[ http://www.youtube.com/watch?
WASP -12b and Other Exo-planets in Space]
WASP -12b and Other Exo-planets in Space]
[கட்டுரை: 89]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
சூரிய குடும்பத்தின் பிணைப்பில்
சுழல் பந்துகள்
சுற்றிடும் விந்தை யென்ன ?
பிண்டங்கள்
கோளமான மர்மம் என்ன ?
நீள் வட்ட வீதியில் அண்டங்கள்
மீளும் நியதி என்ன ?
கோள்கள் அனைத்தும்
சீராக
ஒரே திசை நோக்கிச்
சுற்றுவ தென்ன ?
ஒரே தள மட்டத்தில் அண்டங்கள்
பரிதி இடுப்பைச் சுற்றி
வருவ தென்ன ?
யுரேனஸ் அச்சும்
சரிந்து போய்ச் சாய்ந்த தென்ன ?
பரிதி மண்டலத்தில்
வக்கிரமாய்ச் சுழன்று
சுக்கிரன் மட்டும்
திக்குமாறிப்
போன தென்ன ?
புதன் கோள் ஜிலேபிபோல்
வலம்வருவ தென்ன ?
தன்னச்சில் சுழாமல் வெண்ணிலா
முன்னழகைக் காட்டிப்
பின்னழகை
மறைப்ப தென்ன ?
பரிதியே தன் கோளை
உரித்து உறிஞ்சுவ தென்ன ?
+++++++++++++
“இதுபோல் விண்மீனைச் சுற்றியுள்ள ஓர் அமைப்பை இதுவரை நாங்கள் கண்டதில்லை. ஓர் அண்டக் கோள் மரணமாகி முகில் மூடிய ஒரு துகில் போல் மங்கித் தெரிகிறது.”
டாக்டர் கரோல் ஹாஸ்வெல் : [வானியல் விஞ்ஞானி]
யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் கருவிகள் இன்னும் சீராகப் பணியாற்றிச் சூரியப் புயல், அகிலக் கதிர்கள், சக்தி வாய்ந்த துகள்கள், சூரிய காந்த அரங்கம் பற்றிய தகவலைத் தொடர்ந்து அனுப்பி வருகின்றன. . . . ஏவிய நாளிலிருந்து (அக்டோபர் 1990) எந்தக் கருவியும் இதுவரைப் பழுதாகவில்லை !
ரிச்சர்டு மார்ஸ்டன், யுலிஸிஸ் சூரிய விண்ணுளவித் திட்ட மேற்பார்வை விஞ்ஞானி (European Space Agensy) [ஏப்ரல் 15, 2008]
விண்மீன் தனது அண்டக் கோளை ஈர்த்து உ றிஞ்சி விழுங்குகிறது !
2012 நவம்பர் 20 ஆம் தேதி வெளியான வானியல் பௌதிக இதழில் [Astrophysical Journal] விண்மீன் – அண்டக்கோள் உறவுப்பாடுகள் [Star-Planet Interations] பற்றி ஒரு புதிரான, புதிதான விண்வெளி நிகழ்ச்சி அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த ஆய்வு அறிக்கை வெளியிட்டவர் பிரிட்டனின் வாஸ்ப் விண்கோள் தேடல் ஆராய்ச்சியாளர் [WASP- Wide Angle Search for Planets]. அவர்கள் வாஸ்ப்-12பி என்னும் ஓர் அண்டக் கோளை 2008 ஆண்டில் கண்டுபித்தார். வாஸ்ப்-12பி [WASP-12b] என்னும் அந்த அசுர வடிவ வாயுக் கோளை, [Giant Gas Planet] அதன் சொந்தக் குடும்ப விண்மீனே தன்வசம் ஈர்த்து விழுங்கிக் கொண்டிருந்ததை நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி முதன்முதல் [November 20, 20122] கண்டுபிடித்துப் படம் எடுத்தது. இதுவரை இம்மாதிரி ஓர் அதிசய விண்வெளி நிகழ்ச்சியை விஞ்ஞானி எவரும் கண்டதில்லை. இந்த பூத வாயுக் கோள் 2008 இல்தான் முதன்முதலில் கண்டுபிடிக்கப் பட்டது. நமது பூதக்கோள் வியாழனைப் போல் வாஸ்ப்-12பி மரணக் கோள் 1.4 மடங்கு பெரியது. அவ்விதம் அந்த விண்மீன் தன் அண்டக் கோளை விழுங்கும் போது ஒரு குறிப்பிட்ட அலைநீள ஒளியை உறிஞ்சி, மெக்னீஸிய மூலகம் முகில் துகில் மூடியிருப்பது போல் ஹப்பில் விண்ணோக்கி மூலம் காணப் பட்டது.
அந்த அண்டக் கோள் தன் விண்மீனுக்கு வெகு அருகில் ஈர்க்கப் பட்டு பூமி நாளுக்குச் சற்று கூடிய நாட்கணக்கில் [ஒரு சுற்றுக்கு 1.1 நாள்] ஒரு தரம் சுற்றி வந்தது. அண்டக் கோளின் பேரளவு சூடேறிய வாயு முகில் [Superheated Gas Cloud] ஆவியாகி வெளியேறி [Boiled off] நமது பூதக் கோள் வியாழனின் ஆரத்தைப் போல் மூன்று மடங்கு தூரத்திலிருந்து விண்மீனுக்கு வாயுவை ஊட்டிக் கொண்டிருந்தது. வாயுக் கோளின் சிதைந்த ஓரளவு வாயு, வளைந்த நீள்வடம் போல் பரந்த விண்வெளியில் கசிந்து வெளியேறிக் கொண்டிருந்தது ! கசிந்த வாயு முகில் மிக மெல்லியது. கண்ணுக்குப் புலப்படாதது. ஹப்பிள் விண்ணோக்கியில் புறுவூதா வுக்கு நெருங்கிய ஒளியில் [Near Ultra-Violet Light] காணப் பட்டது. வானியல் குழுவினர் அந்த வாயு முகிலில் மெக்னீஸியம் மூலகம் இருப்பதைக் கண்டனர். மேலும் மிகையான அளவு கார்பன் மூலகமும் இருப்பது முதன்முதல் அறியப் பட்டது. மெக்னிஸியம் புறவூதா நெருக்க ஒளியை உறிஞ்சுவதில் மிக்க வல்லமை உடையது. இத்தகைய வாயு முகில் மூட்டத்தில், விழுங்கும் விண்மீனைக் காண முடியாமல் மங்கித் தெரிகிறது.
நமது சூரிய மண்டலம் எப்போது தோன்றியது ?
வானியல் விஞ்ஞானிகளும், பூதளவாதிகளும் (Astronomers & Geologists) பூமியின் வயதைக் கணித்து அதிலிருந்து பரிதி மண்டலத்தின் தோற்ற வயதை அறியப் பல்வேறு முறைகளைக் கையாள்கிறார். நாமறிந்த பூமிப் பாறைகளின் கதிரியக்கத் தேய்வு வீதங்களைப் “பாறைக் கதிரளப்புக் காலக் கணிப்பு” மூலம் (Radiometric Dating of Rocks) கணக்கிட்டுச் சூரிய குடும்பம் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று கருதுகிறார்கள். பூமியின் பூர்வீகப் பாறை வயது கதிரியக்கத் தேய்வு வீதக் கணிப்பில் 3.9 பில்லியன் ஆண்டுகள் என்பது தெரிய வருகிறது ! பூதளத் தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) தூண்டி பூமியில் எழும் பூகம்ப எரிமலை நிகழ்ச்சிகளால் பூர்வீகப் பாறைகள் நிலைமாறி அவற்றைக் காண முடியாமல் சிதைத்து விடுகின்றன !
பூமியின் பூர்வீகப் பாறைகளைத் தவிர விண்வெளிக் கற்கள், எரிகற்கள், நிலவிலிருந்து அல்லது செவ்வாய்க் கோளிலிருந்து வீழும் விண்கற்கள் மிகத் துல்லியமாகப் பரிதி மண்டல வயதுக் காலத்தை நிர்ணயம் செய்ய உதவுகின்றன. அந்த மாதிரிகளின் கதிரியக்கத் தேய்வு வீதத்தைக் கணித்ததில் அவை 4.6 பில்லியன் ஆண்டு வயதைக் கொண்டவை என்று அறியப்பட்டு, பரிதி மண்டலம் அந்த வயதை ஒட்டி உண்டாகி இருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது.
நமது சூரிய மண்டலம் எப்படி உண்டானது ?
விஞ்ஞான வரலாற்றில் எத்தனையோ கருத்துக்கள் மாறிப் போனாலும், பரிதி மண்டலம் எப்படி உண்டானது என்னும் கருத்து கடந்த 250 ஆண்டு காலமாக மாறவில்லை. 1755 ஆம் ஆண்டில் ஜெர்மன் வேதாந்தி இம்மானுவெல் கென்ட் (Immanuel Kant) (1724-1804) முதன்முதலில் தனது நிபுளா கோட்பாடைக் (Nebular Hypothesis) கூறினார்: அதன்படி பேரளவு வாயு முகில் கொண்ட ஆதிச்சூரிய நிபுளா, பரிதி மண்டலத்தின் சூரியனாகவும், மற்ற அண்டக் கோள்களாகவும் உண்டாக மூலாதாரப் பொருளானது ! 1796 இல் பிரெஞ்ச வானியல் நிபுணர் பியர் சைமன் லாப்பிலாஸ் (Pierre Simon Laplace) (1749-1827) அதே மாதிரிக் கோட்பாடை எடுத்துக் கூறினார். ஆனால் ஆழ்ந்த விண்வெளியை நோக்கி அவரால் அதற்குச் சான்றுகளை எடுத்துக் காட்ட முடியவில்லை !
இம்மானுவெல் கென்ட் விளக்கிய நிபுளா கோட்பாடில் இருப்பது இதுதான் : பேரளவுக் கொள்ளளவு வாயு நிறையும் தூசி துணுக்குகளும் திணிவு ஈர்ப்பு (Mass Gravity) விசையால் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தன. திணிவு நிறை பெருகப் பெருக ஈர்ப்பு சக்தி மிகையாகி வாயுத் திணிவை இறுக்கிச் சுருக்கி (Gravitational Contraction) வாயுக் கோள்களாகவும், திடக்கோள்களாகவும் உருவாயின.
இப்போது வானியல் விஞ்ஞானிகள் அவற்றை விபரமாகச் சொல்ல முடிகிறது. அதாவது முதலில் சூரிய மண்டலத்தின் வாயு முகில் மூலக்கூறு (Molecular Gas Cloud) முறிந்த போது அதன் விரிவு 100 AU (Astronomical Unit) [1 AU = Average distance between Sun & Earth (93 மில்லியன் மைல் /150 மில்லியன் கி.மீ.)] ஆகவும், திணிவு நிறை பரிதியைப் போல் 2 அல்லது 3 மடங்கு இருந்ததாகவும் யூகிக்கிறார்கள். அத்தகைய வாயு முகில் ஈர்ப்பு முறிவைத் (Cloud’s Gravitational Collapse) தூண்டி விட்டிருப்பது அருகில் இருந்த சூப்பர்நோவாவின் (Supernova) மின்னல் வெடிப்பில் நேர்ந்த அழுத்த அலையாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. வாயு முகில் குவிந்து விழுந்த பிறகு பலமுறைகளில் திணிவு சேர்ப்பு விரைவானது. முகில் திணிவின் உஷ்ணம் அதிகரித்து அது சுழலத் தொடங்கியது. வாயுப் பிண்டம் தங்கி அது வட்டத் தட்டு வடிவாக மட்டமானது. மிகையான ஈர்ப்பு சேமிப்புச் சக்தி (Gravitational Potential Energy) வெப்பமாக மாறி வாயு முகில் அடர்த்தி (Density) அதிகமானது. அதுவே கோள்களின் உட்கரு உலோகமாகப் பின்னால் திரட்சி யானது.
விண்மீன் குடும்பத்தில் அண்டக் கோள்கள் உண்டான தெப்படி ?
வட்டவியல் திணிவு நெம்பு நிலைப்புப்படி (Conservation of Angular Momentum) வடிவம் சிறுகச் சிறுகச் சுழலும் மட்டமான தட்டின் வேகம் மிகையானது. மென்மேலும் விழுந்து சேரும் வாயுவும், தூசி துணுக்குகளும் சேர்ந்து கொண்டு முன்னோடிக் கோள் தட்டு (Proto-Planetary Disk) மையம் தடித்து ஓரம் மெலிவாகித் தமிழகத்தின் “ஆப்பம்” போல் (Pancake) உருவாகியது. நடுவில் மகா ஈர்ப்புச்சக்தி வாய்ந்த உட்கரு எழுவதும் அப்பால் விளிம்பு நோக்கிச் செல்லச்செல்ல வலுகுன்றிய கோள்கள் உருவாவதும் எப்படி என்று விளக்கிச் சொல்லலாம் ? பேரளவு வாயுப் பிண்டம் செழித்த நிபுளாவைச் சுற்றிலும் அதன் பூத ஈர்ப்பு மண்டலம் காந்த சக்தியால் சூடாக உள்ளது ! அந்த ஈர்ப்பு வாயுத் துணுக்குகளுக்கு சுழற்சியை உண்டாக்கித் தன் பூத ஈர்ப்புக் குழியில் சுற்றத் தூண்டுகிறது. அவ்விதம் சிறுகச் சிறுக்கச் சேர்ந்துதான் சுழலும் கிருஷ்ணச் சக்கிரம் போல் அசுர வடிவாகி வட அமெரிக்க வேனிற்தள ஹர்ரிக்கேன் (Tropical Hurricanes) சூறாவளிகள் உருவாகின்றன !
பேரளவு இயக்கம் மையத்தில் உண்டாகி முன்னோடிச் சேய் விண்மீன் (Infant Proto-Star) விரைவாக வாயுத் திணிவைத் திரட்டி சூரியனாகியது. அதன் பிறகு 50 மில்லியன் ஆண்டுகளாக பரிதி போதுமான வாயு நிறையைச் சுருட்டிப் பூரண எரிநிலை அடைந்து பிணைவு சக்தி தூண்டப் பட்டு சுயவொளி விண்மீனாக மாறியது. தட்டின் விளிம்புகளில் மேலும் வாயுத் துணுக்குகள் சேமிப்பாகி அங்குமிங்கும் கண்ட இடங்களில் சிறிதும் பெரிதுமாக வாயுவிலும் திடப் பிண்டத்திலும் கோள்கள் உண்டாயின.
பரிதி வெப்ப அணுக்கரு சக்தியால் தூண்டப் பட்டதும் அது அசுரப் புயலை எழுப்பித் தூசிகளையும் துணுக்குகளையும் தட்டிலிருந்து வெளியேற்றியது. அப்போது பூத வாயுக் கோள்கள் மென்மேலும் பெருக்க இயலாது போயின. தட்டில் தங்கிய மீத வாயுக்கள் பேரளவு வெப்பத்தாலும், ஈர்ப்பு விசை யாலும் மூலகமாற்றம் நிகழ்ந்து குளிர்ந்து திரண்டு சிலிகேட்களும், உலோகங்களும் (Silicates & Metals) உண்டாயின. துணுக்குகளும், தூசிப் பனிகளும் மற்ற கோள்களின் முன்னோடிகளைக் கட்டி மென்மேலும் பெருக்க வைத்துப் பேரளவு அண்டங்களாக்கின.
பரிதி மண்டலத்தின் புறக் கோள்கள் பனி அண்டங்களாய்க் கட்டுமான மாகின. வாயுக் கோள்களின் உட்கரு அடர்த்தியாகி வாயு முகில்கள் அவற்றை இறுகிப் போர்த்திக் கொண்டன. புறக்கோள்களைச் சுற்றிலும் பல துணைக்கோள்கள் உண்டாகிச் சுற்றத் தொடங்கின. வாயு முகில்கள் வீசி எறியப்பட்டு வால்மீன்களாக “ஓர்ட் முகில்” மந்தையில் (Oort Cloud of Comets) சிக்கின. ஓர் அசுரப் பிண்டம் பூமியை மோதி நிலவு உண்டானது. செவ்வாய்க் கோளுக்குச் சந்திரன்கள் ஏற்பட்டுச் சுற்ற ஆரம்பித்தன. இவை அனைத்தும் இம்மானுவெல் கான்ட் 250 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய நிபுளாக் கோட்பாடைத்தான் முற்றிலும் மெய்ப்பிக்கின்றன.
பரிதி மண்டலப் படைப்பில் காணும் சில புதிர்கள் !
அண்டக் கோள்கள் ஏன் பரிதியை ஒரே தளமட்டத்தில் நீள்வட்ட வீதிகளில் சுற்றுகின்றன ? அவற்றின் சீரொழுக்க இயக்க முறைக்கு என்ன காரணம் உள்ளது ? அகக்கோள்களும், புறக்கோள்களும் சூரியனை ஏன் எதிர்க் கடிகார முறையில் சுற்றி வருகின்றன ? சூரியனையும் மற்ற கோள்கள் போலின்றித் தன்னச்சில் சுக்கிரன் மட்டும் ஏன் நேர்க் கடிகார வக்கிர திசையில் சுற்றி வருகிறது ? பூமியின் நிலவு தன்னச்சில் சுழாது ஏன் ஒரே முகத்தைக் காட்டிக் கொண்டு புது மாதிரிச் சுற்றி வருகிறது ? தன்னச்சில் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுழல்வது ஓர் விந்தைதான். கோள்களின் துணைக் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுற்றுவதும் ஒரு விந்தைதான். இந்த விந்தைகள் அனைத்தும் நிபுளாக் கோட்பாடு கூறும் “சுழற்தட்டு அமைப்பு” விதியைப் பெரும்பாலும் நிரூபிக்கின்றன.
யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் பணி தொடர்கிறது !
ஏப்ரல் 15, 2008 ஆம் தேதி அண்டவெளித் தேடல் விஞ்ஞானிகள் 1990 ஆண்டு முதல் பதினேழு ஆண்டுகளாய்ப் பரிதியைச் சுற்றி ஆராய்ந்து வரும் “யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியைப்” (Ulysses Solar Probe) பூமி ஆட்சி அரங்கிலிருந்து தளர்த்தி ஓய்வாக இருக்கவிட்டு 2013 ஆண்டில் மீண்டும் ஆய்வு செய்ய மாற்றியுள்ளார் ! அப்போதுதான் மறுபடியும் பரிதியின் அடுத்த உச்சநிலைக் கதிராட்டம் தொடங்கும் ! அதுவரை விண்ணுளவியின் ராக்கெட் உந்தல் எரிசக்தியை வீணாக்காமல் சேமித்து வைத்து சில இயக்கங்களையும் முடக்கி உளவி ஓய்வெடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது ! பரிதியிலிருந்து 125 மில்லியன் மைல் தூரத்தில் பரிதியை மையமாகக் கொண்டு சுற்றிவரும் நீள் வட்ட வீதியில் (Helio Centric Orbit) உறங்கி வரும் கருவிகளைச் சூரிய கனல் வெப்பமே எழுப்பிவிடும் தகுதி பெற்றது. இப்போது ஓய்வெடுக்கும் உளவி பரிதியை விட்டு அப்பால் நகன்று 250 மில்லியன் தொலைவை 2010 ஆண்டில் அடைந்து விடும்.
[தொடரும்]
தகவல்:
Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.
1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How did the Solar System form ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 National Geographic Picture of Our Universe By Roy Gallant: (1986)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 http://www.thinnai.com/?
16 http://www.thinnai.com/?
17 Solar System Formation By Jeff Scott (October 16, 2005)
18. Spaceflight Now -Breaking News. Controllers Working to Keep “Ulysses Sun Orbiter Alive” By :Stephen Clark (www.spaceflightnow.com/news/
19. WASP -12b : http://en.wikipedia.org/wiki/
20. Hubble Telescope : http://en.wikipedia.org/wiki/
21. Daily Galaxy : First Planet Ever Observed Being Devoured by its Star System [November 21, 2012]
******************
S. Jayabarathan [http://jayabarathan.
- உயிரின் வாசம் – “பெயரிடாத நட்சத்திரங்கள்”
- கடவுள் உண்டு
- விஷமேறிய மரத்தின் சிற்பம்
- கே.எஸ்.ரமணா எழுதிய “பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மிகமும் என்ற நூல் வெளியீட்டு விழா
- என் ஆசை மச்சானுக்கு,
- ஓடிப் போனவள்
- “ஆம் ஆத்மி”
- ஒரு ரத்தக்கண்ணீர்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : ஒரு விண்மீன் தன் அண்டக் கோள் ஒன்றை உறிஞ்சி விழுங்குகிறது !
- நம்பிக்கை ஒளி! (8)
- இராத்திரியின் சக்கரங்கள்
- பாமாவின் ‘கருக்கு” – தலித் பெண்ணியப் பார்வை
- ரஞ்சினியும், இஞ்சி கசாயமும்
- வாயுள்ள கன்றும் பிழைக்கும்…!
- ரூபம்
- வருவேன் பிறகு!
- தெல்காப்பியம் கூறும் தன்மைப் பன்மையில் வினையடிகள்
- ஜரகண்டி
- நாட்டார்/கிராமிய பாடல்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
- (வாலிகையும்) மணலும் , நுரையும்! (5)
- காதல் அன்றும் இன்றும்
- மூடிய விழிகள்
- எஸ் ராமகிருஷ்ணன் வழங்கும் உலக சினிமா 7 நாள் பேருரைகள்
- மனம் வெட்டும் குழிகள்
- (3) – க. நா.சு. வும் நானும்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -4
- மீண்டுமொரு சரித்திரம்
- வைரமுத்துவின் எமிலி: ஏன் இந்த முரண்பாடு?
- மலேசியாவில் தொலைந்த மச்சான்
- பழமொழிகளில் காலம்
- அடையாளம்
- வாழ்க்கைச் சுவடுகள்
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -37
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 46) விழிக்கும் நெஞ்சுக்கும் போர்
- காலம் ஒரு கணந்தான்
- Arumbugal 2012 organised by Tamil Cultural Association in Hong Kong
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……………… 6. எஸ்.வைதீஸ்வரன் – உதய நிழல்
- தாகூரின் கீதப் பாமாலை – 41 அவள் தந்த பிரிவுப் பரிசு.
- நாத்திகர்களும் இஸ்லாமும்.
- தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் வழங்கும் 70வது சிறப்புப் பட்டிமன்றம் 02 டிசம்பர் 2012 ஞாயிறு மாலை மணி 6.30
- காணோம்
- அக்னிப்பிரவேசம்- 11