பழமொழிகளில் விருப்பமும் விருப்பமின்மையும்

This entry is part 6 of 31 in the series 2 டிசம்பர் 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
வாழ்வில் விருப்பம், விருப்பின்மை என்பது ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு செயலுக்கும் உண்டு. இவை இரண்டும் தனி நபர், மற்றும் குழுக்கள், சமுதாயம் சார்ந்தவையாக விளங்குகின்றது. சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும் விருப்பமும் விருப்பின்மையும் தொன்று தொட்டு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
சர்க்ரை நோய் உள்ள ஒருவரைப் பார்த்து, ‘‘ஐயா இந்த இனிப்பை சாப்பிடுகிறீர்களா?’’ என்று கேட்டால் அவர், ‘‘எனக்கு இனிப்புப் பிடிக்காதப்பா. அதோடு மட்டுமல்லாது மருத்துவர் இனிப்பைச் சாப்பிடக் கூடாது என்று கூறிவிட்டார்’’ என்று கூறி மறுத்துவிடுவார். விருப்பம் விருப்பமின்மை என்பது ஒவ்வொரு சமுதாயம் அல்லது தனிமனிதரின் தேர்வுக்கு உட்பட்டதாக விளங்குகின்றது.
இவ்விருப்பம், விருப்பமின்மையை வழக்கில் வேண்டும், வேண்டாம் என்றும், இஷ்டம், இஷ்மில்லை என்றும் மக்கள் வழங்குவர். விருப்பமின்மை என்பதற்கு வெறுப்பு என்பதும் மக்களிடையே வழங்கி வருவது நோக்கத்தக்கது. இத்தகைய விருப்பம், விருப்பமின்மை குறித்த பழமொழிகள் குறித்து பல்வேறு தகவல்களை நம்முன்னோர்கள் கூறியுள்ளனர்.
கரும்பும் வேம்பும்
கரும்பு இனிப்பானது. வேம்பு கசப்புத் தன்மை கொண்டது. இரண்டும் இருவேறு சுவையுடையன. நமக்கு யாரைப் பார்த்தாலும் மனதிற்குப் பிடிப்பதில்லை. எல்லா வகையான உணவு, உடை, செயல்கள் உள்ளிட்டவையும் அப்படியே ஆகும். மனதில் விருப்பம் இருந்தால்தான் எதுவும் நடக்கும். இல்லையெனில் எந்தச் செயலும் நடைபெறாது. அவ்வாறே நடந்தாலும் அது சிறக்காது. முழுமையாக முற்றுப்பெறாது.
ஒருவரைப் பிடிக்கவில்லை எனில் இறுதிவரைப் பிடிக்காமலேயே போய்விடும். அதற்குக் காரணங்கள் எதுவும் கூற முடியாது. வெளித்தோற்றமோ அவரது பண்போ, செயலோ ஏதாவது ஒன்றாக இருக்கலாம். அதனை இதுதான் என்று குறிப்பிட்டுக் கூற முடியாது. அதுபோல ஒருவர் அழகாக இருப்பார். அவரை நமக்குப் பிடிக்காது. மற்றொருவர் அழகற்று இருப்பார் அவரை நமக்குப் பிடித்துவிடும். காரணம் என்னவென்று கூறமுடியாது.
உலக அழகி என்று கிளியோபட்ராவைக் கூறுவர். அவளுக்காகப் பல போர்கள் நடந்தன. அவளை வெகுவாகக் காதலித்தான் ஆண்டனி. அவன் அழகானவன். ரோம் நகரத்தரசன். கிளியோபட்ராவை மணந்தான். அவனது நண்பர்கள் அனைவரும் அவனைப் பார்த்து,
‘‘ஆண்டனி நீ அழகானவன். நீ காதலித்து மணந்துள்ள உலக அழகியோ உனக்குப் பொருத்தமானவள் அல்ல. அவள் கருப்பு. அவளிடத்தில் நீ எதைக் கண்டு மயங்கினாய்?’’
என்று கேட்டதற்கு ஆண்டனியோ,
‘‘நண்பர்களே கிளியோபட்ராவின் அழகைக் காண்பதற்கு ஆண்டனியின் கண்கள் வேண்டுமா’’
என்று பதிலுரைத்தான். மற்றவர்களின் பார்வைக்குக் கிளியோபட்ரா அழகற்றவள். கருப்பியாக இருந்தாலும் ஆண்டனியின் மனம் அவளிடம் லயித்துவிட்டது. அதுபோன்றே சிலருக்குப் பிடிக்காதது சிலருக்குப் பிடிக்கும். இதற்குக் காரணம் கூற இயலாது. இத்தகைய மனநிலையை,
‘‘விரும்பினாத்தான் வேம்பும் கரும்பாகும்’’
விரும்பினாத்தான் கரும்பு
இல்லைன்னா இரும்பு’’
என்ற பழமொழிகள் எடுத்துரைக்கின்றன. வேம்பாக (வேப்ப மரத்தில் உள்ள அனைத்தும் கசக்கும்) இருப்பது நம்மனதிற்குப் பிடித்துவிட்டால் கரும்பாகிவிடும். எல்லாம் மனநிலையைப் பொருத்தே அமையும் என்பதை இப்பழமொழிகள் நமக்குத் தெளிவுறுத்துகின்றன.
விருப்பமில்லா மனைவி
சிலர் பெண்ணைப் பார்த்து மனதிற்குப் பிடித்துப் போய்விட்டால் மணம் செய்து கொள்வர். பெண்ணுக்கும் பையனுக்கும் மனமொத்திப் பிடித்துத் திருமணம் நடந்தால் அவ்வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும். யாருக்காவது ஒருவருக்கு மட்டும் பிடித்து மணம் நடந்தால் அது நரக வாழ்க்கையாக மாறிவிடும். சிலர் உறவு விட்டுப்போய்விடும் என்பதற்காக ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைப்பர். இதில் பெண்ணுக்கு விருப்பம் இருக்கும். ஆணுக்கு விருப்பம் இருக்காது. இதுபோன்ற சமயங்களில் குடும்பத்தில் ஏதேனும் ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு கணவன் தனது மனைவியை ஏசிக் கொண்டே இருப்பான். அடித்து அவளை அழ வைத்துக் கொண்டே இருப்பான். இதற்குக் காரணம் அவளை அவனுக்குப் பிடிக்காமல் வெறுப்பு ஏற்பட்டதே  ஆகும். இதனை,
‘‘வேண்டாத பொண்டாட்டி(மனைவி)
கால் பட்டாலும் குத்தம் கைபட்டாலும் குத்தம்’’
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.
வேண்டாத என்பது விருப்பமில்லாத, தான் விரும்பாத மனைவி என்று பொருள்படும். அப்பெண்ணாணவள் ஏதேச்சையாக நடக்கும்போது காலோ, கையோ கணவன் மீது பட்டுவிட்டால் ஐயோ என்னை உதைத்து விட்டாள், அடித்துவிட்டாள் என்று கணவன் கூறித் துன்புறுத்துவான். அதனால் திருமணத்திற்கு மனப் பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியமானதாகும் என்று இப்பழமொழி விளக்குகின்றது.
விருப்பமான மனைவி
அன்றில் பறவைகளைப் போன்று கணவன் மனைவி இணைந்து இல்லறம் நடத்துவர். அத்தகைய குடும்பத்தில் அன்பும் மகிழ்ச்சியும் கரைபுரண்டு ஓடும். சங்க இலக்கியமான குறுந்தொகையில் ஒரு காட்சி. தலைவன் தலைவியை களிபேருவகையுடன் காதலிக்கிறான். அப்போது அத்தலைவி வேப்பங்காயைக் கொடுத்தாலும், ‘‘ஆஹா என்ன அருமை, என்ன சுவை உனது கைபட்டவுடனேயே வேப்பங்காய் வெல்லக்கட்டிபோன்று இனிக்கின்றதே!’’ என்று கூறுகிறானாம். அப்படிக் கூறியவன் திருமணத்திற்குப் பின் இவ்வாறு மாறிவிட்டானே? என்று ஆச்சரியப்படுகின்றாள். வேப்பங்காயின் கசப்பு அவன் அவளை மிகுதியாக நேசித்ததால் இனிப்பாக மாறுகிறது. இதனை,
‘‘வைக்கிறவ வைச்சா
கழுதை மூத்திரங்கூட நல்லாருக்கும்’’
(மூத்திரம் -சிறுநீர்)
என்ற பழமொழி தெளிவுபடுத்துகிறது. இப்பழமொழியின் பின்னணியில் குடும்ப உறவுகள் இருப்பது நோக்கத்தக்கது.
பையனை வளர்து எடுத்து ஆளாக்கி அவனுக்கு மணமுடித்து வைக்கிறாள் தாய். மகன் மீது மிகுந்த அன்பு காட்டுகின்றாள். மகன் தன்னருகிலேயே தன் பேச்சையே கேட்க வேண்டுமென்று நினைக்கிறாள். ஆனால் மருமகள் வந்தவுடன் மகன் தன்னைக் கவனிபதில்லை என்று கருதுகிறாள். தன்மீது குறை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கின்றானே? தன்மீதுள்ள அன்பு மகனுக்குக் குறைந்து போய்விட்டது என்று கருதுகிறாள்.
இங்ஙனம் இருக்கும் நிலையில் ஒருநாள் தாய் சமைத்து மகனுக்கும் மருமகளுக்கும் பரிமாறுகிறாள். குழம்பில் சற்றுக் காரமும் உப்பும் கூடிவிடுகிறது. பசியோடு தட்டின் முன் உணவுண்ண அமரந்த மகனுக்குச் சாப்பாட்டைச் சாப்பிட்டவுடன் வாய் எரிகிறது. அவன் கோபத்துடன், ‘‘ஏம்மா இது என்ன குழம்பாவா இருக்கு? வாய்க்கு விளங்கவில்லையே? சே..சாப்பிடலம்னு வந்தேன். முடியலே’’ என்று கூற அவனது அம்மாவோ.
‘‘ஆமாமா..
வைக்கிறவ வச்சா கழுது மூத்திரங்கூட நல்லாருக்கும்’’
என்று சத்தமிடுகிறாள்.
அவனது ஆசை மனையாள் இதே போன்று வைத்திருந்தால் குறைகூறாது சாப்பிட்டிருப்பான். தன்மேல் அன்பில்லாததால் தானே இவ்வாறு கூறுகிறான். என்று அம்மா நினைப்பாள். இப்பழமொழி தாய், மகன், மருமகள் என்ற குடும்ப உறவுகளுக்கு இடையே உள்ள பிணைப்பை, உறவுச் சிக்கலை விளக்குவதாக உள்ளது.
ஆசையும் – பூசையும்
விருப்பத்தினை ஆசை என்றும் வேறு வகையில் கூறலாம். விரும்பினால் மட்டுமே ஒரு கோவிலுக்குச் சென்று அங்குள்ள தெய்வத்தை வழிபடுவோருண்டு. இல்லையெனில் யாருமே அக்கோவிலுக்குச் சென்று வழிபடமாட்டார்கள். இதனை,
‘‘ஆசை இல்லாத கோயில்ல
பூசை என்ன வேண்டிக்கிடக்கு’’
என்ற பழமொழி விளக்குகிறது. இப்பழமொழிக்கு வேறொரு பொருளும் உண்டு. அதாவது ஒருவர் தனக்குப் பிடிக்காத வேறொருவர் தம் இல்லம் தேடி வரும்போது அவரை வா என்று முகமன் கூறி வரவேற்றுப் பேசமாட்டார். இவன் எதுக்கு வந்தான் என்பதுபோல் அவரை ஏறிட்டுப் பார்ப்பார். ஏன் வந்தாய் என்பது போன்று அவரது பார்வை இருக்கும் இதைப் பார்க்கும் அவருடனிருப்பவர்,
‘‘என்னய்யா வீடுதேடி வந்திருக்கிறாரு வாங்கன்னுகூடச் சொல்லாமலிருக்கிறாய்?’’ என்று கேட்டால் அவர்,
‘‘எதுக்குக் கூப்பிடணும்? எனக்குத்தான் அவரப் பிடிக்கல. அவரு வர்ரத வீர்பலே ஏன் அப்புறம் வருகிறார்?’’ என்று பதிலளிப்பார். தன்னை விரும்பாதவரைத் தேடிச் சென்ற பார்க்கக் கூடாது. அங்ஙனம் சென்றால் அவமானப்பட நேரிடும். என்ற நடைமுறையினை எடுத்துரைப்பதாக இப்பழமொழி அமைந்துள்ளது. (ஆசையில்லாத கோவில் – விருப்ப மில்லாத ஆள், பூசை – வரவேற்றல்)
வாய்ப்பேச்சு
விருப்பம் என்பது வேண்டும் என்ற பொருளிலும் விருப்பமின்மை என்பது வேண்டாம் என்ற பொருளிலும் சில இடங்களில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஒரு சிலரைப் பிறரிடம் அறிமுகப்படுத்தும்போது ‘‘இவங்க எனக்கு ரொம்ப வேண்டியவங்க’’ என்று அறிமுகப்படுத்துவர்.
இங்கு வேண்டியவர் எனில், ‘மனதுக்குப் பிடித்தவர், அல்லது தெரிந்தவர், விருப்பத்திற்கு உகந்தவர்’ என்ற பொருள் தொனிப்பது நோக்கத்தக்கது. நடைமுறையில் நமக்கு விரும்பியவருடன்தான் பேசுவோம். நமக்குப் பிடிக்காதவருடன் பேசமாட்டோம். இது உலக இயல்பு. மேலும் பார்க்கின்ற அனைவருடனும் நாம் பேசுவது கிடையாது. தேவை என்றால்தான் பேசுவோம். இல்லையெனில் பேசமாட்டோம். சிலரிடம் விரும்பிப் போய்ப் பேசினாலும் அவர்கள் குற்றமாகக் கருதுவர். நம்மீது வீண்பழி சுமத்தி நமக்கு இடையூறு விளைவிப்பர். அதனால் நாம் விரும்பாத நமக்குப் பிடிக்காதவருடன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இதனை,
‘‘வேணுமின்னா வாய்ப்பேச்சு
இல்லைன்னா குசுப்போச்சு’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. இப்பழமொழியை,
‘‘விரும்புனா வாய்ப்பேச்சு
இல்லாட்டிக் குசுப்போச்சு’’
(குசு – மனித மலக்குடலில் இருந்து வெளியேறும் கார்பன்டை ஆக்ஸைடு, கரியமில வாயு)
என்று வழக்கில் வழங்கப்படுகின்றது. உலகியல்பை உணர்ந்து ஒருவர் நடந்து கொள்ள வேண்டும் என்பதை நமக்க அறிவுறுத்துவதாக இப்பழமொழி அமைந்துள்ளது.
விருப்பமில்லாதவன்
ஒரு பொருளை விற்பனை செய்ய விருப்பமில்லைாதவைன அழுத்தக்காரன் என்பர். வணிகனாக இருந்தாலும் அவன் யாருக்குக் கொடுக்க விரும்புகிறானோ அவனுக்கே அப்பொருளைக் கொடுப்பான். இல்லையென்றால் கொடுக்க மாட்டான். இத்தகையவர்களையே அழுத்தக்காரன் என்று கூறுவர். வணிகததில் மட்டுமல்லாது ஏதாவது ஒன்றைப்பற்றி சிலரிடம் நாம் கேட்டால் தெரியும் தெரியாது என்று பதில் கூற மாட்டார். அமைதியாக இருப்பார். அவர் மற்றவர்களிடம் பேச விரும்ப மாட்டார். அத்தகைய பண்புடையவர்களையும் அழுத்தக்காரர், நெஞ்சழுத்தக்காரர் என்று கூறுவர். இத்தகைய குணமுடையவரை,
‘‘அழுத்தக்கானிடம் புழுத்த கத்தரிக்காய் வாங்கின மாதிரி’’
என்ற பழமொழி சித்திரிக்கின்றது.
கொடுக்க விருப்பம்  இல்லாதவனிடம் சென்று வற்புறத்திக் கேட்டுப் புழுவைத்த பூச்சிக் கத்தரிக்காயை வாங்கியது போன்றது விருப்ப மில்லாதவரிடம் பேசுவது. அதனால் மன விருப்ப மில்லாதவருடன் பேசுவதனைத் தவிர்க்க வேண்டும் என்ற நன்னெறியை இப்பழமொழி நமக்கு உணர்த்துகிறது.
வாழ்க்கையில் விருப்பம் இருந்தால் மட்டுமே வாழ முடியும் விருப்பமின்றி வாழ்வது நரக வேதனையான வாழ்வாக அமையும். உலக இயல்பினை அறிந்துணர்ந்து விருப்பத்துடன் வாழ்வோம். விருப்பத்துடன் பிறரோடு பழகுவோம். வாழ்க்கையில் வசந்தம் எந்தநாளும் ஒளிரும்.

 

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 42 அணைந்து போனது என் விளக்கு … !நாம்…நமது…
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *