ஜெய்கிந்த் செண்பகராமன்

This entry is part 11 of 31 in the series 16 டிசம்பர் 2012

செண்பகராமன்

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

     1914-ஆம் ஆண்டு, ஜெர்மனியில் முதல் உலகப்போர் நடந்தபோதுஇந்தியா ஆங்கிலேயரின் அடிமைப்பிடியில் சிக்கியிருந்தது. அப்போது இந்தியாவிலுள்ள நாட்டுப்பற்றாளர்களை ஒருங்கு சேர்த்துப் படை திரட்டி இந்திய பிடுதலைக்குப் போராடியவர் டாக்டர் செண்பகராமர் ஆவார். அவரே வெளிநாட்டில் சுதந்திரப்போர் முழக்கம் செய்த முதல் தமிழ் வீரர் ஆவார்.

பிறப்பும் கல்வியும்

டாக்டர் செண்பகராமர் 1891-ஆம் ஆண்டு செப்டெம்பர்த் திங்கள், 15-ஆம் நாள், கேரள நாட்டின் தலைநகராகிய திருவனந்தபுரத்தில் பிறந்தார். அவர்தம் தந்தையாராகிய சின்னச்சாமி காவல்த் துறையில்  தலைமைக் காவலராய்ப் பணி புரிந்து வந்தார். தாயார், திருவனந்தபுரம் அரண்மனை மருத்துவராகப் பணி புரிந்து வந்த பதுமநாபரின் மகளாரான நாகம்மாள் என்பவராவார். செண்பகராமருடன் பிறந்தவர்கள் தமக்கையார் பாப்பம்மாளும் தமையனார் சோமசுந்தரமும் ஆவர்.

‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்னம் முதுமொழிக்கு ஏற்பப் பிற்காலத்தில் சிறந்தவராய்த் திகழ்ந்த செண்பகராமர் இளமையிலேயே படிப்பிலும் விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்டு சிறந்து விளங்கினார். மேலும் சிலம்பம், வாள் வீச்சுப் போன்ற கலைகளிலும் பயிற்சி பெற்றிருந்தார்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடல்

அவர் திருவனந்தபுரம் மன்னர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் படிவத்தில் கற்கும்போது வட இந்தியாவில் பாலகங்காதர திலகர் தொடங்கி வைத்த சுதந்திரப் போராட்டம், இமயம் முதல் குமரி வரையுள்ள மக்களின் உள்ளங்களில் சுதந்திர உணர்ச்சியைத் தூண்டியது. பதினான்கே வயதினரான செண்பகராமர் உள்ளத்திலும் சுதந்திர வேட்கை தோன்றிற்று. அவர் தம்டன் பயின்ற மாணவர்களையும் சேர்த்துக் கொண்டு சுதந்திர முழக்கத்தை எழுப்பினார். திருவாங்கூர் அரசுக்கு அது பேரிடியாய் இருந்தது. அதனால் அவர் காவலர் கண்காணிப்பில் வாழ நேர்ந்தது.

அந்நாளில் ராவ்சாகிபு மு.கி. செரியன் என்பவரிடத்தில் செண்பகராமர் கல்வி கற்று வந்தார்.. அப்போது, ஒருவர் தம்மை விலங்கு மருத்துவர் என்று கூறிக்கொண்டு, விலங்குகளை ஆராய்ந்து கொண்டும், செண்பகராமரையும் மற்ற மாணவர்களையும் விலங்குகளைப் பிடிக்க உதவிக்குச் சேர்த்துக் கொண்டும் நாள்கைளைக் கழித்து வந்தார். தேய்ந்து கிழிந்த காலுறையும் பழைய தொப்பியும், சட்டையும் அணிந்து காணப்பட்ட அவரது பெயர் சர் வில்லியம் டீக்லான்று என்பது ஆகும். அவருக்கும் செண்பகராமருக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.

ஜெர்மனி செல்லல்

வில்லியம் டீக்லான்று அடக்கவியலாத சுதந்திர வேட்கை கொண்டிருந்த செண்பகராமரை அழைத்துக் கொண்டு திருவனந்தபுரத்தைவிட்டு இலங்கைக்குச் சென்று, 1908-ஆம் ஆண்டு செப்டெம்பர் திங்கள், 12-ஆம் நாள், என்.சியார்க்கு என்னும் ஜெர்மன் கப்பலில் இலங்கையிலிருந்து இத்தாலி நாட்டுக்குப் போய்ச்சேர்ந்தார். அங்கு சேர்ந்த பின்பே டீக்லான்று சாதராண மனிதர் அல்லர் என்றும் ஜெர்மனயில் பெரிய செல்வர் என்றும் ஜெர்மனி சக்கரவர்த்தியான கெய்சர் என்பவரின் உயிர் நண்பர் என்றும், சர் வால்டர் வில்லியம் டீக்லான்று என்பது அவரது பெயர் என்றும், போல்க்காலத்தில் போர் இரகசியங்களைச் சேகரிக்க வந்தவர் என்றும், ஆங்கில அரசின் கொடும்பிடியிலிருந்து தம்மைத் தப்புவித்து அழைத்து வந்தார் என்றும் செண்பகராமர் அறிந்து கொண்டார்.

டீக்லான்று, செண்பகராமரை, பெர்லிஸ் ஆப்ரலாங்கேஜ்’ என்ற பள்ளியில் சேர்த்தார். செண்பகராமர் இத்தாலி மொழி பயின்று, இலக்கியம் விஞ்ஞானம் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றார். பின்னர் சுவிட்சர்லாந்து சென்று அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பல பட்டங்ளைப் பெற்றார். மாணவராய் இருந்தபோதே அவர் சுவிட்சர்லாந்து நாட்டில் நிகழ்த்திய பல சொற்பொழிவுகளில் இந்திய நாட்டில் நடைபெற்ற அயலார் அடக்கு முறைகளைப் பற்றி மிகத் தீவிரமாக முழக்கமிட்டு, அந்த நாட்டு மக்களின் அன்பையும் பெற்றார்.

பத்திரிக்கை நடத்துதல்

பிறகு அவர் சுவிட்சர்லாந்திலிருந்து ஜெர்மனியில் தலைநகரமாகிய பெர்லினுக்குச் சென்றார். அங்கு டீக்லான்று ஜெர்மன் சக்கரவர்த்தியான கெய்சருக்குச் செண்பகராமரை அறிமுகப்படுத்தினார். பெர்லினில் பொறியில் துறையில் தேறிக் டாக்டர் பட்டம் பெற்றுக் கொண்டு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார். புரோ இண்டியா(இந்தியா ஆதரவு) என்ற பத்திரிக்கை ஒன்றை நடத்தி அதன் வாயிலாக ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பொய்த்தகவல்களை அம்பலப்படுத்தினார். ஒதுக்கப்பட்டவர் சங்கம் ஒன்றை நிறுவி, அதனை உலக நாடுகள் பலவற்றிலும் பரவச் செய்தார். மேலும் தாழ்த்தப்பட்டவர் கழகம் என்ற நிறுவனத்தையும் அமைத்துச் செயற்பட்டார். அச்சயல் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

 

 

எம்டன் கப்பலில் தலைவராதல்

1914-ஆம் ஆண்டில் முதல் உலகப்போர் தோன்றியபோது உலகப்புகழ் பெற்ற எம்டன் என்னும் நீர்மூழ்கிக் கப்பல் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை வந்து பீரங்கி கொண்டு தாக்கிச் சென்றது. அந்தக் கப்பலைச் செலுத்திச் சென்ற தலைவர்கள் டாக்டர் செண்பகராமரும், வலன் முல்லரும் ஆவார்கள். இந்தத் தாக்குதல் ஆங்கில அரசை ஒரு குலுக்குக் குலுக்கியது.

குண்டு விழுந்த இடத்தில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் அருகில் இப்போதும் கல்லால் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னம் உள்ளது. இதற்கு முன்போ அவர் இந்தியன் நேஷனல் வாலண்டியர் கோட்ஸ் எஃப்.என்.ஏ.(F.N.A.) நிறுவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசை நிறுவுதல்

1916-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானத்தின் தலைநகராகிய காபூலில் இந்திய அரசு ஒன்றை டாக்டர் செண்பகராமர் நிறுவினார். அவர் வெளிநாட்டு அமைச்சராகவும், ராஜா பிரதாப சிங்கு தலைவராகவும், உபயதுல்லா செயலாளராகவும் இருந்து செயலாற்றி வந்தார்கள்.

டாக்டர் செண்பகராமருக்கு ஆப்கானிஸ்தான் அரசு இவ்வளவு சிறப்புக் கொடுத்ததற்காக ஆப்கானிஸ்தான் அரசைக் கடிந்து கொண்டது ஆங்கில அரசு. அது நினைத்தது போலவே ஜெர்மானியப் படையின் துணையோடு இந்தியன் நேஷனல் வாலண்டியர் கோட்ஸ், துருக்கியின் எல்லையில் ஜெய்கிந்த் என்ற முழக்கத்துடன் முன்னேறிச் சென்றது. ஜெய்கிந்த் என்ற முழக்கத்தை முதன் முதலில் கூறியவர் செண்பகராமனே ஆவார். அதானல் தான் அவரை ஜெய்கிந்த் செண்பகராமன் என்று குறிப்பிடுகின்றனர்.

ஆங்கிலப் படைகள் இந்திய வாலண்டியர் கோட்ஸ் வீரர்களை எதிர்த்து வெற்றி கொண்டன.   அந்த வீரர்களுள் பலரை ஆங்கிலப்படை சிறைப்படுத்தியது. இந்தக் குழப்பத்தின் காரணமாக, காபூலில் அமைத்த சுதந்திர அரசாங்கம் செயற்பட இயலாது போயிற்று. இச்சமயத்திலும் டாக்டர் செண்பகராமர் சிறிதும் சோர்வடைந்துவிடவில்லை. முன்னிலும் வீறுகொண்டு செயல்பட்டார். அவர் ஜெர்மனிக்குத் திரும்பியபோது ஜெர்மன் அரசாலும் மக்களாலும் அவருக்குச் சிறந்த வரவேற்பும் ஆதரவும் கிட்டின.

ஜெர்மனி நாட்டில் வசித்து வந்த இந்தியக் குடும்பத்தைச் சார்ந்த லட்சுமிபாய் என்ற அம்மையாரை 1931-ஆம் ஆண்டு செண்பகராமர் திருமணம் செய்து கொண்டார். அந்த அம்மையார் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர். 1919-ஆம் ஆண்டில் சுபாஷ் சந்திரபோஸை அவர் வியட்நாமில் சந்தித்துத் தம் திட்டங்களையும் 1914-ஆம் ஆண்டில் தாம் செய்த போராட்டங்களையும் விளக்கியிருந்தார்.

 

 

செண்பகராமருக்கும் சர்வாதிகாரி இட்லருக்கும் சொற்போர்

ஒரு நாள் டாக்டர்  செண்பகராமருக்கும் சர்வாதிகாரி இட்லருக்கும் சொற்போர் மூண்டது. இந்தியாவைப் பற்றியும் இந்தியத் தலைவர்களைப் பற்றியும் இழிவாகப் பேசியது காரணமாக அச்சொற்போர் ஏற்பட்டது. இறுதியில் இட்லர் மன்னிப்புக் கோர நேர்ந்தது. டாக்டர் செண்பகராமர் மன்னிப்பை எழுத்து மூலம் எழுதித் தரவேண்டும் என்று கூறி தமது வாதத்திறமையால், அவ்வாறே பெற்றுக் கொண்டார். இதனால் இட்லர் ஆத்திரம் கொண்டு டாக்டர் செண்பகராமரைப் பழிவாங்க எண்ணினார்.

இயற்கை எய்தல்

நாஜிக்களும் அவரைக் கொல்வதற்குத் தக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் திட்டப்படி டாக்டர் செண்பகராமர் கலந்துகொள்ளும் அரசாங்க விருந்துகளில் வைக்கப்படும் உணவில் சிறிது சிறிதாக நஞ்சு கலந்து வைக்கப்பட்டது. அந்த நஞ்சு உடனடியாகக் கொல்லும் நஞ்சாக இல்லாமல், அவரை நாளடைவில் நோயாளியாகப் படுக்கையில் வீழ்த்தியது. பிரேசியன்ஸ் செட்டர் மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருந்த டாக்டர் செண்பகராமர், 1934-ஆம் ஆண்டு, மேத் திங்கள், 26, ஆம் நாள் இயற்கை எய்தினார்.

செண்பகராமரின் இறுதி ஆசை

டாக்டர் செண்பகராமர் தமது உயிர் பிரிவதற்கு முன், தம் மனைவியார் லட்சுமிபாயை அழைத்துத் தமது இறுதி விருப்பத்தைத் தெரிவித்திருந்தார். அவர், லட்சுமிபாயை நோக்கி, ‘ஒரு போர்க்கப்பலில் நான் இந்தியாவிற்குச் செல்ல உறுதி கொண்டிருந்தேன். ஆனால் அது நிறைவேற இயலாமற் போயிற்று. எனவே, நான் இறந்த பிறகு என் சாம்பலை இந்தியாவிற்கு எடுத்துச் சென்று, இந்தியா பூரண சுதந்திரம்  பெற்ற பிறகு திருவனந்தபுரத்திலுள்ள கரமனை ஆற்றில் கரைக்க வேண்டும். மீதியை வளமிக்க வயல்களில் தூவ வேண்டும்’. என்று கூறியிருந்தார்.

அதன்படி லட்சுமிபாய், 1935-ஆம் ஆண்டு அஸ்திகலசத்தை எடுத்துக் கொண்டு பம்பாய் வந்து சேர்ந்தார். சுமார் 30 ஆண்டுகளாக அஸ்தி பாதுகாக்கப்பட்டு, இறுதியில் 1966-ஆம் ஆண்டு, செப்டெம்பர்த் திங்களில் ஐ.என்.எஸ். டில்லி என்ற பெயருடைய கப்பலில் கொச்சி துறைமுகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இராணுவ மரியாதை செலுத்தப்பட்ட பின்னர் அஸ்திக்கலசம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. பின்பு அஸ்தியின் ஒரு பகுதி கரமனை ஆற்றில் கரைக்கப்பட்டது. அஸ்தியின் மறுபகுதியைத் தூக்கிச்சென்ற இறுதி ஊர்வலம் கன்னியாகுமரியை அடைந்ததும், பொதுமக்கள், மாவீரருக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள். கலசத்திலிருநது அஸ்தி சிறிதளவு குமரியில் கரைக்கப்பட்டது. மீதி அங்குள்ள வயல்களில் தூவப்பட்டது. டாக்டர் செண்பகராமரின் விருப்பம் நிறைவேறியது. வெளிநாடுகளில் முதற் சுதந்திரப் போர் முழக்கம் செய்த தமிழ் வீரரின் புகழ் என்றென்றும் இந்தியர் அனைவரது நெஞ்சங்களிலும் நீங்காது இருக்கும். அது இதயத்தில் கலந்திருக்கும்.

 

Series Navigationநாஞ்சில் நாடனுக்கு இயல் விருதுபுரிதல்
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *