அக்னிப்பிரவேசம் – 15

This entry is part 24 of 27 in the series 23 டிசம்பர் 2012


தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்
yandamoori@hotmail.com
தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com

yandamuri veerendranathஅன்றிரவு நிர்மலாவை அருகில் அழுத்து அணைத்துக் கொண்டு பரமஹசா சொன்னான். “உன்னைப் பார்த்தால் பதினெட்டு வயதில் மகள் இருக்கிறாள் என்றால் யாருமே நம்பமாட்டார்கள். இருபத்தைந்து வருஷமாய் இந்த அழகை எல்லாம் எனக்காகவே பாதுகாத்து வைத்திருக்கிறாய் என்று நினைக்கும் போதெல்லாம் என் தேகமெல்லாம் சிலிர்த்துப் போகிறது. இன்னும் சொல்லணும் என்றால் உன்னுடன் கழித்த நேரம்தான் எனக்காக நான் வாழ்கிற நேரமாய் தோன்றுகிறது.”
பரமஹம்சாவின் வாயிலிருந்து இப்படிப் பட்ட வார்த்தைகளைக் கேட்கும் போதெல்லாம் நிர்மலாவுக்கு தான் இத்தனை நாளாய் எதை இழந்து விட்டோம் என்று புரியத் தொடங்கியது. அவன்பால் பக்தி மேலும் இருமடங்காய்ப் பெருகத் தொடங்கியது.
அவள் கணவன் உயிருடன் இருந்த பொழுது அவளைத் தொடுவது செக்ஸ் தேவைப்படும் போதுதான். அந்தச சில நிமிஷ சுகத்தைத் தவிர, பிறகு அந்த உணர்வு கொஞ்சம் நேரம் கூட நிலைத்து இருக்காது. அவன் கொடுத்த சுகத்திற்கு நன்றி தெரிவிப்பது போலாவது அவனை நேசிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட என்றுமே வந்தது இல்லை. அது ஒரு நித்தியக் கடமை மட்டுமே. எந்த உணர்வுகளும் இடம் பெறாத ஒரு நடவடிக்கை! அப்படிப்பட்ட வாழ்க்கை அனுபவத்திற்குப் பிறகு இந்த சுகமும், அவன் காட்டிய நன்றியும் அவளை தன்மயக்கத்தில் ஆழ்த்திவிட்டன. அவன் மேலிருந்த அன்பு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருந்தது.
அன்பின் உச்ச நிலை காமம் என்பார்கள். அன்பு இல்லாமல் இரு உடல்கள் ஒன்று சேர்ந்தால் அது வெறும் செக்ஸ். அப்படி அல்லாமல் ஆழ்ந்து நேசிக்கும் இருவரின் சங்கமம் செக்ஸில் உள்ள இனிமையை முழுமையாய் வழங்குகிறது. அதைப் பெறுவது புதிய அனுபவமாக இருந்ததால் நிர்மலா தன்னையே தான் மறந்து போய்க் கொண்டிருந்தாள். சந்திரன் அந்தக் கொஞ்ச நேரம் மட்டும் அவளுடன் இருந்துவிட்டுத் தன் அறைக்குப் போய்விடுவான். பரமஹம்சா அப்படி அல்லாமல் அவளை அணைத்தபடி படுத்துக் கொள்வான். அவளுக்கு வேண்டியது அப்படிப்பட்ட பாதுகாப்புதான். அவளுடைய ‘பாதுகாப்பற்றதன்மை’ அவன் நெருக்கத்தில் மாயமாய் மறைந்து போய்க் கொண்டிருதது.
அவளுடைய கவலை எல்லாம் ஒன்றுதான். ராஜலக்ஷ்மிக்காக மதுரையில் அவள் வீட்டில் அவன் அதிகமாய் தங்க வேண்டியிருக்கிறது. வேறோருத்தியுடன் அவன் இருக்கிறான் என்ற பொறாமை இல்லை. அவள் கண்ணோட்டத்தில் பரமஹம்சா அவளைப் போன்ற பெண்களைக் காப்பாற்றுவதற்காக, கடவுளால் அனுப்பப்பட்ட தூதன். ஆனால் அவன் உள்ளூரிலேயே இருந்தால் நன்றாக இருக்கும் என்பது அவள் எண்ணம். ஆனால் அவனிடம் இந்த விஷயத்தை எப்படிச் சொல்லுவது என்றுதான் அவளுக்குத் தெரியவில்லை.
ஒருநாள் அவனே “உன்னிடம் ஒருவிஷயம் பேசணும் நிர்மலா” என்றான். சம்பளத்தை உயர்த்தச் சொல்லி மேலதிகாரியிடம் கேட்கும் பணிவுடன் கேட்டான்.
“என்னவென்று சொல்லுங்கள். தயக்கம் எதுக்கு?” அதைவிட பணிவாய் பக்தியுடன் கேட்டாள் அவள்.
“ஒன்றும் இல்லை. மதுரையில் இருக்கும் போதெல்லாம் என் மனம் உன்மீதுதான் இருக்கிறது. உன்னிடம் வந்து விட வேண்டும் என்று தவிப்பாய் இருக்கும். ஆனால் அங்கே ராஜலக்ஷ்மியைத் தனியாய் விட்டுவிட்டு வருவதற்கு பயம். இங்கேயே வந்து செட்டில் ஆகிவிட்டால் என்ன? அதோடு அங்கே இருந்தால் விஜய் வந்து அடிக்கடி பணம் கேட்டுத் தொல்லைக் கொடுக்கிறான்” என்றான் வேதனை கலந்த குரலில்.
தன் மனதில் நினைப்பதையே அவன் அவ்வாறு வெளிப்படுத்தும் போதெல்லாம் அவளுக்கு அவனிடம் உள்ள தெய்வாம்சம் நினைவுக்கு வரும். விஜய் அவனுடைய முதல் மனைவியின் மகன். அவன் தொல்லையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு இரண்டாவது மனைவியை மூன்றாவது மனைவி இருக்கும் ஊருக்கு அழைத்து வந்து விட வேண்டும் என்பது அவனுடைய திட்டம்.
“கண்டிப்பாய் அழைத்துக்கொண்டு வாங்க. காந்தி நகரில் நம் வீடு இருக்கு. அவர்களை காலி பண்ணச் சொல்கிறேன். அங்கேயே இருந்து விடலாம்.”
“வேண்டாம் நிர்மலா. எனக்காகக் இப்போதே நிறைய செலவழிக்கிறாய். வேண்டாம் என்று சொன்னாலும் கேட்டுக்கொள்ளாமல் காரை ஏ.சி. செய்ய வைத்தாய். அவ்வளவு வாடகையை எனக்காக நீ இழப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. உங்க சொத்துக்கு கார்டியனாய் இருந்து, அதை மென்மேலும் வளர்க்க வேண்டியவனே தவிர அதை சூறையாடுவதற்கு இல்லை. வேறு இடத்தில் சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொள்கிறேன்.”
“ஊஹும். நான் சம்மதிக்க மாட்டேன். எங்களுக்காக எவ்வளவோ செய்யறீங்க. எதுக்காக? நாங்க உங்களைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தில்தானே? இவ்வளவு ஆன பிறகும் நாம் தனித் தனி என்று எப்படி நினைக்க முடிகிறது உங்களால்? இந்த விஷயம் தெரிந்தால் சாஹிதியும் ரொம்ப வருத்தப் படுவாள்.” அவள் குரல் தழுதழுத்தது.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவன் அந்த ஊருக்கே குடி வந்து நிரந்தரமாய் செட்டிலாகி விட்டான்.
******
ஒருநாள் சாஹிதி கல்லூரியிலிருந்து வீட்டிற்குத் திரும்பி வந்த பொழுது பரமஹம்சாவின் கார் வெளியே நிறுத்தி இருந்தது தென்பட்டது. அது பழக்கப்பட்டுப் போன விஷயம் என்பதால் அவள் எப்பொழுதும் போலவே உள்ளே நுழைந்தாள்.
முன் அறையிலேயே பெரிய மாமா தென்பட்டார். அவள் முகம் மலர்ந்தது.
“எப்போ வந்தீங்க மாமா?” என்று கேட்டபடி பக்கத்தில் வந்து உடகார்ந்து கொண்டாள்.
“காலையிலேயே வந்து விட்டேன். கோர்ட் வேலையை முடித்துக்கொண்டு, மதியம் இங்கே வந்தேன். இனி கோர்ட் சுற்றி அலைய வேண்டிய வேலை வந்து சேர்ந்துவிட்டது. “
“மம்மி எங்கே?”
“மம்மியும், பரமஹம்சாவும் பூஜையில் இருக்காங்களாம்.”
“அப்படி என்றால் நீங்க வந்த பிறகு மம்மி தென்படவே இல்லையா? சாப்பிட்டீங்களா?”
“ஓட்டலில் சாப்பிட்டு விட்டுத்தான் வந்தேன். வேலைக்காரன் டிபன் காபி தந்தான்.
தன் முகத்தில் வெளிப்பட்ட வேதனை அவர் கண்ணில் படாதவாறு தலையைக் குனிந்து கொண்டாள். ‘போய் மம்மியை அழைத்துக் கொண்டு வருகிறேன் மாமா” என்றாள்.
“வேண்டாம் அம்மா. பரமஹம்சாவின் பூஜை என்றால் தவத்திற்குச் சமம். தொந்தரவு பண்ணாதே. நான்தான் இரவு வரையில் இருக்கப் போகிறேனே. பரவாயில்லை.”
சாஹிதி பதில் பேசவில்லை. மேலும் ஒருமணி நேரம் கழிந்த பிறகும் கூட அவர்கள் வெளியே வரவில்லை. அதற்கு மேல் பொறுக்க முடியாதவளாய் சாஹிதி எழுந்து கொண்டு “நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன் மாமா. ஒன்றும் சொல்ல மாட்டார்கள்” என்று போய்க் கதவை தடதடவென்று தட்டினாள்.
இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு நிர்மலா கதவைத் திறந்தாள். அவசரமாய் சுற்றிக் கொண்டது போல் புடவை ஏனோதானோவென்று இருந்தது. கூந்தல் கலைந்து இருந்தது.
“என்ன?” என்றாள் கொஞ்சம் கலவரமடைந்தவளாய், கோபத்தை அடக்கிக்கொண்டே.
‘பெரியமாமா வந்து ரொம்ப நேரமாகி விட்டது. இரவு திரும்பிப் போய் விடுவாராம்” என்றாள் சுருக்கமாய்.
“அப்படியா. இதோ வந்து விடுகிறேன். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இரு.” உள்ளே போய் கதவைச் சாத்திக் கொண்டாள்.
“முடிந்துவிட்டதாம் மாமா. வந்து விடுவாள்.” தன் முகத்தில் இருந்த உணர்வுகளை அவர் கவனிக்காமல் இருப்பதற்கு பெரும் முயற்சி தேவைப்பட்டது அவளுக்கு.
ஐந்து நிமிடங்கள் கழித்து நிர்மலா வெளியே வந்தாள்.
வந்ததுமே அண்ணாவிடம் குசலம் விசாரித்தாள். அவ்வளவு நேரமாய் வந்து பார்க்காமல் போனதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டாள். சமையல் அறைக்குச் சென்று சமையல் பண்ணச் சொல்லிவிட்டுத் திரும்பி வந்து பேசத் தொடங்கினாள்.
பத்து நிமிடங்கள் ஆவதற்குள் உள்ளே மணி அடிக்கும் சத்தம் கேட்டது.
“பூஜை முடிந்து விட்டது போலிருக்கு அண்ணா. ஒரு முறை போய் பார்த்துவிட்டு வருகிறேன்” என்று அறைக்குள் போனாள்.
“அப்பாடா! இவ்வளவு நாள்களுக்குப் பிறகு உங்க அம்மாவின் முகத்தில் சந்தோஷத்தைப் பார்க்கிறேன். பரமஹம்சா உங்களுக்கு அறிமுகம் ஆனது உங்கள் அதிர்ஷ்டம்.”
அவர் வார்த்தை முடியக்கூட இல்லை. நிர்மலா வெளியே வந்தாள். பொங்கி வரும் சிரிப்பை அடக்கிக் கொள்வதற்கு தாய் செய்த முயற்சியைப் பார்த்த சாஹிதி கலவரமடைந்தவளாய் மாமாவின் முகத்தைப் பார்த்தாள். அவர் ஏதோ புத்தகம் படிப்பதில் ஆழ்ந்து போய் விட்டிருந்தார். ஆனால் அது அத்துடன் நிற்கவில்லை. பதினைந்து நிமிடங்களுக்கு ஒருமுறை ஏதோ விளையாட்டு போல் உள்ளே மணி சத்தம் ஒலித்ததும், அவள் ஓட்டமாய் ஓடிப் போவதும், ஐந்து நிமிடங்களுக்கு பிறகு முகம் சிவக்க குறுஞ்சிரிப்புடன் அவள் வெளியே வருவதும் நடந்தன. அவர் அதைக் கவனிக்கவில்லையே தவிர, கவனித்த சாஹிதிக்கு மானம் போய்விட்டது போல் இருந்தது.
சாப்பாடு பரிமாறப்பட்டது. ஆனாலும் பிரமஹம்சா வெளியே வரவில்லை. அழைப்பதற்காக உள்ளே போன நிர்மலா கொஞ்ச நேரத்தில் அவள் மட்டும் வெளியே வந்தாள்.
“முடியப் போகிறது அண்ணா! உங்களைச் சாப்பிடச் சொன்னார்.” மளமளவென்று பரிமாறத் தொடங்கினாள்.
“என்னம்மா இது? கன்னத்தில் அதென்ன ரத்தம்?” கலவரமடைந்தவராய் கேட்டார்.
“ஒன்றும் இல்லை அண்ணா! நகத்தால் கீறிக் கொண்டு விட்டேன் போலிருக்கு. என்னவோ எரிச்சலாய் இருக்கே என்று பார்த்தேன்.” அவசரமாக அழுத்தித் துடைத்துக்கொண்டாள்.
அவர் அதை அவ்வளவாய் பொருட்படுத்தவில்லை. ஆனால் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த சாஹிதி தெளிவாய்ப் பார்த்தாள். தாயின் கன்னத்தில் பற்கள் அழுத்திய காயம்! அந்தத் தட்டில் மட்டும் சாதம் இல்லாமல் கற்கள் இருந்தாலும் அவள் ஆத்திரமாய் பிடித்த பிடிக்கு மாவாக்கி விட்டிருக்கும்.
அண்ணா கிளம்புவதற்காக புறப்பட்டதும் நிர்மலா மறுப்பு எதுவும் சொல்லவில்லை. சாஹிதிக்கும் அவர் கிளம்புவதுதான் நல்லது என்று தோன்றியதால் மௌனமாக இருந்துவிட்டாள். அவர் புறப்பட்டுக் கொண்டிருந்த போது பரமஹம்சா அறையை விட்டு வெளியே வந்தான். பட்டு வேட்டி, நெற்றியில் குங்குமம், உடம்பு முழுவதும் சந்தனமாய் தெய்வத்தின் மறு உருவம் போல் இருந்தான். மாமா அவனை வணங்கிவிட்டுப் போய்விட்டார்.
அவர் போனதுமே சாஹிதியின் ஆவேசம் கட்டுமீறி வெளியே வந்தது. “மம்மி! மாமா வந்து அவ்வளவு நேரமாகியும் கூட நீ வெளியே வந்து விசாரிக்காமல் இருந்தது நன்றாக இல்லை” என்றாள் தாயைப் பார்த்து.
‘சாஹிதி! ஏனம்மா இந்த ஆவேசம்?” பரமஹம்சா அருகில் வந்து கொஞ்சுவதுபோல் தோளில் கையை வைத்தபடி கேட்டான். அவன் கையை வேகமாய் தள்ளிவிட்டு “மம்மி! நான் உன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். இன்மேல் இதுபோல் ஒருநாளும் பண்ணாதே. இருக்கும் கொஞ்ச நஞ்ச உறவுகளையும் தொலைத்து விடாதே” என்று சொல்லிவிட்டு, விருட்டென்று தன் அறைக்குள் போய்க் கதவைச் சாத்திக் கொண்டாள்.
அன்றிரவு சாஹிதிக்கு நல்ல ஜுரம் வந்துவிட்டது. ஆனாலும் யாரையும் எழுப்பவில்லை. தன்னைத்தானே தண்டித்துக் கொள்வது போல் நடுங்கியபடி அப்படியே படுத்திருந்தாள். இன்னும் நன்றாக விடிந்திருக்கவில்லை. அந்தக் குளிரிலேயே கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள். வீடு முழுவதும் நிசப்தமாய் இருந்தது. பரமஹம்சாவின் அறைக்கதவு வெளியே சாத்தியிருந்தது. அப்படி என்றாள் நேற்று இரவே போய்விட்டான் போலும். அவள் நிர்மலாவின் அறைக்குப் போனாள்.
கட்டில் மீது படுத்திருந்தாள் நிர்மலா. இரவு முழுவதும் அழுதிருப்பது போல் அவள் கண்கள் சிவந்து உப்பியிருந்தன. சாஹிதியைப் பார்த்ததுமே அவள் விசும்பி விசும்பி அழுதுக் கொண்டே “சாஹிதி? எதற்காக இந்த தண்டனை எனக்கு? அவர் மனம் நொந்து நேற்று இரவு சாப்பிடாமல் போய் விட்டார். என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லு. உன் விருப்பம் போல் திட்டித் தீர்த்துக்கொள். ஆனால் கடவுளைப் போன்ற அவரை மட்டும் ஒன்றும் சொல்லாதே.”
சாஹிதி விக்கித்துப் போய்விட்டாள். தவறு செய்தது அவர்கள். ஆனால் இப்பொழுது குற்றவாளியாய் தான் கூண்டில் நிற்க வைக்கப் பட்டிருக்கிறாள். நேற்றைய ஜுரத்தை விட இந்த வார்த்தைகள் தான் மேலும் சோர்ந்துபோகச் செய்தன.
எப்படியோ வாயைத் திறந்து “அழாதே அம்மா. மாமா என்ன நினைத்துக் கொள்வாரோ என்ற வருத்தத்தில் அப்படிப் பேசிவிட்டேன்” என்றாள்.
“மாமா ஒன்றும் நினைத்துக் கொள்ளவில்லை. உங்க அங்கிளுக்குதான் கோபம் வந்துவிட்டது. திரும்பிப் போய் விட்டார். இப்போ நான் என்ன செய்வது?” அவள் அழுகை ஓயவில்லை.
“வராமல் எங்கே போய்விடுவார்? எல்லாம் தானே வருவார்.” கோபித்துகொண்டு போய்விட்ட மாப்பிள்ளைக்காக அழும் மகளைத் தேற்றும் தாயைப் போல் சாஹிதி சொன்னாள்.
ஒரே பாய்ச்சலில் நிர்மலா கட்டிலை விட்டுக் கீழே இறங்கி வந்தாள்.
“உன்னைக் கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன் சாஹிதி. போய் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வா. நீ அழைக்காவிட்டால் அவர் வரவே மாட்டார். அவர் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கும் வரையில் நான் பச்சைத் தண்ணீர் கூட தொடமாட்டேன்” என்று தாய் இருகரங்களையும் ஜோடித்தபடி வேண்டிக்கொண்ட போது சாஹிதி திகைத்துப் போனாள்.
ஜுரத்தால் உடல் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது. பாடுபட்டு சமாளித்துக்கொண்டு ‘சரிம்மா, போய் அழைத்து வருகிறேன்” என்றாள்.
சூரியன் இன்னும் வெளியே வருவதற்கு முன்பே தன் தாயின் சக்களத்தியின் வீட்டிற்கு சாஹிதி புறப்பட்டாள். ஜுரம் இன்னும் முழுவதுமாக தணியவில்லை அவளுக்கு.
*******
சாஹிதி தயக்கத்துடனே அழைப்பு மணியை அழுத்தினாள். அந்த வீடு தன் தந்தையின் வீடுதான் என்று தெரியும். ஆனால் என்றுமே அங்கே வர வேண்டிய தேவை ஏற்பட்டது இல்லை. பரமஹம்சா அந்த வீட்டில் குடியிருக்கும் விஷயம் கூட இப்பொழுதுதான் அவளுக்குத் தெரிய வந்தது.
வேலைக்காரி கதவைத் திறந்தாள்.
“யார் வேண்டும்?”
“பரமஹம்சா.”
“அப்படி உட்காருங்க.” சோபாவைக் காட்டி உள்ளே போய்விட்டாள்.
பரமஹம்சா வரவில்லை. ராஜலக்ஷ்மி வந்தாள்.
ரொம்ப அழகாய் இருந்தாள் அவள். வயது கூட முப்பதுக்குள் தான் இருக்கும்போல் தோற்றமளித்தாள். பரமஹம்சா சொன்னதற்கு முற்றிலும் மாறுபட்டிருந்தாள்.
“அவர் இல்லை. வெளியே போயிருக்கிறார். நீ யாரும்மா? என்ன வேலையாய் வந்திருக்கிறாய்?”
“என் பெயர் சாஹிதி. நிர்மலாவின் மகள். மம்மி அங்கிளை அழைத்துக் கொண்டு வரச் சொன்னாள்.”
“ஓஹோ! அவளுடைய மகளா நீ? என் கணவரை வலையில் போட்டுக்கொண்டு போதாத குறைக்கு அழைத்துவரச் சொல்லி மகளை வேறு அனுப்பியிருக்கிறாளா? அவளும் ஒரு பெண்தானா?” ஆவேசமாய் கத்திக் கொண்டிருந்தாள்.
சாஹிதிக்கு ஒருவினாடி அவள் என்ன பேசுகிறாள் என்றே புரியவில்லை. புரிந்த அடுத்த வினாடியே அவள் காரில் வந்து விழுந்தாள். கார் வீட்டை அடைந்ததோ, தன் அறைக்கு ஓட்டமாய் ஓடி வந்ததோ கூட அவளுக்குத் தெரியாது. எதிரே மேஜைமீது டிசெச்ஷன் பாக்ஸ் தென்பட்டது. அதிலிருந்து கூறிய கத்தியை வெளியே எடுத்து உள்ளங்கையில் அழுத்திக்கொண்டாள். வலி தெரியவில்லை என்றாலும் ரத்தம் ஆறாய ஒழுகத் தொடங்கியது.
வழியும் ரத்தத்தைப் பார்த்துக்கொண்டே அவள் அழத் தொடங்கினாள். அதைப் பாரநாய்ட் என்பார்களோ அல்லது ‘ஸ்கிஜோ ப்ரேனியா’ என்பார்களோ மனவியல் நிபுணர்களுக்குத் தான் தெரியும்.
அது ஆரம்பம் மட்டும்தான்.
(தொடரும்)

Series Navigationதாயுமானவன்வாழ்க்கை பற்றிய படம்
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *