வாழ்க்கைச் சுவடுகள்

author
4
0 minutes, 6 seconds Read
This entry is part 32 of 42 in the series 25 நவம்பர் 2012

 தேமொழி


நம் பாரதத்தில் பிறந்தவர்களின் வரலாற்றுக் குறிப்புகளின் நிலை மிகவும் வருந்தத் தக்கது.

பொதுவாக ஒருவர் காலம் பல கடந்தும், அதாவது பற்பல நூற்றாண்டுகளுக்குப் பின்னும் நினைவுகூரப்பட வேண்டும் என்றால் அவர்கள் பொதுவாக சில பண்புகளைக் கொண்டிருப்பார்கள்.
– அவர்கள் கலையிலோ, இலக்கியத்திலோ (ஆன்மீகம், அரசியல், அறிவியியல் துறைகள் உள்ளடக்கிய படைப்புகள் உட்பட)  தங்கள் பங்கினை அளித்திருப்பார்கள்
– அதிகாரம் மிக்க அரச குடும்பத்தினராக இருந்திருப்பார்கள்
– செல்வந்தராக இருந்து ஈகைகள் பல புரிந்த புரவலர்களாக இருந்திருப்பார்கள், அல்லது
– மக்கட்பணியாற்றிய (ஆன்மீகத் தொண்டு ஆற்றியவர்களையும் இப்பிரிவில் கொள்ளலாம்) மாமேதைகளின் பெற்றோர்கள், வாழ்க்கைத் துணை  என்ற காரணங்களினாலும் சிலர் வரலாற்றில் இடம் பெறுவார்கள்.

இவர்களைப் பற்றிய இது போன்ற குறிப்புகள்தான் நமக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.  சாதனையாளர்கள் மட்டுமே வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர்கள். மற்ற சாதாரணர்களுக்கு அந்த வாய்ப்பு இருந்ததில்லை.

பெரும்பாலும் ஆண்களோ அல்லது பெண்களோ, இந்த விதிக்கு விலக்கல்ல. இதில் சொத்துரிமை இருந்ததினால் ஆண்களின் வாழ்க்கைக் குறிப்புகள் சற்று அதிகம் இருக்க வாய்ப்பிருந்தது. இன்னாரின் மகனும் இன்னாரின் பேரனுமான இன்னாருக்கு உடமையான இந்த சொத்து, இன்னாரின் மகன்களான இவர்களுக்கு இவ்வாறு பிரித்துக் கொடுக்கப்படுகிறது என்ற ஆவணங்கள் இருக்கும்.  இதற்கும் மேலாக பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு முன்னர் சராசரி வாழ்க்கை வாழ்ந்த ஆண்களுக்கு அவர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் எதுவும் இருக்குமா எனத் தெரியவில்லை.

அடுத்த நூற்றாண்டினரிடம் இந்த நிலையில் சிறிது முன்னேற்றம் இருக்கலாம். பெரும்பாலும் பிறப்பும், திருமணமும், இறப்பும் பதிவு செய்யப்படாத  நிலை பரவலாக இருந்திருக்கலாம்.  ஆனால் பள்ளி சென்ற குறிப்புகளும், வேலையில் இருந்து ஓய்வு பெற்ற குறிப்புகள் எனவும் ஏதாவது ஒரு சில குறிப்புகள் இருக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால் பெண்களின் வாழ்க்கைக் குறிப்புகளின் நிலை மிகவும் வருத்தத்திற்குரியது.

பண்டை காலத்தில் இலக்கியப் பணியாற்றிய ஒளவையார், காக்கைப் பாடினியார், இடைக்காலத்தில் இருந்த கோதை நாச்சியார், தற்காலத்தில் மறைந்த சரோஜினி நாயுடு, லஷ்மி, அநுராதா ரமணன் போன்றவர்கள் இலக்கியத்திற்காக நினைவில் நிற்கிறார்கள்.

அது போன்றே எம்.எஸ்.சுப்புலஷ்மி, டி. கே. பட்டம்மாள், டி. பாலசரஸ்வதி , சாவித்திரி, பத்மினி, டி.ஆர். ராஜகுமாரி போன்றவர்கள் அவர்களது கலைப்பணிக்காக நினைவுகூரப்படுவார்கள்.

அதிகாரம் மற்றும் வீரம் போன்ற பங்களிப்பினால், வேலு நாச்சியார், தில்லையாடி வள்ளியம்மை, லக்ஷ்மி பாய், இந்திரா காந்தி போன்றவர்களும் நினைவு கொள்ளப் படுவார்கள்.

அரச குடும்பத்தில் பிறந்ததாலும், தனக்கென செல்வம் கொண்டிருந்ததாலும் இராஜ ராஜ சோழன் அரச குடும்பத்தைச் சார்ந்த செம்பியன் மாதேவி, அக்கன் குந்தவை, அந்த அரசனின் பெண்டுகள் அளித்த கொடைகளினால் கல்வெட்டிலும், செப்புப் பட்டயங்களிலும் குறிப்பிடப்பட்டார்கள்.

சத்திரபதி சிவாஜியின் தாய், புத்தரின் தாய், நேருவின் தாய், மற்றும் புகழ் பெற்ற காந்தியின் மனைவி போன்ற உறவுக் குறிப்புகளாலும் சிலர் வரலாற்றில் குறிப்பிடப் படுவார்கள்.

ஆனால் மற்ற பெண்களின் நிலை என்ன?

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்களுக்கு கல்விக்கு சென்றது, வேலையில் பணி  புரிந்தது, குடும்ப சொத்தைக் கொண்டிருந்தது என்பதனால் அவர்களைப் பற்றிய குறிப்புகள் தெரிய வரலாம்.  ஆனால் பெண்களின் நிலை அதுவல்ல.

இதனை ஆதாரத்துடன் விளக்க என் மாமியாரின் வாழ்க்கையைப் பற்றி நினைவு கூர்ந்து என் கருத்தை விளக்க முற்படுகிறேன்.  மதிப்பிற்குரிய மறைந்த என் அத்தை அவர்கள் உயிருடன் இருந்தால் அவர்களுக்கு தொண்ணூறுக்கும் மேலே வயதிருக்கலாம். சரியான வயது யாருக்கும் தெரியாது, ஆணித்தரமாக சொல்லவும் ஆதாரம் கிடையாது. இவர் என் தாய் மற்றும் தந்தை வழி பாட்டிகளையும் விட வயதில் மூத்தவர். நான் பழகிய குடும்ப உறுப்பினர்களுள் வயதானவர் என்பதால் அவரைத் தெரிவு செய்துள்ளேன்.

மனைவி மறைந்தவுடன் கைக்குழந்தைகளுடன் தனித்துவிடப்பட்ட என் மாமனாரை மணந்தவர்.  இருவருக்கும் ஏகப்பட்ட வயது வித்தியாசம் இருந்திருக்க வேண்டும், சரியாகச்  சொல்ல ஆதாரம் இல்லை.  அவரது மூத்த மகனுக்கு என் தந்தையின் வயது, அவரது கடைசி மகனை நான் மணந்து கொண்டேன்.  குறிப்பிடப்பட்ட இந்த இரு மகன்களுக்கும் இடையே உள்ள ஏகப்பட்ட இடைவெளியில் மேலும் பல மகன்களும் மகள்களும் இவருக்கு உண்டு.

அந்தக் காலத்தில் பெண்கல்வி இருந்த பரிதாபத்திற்குரிய நிலையினால் பள்ளிக்கும் அனுப்பப் படவில்லை. பிறந்ததற்கும் ஆதாரம் இல்லை. வளர்ந்ததற்கு பள்ளி சென்ற ஆதாரமும் இல்லை. மணம் செய்து கொண்டதற்கும் ஆதாரமில்லை.  மணந்த பின்பு கந்தசாமியின் மனைவி, திருமதி கந்தசாமி போன்றுதான் குறிப்பிடப்பட்டார்.  அவர் பெயரால் யாரும் அவரை அழைக்கவில்லை. கலை மற்றும் இலக்கியத் தொண்டு என்றால் என்ன என்று  தெரியாதவர்.  அதிகாரம் எல்லாம் தன் பிள்ளைகளிடம் மட்டும்தான் செலுத்தினார், சொத்து என்று எதுவும் கிடையாது,  உழைத்தது குடும்பத்திற்கு மட்டும்தான். வயது அதிகமானவுடன் மரியாதை நிமித்தம் உறவு முறை சொல்லி அம்மா அக்கா, பாட்டி, அத்தை என அழைக்கப்பட்டார். பொதுவாக சென்ற நூற்றாண்டில் சராசரி  வாழ்க்கை வாழ்ந்த  ஒரு இந்தியப் பெண்ணின் வாழ்க்கை இது.

இறந்த பின்பு எரியூட்டும் வழக்கத்தினால் அவர் பெயரைக் குறிக்க நினைவுக்கல் என்றோ சமாதி என்றோ  எதுவுமில்லை. அவர் இறந்த பின்பும் அது குறித்துப் பதியப் படவில்லை.  அவ்வாறு செய்வதால் யாருக்கு என்ன ஆதாயம்?  அதனால் அதற்கு என்ன தேவை?  எனவே எங்கும் அவர் மரணத்தைப் பற்றிய குறிப்பு இல்லை. அவர் மறைந்த பின்பு குடும்ப சொத்து பிரிக்கப் பட்டது.  சந்ததியினர் பிரித்துக் கொண்டனர். என் மாமனாரின் பெயரில் உள்ள சொத்து  பிரிக்கப் படுகிறது என்று பிரித்து ஆவணப் படுத்தி அதைப் பதிவு செய்து கொண்டார்கள். அதில் கந்தசாமி அவர்களின் பிள்ளைகள் என்ற குறிப்பிருக்கிறது.  ஆனால் அத்தையின் பிள்ளைகள் என்று யாரும் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள்.

சென்ற நூற்றாண்டு என்பதால் ஒரே ஒரு முன்னேற்றம், அவர் பிள்ளைகளின் பள்ளி இறுதி சான்றிதழ்களில், வெளிநாடு செல்ல நேர்ந்ததால் என் கணவரின் கடவுச்சீட்டு (passport) போன்றவைகளில்  ‘தாயார் பெயர்’ என்ற இடத்திலும், குடும்ப மற்றும்  வாக்காளர்  அட்டை  ஆகியவைகளிலும் அவர் பெயர் இருக்கிறது.

இவற்றைத் தவிர அந்த அம்மையார் வந்ததற்கும் ஆதாரமில்லை, வாழ்ந்ததற்கும் ஆதாரமில்லை, மறைந்ததற்கும் ஆதாரமில்லை.

தேடிச் சோறு நிதந்தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம்வாடித் துன்பம் மிக உழன்று
பிறர்வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக் கிரையென மாயும்-
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?

என்று பாரதியார் மனம் குமைந்து கேள்வியாகக் கேட்ட அதே வாழ்க்கையைத்தான் வாழ்ந்து மறைந்தார்கள்; இதற்கும் முன் இதுபோன்றே பலர் தோன்றி மறைந்தது போல.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்; அவர்கள் பிறந்தார்கள்…வளர்ந்தார்கள்...வாழ்ந்தார்கள்…மறைந்தார்கள்... ஒரு கதை முடிந்தது.

அவர்கள் பெற்றெடுத்து, வளர்த்து உருவாக்கிய சந்ததிகள் தொடர்கின்றனர் தங்களது வாழ்க்கைப் பயணத்தை. மக்களும், பேரக்குழந்தைகளும் இருக்கும்வரை அவர்களை அவ்வப்பொழுது நினைத்துப் பார்ப்பார்கள், பிறகு?…

இவ்வளவும் சொல்லிய பிறகு அவர் பெயரைக் குறிப்பிடாவிட்டால் இக்கட்டுரையின் கருத்தை வலியுறுத்துவதற்கு மாறாக அமையும், அத்தாய்க்குலப் பிரதிநிதியின் பெயர் அழகம்மா என்பது.

சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஒன்றில் இயக்குனர் சசிகுமார் அவர்களும் இதனை வேடிக்கையாக வலியுறுத்துவார்.  அத்திரைப்படத்தில் தோன்றும் குடும்பத்தினருக்கு தனக்கு முன் வாழ்ந்த இரண்டு தலைமுறையினருக்கு முன் உள்ள மூதாதயைர்களைப் பற்றி எதுவும் தெரியாது.  அதற்கு நானும் விதிவிலக்கல்ல. என்குடும்பதிலும், தாய் மற்றும் தந்தைவழி இரு பக்கங்களிலும் மூதாதயைர்களைப் பற்றிய என் அறிவும் அதே  அளவுதான்.

என் பெற்றோருக்கும் அந்த அளவில்தான் நினைவிலிருந்து அவர்கள் மூதாதரையரைப் பற்றி சொல்ல முடியும்.  அதை பதிந்து வைத்துக் கொள்வதற்கு யாருக்கும் பொறுமையும் ஆவலும் இருப்பதில்லை. படத்தில் காணப்படும் இந்தக் குடும்பம் ஒரு விதிவிலக்கு எனலாம்.

Inline image 2

இந்தக் அழகில் மூதாதரையரைப் பற்றி இவ்வளவு சிற்றறிவு கொண்ட நம் நாட்டினர் காதல் திருமணம், கலப்புத் திருமணம் போன்றவை தங்கள் குடும்பத்தில் நடந்தால்  பரம்பரைக் கெளரவம் போய்விட்டதாகவும், பரம்பரைப் பெருமைக்கு குந்தகம் வந்து விட்டதாகவும் குய்யோ முறையோ என கூக்குரலிடுவதைத் தனியாக விவாதிக்க வேண்டும்.

இந்த வகையில் மேற்கத்திய நாட்டினரைப் பாராட்ட வேண்டும்.  அவர்கள் பல வாழ்க்கை நிகழ்ச்சிகளை நன்றாகவே ஆவணப் படுத்தியுள்ளனர்.  அரச பரம்பரைக்குத்தான் என்று அல்ல, சராசரி மக்களுக்கும்தான். எதை எதையோ அவர்களிடம் இருந்து கற்கும் நாம் இதனையும் அவர்களிடம் இருந்து கற்றால் என்ன குறைந்துவிடும்?

அவர்கள்  தங்களது பரம்பரை  பற்றிய செய்திகளில் (Genealogy) ஆர்வம் உள்ளவர்களாக இருந்து வந்துள்ளார்கள்.  இப்பொழுது  பல இணைய தளங்களும் தோன்றி இதற்கு உதவுகின்றன. சமீபத்தில், ஜூலை 30, 2012 அன்று வெளியிடப்பட்ட சி.என்.என். செய்தி ஒன்றில் அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்களின் முன்னோர்களான பதினோரு தலைமுறை மூதாதையர்களையும் கண்டறிந்து, அவர் அமெரிக்காவிற்கு முதன் முதல் வந்த ஆஃப்ரிக்க நாட்டு அடிமை ஒருவரின் வழித்தோன்றல் என்று கண்டறிந்துள்ளார்கள்.  இதற்கு அவர்களுக்கு உதவியது ஒபாமாவின் தாய் வழி மூதாதையரின் பல ஆவணங்கள் ஆகும். இடைக்காலத்தில் எப்போழுதோ கருப்பரினதிற்கும் வெள்ளையர் இனத்திற்கும் உறவு நிகழ்ந்து அதில் ஒபாமாவின் தாய் வெள்ளையர் இனப் பெண்ணாகப் பிறந்திருக்கிறார்.  அதைப்பற்றிய காணொளியைக் கீழே உள்ள சுட்டி வழி சென்று காணலாம்.

http://www.cnn.com/video/?/video/us/2012/07/30/tsr-sylvester-obama-ancestry.cnn#/video/us/2012/07/30/tsr-sylvester-obama-ancestry.cnn

நம் நாட்டினர்  இந்த வகையில்  ஏன் இவ்வாறு அசட்டையாக இருக்கிறோம்? பொதுவாக அரச குடும்பங்களைப் பற்றி அறியவே நம் வாரலாற்று அறிஞர்கள் மிகவும் தடுமாற வேண்டியிருக்கிறது.  இதில் சாதாரண மக்களின் வாழ்க்கையைப் பற்றி கேட்கவே வேண்டியதில்லை.

நம் அசட்டைக்கு காரணம் என்ன?  இவர்கள் என்ன பெரிதாகக் கிழித்துவிட்டார்கள் என்ற இளக்காரமா? இல்லை, நான் என்ன பெரிதாக சாதித்துவிட்டேன் எல்லாவற்றையும் குறிப்பில் கொள்ள என்ற தன்னடக்கமா?

கல்வெட்டுகளும் பல அரசகுல தான தர்மத்தை குறிப்பதில்  மட்டுமே அதிக கவனம் செலுத்தியிருக்கிறது. பணம் தொடர்புடைவற்றில் மட்டும்தான் நாம் அக்கறை செலுத்துவோமா?  மற்ற நிகழ்ச்சிகள் முக்கியமற்றவையா?  இல்லை, எல்லாவற்றையும் பதிவு செய்தால் வருங்காலத்தில் இதுபோன்றவற்றிற்கு கையூட்டு கொடுத்து மாளாது, அதற்கே கைகாசு செலவழிந்துவிடும் என்ற  தீர்க்கதரிசனமா?

Series Navigationஅடையாளம்வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -37
author

Similar Posts

4 Comments

  1. Avatar
    Jayashree Shankar says:

    அன்பின் தேமொழி,

    தங்களின் கட்டுரை அருமை. நல்ல ஆரம்பத்துடன் நான் என்றோ எண்ணிப் பார்த்திருந்த ஒரு விஷயத்தை அப்படியே எழுதி இருந்தீர்கள். ஆம்…அநேகமாக எனது பாட்டியின் கதையும் இதுவே…அவர் பிறந்து வாழ்ந்ததன் அடையாளங்கள் தொலைந்து போய்விட்டது…வருத்தம் தான்.,அநேகமாகத் தாத்தாவின் அடையாளமும் அதே நிலை தான். இரண்டு தலைமுறைகள் தான் நினைவில் இருப்பதே பெரிய விஷயமாகிப் போகும்…இனி வரும் காலம்.???
    வருங்காலத்தில் சுருங்கிப் போன குடும்ப அமைப்புகள்…,
    உறவு முறைகள்., மனங்கள்…மனிதங்கள்…!
    இறுதியாய் முடித்த வாக்கியத்தின் உண்மை புரிகிறது.
    அழகான விளக்கத்துடன் எழுதி இருக்கிறீர்கள் தேமொழி .

    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

    1. Avatar
      தேமொழி says:

      உங்களது உற்சாகமூட்டும் வரிகளுக்கு நன்றி ஜெயஸ்ரீ

  2. Avatar
    பவள சங்கரி says:

    அன்பின் தேமொழி,

    அற்புதமான எண்ணப் பகிர்வுகள். விழிப்புணர்வூட்டும் சிறப்பான சிந்தை. இப்பொழுதெல்லாம் குடும்ப மரம் (family tree) என்று மிக ஆர்வமாக உருவாக்குகிறார்கள். நீங்கள் சொல்வது போன்று குறைந்தது பத்து தலைமுறைகள் கணக்கில் கொண்டுவரப்படுகிறது. அவரவர் குடும்ப்பக் கணக்கை அவரவர்தானே அக்கறை எடுத்து பதிவிட வேண்டும். இதெல்லாம் தேவையா, இதனால் பெரிதாக என்ன பயன் விளைந்துவிடப் போகிறது என்று இண்றைய இயந்திர உலகம் நினைகலாம். நம்முடைய நாகரீகத்தை நம் வருங்கால சந்ததியினர் புரிந்து கொள்ள ஒரு நுழைவாயில் அல்லவா அது.சமீபத்தில் ஓராண்டு சாதனையாக என் உறவினர் இளைஞன் ஒருவர் குடும்ப மரத்தை அழகாக பதிவிட்டுள்ளார். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவர்கள் இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வாழ்பவர்கள். அந்தக் கலாச்சாரத்தில் ஊறிப்போன அந்த இளைஞனிடமிருந்து , நம் நாட்டில் இருந்து கொண்டு குடும்ப பாரம்பரியம் பற்றி வானளவ புகழ்ந்து பேசிக் கொண்டிருப்பவர்கள் கற்றுக் கொண்ட பாடம் அது! நல்ல விசயங்கள் யார் செய்தாலும் பாராட்டவும், கற்றுக் கொள்ளவும் ஏன் தயக்கம் காட்ட வேண்டும்? வாழ்த்துக்கள் தேமொழி.

    அன்புடன்
    பவள சங்கரி

    1. Avatar
      தேமொழி says:

      மேல் நிலைப் பள்ளிகளின் உயிரியல் ஆசிரியர்கள் மரபியல் பாடம் நடத்தும் பொழுது, இது போன்ற தலைமுறை தகவல்களை செய்முறைப் பாடங்கள் வழியாக செய்வதற்கு ஊக்கமளித்தால் மாணவர்களுக்கும் ஒரு ஆர்வம் உண்டாகும்.

      ஒவ்வொரு குடும்பமும் ஜாதகச் சுவடிகளை வைத்திருப்பது போல இத்தகவல்களையும் சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.

      உங்கள் தகவல்; ஒருவர் முயற்சி எடுத்து அவ்வாறு செய்துள்ளார் என்று தெரிவிக்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி, பவளா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *