101 வெட்டிங்ஸ் ( மலையாளம் )

This entry is part 20 of 31 in the series 16 டிசம்பர் 2012

காந்தியவாதியின் மகன், தில்லுமுல்லு பேர்வழி. கோடீசுவர மது வியாபாரியின் மகள் சமூக சேவகி. மதுவை வென்று, காந்தீயம் நிலைக்கும் கதையை, கிச்சு கிச்சுவோடு சொல்லியிருக்கிறார்கள் 145 நிமிடங்களில்.

அடிப்படையில் ஒரு காதல் கதை. ஆனால் சுவாரஸ்யமாக, சிறு வயது பகை, ஆள் மாறாட்டம், நகைக் களவு என்று சில வண்ணங்களைச் சேர்த்து, பளபள பட்டாக்கி இருக்கிறார் இயக்குனர் ஷ·பி. நடிகர்கள் தேர்வில், தலைமையாசிரியர் பட்டம் அவருக்கே.

நாயகன் குஞ்சாக்கோ போபன் என்றாலும், நடிக்க வாய்ப்பு, ஜெயசூர்யாவுக்குத்தான். பெண் சாயல் கொண்ட, நடன ஆசிரியர் வேடத்தில், பின்னுகிறார். நடையும் குரலும் விருதுகளை நோக்கி அவரை நகர்த்துகின்றன. தேசிய விருது பெற்ற நடிகர் சலீம் குமார் வரும் காட்சிகளில், மற்ற  நடிகர்களை ஓரங்கட்டி விடுகிறார்.

முன்ஷி சங்கரப்பிள்ளை ( விஜயராகவன் ), சாராயத்திற்கெதிராக உண்ணாவிரதம் இருப்பவர். ஓய்வுக்குப் பிறகு, மதுவுக்கு எதிராக போராட்டம் தொடர்கிறது. அவரது ஒரே மகன் கிருஷ்ணன் குட்டி ( குஞ்சாக்கோ போபன் ) சந்தர்ப்பவாதி. சங்கரப்பிள்ளைக்கு, மதுபானக்கூடங்களைப் பற்றி தகவல் கொடுக்கும் அபிராமி (சம்விருத்தா சுனில்), சமூக சேவையைத், தன் லட்சியமாகக் கொண்டவள். அவளை தன் மருமகளாக்க விரும்புகிறார் காந்தியவாதி. அதைக் கலைக்க, 29 பெண்களால் நிராகரிக்கப்பட்ட, நடன ஆசிரியர் ஜோதிஷ்குமாரை ( ஜெயசூர்யா ) தன் பெயரில் அனுப்பும் சந்தர்ப்பவாதி, மாறும் சூழ்நிலையால், சிக்கித் தவிக்கும் சிரிப்புப் படம். இடைச்செருகலாக, 101 சமூகத் திருமணத்தில் கொடுக்கப்படும் 25000 பணம்,  5 சவரன் நகைக்காக போலி மாப்பிள்ளைகளாக வரும் ஆண்டப்பன் ( பிஜு மேனன் ) கூட்டம், நகைகளை லவட்ட, விவாகரத்து பெற்றதாகப் பொய் சொல்லி, மாப்பிள்ளையாகும் சுந்தரேசன் ( சுராஜ் வெஞ்சாரமுடு ) ஆகியோர் செய்யும் கலக்கல், தனியாவர்தனம். ருக்கியாவாக வரும் பாமா வெகு பாந்தம்.

போஸ்டரில் மூன்றாவதாகப் போட்டாலும், முதலிடம் ஜெயசூர்யாவுக்கே. 101 ஜோடிகளில், அவர் மட்டும் தன்¢த்து தெரிவது, அவரது வல்லமையைக் காட்டுக்¢றது. ஓரத்தில் நின்றாலும் தனித்து தெரியும் மலையாள நாகேஷ் அவர்.

நாயகன், நாயகி நடுவே, எப்போதும் முட்டல் என்றால், எப்படி வைக்க முடியும் டூயட் பாடல்? ஷ·பி, கனவுப் பாடலாகக் கூட, அதைச் சேர்க்காததற்கு, சினிமா ரசிகனின் நன்றி. இன்னும் சொல்லப்போனால், பாடல்களில் பெண் குரலே கிடையாது. ஆச்சர்யம். தீபக் தேவுக்கு பெரிய வேலை இல்லை. ஆனாலும் இசைத்த விதத்தில் பாசாகி விடுகிறார்.

அங்காடி திரை : மொய் வசூல்.

ரசிகன் குரல் : ஜெயசூர்யா சிக்சர் அடிச்சிருக்காரு சேட்டா!

Series Navigationகனவுகண்டேன் மனோன்மணியே…தாகூரின் கீதப் பாமாலை – 44 உன்னுள்ளே கலந்து விட்டது என்மனம் !
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *