எல்லைக்கோடு

This entry is part 6 of 31 in the series 16 டிசம்பர் 2012

தெலுங்கில் : சிம்ஹபிரசாத்

தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன்

“ஊர்மிளாவின் உறக்கம்” பாட்டை என்னுடைய பாட்டி ரொம்ப இனிமையாய்ப் பாடுவாள். யார் வீட்டுக்காவது கொலுவுக்குப் போனால் அவர்கள் கேட்க வேண்டியதுதான் தாமதம், உடனே பாடத் தொடங்கிவிடுவாள். அம்மாவுக்கும் அந்தப் பாட்டு தெரியும். ஆனால் முழுவதும் தெரியாது. நான்கைந்து சரணங்களைப் பாடுவதோடு நிறுத்திக் கொள்வாள். எனக்கு பாடவே தெரியாது. ஆனால் அந்தப் பாட்டை சின்ன வயதில் ரொம்ப விருப்பமாய், சிரத்தையாய் கேட்பேன்.

ராஜாராமுடன் என் திருமணம் நடந்தது ரொம்ப வேடிக்கைதான்.

நாங்கள் வசித்து வந்தது கிராமம்தான் என்றாலும் பக்கத்தில் இருக்கும் டவுனில் டிக்ரி இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தேன்.

ஏதோ ஒரு கல்யாணத்தில் ராஜாராம் என்னைப் பார்த்தாராம். பட்டுப் பாவாடை, தாவணி அணிந்துகொண்டு, காலில் கொலுசும், காதில் ஜிமிக்கியுமாய் சுறுசுறுப்பாய் வளைய வந்து கொண்டிருந்த நான் அவர் கண்ணில் பட்டுவிட்டேனாம்.

எங்களைப் பற்றி விசாரித்த போது தூரத்து சொந்தம் எனத் தெரிய வந்ததாம். உடனே உறவினர் ஒருவருடன் செய்தி சொல்லி அனுப்பிவிட்டார்கள்.

“முக்தா! நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி. பெரிய இடத்திலிருந்து வரன் உன்னைத் தேடி வந்திருக்கிறது.” பெருமை பொங்கும் குரலில் அப்பா சொன்னார். கல்யாணம் ஆகிவிட்டால் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவார்கள் என்று அழுது அழிச்சாட்டியம் செய்தேன். “டிக்ரி கையில் கிடைக்கும் வரையில் நான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன்” என்று முணுமுணுத்தேன்.

“மாப்பிள்ளை வரும் வரையில் அமாவாசை காத்திருக்குமா? சுக்கு கண்ட இடத்தில் பிள்ளையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மாப்பிள்ளை வீட்டாரே தேடி வந்திருக்கிறார்கள்”

“பையன் என்ன செய்கிறானாம்?” அம்மா .ஆராய்வது போல் கேட்டாள்.

“இஞ்சினியர். மாதம் முதல் தேதி வந்ததும் பத்தாயிரம் சம்பளம் கையில் கிடைக்கும். வரதட்சிணை, சீர் வரிசை அதிகம் கேட்க மாட்டார்கள் போல் தெரிகிறது.”

“எனக்காக நீங்கள் கடனாளியாக வேண்டாம்.”

“பெரியவர்கள் ஒரு பக்கம் பேசிக்கொண்டு இருக்கும் போது நடுவில் உன்னுடைய புலம்பல் எதற்கு? .. அவளைப் பற்றிய கவலையை விடுங்கள். நீங்கள் சொல்லுங்கள். உங்களுக்கு இந்த வரன் பிடித்திருக்கிறதா?”

“எல்லா விதத்திலேயும் நன்றாக இருக்கிறது. ஒரே மகன். மகள் நிம்மதியாக, சந்தோஷமாக இருப்பாள்.”

“பின்னே தாமதம் செய்வானேன்? நான்கு பெரிய மனிதர்களை உடன் அழைத்துப் போய் வரதட்சிணை, சீர்வரிசை பேசி முடித்துவிட்டு முகூர்த்தம் வைத்துக் கொண்டு வந்து சேருங்கள். பையன் பெண்ணை பார்த்தாகி விட்டது என்பதால் இனியும் பெண் பார்த்தல் என்ற சடங்கு தேவை இல்லை.”

‘நான் இன்னும் பார்க்கவே இல்லையே?’ என்று சொல்ல நினைத்தேன். குரல் எழும்பவில்லை.

“படிப்பு முடியும் வரையில் கல்யாணம் பற்றியப் பேச்சை எடுக்காதீங்க அப்பா” வேண்டுகோள் விடுத்தேன்.

அப்பா சிரித்தார். “நீ நன்றாக இருக்கணும் குழந்தாய். உன் குடித்தனம் நன்றாக இருக்கணும்.” தலையை வருடிக் கொண்டே சொன்னார்.

அடுத்த வாரம் கல்யாண ஏற்பாடுகள் தொடங்கி விட்டன.

“உன் வருங்கால கணவர் எப்படி இருப்பார்? உனக்கு அவரைப் பிடித்திருக்கிறதா?” என்று சிநேகிதிகள் தூண்டித் துருவிக் கேட்டார்கள். அவருடைய போட்டோவைக் கூடப் பார்த்தது இல்லை என்று சொல்ல முடியாமல் வெறுமையாய் சிரித்துவிட்டுப் பேசாமல் இருந்து கொண்டேன்.

திருமணம் நடக்கும் போதுகூட அவரை முழுவதுமாகப் பார்க்க முடியவில்லை. எப்போதாவது லேசாக தலையை உயர்த்தினால் போதும் பக்கத்திலேயே இருந்த சித்தி என் தலையை அப்படியே அழுத்துவாள்.

“கழுத்து வலிக்கிறது” என்று முணுமுணுத்தேன்.

“பெண்ணாகப் பிறந்துவிட்ட பிறகு எதையும் பொறுத்துக்கொள்ளப் பழக வேண்டும்” என்றாள்.

அறைக்குள் பால் டம்ளருடன் அடியெடுத்து வைத்த ஐந்து நிமிடங்கள் கழித்து வெட்கத்தை விட்டு அவரைப் பார்த்தேன். ரொம்ப அழகாக இருந்தார். என்னையும் அறியாமல் நிம்மதியாக பெருமூச்சு விட்டுக் கொண்டேன்.

“கமான் முக்தா! வந்து உட்கார்.”

என் கையைப் பற்றி கட்டில் மீது தனக்கு எதிரே உட்கார வைத்தார். தந்தியை முடுக்கிவிட்ட வீணையைப் போல் என் மேனி சிலிர்த்தது. இனிமையான வார்த்தைகளைக் கேட்பதற்காக என் காதுகளைத் தீட்டிக் கொண்டேன்.

அவர் நிறையவே பேசினார். எல்லாம் தன்னைப் பற்றிதான். தன் படிப்பு, தன் வேலை, தன்னுடைய பிரமோஷன், தன்னுடைய வருமானம், தன்னுடைய கனவுகள். ஐந்து ஆண்டுகள் வரையில் குழந்தை பற்றிய பேச்சு எடுக்கக் கூடாது என்று சொல்லி விட்டார்.

எல்லாவற்றையும் மௌனமாய்க் கேட்டுக் கொண்டேன். சொல்லி முடித்த பிறகு என்னை அருகில் இழுத்துக் கொண்டார். கடல் அலையாய் என்னை முழ்கவைத்தார். பத்து நிமிடங்கள் கழித்து குறட்டை விட்டபடி தூங்கிவிட்டார்.

“பிராஜெக்ட் வேலையை விட்டுவிட்டு என்னால் இந்த பட்டிக்காட்டுக்கு சும்மா சும்மா அலைய முடியாது. கூடிய சீக்கிரத்தில் முக்தாவை குடித்தனத்திற்கு கொண்டு வந்து விடுங்கள்.” என்றார் போகும்போது.

“நீங்கள் எப்படிச் சொல்றீர்களோ அது போலவே செய்து விடுகிறோம்.” அப்பா தலையை ஆட்டினார்.

போகும்முன் என் பக்கம் பார்ப்பார் என்றும், புன்முறுவலுடன் விடை பெற்றுக் கொள்வார் என்றும் எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது.

பத்து நாட்கள் கழித்து மாமியார் வீட்டில் காலடி எடுத்து வைத்தேன்.

மாமனார் ஒய்வு பெற்ற தாசீல்தார். சொந்த வீடு. ஊரில் கொஞ்சம் நிலமும் இருக்கிறதாம்.

மாமனார், மாமியார் என்னை நன்றாகவே பார்த்துக் கொண்டார்கள். என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள். அவர்கள் சொன்னது போல் செய்துவிட்டால் பூரித்துப் போனார்கள்.

“நாம் எப்படிப்பட்ட பெண் வேண்டும் என்று விரும்பினோமோ அச்சு வார்த்ததுபோல், அது போலவே மருமகள் கிடைத்திருக்கிறாள்” என்று பெருமைப் பட்டுக்கொண்டார்கள்.

அவருக்கு உலகமே கம்ப்யூடர்தான். புதிதாக பிரோக்ராம் கற்றுக் கொள்வதாகவும், புதிய பிராஜெக்ட் தொடங்கி விட்டதாகவும் சொல்லியபடி கம்ப்யூட்டரைக் கழுத்துடன் கட்டிக் கொள்ளாத குறையாகப் பழியாய் கிடந்தார். ரொம்பவும் வற்புறுத்திக்கேட்டால் வேண்டா வெறுப்பாக சினிமாவுக்கோ பீச்சிற்கோ அழைத்துப் போவார்.

“நிறைய நிறைய சம்பாதிக்கணும்.” தினமும் அவர் ஜெபிக்கும் மந்திரம் இது.

“இப்பொழுதே நமக்கு நிறைய இருக்கிறது இல்லையா?” என்று சொன்னால் “உனக்கு ஒன்றும் தெரியாது. பைத்தியக்காரி!” என்று சொல்லுவார்.

“ரிடையர் ஆவதற்கு முன்னால்தான் தாசீல்தார் ஆனேன். ஒரு வருடத்திற்கு முன்னால் ஆகியிருந்தால் மூன்று தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வைத்திருப்பேன்.” வாரத்திற்கு ஒரு முறையாவது மாமனார் சொல்லும் வசனம் இது.

“உன்னை வசதியாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று ராஜாராம் இரவும் பகலும் கஷ்டப்படுகிறான். அவனை கண்ணின் இமைபோல் பார்த்துக் கொள். அவனுக்கு விருப்பம் இல்லாத எதையும் செய்யாதே.” வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் மாமியார் சொல்லிக் கொண்டு இருந்தாள்..

ஒருநாள் என் கணவர் காற்றில் பறந்து வந்ததுபோல் வீட்டுக்கு வந்தார். “ஐ காட் இட்!” சந்தோஷம் தாங்க முடியாமல் கும்மாளம் போட்டார்.

“மஸ்கட் ஆபர் கன்பர்ம் ஆகி விட்டதா?” மாமனார் கேட்டார்.

நான் குழப்பத்துடன் பார்த்தேன்.

“எஸ் டாட்! என் டர்ம்ஸ்க்கு ஒப்புக் கொண்டு விட்டார்கள். நான்கு வருட காண்ட்ராக்ட். அக்ரிமென்ட் பேப்பர்களை மெயிலில் அனுப்பிவிட்டார்கள்.”

மாமனார் மாமியார் வாழ்த்துக்களால் மூழ்கடித்தர்கள். நானும் அவர்களுடன் சேர்ந்துகொண்டேன்.

“பாவம்! அத்தை மாமாவால் தனியாக இருக்க முடியாது. அவர்களையும் நம்முடன் அழைத்துப் போவோம்.” படுத்துக்கொள்ளப் போகும் முன் சொன்னேன்.

வேடிக்கை பார்ப்பதுபோல் பார்த்தார். “உன்னை அழைத்துப் போவதாக யார் சொன்னது?”

“என்னை விட்டுவிட்டு எப்படிப் போவீர்கள்?”

“சாரி முக்தா! அரபு நாடுகளைப்பற்றி உனக்குத் தெரியாது. பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு. நான் மட்டும்தான் போகிறேன். ஐ வான்ட் டு அச்சீவ் சம்திங். தனியாக இருந்தால் நிறைய நேரம் இருக்கும். மேலும் நிறைய சேமிக்க முடியும். ஜஸ்ட் நான்கு வருடங்கள்! அவ்வளவுதான். அப்புறம் இங்கே வந்து சாப்ட்வேர் கம்பெனியைத் தொடங்குவேன்.”

உடலில் சக்தி முழுவதும் வற்றிவிட்டதுபோல் சோர்ந்துபோனேன். “நீங்கள் இல்லாமல் நான்கு வருடங்கள்..”

“முட்டாள்தனமாய் பேசாதே.”

“நீங்கள் போகாவிட்டால்தான் என்ன? இப்போது நாம் வசதியாகத்தானே இருக்கிறோம். இங்கேயே வேறு நல்ல வேலைக்கு முயற்சி செய்யலாம் இல்லையா?”

“இதுவும் ஒரு சம்பளமா? இதுவும் ஒரு வாழ்க்கையா? டிராஷ்! உனக்கு ஆயிரத்தெட்டு தடவை சொல்லிவிட்டேன். நான் சீக்கிரம் பணக்காரனாக வேண்டும். அதற்காகத்தான் இந்த தவிப்பு, தவம் எல்லாம். நான்கு வருடங்களில் ஒரு கோடி சம்பாத்தித்துக் கொண்டு வருகிறேன். நம்முடைய வாழ்க்கையின், ஸ்டேட்டஸ், லெவல் எல்லாமே நீ கனவில்கூட ஊகிக்கமுடியாத அளவிற்கு மாறிப்போய் விடும்.”

அவர் கண்களின் ஜொலிப்பைப் பார்த்து கண்ணீரை உள்ளுக்குள்ளேயே அடக்கிவிட்டேன்.

அவர் ஏறிய விமானம் வானத்தில் பறந்து போய்விட்டது. கடியாரத்தின் முள்ளைப்போல் என் வாழ்க்கைக் கழிந்து கொண்டிருந்தது.

என்ன செய்வது என்று தெரியவில்லை. எதையாவது செய்வோம் என்ற ஆர்வமும் இருக்கவில்லை.

வீடு, வீட்டுவேலைகள், மாமனார் மாமியார், அவர்களின் பணிவிடைகள் இதுதான் என் உலகமாகி விட்டது. இறகுகள் கத்தரித்து விட்டதுபோல் என் உலகம் சுருங்கிவிட்டது.

“அத்தை! வீட்டில் எனக்கு பொழுது போகவில்லை. கல்லூரியில் சேர்ந்து டிக்ரியை முடித்து விடுகிறேன். கிராஜ்வேட் ஆக வேண்டும் என்ற என் கனவை நிறைவேற்றிக் கொள்கிறேன்.”

என் பேச்சைக் கேட்டதுமே மாமியார் கன்னத்தில் இடித்துக் கொண்டாள். “கல்யாணம் ஆன பெண், தன்னை மிஞ்சியவள் இல்லை என்பதுபோல் காலேஜிற்கு போவதாவது?”

“இதில் தவறு என்ன இருக்கிறது? கல்யாணம் ஆனவர்கள் வேலைக்குப் போவதில்லையா?”

வியப்புடன் பார்த்துவிட்டு சொன்னாள். ”பையனுக்கு இதெல்லாம் பிடிக்காது. லட்சணமாக புடவை உடுத்திக் கொண்டு, தலை நிறைய பூ முடிந்து மகாலட்சுமியைப் போல் வீட்டில் வளைய வருவதுதான் அவனுக்குப் பிடிக்கும். அதற்காகத்தானே தேடித்தேடி உன்னை பண்ணிக் கொண்டது?”

“அவர் இங்கே இருந்திருந்தால் நானும் அப்படியே இருந்திருப்பேன். அவர்தான் இங்கே இல்லையே. நான்கு வருடங்கள் முடியும் வரையில் திரும்பி வருவது சாத்தியம் இல்லை என்றுகூடச் சொன்னார் இல்லையா?”

“என்னவோம்மா. உன் புருஷனையே கேட்டுக்கொள்.” உதட்டைக் கோணலாக சுழித்துக் கொண்டே சொன்னாள்.

பாரதநாட்டுப் பெண்மணி எப்படி இருக்க வேண்டும்? நம் கட்டுபாடுகளை, சம்பிரதாயத்தை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதைப்பற்றி உணவு நேரத்தில் வகுப்பு எடுத்தார் என் மாமனார்.

கல்லூரிக்குப் போகிறேன் என்று சொன்னதற்காகவா இத்தனை கெடுபிடிகள்? வியந்துபோனது போல் பார்த்தேன். ஆனாலும் பின் வாங்கும் எண்ணம் இருக்கவில்லை.

அவர் போன் செய்தபோது என் உத்தேசத்தை சொன்னேன்.

“இப்போது நீ படித்து யாரைக் கடைத்தேற்ற வேண்டும் சொல்? நிம்மதியாக டி.வி.யைப் பார்த்துக் கொண்டு பொழுதைப் போக்குவதை விட்டுவிட்டு இந்த தொல்லைகள் எல்லாம் எதற்கு? ஜஸ்ட் நான்கு வருடங்கள்! திரும்பி வந்து விடுவேன். அதற்குள் மூன்று மாதங்கள் கழிந்து விட்டது.”

“இன்ஜினியரிங் படித்த பிறகும் நீங்க மேலும் மேலும் கம்ப்யூட்டர் கோர்சுகள் படிக்கவில்லையா?”

“நான் வேறு. நீ வேறு. போகட்டும் தொலைதூரக் கல்வி திட்டத்தில் சேர்ந்து படி.”

“ஊஹும். கல்லூரியில் சேர்ந்துதான் படிக்கப் போகிறேன்.”

தொடர்பைத் துண்டித்து விட்டார். பத்து நாட்கள் வரையில் போன் எதுவும் பண்ணவில்லை. அதற்குப் பிறகு போன் செய்தாலும் என்னிடம் பேசவில்லை. இன்று இல்லாவிட்டால் நாளைக்காவது என் எண்ணத்தைப் புரிந்துகொள்வார் என்று நினைத்துக் கல்லூரியைப் பற்றி விசாரிக்க முற்பட்டேன்.

பிடிவாதக்காரி என்று நினைத்தார்களோ வேறு என்ன நினைத்தார்களோ தெரியாது, ஆக மொத்தம் சரி என்றார்கள். எத்தனையோ தடைகளை விதித்தார்கள். ஜாக்கிரதைகள் சொன்னார்கள். வெற்றியைச் சாதித்ததுபோல் பூரித்துப் போனேன்.

கல்லூரி வாழ்க்கை, நகரத்துச் சூழ்நிலை, புதிய நட்புகள், பரந்து விரிந்த எண்ணங்களின் பாதிப்பு… என்னுள் பல மாற்றங்களை ஏற்படுத்தின.

என்னுடைய உடைகள், நடத்தை, போன் உரையாடல்கள், சிநேகிதி வட்டம் … எல்லாவற்றின் மீதும் கண்காணிப்பு அதிகரித்தது. ஏதோ ஒரு காரணம் ஏற்படுத்திக்கொண்டு மாமனார் அடிக்கடி கல்லூரிக்கு வருவதையும் கவனித்தேன்.

என்னுள் ரத்தம் கொதித்தாலும் வெளிப்பார்வைக்கு அமைதியாகவே இருந்தேன்.

டிக்ரி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். என்னுள் சக்தி கூடிவிட்டதுபோல் இருந்தது. பெருமையுடன் அவரிடம் போனில் தெரிவித்தேன். சுருக்கமாக பாராட்டுகள் கிடைத்தன.

தன் மகன் முதல் வகுப்பில் பாஸ் செய்தான் என்று அடிக்கடி சொல்லி வந்த மாமியார்கூட நான் சாதித்த வெற்றியைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை..

என்னுள் பிடிவாதம் அதிகரித்தது. எம்.ஏ. சோஷியாலாஜி செய்யப் போவதாக அவரிடம் சொன்னேன்.

“படித்த வரையில் போதும். அம்மா அப்பாவைப் பார்த்துக்கொள். அவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வது ஒன்றுதான் உன்னுடைய தலையாய்க் கடமை.”

“அந்த விஷயத்தில் எந்தக் குறையும் வைக்க மாட்டேன். எங்கள் ஊரில் இதுவரையில் எந்த பெண்ணும் பி.ஜி. செய்தது இல்லை. நீங்கள் வருவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கிறதே. அதற்குள் முடித்து விடுகிறேன். மாட்டேன் என்று சொல்லாதீங்க ப்ளீஸ்.”

“இலக்குமணன் கோட்டைத் தாண்டுகிறாய் என்று தோன்றுகிறது. அம்மாவிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன்.”

பிறகு தன் பெற்றோரிடம் என்ன பேசினார் என்று தெரியாது. இருவரும் சேர்ந்து என்னை வார்த்தைகளால் தாக்கினார்கள். என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

“படிக்கிறேன் என்று சொன்னால் அது ஒரு குற்றமா?” நேராகவே கேட்டுவிட்டேன்.

“படிப்பது குற்றம் இல்லை. அந்த சாக்கில் ஊர் மேயப்போவது குற்றம். கணவனிடமிருந்து விலகியிருக்கும் பெண்ணுக்கு மனமும் உடலும் தன்வசத்தில் இருக்காது.”

மாமனாரின் பேச்சைக் கேட்டதும் சுட்டெரிப்பது போல் பார்த்தேன். அருவருத்துக் கொண்டேன். புழுவைப் போல் பார்த்துவிட்டு “நான் ஒன்றும் விலகி இருக்கவில்லை. உங்கள் மகன்தான் தள்ளி வைத்திருக்கிறார்” சூடாகவே பதில் சொன்னேன்.

“அவனுக்கென்ன? ஆண்பிள்ளை. எப்படி வேண்டுமானாலும் இருப்பான். என்ன வேண்டுமானாலும் செய்வான். உனக்கு புத்தி இருக்க வேண்டாமா?” மாமியார் பின்பாட்டு பாடினாள். “குழந்தை குட்டி இருந்திருந்தால் இந்த படிப்பு பித்தலாட்டம் இருந்திருக்காது.” முணுமுணுத்துக் கொண்டாள்.

நிலைமை கையை விட்டு நழுவிப் போவதாகத் தோன்றியது. கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு மௌனமாக இருந்துவிட்டேன். என்னை ஒரு அடிமையைப்போல் நடத்துவானேன் என்று புரியாமல் குழம்பினேன். வேதனை அடைந்தேன்.

ஆனால் அடிபணிவதில் விருப்பமில்லை. முரட்டு தைரியத்துடன் மேல் படிப்புக்கு அப்ளை செய்தேன்.

“நீ ஏன் இப்படி மாறிவிட்டாய் என்று எனக்குப் புரியவில்லை முக்தா! வயதான காலத்தில் அம்மா அப்பாவை நோகடிப்பானேன்? இன்னும் இரண்டு வருடங்கள் சமர்த்தாக இருக்கக் கூடாதா?”

சிரிப்பு வந்தது எனக்கு. “இப்பவும் நான் சமர்த்தாகத்தான் இருக்கிறேன். இனி மேலும் இருப்பேன். என்மீது எனக்கு மலை அளவிற்கு நம்பிக்கை இருக்கிறது. உங்கள் மீதும் இருக்கிறது. என்மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?”

“நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பது பிரச்சினை இல்லை.”

“என்னுடைய கேள்வி அதுதான். நேரடியாக பதில் சொல்லுங்கள். என் மீது நம்பிக்கை இருக்கு என்று சொன்னால்தான் நான் எம்.ஏ. படிக்கிறேன்.”

சற்று நேரம் தயங்கியபின் “மேற்படிப்பில் சேர்ந்துகொள். ஆனால் வேண்டாத நட்புகள், ஊர் சுற்றுவது எதுவும் கூடாது. கட்டுபாட்டுக்குள் இருக்க வேண்டும். தலைகுனிவு ஏற்படும் விதமாக எதுவும் செய்யாதே” என்றார். போனிலேயே ஆழமான முத்தம் ஒன்றைக் கொடுத்தேன்.

என்னுள் சுயநம்பிக்கை அதிகரித்தது. தலை நிமிர்ந்தபடி யூனிவர்சிடீக்கு போய் வந்து கொண்டிருந்தேன்.

மாமியார் மாமனார் குத்தல் மொழிகளுடன் தாக்குதல் நடத்தி வந்தார்கள். முன்னைப் போல் பிரியமாகப் பழகவில்லை. ஒவ்வொரு செயலையும் பூதக்கண்ணாடியால் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். உறவினர்களிடம் புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

நான் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. நான் நேராக நடக்கும் போது என்னுடைய் நிழல் கோணலாக இருக்கிறது என்று யாரோ சொன்னால் அதை ஏன் பொருட்படுத்த வேண்டும்? கடைசி வருடத்தில் இருக்கும்போது ‘க்ரூப் ஒன்’ தேர்வு அறிக்கை வந்தது.

கல்லூரி காண்டீனில் கும்பலாக உட்கார்ந்திருந்த போது நண்பர்கள் எல்லோரும் அதைப் பற்றித்தான் பேசிக் கொண்டோம். “எல்லோரும் சேர்ந்து அப்ளை செய்வோம். ஒன்றாக சேர்ந்து ப்ரிபேர் செய்வோம்” என்றார்கள்.

“நல்லதுதான். சும்மா ஒரு கல்லை எரிந்து பார்ப்போம்” யாரோ சொன்னார்கள்.

“சும்மா கல்லை எரிந்து பார்ப்பது டைம் வேஸ்ட். சீரியஸ் ஆக முயற்சி செய்வோம். சாதிப்போம். அதிகாரத்தைக் கை பற்றுவோம்” என்றேன் சற்று ஆவேசத்துடன்.

எல்லோரும் கை தட்டினார்கள். என்னால் பின்வாங்க முடியவில்லை.

வீட்டில் சொல்லவேண்டும் என்று தோன்றவில்லை. சொன்னால் என் உற்சாகத்தின் மீது தண்ணீர் தெளிப்பார்கள் என்று தெரியும். ஆனால் படிக்கும் நேரம் கூடியதில் நெற்றியைச் சுளித்தார்கள். வாயைத் திறந்து எதுவும் கேட்கவில்லை.

தேர்வுகளை நன்றாக எழுதினேன். முடிவுகள் அறிவிக்கப்பட்டன. நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது. சந்தோஷம் தாங்க முடியாமல் அம்மா, அப்பாவுக்கு போன் செய்தேன்.

மாமனாரின் முகம் வெளிறிப்போய் விட்டது. “க்ரூப் ஒன் என்றால் ஆர்டிவோ ரேங்க் போஸ்ட்..” ரிடையர்ட் தாசீல்தார் என்று அடிக்கடி பீற்றிக் கொள்ளும் அவர் வாயிலிருந்து அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை.

மாமியார் அவநம்பிக்கையுடன் பார்த்தாள்.

விடியும் போதே அம்மா, அப்பா வந்துவிட்டார்கள். என்னைப் பாராட்டுவதற்கு என்று நினைத்தேன்.

வந்ததும் வராததுமாய் “நீ சமர்த்தாக குடித்தனம் செய்தால் போதும். ராஜ்ஜியத்தை ஆளவேண்டியதில்லை” என்றாள் அம்மா.

“என்னம்மா இப்படி சொல்லி விட்டாய்? நான் பெரிய அதிகாரியானால் நம் எல்லோருக்கும் பெருமைதானே. உன் மகள் எத்தனையோ பேருக்கு உதவி செய்தால், மக்களுக்கு நன்மை செய்தால் உனக்கு பெருமையாய் இருக்காதா?”

“எங்களுக்கு பெருமைதான். ஆனால் மாப்பிள்ளைக்கு விருப்பம் இல்லாத போது..” அப்பா பாதியில் நிறுத்திக்கொண்டார்.

“லட்சியத்தை சாதிப்பது அவருக்கு ரொம்பப் பிடித்தமான விஷயம் அப்பா. கோடி கோடியாய் சம்பாதிக்க வேண்டும் என்பது அவருடைய லட்சியம். நான் யாரென்று நிரூபித்துக் கொள்வது என்னுடைய லட்சியம். இதில் குறை சொல்லுவதற்கு எதுவும் இல்லை.”

“எது சரி எது தவறு என்பது உன் கண்ணோட்டத்தில் இல்லை. உன் கணவரின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். அவர் சொல்லுவதுதான் உனக்கு சரி. அதுதான் வேதம்.” பலவிதமாக என்னை கன்வின்ஸ் செய்யப் பார்த்தார்கள்.

“வாசலில் கோலம் போட்டுவிட்டால் மட்டும் பண்டிகை ஆகிவிடாது. அமைச்சர் லெவலில் சிபாரிசு இருந்தாலோ, லட்சம் லட்சமாய் லஞ்சம் கொடுத்தாலோ தவிர நேர்முகத் தேர்வில் செலக்ட் ஆக முடியாது. நடந்த கூத்து போதும். இனிமேல் வாயை மூடிக்கொண்டு சும்மா இரு.” ஆணையிடுவது போல் சொன்னார் மாமனார்.

என்னை அவமானப் படுத்துவது போல் உணர்ந்தேன். புழுப் பூச்சிக்கு சமமாய் என்னை ஒப்பிட்டது வேதனையாய் இருந்தது. கீழ் உதட்டைக் கடித்துக் கொண்டேன். என் கைப்பிடி இறுகியது.

நேர்முகத் தெருவுக்கு போனது, நான் தேர்வானது, அடுத்தநாளே என் கணவர் மஸ்கட் லிருந்து வந்தது அடுத்தடுத்து நடந்தேறி விட்டன.

“நீதான் என் முக்தா என்றால் நம்பத்தான் முடியவில்லை” என்றார் வீட்டுக்குள் நுழையும் போதே.

“உங்களிடமும் மாற்றம் நன்றாகத் தெரிகிறது. ரொம்ப இளைத்துப் போனதுடன். கறுத்து விட்டீங்க. முன்பு இருந்த உற்சாகம் இப்போது உங்களிடம் இருப்பதாக தெரியவில்லை.”

“ஏதோ நான்கு வருடங்கள் நான் இங்கே இருக்கவில்லை என்றால் நீ இந்த அளவுக்கு மாறிப் போகவேண்டுமா? நண்டு கொழுத்தால் வளையத்தில் தங்காது என்பார்கள். இதுதான் போலும்.”

“நான் கொஞ்சம்கூட மாறவில்லை. அப்போதும் இப்போதும் உங்களுடைய முக்தா தான்.”

“இல்லை. முக்தாவிடம் நான் பார்த்த அழகு, பதிவிசு, அமரிக்கை, அப்பாவித்தனம் இப்போது கொஞ்சம்கூட இல்லை.”

“உங்களுக்கு அப்படித் தோன்றுகிறதோ என்னவோ. நான் ஒன்றும் மாறவில்லை. இருந்தாலும் மாறுதல் எல்லோருக்கும் சகஜம், அது ஆணாக இருந்தாலும்.”

“ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். பெண்கள் மட்டும் மாறவே கூடாது.”

“ஏனாம்? அவர்கள் என்ன பாவம் செய்து விட்டார்கள்?”

“பாவமா சாபமா என்பது கேள்வி இல்லை. இலக்குமணன் பதினான்கு வருடங்கள் வனவாசத்திற்குப் போனால் அவன் மனைவி ஊர்மிளா என்ன செய்தாள் தெரியுமா? கணவனுக்கு இல்லாத ராஜபோகம், சந்தோஷம் தனக்கும் தேவையில்லை என்று சொல்லிவிட்டு அவன் திரும்பும்வரையில் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டாள். பத்தினிப் பெண் என்றால் அவளைத்தான் சொல்லிக்கொள்ள வேண்டும்.”

அவருடைய சொற்கள் முள்ளாய் என் இதயத்தைத் தைத்தன. அப்படியும் பொறுத்துத்துக் கொண்டேன். “நீங்க ஏதோ வில்லம்பு தரித்து காவல் காத்து வருவது போல் சொல்கிறீர்களே?” சிரித்துக் கொண்டே சொன்னேன்.

ஒரு வாரம் வரையில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஜாலியாக இருந்தேன். சினிமா, ஹோட்டல் என்று வெளியில் அழைத்துப் போனார். புடவை, நகை வாங்கிக் கொடுத்தார்.

“இன்னும் எட்டு மாதங்களில் என் காண்ட்ராக்ட் முடிந்து விடும். அதற்கு பிறகு நாம் எப்போதும் சேர்ந்தே இருக்கலாம்.” திரும்பிப் போகும் முன் சூட்கேசில் உடைகளை எடுத்து வைத்துக் கொண்டே சொன்னார்.

“அதிகாரம், பணம் இருக்கும் பொம்பிளையைக் கட்டுப்படுத்துவது அந்த பிரம்மனே வந்தால்கூட முடியாதுடா அம்பீ!” கூடத்திலிருந்தே கத்தினார் மாமனார்.

“நீ வேலைக்குப் போகவேண்டும் என்ற தலையெழுத்து இல்லை. நம்மிடம் வேண்டிய அளவிற்கு பணம் இருக்கிறது.”

“பணத்திற்காக இல்லை. என்னுடைய தனித்தன்மையை நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்ற தவிப்பு. ஏதோ செய்ய வேண்டும் என்ற ஆர்வம். அவ்வளவுதான். எந்த ஊரில் போஸ்டிங் கொடுத்தாலும் பிறகு இங்கேயே மாற்றல் வாங்கிக் கொள்கிறேன். அது முடியாது என்றபோது விட்டுவிடுகிறேன்.”

“நான் திரும்பி வரும் போது நீ எங்கேயோ இருந்தால், உனக்காக எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது என்னால் முடியாது.”

“நான் காத்திருக்கவில்லையா?”

“நான் ஆண்மகன்!”

“இருக்கலாம். கணவன் மனைவி நட்புடன் இருக்க வேண்டுமாம். சின்னச் சின்ன அட்ஜெஸ்ட்மென்ட்ஸ் செய்து கொள்ளலாம் இல்லையா?”

“மேற்கொண்டு விவாதம் தேவையில்லை. ஆபீசர் ஹோதா வேண்டுமோ, மனைவி என்ற ஸ்தானம் வேண்டுமோ ஏதோ ஒன்றை முடிவு செய்துக்கொள்.” கடுமையான குரலில் சொன்னார்.

“பெண்ணாகப் பிறந்தவள், அதிலும் திருமணம் ஆன பெண் வளரவே கூடாது. பறக்கவும் கூடாது அவளுக்கு இறகுகளே இருக்கக் கூடாது. ஒருக்கால் இறகுகள் முளைத்துவிட்டால் அவற்றை கத்தரித்துக்கொண்டு கணவனுக்கும், வீட்டுக்கும் அடிமையாய் இருக்க வேண்டும். அவ்வளவுதானே தவிர அவளுக்கு என்று ஒரு வாழ்க்கை, இன்னொரு உலகம் இருக்கவே கூடாது. அப்படித்தானே?’

“அப்படித்தான். என்ன முடிவு செய்திருக்கிறாய்?”

“உங்களைக் கண்டால் வெறுப்பாக இருக்க்கிறது.”

இப்போது எனக்கு ஊர்மிளாவின் கதையோ, பாடல்களோ விருப்பமாக இருக்கவில்லை.

** – ** – **

Series Navigationஓய்ந்த அலைகள்வால்ட் விட்மன் வசன கவிதை -2 மௌனத்தில் ஆழ்ந்த சிந்தனை
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *