மாறும் வாழ்க்கை – செல்வராஜ் ஜெகதீசனின் நான்காவது சிங்கம்

This entry is part 4 of 31 in the series 16 டிசம்பர் 2012

கலாப்ரியாவின் சிறப்பான முன்னுரையோடு செல்வராஜ் ஜெகதீசனின் நான்காவது கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. நான்காவது சிங்கம் என்னும் தலைப்பின் வசீகரம், அசோக ஸ்தூபியின் உச்சியில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் சிங்கத்தைப்பற்றிய கற்பனையைத் தூண்டுகிறது. கவிதையைக்கூட நான்காவது சிங்கத்தைப் பார்க்கமுடியாத ஒரு ஸ்தூபி என்று சொல்லலாம். அந்த எண்ணத்துக்கு வலிமை சேர்ப்பதுபோன்ற கவிதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. எழுதி எழுதி தமக்குரிய ஒரு கவிதைமொழியை ஜெகதீசன் கண்டடைந்துள்ளார் என்று சொல்லலாம்.

பல தளங்களைநோக்கி விரிவடையும் தன்மை கொண்ட ஒரு கவிதை முகம் திரும்பாப் பிரிதல்கள். தொகுப்பின் முக்கியமான கவிதையாக இதை அடையாளம் காட்டலாம். என்றேனும் நிகழும்/ நீ திரும்பும் கணமென்னும் / எதிர்பார்ப்பை எப்போதும் / பொய்யாக்கிப் போகும் / உன் முகம் திரும்பாப் / பிரிதல்கள் என்னும் அக்கவிதையின் வரிகளை மீண்டும் மீண்டும் அசைபோட, அது காட்டும் சித்திரங்கள் வேறுவேறாக உள்ளன. ஒருமுறை தெய்வம். இன்னொரு முறை அதிர்ஷ்டம். அப்புறம் உயரத்துக்கு அழைத்துச் செல்லும் வாய்ப்புகள். கலையின் வரம். அதற்கப்புறம் மனத்தைக் கொள்ளைகொண்டுபோன ஓர் ஆண். பிறகு பெண். சொல்லிக்கொண்டே போகலாம்.

இனிமேல் பார்க்கவே கூடாதென்று நினைத்திருந்த கண்களை இனம், மொழி, தேசம் கடந்து இன்னொரு இடத்தில் காணச் செய்யும் விந்தையை முன்வைக்கும் சிறிய கவிதை வாசித்துமுடித்த பின்னும் மனத்தில் நிழலாடியபடியே உள்ளது. உருவத்தை முன்வைத்துத்தான் நாம் ஒருவரை நினைவில் வைத்திருப்பதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் நாம் நினைவில் வைத்திருப்பது அந்த உருவத்தின் முகத்தை. முக்கியமாக கண்களை. அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் என்றொரு குறள் உண்டு. நெஞ்சில் நிறைந்திருக்கும் உணர்வுகளை துல்லியமாகவும் மெளனமாகவும் வெளிப்படுத்தும் கண்ணாடி முகம். மகிழ்ச்சி, துயரம், வெறுப்பு, கசப்பு, வலி, வேதனை, நகைச்சுவை, பெருந்தன்மை என எந்த உணர்வாக இருந்தாலும் அதை முகம் புலப்படுத்திவிடுகிறது. உண்மையில் அவற்றை வெளிப்படுத்துபவை கண்கள். ஒருவருடைய முகத்தை, முக்கியமான தருணங்களில் அவர் வெளிப்படுத்தும் உணர்வுகளை முன்வைத்துத்தான் நம் மனம் நினைவில் வைத்துக்கொள்கிறது. சில முகங்களைப் பார்த்ததும் மனத்தில் பதியாமலேயே மறந்துபோவதற்குக் காரணம், எந்த உணர்வையும் அந்த முகங்கள் வெளிப்படுத்தாதனால்தான். சில முகங்கள் ஆழமாக நெஞ்சில் பதிந்துபோவதற்குக் காரணம் நம்மைநோக்கி அவை முன்வைக்கும் உணர்வுகள்தாம். உணர்வுகளுக்கும் கண்களுக்கும் ஓர் இணைப்பு. அப்புறம் கண்களுக்கும் நினைவுகளுக்கும் ஓர் இணைப்பு. நம் எண்ணங்களின் பயணத்தை எல்லையின்றி நீட்டித்துச் செல்ல வழிவகுக்கும் நல்ல கவிதை இது.

இந்த வரிசையில் வைத்து எண்ணிப்பார்க்கத் தகுதியான கவிதை புகைப்படத்தில். நான்குபேர் நடுவில் ஒருமித்த விருப்பம் உருவாகாதபடி ஏதோ ஒன்று தடுக்கிறது. யாரோ ஒருவரின் கண்களை மற்றவர்கள் பார்க்க அஞ்சுகிறார்கள் அல்லது வெறுக்கிறார்கள். அவர்களுடைய உணர்வுகளில் ஒருமை நிகழவே இல்லை. ஆனாலும் ஒரு காலத்தில் எல்லோரும் ஒன்றாக இணைந்து நின்று படமெடுத்துக்கொண்டவர்கள். இடைப்பட்ட காலத்தில் ஏதோ நிகழ்ந்து, அவர்களிடையே நிலைத்திருந்த ஒருமை குலைந்துவிட்டது. ஏதோ ஒரு விருந்து அல்லது ஒரு சந்திப்புக்காக அழைத்தையும் அழைக்காமல் போனதையும் முன்வைக்கும் உரையாடல் போல கவிதை தொடங்கினாலும், மனிதர்களிடையே ஒத்த அன்பு, ஒத்த கருத்து, ஒத்த உணர்வு, ஒத்த உறவு என்பது சாத்தியமற்ற எல்லைக்கு ஏன் போனது என்கிற கேள்வியை நோக்கி யோசிக்கவைத்துவிடுகிறது.

சூடாப்பூ அழகான ஒரு காட்சிக்கவிதை. பூ விற்கும் ஓர் இளந்தாய். அவள் அருகில் பள்ளிவிட்டு வந்து அமர்ந்து பாடங்களை எழுதுகிற சிறுமி. தாயிடம் பூ வாங்கிக்கொண்டு செல்கிறவர்கள் எல்லோரும் அவளைப் பார்த்து புன்னகைக்கிறார்கள். அச்சிறுமியும் அவர்களைப் பார்த்துப் புன்னகைக்கிறாள். வியாபாரம் முடிந்து, தாயும் சிறுமியும் வீட்டுக்குக் கிளம்புகிறார்கள். விற்காத பூச்சரங்கள் கூடைக்குள் இருக்கின்றன. தன் தாய் அந்தச் சரங்களை ஏன் சூடிக்கொள்வதில்லை என்பது குழந்தைக்குப் புதிராக இருக்கிறது. அந்தப் புதிர்தான் கவிதை. அவள் விதவைத்தாய் அல்ல. அந்தக் குறிப்பு கவிதையில் இல்லை. பூவின்மீது நாட்டம் எழாதவகையில் அந்தப் பெண்ணின் மனம் கசந்துபோயிருக்கலாம். சூடாப்பூ என்பது, விற்காமல் கூடைக்குள் அடைந்திருக்கும் சரங்கள் அல்ல. வாழ்க்கை அள்ளிச் சூடாத பூ அவளே. அதைக் கண்டடையும்போது மனம் கனத்துப்போகிறது. எவ்வளவு பெரிய துரதிருஷ்டம். பல சமயங்களில் துரதிருஷ்டங்கள் மட்டுமே மலரக்கூடிய மரமாக மாறிவிடுகிறது வாழ்க்கை.

(நான்காவது சிங்கம். கவிதைத்தொகுதி. செல்வராஜ் ஜெகதீசன். காலச்சுவடு பதிப்பகம். 669, கே.பி,.சாலை. நாகர்கோவில். விலை. ரூ.60)

Series Navigationஈரானில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்ஓய்ந்த அலைகள்
author

பாவண்ணன்

Similar Posts

Comments

  1. Avatar
    rathnavel natarajan says:

    மாறும் வாழ்க்கை – செல்வராஜ் ஜெகதீசனின் நான்காவது சிங்கம்

    நமது முகநூல் நண்பர் திரு Selvaraj Jegadheesan அவர்களின் நான்காவது கவிதைத் தொகுதி புத்தகம் பற்றிய விமர்சனத்திற்கான link:
    http://puthu.thinnai.com/?p=16920
    படித்துப் பார்க்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
    புத்தகம் கிடைக்கும் இடம்:
    (நான்காவது சிங்கம். கவிதைத்தொகுதி. செல்வராஜ் ஜெகதீசன். காலச்சுவடு பதிப்பகம். 669, கே.பி,.சாலை. நாகர்கோவில். விலை. ரூ.60)
    நன்றி நண்பர்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *