இரு கவரிமான்கள் –

This entry is part 29 of 34 in the series 6 ஜனவரி 2013

 

சிறு தொடர்  கதை: ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம்.

நான் அன்னிக்கே நினைச்சேன்..இப்படியாகும்னு .இந்தம்மா தான் ரமேஷ் நல்லவர்ன்னு யார் சொன்னாலும் கேட்காமல்   நம்பிகிட்டிருந்தாங்க..இப்ப என்னாச்சு….? அவரு தன்னோட  செல்வாக்கைக்  காட்டி மாதவியை தன் வலையில் சிக்க வெச்சுக்கிட்டாரு. நல்ல வேளையா  நம்ம பைரவியம்மா  அவருகிட்ட இருந்து பத்திரமாத் தப்பிச்சாங்க  அது வரைக்கும் எனக்கு சந்தோஷம் .

ரத்தினம் மனசுக்குள் நினைத்தபடியே பைரவியின் வருத்தத்திற்கு ரமேஷ் தான் காரணமாயிருக்கலாம் என்று யூகித்தபடியே வண்டியை வீட்டுக்கு ஒட்டினார் ..

காரை விட்டு இறங்கி கதவை டமால் என்று அழுத்திச் சாத்தியவள் …வீட்டுக்குள் புயல் வேகத்தில் நுழைந்து  ..வேகமாகத் தனது  அறைக்குள்  சென்று  தொப்பென்று படுக்கையில் விழுந்தாள் . உடல் குலுங்கியது. தலையணை நனைய ஆரம்பித்தது.

அவளது  கைபேசியும்  யாரும் எடுக்காததால் கூடவே விடாமல் அலறிக் கொண்டே இருந்தது.

பைரவி என்னாச்சு…? எழுந்திரு…..பைரவி என்னாச்சும்மா சொல்லு…. பதட்டத்துடன் அருகில் ஓடி வந்தமர்ந்த  அம்மாவின் மடியில் தலைப் புதைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி  அழலானாள்… அவளது அத்தனை உணர்வுகளின் வடிகாலாக  அவளது தாயின் மடியில் ஒரு நிம்மதி  கிடைத்தது பைரவிக்கு.

பைரவி…அழறியா…? அழும்படியா என்னாச்சும்மா..? திடுக்கிட்டவளாக…. பைரவியின் தலையை வருடிக்  கொண்டே “நான் தான் அன்னிக்கே சொன்னேனே…இதெல்லாம் வேண்டாம்னு…நீ கேட்டியா?  எதுவா இருந்தாலும் ஈஸியா  எடுத்துக்கோ . நீ நன்னாத் தான் பாடினே..பரிசு உனக்குக் கிடைக்கலைன்னா ,  போனால் போகட்டும்…விடு. அவன் நல்லவனே இல்லை…அவன் பணத் திமிரில் என்ன வேணா செய்வான்….நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் .நேக்குத் நன்னாத் தெரியும்..

அம்மாவின் பேச்சில்  விருட்டென்று மடியைத் தள்ளி விட்டு எழுகிறாள். ஹாலில் இருந்த வீணையை தூக்கி….ரத்தினம்…ரத்தினம்.

…கொஞ்சம் இங்க வாங்க…! இந்த வீணையைக் கொண்டு போய் அந்த வானவில் ஆஃபீஸில் வெச்சுட்டு நான் திருப்பி அனுப்பினேன்னு அவருகிட்டச் சொல்லிட்டு வந்துடுங்க. என்ன சொன்னாலும் திரும்ப எடுத்துக்கிட்டு வராதீங்க…. வீணையைக் கொடுத்து மேடையில் என்  மானத்தை வாங்கியவன்  ! என்கிறாள்.

பைரவியின்  அம்மா முகம் மலர்ந்தது….ரத்தினம்..கொஞ்சம் சீக்கிரமாப் போயி கொடுத்துட்டு வந்துடுங்க….! அவள் குரலில் ஏதோ ஒரு நிம்மதி இருந்தது ரத்தினத்திற்கும் புரிந்தது.

ஆமா…. யார்ட்ட இருந்து கால் வந்துண்டே இருக்கு.? ..மொபைலை பார்க்கிறாள் ….அத்தனை மிஸ்டு  கால்கள்  அனைத்தும் மாதவியினுடையது.

உனக்கும் மாதவிக்கும் ஏதாவது மன வருத்தமா?  ரமேஷுக்கும் மாதவிக்கும்…ஏதாவது…! என்று சொல்ல நினைத்ததை சொல்லாமல் விடுகிறாள்.

ச்சே..நீ கொஞ்சம் பேசாமல் இரேன் …நீ நினைக்கிறது எதுவும் இல்லை…இது வேற….என்று கைபேசியை சுவிட்ச் ஆஃப் செய்யப் போகும் போது மறுபடியும் அழைப்பு….ஆனால் அது ஆதித்தனிடமிருந்து.

பாலைவனத்தில் சோலையைக் கண்ட பரவசத்தில் ‘ஹலோ’ என்கிறாள். அவளது குரல் சோகத்தை மறைத்தது.

நிகழ்ச்சியைப் பாராட்டி விட்டு…ரொம்ப நன்றாகப் பாடினீர்கள்…..உங்கள் தோழிக்குப் பரிசு கிடைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது. இது தான் தியாகம்….இது தான் நட்பு. எனக்கு உங்களைப் பார்த்தால் பெருமையாக இருக்கு. நீங்கள் ஏற்கனவே புகழின்  உச்சியில் நிற்கிறீர்கள்..இப்போது உங்கள் தோழியையும்  இந்த நிகழ்ச்சி மூலமாக அந்த உயரத்துக்கு கொண்டு சென்ற விதம் பெருமைப்பட வைக்கிறது.அதான்…தொலைக் காட்சியில் இப்போ தான் பார்த்தேன்…. உங்கள் பாட்டும் பிரமாதம். உங்கள் தோழியின் நாட்டியமும் பிரமாதம். நீங்கள் வேண்டுமென்றே பரிசை விட்டுக் கொடுத்து  போலத் தெரிந்தது. அதான் உங்களை வாழ்த்தணும்ன்னு  கூப்பிட்டேன்.

……………… (இவன் பேசப் பேச…பைரவி  தூள் தூளாக உடைந்து குமுறிக் கொண்டிருந்தாள்.உள்ளுக்குள்.)..…பதில் பேச முடியாமல்  அவளை ஏதோ உணர்வு தொண்டையை அடைத்தது.

ஹலோ…..ஹலோ…..இருக்கீங்களா...? பைரவி…பைரவி…பைரவி…ஆர் யூ தேர்…பைரவி பேசுங்க…..!

மீண்டும் இவளது மௌனம்…(அவன் இவளது பெயரை அழைக்க ,அழைக்க இவளது உயிர் இவளை விட்டு எங்கோ பறந்தது போலிருந்தது…)

சரி…நான் வெச்சுடறேன்…! ஆதித்தனிடமிருந்து கைபேசி  இணைப்பு துண்டித்தது. பைரவியின் மனதுக்குள் ஆதித்தனின் வயலின் வாசிக்க ஆரம்பித்தது.  அவன் வாசித்த துன்ப  ராகம் அவள் காதில் இன்ப  ராகத்தைக் கொட்டியது.

இப்படியும் ஒரு கோணம் இருக்கிறதா? நான் ரமேஷ் மேல் வைத்திருந்த நம்பிக்கை பொய்யாகிவிட்ட உணர்வில் இப்படி மதி கேட்டுப் போச்சே…!

அன்று மாதவி சொன்னது நினைவுக்கு வந்தது. ரமேஷ் தான் நடுவில் ஏதாவது தில்லுமுல்லு பண்ணியிருக்கணும். இல்லாவிட்டால் நிஜம்மாவே மாதவியின் நாட்டியம் தான் ஜட்சுக்குத்  தெரிய வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதில் என் மனசு சுயநலமாக ஒரு விஷயத்தை நினைத்துக் கொண்டு எப்படி மாதவியைக்  கண்டு என் மனசு பொறாமைப் பட்டது? எனக்குள் எங்கிருந்து மூண்டது இந்த ஆசைத் தீ ?   இந்த ரமேஷ் மனத்தில் நுழைந்து என்னுள் இந்தப் பொறாமைத் தீயைப் பந்தமாக ஏறிய விட்டிருக்கிறான். இத்தனை நாள் அது உள்ளுக்குள் புதைந்து கொண்டே தான் இருந்திருக்கிறது.

இதோ அதை ஆதித்தன் அழகாக அமைதி நீரை ஊற்றி அணைத்து விட்டார். என்னை எனக்குப் புரிய வைத்து என் இதயத்தில் தீபம் ஏற்றியவர் ஆதித்தன். என்னைத் தனக்குள் இழுத்துக் கொண்டு  ஆசை எனும் தீப்பந்தத்தைச் செருகியவன் ரமேஷ்…! இந்த வித்தியாசத்தை நான் உணர வேண்டும் என்பதற்காகவா இதெல்லாம் நடக்கிறது….? தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டு ஒன்றும் புரியாதவளாக அமைதியானாள் பைரவி.

சற்று நேரத்தில் ‘வீணையை  கொடுத்துட்டு வந்தாச்சும்மா’ அவர் ஒண்ணுமே  சொல்லலை. அங்க “வெச்சுட்டுப் போ ” ன்னு சொன்னாரு. அந்த ரூமில் நம்ம மாதவியம்மாவும்  இருந்தாங்க….என்னைப் பார்த்தும் அவங்க தெரிஞ்சா மாதிரியே கண்டுக்கலை…ஒரு புன்சிரிப்பு கூட இல்லைம்மா…. ஏதோ சதி நடந்திருக்கு.  இருவர் முகத்திலும் இருள் படிந்திருந்தது.   என்று எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றி விட்டுப் போனார் ரத்தினம்.

இவள் அந்த அவமானத்தை முழுங்கிக் கொண்டு…சரி தேங்க்ஸ்…நீங்க வீட்டுக்குப் போகலாம்..இன்னைக்கு எனக்கு ஒரு வேலையும் இல்லை..’ என்று சொல்லி அனுப்பினாள் .

பைரவியின் அம்மா எட்டிப் பார்த்து ‘அப்பாடா…இப்பத் தான் எனக்கு நிம்மதியா இருக்கு…’என்று நெஞ்சில் கை வைத்த படியே பெருமூச்சு விட்டபடியே….தலை போற அவசரத்தில் இந்த விஷயத்தை முதல்ல அவர்ட்ட ஃபோன் போட்டுச் சொல்லணும். வீணை கிளாஸ் எடுத்துண்டு இருப்பாரே…..சிறிது பின் தங்கினாலும்..’இதைச் சொல்லலைனா இப்ப என் தலையே வெடிச்சுடும்’ எத்தனை வேண்டிண்டேன்…..’இந்த ரமேஷின்  பிடியிலிருந்து பைரவி விலகணும்னு ‘.  பகவான் கண்ணைத் திறந்தான். அவனும் அவன் மூஞ்சியும்..சிரிப்பும்…அவனைப் பார்த்த அன்னிக்கே மனசுக்குப் பிடிக்கலை..என்ன செய்யறதுன்னு தெரியாம மனசுக்குள்ள புழுங்கிண்டு  கிடந்தோம். நிம்மதியா சுதந்திரமா இருந்த பொண்ணு எப்ப அவனோட  நினைப்பில் எதையோ பறிகொடுத்தவள் மாதிரி…அடிக்கடி வருத்தப் பட்டுண்டு….! பைரவியின் தாய்மனம்….தனியே மனசுக்குள்   நிம்மதியில் புலம்பியது.

அந்த நேரம் பார்த்து வாசலில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டதும்…” போச்சுடா….வினை வீடு தேடி வரும்’ ன்னு இதைத் தான் சொல்வாளோ… இவளா ஒதுங்கினாலும் விட மாட்டான் போல இருக்கே…மீண்டும் வீணையைத் தூக்கி கொண்டு வந்து விட்டானோ…..? காலைச் சுத்தின பாம்பு… உதறினாலும் போகாது.  பதட்டதோடு வெளியே வந்து பார்க்கிறாள். மனம் “அவனாக இருக்கக் கூடாதே…” என்று வேண்டிக் கொண்டது.

மாதவி காரை விட்டு இறங்கிக் கொண்டிருந்தாள். எங்கிருந்தோ ஒரு நிம்மதி வந்து மனதை தடவியது. அப்பாடா…அவன் இல்லை .

மாதவியின்  முகம் வழக்கத்துக்கு மாறாக வாடியிருந்ததை கவனிக்கத் தவற வில்லை பைரவியின் அம்மா.

வா…வா…வா…மாதவி…பாராட்டுகள்;  ரொம்ப  சந்தோஷம் …நீ தானே ஜெயிச்சே…. பைரவி உள்ள ரூமில் இருக்கா போய்ப் பாரு. உனக்கு ஹார்லிக்ஸ் கலந்து எடுத்துண்டு வரேன்…சொல்லிவிட்டு நகர்ந்தாள் .

அறையில் தனது படுக்கையில் கவிழ்ந்து படுத்துக் கொண்டு குலுங்கிக்  கொண்டிருந்தாள் பைரவி.

மாதவி சென்று தயக்கத்துடன் அவளது தோளைத் தொட்டதும் , விசித்திர ஸ்பரிசத்தில் திரும்பியவள், சுதாரித்துக் கொண்டு “எப்ப வந்தே மாதவி?’

‘இப்பத் தான்..’ இதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை பைரவி…’இந்தா செக் ‘ பணத்தை மாற்றித் தரேன்.இது நியாயமா உன்னோடது தான். அன்னிக்கு  சொன்னது தான் இன்னிக்கும் என்னிக்கும்…பரிசு உனக்குத் தான் கிடைச்சிருக்கணும்..ரத்தினம் வீணையைத் திருப்பி கொண்டு வந்து கொடுக்கும் போதே  நினைத்தேன்….உன் மனசு எவ்ளோ வேதனைப் பட்டிருக்கும்னு.  என்னைப் புரிஞ்சுக்கோ…நான் உன்னைத் தேடினேன்….நீ அங்கே இல்லைன்னு தெரிஞ்சதும் உனக்கு ஃபோன் செய்தும் பார்த்தேன்…நீ எடுக்கலை…  கோபம்னு புரிஞ்சுண்டேன்.

மாதவி !  பரிசு கிடைச்சது  உனக்கு.  உனக்குக் கிடைத்த பரிசைத் தட்டிப் பறித்துக் கொள்பவள் நானில்லை புரிஞ்சுக்கோ..

இந்தச் செக் ஒண்ணும் எனக்கு வேண்டாம். நான் பணத்துக்காக அழலை. நீ வெற்றி பெற்றதில் எனக்கு சந்தோஷம் தான். என்னமோ மனசுக்குள்ள ஒரு பாரம். வேற ஒண்ணுமில்லை.

ஒருத்தரை நம் மனசுக்குள் வரும்போது எவ்வளவு சந்தோஷப் படுவோம் அதே போல் மனசு வெறுமையாகும் போது அதுக்காக அழுவோம்…. இல்லையா? மற்றபடி உனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்று பைரவி சொல்லி சமாளிக்கிறாள்.

அப்போ நீ ஏன் அங்கேர்ந்து கிளம்பிப் போனே? உனக்கு என் மேல என்ன கோவம்? நான் என்ன செய்தேன் அதைச் சொல்.. நான் எவ்வளவு தவிச்சுப் போனேன்னு உனக்குத் தெரியுமா?

ரமேஷுக்கு என்னைப் பிடிக்க வில்லை மாதவி !  உன்னைத்  தான்  அவருக்கு ரொம்பப்  பிடித்திருக்கு;  இந்தப் போட்டி  அதை நிரூபித்து விட்டது !   பாராட்டுகள் ! நமக்குள் எதுக்கு போட்டியும் பொறாமையும்.

இது  ஆனந்தக் கண்ணீர் !    நீதான் அவரது வருங்கால மனைவி மாதவி !

சீ…சீ…சீ…! ரமேஷ் உன்னைத்தான் விரும்பி நேசித்தார்.  நீதான் அவரின் எதிர்கால மனைவி !   இந்தப் பரிசு அளிப்பால் நான் அவரை மணப்பேன் என்று நினைக்கிறாயா ?   அதுதான் சஸ்பென்ஸ் !  அவர் பேசும் போதெல்லால் உன்னினிய குரலைதான் மெச்சுகிறார்.

சரியாகச் சொன்னாய் மாதவி !  என் குரலைத்தான் விரும்புகிறார்.  என்னை அல்ல. சி. டி. யில் போட்டு கேட்டுக் கொள்ளட்டும் என் பாட்டை ! அவர் நினைப்பது போல என்னால் வாழ முடியாது

நாளைக்கு ரமேஷ் ஒரு பார்ட்டி தரதா சொல்லியிருக்கார்…ஹோட்டல் க்ராண்ட்ல. நீயும் வந்துடு….கோவிச்சுக்காதே..போதும் உன் ஊடல்.. பைரவி ! நீரடிச்சு நீர் விலகாது.

இனி அதுக்கெல்லாம் அவசியமல்லை.  எனக்கு புரோகிராம் இருக்கு மாதவி. நீ மட்டும் கலந்து கொள்.  நான் வர மாட்டேன்.

இந்தா செக்கைப் பிடி….இது உன் பரிசுப் பணம் தான்…எனக்கு இந்த செக்கை விட நீயும் நம் நட்பும் தான் முக்கியம்.. நீ பாடி நான் ஆடும்போது அதில் கிடைத்த நிம்மதியை வேறெந்தப்  பரிசும் பணமும் தராது. அழாதே எழுந்திரு… வெளியில்  வா…உன்னை இதெல்லாம் ஒண்ணும் செய்து விடாது…சின்ன நூல்கண்டா உன்னை சிறைப் படுத்துவது….ஐ நோ யூ …பைரவி.

உடைந்து போனவளாக பைரவி….ஐம் சாரி மாதவி….! ஒரு நிமிஷம் தடுமாறிட்டேன்…என்றவளை தன்  மடியில் தாங்கினாள் மாதவி.
பைரவியை முதுகில் தட்டிக் கொடுத்து ‘நீ ஏதோ குழப்பத்தில் இருக்கே’ன்னு மட்டும் புரியறது..எதுவா இருந்தாலும் எங்கிட்டச் சொல்லேன். மனசுக்குள் வெச்சு உன்னை நீ வதைச்சுக்காதே.

நேரடியாக் கேட்கிறேன்……நீ ரமேஷை விரும்பறே தானே?  மெல்லக் கேட்கிறாள் மாதவி.

அதெல்லாம் ஒண்ணு மில்லை….என்னை அவருக்குப் பிடிக்க வில்லை.  அதான் வீணையைத் திருப்பிக் கொடுத்துட்டேன்.  பரிசு கொடுக்கும் போது அவர் கண்கள் உன்னைத்தான் துளைத்தன !   வெளியில் தவறான கிசு கிசுக்கள்…அதை தவிர்க்கணும்…இனிமேலாவது.   எங்களுக்கிடையே உள்ள இடைவெளி நீளுது. ஆரம்பத்தில் இருந்த மனசு இப்ப இல்லை. ஏனோ மனசு திரும்பி விட்டது இருவருக்கும். இனி நட்பாக இருப்பதர்க்குக் கூட லாயக்கில்லை…என்றாகிவிட்டது. எல்லாம் நல்லதுக்குத் தான்.

ம்ம்ம்ம்ம்ம்…..சீக்கிரமா வேறொரு  நல்ல மாப்பிள்ளையாப்  பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ… சரியாயிடும்.

அப்போ மாதவிக்கு ரமேஷ் மேல் ஒரு பிடிப்பு …இருப்பதை உறுதி செய்து கொண்டாள்  பைரவி….! ரமேஷுக்கும் மாதவிக்கும் அவன் விருப்பப்பட்டது போல ‘லிவிங் டுகெதர்’ ஒத்து வரும்…இவளும் திருமணத்தை விரும்பாதவள் தானே…? அதனால் தான் நான் மும்பையிலிருந்து ஆதித்தனைப் பற்றி சொன்னதும் ஒரேயடியாக மறுத்து விட்டாள் ….மனம் என்னென்னமோ சொல்லிக் கொடுத்தது பைரவிக்கு .

மாதவி சென்று பல மணி நேரமாகியும் பைரவியின் எண்ண  அலைகள் ஓய்ந்த பாடில்லை.

தாம்பரத்தில் ஜே.வி.ஆர் தங்க மாளிகையின் மேனஜிங் டைரக்டர் பரபரப்பாக அறையிலிருந்து பஸ்ஸரை அழுத்தி உதவி மேனஜரை அழைக்கிறார்.

கொஞ்சம் ‘வானவில் டிவி’ ஃபைலை எடுத்துக்கிட்டு உடனே வாங்க.

ஃபைலோடு உள்ளே நுழைந்தவரைப் பார்த்து நம்ம விளம்பர கான்டிராக்ட்  எல்லாத்தையும் வானவில் டிவி கிட்ட இருந்து உடனே  கான்சல் பண்ணுங்க என்றவர்…என்னங்க…அக்ரிமெண்டுல கூட கையெழுத்து வாங்காம வெச்சுருக்கீங்க…இதான் நீங்க  வேலை பார்க்கிற லட்சணமா?  கோபித்த படியே…ம்ம்ம்ம்ம்…ஒரு விதத்துல அதுவும் நல்லதாப் போச்சு. என்றவர். மானேஜரின்  முகத்தைப் பார்க்கிறார்.

‘பாட்டும் பரதமும்’ நிகழ்ச்சிக்கு ஐந்து லட்சம் பரிசுப் பணம் கொடுத்ததே அந்த பாடகி பைரவிக்காகத் தான்.  அந்தப் பொண்ணு நம்ம விளம்பரத்துக்கு கிராண்ட் அம்பாசடரா போடணும்னு தான் ரமேஷ் கிட்ட சொன்னேன்.  கடைசீல பார்த்தா அந்தப் பணத்தை அந்தாளு அவனோட கேர்ள் ஃபிரண்டாமே  மாதவி….அவளுக்குத் தூக்கித தார வாத்துட்டான். என்கிட்ட இவனோட வித்தை எல்லாம் நடக்குமா?  டாம் இட்….என்றவர்…மேனஜரைப் பார்த்து டூ இட் வாட் ஐ சே……கான்சல் ஆல் ஹிஸ் கான்ட்ராக்ட்ஸ் டுடே இட்செல்ஃப்  என்கிறார்.

எஸ் ஸார்….மேனஜர் குழப்பத்தில் அங்கிருந்து நகர்கிறார்.

கைபேசியை எடுத்து …”ம்….நான் தான்பா…’வானவில்’ லிடமிருந்து எங்க எல்லா விளம்பரமும் கான்சல் பண்ணியாச்சு.

ஆமாம்…..அப்படியே ‘பொதிகை டிவி. க்கு’ மாத்தி விட்டுடு…!

நான் ஒருத்தன் வெளிய வந்தால் போதும்..மத்த எல்லாம் ஒண்ணு  ஒண்ணா வெளிய  வந்துடும்….!

கைபேசியை மூடியவர், சுழல் நாற்காலியில் ஒரு முறை வேகமாகச் சுற்றிவிட்டு…..” எரியற கொள்ளியைப் பிடுங்கியாச்சு….இனிமேட்டு  தானே கொதிப்பது அடங்கிடும்…”

பாடகி பைரவிக்கும்  பரிசுத் தொகை போய்  சேரலை. என் மகனுக்குப் பார்க்கணும்னு நினைச்ச பொண்ணு மாதவி…அதையும் கெடுத்துட்டான்.

என்கிட்டே மோதினா என்ன நடக்கும்னு வேடிக்கை பார்க்கட்டும். வானவில் எவ்ளோ சீக்கிரமா மறைஞ்சு போகும்னு  அந்தச் சுள்ளானுக்குக் காமிக்கிறேன்…சொன்னவர் கோபத்தோடு சபதம் செய்வது போல டேபிளை ஓங்கிக் கையால்  குத்துகிறார்.அதில் வலியும்…வஞ்சமும் இருந்தது.

தி கிராண்ட் ஹோட்டலில் மாதவிக்காக காத்துக் கொண்டு ரமேஷ் அமர்ந்திருந்தான். தூரத்தில் ஒயிலாக  மாதவி நடந்து  வருவதைப் பார்த்ததும் சற்றே நிமிர்ந்து உட்கார்ந்தபடி புன்னகையோடு அவளை வரவேற்றான் ரமேஷ்.

சாரி…வந்து ரொம்ப நேரமாச்சா…?

காத்துக் கிடப்பதிலும் காக்க வைப்பதிலும் தனி சுகம் இருக்கும் மாதவி… அவனது கண்கள் அவளது  உடலைத் துளைத்தன.

மாதவி நெளிந்தாள்.

மாதவி…உன் வெற்றிக்காக இதோ இந்த ஸ்மால் கிஃப்ட்..என்று ஒரு நகைப் பெட்டியை நீட்டுகிறான்.

என்னது..? எதுக்கு?

நீ ஜெயித்ததற்கு…திறந்து தான் பாரேன்….நான் சொல்ல மாட்டேன்…நீ பார்க்கணும்..உன் பரவசத்தை நான் ரசிக்கணும்.

ம்ம்ம்ம்…என்று பெட்டியைத் திறந்தவளுக்கு முகத்தில் கோடி மின்னல் கீற்றுக்கள்…..அத்தனையும் வைரங்கள் பதித்த நெக்லஸ் பள பள வென்று டாலடிக்கிறது…மாதவியின் முகத்தில் பேராச்சரியம்.

எதுக்கு இவ்வளவு காஸ்ட்லி கிப்ட். பத்து லட்சம் இருக்குமே? பரிசுத் தொகையை விட ரெண்டு மடங்கு…..அல்லவா?

இந்தச் உயிர்ச்  சிலைக்கு விலையே இல்லை மாதவி!

என்னை எதுக்கு விலை பேசணும்?

உன்னை விலை பேசவில்லை….உன் நேசத்துக்கு ஒரு விலை இருக்குமே?

இதெல்லாம் கொடுத்து என்னை யாரும் விலைக்கு வாங்க முடியாதுன்னு உங்களுக்குத் தெரியாதா?

நேரடியா விஷயத்துக்கு வரேன்.  இந்தக் காதல், கல்யாணம், ஹனிமூன் இதிலெல்லாம் எனக்கும்  நம்பிக்கையே இல்லை…. நம்ம ரெண்டு பேருக்குமே இந்த ஒரு கருத்தில் மனசு ஒத்துப் போயிருக்கு…தெரியுமா?

ஓ ….உங்களுக்கும் கல்யாண உறவில் நம்பிக்கை இல்லையா ?   அதுபோல் எனக்கும் கல்யாணம், பிள்ளை பெறுதல் இதெல்லாம் ஒத்து வராது.  நான் வாழ்கை டான்சோடத்  தான் .. முகம் புன்னகையில் மலர்ந்தது மாதவிக்கு.

உடனே ரமேஷ்,  அப்படியென்றால் நாமிருவரும் லிவிங் டுகெடுதருக்கு உடன்படுகிறோம் இல்லையா ?

நீ நிரந்தரமாய் என்னோட  பங்களாவுக்கு வந்துவிடு…”கட்டாமலே வெச்சிக்கலாம்” இப்போ என் டிவில ஒரு விளம்பரம் ஓடுதே…..!
உண்மையில அதுக்குத்தான் ஏக டிமாண்ட் தெரியுமா..? ஈட்டி எரிந்தது தெரியாமல் சிரிக்கிறான் ரமேஷ்.

மாதவிக்கு சதக்கென்று நெஞ்சில் சுத்தியல் அவன் குத்தியது போலிருந்தது.. திடுக்கிட்டாள்.

அவனது வக்கிரம் புரிந்து கொண்டவளாக எதுவும் பேசாமல்   எழுந்தவள் அவனைத் திரும்பிப் பார்க்காமல் ஹோட்டலை விட்டு வெளியேறினாள் .

(தொடரும்)

Series Navigationபெண்ணே !திருக்குறளைப் பரப்பும் அலேமன் ரமேஷ்ராவ் அவர்களின் குறுவட்டு
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *