இலக்கு

This entry is part 2 of 31 in the series 2 டிசம்பர் 2012

       சங்ககால இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட டத்தோ இனியனுக்கு, குறுஞ்சி நிலத்தின் கூறுகளாகக் காணப்படும் மலையும் மலையைச் சார்ந்த இடமும் மிகவும் பிடிக்கும். மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழை ஒரு பாடமாக எடுத்து தமிழ் இலக்கியங்களை ஆழமாகப் பயின்று தமிழின் இனிமையைக் கண்டவர்.அதன் எதிரொலியாக அவரது வாழ்க்கையும் இயற்கையோடு இரண்டரக் கலந்தவொன்றாகிவிட்டது.
      மலைச்சரிவில் அமைந்துள்ள தனது இரட்டை மாடி வீட்டின் ‘பல்கனி’ யில் நின்றவாறு இளஞ்சிவப்பில் காணப்படும் காலைச் சூரியனின் உதயத்தைப் பார்த்து இரசிக்கிறார். வெள்ளாடைப் போர்த்தி நிமிர்ந்து  நிற்கும் மலைகளின் எழிலான தோற்றம் கண்களுக்கு நல்ல விருந்தாக அமைகிறது. பச்சைச்செடிகளும், கொடிகளும்,  பூத்துக்குலுங்கும் அழகிய வண்ண மலர்களும்,பறவைகளின் ஒலிகளும், பறந்து செல்லும் வண்ணத்துப் பூச்சிகளின் அழகும், பறவைகளின் ஒலியும்,பூச்சிகளின் ரீங்காரமும் காலைப் பொழுதும் அவருக்கு  உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கின்றன!
      பள்ளிப்பருவத்தில் இவர் நெடுந்தூர ஓட்டக்காரராகத் திகழ்ந்த போது தாம் வாழ்ந்த மிட்லண்ட்ஸ் தோட்டப்புறத்திலுள்ள மேடுகள் குன்றுகள் மீது ஓடி பயிற்சி எடுத்துக் கொள்ளும் போதெல்லாம் இயற்கையை இரசித்த வண்ணம் ஓடுவார். உயர்ந்த நிலப்பகுதியிலிருந்து கீழ்நோக்கிப் பார்த்து இயற்கையை அழகை மணிக்கணக்கில்  இரசித்து மகிழ்வார்.
      வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனத்தை அமைத்து பெரும் செல்வந்தர் ஆனவர் டத்தோ இனியன். மகன்கள் இருவரும் தமது தொழிலில் போதிய அனுபவம் பெற்ற பிறகு அவர்களிடம் தொழிலைக்கவனித்துக் கொள்ள பணித்துவிட்டு தம் அறுபதாவது வயதில் சுயவிருப்பத்தின் பேரில் பணி ஓய்வு பெற்றாலும்,தேவைப்படும் ஆலோசனைகளைப் பிள்ளைகளுக்குவழங்க அவ்வப்போது அலுவலகம்  சென்று வருவார்.அவருக்கென்றே அமைக்கப் பட்டப் பிரத்தியேகமான அறையில் அமர்ந்து ஆலோசனைகள் வழங்குவார்.
      தனது இரண்டு பிள்ளைகளும் திருமணம் புரிந்து கொண்ட பின்னரும் அவருடனே கூட்டுக்குடும்பமாக வாழ்கின்றனர். வாய்த்த மருமகள்களும் புரிந்துணர்வோடு குடும்ப உறவுக்கு யாதொரு குந்தகமும் வராமல் பார்த்துக் கொள்கின்றனர். மகிழ்ச்சிக்குக் குறைவில்லாத வேரில் பழுத்தப் பலா அவர் குடும்பம்.
       வீட்டின் பல்கனியிலிருந்து,இயற்கைக் காட்சிகளைத் தினம் கண்டு களிப்பது டத்தோ இனியனுக்கு மிகவும் பிடித்தமானது. அவ்வாறு இயற்கையை இரசித்துக்கொண்டிருக்கும் போது மனைவி அன்பரசி இன்முகத்துடன் குடிப்பதற்கு ஏதுவாகச் சுடுநீரைக் கிளாசில் கொண்டு வந்து கொடுக்கிறார். அதனை வாங்கி மெதுவாக உறிஞ்சிக் குடிக்கிறார்.
        காலுறையும் காலணிகளையும் ‘டிரெக் சூட்’ டையும் அணிந்து கொண்டு காலை நடைப்பயிற்சிக்குத் தயாராகிறார்.  கிளாஸ்சைக் கையில் ஏந்தியவாறு மனைவி கணவரைப் பார்க்கிறார். அவர் மனைவியை நோக்கி மகிழ்ச்சியுடன் புன்னகைக்கிறார்.
        கையில் அணிந்திருந்த கைக்கடிகாரத்தைப் பார்க்கிறார்.காலை மணி ஏழு என்பதைக் காட்டியது. அப்போது, கைபேசி ஒலிக்கிறது. “ சரியாக எட்டு மணிக்கு நிகழ்ச்சித் தொடங்கும்.ஏற்பாடுகள் எல்லாம் சரியாக இருக்கிறது. தங்களுக்குத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம் டத்தோ”  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்  எம்.ஏ.துரைதான் மறுமுனையிலிருந்து பேசுகிறார். “சார்ப்பா  ஏழு நாற்பத்தைந்துக்கு நிகழ்ச்சிக்கு வந்திடுவேன்….  டோன் வ்வோரி  துரை!” உற்சாகமுடன் கூறிய பின்பு நடைப்பயிற்சிக்குப் புறப்படுகிறார்.
        தன் கண்ணே பட்டுவிடும் போல் இருந்தது மனைவிக்கு. எண்பது வயது நிரம்பிய தம் கணவர் தினம் அரை மணி நேரம் தவறாமல் நடைப் பயிற்சிக்குச் சென்று வருவதைக் கண்டு பெருமிதம் கொள்கிறார். தனக்குள் ஏதோ நினைத்துக் கொண்டு புன்னகைக்கிறார்.
        வீட்டையொட்டிய மலைச்சரிவில் அமைந்துள்ள  நடைப்பாதையில் மிகவும் உற்சாகத்துடன்    நடைப்பயிற்சியில் ஈடுபடுகிறார். நடைப்பாதையையொட்டி விளையாட்டு மையத்தில் அவர் வருவதற்கு முன்பே வயதான பலர் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பல இனத்தவர்கள் இருந்த வேளையில் அங்கு மருந்துக்குக்கூட தமிழர்கள் யாரும் பயிற்சியில் ஈடுபடாமலிருந்தது அவருக்கு வருத்தமாக இருந்தது.
        எண்பது வயதைத் தாண்டிக் கொண்டிருக்கும் அவரிடம் உடல் தளர்வைத் துளியும் காணமுடியவில்லை.சுறுசுறுப்பாகஇயங்கும்அவரது நடவடிக்கைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் முதியோர்கள் பலர் தடுமாறுவது தெரிந்தது.
“ஹல்லோ டத்தோ…..ஹவ்வார்யு….?” என்கிறார் சோங்.
“ ஐ யாம்  ப்பைன்……” உற்சாகமாகப்  பதில் கூறியபடி  தம் நடைப்பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறார். அவருடன் வழக்கம் போல் நடக்கும் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர்  இம்ரானும் அவருடன் நடந்து வருகின்றார்.
        அரை மணி நேரப்பயிற்சிக்குப்பின் நடைப்பாதையின்  அருகில் போடப் பட்டிருக்கும் சிமண்ட் இருக்கையில்  சிறிது நேரம் ஓய்வுக்காக அமர்கிறார். கூட வந்த நண்பர்களும் அவருடன் அமர்ந்து பேசத்தொடங்குகின்றனர். நாட்டு நடப்புகள் குறிப்பாக இன்றைய  நாட்டு அரசியல் பற்றிய உரையாடல்கள் மிகவும் சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டு இருக்கின்றன.
         “டத்தோ……வாட் யூ திங் அபாட் அவ நெக்ஸ் இலக்‌ஷன்……?” முன்னாள் எதிர்கட்சிச் சட்டமன்ற உறுப்பினர் ஓங் ஆவலுடன் கேட்கிறார். நாடே எதிர்பார்த்து நிற்கும் அந்தக் கேள்விக்கானப் பதிலை அறிந்து கொள்ள  அங்குக் கூடியிருந்தவர்கள் தங்களின் செவிகளைக் கூர்மையாக்கிக் கொள்கின்றனர்.
           தாம் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்திராவிட்டாலும்   நாட்டு அரசியலைப் பற்றி ஒவ்வொரு குடிமகனும் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும் என்ற கடப்பாட்டைக் கொண்டவர் என்பதை அறிந்து வைத்திருக்கும் ஓங்கை புன்முறுவலுடன் பார்க்கிறார். சில வினாடிகள் ஆழ்ந்து சிந்தனைக்குப்பின், “நியூ….ஓட்டர்ஸ் வில் டிசைட் தி பியூச்சர் ஆப் திஸ் கன்றி….!” இளநகையோடு கூறிவிட்டு ஓங்கிடம் கைகுலுக்கியபடி தனக்கு அடுத்த நிகழ்வு உள்ளதைக் குறிப்பால் உணர்த்தி அங்கிருந்து வேகமாகப் புறப்படுகிறார்.
            ஐந்து நிமிட நடையில் அருகில் தாம் தொடக்கி வைக்கவிருக்கும் நிகழ்ச்சியின் அரங்கத்தினுள் சரியாக மணி ஏழுநாற்பத்தைக்குச் சென்றடைகிறார். ஏற்பாட்டுக் குழுத்தலைவர் எம்.ஏ.துரை அவரை எதிர்கொண்டு வரவேற்கிறார். மரியாதை நிமித்தமாக வருகையாளர்கள் அனைவரும் எழுந்து நிற்கின்றனர்.
            “வெல்கம் டான்ஸ்ரீ ……….!” மலேசிய முன்னாள் ஓட்டக்காரர் டான்ஸ்ரீ டாக்டர் மணிஜெகதீசனுடன் கைகுலுக்குகிறார்.அருகிலிருந்த பலருடன் கைகுலுக்கிய பின் தம் இருக்கையில் அமர்கிறார்.
             அரங்கம் மக்கள் வெள்ளத்தால் நிறைந்து காணப்படுகிறது. சரியாகக் காலை எட்டு மணிக்குத் தேசியளவில் நடைபெறும் மலேசிய இந்தியர்களுக்கான ஓட்டப்பந்தயப் போட்டியை டத்தோ.இனியன் இனிய முகத்துடன் கொடி ஏற்றித் தொடக்கி வைக்கிறார்.
             மலேசியாவிலுள்ள தமிழர்களால் நிர்வகிக்கும்  விளையாட்டு மையங்களிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் ஓட்டக்காரர்கள் பல்வேறு பிரிவுகளில் நடைபெறவிருக்கும் ஓட்டப்பந்தயத்தில்  ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர்.
            ஐந்து நாட்கள்  நடைபெறும் இப்போட்டியில் வெளிநாடுகளிருந்தும்அனைத்துலக ஓட்டக்காரர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.அவர்களோடு நமது இந்திய ஓட்டக்கார்களும் தங்களின் திறமைகளைக் காட்டத் தயாராகினர்.
           ஒவ்வொரு பிரிவிலும் முதல் நிலையில் வெற்றி பெறும் ஓட்டக்காரர்களுக்கு பத்தாயிரம் ரிங்கிட்டும்,இரண்டாம் நிலைக்கு ஐயாயிரமும்,மூன்றாம் நிலைக்கு மூவாயிரமும் பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டன.
          அவர் கடந்த பத்தாண்டுகளாகக் ‘கிளப் பரமேஸ்வரன்’ என்ற பெயரில் ஓட்டப்பந்தைய மையத்தை அமைத்துக் காப்பாளர் என்ற நிலையில் இந்திய இளம் விளையாட்டு வீரர்களை உருவாக்கி அனைத்துலகளவில் போட்டியில் பங்கு பெறுவதுடன்,ஒலிம்பிக் போட்டியில் இந்திய இளைஞர்கள் தங்கம் பெறுவதை இலக்காகக் கொண்டு  முழுஈடுபாடுடன் செயல் பட்டு வருகிறார்.
           1960,1970,1980 ஆம் ஆண்டுகளில் ஓட்டப்பந்தயத்தில் கொடி கட்டிப் பறந்த நமது இளைஞர்கள் போல்,இன்றைய இளைஞர்க         ளும் வீருகொண்டு எழவேண்டும். பல சாதனைகள் படைக்க வேண்டும். அந்தப் பொற்காலம் மீண்டும் வரவேண்டும் என்ற வேட்கையைக் கொண்டவர்.
            அனுபசாலிகளை விட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில், முன்னாள் சாதனையாளர்களான ‘பறக்கும் டாக்டர்’ மணிஜெகதீசன், டி.கிருஷ்ணன், எம்.இராஜலிங்கம்,எம்.நடராஜா,எம்.சுப்பிரமணியம்,எம்.முத்தையா,பெருநடைவீரர்களான,வீ..சுப்பிரமணியம்,எம்.சரவணன்,.இராமச்சந்திரன், நசத்தார் சிங், டில்பாக் சிங் மற்றும் பெண் ஓட்டக்காரர்களான எம்.இராஜாமணி, அங்கம்மாள், ஜி..சாந்தி,போன்றவர்களைத் தனது குழுவில் ஆலோசகர்களாகச் சேர்த்துக் கொண்டு முறையாக இயங்கி வருகிறார்.            
            ஓட்டப் பந்தய வீரர்கள் தங்கிப் பயிற்சிகள் மேற்கொள்ள அனைத்து வசதிகளைக் கொண்ட மூன்று மாடிகளைக் கொண்ட கட்டிடத்தைத் தம் சொந்த செலவில் டத்தோ கட்டிக்கொடுத்துள்ளார்.வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்டப் பயிற்றுநர்கள் நமது இளம் ஓட்டப்பந்தய வீரர்களுக்குச் சிறந்த பயிற்சிகளை வழங்கவும் வழிவகுத்துக்கொடுத்தார். செலவுகளை ஈடுகட்டுவதற்காக ஆண்டு தோறும் பல இலட்சங்களை அள்ளிக் கொடுத்து வருகிறார்.
          2016 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பிரேசில் ஒலிம்பிக்கில், நூறு மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வெல்வதற்காகத் தயார் நிலையிலுள்ள குழுவில் இன்பநேசன், நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார்.பதினெட்டு வயது நிரம்பப் பெற்ற இளம் ஓட்டக்காரரான இவர், ஆசியப்போட்டியில் ஏற்படுத்திய  சாதனை ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் வாய்ப்பைப் பிரகாசப்படுத்திக் கொண்டிருந்தது!
          “ நீங்கள் ஏற்படுத்திய ஓட்டப்பந்தயப் போட்டி உலகளவில் பிரபல்யம் ஆகிடுச்சு. உலகப் பிரசித்திப் பெற்ற  ஓட்டக்காரர்கள் பலர் நம் நாட்டில் கூடியுள்ளது பெருமையா இருக்கு டத்தோ…..!”
           “துரை…..நமது தமிழ் இளைஞர்கள் சாதனைப் புரியவேண்டியவர்கள். நல்ல வழிகாட்டிகள் இல்லாமையால் கொலை,கொள்ளை,வெட்டுக்குத்து,குடித்தல், புகைத்தல்,கஞ்சா உட்கொண்டு உடல் நலத்தைக் கெடுத்துக்கொள்ளல்,சமுதாயத்திற்குக் கெட்டப் பெயரை ஏற்படுத்துவதுடன்,தானும் அழிந்து பிறரையும் அழிக்கும் நிலையை மாற்றியமைக்கனும்!”
           “நீங்க நினைக்கிறது சரிதான் டத்தோ. உதாசினப்படுத்தப்படும் நமது இளைஞர்களைத் தக்க சமயத்தில் கைதூக்கிவிடவில்லை என்றால் நாம் எவ்வளவு அறிவாளிகளாக இருந்தாலும்,இந்த நாட்டில் பெருமைமிக்க சமூகமாக மதிப்புடன் வாழ முடியாது!”
           “  நமக்கு உதவப் போவது யாருமில்லை. நாம் ஒற்றுமையுடன் செயல் பட்டால், நமது இளைஞர்களைக் காப்பாற்றிவிடலாம்.உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் விளையாட்டுத் துறையயில் குறிப்பாக ஒரு சமயத்தில் ஓட்டப்பந்தயத்தில் கொடிகட்டிப்பறந்த அந்தப் பொற்காலம் மீண்டும் வரவேண்டும்.உலகத்தில் நமது இளைஞர்கள் தலைநிமிர்ந்து வாழவேண்டும்.”
            “ தங்களைப் போன்று நல்லுள்ளம் கொண்டோர்  இளைஞர்களுக்கு உதவ முன்வருவது நமது ஒற்றுமையைக் காட்டுது. நாம் நிச்சயம் வெற்றியடைவோம் டத்தோ…!”
            “ துரை…. நாம சாதிக்கப் பிறந்தவர்கள். சாதனையை நிகழ்த்திக் காட்டுவோம்….!” டத்தோவின் உறுதியான வார்த்தைகள் துரையை மேலும் உற்சாகப்படுத்துகின்றன. அடுத்து நடைபெறும் நிகழ்வினைக் கவனிக்க அங்கிருந்து விரைந்து செல்கிறார் துரை.
            மறுநாள் நூறு மீட்டர் ஆண்களுக்கான இறுதி ஓட்டம் நடைபெறுகிறது. அரங்கத்தில் கூடியிருந்த மக்கள் அனைவரின் கவனமும் போட்டியாளர்கள் மீது திரும்புகிறது.உலகின் புகழ்பெற்ற பலர் போட்டியில் பங்கு பெறுகின்றனர். இந்திய சமுதாயத்தின் புகழை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் இன்பன் களத்தில் இறங்குகிறார்.
           அரங்கத்தில் அமர்ந்துள்ள அனைவரும் இருக்கையிலிருந்து எழுந்து நின்று இன்பனுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். போட்டி தொடக்குனரின் வேட்டுச் சத்தம் கேட்டவுடன் ஓட்டக்காரர்கள் அனைவரும் மின்னல் வேகத்தில் இறுதிக்கோட்டை நோக்கிப் பறக்கின்றனர்.
           9.9 வினாடிகளில் இன்பன் முதலாவதாக ஓடி வந்து அரங்கத்தில் கூடியிருந்த அனைவரையும் வியப்பிழாத்தினார்! அடுத்த சில நிமிடங்கள் அரங்கத்தில் கையொலி மட்டுமே ஓங்கி நின்றது.நாட்டின் ஓட்டப்பந்தய வரலாற்றில் ஏற்படுத்தப்பட்ட முதல் சாதனை அது!
           துரை டத்தோவை நோக்கி விரைகிறார். இருவரும் மிகுந்த மகிழ்சியுடன் கைகுலுக்கி வாழ்த்துகளைப் பரிமாரிக் கொள்கின்றனர். “ டத்தோ…..நமது நோக்கத்தில் வெற்றியடைந்துவிட்டோம்!” என்கிறார் ஆர்வமுடன் துரை. “துரை….நமது இலக்கு அடுத்த ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது.இன்பனின் இன்றைய வெற்றி ஒரு தொடக்கத்தான்.நமது கனவு நனவாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அதற்காக என்ன செலவு ஆனாலும், முதல் தங்கத்தை வென்றே தீருவோம். நாம் யார் என்பதை உலகுக்குக் காட்டுவோம்!” உணர்ச்சிப் பிளம்பாகிப் போகிறார் டத்தோ.
          அருகில் அமர்ந்திருந்து டான்ஸ்ரீ டாக்டர் மணிஜெகதீசன்,டத்தோ இராஜாமணி ஆகியோர் டத்தோவுக்கு வாழ்த்துகள் கூறி தங்களின் மகிழ்ச்சியைப் புலப்படுத்திக் கொள்கின்றனர். பிரமுகர் இருக்கையில் அமர்ந்திருந்த பலரும் டத்தோவை  வாழ்த்துகின்றனர். எல்லாரது முகத்திலும் மகிழ்ச்சித் தாண்டவமாடிக் கொண்டிருக்கும் அரிய காட்சியைக் கண்டு மகிழ்கிறார். அனைவரின் பார்வையும் அவர் மீது பட்டுக்கொண்டிருப்பதைக் கண்டு  மகிழ்ச்சி அளவு கடந்து போகிறது.
            நல்ல தலைமைத்துவம் இல்லாத இந்திய சமுதாயம் வழிதவறிப் போய்விட்டதே! கண்ணில்லாதக் குருடன் ஒருவன்,கண்ணெதிரே கிணற்றில் காலை வைக்க எத்தனிக்கும் போது,அதனை வெறுமனமே பார்த்துக் கொண்டிருப்பது  தர்மமா? மக்களின் பார்வை தம்மீது படிந்திருப்பதைக் கண்டு மகிழ்கிறார்.தாம் பிறந்த பயனை அடைந்துவிட்டோமோ என்று அந்தக்கணத்தில் எண்ணிப்பார்க்கிறார்!
          உயிருடன் இருக்கும் போது, தன்னிடமுள்ள செல்வத்தைப் பயனுள்ள காரியங்களுக்குச் செலவு செய்யாமல், இறந்த பிறகு பலகோடிகளை இருப்பில் விட்டுச் செல்பவர்களை மனிதர்களாக ஏற்கலாமா? மக்களைப் பார்க்கிறார்.அவர்கள் அகமும் முகமும் மலர தங்களை மறந்து சிரிக்கின்றனர்.ஏழையின் சிரிப்பில் இறைவனைப் பார்க்கிறரர் போலும்!
             டத்தோ தம்மை மறந்து சிரிக்கிறார். அவர் சிரிப்பில் ஒரு திருப்தி இழையோடிக்கொண்டிருந்தது!
                                          
                                                  முடிவு

Series Navigation‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…. 7. சுந்தரராமசாமி – ஒரு புளியமரத்தின் கதை.தமிழ் மகனின் படைப்புலகம் : ” ஆண்பால் பெண்பால் “ நாவலை முன் வைத்து….
author

வே.ம.அருச்சுணன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    வே.ம.அருச்சுணன் says:

    வணக்கம்,எனது சிறுகதையைப் பிரசுரித்த திண்ணை ஆசிரியருக்கு நன்றி.மலேசிய சுழலைக் கொண்ட இச்சிறுகதையை வாசித்து மகிழ்க.

  2. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர். says:

    அன்பின் திரு.அருச்சுனன் அவர்களுக்கு,

    கதையின் கருவும் கொண்டு சென்ற விதமும்… நன்றாக இருந்தது. இந்திய இளைஞர்கள் இன்றைய காலகட்டத்தில் தாங்கள் குறிப்பிட்டது போல திசை மாறிப் போகிறார்கள். அவர்களின் இலக்கை நேர்படுத்த டத்தோ போன்றும், துரை போன்றோரும் அவசியம் தேவை. ஓட்டப் பந்தய மைதானத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்த ஒரு உணர்வைத் தந்தது எழுத்தும் கதையாக்கமும்.

    இன்பன் வெற்றி அடைந்த மகிழ்ச்சி என்னுள்ளும் ஏற்பட்டது. மீண்டும் இந்திய இளைய சமுதாயம் விளையாட்டுக்களில் ஈடுபட்டு சாதனைகள் புரிய வேண்டும் என்ற இலக்கை கதை கட்டுகிறது. அருமையான கதை. பாராட்டுக்கள். நன்றி.

    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *