அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ்

This entry is part 22 of 26 in the series 30 டிசம்பர் 2012

சுவனப் பிரியன்

கடுமையான பசியோடு ‘அம்மா…சாப்பாடு ரெடியாயிடுச்சா..’ என்று கேட்டுக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான் ஹஸன்! ‘கொஞ்சம் இருப்பா! மழையில இந்த உரியா மட்டை நனைஞ்சு போயிடுச்சு. அடுப்பு பத்த மாட்டேங்குது. இப்போ சரி பண்ணிடறேன்” என்று சொல்லிக் கொண்டே அடுப்பில் தனது வாயால் ஊத ஆரம்பித்தார் தாய் ஆமினா. தனது தாய் அடுப்பு பத்த வைக்க படும் சிரமத்தை பார்த்துக் கொண்டே தனது பள்ளி சீருடைகளை களைய ஆரம்பித்தான் ஹஸன்.

ஹஸன் அரசு பள்ளிக் கூடத்தில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறான். வறுமையான குடும்பம. தாய் ஆமினா வீட்டு வேலை முடிந்த கையோடு அக்கம் பக்கத்தில் இருக்கும் வீடுகளில் பாத்திரங்கள் தேய்த்து கொடுப்பதும் வீடுகளை பெருக்கி கொடுப்பதுமாக மேலதிக வேலையை செய்து வந்தார்.

அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து தனது ஒரே மகனை எப்படியும் மேல் படிப்பு படிக்க வைத்து விட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு இருந்து வந்தார். தனது கணவன் பிளம்பிங் வேலைக்கு தினக் கூலியாக சென்று ஓரளவு பணம் கொண்டு வந்தாலும் வீட்டு வாடகைக்கும் சாப்பாட்டுக்குமே அது சரியாக இருந்தது. எனவே பிள்ளையின் படிப்பு குடும்ப சூழலால் வீணாகி விடக் கூடாது என்பதற்காக மேலாதிக வேலைகளையும் பார்த்து வந்தார் ஆமினா!

இன்னும் வேலைக்கு போன கணவன் வரவில்லை. மணியோ இரவு எட்டாகி விட்டது. ‘தம்பி வா….உங்க வாப்பா வர நேரமாகும் போல இருக்குது. நீ பசி தாங்க மாட்டே..’ என்று சொல்லிக் கொண்டே சமைத்த சாப்பாட்டை தட்டில் எடுத்து மகனுக்கு பரிமாறினார்.

‘இன்னைக்கு என்ன லேட்டா வீட்டுக்கு வந்தே..’

‘பள்ளிக் கூடம் விட்டு கொஞ்ச நேரம் பசங்களோட விளையாடிக்கிட்டு இருந்தேம்மா’ என்று சொன்னான். மனதுக்குள் பொய் சொல்கிறோமே என்ற குறுகுறுப்பும் இருந்தது. பருப்பு சாம்பாரும் மீன் பொறியலும் வாய்க்கு ருசியாக இருக்கவே வழக்கத்தை விட சற்று அதிகமாகவே சாப்பிட்டான் ஹஸன். காலையிலும் இரவிலும் மட்டுமே வீட்டு சாப்பாடு.  பள்ளிக் கூடம் உள்ள நாட்களில் மதிய உணவை அரசு போடும் சத்துணவில் சரி கட்டி விடுவான்.

‘பள்ளி கூடத்துல மத்தியானம் என்ன சாப்பாடு’

‘கோதுமை உப்புமா. அவுச்ச முட்டைம்மா’

“படிக்கிற புள்ளே! தெம்பா இருந்தாத்தான் நல்லா படிக்க முடியும்
எதையும் வீணாக்காத சாப்பிடணும் தெரியுதா”

‘நான் எதையும் வீணாக்க மாட்டேன்மா..நல்லா சாப்பிட்டேன்’

மகனின் தலையை வருடியவாறு ‘சாப்பிட்டுட்டு போய் படுத்துக்கோ! காலையில தொழுகைக்கு அஞ்சு அணிக்கெல்லாம் வாப்பா எழுப்புவாறு’

‘சரிம்மா’

ரம்ஜானும் வந்தது. 30 நோன்பை பூர்த்தியாக்கிய சந்தோஷத்தில் அனைவரும் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருந்தனர். ஹஸனுக்கு புதிய சட்டையும் பேண்டும் அவனது வாப்பா வாங்கி கொடுத்திருந்தார். மதியம் வீட்டில் பிரியாணி சாப்பிட்ட வேகத்தோடு பெருநாள் கொல்லைக்கு நண்பர்களோடு செல்ல ஆயத்தமானான் ஹஸன்.

‘ஹஸன்! இந்தா 30 ரூபா. பெருநாள் கொல்லைக்கு சென்று தொட்டி ஆட.’

‘சரிம்மா..நான் போய்ட்டு வர்றேன்’

‘பார்த்து பெரிய தொட்டில்லாம் ஆடாதே! கவனம்’

தனது பள்ளி நண்பர்கள் நால்வரோடு பெருநாள் கொல்லைக்கு சென்றான் ஹஸன். பெரும் கூட்டம் கூடியிருந்தது. பெரும் பெரும் தொட்டிகள், விளையாட்டு சாமான்கள், தற்காலிக பலகார கடைகள் என்று எங்கும் ஜே ஜே என்று இருந்தது.

ஹஸன் மட்டும் ஏதோ ஒரு கடையை தேடிக் கொண்டிருந்தான். ‘டேய்…என்னடா அங்கேயும் இங்கேயும் பார்க்ககுற’

‘சமையல் சாமான் எல்லாம் போட்டு வச்சுறுக்குற கடை எங்கடா இருக்கு’

‘அதோ..அந்த பெரிய தொட்டிக்கு பக்கத்துல பார்’

நண்பர்கள் அனைவரும் அந்த கடையை நோக்கி சென்றனர்.

அந்த கடையில் சமையல் பாத்திரங்கள் முதற் கொண்டு பெரிய அடுப்புகள் வரையில் வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. தனது தாயார் தினம் தினம் சமைக்க கஷ்டப்படுவதை மனதில் இருத்திக் கெண்டே…’அந்த அடுப்பு எவ்ளோ பாய்’ என்று கேட்டான் ஹஸன்.

‘350 ரூபாய் தம்பி.. மண்ணெண்ணை அடுப்பு. அருமையா எரியும்’

‘கொஞ்சம் குறைச்சு குடுங்கோ’

‘சின்ன பையனா இருக்கிறே…சரி உனக்காக 300 ரூபாய் …கடைசி விலை. எடுத்துக்கோ’

பணத்தை கடைக்காரரிடம் கொடுத்து விட்டு அடுப்பை வாங்கிக் கொண்டான்.

‘டேய்..உனக்கு கிறுக்கு புடுச்சுடுச்சாடா..தொட்டி ஆட குடுத்த பணத்துல அடுப்பு வாங்குற. அதுவும் உங்க அம்மா கொடுத்தது 30 ரூபா தான். 300 ரூபா எங்கேயிருந்துடா வந்துச்சு’

பதில் பேசாமல் நேராக வீட்டுக்கு அடுப்போடு சென்றான் ஹஸன். சீக்கிரமே மகன் திரும்பி வருவதைப் பார்த்த ஆமினா ஆச்சரியத்தோடு ‘என்னடா இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க’ என்று கேட்டார். கையில் ஒரு பார்சலை பார்த்து விட்டு ‘என்ன வாங்கி வந்துறுக்குற…விளையாட்டு சாமானா’ என்று கேட்டுக் கொண்டே பேப்பரை கிழிக்க ஆரம்பித்தார். உள்ளே அழகிய அடுப்பு. ஆச்சரியத்தோடு பார்த்தவளாக ‘இது ஏது?’ என்று கேட்டார்.

‘உனக்கு தாம்மா! நான்தான் வாங்கினேன்.’

‘நீ வாங்கினியா! இது விலை அதிகம்ல…ஏது பணம்’

பதில் சொல்வில்லை ஹஸன். ஆமினாவின் முகம் சற்று மாறியது. ‘சொல்லுடா இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?’ ஹஸனின் காதை திருகினாள். ‘திருடினியா’

‘ஐயோ..இல்லம்மா…பள்ளிக் கூடம் விட்டவுடன் அருகிலேயே இருக்கும் நாயர் கடையில தினமும் இரண்டு மணி நேரம் பாத்திரங்களை கழுவுவேன். ஒரு டீ குடுத்து 15 ரூபாவும் குடுப்பாரு. அதை தினமும் சேர்த்து வச்சேன். நீ தினமும் அடுப்பு பத்த வைக்க சிரமப்படுற..கண்ணுல்லாம் ஒனக்கு எரியுது. அதனால அடுப்பு வாங்கத்தான் நான் வேலை செஞ்சேன்.’

கண் கலங்கியவளாக ‘என் ராசா..’ என்று அவனை அணைத்துக் கொண்டு…’இத ஏம்பா எங்கிட்டே முன்னாலேயே சொல்லல’ என்று விம்மினார்.

‘நான் வேலை செய்யிறத சொன்னா…நீ திட்டுவே…நாயர் கடையில போய் எனக்கு வேலை கொடுக்க வேணாம்ணு சொல்லுவே..அதான் ஒங்கிட்ட சொலலல’

தனது மகனின் அன்பையும் சமயோஜித புத்தியையும் கண்டு புளங்காகிதம் அடைந்தவளாக இறைவனுக்கு நன்றி செலுத்த தொழுகைக்கு பயன்படுத்தும் துணி விரிப்பை தேட ஆரம்பித்தார் ஆமினா….

Series Navigationமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -9அதிகரிக்கும் பாலுறவு பலாத்கார குற்றங்களுக்கு தீர்வு என்ன?

8 Comments

  1. மாஷா அல்லாஹ் அருமையான கதை.எதார்த்தமான எழுத்து நடை.குழந்தைகளுக்கு இது போன்ற கதைகளை சொல்வது மிக அவசியம்.அந்த மகன் கதாபாத்திரத்துக்கு தாங்கள் வைத்திருக்கும் பெயர் பொருத்தமாக உள்ளது. :)

  2. Avatar Sivakumar N, New Delhi

    அருமை!!!

  3. //அந்த மகன் கதாபாத்திரத்துக்கு தாங்கள் வைத்திருக்கும் பெயர் பொருத்தமாக உள்ளது. :)//

    உங்களுடைய பெயரும் ஹஸன் என்பதாலா!…

    கதையை பிரசுரித்த திண்ணை நிர்வாகத்தினருக்கு நன்றி. பாராட்டிய நண்பர் சிவகுமாருக்கும் நன்றி!

  4. Avatar தேமொழி

    இது போன்ற கதைகளைப் படிப்பது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.

    ஆசிரியருக்கு நன்றியும் புத்தாண்டு வாழ்த்துக்களும்.

    …தேமொழி

  5. Avatar க்ருஷ்ணகுமார்

    ஜெனாப் சுவனப்ரியன், உன்னதம்.

    இதற்கு முன் தங்களுடைய இதுபோன்ற படைப்புகளை வாசித்ததில்லை. ஒரு ஆதர்ச குடும்பத்தை அழகாக காண்பித்திருக்கிறீர்கள்.

    வாழ்த்துக்கள்.

  6. Avatar punaipeyaril

    வழவழவென்று இல்லாமல் சுருக்கமான கதைக்கு பாராட்டுக்கள். ஆனால், “இறைவனுக்கு நன்றி செலுத்த ..” அப்ப பொறுப்பில்லாத புள்ளைகளை கொண்டவர்கள் இறைவனை திட்டுதல் சரி தானே….

  7. திரு க்ருஷ்ண குமார் !

    //இதற்கு முன் தங்களுடைய இதுபோன்ற படைப்புகளை வாசித்ததில்லை. ஒரு ஆதர்ச குடும்பத்தை அழகாக காண்பித்திருக்கிறீர்கள்.

    வாழ்த்துக்கள்.//

    நன்றி!

    திரு புனை பெயரில்!

    //ஆனால், “இறைவனுக்கு நன்றி செலுத்த ..” அப்ப பொறுப்பில்லாத புள்ளைகளை கொண்டவர்கள் இறைவனை திட்டுதல் சரி தானே….//

    நீங்கள கேட்பது விதி சம்பந்தமான ஒரு கேள்வி. தனது மகனுக்கு சிறந்த அறிவைக் கொடுத்த அந்த இறைவனுக்கு நன்றி செலுத்துகிறாள் அந்த தாய். அதே அநத மகன் தீய செயல்களை செய்பவனாக இருந்தால் அவனுக்கு அறிவுரைகளை வழங்கி விட்டு படைத்த இறைவனிடம் தனது மகனின் எண்ணங்களில் நல்லவைகளை உதிக்கச் செய்யுமாறு பிரார்த்திக்க சொல்லி இறைவன் கட்டளையிடுகிறான். உளப் பூர்வமான பிரார்த்தனைகளையும் இறைவன் ஏற்றுக் கொள்வதாக வாக்களிக்கிறான். விதியைப் பற்றி அதிகம் சர்ச்சை செய்ய வேண்டாம் என்பதும் முகமது நபியின் கட்டளை.

    இந்த விதியை இறைவன் ஏன் ஏற்படுத்த வேண்டும என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு இறைவன் தரும் பதில்

    ‘உங்களுக்கு தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப் படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள பூரித்து போகாமல் இருப்பதற்காகவும விதியை ஏற்படுத்தியுள்ளான்.’
    -குர்ஆன் 57:23

    ‘நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரைஇழிவு படுத்துகிறாய்’
    -குர்ஆன் 3:25

    நல்லது கெட்டது எதுவுமே அவனன்றி எதுவுமே நடப்பதில்லை. ஏன் இவ்வாறு பாரபட்சமாக படைக்க வேண்டும் என்ற கேள்வி எழுவது இயல்பே. அதற்கான விளங்கக் கூடிய அறிவு நமக்கு தரப்படவில்லை என்றே அதற்கு இஸ்லாம் விளக்கம் அளிக்கிறது. இறுதி நாளில் இதற்கு விடை கிடைக்கலாம்.

    நேற்று எனது விதி என்ன என்பது எனக்கு தெரிந்து விட்டது. நாளை எனது விதி என்ன என்பது எனக்கு தெரியாது. இன்னும் இரண்டு நாளில் நான் இறந்து விடுவேன் என்பது எனது விதி என்று வைத்துக் கொள்ளுங்கள். அது எனக்கு தெரிந்து விட்டால் மற்ற இரண்டு நாட்களும் நான் சிம்மதியாக இருக்க முடியுமா?

    எனவே இறைவன் இதை மறைத்து வைத்திருப்பதில் மனித குலத்துக்கு நன்மையே இருக்கிறது.

  8. சகோ தேமொழி!

    //இது போன்ற கதைகளைப் படிப்பது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.

    ஆசிரியருக்கு நன்றியும் புத்தாண்டு வாழ்த்துக்களும்.//

    வாழ்த்துக்களுக்கு நன்றி! உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

Leave a Reply to suvanappiriyan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *