண்டிருக்கும்போதே எழுதிய பேங்க் பரீட்சையில் தேறி ஸ்டேட் பேங்கில் வேலைக்குச் சேரச் சொல்லி ஆர்டர் வந்திருந்தது. மெட்றாசில் ட்ரெயினிங்க் என்று அவன் ஆர்டர் வந்த சில தினங்களிலேயே கிளம்பிவிட்டான். அவன் அப்பாதான் அவனைக் கொண்டுவிட்டு வந்திருந்தார். பேங்கில் வேலைக்குச் சேர்ந்துவிட்டாலும் கூட அவன் நேரடியாக பட்டப் படிப்பு முடிக்க தபால் வழிக் கல்வியில் சேர்ந்து படிக்க ஆர்ம்பத்திருந்ததை எண்ணி அவன் பெற்றோர்கள் ஒரு பக்கம் பெருமைப் பட்டுக் கொண்டிருந்தாலும், பக்தனை நினைத்து உள்ளூரக் கொண்டிருந்த வருத்தத்தில், அவன் அம்மாவைவிட அப்பாதான் இளைத்துக்கொண்டிருந்தார். அடிக்கடி உடம்பு அவருக்குப் படுத்த ஆரம்பித்திருந்தது. அப்படி உடம்பு சரியில்லாமல் படுத்திருந்த ஒரு நாளில், ” மகேஷுக்குக் கல்யாணம் பண்ணிவிடலாமா ” என்று தன் மனைவியிடம் கேட்டபோது திண்ணையில் உட்கார்ந்திருந்த பக்தனின் மனதில் அவன் அம்மா காத்த அமைதியின் அழுத்தம் தன்னையே அழுத்தி எழவிடாமல் செய்துகொண்டிருந்ததாக என் அண்ணனிடம் சொன்னபோது அவன் கண்கள் வறண்ட கிணற்றைப் போலிருந்தன.
பக்தனின் அம்மாவோ, பக்தன் கடவுள் இருக்கு என்று நம்ப ஆரம்பித்துவிட்டால் போதும், அவனுக்கு நல்ல காலம் பிறந்துவிடும் என்று என் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். என் அம்மாவும் பக்தனிடம், ” பக்தா! ஒனக்கு என்னடா இப்ப? கடவுள் இல்லன்னு சொல்லி என்னதான் சாதிக்கப் போற? பெத்தவங்கள நோகடிக்கறதத் தவுத்து வேற ஒரு பிரயோஜனமும் இல்ல உன் பிடிவாதத்தால ! உனக்குன்னு இல்லாட்டா என்ன , அடுத்தவாளுக்காக இருக்குன்னு சொல்லிட்டுப் போயேன் ” என்று ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தாள். பக்தனும் ஒன்றும் சொல்லாமல் கண்கள் எங்கோ நிலைகுத்தியிருக்கக் கேட்டுவிட்டுப் பின், ” சரி , வரேன் மாமி ” என்று கிளம்பிவிட்டான். பின் அம்மா என்னைப் பார்த்து , ” ஒன்னப் பார்த்தாலும் எனக்கு பக்தனப் பாக்கற மாதிரி இருக்கு . ஒழுங்கா காலேஜ் மட்டும் தானே போயிட்டு வரே ? இல்ல, அவனைப் போல ஏதோ மையம் அது இதுன்னு எதையாவது தத்துப்பித்துன்னு கத்துக்கறயா ? ” என்று கண்களில் வழிந்த அனாவசியக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு சென்றாள்.
பக்தனின் அப்பா, தன்னால் இனி மாடுகளைப் பராமரிக்க முடியாது என்பதால், அவ்ரின் ஆஸ்தான ” கேட்டில் குருவான ” ரவியைக் கூப்பிட்டு மாடுகளை விற்றுத் தரக் கேட்டுகொண்டிருந்தபோது, ரவியும் தன் பங்கிற்கு, ” சரிண்ணே ! மாட்டையெல்லாம் வித்துப்புடலாம். இந்த பக்தனுக்கு என்ன பண்ணலாம்னு இருக்கீங்க ? பேசாம மெடிகல் அன்ஃபிட் ஆயிட்டு உங்க வேலைய பக்தனுக்குத் தரச் சொல்லி அப்ப்ளை பண்ண வேண்டியதுதானே ? சின்னப் பயதான் செட்டிலாயிட்டான். இவன் எப்போ செட்டில் ஆவறது ? ” என்று மாடுகளைச் செட்டில் பண்ணுவதுபோல பக்தனுக்கும் செட்டில்மெண்டுக்கு செய்த ஏற்பாட்டை பக்தனின் அப்பா உடனே அப்ரூவ் செய்யவில்லை. ” கடவுளே இல்லைங்கற பய, நாளெக்கி நீ அப்பாவே இல்லென்னு சொல்லி வேலைய வாங்கிட்டுத் தொரத்திட்டா என்ன பண்றது சொல்லு ” என்று தன் நியாயத்தைத் தெளிவு படுத்திக்கொண்டிருந்தார்.
அந்த வருடம் வந்த சரஸ்வதி பூஜையின் போது, மகேஷ் வீட்டிற்கு ஒரு வாழ்த்து அட்டையை அனுப்பியிருந்தான். சரஸ்வதி வெள்ளைப் பட்டு உடுத்திக்கொண்டு வெள்ளைத் தாமரையில் அமர்ந்து வீணையை மடியில் ஒரு குழந்தையைப் போலக் கிடத்தி இடது கையை வீணைக்குக் கீழே கொடுத்துத் தாங்கி, வலது கையால் நரம்புகளைப் பார்க்கமலேயே மீட்ட அந்த முகத்தில் மலர்ந்திருந்த சிறு புன்னகை முகத்தை மேலும் பொலிவாக்கிக்கொண்டிருந்தது. அந்தப் படம் பக்தனை வசீகரித்ததோ என்னவோ தெரியவில்லை. யார் மனதில் கு எப்போது மாற்றம் வரும் எனச் சொல்ல முடியுமா என்ன? பக்தன் அந்தப் படத்தையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டுப் பின், ஒரு வெள்ளைத் தாளில் அந்தப் படம் போலவே பென்சிலால் வரைந்தான். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் வரைவதை நிறுத்தி, வரைந்ததைக் கொஞ்சம் தள்ளி வைத்துப் பார்த்துவிட்டு மீண்டும் வரைந்து கொண்டிருந்ததை அவன் அம்மாவும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பக்தன் படத்தை வரைந்து முடித்துவிட்டு, அதை மகேஷ் ஸ்ரீராமஜயம் எழுதி வைக்கும் இடத்தில் வைத்துவிட்டுப் போய்விட்டான். அவன் போனபின் அதை எடுத்துப் பார்த்த அவன் அம்மா, பக்தனின் அப்பாவிடம், ‘ இதப் பாத்தீங்களா ? ” என்று ஆச்சர்யத்தில் விரிந்த கண்களோடு காண்பிக்க, அவன் அப்பா, படத்தைப் பார்த்துவிட்டுப் பின் கண்களைச் சுருக்கி கீழே எழுதியிருப்பதை , ” கடவுள் உண்டு ” என்று வாய்விட்டுப் படித்தார்.
இது நடந்த அடுத்த வாரத்திலேயே பக்தனின் அப்பா , ரயில்வே பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொள்வதாய்க் கடிதம் கொடுத்து, பட்டப் படிப்புப் படித்திருக்கும் தன் மூத்த மைந்தனுக்கு கருனை அடிப்படையில் வேலை தருமாறு மனு கொடுத்துவிட்டார். பக்தனுக்கும் அடுத்த ஐந்து மாத காலத்தில் ரயில்வேயில் கருணை அடிப்படையில் வேலை கிடைத்துவிட, பக்தனின் அம்மா அவன் வரைந்திருந்த சரஸ்வதி படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது நான் அங்கு சென்று , ” கடவுள் உண்டு படமா ? ” என்று கேட்டபோது அவர்கள் கையிலிருந்த படம் தவறி விழுந்தது. அதைக் குனிந்து கீழே எடுத்தபோது அதன் பின் பக்கமும் என்னவோ எழுதியிருக்கிறதே என்று பார்த்தேன். ” என்று சொல்பவன் முட்டாள் ” எனத் தொடர்ந்திருந்த பக்தனின் அலங்காரக் கையெழுத்து என்னைப் பார்த்துசிரித்துக் கொண்டிருந்தது.
- உயிரின் வாசம் – “பெயரிடாத நட்சத்திரங்கள்”
- கடவுள் உண்டு
- விஷமேறிய மரத்தின் சிற்பம்
- கே.எஸ்.ரமணா எழுதிய “பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மிகமும் என்ற நூல் வெளியீட்டு விழா
- என் ஆசை மச்சானுக்கு,
- ஓடிப் போனவள்
- “ஆம் ஆத்மி”
- ஒரு ரத்தக்கண்ணீர்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : ஒரு விண்மீன் தன் அண்டக் கோள் ஒன்றை உறிஞ்சி விழுங்குகிறது !
- நம்பிக்கை ஒளி! (8)
- இராத்திரியின் சக்கரங்கள்
- பாமாவின் ‘கருக்கு” – தலித் பெண்ணியப் பார்வை
- ரஞ்சினியும், இஞ்சி கசாயமும்
- வாயுள்ள கன்றும் பிழைக்கும்…!
- ரூபம்
- வருவேன் பிறகு!
- தெல்காப்பியம் கூறும் தன்மைப் பன்மையில் வினையடிகள்
- ஜரகண்டி
- நாட்டார்/கிராமிய பாடல்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
- (வாலிகையும்) மணலும் , நுரையும்! (5)
- காதல் அன்றும் இன்றும்
- மூடிய விழிகள்
- எஸ் ராமகிருஷ்ணன் வழங்கும் உலக சினிமா 7 நாள் பேருரைகள்
- மனம் வெட்டும் குழிகள்
- (3) – க. நா.சு. வும் நானும்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -4
- மீண்டுமொரு சரித்திரம்
- வைரமுத்துவின் எமிலி: ஏன் இந்த முரண்பாடு?
- மலேசியாவில் தொலைந்த மச்சான்
- பழமொழிகளில் காலம்
- அடையாளம்
- வாழ்க்கைச் சுவடுகள்
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -37
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 46) விழிக்கும் நெஞ்சுக்கும் போர்
- காலம் ஒரு கணந்தான்
- Arumbugal 2012 organised by Tamil Cultural Association in Hong Kong
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……………… 6. எஸ்.வைதீஸ்வரன் – உதய நிழல்
- தாகூரின் கீதப் பாமாலை – 41 அவள் தந்த பிரிவுப் பரிசு.
- நாத்திகர்களும் இஸ்லாமும்.
- தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் வழங்கும் 70வது சிறப்புப் பட்டிமன்றம் 02 டிசம்பர் 2012 ஞாயிறு மாலை மணி 6.30
- காணோம்
- அக்னிப்பிரவேசம்- 11